Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch3 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch3 | Sandilyan | TamilNovel.in

97
0
Read Kadal Pura Part 3 Ch3 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch3 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch3 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 3 : கடல்புறாவின் முதல் போர்.

Read Kadal Pura Part 3 Ch3 | Sandilyan | TamilNovel.in

இளையபல்லவன் உத்தரவுப்படி கடல் புறாவின் நடுமரப் பாய் தவிர மற்றப் பாய்கள் இறக்கப்பட்டபடியால் அதன் வேகம் பெரிதும் தடைப்பட்டு விட்டதையும், சில நாழிகைகளுக்குள் எதிரிக் கப்பல்களுக்கும் அதற்குமிருந்த இடைவெளியும் குறைந்து விட்டதையும், கடல்புறாவை அதிகமாக நெருங்கு முன்பே எதிரி மரக்கலமொன்று எரி அம்புகளை வீசத் தொடங்கிவிட்டதையும் கண்ட பலவர்மன் இளையபல்லவனின் முட்டாள்தனத்தைப் பற்றிப் பெரிதும் நொந்து கொண்டான்.

கடல் புறாவை அணுகி வரும் கப்பல்கள் எதிரிக் கப்பல்கள் என்பதை அறிந்ததுமே பாய்கள் உதவியால் மட்டுமின்றி, துடுப்புகளையும் வேகமாகப் பயன்படுத்தி ஓடுவது விவேகமாயிருக்க, இளையபல்லவன் மரக்கலத்தின் வேகத்தைத் தளர்த்த சகல ஏற்பாடுகளையும் செய்ததன்றி, போருக்கும் சித்தப்பட்டதைப் பார்த்துப் படைத்தலைவன் துணிவுக்கும் ஓர் எல்லை இருக்க வேண்டுமென்று பலவர்மன் நினைத்தான்.

கடல் புறாவின் அமைப்பைப் பார்த்த நாள் முதல் அது ஒரே சமயத்தில் நான்கு மரக்கலங்களை எதிர்த்துப் போராடவல்லது என்பதை பலவர்மன் உணர்ந்திருந்தாலும் அன்று கடலில் இருந்த கொந்தளிப்பான நிலையில் இரண்டு கப்பல்களுடன் போருக்கு முனைவதில் அர்த்தமில்லை யென்றே நினைத்தான் அக்ஷயமுனைக் கோட்டையின் பழைய தலைவன். திறமையுடன் சுக்கானைப் பிடித்திருந்த கூலவாணிகனையும் மீறி மரக்கலத்தைக் கடல் தூக்கியெறிந்து கொண்டிருந்த நிலையில் மரக்கலத்தைக் குறிப்பிட்ட திசையில் திருப்புவது கஷ்டமாயிருக்க, அவசியத்துக்குத் தக்கபடி திருப்பித் திருப்பிப் போரிடுவது சாத்தியமில்லை யென்று பலவர்மன் நினைத்தான்.

பலவர்மனுக்குக் கடல் போரைப் பற்றி எதுவும் தெரியாதென்றாலும் அது சம்பந்தமாக சூளூக்களும் அக்ஷயமுனைக் கடற்கொள்ளைக் காரர்களும் விவரமாகச் சொல்லியிருந்தார்களாகையால் அவனுக்குக் கேள்விஞானம் அதிகமாயிருந்தது. ஆனால் அந்தக் கேள்வி ஞானத்துக்குச் சற்றும் பொருந்தாத போர் ஒன்று அன்று துவங்கியிருப்பதைக் கண்டு பெரும் வியப்பு மட்டுமின்றி அந்தப் போரின் முடிவுபற்றிப் பெரும் சந்தேகமும் கொண்டான் பலவர்மன்.

