Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch32 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch32 | Sandilyan | TamilNovel.in

175
0
Read Kadal Pura Part 3 Ch32 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch32 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch32 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 32 : இளவரசியல்ல, சக்கரவர்த்தினி!

Read Kadal Pura Part 3 Ch32 | Sandilyan | TamilNovel.in

கடல்மோகினியில் கால் வைத்த நாளிலிருந்து கவலை வாட்டியதால் நரம்புகள் களைத்துப்போன காரணத்தினாலோ, அந்தக் கவலை கங்கதேவன் மரணத்தோடு தீர்ந்து விட்டதால் இறங்கிய மனப்பாரம் அளித்த சாந்தியினாலோ, காஞ்சனாதேவி இடக்கரம் அணைத்தளித்த அமைதியினாலோ, வலக்கரம் தலையை வருடிய இதத்தினாலோ சொல்ல முடியாது, இளையபல்லவன் அன்றிரவில் ஆழ்ந்து நித்திரை செய்தான்.

அவன் பக்கத்தை விட்டு அன்றிரவு முழுதும் அகலாமல், விழித்த கண் விநாடி நேரம்கூட மூடாமல் உட்கார்ந்திருந்த காஞ்சனாதேவி அவன் அலுப்பின் காரணத்தை நன்றாகப் புரிந்துகொண்டிருந்தாள். அதை மட்டுமல்ல, இளையபல்லவன் வேண்டுமென்றே திட்ட மிட்டு கங்கதேவனை வடக்குக் கோடிக்கு வரவழைத்துக் கொன்றிருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டதால் சிறிது குழப்பம் அடைந்தாள் கடாரத்தின் கட்டழகி.

காரணமின்றி யாரையும் கொல்லும் சுபாவம் இளையபல்லவனுக்கு இல்லை என்பதை அவள் நன்றாக அறிந்தே இருந்ததால், கருணை வடிவமான கருணாகர பல்லவன் கங்கதேவனைச் சிறை செய்ய இஷ்டப்படாமல் கொன்ற காரணம் என்ன என்பது மட்டும் புரியவில்லை அவளுக்கு. கங்கதேவனைப் பலபடி வளைத்து விட்ட இளையபல்லவனுக்கு அவனைச் சிறை செய்வது ஒரு பிரமாதமில்லை என்பதையும் உணர்ந்திருந்தாள் அவள்.

அப்பொழுது கங்கதேவன் உயிருடன் இருந்தாலும் அவன் மாலுமிகளிருக்கும் நிர்க்கதியான நிலையில்தான் அவனுமிருப்பான் என்பதையும், ஆகவே அவனைக் கொல்லாமலே கடல்மோகினியை இளையபல்லவன் வசப் படுத்திக்கொண்டிருக்க முடியும் என்பதையும் ஊகித்துக் கொண்ட காஞ்சனாதேவி, ‘அப்படியிருக்க இவர் ஏன் கங்கதேவனைக் கொன்றார்!’ என்று தன்னைத் தானே இருமுறை கேட்டுக்கொண்டும் விடை காணாது குழம்பினாள். ‘ஒருவேளை என்னிடம் அவன் நடந்து கொண்ட முறையின் காரணமாகக் கொன்றிருப்பாரோ?” என்றும் தன்னைக் கேட்டுக்கொண்ட காஞ்சனாதேவி, அந்த நினைப்பின் காரணமாகவே மகிழ்ச்சிக்கும் நாணத்துக்கும் வசப்பட்டாள்.

இப்படிப் பலவித சிந்தனைகளுடன் அந்த இரவின் மீதி இரண்டு ஜாமங்களைக் கழித்த காஞ்சனாதேவி பொழுது புலர்ந்ததும் இளையபல்லவன் உறங்குவதைக் கண்டு அவனை எழுப்ப இஷ்டப்படாமல் தான் மாத்திரம் வெளியே செல்லப் பஞ்சணையை விட்டு இறங்க முற்பட்டாள்.

ஆனால் அவள் இறங்கவில்லை. திடீரென்று புரண்டு மல்லாந்து படுத்த இளையபல்லவன் தனது வலது கையால் அவள் இடது கையைப் பற்றிப் படுக்கையை விட்டு அவள் நகர முடியாமல் தடுத்தான்.

