Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch29 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch29 | Sandilyan | TamilNovel.in

121
0
Read Kadal Pura Part 3 Ch29 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch29 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch29 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 29 : இடையே விழுந்த பந்தம்.

Read Kadal Pura Part 3 Ch29 | Sandilyan | TamilNovel.in

ஐந்து இந்திரியங்களால் பாதிக்கப்படும் மனித இதயம் போல, ஐந்து இடங்களில் ஐந்து விதமாகப் பிரிந்து கிடந்த மாநக்காவரத்தின் அந்தப் பயங்கர இரவில் நீலவானில் தலை நீட்டிய நான்காம் பிறைமதி எட்டு நாழிகை நேரம் அந்தத் தீவின் பகுதிகளில் தனது கண்களைச் செலுத்திவிட்டு அடுத்து நேர இருந்த கோரத்தைக் காண இஷ்டப்படாமல் மெள்ள மெள்ள மறையத் தொடங்கினான். அந்தத் தீவின்மீது கண்களை ஓடவிட்ட அந்த எட்டு நாழிகைகளில் அந்தத் தீவின் ஐந்து பகுதிகளிலும் ஐந்து விதமான அலுவல்கள் நடந்து கொண்டிருந்ததையும் ஐந்து விதமான உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்ததையும் கண்ட அந்த வான்மதியின் சித்தம்கூடச் சிறிது குழம்பி விட்டதற்கறிகுறி யாக அதன் வதனத்தை தன்னந்தனிச் சிறு மேகமொன்று சில விநாடிகள் மறைத்துச் சென்றது.

அர்த்த சந்திர வடிவத்திலிருந்த அந்தத் தீவுத் துறைமுகத் தின் தெற்குக் கோடியில் ஆடி நின்ற கடல்புறாவை நோக்கி மிக மெதுவாக ஒரு படகு நகர்ந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கரையிலிருந்து கண்டியத்தேவனும் அமீரும் கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, அது கடல் புறாவை அணுகியதும் வடபுறத்தை நோக்கி அவர்கள் இருவரும் நடந்து கங்கதேவன் மரக்கலங்கள் இரண்டிருந்த இடத்துக்கருகில் வந்து கரையில் உட்கார்ந்து கொண்டனர்.

துறைமுகத்தின் தெற்குக்கோடியின் முதற்பகுதியில் படகொன்று கடல் புறாவை நோக்கிச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கடல் புறாவைச் சற்று அடுத்தாற்போல் லேசாக வடக்கே தள்ளி நின்றிருந்த கங்கதேவன் மரக்கலங்களிலிருந்த மாலுமிகள் படகுகளில் தடதடவென இறங்கிக் கண்டியத்தேவனும் அமீருமிருந்த இடத்திற்கே வந்து இறங்கி வடக்குப் பகுதியை நோக்கிக் கூச்சலிட்டுக்கொண்டு கோலாகலத்துடன் நடந்தனர். இதைக் கவனித்த கண்டியத்தேவன் கண்களிலும் அமீரின் கண்களிலும் பெரும் திருப்தி நிலவியதைப் பார்த்த வான்மதி தீவின் மூன்றாம் பகுதியை நோக்கினான்.

ஒட்டியாணம்போல் காளத்தி நதியிலிருந்து கிளம்பி வடக்கே தைலகிரியின் அடிவாரம்வரை துறைமுகத்தை வளைத்துக் கிடந்த புஷ்ப ஒட்டியாணத்தின் காட்டுக்குள்ளே கும்பல் கும்பலாக மனிதர் நடமாட்டம் தெரிந்தது. அந்த நடமாட்டத்தில் அதிக அரவ மில்லாதிருப்பதையும் கவனித்த வான்மதிக்கு அதற்குக் காரணம் புரியாவிட்டாலும் பக்கத்திலிருந்த தாரகைகளுக்குப் புரிந்து விட்டதாதலால் அவை கண்களைப் பளிச்பளிச் சென்று சிமிட்டின.