இப்படி யோசித்துக் கொண்டிருந்த சமயத்திலும் கடல் புறாவைத் தென்மேற்குப் பருவக் காற்றும் கடலலைகளும் தூக்கித் தூக்கி எறிந்துகொண்டிருந்ததால் தளத்தில் நிற்கச் சக்தியற்ற பலவர்மன் மெள்ளப் பக்கப் பலகையை நாடிச் சென்றான். அவன் உத்தேசத்தைக் கண்ட இளையபல்லவன், “பலவர்மரே! இன்னும் இரண்டே நாழிகைகளில் போர் துவங்கப் போகிறது. ஆகையால் அறைக்குச் சென்று விடுங்கள்” என்று கூறினான்.

இதைச் செவியுற்ற பலவர்மன் கடற்போரைப் பற்றி ஓரளவு பீதியடைந்திருந்தாலும் அந்தப் போரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் இருந்ததால், “இல்லை! இங்கேயே இருக்கிறேன்?” என்றான்.

இளையபல்லவன் புருவங்கள் வியப்பால் உயர்ந்தன. “இங்கு என்ன வேலை உங்களுக்கு?” என்று வினவினான்.

“வேலையில்லை. ஆசையிருக்கிறது” என்று பலவர்மன் பதில் சற்றுத் திட்டமாகவே வந்தது. அடிக்கடி வாரியடித்த அலை நீர்த்துளிகளில் நனைந்ததாலும், காற்றில் நீண்ட நேரம் நின்றுவிட்டதாலும் குளிர் உடலுக்குச் சகஜமாகி விடவே பல்லடிப்பு நின்று சற்றுப் பலமாகவே சொற்களை உதிர்த்தான் பலவர்மன்.

“என்ன ஆசை?” என்று இளையபல்லவன் வினவினான்.

“உங்கள் துணிவின் எல்லை எது என்பதைப் பார்ப்பதில் உள்ள ஆசை” என்று விடையிறுத்தான் பலவர்மன்.

“துணிவா!” வியப்புடன் மீண்டும் எழுந்தது இளைய பல்லவன் கேள்வி.

“ஆம் துணிவுதான். “

“எதில் துணிவு?”

“எதிரிக் கப்பல்கள் துரத்தும்போது பாய்களை நன்றாக விரித்து ஓடுவதுதான் விவேகம். “

“அப்படியானால் இப்பொழுது விவேகக் குறைவான காரியம் நடந்திருக்கிறது?”

“சந்தேகமென்ன?”

“எதிரி வரும்போது ஓடுவதுதான் விவேகம் போலிருக் கிறது. “

“எதிரியின் பலத்தைப் பொறுத்தது போர்முறை. “
“இப்பொழுது எதிரியின் பலத்தை நீங்கள் நன்றாக உணர்ந்து கொண்டுவிட்டீர்கள்!”

“உணராமலென்ன? ஒரு கப்பலுக்கு இரண்டு கப்பல் களாக வருகின்றன. “

“அப்படியா!”

“அதுமட்டுமல்ல. எரி அம்புகளையும் எதிரிகள் வீசத் தொடங்கிவிட்டார்கள். “

இதைக் கேட்டதும் இளையபல்லவன் மட்டுமின்றி, பக்கத்தில் நின்ற கண்டியத்தேவனும் பெரிதாக நகைத்தான். இருவரும் நகைத்ததைக் கண்டதால் வெகுண்ட பலவர்மன், “நகைப்புக்கு இதில் என்ன இருக்கிறது,” என்று வினவினான்.

“எங்கே அந்த எரி அம்புகள்?” என்று கேட்ட இளைய பல்லவன் மீண்டும் பலமாக நகைத்தான்.

பறந்து வந்த எரியம்புகள் கடல்புறாவை அணுகாமல் பயனற்றுக் கடலில் விழுந்துவிட்டதை அப்பொழுதுதான் அறிந்த பலவர்மன் பேந்தப் பேந்த விழித்தான். “பலவர்மரே! கடல் போர்முறை தரைப்போருக்கு முற்றிலும் வித்தியாசமானது. படைகள் பின்வாங்கி மறுபடியும் முன்னேறிப் போரிடுவது இரண்டிலும் உண்டு. ஆனால் போரில் தரையின் சந்தர்ப்பங்கள் வேறு, கடலின் சந்தர்ப்பங்கள் வேறு. உதாரண மாகப்பாருங்கள், எதிரிகள் எரி அம்புகளை வீசுவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

