Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch28 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch28 | Sandilyan | TamilNovel.in

120
0
Read Kadal Pura Part 3 Ch28 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch28 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch28 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 28 : மூன்றாம் நாள் இரவு.

Read Kadal Pura Part 3 Ch28 | Sandilyan | TamilNovel.in

நாகமுக மரக்கலங்களிரண்டும் கடல்மோகினித் துறைமுகத்திலிருந்து பாய்விரித்துக் கடலோடிய இரவின் இரண்டாம் ஜாமத்தில் கடற்கரை மணலில் இளையபல்லவன் வரைந்து காட்டிய கோடுகள் சொன்ன கதைக்கு விவரணம் தேவையில்லாது போயிற்று, கண்டியத்தேவனுக்கும் அமீருக்கும். கோடுகள் தீர்க்கமாகவும் இடம் விட்டும் தெளிவாக வரையப்பட்டமையாலும், கப்பல்கள் கப்பல்களாகவே வளைத்துக் காட்டப்பட்டபடியாலும் துறைமுகத்தில் மறு நாளைக்கு மறு நாளிரவு எந்தெந்த இடங்களில் எந்தெந்த மரக்கலம் நிற்கவேண்டுமென்பதை இருவரும் புரிந்து கொண்டார்கள்.

கங்கதேவனைச் சேர்ந்த கலிங்க மாலுமிகள் நானூறு பேரும் நாகமுக மரக்கலங்களில் சென்றுவிட்டாலும், மற்றைய மாலுமிகள் அறுநூற்றுச் சொச்சம் பேர் அறியாமல் கப்பல்களை எப்படி நகர்த்த முடியும் என்பது மட்டும் புரிய வில்லை, அவர்களுக்கு. கடல் புறாவைக் கடற்கோரைகளின் பக்கத்திலிருந்து நேர்கிழக்கில் செலுத்தினால் துறைமுக வாயிலுக்குக் கொண்டு சென்று அடைத்து விடலாமென்பதை மட்டும் புரிந்துகொண்ட அமீர், இளையபல்லவன் சென்ற பின்பு கேட்டான் கண்டியத்தேவனை, “கடல் புறாவை நாம் நகர்த்திவிடலாம் துறைமுக வாயிலுக்கு. ஆனால் அதை அடுத்து நிற்கும் கங்கதேவன் மரக்கலங்கள் இரண்டையும் எப்படிக் கடற்கோரைக்குக் கொண்டு வர முடியும்?” என்று.

கண்டியத்தேவன் சிறிதும் சிந்தியாமலே அமீரை நோக்கி, “அது பிரமாதமில்லை அமீர். அந்த இரண்டிலும் மாலுமிகள் அதிகமில்லாவிட்டால் நம்மில் யாராவது ஒருவர் அந்த மரக்கலங்களிலுள்ள நங்கூரங்களைத் தூக்கிவிடலாம்” என்றான்.

“தூக்கிவிட்டால்?” ஏதும் விளங்காததால் கேட்டான் அமீர்.

“காற்று திசை மாறி, அலைகள் திசை மாறி, வாரம் ஒன்றாகிறதைக் கவனிக்கவில்லையா அமீர்? அலைகள் இப்பொழுது கோரைகளை நோக்கி வருகின்றன. நங்கூரத்தை எடுத்தால் இரவு ஒரு ஜாமத்திற்குள் இரண்டு மரக்கலங்களும் கோரைகளை நோக்கி நகர்ந்துவிடும்” என்று விளக்கிய கண்டியத்தேவன், “இதை இளையபல்லவர் முன்னரே கவனித் திருக்க வேண்டும். அவர் கண்களிலிருந்து எதுவும் தப்புவ தில்லை ” என்று கூறினான்.