காஞ்சனாதேவியின் கருவிழிகள் இளையபல்லவனை நன்றாக நோக்கின. அவற்றில் பொய்க்கோபம் துளிர்த்துக் கிடந்தது. “ஓகோ! அப்படியா!” என்ற அவள் சொற்களிலும் போலிக் கோபம் மண்டிக் கிடந்தது.

இளையபல்லவன் கண்களில் மகிழ்ச்சியும் விஷமமும் ததும்பிக் கொண்டிருந்தன. “அப்படியா?” என்று உதடு களிலிருந்து உதிர்ந்த ஒற்றைச் சொல்லிலும் அந்த விஷமம் நன்றாகத் தொனித்தது.
“உறங்கியது பொய்தானா?” என்று அவள் பவள இதழ்கள் உதிர்த்த சொற்களிலும் அந்தக் காதல் கோபம் சொட்டிக் கொண்டு இருந்தது.

“இல்லை! பொய்யில்லை. “

“அப்படியானால் விழித்தது?”

“அதுவும் பொய்யில்லை. “

“எப்படி இரண்டும் பொய்யில்லாமல் இருக்க முடியும்?”

“கருணாகரன் பொய் பேசும் பழக்கம் கிடையாது. ” இதைச் சொன்ன இளையபல்லவன் இதழ்களில் இளநகை அரும்பியது.

காஞ்சனாதேவியின் இதழ்களில் இளநகையும் இன்பத் துடிப்பும் கலந்துலாவின. “நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை ” என்றாள் அவள்.

“ஏன் விளங்கவில்லை? இங்கு நான் வந்து படுத்ததும் உறங்கிவிட்டேன். அது உண்மை . நீ என் பக்கத்தில் உட்கார்ந் திருந்ததுகூட எனக்குத் தெரியாது” என்றான் இளைய பல்லவன்.

“தெரியாதா?” காஞ்சனாதேவியின் கேள்வியில் அவநம்பிக்கை பூரணமாக ஒலித்தது.

“தெரியாது” என்றான் திட்டமாக இளையபல்லவன்.
“தெரியாதென்பதற்கு என்ன அத்தாட்சி?”

“நான் உறங்கியதே அத்தாட்சி. “

“அது எப்படி அத்தாட்சியாகும்?”

“நீ பக்கத்தில் உட்கார்ந்திருப்பது தெரிந்தால் எனக்கெப்படி உறக்கம் பிடிக்கும்?”

இந்தப் பதிலைக் கேட்டதும் காஞ்சனாதேவி நாணத்தால் தலை குனிந்து கொண்டாள். “இப்பொழுது தெரிகிறதா நான் பொய் சொல்ல மாட்டேனென்பது” என்றான் இளையபல்லவன் நகைத்துக்கொண்டே.

“ஆமாம்! சத்தியசந்தர்தான் நீங்கள்” என்றாள் காஞ்சனா தேவி புன்முறுவல் செய்து.

“சந்தேகமென்ன? நான் சத்தியசந்தன்தான்” என்ற இளையபல்லவன் அவள் கையை மேலும் அழுத்திப் பிடித்தான்.

“சென்ற சில நாட்களில் நீங்கள் எங்கே உண்மை சொன்னீர்கள்? எல்லோரிடமும் பொய்யைத் தவிர எதையும் சொல்லவில்லையே!” என்றாள் அவள்.

இளையபல்லவன் கண்கள் அவளை நன்றாக ஏறெடுத்து நோக்கின. “இல்லை காஞ்சனா, நீ சொல்வது தவறு. சென்ற சில தினங்களில்தான் நான் முழுதும் உண்மையைச் சொல்லி யிருக்கிறேன். அதுமட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் எது அனுகூலமென்று தோன்றியதோ அந்தக் காரியங்களையும் செய்திருக்கிறேன்” என்றான் இளையபல்லவன்.

“என்னால் நம்ப முடியவில்லை. விளைவுகள் சொல்லும் கதை வேறு” என்றாள் காஞ்சனாதேவி அவனை உற்று நோக்கி.

“விளைவுகளுக்கு நானல்ல பொறுப்பாளி. அவரவர் எண்ணங்களும், செய்கைகளுமே பொறுப்பு. உதாரணமாகப் பார். கங்கதேவன் பழுது பார்க்கப்பட்ட கலிங்க மரக்கலங்களைக் கலிங்கத்தின் மாலுமிகளே நடத்திச் செல்ல வேண்டு மென்று விரும்பினான். அதை அனுமதித்தேன். உன்னைத் தனிமையில் கடல்மோகினித் தீவின் வடக்குக் கோடியில் சந்திக்க விரும்பினான். அதையும் அனுமதித்தேன்… ” என்ற இளையபல்லவனை இடைமறித்த காஞ்சனாதேவி கேட்டாள், “அப்படியானால் அவனை ஏன் கொன்றீர்கள்?” என்று.

