Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch30 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch30 | Sandilyan | TamilNovel.in

85
0
Read Kadal Pura Part 3 Ch30 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch30 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch30 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 30 : மரண மன்னிப்பு!

Read Kadal Pura Part 3 Ch30 | Sandilyan | TamilNovel.in

கல்லைவிடக் கடினமான உணர்ச்சி வறண்ட முகத்துடன் பந்தத்திற்கு அப்பால் நின்ற இளையபல்லவன் இதயத்திலோடிய எண்ணங்களை கங்கதேவனால் முழுதும் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், இளையபல்லவனுக்குப் பின்னால் நின்ற மாலுமிகளின் முகபாவங்களிலிருந்து அவர்கள் மனப்போக்கைப் புரிந்துகொண்டதால் கலிங்கத்தின் கடற்படைத் தலைவன் இதயத்தில் பிரமிப்பும் திகிலும், ஒருங்கே கலந்து எழுந்தது.

தன் செய்கையை மாலுமிகள் சிறிதும் ஆதரிக்கவில்லை என்பதை வெறுப்பு நிலவிய அவர்கள் பார்வையிலிருந்தே புரிந்துகொண்ட கங்கதேவன், எத்தனையோ பெண்களைத் தான் பிடித்துக் கெடுத்த சமயங்களில் சிறிதும் சிரத்தை காட்டாத மாலுமிகள் இந்த ஒரு பெண்ணின் விஷயத்தில் எதற்காக வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியாமல் திணறினான். அதுவும் இளையபல்லவனைப் பின்பற்றி அந்த இடத்திற்கு அவர்கள் ஏன் வரவேண்டும் என்பதும் விளங்கவில்லை அவனுக்கு.

அதுமட்டுமல்ல, தன்னிடம் இஷ்டப்பட்டு பலவர்மன் மகளை அனுப்பியவனும், அவளிடமுள்ள வெறுப்பைத் தன்னிடமே அறிவித்தவனுமான இளையபல்லவன், எதற்காக இடையே பந்தத்தை வீசியெறிந்து உணர்ச்சியற்ற மரம்போல் நிற்கிறா னென்பதையும் கங்கதேவனால் அறிந்துகொள்ள முடிய வில்லை. இத்தனையும் அவனுக்குப் பிரமிப்பாய் இருந்த தாலும் அவற்றுக்குச் சரியான விடை காண முடியாததாலும் அவன் இதயத்தில் கோபம் மேலிடவே, உதடுகள் துடிக்கக் கண்கள் உருண்டு சீறக் கேட்டான், “யார் இங்கு வரச் சொன்னது?” என்று. மாலுமிகள் யாரும் பதில் சொல்ல வில்லை அந்தக் கேள்விக்கு பாலிக் குள்ளன் உதடுகள் மட்டும் ஏதோ பேச முற்பட்டுச் சட்டென்று நின்றுவிட்டது. இளையபல்லவனின் உணர்ச்சியற்ற குரலே பதில் சொல்ல எழுந்தது, “இங்கு வர யார் அனுமதியும் தேவையில்லை எங்களுக்கு” என்று .

அதைக் கேட்டதும் மெள்ள அதுவரை காட்டிய பொறுமையை இழக்க முற்பட்ட கங்கதேவன், “இந்தத் தீவுக்கு நான் தலைவன்-” என்று துவங்கினான் பதட்டத்துடன்.
“இந்தத் தீவை யாரும் சாஸனம் செய்யவில்லை உனக்கு” என்று பதில் சொன்ன இளையபல்லவன் குரல் வறண்டு கிடந்தாலும், அந்த வறட்சியிலேயே ஒரு பயங்கரம் இருந்தது.

மரியாதையை அடியுடன் கைவிட்டு இளையபல்லவன் பேச முற்பட்டதைக் கண்ட கங்கதேவன், “இந்தத் தீவை நான் கைப்பற்றி இருக்கிறேன் என்பதை நீ உணரவில்லையா?” என்று வினவினான் கோபம் துள்ளித் தெறித்த குரலில்.