அமீர் தன் பெருவிழிகளைக் கடலை நோக்கித் திருப்பினான். கடலின் பெரு அலைகள் உருண்டு வந்து தரையில் சில தாக்கின. சில கோரைகளை நோக்கி உருண்டன. அவற்றின் வேகத்தில், கடல் புறாவை மறைத்து நின்ற கங்கதேவன் மரக்கலங்களிரண்டும் கோரைகளை நோக்கிச் சாய்ந்து சாய்ந்து ஆடிக்கொண்டிருந்தன. அந்தக் காட்சியைக் கண்ட அமீர், இளையபல்லவன் மேலுக்கு அலட்சியமாயிருக் கிறானே யொழிய, கங்கதேவன் மாலுமிகள் மனோநிலை யிலிருந்து காற்று திசை மாறுவது வரை, ஒவ்வொன்றையும் அணு அணுவாகக் கவனித்து வருகிறானென்பதை அறிந்து கொண்டதால் ஆபத்துக்கள் பல சூழ்ந்து இருக்கும் சமயத்திலும் படைத்தலைவன் புத்தி தெளிந்து கிடப்பதை நினைத்துப் பெரும் வியப்படைந்தான். “ஆம். ஆம்! இளையபல்லவரின் பார்வையிலிருந்து எதுவும் தப்புவதில்லை” என்றும் கூறினான் அமீர்.
அதை ஆமோதித்த கண்டியத்தேவன் சொன்னான், “உண்மைதான் அமீர். ஆனால் இந்தத் திட்டத்தை நாம் நிறை வேற்ற வேண்டுமானால் கங்கதேவன் மாலுமிகள் நம்மைக் கவனிக்காதிருக்க வேண்டும். அறுநூற்றுக்கு மேற்பட்ட மாலுமிகள் கண்களில் எப்படி மண்ணைத் தூவுவது?” என்று.

“அதற்கு இளையபல்லவர் ஏற்பாடு செய்வார். நாம் நமது கடமையைச் செய்வோம்” என்றான் அமீர்.

கங்கதேவனுடைய மற்றைய நாட்டு மாலுமிகளுடைய கண்கள் தங்கள் மீது திரும்பாதிருக்க இளையபல்லவன் ஏதாவது வழி வகுப்பானென்ற நம்பிக்கை கண்டியத்தேவனுக்கு இருந்தது. இருப்பினும் அதை எப்படிச் செய்வான் என்பது அவனுக்குத் தெரியாததால் மிகுந்த கவலையுடனேயே அன்றிரவு மணலில் படுத்து உறங்கினான் கண்டியத்தேவன். பக்கத்தில் படுத்திருந்த அமீருக்கு அந்தக் கவலையோடு மற்றொரு கவலையும் இருந்தது. அதைப் பற்றிக் கண்டியத் தேவனைக் கேட்கவும் கேட்டான் அவன், “தேவரே! கங்கதேவன் குறிப்பிடும் இடத்துக்கு நாளன்றைக்குக் காஞ்சனாதேவியை அழைத்துச் செல்லும்படி சேந்தனுக்குச் சொல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறாரே இளையபல்லவர்?” என்று.

“ஆம். ” கண்டியத்தேவன் குரலிலும் கவலையிருந்தது.

“இத்தனை நாள் காஞ்சனாதேவியைக் காவல் புரிய என்னை நியமித்திருந்தார்!” என்றான் அமீர்.

“அப்படியா?”
“ஆம். “

“அதனால்தான் ஒவ்வோர் இரவும் நீ காணவில்லையா?”

“ஆம். “

“அப்படியானால் நீ இன்றிரவு இங்கு படுத்திருக்கிறாயே?”

“இரண்டு நாள் முன்பிருந்தே காவல் நீங்கிவிட்டது. “

“ஏன்?”

“காரணம் தெரியாது. காவல் போதும், இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இளையபல்லவர் கூறி விட்டார். “

“சேந்தனையும் இந்தப் பக்கம் காணோமே. அவன் எங்கே?”

“தெரியாது. “

“ஒருவேளை கங்கதேவன் மாளிகையிலிருக்கிறானோ”

“இல்லை. “

“பின் எங்கே போகிறான்?”

“ஒரே ஒருமுறை இரவில் அவன் தமிழர் இல்லங்களுக்குப் பின்புறம் இருக்கும் மலைக்காட்டுப் பகுதிகளை நோக்கிச் சென்றான். “
“அதைப்பற்றி அவனை விசாரிக்கவில்லையா?”