இளையபல்லவன் சர்வ சாதாரணமாகப் பதில் சொன்னான், “நானாகக் கொல்லவில்லை. கொல்ல அவன் தூண்டினான். “

“அவனா தூண்டினான்?” காஞ்சனாதேவியின் குரலில் சீற்றம் தொனித்தது, இளையபல்லவனே தன்னை வட கோடிக்கு அழைத்துச் செல்லக் கூலவாணிகனுக்கு உத்தர விட்டதை நினைத்து.

“ஆம் காஞ்சனா, பாலிக்குள்ளனும் நானும் பகடையாடிய போது நீ வந்தது நினைப்பில்லை உனக்கு?” என்று வினவினான் இளையபல்லவன்.

“நினைப்பிருக்கிறது. “
“அங்கு நான் பாலிக்குள்ளனிடம் சொன்னது நினைப் பிருக்குமே உனக்கு? இந்தப் பதினொரு மாற்றுத் தங்கத்தை யார் தொட்டாலும் அவனைக் கொன்று விடுவேன் என்று சொன்னேன். அதைச் சொன்னபோது உண்மையைச் சொன்னேன். அந்தச் சத்தியத்தை நிலை நிறுத்தினேன். ஆகையால் நான் சொன்னது பொய்யல்ல பார். “

இதைக் கேட்டதும் காஞ்சனாதேவியின் உள்ளத்தில் ஆனந்தம் கரை புரண்டு ஓடியது. “ஆம். பொய்யில்லை ” என்றாள் அவள் மெதுவாக.

இளையபல்லவன் மெள்ள எழுந்து பஞ்சணையில் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். “பொய்யில்லை காஞ்சனாதேவி, உன்மீது கையை வைத்ததால் அவனைக் கொன்றேன். அதிலும் பொறுமையைக் காட்டியிருக்கிறேன். கடல் புறாவில் முதல் முதலில் உன்மீது அவன் காமக் கண்ணை வீசியபோதே அவனைக் கொன்றிருப்பேன். ஆனால் நமது மரக்கலத்தின் நிலை, மாலுமிகளின் நலன், எனது லட்சியம் இவற்றை முன்னிட்டுப் பொறுத்தேன். என் பொறுமையை கங்கதேவன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பொறுமையைப் பலவீனமென்று மதிப்பிட்டான். உன்னைக் கெடுக்கவும் துணிந்தான். வினையறுத்தான்” என்ற இளையபல்லவனைக் காஞ்சனாதேவியின் விழிகள் பெரும யுடன் நோக்கின. அவள் உதடுகள் ஒரு சந்தேகத்தையும் கேட்டன.

“உங்கள் லட்சியம் என்றீர்களே, அதென்ன?” என்று அவள் உதடுகளிலிருந்து கேள்வியொன்று உதிர்ந்தது.
இளையபல்லவன் சரேலென பஞ்சணையிலிருந்து எழுந்து, சாளரத்தை நோக்கிச் சென்றான். அதன் மூலம் ஆழ்கடலை நோக்கிவிட்டுச் சற்றுத் திரும்பி, காஞ்சனா தேவியை அருகில் வரும்படி சைகையும் செய்தான். காஞ்சனா தேவியும் கட்டிலை விட்டு இறங்கி அவனிருந்த இடத்தை அடைந்தாள். அவள் இடையை இடது கையால் அணைத் திழுத்த இளையபல்லவன், “காஞ்சனா! அதோ பார், என்ன தெரிகிறது?” என்று வினவினான்.

எதிரே ஆழ்கடல் காலை வேளையின் செங்கிரணங்களில் புத்தொளி பெற்று, பெரும் அலைகளைக் கரையை நோக்கி உருட்டிக்கொண்டிருந்தது. கடல் புறா துறைமுக வாயிலை அடைத்து நின்ற அலையில் எழுந்து தாழ்ந்து தன் மூக்கை எழுப்பியும் தாழ்த்தியும் பார்ப்பவர்கள் அனைவரையும் மயக்கிக் கொண்டிருந்தது. கங்கதேவன் மரக்கலங்களிரண்டும் கோரைகளில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்தன. கங்க தேவனின் மீதி மரக்கலங்களிரண்டும் கேட்பாரற்று வடதிசையில் ஆடிக்கொண்டிருந்தன.