துறைமுகத்தின் நான்காம் பகுதியான வடகோடிக் கடலோரம் மிகுந்த அமர்க்களத்துடன் காட்சியளித்தது. பல நாட்டு மாலுமிகளும் தங்கள் மரக்கலங்களை விட்டு அங்கு அதிவிரைவில் கூட முற்பட்டனர். சீக்கிரம் வர இருந்த இருட்டைக் கிழிக்க மணலில் பந்தங்கள் பல ஊன்றப்பட்டன. இடம் விட்டு இடம் விட்டு, சுமார் இரண்டு நாழிகைக்குள் அந்த இடத்தில் பிரிந்து பிரிந்து கூடிவிட்ட மாலுமிகளில் சிலர் குடிக்கத் தொடங்கினார்கள். சிலர் கம்பளங்களை விரித்துப் பகடையாடத் தொடங்கினார்கள்.

பாலிக்குள்ளன், பகடையை வெகுவேகமாக உருட்டிக்கொண்டிருந்தவன் தன்னை நோக்கி வந்த இளையபல்லவனை நோக்கியதும், “வாருங்கள் தலைவரே! வாருங்கள்! பொற்காசுகளைக் கொட்டுங்கள்” என்றான். இளையபல்லவன் கம்பளத்தின் முகப்பில் உட்கார்ந்துகொண்டு தனது கச்சையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பையை எடுத்து பொன்நாணயங்களைக் கொட்டினான்.

பகடையாடவும் உட்கார்ந்தான். ஆனால் ஆட்டம் துவங்கிய சில விநாடிகளுக்குள்ளாகவே இளையபல்லவன் புத்தி அந்த இடத்திலில்லை என்பதையும், அவன் பகடையை அலட்சியமாக உருட்டுவதையும், அடிக்கடி தோற்றதையும் கண்ட பாலித்தீவின் குள்ள மாலுமி, “இளைய பல்லவர் மனநிலை சரியாயில்லாவிட்டால் ஆட்டத்தை நிறுத்துவோம்” என்று அனுதாபத்துடன் கூறினான்.

ஒரு விநாடி தன் கண்களைக் குள்ளனை நோக்கி உயர்த்திய இளையபல்லவன், “ஆம் ஆம்! என் மனநிலை சரியில்லை. நீங்கள் ஆடுங்கள். நான் பார்க்கிறேன்” என்று கூறி, பக்கத்திலிருந்த மாலுமியொருவனைத் தனக்குப் பதில் ஆடும்படி பணித்தான். பகடையாட்டம் பலமாகத் துவங்கியது. மாலுமிகள் கூச்சலும் வெறி ஒலிகளும் அந்தப் பகுதியைப் பிளந்து கொண்டிருந்தன.

துறைமுகத்தின் ஐந்தாம் பகுதியான காட்டையடுத்த வடகோடி மணற்பகுதியில் மட்டும் ஆரவாரம் எதுவுமில்லை. பயங்கரமான அமைதி அங்கு நிலவிக் கிடந்தது. அந்தப் பகுதியை நோக்கி கங்கதேவன் மிகுந்த உற்சாகத்துடன் நடந்து கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த உடையின் மேன்மை யையும், நடையிலிருந்த உறுதியையும் வெறியையும் கவனித்த வான்மதி அடுத்துவரும் காட்சியைக் காண இஷ்டப்படாதவன் போல் தன் கண்களை மெள்ள மெள்ளக் குறைத்துக்கொள்ளத் தொடங்கினான்.

அவன் கலை குறையக் குறைய பெரிய மனிதர்கள் செல்வாக்குக் குறைந்ததும் சிறிய மனிதன் துள்ளுவதைப்போல நட்சத்திரக் கூட்டங்கள் மிகப் பெருமையுடன் தங்கள் சிற்றொளியை வீசத்தொடங்கின. அதன் விளைவாக வான்மதி மறைந்த பின்பும் தெரிந்த அற்ப வெளிச்சம் நல்ல இருளைவிடப் பயங்கரமாகக் காட்சியளித்த தானாலும் வடகோடி மணற்பரப்பை அடைந்து கொண்டிருந்த கங்கதேவன் எண்ணங்களைவிட அதிகப் பயங்கர முள்ளவையாக இல்லை.