“விசாரித்தேன். அவன் சரியாகப் பதில் சொல்லவில்லை. “

கண்டியத்தேவன் புரிந்துகொண்டான், இளையபல்லவன் ஒவ்வொருவருக்கும் இடும் உத்தரவிலும் ஏதோ மர்மமிருக்கிற தென்று. உத்தரவுகள் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு துறையில் பிறப்பிக்கப்படுவதையும் ஒருவருக்கிடும் உத்தரவு மற்றவருக்குத் தெரியாமல் வைக்கப்படுவதையும் அறிந்த கண்டியத்தேவன் மறுநாளைக்கு மறுநாளிரவில் ஏதோ பெரிய முடிவு ஏற்படப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டான். அது என்ன முடிவு, எவ்வகைப்பட்டது என்பதை அறிய அவனால் முடியவில்லை.

யாரிடமிருந்தும் காஞ்சனாதேவியைக் காக்கவல்ல அமீரின் குறுவாளின் பாதுகாப்பிலிருந்து கடாரத்து இளவரசியைப் பிரித்ததன்றி யாரையும் காக்க முடியாத சேந்தன் துணையுடன் கங்கதேவன் குறிப்பிடும் இடத்துக்கு அவளை அனுப்ப ஏன் திட்ட மிட்டான் இளையபல்லவன் என்பதும் புரியவில்லை கண்டியத்தேவனுக்கு. கண்டியத்தேவனுக்கென்ன, மறுநாள் அந்த உத்தரவைக் கண்டியத்தேவன் சேந்தனிடம் கூறியபோது அவனுக்கும் விளங்கவில்லை. உண்மையில் அதைக்கேட்ட சேந்தன் நடுங்கினான். அந்த நடுக்கத்துடனேயே விரைந்து காஞ்சனாதேவியின் இருப்பிடத்தையும் அடைந்தான்.

கங்கதேவன் மாளிகையின் மாடியறையிலிருந்த காஞ்சனா தேவி பலவர்மன் பஞ்சணையில் ஓர் ஓரத்தில் முகத்தில் கவலை வியாபிக்க உட்கார்ந்திருந்த தருணத்தில் அவளை அடைந்த சேந்தன் பேச நா எழாமல் பல விநாடிகள் நின்று காஞ்சனாதேவியையும் பலவர்மனையும் மாறிமாறிப் பார்த்தான். பஞ்சணையில் பலவர்மன் கண்கள் மூடிக் கிடந்தான். உயர்ந்து உயர்ந்து தாழ்ந்த மார்பு அவன் தூங்கு கிறானென்பதை வலியுறுத்தியும் நம்பாத கூலவாணிகன், *பலவர்மரே! பலவர்மரே!” என்று இருமுறை அழைத்தான்.

கூச்சலிட வேண்டாமென்று வாயைப் பொத்திக் காட்டிய காஞ்சனாதேவி, “சிறிய தந்தை உறங்குகிறார்” என்று மெள்ளச் சொல்லவும் செய்தாள்.

அவள் சொற்களைக் கூட நம்பவில்லை கூலவாணிகன். “உங்களுக்குத் தெரியாது. அவர் தூங்குவதாகப் பாசாங்கு செய்வார்” என்று அழுத்திச் சொல்லவும் சொன்னான்.

அவன் நம்பிக்கையைக் கண்ட காஞ்சனாதேவி அத்தனை கவலையிலும் இளநகை கொண்டாள். “கூலவாணிகரே, எல்லாவற்றிலும் அவநம்பிக்கை கொண்டால் வாழ்வை நடத்த முடியாது” என்றும் மெள்ளச் சொன்னாள்.

“எந்தக் காரணத்தைக் கொண்டும் நம்ப முடியாத பேர்வழிகள் இருக்கிறார்கள்” என்றான் சேந்தன்.

