Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch31 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch31 | Sandilyan | TamilNovel.in

101
0
Read Kadal Pura Part 3 Ch31 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch31 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch31 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 31 : நிதிக்குவியல் உங்களுக்கு!

Read Kadal Pura Part 3 Ch31 | Sandilyan | TamilNovel.in

பளபளத்த சிவப்புக் கண்களுடன் கடல்புறா துறைமுக வாயிலை அடைத்து நின்றதைக் கண்ட பாலி நாட்டுக் குள்ள மாலுமி தங்களை இளையபல்லவன் வெகு தந்திரமாக மடக்கி விட்டானென்பதைப் புரிந்துகொண்டான். கடற்கோரைகள் அருகிலிருந்த கடல்புறா வெகு லாகவமாக அதை அடுத்திருந்த கங்கதேவன் மரக்கலங்களிரண்டையும் சுற்றி வந்து துறைமுகத்தை நோக்கிப் போயிருக்க வேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொண்ட பாலிக்குள்ளன் அந்த இரண்டு மரக்கலங்களிருந்த இடத்தையும் நோக்கினான்.

நோக்கியதும் இவன் பிரமிப்பும் முன்னைவிட பன்மடங்கு அதிகமாகவே செய்தது. அந்த மரக்கலங்களிரண்டும் வட திசையிலிருந்து வந்த காற்று வேகத்தில் நகர்ந்து நகர்ந்து கடற்கோரைகளில் சிக்கித் தத்தளிப்பதைக் கண்ட குள்ள மாலுமி, தாங்கள் பகடையாடிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த இரண்டு மரக் கலங்களின் நங்கூரங்களையும் யாரோ நீக்கி விட்டிருக் கிறார்களென்பதையும் நீக்கியவர்கள் யாராயிருந்தபோதிலும் அவர்கள் இளையபல்லவன் உத்தரவின்மேல்தான் அதைச் செய்திருக்க வேண்டுமென்பதையும் உணர்ந்து கொண்டதால் ஓரளவு சினமும் கொண்டான்.

கங்கதேவனைச் சேர்ந்த மீதி அறுநூறு மாலுமிகள் நேராகச் சென்று மாளிகையைத் தாக்கினால் இளையபல்லவன் கதி என்ன ஆகும் என்பதையும் யோசித்து மாளிகைமீது கண்களை ஓட்டித் தன்னைச் சுற்றிலும் நின்றிருந்த மாலுமிகளையும் நோக்கினான். இரண்டு இடத்திலும் அவன் நோக்கத்துக்கு ஆதரவான அம்சங்கள் கிடைக்காததால் சோகப் பெருமூச்சு ஒன்றை விட்டான் பாலிக்குள்ளன். காட்டு முகப்பில் தெரிந்த பந்தங்கள் அந்த இரவின் கருமையைக் கிழித்துக்கொண்டு மாளிகைப் பக்கம் சென்றன.

சுமார் இருநூறு பந்தங்களுக்கு மேல் ஊர்வலம் போல் சென்றதைக் கடலோரத்திலிருந்து கவனித்த பாலிக்குள்ளன் அந்தப் பந்தத்தைத் தாங்கிய இருநூறு பேர் யாராயிருக்க முடியும் என்று சிந்தித்துப் பார்த்ததும் பெரும் பிரமை உலாவியது அவன் முகத்தில். கங்கதேவன் அந்தத் தீவைப் பிடித்துத் தமிழர்களைக் கொல்ல முற்பட்டபோது பலர் அவனுக்குத் தப்பிக் காட்டுக்குள் ஓடி விட்டதை நினைத்துப் பார்த்த அவன், அந்த இருநூறு பேரும் கங்கதேவனின் கொலை வெறிக்குத் தப்பிய தமிழர்களாகத் தானிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வரவே அவர்களுக்குத் தன்னிடமோ மற்ற மாலுமிகளிடமோ அன்பு லவலேசமும் இருக்கக் காரணமில்லை என்பதை உணர்ந்து கொண்டதால் சிறிது கலங்கவும் செய்தான்.