“நீ தனிப்படக் கைப்பற்றவில்லை. இதோ எனது பின்னால் நிற்கும் மாலுமிகள் தயவால் கைப்பற்றி இருக்கிறாய்?” என்றான் இளையபல்லவன் சர்வசாதாரணமாக.

“அதனாலென்ன?”

“அவர்களுக்குப் பாதகமான எந்தக் காரியத்தைச் செய்தாலும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். “

“அவர்களுக்குப் பாதகமான எந்தக் காரியம் இப்பொழுது நடந்திருக்கிறது?”

“நீ இப்பொழுது செய்ய முற்பட்ட காரியம். “

“அதனால் அவர்களுக்கென்ன நஷ்டம்?”

“என் மனக்கஷ்டம் அவர்கள் நலனுக்கும் பெரு நஷ்டம். “
கங்கதேவன் பொறுமையை அடியோடு இழந்தான். “உன் மனக்கஷ்டத்தால் யாருக்கும் நஷ்டமில்லை. உனக்குத்தான் கேடு இப்பொழுது நீ துவங்கி இருக்கும் தலையீட்டினால்” என்று சீறினான் அவன்.

இளையபல்லவன் இதழ்கள் கோபத்தால் மடிந்தன. “மாலுமிகள் அப்படி நினைக்கவில்லை” என்றான் கோபத்தை லேசாகக் குரலில் காட்டி.

“ஏன் மாலுமிகளுக்கு உன்னிடம் அத்தனை அக்கறை?” என்று கங்கதேவன் இரைந்தான்.

“என்னால் லாபமிருக்கிறது அவர்களுக்கு?” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

“என்ன லாபம்?” என்று சீறினான் கங்கதேவன்.

“உன் தலைமையில் அவர்கள் அடையாத லாபத்தை அடையப் போகிறார்கள். கடாரத்துக்கு அவர்களை அழைத்துச் செல்லப் போகிறேன். கடாரத்தின் செல்வப் பெருக்கை அவர்கள் அறிவார்கள். அங்குள்ள பொற்குவியல், விலை உயர்ந்த மணிக்குவியல்கள், இவற்றை இழக்க மாலுமிகள் விரும்பவில்லை” என்று விளக்கினான் இளையபல்லவன்.

இதைக்கேட்ட கங்கதேவன் தன் சீறும் விழிகளை மாலுமிகளை நோக்கி ஓடவிட்டான். அவர்கள் பார்த்த பார்வை அவன் நம்பிக்கையையும் தைரியத்தையும் ஆட வைத்தது. இளையபல்லவன் ஏதோ ஆசை காட்டி அவர்களைச் சரிப்படுத்தியிருக்கிறான் என்பதையும், தன் செய்கையை அவர்கள் ரசிக்கவில்லை என்பதையும் புரிந்து கொண்ட கங்கதேவன் கோபம் அத்துமீறவே, “அட முட்டாள்களா! அவன் வார்த்தையை நம்பாதீர்கள். கடாரத்தைக் கொள்ளையிடுவது அத்தனை சுலபமல்ல. அதன் துறைமுகத்தில் புகுவதே கஷ்டம். புகுந்தாலும் அரண்களை மீறி நகருக்குள் புகுவது அதைவிடக் கஷ்டம். அதற்குத் திறமை வாய்ந்த கட்டுப்பாடுள்ள கடற்படை வேண்டும். கொள்ளைக் காரர்களான உங்களால் முடியாது” என்று கூவினான்.

கோபத்தின் வேகத்தில் சந்தர்ப்பம் அறியாமல் அவன் பேசிய பேச்சு, கொள்ளைக்காரர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடவே அவர்களிடை மிகுந்த சலசலப்பு ஏற்பட்டது.