காஞ்சனாதேவியின் சந்திர முகத்தைக் கவலை மேகம் மீண்டும் கவ்வியது. “உண்மைதான் கூலவாணிகரே! நாம் யாரை நம்பி வாழ்கிறோமோ அவர்களே சில சமயங்களில் நமக்குத் துரோகம் செய்கிறார்கள்… ” என்று மேலும் ஏதோ சொல்லப் போன காஞ்சனாதேவியை இடைமறித்த சேந்தன், “யாரைச் சொல்கிறீர்கள் தேவி! இளையபல்லவரைத்தானே!” என்று வினவினான்.
“ஆம் கூலவாணிகரே. ” இந்தப் பதிலைத் தொடர்ந்து சோகப் பெருமூச்சொன்றும் கிளம்பியது காஞ்சனாதேவி யிடமிருந்து.

“உங்களுக்கு என்ன துரோகம் செய்தார் அவர்?” என்று வினவினான் கூலவாணிகன். ஏற்கெனவே இளையபல்லவனிடம் அவநம்பிக்கையுடன் இருக்கும் காஞ்சனாதேவியிடம் இளையபல்லவன் உத்தரவை எப்படித் தெரிவிப்பது என்றும் கலங்கினான்.

காஞ்சனாதேவி நேர்முகமாகப் பதில் சொல்லவில்லை. சுற்றி வளைத்துப் பேசினாள். பேசினாளென்றும் சொல்லலாம், உள்ள உணர்ச்சிகளை வெளியே கொட்டினாளென்றும் சொல்லலாம். பெருமூச்சொன்றை விட்டுக் கேட்டாள் காஞ்சனாதேவி, “மஞ்சளழகியைப் பற்றிச் சொன்னீர்களல்லவா நீங்கள்?” என்று.

கூலவாணிகன் முகத்தில் குழப்பக் குறி உலாவியது. “ஆம்” என்று மென்று விழுங்கினான் அவன்.

“அவள் மீது இளையபல்லவருக்கு ஆழ்ந்த காதலிருக்க வேண்டும்,” என்ற காஞ்சனாதேவி கூலவாணிகளைக் கூர்ந்து நோக்கினாள்.

கூலவாணிகன் சங்கடம் பதின்மடங்காயிற்று. “இளைய பல்லவர் சொன்னாரா அப்படி?” என்று தந்திரமாகத் தப்பித்துக் கொள்ளப் பார்த்தான் கூலவாணிகன்.

“இல்லை, அவர் சொல்லவில்லை. அவளிடம் தனக்குக் காதல் ஏதுமில்லை என்று ஆணையிடுகிறார். “

“பின் என்ன? சரியாகப் போய்விட்டது?”

“என்ன சரியாகப் போய்விட்டது?”

“மஞ்சளழகியைக் காதலிக்கவில்லை என்பது. “

“எப்படிச் சரியாகப் போகும்?”

“அவர்தான் ஆணையிட்டு விட்டாரே?”

“இந்த விஷயத்தில் ஆண் பிள்ளைகளின் ஆணையை நம்பக்கூடாது. “

“ஏன் நம்பக்கூடாது?”

“காதல் என்று வரும்போது… ”

“உம்?”

ஆயிரம் பொய்ச் சத்தியம் செய்வது ஆண்களுக்கு இயற்கை . “

“இதில் இயற்கை வேறா?” கூலவாணிகன் குரலில் இகழ்ச்சி ஒலித்தது.

“ஆம். காதல் சம்பந்தப்பட்ட வரையில் நீர் வாணிபத்தில் சொல்லும் பொய்யைவிட அதிகப் பொய்யை இளைய பல்லவரைப் போன்றவர்கள் சொல்வார்கள்” என்றாள் காஞ்சனாதேவி.

“நானும் பொய்யனா?”

“சந்தேகமென்ன? நீர் வணிகரல்லவா?”

“வணிகரென்றால் பொய் சொல்ல வேண்டுமா?”

“அது கலக்காமல் வாணிபம் ஏது?”

கூலவாணிகன் மேற்கொண்டு அது விஷயமாக தர்க்கம் செய்யப் பிரியப்படாமல் மெள்ள தான் வந்த அலுவலைப் பிரஸ்தாபிக்க முற்பட்டு, “தேவி! இந்த வீண் விவாதம் எதற்கு? இளையபல்லவர் தங்களிடம்தான் பற்றுதல் கொண்டிருக்கிறார் என்று பாலூர்ப் பெருந்துறையிலிருந்தே நாங்களறிவோம். மஞ்சளழகி பாவம். ” என்று ஆரம்பித்ததும் காஞ்சனாதேவி குறுக்கிட்டு, “என்ன பாவம் அவளுக்கு?” என்று சீறினாள்.