பந்தங்களேந்திய அந்த இருநூறு பேரும் கூட்டமாக நடந்து வந்து மாளிகையின் பின்புறம் நின்றார்கள். அதே சமயம் துறைமுகத்தை அடைத்திருந்த கடல்புறாவும் தனது ஒரு பக்கத்தைக் கடற்கரையை நோக்கித் திருப்ப அதன் பெரும் இறக்கையொன்று நன்றாக விரிந்து எழுந்தது. இறக்கையின் அடியிலிருந்த பெரும் ஈட்டிகளும் அம்பெறியும் யந்திரங்களும் ஒளிந்திருந்த திருடர்கள் போல் மெல்ல வெளிவந்தன. கடல் புறாவின் தளத்திலும் பெரும் உருளைகள் சுழன்று இரண்டு மூன்று யந்திர வாரைகளையும் ஈட்டி யெறியும் சாதனங்களையும் கடற்கரையை நோக்கித் திருப்பின.

இந்த சன்னத்தங்களின் காரணத்தை பாலிக் குள்ளன் நன்றாகப் புரிந்துகொண்டான். தாங்கள் அறுநூறு பேரிருந்தாலும், அத்தனை பேரும் கடல்புறாவின் யந்திரங்களுக்கும் மாளிகை முன்பிருந்த இருநூறு தமிழர்களுக்கும் இடையே சிக்கியிருப்பதாலும், போரிடும் வசதிகளையும் தாங்கள் மரக்கலங்களிலேயே வைத்துவிட்டுப் பகடையாடக் கரைக்கு வந்துவிட்டதாலும், நிராயுதபாணிகளான தங்களை அழிப்பது இளையபல்லவனுக்கு ஒரு பிரமாதமில்லை என்பதையும் புரிந்துகொண்ட பாலிக்குள்ளன் மற்ற மாலுமிகளை நோக்கி உள்ள நிலையை விளக்கினான். அவன் விளக்கு முன்பே நிலைமையைப் புரிந்துகொண்ட மாலுமிகள் கோபத்தால் கூச்சலிட்டார்கள். “இளையபல்லவனைக் கொல்லவேண்டும், கொல்லவேண்டும்” என்று வெறியில் கூவினார்கள்.

அந்த மாலுமிகளில் நிதானம் தவறாதவனும் மரக் கலங்களை நடத்துவதில் யாருக்கும் சளைக்காத திறமை சாலியுமான பாலிக்குள்ளன் அவர்களை நோக்கிக் கையமர்த்திவிட்டுச் சொன்னான்: “இரைவதால் பயனில்லை, அமைதிதான் இப்பொழுது தேவை” என்று.

இதைக்கேட்ட மாலுமியொருவன், “அமைதியாயிருந்து என்ன செய்வதாக உத்தேசம்?” என்று வினவினான் இரைச்சல் போட்டு.

குள்ள மாலுமியின் கண்கள் அந்த மாலுமிமீது பயங்கர மாகத் திரும்பின. “இரைந்தால் என்ன செய்ய முடியும் நீ!” என்று கேட்டான் இகழ்ச்சியுடன் அவன்.

“மாளிகையைத் தவிடுபொடியாக்குவோம்,” என்று மற்றொரு மாலுமி கூவினான்.

“அந்தச் சக்தி நமக்கிருந்தால் இரையத் தேவையில்லை” என்றான் பாலிக்குள்ளன் மீண்டும்.
“நாம் அறுநூறு பேர் இருக்கிறோம். ” கூட்டத்தின் ஒரு மூலையிலிருந்து எழுந்தது மற்றொரு குரல்.

“ஆம், ஆயுதம் ஏதுமற்ற அறுநூறு பேர் நம்மிடமுள்ள பகடைகள், மதுக் கலயங்கள் இவற்றைக்கொண்டு போரிட முடியாது” என்று சுட்டிக் காட்டிய பாலிக்குள்ளனின் குரலில் வெறுப்பு மண்டிக் கிடந்தது.

“வேறு என்ன செய்வது இப்பொழுது?” மற்றொரு குரல் கூட்டத்தின் இன்னொரு மூலையிலிருந்து எழுந்தது.