அந்த வாய்ப்பை நன்றாக உபயோகப்படுத்திக் கொண்ட இளையபல்லவன், “கங்கதேவா! நமது மாலுமிகளை நிந்திக்கவும் முற்பட்டுவிட்டாய் நீ அகந்தையால். இந்தக் கொள்ளைக்காரர் உதவியில்லாமல் நீ இந்த மாநக்காவரத்தைப் பிடித்திருக்க முடியுமா? அவர்கள் வீரத்தில் உனக்குச் சந்தேகமிருந்தால் நீ ஏன் அவர்களை உன்னுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்?” என்று கேட்டான் மீண்டும் உணர்ச்சி களை அடக்கிக் கொண்டு நிதானமாக.

“அதைப்பற்றிக் கேட்க நீ யார்?” என்று வினவினான் கங்கதேவன் ஆத்திரத்துடன்.

“உன் பங்காளி. “

“பங்காளியா?”
“ஆம். கடாரப் படையெடுப்பில் நீயும் நானும் கூட்டுச் சேர்ந்ததை மறந்துவிட்டாயா? இப்பொழுது நீ பின் வாங்கினால் நஷ்டம் எனக்கு உண்டு. “

இதைக் கேட்டதும் என்ன செய்வதென்றறியாமல் திணறிய கங்கதேவன் அந்தச் சமயம் தப்பித்துக்கொள்ளத் தீர்மானித்து, “இந்த விஷயங்களை நாளைக் காலையில் பேசிக்கொள்வோம்” என்றான்.

“முடியாது. இப்பொழுதே தீர்மானிக்க வேண்டும்” என்ற இளையபல்லவன் குரலில் உறுதி பூரணமாக இருந்தது.

“நல்லது, கடாரத்தின் படையெடுப்பை நடத்துவோம்” என்று கூறிவிட்டு, கங்கதேவன் மெள்ள நகர ஆரம்பித்தான்.

“நில்! நடத்துவதாக ஆணையிடு” என்றான் இளைய பல்லவன் குரலில் அதிகாரத்தைக் காட்டி.

கங்கதேவன் தன் மார்பில் கையை வைத்து ஆணை யிட்டான். அதற்குப் பின்பும் விடாத இளையபல்லவன், “அந்தப் பெண்ணை இனி அணுகுவதில்லை என்றும் ஆணை இடு” என்றான்.

கங்கதேவன் கண்களில் சீற்றம் மண்டியது. “அதற்கும் கடாரத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்று இரைந்தான்.

“சம்பந்தமிருக்கிறது கங்கதேவா! இந்தப் பெண் எனக்குரியவள்..” என்ற இளையபல்லவன் பாலிக்குள்ளனை நோக்கி, “மாலுமி! நீ சொல்!” என்றான்.
பாலிக்குள்ளன் மெள்ளப் பின்னாலிருந்து பந்தத்தை நோக்கி வந்தான். “ஆம் தலைவரே! இந்தப் பெண் இவருக் குரியவள்” என்று மரியாதையும் கடுமையும் கலந்த குரலில் தன் கருத்தை வெளியிட்டான்.

“எப்படித் தெரியும் உனக்கு?” என்ற கங்கதேவன் அவனை நோக்கிப் பயங்கரமாக ஓர் அடியும் எடுத்து வைத்தான்.

“அவள் பதினோரு மாற்றுத் தங்கம்” என்றான் பாலிக் குள்ளன் கிலியுடன்.

“என்ன உளறுகிறாய்?” கங்கதேவன் குரலில் ஒலி அதிகரித்தது.

“இளையபல்லவர் இவளை உயிராக நேசிக்கிறார். பத்தரை மாற்றுத் தங்கத்தை எத்தனை வேண்டுமானாலும் இழப்பார். ஆனால் இந்தப் பதினோரு மாற்றுத் தங்கத்தைத் தொட்டால் அவனைக் கொன்று விடுவதாகப் பலமுறை சொல்லியிருக் கிறார்” என்ற பாலிக்குள்ளன், “அது மட்டுமல்ல… ” என்று இழுத்தான்.