ஒருவேளை அவை கடல்புறாவை எட்டிவிட்டால் பாய்ச் சீலைகள் பற்றிக் கொள்ளாதிருக்கப் பாய்களை இறக்கிவிட்டேன். அப்படிப் பாய்கள் இறக்கப்படாமல் பாய்களின் மீது எரி அம்புகள் பாய்ந்திருந்தால் பாய்கள் பற்றிக் கொள்வது மட்டுமின்றி மரத்தண்டுகளும் பற்றிக் கொள்ளலாம். அதைத் தடுக்கவே மாலுமிகளுக்கு வேலை சரியாயிருக்கும். இப்பொழுது வேகம் சற்றுத் தடைப் பட்டிருக்கிறது. அதனால் அனுகூலமும் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்,” என்று இளையபல்லவன் விளக்கிய பிறகு தான் ஓரளவு கடற்போரின் தத்துவம் விளங்கலாயிற்று பலவர்மனுக்கு.

இளையபல்லவன் மேலும் விளக்கினான்: “பலவர்மரே! எதிரி ஆத்திரக்காரனாயிருக்கிறான். குறி எட்டுமுன்பே எரி அம்புகளைப் பிரயோகித்திருக்கிறான். கடலில் அம்புகளை எய்யுமுன்பு எதிரிக்கும் நமக்கும் இடையே உள்ள தூரம், மரக்கலத்தின் வேகம், காற்றின் திசை, வேகம் ஆகிய பல விஷயங்களைக் கணக்கிட்டு எய்ய வேண்டும். ஆனால் அந்தக் கணக்கு எதிரிக்குப் பூஜ்யமென்று நினைக்கிறேன். தவிர இந்தக் கொந்தளிக்கும் கடலில் மரக்கலம் ஒரு நிலையில் நிற்க முடியாத சமயத்தில் அவசரமாக மரக்கலங்களைப் போருக்குச் செலுத்துவதும் தவறு. அந்தத் தவற்றைச் செய்கிறான் எதிரி. இருப்பினும் நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். வரும் மரக்கலங்கள் இரண்டும் நம் மரக்கலத்தைவிட அதிக எடை யுள்ளவை. கடல் புறாவின்மீது அவை மோதினால் கடல் புறாவுக்குத்தான் நஷ்டம்” என்றான் படைத்தலைவன்.

“இத்தனையும் அறிந்தா போருக்கு முனைகிறீர்?” ஆச்சரியம் ததும்பி நின்றது பலவர்மன் கேள்வியில்.

“ஆம். இருப்பினும் நமக்கு ஓர் அனுகூலமும் இருக்கிறது இதில். “
“என்ன அனுகூலமோ?”

” எதிரி ஆத்திரக்காரனாயிருக்கிறான் என்று முன்னமே சொல்லவில்லையா நான்?” “சொன்னீர்கள்.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்று தமிழ்ப் பழமொழியொன்று இருக்கிறது. “

“பழமொழிகளைக் கொண்டு போரில் வெற்றிகொள்ள முடியுமா?

“ஏன் முடியாது? பழமொழிகள் மக்களின் ஆழ்ந்த அனுபவத்திலிருந்து ஏற்படுகின்றன. அனுபவம் மனிதனுக்குச் சிறந்த வழிகாட்டி. ஆகவே பழமொழிகளைவிடச் சிறந்த சாதனம் மனிதனுக்கு ஏது?”

இளையபல்லவன் பேச்சு தர்க்க ரீதிப்படி சரியா பிருந்தாலும் அதில் சாரமில்லையென்றே நினைத்தான் பலவர்மன். அதற்குமேல் அவனிடம் பேச இஷ்டப்படாத இளையபல்லவன், ‘பலவர்மரே! நீண்ட தர்க்கத்துக்கு இப்பொழுது அவகாசமில்லை. நீங்கள் அக்ரமந்திரத்துக்குச் சென்றால் அங்கிருந்தே சாளரத்தின் வழியாகப் போரை நன்றாகப் பார்க்க முடியும். சீக்கிரம் போய்விடுங்கள்” என்று கூறிவிட்டு, “தேவரே! வாரும்,” என்று கண்டியத்தேவனை அழைத்துக்கொண்டு கடல் புறாவின் பின்புறம் நோக்கிச் சென்றான்.