பாலிக்குள்ளன், மாலுமிகள் அனைவரையும் மணலில் உட்காரக் கட்டளையிட்டான். அந்த அறுநூறு பேரும் உட்கார்ந்ததும் அவன் மட்டும் நின்றுகொண்டு பேசினான். “கவனமாகக் கேளுங்கள்! இளையபல்லவன் சோழர் படைத் தலைவனாக இருந்திருக்கலாம். இப்பொழுது அவனும் நம்மைப்போல ஒரு கொள்ளைக்காரன் என்பதை மறக்காதீர்கள். வேண்டுமானால் அவன் நம்மை இப்பொழுது அழித்துவிடலாம். ஆனால் அழித்துவிடுவதில் அவனுக்கும் நஷ்டமிருக்கிறது… ” என்று கூறிய பாலிக்குள்ளன் நிதானித்தான். தான் சொன்ன சொற்களின் கருத்து மாலுமிகளின் இதயத்தில் உறையட்டும் என்று சில விநாடிகள் மௌனம் சாதித்தான்.

“நம்மை அழிப்பதில் அவனுக்கென்ன நஷ்டம்?” என்று கேட்டான் ஒரு மாலுமி எழுந்து. “ஆமாம், என்ன நஷ்டம்? என்ன நஷ்டம்?” என்று நாலா பக்கங்களிலுமிருந்து குரல்கள் கிளம்பின.

பாலிக்குள்ளன் அவர்களைக் கூர்ந்து நோக்கிவிட்டுச் சொன்னான்: “இந்தத் துறைமுகத்தில் கடல்புறாவைத் தவிர நான்கு மரக்கலங்கள் இருக்கின்றன. நான் கவனித்த வரை இளையபல்லவனிடம் இருநூறு பேருக்கு மேல் மாலுமிகள் இல்லை. காட்டிலிருந்து கிளம்பியிருக்கும் இரு நூறு தமிழர் களும் மாலுமிகளாயிருந்தாலும் மொத்தம் நானூறு பேர்தான் இருக்கிறார்கள். கடல் புறா போன்ற பெரிய மரக்கலத்தை நடத்தவே இருநூறு பேர் வேண்டும். மற்ற நான்கு மரக் கலங்களை நடத்த மீதியுள்ள இருநூறு பேர் போதாது. அதுவும் போர் என்று வந்தால் மரக்கல மொன்றுக்குக் குறைந்தபட்சம் நூற்றைம்பது மாலுமிகளாவது வேண்டும். அத்தனை ஆள் பலம் இளையபல்லவனிடம் இல்லை ..”

இந்த இடத்தில் பாலிக்குள்ளன் சற்றே பேச்சை நிறுத்தினான். அந்தச் சமயத்தில் மாலுமியொருவன் எழுந்திருந்து, “இளையபல்லவர் நம்மையும் அழித்து இந்த நான்கு மரக்கலங்கள் மீதும் கடல்புறாவிலிருந்து தீப்பந்தங்களை வீசி அவற்றையும் அழித்துவிட்டால் ஆள்பலம் எதற்கு? என்று வினவினான்.

“இந்த மரக்கலங்களை இளையபல்லவன் ஒரு நாளும் அழிக்கமாட்டான்” என்றான் பாலிக்குள்ளன் திட்டமாக.

“ஏன்?” அதே மாலுமி வினவினான்.

“இளையபல்லவன் முட்டாளல்ல” என்ற பாலிக்குள்ளன், “சிறிதும் சிரமப்படாமல் கிடைக்கும் நான்கு மரக்கலங்களை எந்தக் கடற்படைத் தலைவன் இழப்பான்? நீங்கள் இழப்பீர்களா?” என்றும் வினவினான் கூட்டத்தை நோக்கி.
“மாட்டோம், மாட்டோம்” என்று குரல்கள் பல எழுந்தன.

சொந்தப் பிள்ளை பெண்டுகளிடம் வைக்கும் ஆசையை விட அதிக ஆசையை மரக்கலங்களிடம் வைத்திருந்த மாலுமிகள் தங்களைவிடப் பெரிய மாலுமியான இளைய பல்லவன் ஒருநாளும் கிடைத்த மரக்கலங்களை அழிக்க மாட்டான் என்பதைத் திட்டமாக நம்பினர். அந்த நம்பிக்கை அவர்கள் முகத்தில் உலாவியதை அந்தக் காரிருளிலும் கண்ட பாலிக்குள்ளன், “மாலுமிகளே! நம்மைப்போல் அவனும் ஒரு கடலோடி, கப்பல்களிடம் ஆசையுள்ளவன்! தவிர அவனுக்கு நான்கு போர்க்கப்பல்கள் கொண்ட படை கிடைக்கிறது. அதை அவன் நிச்சயமாக இழக்கமாட்டான். தவிர அவன் கடாரத்துக்கு நம்மை அழைத்துச் செல்வதாக வாக்கு அளித்திருக்கிறான்” என்றும் கூறினான்.