வடகோடி மணற்பரப்பை நோக்கி நடந்து சென்ற கங்க தேவன் மனத்திலிருந்தது, அவன் எதிர்பார்த்த காதல் பூர்த்தி யினாலேற்பட்ட மகிழ்ச்சியா அல்லது பழிவாங்க அவன் கொண்டிருந்த எண்ணத்தினாலேற்பட்ட பதற்றமா என்பது அவனுக்கே திட்டமாகப் புரியவில்லை. கயவனான கங்க தேவன் அன்று அந்தச் சமயத்தில், அந்த இடத்தில், மஞ்சளழகி யென்று அவன் நினைத்துக்கொண்டிருந்த காஞ்சனா தேவியைச் சந்தேகத்துக்கிடமின்றி எதிர்பார்த்தான்.

இளையபல்லவனுக்கு அவனிடமிருந்த அசிரத்தையும் கூலவாணிகன் எப்படியும் அந்த இரவில் மஞ்சளழகியை அழைத்து வருவதாகக் கூறியிருந்த உறுதியும் அவன் மனத்துக்குள் பூரணத்திருப்தியை அளித்திருந்தது. எப்படியும் அன்று தன் இச்சையைப்பூர்த்தி செய்துகொண்டு பழியையும் தீர்த்துக் கொள்வதென அவன் முடிவு செய்துகொண்டு சுற்றுமுற்றும் நோக்கினான். சற்று தூரத்திலிருந்த தமிழர் இல்லங்கள் காலியாகவும் அரவமின்றியும் கிடந்தன. அதிலிருந்த தமிழர் பலர் தன்னால் கொல்லப்பட்டதையும், மீதிப் பேர் மறைந்து விட்டதையும் எண்ணி, தமிழரைக் கொன்றும் துரத்தியும் விட்டதை எண்ணிப் பெருமையும் கொண்டான் கங்கதேவன்.

அதில் தங்கியிருந்த இளையபல்லவன் மாலுமிகளில் சிலரும் கடற்கரையோரம் போய்விட்டதையும் எண்ணிய அவன், அந்த இடத்தில் தனக்கு எவ்விதத் தலையீடும் இருக்காதென்ற முடிவுக்கும் வந்தான். கடற்கரையோரத்தில் மாலுமிகள் கூச்சலிட்டுச் சூதாடிக் கொண்டிருந்ததையும், மற்றொரு கோடியில் மரக்கலங்கள் கேட்பாரற்று ஆடிக்கொண்டிருந்த தையும் கண்ட கங்கதேவன், ‘இப்படி சகல விதத்திலும் என் கையில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்த இளையபல்லவனும் ஒரு திறமை மிகுந்த தலைவனா? இல்லை இல்லை! ஒரு நாளுமிருக்க முடியாது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

இப்படி சகல விதத்திலும் தன் நிலைமை திடப்பட்டுக் கிடந்ததை எண்ணிப் பேருவகை கொண்ட கங்கதேவன், நிர்மானுஷ்யமாய் இருந்த அந்த மணற்பரப்பில் உட்கார்ந்து கொண்டு தன் மாளிகையிருந்த இடத்தை நோக்கினான். மாளிகையை நோக்கிய புறக்கண்கள் அகக் கண்களையும் திறந்துவிடவே கங்கதேவன் அங்கு படுத்துக் கிடந்த பலவர்மனைக் கண்டான். அந்த அகக்கண்கள் கங்கதேவன் சீற்றத்தைப் பெரிதும் தூண்டிவிடவே, அவன் உதடுகள் மெல்ல நடுங்கின. பற்கள் ஒன்றையொன்று கடித்துக் கொண்டன.

“பலவர்மா! அன்று என்னைக் கட்டிப் போட்டு என் எதிரில் என் தங்கையைத் தூக்கிச் சென்றாயே என் மனம் பதறப் பதற, இன்று உன் மகள் ஆகும் கதியைப் பார்” என்ற சொற்கள் யாருமற்ற அந்த இடத்தில் சற்று இரைந்தே உதிர்ந்தன. ஆனால் அடுத்த விநாடி அந்தச் சீற்றம் மறைந்தது. காஞ்சனாதேவியின் எழில் முகம் எழுந்தது அவன் இதயத்திலே. அவள் கனியிதழ்ப் புன்முறுவல் அவன் இதயத்தை நோக்கிப் பிரிந்தது. கெட்ட எண்ணமே நிரம்பிய கங்கதேவன் மனங்கூட அந்த மங்கை நல்லாளிடம் தான் கொண்ட நோக்கம் எத்தனை கெடுதல் என்பதை உணர்ந்து கொள்ளவே துன்பச் சாயை ஒன்று அவன் முகத்தில் படர்ந்தது.