“வேறென்ன?” வெறியும் அதிகாரமும் கலந்திருந்தது கங்கதேவன் குரலில்.

“உங்கள் காம இச்சைக்காகக் கடாரத்தின் திட்டம் பாதிக்கப்படுவதை மாலுமிகள் விரும்பவில்லை. ஆகவே, நீங்கள் அந்தப் பெண்ணை அணுகாதிருப்பது நல்லது. ” இதைச் சொன்ன பாலிக்குள்ளன் குரல் திட்டமாக மட்டுமல்ல, எச்சரிக்கும் முறையிலும் இருந்தது.
கங்கதேவன் அறிவு மட்டும் அப்பொழுது கூர்மையா யிருந்திருந்தால் மாலுமிகளை இளையபல்லவன் கொள்ளை ஆசை காட்டி மித்ரபேதம் செய்துவிட்டதை உணர்ந்து கொண்டு சமயத்துக்குத் தக்கபடி நடந்து கொண்டிருப்பான். ஆனால் அப்பொழுதிருந்த கோபத்தால் நிலைகுலைந்த அவன் புத்தியில் வெறி பெரிதும் எழுந்ததால், “இவளை விடாவிட்டால் என்ன செய்து விடுவீர்கள்?” என்று சீறினான்.

இளையபல்லவன் குரல் மிக நிதானமாக இடையே புகுந்தது. அவர்கள் ஏதும் செய்ய மாட்டார்கள்” என்று கூறினான் இளையபல்லவன்.

“வேறு யார் செய்வார்கள்? என்ன செய்வார்கள்?” என்று கூறிய கங்கதேவன் இளையபல்லவன் மீது பயங்கரமாகக் கண்களை நாட்டினான்.

இளையபல்லவன் பதிலில் கடுமை பலமாக இருந்தது. அதில் மரண ஒலி ஊடுருவி நின்றது. “நான் செய்வேன். உன்னைக் கொன்றுவிடுவேன்” என்றான் இளையபல்லவன்.

“நீயா!” வெறிச் சிரிப்பு ஒன்று கங்கதேவனிடமிருந்து பெரிதாகக் கிளம்பி அந்தப் பகுதியின் நிம்மதியைக் கலைத்தது.

“ஆம். நானேதான்!” இளையபல்லவன் குரலில் சாந்தி யிருந்தது.

கங்கதேவன் பொறுமை காற்றில் பறந்தது. அது மட்டு மல்ல, தன் ஆகிருதியையும் இளையபல்லவன் ஆகிருதியையும் நினைத்த அவன் இளையபல்லவனைக் கொல்வது நொடிப் பொழுதுகூட ஆகாதெனத் தீர்மானித்ததால் திடீரென ஒரு முடிவுக்கும் வந்தான். ஏதாவதொரு காரணத்தை வைத்து இளையபல்லவனைக் கொன்றுவிட்டால் மாலுமிகள் தனக்கு அடங்கி விடுவார்களென்று நினைத்ததால் கனல் பறக்கும் கண்களுடன் இளையபல்லவனை நோக்கிய கங்கதேவன், “என் வாளுக்கு இரையானவர்கள் பலர். அந்தப் பட்டியலில் நீயும் சேராதே இளையபல்லவா! இன்னும் அவகாசம் தருகிறேன். ஓடி விடு, உன்னுடன் இந்த முட்டாள்களையும் அழைத்துச் செல்” என்று கூவினான்.

இளையபல்லவன் பதிலும் தெளிவாக வந்தது. “கங்க தேவா! நமக்குள் நான் சண்டையை விரும்பவில்லை. இனிமேல் அந்தப் பெண்ணை அணுகுவதில்லையென ஆணையிடு. தவிர, நீ இப்பொழுது அவளிடம் நடந்து கொண்டதற்கு அவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேள். உன்னைக் கொல்லாமல் விடுகிறேன்” என்றான் படைத் தலைவன்.