இதைக் கேட்டதும் அந்தக் கொள்ளை மாலுமிகளிடம் திருப்தியைக் குறிக்கும் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் மாலுமிகள் ஒருவருக்கொருவர் கசமுசவென்று ஏதோ பேசிக் கொண்டனர். பிறகு ஒரு மாலுமி கேட்டான், “அப்படியானால் நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?” என்று.

“நாம் எதுவும் செய்யத் தேவையில்லை. இளைய பல்லவனிடமிருந்து தூது வரும். அதுவரை காத்திருப்போம்”

என்ற பாலிக்குள்ளன் அப்படியே மணல் தரையில் உட்கார்ந்துவிட்டான். அந்தக் காரிருளில், நட்சத்திர வெளிச்சத்தையும் கடல் புறாவின் பந்தங்கள் துறைமுக வாயிலிலிருந்து வீசிய வெளிச்சத்தையும் தவிர வேறு வெளிச்சமில்லாததால் பயங்கரமாகக் காட்சியளித்த அந்த இரவில் கடல் மணலில் உட்கார்ந்திருந்த அந்த அறுநூறு பேருக்கும் ஒரு விநாடி கழிவது ஒரு யுகம் போலிருந்தது. சுமார் மூன்று நாழிகைகள் இப்படிக் கழிந்தன. மாளிகை முன்பிருந்த பந்தங்கள் கீழே நடப்பட்டு எரிந்து கொண்டிருந்ததால் அவற்றைத் தாங்கி வந்த தமிழரும் தரையில் உட்கார்ந்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தான் பாலிக்குள்ளன். துறைமுக வாயிலில் கடல்புறா தன் அழகிய மூக்கைத் திருப்பியும், பக்கப் பலகையில் தீட்டப்பட்டிருந்த அதன் பெயரின் எழுத்துக்கள் ஜொலிக்கவும் ஆடிக் கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் பிறைமதி காட்சியளித்த எட்டு நாழிகை களும், பிற்பாடு அந்த அறுநூறு பேரும் காத்துக் கிடந்த மூன்று நாழிகைகளும் சேர்ந்து பதினொரு நாழிகைகள் கடந்து பன்னிரண்டாவது நாழிகையும் உட்புகவே நடுநிசி நெருங்கியது. அதே சமயத்தில் அலையோர மணலில் கூடி உட்கார்ந்திருந்த அந்த அறுநூறு மாலுமிகளையும் நோக்கி மாளிகையில் இருந்து ஒரு பந்தம் வந்தது. இளையபல்லவன் யாரோ ஒரு தூதனை அனுப்பி இருக்கிறானென்பதை உணர்ந்துகொண்ட மாலுமிகள் அவனை வரவேற்பதற்குத் தயாராகி எழுந்து நின்றார்கள்.

அவர்கள் முகப்பில் பாலிக் குள்ளன் நின்றுகொண்டான். பந்தம் வந்த முறையிலிருந்து, வந்துகொண்டிருந்த தூதனுடைய நடை மிக உறுதியாயிருப்பதை உணர்ந்துகொண்ட மாலுமிகள் அத்தனை துணிவுடன் தங்களை நோக்கி வருபவன் யாராயிருக்க முடியுமென்பதை எண்ணி வியந்தனர். அவன் அருகில் வந்து யாரென்பதை அறிந்ததும் அவர்கள் வியப்பு உச்ச நிலையை அடையவே அந்த அறுநூறு பேரும் மூச்சுப் பேச்சின்றிப் பல விநாடிகள் நின்றுவிட்டனர்.