அறுநூறு மாலுமிகளும் கூட்டமாகக் கரையருகே உட்கார்ந்திருந்தார்கள். இந்தக் காட்சியைக் கண்ட காஞ்சனாதேவி பெரும் பிரமிப்பை அடைந்தாள். உண்மை மெள்ள மெள்ள அவள் இதயத்தில் உதயமானாலும் அதை இளையபல்லவன் வாயினாலேயே அறிய விரும்பி அவன் கேள்விக்குச் சாதாரணமாகவே பதில் சொன்னாள்: “ஆழ்கடல் தெரிகிறது” என்று.

இளையபல்லவன் மெள்ளத் தலையை அசைத்தான். “ஆம் காஞ்சனா! ஆழ்கடல்தான். நேற்றுவரை அது கங்கதேவன் வசமிருந்தது. இன்று அது என் வசம்” என்றான்.
“எப்படி உங்கள் வசமாகிவிடும்?” என்று வினவினாள் அவள்.

“இப்பொழுது கடல்மோகினித் தீவு என் வசமிருக்கிறது. கடல்மோகினித் தீவு யார் வசமிருக்கிறதோ அவன் வசமிருக்கும் அந்தக் கடலும். பாரதத்துக்கும் கடாரத்துக்கும் நட்ட நடுவில் இருக்கிறது கடல்மோகினி. இதைத் தாண்டித்தான் கடாரத்துக்கும் பாரதத்துக்கும் செல்லும் மரக்கலங்கள் போகவேண்டும். இந்தத் தீவை ஆள்பவன் அந்த மரக்கலங் களின் சஞ்சாரத்தைத் தடை செய்ய முடியும். இது மிகவும் கேந்திர ஸ்தானம். இது இப்பொழுது என் கையில் இருக்கிறது. கங்கதேவன் மரக்கலங்கள் இரண்டு கடற்கோரையில் தத்தளிக் கின்றன. மற்ற இரண்டு மரக்கலங்களில் மாலுமிகள் இல்லை. அவை இரண்டும், கடற்கரையில் கூடியுள்ள மாலுமிகளும்,

கடல் புறாவின் தயவிலிருக்கிறார்கள்” என்று சுட்டிக் காட்டினான்.

“அவர்கள் அறுநூறு பேர் இருக்கிறார்களே?” என்றாள் காஞ்சனாதேவி.

“ஆயிரம் பேரை அழிக்கும் சக்தி கடல்புறாவிலிருக்கிறது. தவிர இந்த அறுநூறு பேரிடை ஆயுதம் எதுவுமில்லை. அதுமட்டுமல்ல, இந்த மாளிகைக்கு எதிரேயுள்ள இருநூறு தமிழர்கள் அவர்களைக் கொல்லத் துடிக்கிறார்கள்” என்றான் இளையபல்லவன்.

அறுநூறு மாலுமிகளின் நிர்க்கதி நன்றாகப் புரிந்தது காஞ்சனாதேவிக்கு. கங்கதேவன் அனுகூலத்தையெல்லாம் தனக்கு அனுகூலமாக மாற்றிக்கொண்ட இளையபல்லவன் புத்திக்கூர்மையையும் தந்திரத்தையும் நினைத்து வியந்த காஞ்சனாதேவியின் இதயத்தில் அவனைப் பற்றிய காதல் கொள்ளையாக எழுந்தது. அந்தக் காதலால் மயக்கமுற்ற கண்களை அவன்மீது நாட்டி, மற்றுமொரு கேள்வியையும் கேட்டாள் அவள், “வெளியே சென்றிருக்கும் கலிங்க மரக் கலங்கள் இரண்டும் திரும்பி வந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று.

“அதில் நானூறு கலிங்க மாலுமிகள் இருக்கிறார்கள் என்கிறாயா?”

“ஆம். “

“நன்றாகக் கடலையும் கடற்கரையையும் கவனி” என்று இளையபல்லவன் தன் கையைச் சுட்டிக் காட்டிச் சொன்னான்: “அதோ பார், கடல்புறா துறைமுகத்தை இப்பொழுது அடைத்து நிற்கிறது. அதை அந்த இடத்தை விட்டு நகர்த்தி, கடற்கோரையில் சிக்கித் தவிக்கும் இரு மரக்கலங்களுக்கு முன்பாக நிறுத்தி விடுவேன். அப்பொழுது கடல் புறா துறைமுகத் தென்திசையிலிருக்கும். கங்கதேவனின் மற்ற இரண்டு மரக்கலங்களும் வடதிசையில் இருக்கும்.