கங்கதேவன் பதிலுக்குப் பெரிதாக நகைத்தான். “மண்டி யிட்டு நான் மன்னிப்புக் கேட்க வேண்டுமா இந்த மணல் தரையில்? அதைவிட உன்னை இந்த மண்ணைக் கவ்வச் செய்கிறேன்” என்று கூறிக்கொண்டு சரேலெனத் தன் வாளை உருவினான்.

இளையபல்லவன் கண்கள் விநாடி நேரத்தில் காஞ்சனா தேவியை நோக்கி ஏதோ சைகை செய்யவே அவள் தன் கையிலிருந்த வாளைப் படைத்தலைவனை நோக்கி எறிந்தாள், அதன் பிடியை வலது கையால் வெகுலாகவமாகக் கைப்பற்றி இடது கையால் அதன் கூர்மையையும் சோதித்த இளைய பல்லவன், “கங்கதேவா! உன் பிடிவாதத்தினால் நீ இந்தச் சண்டையை என்மீது சுமத்துகிறாய். இதன் விளைவுக்கு நான் பொறுப்பாளியல்ல” என்று கூறிக்கொண்டு பாலிக்குள்ளனை நோக்கி, “மாலுமி! எல்லோரையும் வளையமாக இடம் விட்டு நிற்கச் சொல்.

வீரர்கள் முறைப்படி இந்தத் தகராறை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம்” என்று கூறவே, மாலுமிகளிடையே உற்சாகம் அதிகரித்தது. உயிரைப் பற்றி அதிகமாக எப்பொழுதும் லட்சியம் செய்யாத அந்தக் கொள்ளைக்காரர்கள் விநாடி நேரத்தில் வளையமாக நின்றார்கள். இரண்டு மூன்று பந்தங்கள் பல இடங்களில் நடப்பட்டன. ஏற்பாடுகள் முடிந்ததும் முடியாததுமாகத் திடீரென கங்கதேவன் தன் வாளை வீசிக்கொண்டு இளையபல்லவன்மீது பாய்ந்து விட்டான்.

பெரிய ராட்சதன் போல் உருவம் படைத்த கங்கதேவன் தன் பெருவாளை உருவிக் கன வேகமாகப் பாய்ந்ததும் இளையபல்லவன் அந்த வேகத்திலேயே மணலில் விழுந்து விடுவானென எதிர்பார்த்த மாலுமிகள் அடுத்தகணம் ஏமாந்தே போனார்கள். அவன் பாய்ந்த வேகத்திலிருந்து தப்ப இளையபல்லவன் சரேலென ஒருபுறம் நகர்ந்து கொள்ளவே கங்கதேவன் தனது வேகத்தில் பல அடிகள் நீள ஓடி மணலில் விழ இருந்தான். பிறகு தள்ளாடிச் சமாளித்துக் கொண்டு திரும்பினான். அவன் திண்டாட்டத்தைக் கண்ட மாலுமிகள் சரேலென நகைத்தார்கள் பெரிதாக.

அத்துடன், அந்தச் சந்தர்ப்பத்தில் கங்கதேவன் முதுகுப்புறத்தில் இளைய பல்லவன் தன் வாளை ஏன் பாய்ச்சவில்லை என்பது புரியாமலும் வியப்படைந்தார்கள். எந்த விரோதியிடமும் அதர்ம யுத்தத்தை ஆயுளில் செய்திராத இளையபல்லவன், கங்கதேவன் நிதானித்துக் கொண்டு திரும்ப அவகாசம் கொடுத்தான். அதுமட்டுமல்லாமல், “கங்கதேவா! நான் உன்னைப் போல் அவசரப்படவில்லை. எதிரியின் அஜாக்கிரதையைப் பயன்படுத்திக் கொள்ளும் பழக்கமும் என்னிடம் கிடையாது. ஆகவே நன்றாக நிதானப்படுத்திக் கொண்டு வா, நான் காத்திருக்கிறேன்” என்று கூறவும் செய்தான்.