முன்புறமும் பின்புறமும் பக்கவாட்டிலும் பலபடி எழுந்து அல்லாடிக் கொண்டிருந்த கடல் புறாவின் தளத்தில் சிறிது கூட ஆடாமலும் அசையாமலும் சர்வ சாதாரணமாகத் தரையில் நடப்பதுபோல் ஒரே சீராக நடந்து சென்ற அந்த இருவரையும் கண்ட பலவர்மன் மிகுந்த ஆச்சரியமடைந்தான். தனக்குப் பரிச்சயமில்லாத சூழ்நிலையில் சிக்கிக் கொண்டதால் சிறிது பயமடைந்தாலும் உண்மையில் கோழையில்லாத பலவர்மன் கடல் புறாவின் பக்கமரப் பலகையைப் பலமாகப் பிடித்துக்கொண்டும் சில நாழிகைகளுக்கொரு முறை வாரியடித்த நீரை லட்சியம் செய்யாமலும் அடுத்து நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

நடுப்பாய் தவிர மற்றப் பாய்கள் அவிழ்க்கப்பட்டதால் எந்தத் தடங்கலுமின்றி நாற்புறமும் பார்க்கும் வசதி பெற்ற பலவர்மன் எதிரிக் கப்பல்களிலிருந்து எரியம்புகள் நான்கு நான்காக அடிக்கடி பறந்து வந்தாலும் கடல் புறாவைத் தொடச் சக்தியற்றுக் கடல் நீரில் விழுந்து கொண்டிருந்ததையும் கடல் புறாவின் பின்புறம் சென்ற இளையபல்லவன் ஏதோ கண்டியத்தேவனிடம் சொல்ல, சேந்தனுக்குப் பதில் கண்டியத்தேவன் சுக்கானைப் பிடித்துக் கொண்டதையும் பார்த்த பலவர்மன் அடுத்த சில நாழிகைகளில் போர் துவங்கிவிடும் என்ற முடிவுக்கு வந்தான்.

அவன் நினைத்தபடி போர் துவங்கவில்லை. கண்டியத் தேவன் சுக்கானைப் பிடித்துத் திடீரென்று திருப்பவே, கடல் புறா ஒரு முறை பலமாகச் சுழன்றது. அப்படிச் சுழன்ற படியால் அதுவரை வடமேற்கே நோக்கி ஓடிய கடல் புறா கிழக்கு நோக்கிக் குறுக்கில் திரும்பியது. இப்படித் திரும்பியதால் கடல் புறாவின் ஒருபக்கம் பூராவும் வேகமாக வந்த எதிரிக் கப்பல்களை நோக்கிவிட்டதைப் பார்த்த பலவர்மன் அதனால் எதிரிக்குப் பெரும் அனுகூலமே என்று நினைத்தான்.

ஆனால் அந்த அனுகூலத்தை எதிரி பயன் படுத்திக் கொள்ளவில்லை. திடீரென எதிரிக் கப்பல்களின் வேகமும் குறைந்ததைத் தூரத்தே தெரிந்த அவற்றின் விளக்குகள் மெள்ள நகர முற்பட்டதிலிருந்து பலவர்மன் ஊகித்துக் கொண்டான். இளையபல்லவன் ஏற்பாட்டால் எதிரி ஏதோ எச்சரிக்கையடைந்து விட்டானென்பது பலவர்ம னுக்குப் புரிந்துவிட்டதானாலும் அது என்ன ஏற்பாடு, என்ன எச்சரிக்கை என்ற விவரங்கள் ஆரம்பத்தில் புரியவில்லை அக்ஷயமுனையின் பழைய தலைவனுக்கு. போகப் போக அதுவும் புரிந்தது.