எப்பேர்ப்பட்ட துஷ்டனுடைய மனமும் தனிமையில் உண்மைகளை உணர்த்தவே செய்கிறது. ஆனால் அந்த உண்மைகளும் அவற்றால் ஏற்பட்ட உணர்வுகளும் துஷ்டர்கள் மனத்தில் நீடித்து நிற்பதில்லை. அடிக்கடி ஏற்படும் வெறி, நல்ல உணர்ச்சிகளைச் சிதற அடித்துவிடுகிறது. அப்படி கங்கதேவனின் நல்ல உணர்ச்சிகளும் வெகு சீக்கிரம் சிதறின. அப்படி அவையாகச் சிதறாவிட்டாலும் அவற்றைச் சிதற அடிக்கும் மோகனாகார உருவத்துடன் சற்று தூரத்தே காஞ்சனாதேவி நடந்தாள் சேந்தன் பின்தொடர். அவர்கள் இருவரையும் தூரத்தில் பார்த்த உடனேயே எழுந்துவிட்ட கங்கதேவன் அவர்கள் அருகில் வந்ததும் “மஞ்சளழகி! வா. உனக்காகத்தான் காத்திருக்கிறேன்” என்று குதூகலத்துடன் வரவேற்கவும் செய்தான்.

காஞ்சனாதேவி அவன் உற்சாகத்தில் சிறிதும் பங்கு கொள்ளவில்லை. நாற்புறமும் ஒருமுறை பார்த்தாள். அந்தப் பார்வையைத் தவறாகப் பொருள் செய்துகொண்ட கங்கதேவன், “அச்சத்துக்கு இடமில்லை மஞ்சளழகி! இங்கு யாருமில்லை. நாமிருவர்தாம் இருக்கிறோம்” என்று கூறியவன்,

“ஓகோ! அப்படியா!” என்று சொல்லிக் கூலவாணிகனை நோக்கி, “இனி நீர் போகலாம்” என்றான்.

கூலவாணிகன் முகத்தில் ஏதோ புதுவித ஒளியொன்று பரவியது. அவன் காஞ்சனாதேவியை நோக்கினான். “உத்தரவுப்படி செய்யுங்கள் கூலவாணிகரே!” என்றாள் காஞ்சனாதேவி வறண்ட குரலில்.

அவள் யார் உத்தரவைக் குறிப்பிடுகிறாளென்பது புரிய வில்லை சேந்தனுக்கு. அவளை கங்கதேவன் சொல்லு மிடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டுக் காட்டுக்குள் போய் விடும்படி இளையபல்லவன் இட்ட உத்தரவைச் சொல்லு கிறாளா, அல்லது கங்கதேவன் தன்னைச் சென்றுவிடும்படி கூறுகிறானே அதைச் சொல்லுகிறாளா என்பது புரியா விட்டாலும் இரண்டு உத்தரவுகளின் விளைவும் ஒன்று தானென்ற நினைப்பால் சேந்தன் வந்த வழியே திரும்பிச் சிறிது தூரம் சென்று மீண்டும் மேற்புறம் திரும்பிக் காட்டை நோக்கி வெகு வேகமாக நடந்தான். அவன் திரும்பிச் சென்ற உடனேயே அவனைப் பற்றிக் கவலைப்படுவதை விட்ட கங்கதேவன், காஞ்சனாதேவியை நோக்கி, “மஞ்சளழகி! உட்கார் இப்படி,” என்று கூறி ஓர் இடத்தைக் காட்டி அதற்குப் பக்கத்தில் தானும் உட்கார்ந்து கொண்டான்.

காஞ்சனாதேவி அவன் உட்கார்ந்த பின்பும் நின்று கொண்டே இருக்கவே கங்கதேவன் அவளை நோக்கி, “வெட்கப்படுகிறாயா மஞ்சளழகி!” என்று வினவினான்.

காஞ்சனாதேவியின் பதிலில் இகழ்ச்சி மண்டிக் கிடந்தது. “வெட்கம் பெண்களுக்கு யாரிடம் ஏற்படும் தெரியுமோ கங்கதேவரே?” என்று வினவினாள் அவள்.