மாலுமிகள் நகைத்ததாலும் இளையபல்லவன் சொற் களாலும், கோபத்தாலும், வெட்கத்தாலும் உள்ளம் கொந்தளிக்க நிதானத்தை அடியோடு உதறிவிட்ட கங்கதேவன், மிரண்ட பெரும் காளைபோல் வெகு வேகத்துடன் கத்தியுடன் மீண்டும் பாய்ந்தான், இளையபல்லவன்மீது. இம்முறை இளையபல்லவன் விலகவில்லை. வெகு லாகவத்துடன் கங்கதேவனின் வாளைத் தன் வாளால் தடுத்தான். கங்கதேவன் சீறிச் சீறிப் பாய்ந்தான் மீண்டும் மீண்டும். ஒவ்வொரு முறையும் வேகத்துடன் இறங்கிய கங்கதேவன் வாள் வெகு அலட்சியமாக இளையபல்லவன் வாளால் தடுக்கப்பட்டதைக் கண்ட மாலுமிகள் வியப்பின் எல்லையை அடைந்து பெரும் கூச்சலிட்டனர்.

வாழ்க்கையையே சூதாக மாற்றிக் கொண்டவர்களும் வீரத்தை யாரிடமும் ரசிப்பவர்களும், யார் சாவதையும் ஒரு பொருட்டாக மதிக்காதவர்களுமான அந்தக் கொள்ளைக் கூட்டத்தார் திரும்பத் திரும்ப இளையபல்லவன் வாள் வீச்சைக் கண்டு ஆனந்தக் கூச்சலிட்டனர். சிலர், “பலே பலே” என்றார்கள், பலர் கிறீச் கிறீச்சென்று கூச்சலிட்டார்கள். சிலர் கையைத் தட்டி ஆரவாரித்தார்கள். சிலர் இடுப்பை வளைத்துத் தொடைகளில் கைகளை ஊன்றிக் குனிந்து சண்டையை உற்றுப் பார்த்து ஆமோதிக்கும் வகையில் தலைகளை ஆட்டி, “உம். உம்!” என்ற சத்தங்களையும் எழுப்பினார்கள்.

ஏற்கெனவே நிதானமிழந்து போரிட்ட கங்கதேவன் வெறிபிடித்து வெகு வேகத்துடன் வாளை நீட்டி நீட்டிச் சுழற்றிச் சுழற்றிப் பாய்ந்தான் பல கோணங்களிலிருந்து. மணலில் சுற்றிச் சுற்றி வந்து தாக்கினான். ஒவ்வொரு முறையும் அவன் பெருவாள் மிகுந்த வேகத்துடன் இளையபல்லவன் தலைமீது இறங்க முற்பட்டும் இளையபல்லவன் தலையைத் தீண்டவும் முடியவில்லை அந்தப் பெருவாளால். இளையபல்லவன் வாள் ஏதோ விதவிதமாகச் சுழன்று அந்தப் பெரு வாளை வேறு விழிகளில் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தது.

அத்தனைக்கும் இளையபல்லவன் அதிகமாக இருந்த இடத்தை விட்டு நகரவுமில்லை. உடலை அதிகமாக அலட்டிக் கொள்ளவுமில்லை. வாளை விளையாட்டுக்குச் சுழற்றுபவன் போல் சுழற்றி எதிரியின் தாக்குதலைத் தடுத்துக் கொண் டிருந்தான். அரை நாழிகை இப்படிப் போர் நடந்தும் இருவரும் சளைக்காததைக் கண்டதும் அனைவரும் பிரமித்தனர். இந்தச் சண்டை முடியுமா முடியாதா என்று அவர்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இளையபல்லவன் எதிரியின் வாளைத் தடுத்தவண்ணம் சொன்னான், “கங்கதேவா! கடைசி முறையாகச் சொல்கிறேன். அவளிடம் காலில் விழுந்து மன்னிப்புக் கேள். உன்னைக் கொல்லாமல் விட்டு விடுகிறேன்” என்று.