எரியம்புகளை வீசுவதையும் எதிரி மரக்கலங்கள் நிறுத்தி விட்டன. பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்த கடலில் எதிரி மரக்கலங்கள் ஆடியும் எழுந்தும் தாழ்ந்தும் மெல்ல மெல்லக் கடல்புறாவை நோக்கி வந்தன. அருகே வரவர அவற்றின் விளக்குகளும் பந்தங்களும் நன்றாகப் பளிச்சிட்டதால் அந்த மரக்கலத்தின் பரிமாணங்களும் கண்ணுக்குத் தெரிந்தன. மையிருட்டைக் கிழித்த அந்தப் பந்த ஒளிகள் கடல்நீரிலும் விழுந்ததால் கடலின் பயங்கரத்தில் சிறிது வசீகரமும் உண்டாயிற்று.

இரண்டு மரக்கலங்களின் அமைப்பைக் கண்டதும் அவை ‘கலிங்கத்தின் மரக்கலங்களாக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்தான் பலவர்மன். கடல்புறாவின் எடையை விட இரண்டு பங்கு எடையுடனும், சர்ப்ப முகங்களுடனும் ரெண்டு பெரும் கடற்பாம்புகளைப்போல் சீறிவந்தன அந்த மரக்கலங்களிரண்டும். அலைகளின் ஆட்டத்தில் அவை இரும்பித் திரும்பி நெளிந்தது, கடல் நாகங்களே மேலெழுந்து நெளிவதை ஒத்திருந்தது பலவர்மன் கண்களுக்கு.

அவற்றை இந்தக் கடல்புறா எப்படிச் சமாளிக்க முடியும் என்ற சந்தேகமும் ஏற்பட்டதால் பலவர்மன் இளையபல்லவன் இருந்த இடத்தை நோக்கினான். இளையபல்லவன் எக்கானைப் பிடித்திருந்த கண்டியத்தேவனுக்கருகில் கடல் புறாவின் பின்னிறகில் சாய்ந்து கொண்டிருந்தான். அவன் முகத்தைப் பலவர்மன் கவனிக்க முடியவில்லையாகையால்.. அவன் ஆராய்ச்சியை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் பலவர்மனுக்கு இல்லை.

கடல் புறாவை நோக்கி மெதுவாக ஆனால் திடமாக வந்து கொண்டிருந்த இரு கப்பல்களையும் நோக்கிய இளைய பல்லவன், “தேவரே! மரக்கலங்கள் இரண்டும் தீர்க்கா வகையைச் சேர்ந்தவை” என்றான்.

“தீர்க்காவில் எந்த உட்பிரிவைச் சேர்ந்தது?” என்று வினவினான் கண்டியத்தேவன்.

“தாரணி உட்பிரிவு:”

“இரண்டும் தாரணிகளா?”

“ஆம். “

‘அப்படியானால் அவற்றின் போர்க் கருவிகளெல்லாம் முன்புறத்தில்தானிருக்கும். இந்த வகை மரக்கலங்களைக் கலிங்கத்தின் சுங்க அதிகாரியாயிருக்கையில் பார்த்திருக் கிறேன். “

“அவை போர் தொடுப்பதானால் முகத்தின் புறமாகத் தான் தொடுக்க வேண்டும். “

“வேறு வழியில்லை. “

“இரண்டுக்கும் சர்ப்ப முகம் இருக்கிறது. “

“அநேகமாக சர்ப்பத்தின் படத்தில்தானிருக்கும், அம்பு களையும் வேல்களையும் வீசும் யந்திரங்கள். “

இதற்குப் பிறகு இளையபல்லவன் சில விநாடிகள் யோசித்தான். பிறகு சொன்னான்: “நல்லது தேவரே! கடல் புறாவின் பக்க இறக்கையையே சர்ப்பமுகங்கள் பார்க்கட்டும். சுக்கானை லேசாகத் திருப்புங்கள்,” என்று.