பெண்களின் பொறாமையை எண்ணி வியந்த கூல வாணிகன், “அவள் தாயற்றவள்… தந்தையும் அறியாதவள்” என்று சப்பைக்கட்டுக் கட்டினான்.

” அதனாலென்ன? காதலர் இருக்கிறார். மணமுடித்துக் கொள்ளவும் தயாராயிருந்தார். “

“அவர் காதல் ஒரு நாடகம். மணம் செய்ய ஒப்புக் கொண்டது ராஜ தந்திரம். “

இதைக் கேட்டதும் சீறிப் பஞ்சணையைவிட்டு எழுந்தாள் காஞ்சனாதேவி. “அந்த நாடகமும் ராஜதந்திரமும் அவளுடன் நிற்கவில்லை கூலவாணிகரே,” என்றாள் மிகுந்த கோபத்துடன்.

“வேறு எங்கு நடக்கிறது?”

“என்னிடமும் நடக்கிறது. “

“இருக்காது. அங்கே அக்ஷயமுனையைக் கைப்பற்ற அந்த நாடகம் நடத்தினார்… ”

“கடாரத்தைக் கைப்பற்ற இங்கு நடக்கிறது இந்த நாடகம். ஆனால் கூலவாணிகரே, ஒன்று மட்டும் சொல்லுவேன். நான் மஞ்சளழகியல்ல. என்னிடம் உங்கள் தலைவர் நாடகம் பலிக்காது. போய்ச் சொல்லுங்கள் அவரிடம், காதலைக்கூட இழப்பேன், கடாரத்தை இழக்கமாட்டேன் என்று. என் மனத்தை வேண்டுமானாலும் முறித்துக் கொள்ளுவேன். என் மக்களைக் கைவிட மாட்டேனென்று சொல்லும் படைத் தலைவரிடம்” என்று மிகுந்த ஆவேசத்துடன் பேசிய காஞ்சனாதேவி அறையில் இரண்டு மூன்று முறை பெண்புலி போல் உலாவினாள்.

அவள் சினத்தையும் உலாவலிலிருந்த உக்கிரத்தையும் கண்ட கூலவாணிகன் அவள் உண்மையில் ஆளப்பிறந்தவள் என்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டான். அத்தகைய அரசியிடம் இளையபல்லவன் இட்டுள்ள விபரீத உத்தரவை எப்படித் தெரிவிப்பதென்று அறியாமல் திருதிருவென விழித்தான் கூலவாணிகன். உலாவலைச் சற்றே நிறுத்தி அவன் தயக்கத்தையும் குழப்பத்தையும் கவனித்த காஞ்சனாதேவி தன் சினத்தை அடக்கிக்கொண்டு, “என்ன கூலவாணிகரே! என்ன யோசிக்கிறீர்?” என்று வினவினாள்.

“ஒரு முக்கிய விஷயம் சொல்ல வந்தேன்… ” என்று துவங்கிய கூலவாணிகன் பயத்தால் தயங்கினான்.

“என்ன விஷயம்?” காஞ்சனாதேவியின் கேள்வி சந்தேகக் குரலில் எழுந்தது.

“இப்பொழுதுதான் கேள்விப்பட்டேன். “

“யாரிடமிருந்து?”

“கண்டியத்தேவரிடமிருந்து. “

“என்ன கேள்விப்பட்டீர்?”

“உத்தரவை. “

“இளையபல்லவர் உத்தரவையா?” இகழ்ச்சி நிரம்பி நின்றது காஞ்சனாதேவியின் குரலில்.

“ஆம். “

“சொல்லும், என்ன உத்தரவு?”
“சொல்லத்தான் பயமாயிருக்கிறது. “

“பயப்படாமல் சொல்லும். “

“நாளை வரையில் கவலையில்லை… ஆனால் அதற்கு அடுத்தநாள்… ” என்று குளறிய கூலவாணிகன் அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு, “தேவி! மனத்தை அலட்டிக் கொள்ளாதீர்கள். இளையபல்லவர் எந்த உத்தரவையும் யோசித்துத்தான் இடுவார்” என்றும் கூறினான்.