வந்தவன் இளையபல்லவன்! துணைக்கு மாதிரிக்குக்கூட ஒரு வீரனை அவன் அழைத்துவரவில்லை. பந்தத்தைக்கூட அவனே இடது கையில் ஏந்தி வந்தான். ஆயுதங்கூட ஏதுமணியாமல் வந்திருந்தான். அவன் அப்படித் தன்னந் தனியாக நிராயுதபாணியாக வந்ததை எண்ணி வியப்பினால் வாயடைத்து நின்ற மாலுமிகளை அவன் கண்கள் சில விநாடிகள் ஆராய்ந்தன. “மாலுமிகளே! நான் தனியே வந்திருக்கிறேன். வாளைக்கூட எடுத்துவரவில்லை. என்னை வாளெடுத்துப் போகும்படியும் வீரர்களைத் துணைகொண்டு செல்லும்படியும், நான் யாருக்காகப் போரிட்டேனோ அந்தப் பதினொரு மாற்றுத் தங்கமே சொன்னாள். மற்றவரும் வற்புறுத்தினர். நான் இணங்கவில்லை.

அவர்களிடம் நான் சொன்னேன், ‘அந்த மாலுமிகள் அறிவாளிகள், நியாயத்தை ஒப்புக்கொள்ளுவார்கள்’ என்று. அவர்கள் உங்களை நம்ப வில்லை. ஆனால் எனக்கு உங்களிடம் பூரண நம்பிக்கை இருக்கிறது” என்று உறுதியும் அன்பும் நிரம்பிய குரலில் கூறினான்.

மாலுமிகள் யாரும் பதில் சொல்லவில்லை. முகப்பில் நின்ற குள்ள மாலுமியே கேட்டான், “அத்தனை நம்பிக்கை யிருப்பவர்கள் கடல் புறாவின் ஆயுதங்களை எங்களை நோக்கித் திருப்புவானேன்?” என்று.

“நீங்களனைவரும் பல போர்களைக் கண்டவர்கள். அதிகப் பழக்கமில்லாதவர்களும், வேறு ஒரு தலைவனிடம் பணி புரிந்தவர்களுமான அறுநூறு பேர்களுக்கிடையில், அந்தத் தலைவனின் துராக்கிருதச் செய்கையால் தனிப்படச் சிக்கிக்கொள்ளும் ஒருவன் என்ன செய்வான்? அத்தகைய நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்ட இளையபல்லவன் அவர்களைச் சில விநாடிகள் நோக்கினான். அதற்கு ஏதும் பதில் கிடைக்காது போகவே அவனே மேற் கொண்டு சொன்னான்: “உங்களுக்குப் புரிகிறது என் நிலைமை.

புரிந்துகொள்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் என்னைக் காத்துக்கொள்ளவே தவிர வேறு நோக்கத்தாலல்ல. நான் யாருக்கும் தீங்கு நினைப்பதில்லை. கங்கதேவனுக்குக்கூடத் தீங்கிழைத்திருக்க மாட்டேன். ஆனால் கங்கதேவன் ஆரம்ப முதல் நம்பிக்கைத் துரோகம் செய்தான். கூட்டுச் சேர்ந்து கொள்ளையிட அவனிடம் ஒப்பந்தம் செய்தேன்! அவன் ஒப்புக்கொண்டான். ஆனால் கூட்டாளி பெண்மீதே கையை வைக்க முயன்றான். நான் அதை அனுமதிக்க முடியுமா? சொல்லுங்கள். “

இப்படிப் பேசிய இளையபல்லவன் சற்று நிதானித்தான். பதிலேதும் கிடைக்காமற் போகவே, “யார் அனுமதிக்க முடியும் அதை? அவனை இருமுறை எச்சரித்தேன், கேட்கவில்லை. ஆகையால் கொன்றேன். அவனைக் கொன்றதால் உங்களுக்கு எந்தவித நஷ்டமுமில்லை. லாபந்தான்” என்றான்.

“என்ன லாபம்?” என்று கேட்டான் பாலிக்குள்ளன்.

“எத்தனை நாளாகக் கங்கதேவனிடம் சேர்ந்திருக் கிறீர்கள்?”

“ஒரு வருஷமாக. “

“எத்தனை முறை கொள்ளையடித்திருப்பீர்கள் இந்த ஓர் ஆண்டில்?”
“சுமார் ஐந்து தடவை. “

“அந்தக் கொள்ளையில் கிடைத்ததெல்லாம் எங்கே?”

“அந்த மாளிகையில் இருக்கிறது. “

“எந்த மாளிகையில்?”

“கங்கதேவன் மாளிகையில். “

“அங்கு ஏனிருக்க வேண்டும்? உங்கள் பங்கை ஏன் உங்களிடம் தரவில்லை ?”