கண்டியத்தேவன் சுக்கானைத் திருப்பிக் கடல்புறாவின் இறகை எதிரி நன்றாகப் பார்க்கும்படி செய்தான். இதற்கிடையே கடல்புறாவின் தளத்தில் முன்னும்பின்னும் நடந்த இளையபல்லவன் தனது உபதலைவர்களை நோக்கி, “எதிரி மரக்கலங்கள் இரண்டும் நன்றாக அருகில் வரும்வரை நமது அம்புகளை வீச வேண்டாம். அருகில் நன்றாக வந்ததும் அவற்றின் பாய்ச் சீலைகளைக்கூடத் தொடவேண்டாம். மரக் கலங்களின் முகப்பை நோக்கி வேல்களை மட்டும் வீசுங்கள்.

முகப்பு உடைந்ததும் பிறகு நடக்கட்டும் வாண வேடிக்கை. பிறகு பற்றட்டும் அவற்றின் பாய்ச்சீலைகள்,” என்று உத்தர விட்டான். அவன் உத்தரவை நிறைவேற்ற அரை நிர்வாண மாலுமிகள் விரைந்தார்கள். சிலர் தமிழ்நாட்டு வழக்கப்படி இடையில் துணியுடுத்தி முழந்தாள் வரை தெரியும்படி கச்சமாக இழுத்துக் கட்டியிருந்தார்கள். மற்றும் சிலர் சீனத்துச் சராயணிந்திருந்தார்கள். யாருக்கும் மேலே எதுவுமில்லா விட்டாலும் காதிலணிந்திருந்த குண்டலங்களும், வளையங் களும், கழுத்தில் இருந்த சங்கு மாலைகளும் அவர்களை விநோத மனிதர்களாக அடித்திருந்தன. உடல் நனைந்து அவர்கள் அலட்சியத்துடன் கடல்புறாவின் போர்க் கருவிகளை இயக்கியது தூரத்தே நின்ற பலவர்மன் கண்களுக்குப் பெரும் விருந்தாயிருந்தது.

எதிரி மரக்கலங்கள் வெகு சீக்கிரம் கடல் புறாவை அணுகியும் கடல்புறா மட்டும் அவற்றை அணுகவிடாமல் நிமரென முன்னும் பின்னும் திரும்பி அந்த மரக்கலங்’ களுக்குப் பாய்ச்சல் காட்டியதால் எதிரிகள் வீசிய வேல்களும் ‘அம்புகளும் கண்ட இடத்தில் கடல்புறாவின் தளத்தில் விழுந்தனவேயொழிய அதற்கு எந்தச் சேதத்தையும் விளை விக்கச் சக்தியற்றவையாயின. இத்தனைக்கும் கடல்புறா ஒரு வாளியைக்கூட எதிரிமீது வீசாமல், எதிரிகள் மரக்கலங்களை மேலும் மேலும் நெருங்க அனுமதித்துக் கொண்டிருந்தது. இளையபல்லவன் ஏன் இன்னும் போர் துவங்காமல் தாமதப்படுத்துகிறான் என்று யோசித்து விடை காணாமல் குழம்பினான் பலவர்மன்.