ஏதோ தான் அடியோடு விரும்பாத உத்தரவை இளைய பல்லவன் பிறப்பித்திருக்கிறான் என்பதையும் அதைச் சொல்லவும் கூலவாணிகன் அஞ்சுகிறான் என்பதையும் புரிந்து கொண்ட காஞ்சனாதேவி தன் உணர்ச்சிகளைப் பூரணமாக அடக்கிக்கொண்டு இதயத்தையும் இரும்பாகச் செய்து கொண்டு, “சுற்றி வளைக்க வேண்டாம். சொல்லுங்கள். என்ன உத்தரவு?” என்று வினவினாள் சுவையற்ற குரலில்.

கூலவாணிகனும் தன்னை உறுதிப்படுத்திக்கொண்டு சொன்னான் உணர்ச்சி சிறிதுமற்ற குரலில், “நாளைன்றைக்கு இரவு கங்கதேவன் குறிப்பிடுமிடத்திற்குத் தங்களை அழைத்துச் செல்ல உத்தரவிட்டிருக்கிறார் இளையபல்லவர்” என்று.

இதைக்கேட்ட காஞ்சனாதேவி உணர்ச்சி வசப்பட்டு இரையவில்லை. நின்ற இடத்திலேயே சிலையென நின்றாள். அவள் கமலமுகத்திலிருந்த சிவப்பு அடியோடு மறைந்து விட்டதால் முகம் வெளுத்துப் பளிங்குக் கல்லாகக் காட்சி யளித்தது. கண்களில் கவலையில்லை, வருத்தமில்லை, கோபமில்லை, கம்பீரம் மிதமிஞ்சி இருந்தது. நீரோட்டமுள்ள
உதடுகள் வறண்டதால் ஒருமுறை மடித்துப் பிரித்தாள் அவற்றைக் கடாரத்துக் கட்டழகி. “இதுதான் உத்தரவா? இன்னும் ஏதாவது கூறினாரா இளையபல்லவர்?” என்று சொற்கள் திடமாக அவள் உதடுகளிலிருந்து உதிர்ந்தன.

“வேறெதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. கண்டியத் தேவர் சொன்னதை அப்படியே சொன்னேன் நான்” என்றான் கூலவாணிகனும்.

இருவரிடமும் அடுத்த நிமிடம் மௌனம் நிலவியது. இருவர் நிலையும் பெரும் சங்கடமானது என்பதை அவ்விருவரும் புரிந்து கொண்டார்கள். கயவனும் இட அஞ்சும் உத்தரவை சோழர் படைத்தலைவரும் நற்குலத்தில் பிறந்த வருமான இளையபல்லவர் எப்படி இடத் துணிந்தார் என்று எண்ணித் திகைத்து நின்றாள் காஞ்சனாதேவி. மௌனத்தைப் பல விநாடிகளுக்குப் பிறகே கலைத்த அவள் கேட்டாள், “இந்த உத்தரவுக்கு நான் பணிய மறுத்தால்?” என்று.

சேந்தன் நேரடியாகப் பதில் சொல்லவில்லை. “இளைய பல்லவரைச் சேர்ந்த யாவரும் அவர் உத்தரவுக்குப் பணிய மறுப்பதில்லை ?” என்றான் அவன்.

காஞ்சனாதேவி சில விநாடி யோசித்துவிட்டுக் கேட்டாள், “இந்த உத்தரவை அமீரோ கண்டியத்தேவரோ ஆட்சேபிக்க வில்லையா?” என்று.

“இல்லை. “

“ஏன்?”
“இளையபல்லவர் முறைகேடான எதையும் செய்ய மாட்டார் என்ற உறுதி அவர்களுக்கிருக்கிறது. “

“இது முறைகேடான அலுவலல்லவா?”

“அலுவலின் முடிவைப் பொறுத்தது. “

“முடிவு சரியாயிருக்குமென்று எப்படிச் சொல்ல முடியும்?”