“ஏன் தெரியாது? யாரைக் காதலிக்கிறார்களோ அந்த மனிதனிடம்” என்ற கங்கதேவன் பெருமையுடன் நோக்கினான்.

“அதை நீங்கள் புரிந்துகொண்டது எனக்கு மகிழ்ச்சி யளிக்கிறது” என்றாள் அவள் மீண்டும் இகழ்ச்சியுடன்.

“அத்தனை புரிந்து கொள்ளாமல் உன்னை இங்கு வரவழைப்பேனா?”
“மாட்டீர்கள் மாட்டீர்கள். “

“இப்பொழுது உனக்குத் தெரிகிறதல்லவா?”

“எது?”

“என் விவேகம்?”

“உங்கள் விவேகமா!”

“ஆம் மஞ்சளழகி! உன்னை நான் இங்கு வரவழைக்கு முன்பு உன்னை இளையபல்லவன் வெறுப்பதை அறிந்து கொண்டேன். “

“யார் சொன்னது அப்படி உங்களுக்கு?”

“முதலில் கூலவாணிகன் சொன்னான். பிறகு இளைய பல்லவனே சொன்னான். “

காஞ்சனாதேவியின் கருவிழிகளில் சீற்றம் தெரிந்தது. “இளையபல்லவரே சொன்னாரா!” என்று சீற்றத்துடன் கேட்கவும் செய்தாள் அவள்.

“ஆம் மஞ்சளழகி. அது மட்டுமல்ல. உன்னைப் பிடிக்கா ததற்குக் காரணமும் சொன்னான் அவன். “

“என்ன காரணம்?”

“நீ அவனை விடாமல் சுற்றுகிறாயாம். “

“நானா?”

“ஆம். “

“ஆகவே?”

“அப்படிச் சுற்றும் பெண்களை அவனுக்குப் பிடிப்பதில்லையாம். “

“அப்படியா சமாசாரம்?”

காஞ்சனாதேவியின் குரலில் கோபம் பொங்கியது. அதைக் கவனித்த கங்கதேவன் அவளைச் சமாதானப்படுத்த முயன்று, “நிற்காதே! உட்கார். மேலும் விஷயம் சொல்கிறேன்” என்றான்.

அவன் காட்டிய இடத்தை விட்டுச் சற்றுத் தள்ளி உட்கார்ந்த காஞ்சனாதேவி, “என்ன விஷயம்?” என்று வினவினாள்.

“உன்னை நான் அடைவதில் அவனுக்கு ஆட்சேபணை யில்லை என்பதையும் நான் புரிந்துகொண்டேன்… ” என்று மெள்ள இழுத்த கங்கதேவன் அவளைக் காமம் சொட்டும் கண்களால் நோக்கினான்.

அந்தப் பார்வை அவள் சீற்றத்தை ஆயிரம் மடங்கு அதிகப்படுத்தவே கேட்டாள் அவள், “இதையும் அவரே சொன்னாரா? உங்கள் ஊகமா?” என்று.

“ஊகம்தான். ஊகிக்கும் சக்தி எனக்கு அதிகம் உண்டு, என்ற கங்கதேவன் அவளைச் சற்று நெருங்கினான்.

அவள் தள்ளி உட்கார்ந்து கொண்டாள். “ஊகிக்கும் சக்தி உங்களுக்கு அதிகமோ?” என்று வெறுப்புடன் வினவவும் செய்தாள்.

“ஆம்” என்றான் கங்கதேவன்.

“அப்படியானால் நான் யார்?”என்று கேட்டாள் அவள்.

“இதற்கு ஊகமெதற்கு? நீ மஞ்சளழகி. பலவர்மன் வளர்ப்பு மகள்” என்ற கங்கதேவன் சரேலென்று அவள் கையைப் பற்றினான்.

விநாடி நேரத்தில் அவன் கையை உதறி எழுந்து தள்ளி நின்றுகொண்ட காஞ்சனாதேவி, “நான் ஏன் இங்கு வந்தேன் என்பதை ஊகிக்க முடியுமா உன்னால்?” என்று சீறினாள்.