அந்தக் குழப்பம் எதிரி மரக்கலங் களுக்கும் இருந்திருக்க வேண்டும். அணுகி வந்த மரக்கலங்கள் சற்று தாமதித்தன. அந்த மரக்கலங்களில் ஒன்றில் மாலுமிகள் பலர் கூடி ஏதோ பேசியது பலவர்மன் கண்களுக்கு அந்த மரக்கலங்களில் எரிந்த பந்தங்களின் வெளிச்சத்தில் தெரிந்தது. அந்த மாலுமிக் கூட்டத்தை உயரமான ஒருவன் அணுகி ஏதோ கூறினான். அடுத்த விநாடியில் இரண்டு பந்தங்கள் எழுந்து பக்கத்து மரக்கலத்துக்கு ஏதோ சைகை செய்தன. அந்தச் சைகைக்குப் பிறகு அந்த மரக்கலங்கள் இரண்டும் சற்றே திரும்ப முற்பட்டன. அந்தச் சமயத்தில் எழுந்தது இளையபல்லவன் கூச்சல், “உம்! உடையுங்கள் முகப்புக்களை, என்று .
திடீரெனக் கடல்புறாவின் தளம் உயிர்பெற்றுத் துடிப் புற்றது. அதன் பக்கப் பகுதிகளின் சுழல் யந்திரங்களில் பொருத்தப்பட்டிருந்த வேல்கள் விர்விர்ரென்று நூற்றுக் கணக்கில் கிளம்பி எதிரி மரக்கலங்களின் முகப்பில் பாய்ந்தன. சர்ப்பங்களின் தலைகள் இரண்டும் இரண்டே விநாடிகளில் சுக்கு நூறாகப் பிளந்தன. அதே சமயத்தில் தளத்தின் மற்றொரு. புறத்திலிருந்து எழுந்த சீனத்து வாணங்கள் விர்ரென்று எதிரி மரக்கலங்கள் மீது பாய்ந்து அங்கிருந்த பாய்களைப் பற்ற வைத்தன.

கண்மூடிக் கண் திறப்பதற்குள் ஏற்பட்ட தாக்குதலால் எதிரி மரக்கலங்களில் ஜ்வாலை அதிகமாகி, கடல் பிராந்தியத்தின் மையிருட்டைக் கலைத்தன. “விசிறுங்கள் வளையங்களை,” என்ற இளையபல்லவன் குரல் கடலலை களின் ஓசையையும் கிழித்துக்கொண்டு பயங்கரமாக ஒலித்தது. அதைத் தொடர்ந்து உருளைகள் சுழலும் சத்தம் கேட்டது. கடல்புறா தனது இறகில் ஒன்றைப் பெரிதாக விரித்தது. அதில் தாவிய மாலுமிகள் பெரும் கயிறுகளை எதிரி மரக்கலங்களை நோக்கி வீசினார்கள். கண்டியத்தேவன் சுக்கான் வித்தையால் எதிரி மரக்கலமொன்றைக் கடல்புறா அணுகிவிட்டதால் மாலுமிகள் வீசிய கயிறுகளின் முகப்பிலிருந்த வளையங்கள் எதிரி மரக்கலத்தின் பக்கப் பலகைகளிலும் பாய்மரத் தூண் களிலும் கௌவி மரக்கலத்தைக் கடல்புறாவுக்காக இழுத்தன.

திடீரென எதிரி மரக்கலத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் கேட்டது. கடல்புறா வெகு வேகத்துடன் அதை மோதவே, அந்த மோதலில் திணறியது அந்தத் தாரணி. கடல்புறாவின் இறக்கையில் தயாராக நின்ற மாலுமிகள் வாட்களைப் பல்லில் கடித்துக்கொண்டு எதிரி மரக்கலத்தின் மீது தாவி விட்டார்கள்.

அடுத்த இரண்டு நாழிகைகளுக்குள் அந்தப் பயங்கரக் கடற்போர் முடிந்தது. கடல்புறாவின் முதல் போர் அது. ஆனால் அந்தப் பயங்கரப் போரின் விசித்திரத்தை அதன் தலைவனின் திறமையைக் கண்டு மலைத்து வியந்து நின்றான் பலவர்மன். பலவர்மன் வியப்பு அத்துடன் முடியவில்லை. போர் முடிந்த பிறகு அவன் வியப்பு உச்சநிலைக்குச் சென்றது. அந்த வியப்பு நிகழ்ந்தது இளையபல்லவன் அறையில். படுக்கையில் கிடந்து மெள்ள மெள்ளக் கண் விழித்த பலவர்மன் நடுங்கினான், எதிரே நின்ற உருவத்தைக் கண்டு. “யார்! நீயா? எப்படி வந்தாய் இங்கே? உன்னை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை” என்று தட்டுத் தடுமாறிக் குழறவும் செய்தான் பலவர்மன்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch2 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch4 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here