‘கிளாங் கிளாங்’ என்று வாள்களின் மோதல்களுக் கிடையே இளையபல்லவன் கூறிய சொற்களைக் கேட்ட கங்கதேவன், “என்னைக் கொல்ல இன்னொருவன் பிறக்க வேண்டும். டேய் முட்டாள்! என்னிடம் நீ மன்னிப்புக் கேட்டாலும் உன்னை இனி விடமாட்டேன். உன்னை ஒழித்து உன் மாலுமிகளையும் ஒழித்து விடுகிறேன்,” என்று கூறிக் கொண்டு அதுவரை ஒரு கையால் பிடித்திருந்த வாளை இரு கைகளாலும் பிடித்து ஓங்கி இளையபல்லவன் தலைமீது இறக்கினான்.

அந்த வாள் மட்டும் அந்த வேகத்தில் வாகன வாரைப் போலிருந்த தூண் கைகளின் பலத்துடன், இளையபல்லவன் தலைமீது இறங்கியிருந்தால் இளையபல்லவன் கதை கடல் மோகினித் தீவிலேயே முடிந்திருக்கும். ஆனால் கங்கதேவன் வலது கையுடன் இடது கையைச் சேர்க்கையிலேயே அவன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட இளையபல்லவன் சரே லென்று ஒரு புறம் ஒதுங்கி இறங்கிய வாளின் அடியில் தன் வாளைக் கொடுத்து ஒரு சுழற்றுச் சுழற்றவே கங்கதேவன் இரண்டு கைகளும் வேறு மார்க்கத்தில் திரும்பியோடின.

அந்த ஏமாற்றத்துக்குப் பின் தான் சமாளிக்க வேண்டியது சாமான்ய எதிரியல்ல என்பதையும் வெகு சாமர்த்தியமான வாள் வீரனைத் தான் சந்தித்து விட்டதையும் உணர்ந்த கங்கதேவன், ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டு நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் போரிட்டான். எச்சரிக்கை காலந் தாழ்ந்து வரவே பலனற்றுப் போயிற்று. பலமுறை வாளை வெறியுடன் வீசியதால் கை சிறிது களைத்திருந்தது. ஆகவே வாள் வீச்சிலும் வேகம் மெள்ள மெள்ளக் குறைந்தது. கங்கதேவன் வாள் வேகம் குறைந்து விட்டதைத் தன் வாளின் மீது அது மோதிய முறையிலேயே புரிந்து கொண்டுவிட்ட இளையபல்லவன் தன் தாக்குதலைத் துரிதப்படுத்தினான்.

இளையபல்லவன் கங்கதேவன் வாளைத் திருப்பித் திருப்பி தட்டிக்கொண்டு முன்னேறினான். பந்தத்தின் வெளிச்சத்தில் பளீர் பளீரென மின்னல் போல் அதிவேகத்துடன் பாய்ந்த இளையபல்லவன் வாளிலிருந்து தப்ப கங்கதேவன் பலமுறை மாறிமாறிக் குதித்தான். அவன் குதிப்பது மாலுமிகளுக்கு வேடிக்கையாயிருக்கவே அவர்கள் அதற்குச் சரியாகத் தாளம் போட்டார்கள். அந்த எக்காளத்தைக் கண்டு வெறிகொண்டு சரேலென வாள் கொண்டு இளையபல்லவன் மீது பாய்ந்தான் கங்கதேவன். அடுத்த விநாடி கங்கதேவன் வாள் ஆகாயத்தில் பறந்தது. இளையபல்லவன் கைகளிலிருந்த வாள் கங்கதேவன் இதயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து விட்டது.