அவள் ‘உன்னால்’ என்று மரியாதையைக் கைவிட்டுப் பேசியதைக்கூடக் காமவெறியில் கவனிக்காத கங்கதேவன், “என் இஷ்டத்துக்கிணங்கி வந்தாய்” என்று கூறினான்.

காஞ்சனாதேவியின் குரல் பயங்கரமாக ஒலித்தது. “இல்லையடா முட்டாள். இளையபல்லவர் உத்தரவுப்படி வந்தேன்” என்ற அவள் பின்னுக்கு நகர்ந்தாள் இரண்டடி, பயங்கரமாக முன்னேறிய கங்கதேவனிடமிருந்து தப்ப.

“மிகவும் நல்லது! மிகவும் நல்லது! அவனே உன்னை என்னிடம் ஒப்படைத்துவிட்டான். ஒப்படைக்கா விட்டால் தானென்ன? உன்னைப் பலவந்தமாக நான் ஏற்றுக் கொண்டிருப்பேன். உன் தந்தை பலவர்மன் எனக்குச் செய்த அநீதிக்குப் பழி வாங்கி இருப்பேன். அது மட்டுமல்ல, இந்தத் திமிர் பிடித்த இளையபல்லவனை இத்தனை நாள் அழித்து மிருப்பேன்” என்று கூறிக்கொண்டே காஞ்சனாதேவியைப் பயங்கரமாக நெருங்கினான் கங்கதேவன்.

அவன் இரண்டடி எடுத்து வைத்ததும், “பதரே! நில். இன்னும் ஓர் அடி எடுத்து வைத்தால் உன்னைக் கொன்று விடுவேன்” என்று கூவிய காஞ்சனாதேவி தன் உடல் பூராவும் போர்த்திக் கொண்டிருந்த சீலையைத் திடீரென்று எடுத்து அவன் முகத்தில் விசிறினாள். முகத்தின் மீதும் தலைமீதும் விழுந்த போர்வையை நீக்கி அவளை நோக்கிய கங்கதேவன் கண்கள் பிரமித்தன. அவள் கையிலிருந்த நீண்ட வாளின் முனை அவன் கண்களை நோக்கிக் கொண்டிருந்தது. கங்கதேவன் கண்களில் அச்சமில்லை. பிரமிப்பே மேன் மேலும் விரிந்தது. இப்படியொரு பெண், வாளும் கையுமாகத் தன்னை வரவேற்பாளென்பதை எதிர்பாராத அவன் பல விநாடிகளுக்குப் பிறகு பெரிதாக அந்தக் கடற்கரையே அதிரும் படியாக நகைத்தான்.

“நீ நகைக்கச் சமயமல்ல இது” என்ற காஞ்சனாதேவியின் சொற்கள் நிதானமாக உதிர்ந்தன.
கங்கதேவன் சிரிப்பு திடீரென உறைந்தது. அவன் முகத்தில் பயம் உலாவியது. “வேறு எதற்குச் சமயம்?” என்று வினவினான் கங்கதேவன்.

“ஆண்டவனை நினைக்க. “

“ஏன்?”

“உன்னைக் கொல்லப் போகிறேன். ” இதை மிக நிதானமாகச் சொன்னாள் காஞ்சனாதேவி. அவள் சொற்களே கங்கதேவனை நடுங்க வைத்திருக்க வேண்டும். ஆனால் அதை விட நடுங்க வைத்தது மற்றொரு நிகழ்ச்சி. காஞ்சனாதேவி அவனைக் கொல்லத் தீர்மானித்திருப்பதாகச் சொல்லி முடித்ததும் அவர்கள் இருவருக்குமிடையே ஒரு பந்தம் வந்து மணலில் ஊன்றி நின்றது.

இருவரும் கலவரப்பட்டுத் திரும்பினார்கள். உணர்ச்சிகள் அடியோடு வறண்டு போன முகத்துடன் இளையபல்லவன் பந்தம் வந்த திசையில் நின்றுகொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் பாலிக்குள்ளனும் மற்ற மாலுமிகளும் நின்று கொண்டிருந்தார்கள். இளையபல்லவன் முகத்தையும் அவர்கள் முகங்களையும் நோக்கிய கங்கதேவன் இதயத்தில் பெரும் கிலி எழுந்தது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch28 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch30 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here