இளையபல்லவன் அந்தக் கேள்வியை வீசியதும் பாலிக் குள்ளன் விழித்தான். ஆனால் கூட்டத்தில் முணுமுணுப்பு ஏற்பட்டது. அந்த முணுமுணுப்பின் காரணத்தை ஊகித்துக் கொண்ட இளையபல்லவன், “அந்தக் கொள்ளை நிதிக் குவியல்கள் ஆறு பெரும் பெட்டிகளில் கங்கதேவன் மாளிகையில் இருக்கின்றன. அவற்றின் மீது கலிங்கத்தின் அரச முத்திரை இருக்கிறது” என்றான்.

மாலுமிகளிடையே கோபக் கூச்சல் எழுந்தது. அந்தக் கூச்சல் இடையே பெரிதாக ஒலித்தது இளையபல்லவன் குரல். “அந்தக் கொள்ளை நிதி அனைத்தும் சரியான சமயத்தில் கலிங்க நாட்டுக்குப் போயிருக்கும். உங்களுக்கு அரைக் காசு கிடைத்திருக்காது. “

“நீங்கள் அதை என்ன செய்ய உத்தேசம்?” பாலிக்குள்ளன் கேட்டான்.
“பொழுது விடிந்ததும் அந்தப் பெட்டிகள் அனைத்தையும் கொண்டு வந்து நிதிக்குவியலை உங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும்படி கூலவாணிகன் சேந்தனுக்கு உத்தரவிட்டிருக் கிறேன். உங்களுக்கு இஷ்டமிருந்தால் நீங்கள் என் கடற் படையில் பணியாற்றலாம். இல்லையேல் உங்களை அவரவர் நாட்டுக்கு அனுப்பிவிட ஏற்பாடு செய்கிறேன். இன்றைய பொழுதைக் கடற்கரையிலேயே கழியுங்கள்” என்று கூறி விட்டுப் பதிலுக்குக் காத்திராமல் நடந்தான் இளையபல்லவன்.

அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் மாளிகையை நோக்கி நடந்த இளையபல்லவன் மாளிகை வாயிலில் பந்தங்களின் மத்தியில் உட்கார்ந்து இருந்த இருநூறு தமிழர்களைப் பார்த்தான். சுமார் இருபது நாட்களுக்கு மேல் காட்டில் வாழ்ந்ததால் மீசை தாடிகள் வளர்ந்து காட்டுமிராண்டிகளைப் போலக் காட்சியளித்த தமிழர்கள் அவனைக் கண்டதும் தலை வணங்கினார்கள். “அதோ அந்தக் கூட்டத்தின்மீது நீங்களாக எதுவும் நடவடிக்கை துவங்க வேண்டாம். அது நகர்ந்தால் என்னை எழுப்புங்கள்” என்று கூறிவிட்டு மாளிகைக்குள் சென்று படிகளில் ஏறி மாடி யறையில் நுழைந்தான். அங்கு படுத்திருந்த பலவர்மனை நோக்கி, “பலவர்மா! உன் வியாதி குணப்பட்டு நான்கு நாட்களாகிவிட்டது. பஞ்சணையை விட்டு எழுந்திருந்து கீழே போ” என்று உத்தரவிட்டதன்றி அவனைக் கையைப் பிடித்து இழுத்து வந்து அறைக்கு வெளியே அனுப்பினான்.

இளையபல்லவனுக்கு அலுப்பு அபரிமிதமாயிருந்தது. பஞ்சணைமீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சில விநாடிகள் புரண்டான். சில விநாடிகளில் உறக்கம் அவனை ஆட் கொண்டது. உறக்கம் மட்டுமல்ல, ஒரு நாழிகை கழித்து உள்ளே நுழைந்த காஞ்சனாதேவியின் மலர்க்கைகளும் அவனைச் சுற்றி வளைத்து ஆட்கொண்டன. குழந்தைபோல் உறங்கினான் இளையபல்லவன் அலுப்பின் மிகுதியால். காஞ்சனாதேவியின் கருவிழிகள் அவனை அனுதாபத்துடன் பார்த்தன. அணைத்த கைகளில் ஒன்றெழுந்து அவன் தலைமயிரில் நுழைந்து கலைத்து வருடவும் முற்பட்டது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch30 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch32 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here