அந்த மணற்பரப்பில் திடீரெனப் பயங்கர மௌனம் நிலவியது. கங்கதேவன் குப்புற மணலில் விழுந்து கிடந்தான். அவன் தலை காஞ்சனாதேவியின் காலடியில் கிடந்தது. இருமுறை அவன் உடல் சிலிர்த்தது. இருமுறை இருமி இரத்தம் கக்கினான் கங்கதேவன். அவன் உடல் சரேலென செயலற்று நின்றுவிட்டது.

இளையபல்லவன் பழிவாங்கிய பயங்கரத்தைப் பார்த்த மாலுமிகள் திகைத்தனர். இளையபல்லவன் கங்கதேவனைத் திருப்பித் திருப்பிப் போரிட்டதற்குக் காரணம் தெள்ளெனப் புரிந்தது அவர்களுக்கு. காஞ்சனாதேவியிடம் மரண மன்னிப்புக் கேட்கவே அந்தப் பக்கம் கங்கதேவனை இளையபல்லவன் தந்திரமாகத் திருப்பித் துரத்தி இடம் பார்த்து அவனைக் கொன்றிருக்கிறானென்பதை அறிந்த இளையபல்லவன் சூட்சுமத்தை உள்ளூர வியந்தாலும், கங்கதேவனின் கோர மரணம் அவர்கள் இதயத்தில் பேரச்சத்தை விளைவித்தது.

இளையபல்லவன் மாலுமிகளை ஒருமுறை திரும்பி நோக்கினான். “கங்கதேவன் பெரிய வீரன். அவனைத் தகுந்த மரியாதைகளுடன் புதைத்துவிடுங்கள்” என்று கூறிவிட்டு, “வா! மஞ்சளழகி” என்று மாளிகையை நோக்கி நடந்தான்.

பெரும் தலைவனொருவனைக் கொன்றுவிட்டு மிக நிதானமாக அவன் நடந்து செல்வதைக் கண்ட பாலிக் குள்ளனும் மற்ற மாலுமிகளும் பிரமிப்படைந்து நின்றனர், படைத்தலைவன் நெஞ்சுரத்தை எண்ணி. அந்தப் பிரமிப்பு நீங்க நீண்ட நேரம் பிடித்தது அவர்களுக்கு. பிரமிப்பு நீங்கிய சமயத்தில், மாலுமிகளைத் திகைப்பு ஆட்கொண்டது. புஷ்ப ஒட்டியாணத்தின் முகப்பில் திடீரெனப் பேராரவாரம் கிளம்பியது. எராளமான பந்தங்கள் காட்டுக்குள்ளிருந்து நகர்ந்து வந்தன. அடுத்த விநாடி பாலிக்குள்ளன் கூவினான், நிற்காதீர்கள்! மரக்கலங்களை நோக்கி ஓடுங்கள்” என்று.

மாலுமிகள் நீர்க் கரையை நோக்கிப் பறந்தார்கள், கங்க தேவன் சடலத்தைத் திரும்பியும் பார்க்காமல். கங்கதேவன் சடலம் நிர்க்கதியாகக் கிடந்தது. அந்த நிர்க்கதியைக் கண்டு விண்மீன்கள் கண்ணைச் சிமிட்டின. கற்புக்கரசிகளைத் தொடுவோரின் கதி நிர்க்கதிதானா என்று அவை கேட்பது போலிருந்தது. ஆனால் அவன் கதி மட்டுமல்ல நிர்க்கதி, தங்கள் கதியும் நிர்க்கதிதானென்பதைப் பாலிக்குள்ளனும் மற்ற மாலுமிகளும் புரிந்து கொண்டார்கள் கடலோரத்தை அண்டியதும்.

துறைமுகத்தை அடைத்து நின்றிருந்தது கடல் புறா. அதன் கண்களிலிருந்த சிவப்புக் கற்கள் தீபங்களில் பளபளத்து நெருப்பென ஜொலித்தன. “மோசம் போய் விட்டோம்” என்று பாலிக்குள்ளன் கூவினான் பெரிதாக. அவன் குரலில் திகில் இணையற்று மண்டிக் கிடந்தது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch29 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch31 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here