“எதுவும் நம்பிக்கையைப் பொறுத்தது. நீங்களே சற்று முன்பு சொன்னீர்கள், எல்லாவற்றிலும் அவநம்பிக்கை கொண்டால் வாழ்க்கை பலனளிக்காது என்று. “

இளையபல்லவனிடம் அனைவருக்கும் இருந்த நம்பிக்கையை எண்ணி வியந்தாள் காஞ்சனாதேவி. அவள் இதயத்திலும், அத்தனை பொறாமையிலும் கோபத்திலும், அந்த விபரீதமான உத்தரவைக் கேட்ட பின்புகூட நம்பிக்கை அடியோடு மறையவில்லை என்பதை நினைத்துப் பேராச்சரியப்பட்டாள் அவள். பெண்களின் அளவற்ற நம்பிக்கையே அவர்கள் அழிவுக்குக் காரணம் என்பதைத் திரும்பத் திரும்பத் தனக்குள் சொல்லி எச்சரித்துக் கொண்டாள். அத்துடன் வேறொரு விஷயமும் அவள் நினைப்புக்கு வந்தது.

‘எங்கு போனாலென்ன? தற்காத்துக் கொள்ளத் திறனில்லையா எனக்கு? இளையபல்லவரே என்னைக் காத்துக்கொள்ள அளித்திருக்கிறாரே ஒரு குறுவாள். இளையபல்லவர் கரம் என்னைக் காக்கவில்லையேல் இருக்கிறது குறுவாள்,’ என்று பலமுறை தன்னைத் தேற்றிக் கொண்ட காஞ்சனாதேவி இளையபல்லவன் உத்தரவுக்குப் பணிந்து நிகழ்வனவற்றைக் கவனிக்க உறுதி பூண்டாள். ஆகவே இளையபல்லவன் இஷ்டப்படி சேந்தனை மறுநாளைக்கு மறுநாளிரவு தொடரவும் ஒப்புக்கொண்டாள். இதனால் பெரும் பாரம் இறங்கிய சேந்தன் ஆசுவாசப் பெமூச்சு விட்டு அறையை விட்டு வெளியே நடந்தான்.

மறு நாளைக்கு மறு நாளிரவு காஞ்சனாதேவி துறைமுகத்தின் மேற்குக் கோடியில் காட்டு முகப்பிலிருந்த மணற்பரப்பில் அவனைச் சந்திக்கக் கூறியிருப்பதாக கங்க தேவனிடம் சொல்லிவிட்டான் சேந்தன். சந்தோஷத்தில் கங்க தேவன் சேந்தன் முதுகில் அறைந்த அறை அந்த முதுகின் ஒரு பாகத்தைச் சின்னஞ்சிறிய கவசம்போல் எழும்பச் செய்திருந்தது.

அன்றைக்கு மறுநாளும் அதற்கு அடுத்த நாளும் அந்தத் துறைமுகம் மேலுக்குக் கோலாகலமாகக் காட்சியளித்தது. ஆனால் புண்ணில் ஊடே செல்லும் பெரும் புற்றைப்போல் பெரும் விபரீதம் ஊடுருவிக்கொண்டு இருந்தது அந்தத் துறைமுகத்தை கண்டியத்தேவனும் அமீரும் சேந்தனும் மிகுந்த கவலையுடன் அந்த இரவின் வரவை எதிர்பார்த்துக் கொண் டிருந்தார்கள். கங்கதேவன் மறுநாளும் அதற்கு மறுநாளும் பெரும் மகிழ்ச்சியில் இருந்தான். இளையபல்லவன் மனோ நிலை என்ன என்பதையாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை .

அவன் பழையபடி கங்கதேவன் மாலுமிகளுடன் பகடையாடிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான். இப்படிப் பலரும் பலவித உணர்ச்சிகளை எதிர்நோக்கிக் கொண்டிருந்த அந்த இரவும் மெல்ல மெல்ல நெருங்கியது. அன்று நேரவிருந்த விபரீதத்தைப் பார்க்க இஷ்டப்பட்டவன் போல் பிறைச் சந்திரனும் மெள்ள மெள்ள நீலவானில் உருவெடுத்தான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch27 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch29 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here