ஆகவே துறைமுகத்தில் நுழையும் எந்த மரக்கலமும் கடல புறாவுக்கும் வடதிசை மரக்கலங்களுக்கும் இடையேயுள்ள வழியில்தான் வரவேண்டும். அந்த இரண்டு மரக்கலங்கள் இந்தத் தமிழர் இருநூறு பேர் வசமிருக்கும். அந்த நிலையில் கலிங்கத்தின் மரக்கலங்கள் உள்ளே நுழைந்தால் அவற்றை அழிப்பது ஒரு விநாடி. “
இதைக்கேட்ட காஞ்சனாதேவி பிரமித்தாள். “அப்படி யானால் அவற்றை அழித்துவிடப் போகிறீர்களா?” என்றும் வினவினாள்.

“இல்லை. அழிக்கப் போவதில்லை. அந்த மரக்கலங்கள் எனக்குத் தேவை. கடல் புறாவும் மற்ற ஆறு மரக்கலங்களும் சேர்ந்தால் நல்ல கடற்படையின் ஒரு பிரிவு ஏற்படும். அதைக் கொண்டு இந்த ஜலசந்தியை நான் ஆள முடியும். கலிங்கத்தின் கடல்பலத்தை உடைக்க முடியும். அந்தக் கப்பல்கள் எனக்குத் தேவை” என்றான் இளையபல்லவன்.

“அதிலுள்ள நானூறு பேர் உங்களுடன் சேருவார் களென்று எதிர்பார்க்கிறீர்களா?”

“இல்லை. எதிர்பார்க்கவில்லை. தவிர கலிங்கம் நமக்கு விரோதி. அதன் மாலுமிகளை நம்பி நம் கடற்படையில் சேர்க்க முடியாது. அந்த இரண்டு மரக்கலங்களும் வந்ததும் இந்தத் தீவு பழையபடி இருக்கும். எந்தவிதமான வித்தியாசமும் காணப்பட மாட்டாது. நானூறு மாலுமிகளும் கரைக்கு வந்ததும் அவர்களை வளைக்க ஆயிரம் பேர் இருப்பார்கள். கத்தியின்றி ரத்தமின்றி அவர்கள் சிறைப் படுத்தப்படுவார்கள். “

“ஆயிரம் பேர் ஏது உங்களுக்கு?”

“அதோ உள்ள அறுநூறு மாலுமிகள், கங்கதேவனுக்குப் பயந்து காட்டுக்குள் ஓடிய தமிழர்-” என்று அவன் சொல்லி முடிக்கு முன்பு, “ஆமாம்! காட்டுக்குள் தமிழர் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று வினவினாள் காஞ்சனாதேவி.

இளையபல்லவன் அவளை நோக்கித் திரும்பினான். “தேவி! எப்பேர்ப்பட்ட கொடியவனும் ஓர் ஊர் முழுவதையும் அழிக்க முடியாது. தப்பிச் செல்பவர் இருக்கவே இருப்பார்கள். தப்பிச் சென்றால் இங்கு காட்டுப்புறத்தில் தானே இருக்க வேண்டும்? ஆகவே காட்டுப்புறத்தைக் கண்காணிக்க முதலில் சேந்தனை அனுப்பினேன். மனித நடமாட்டம் இருப்பதாகச் சேந்தன் செய்தி கொண்டு வந்தான். பிறகு இரவுகளில் நானே சென்றேன். சிதறிக் கிடந்த தமிழர்களைத் திரட்டினேன்.

இந்தக் கொள்ளை மாலுமிகள் எதிர்த்தால் அவர்களைச் சமாளிக்க ஆயுதபாணிகளாக வடக்குக் கோடியின் காட்டு முகப்பில் வரும்படி தமிழர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். நீதான் பார்த்தாயே அவர்கள் வந்ததை” என்றான்.

“ஆம். பார்த்தேன்” என்றாள் காஞ்சனாதேவி, அவன் ஏற்பாடுகளின் பக்குவத்தை நினைத்து.

“ஆனால் சண்டைக்கு அவசியமில்லாது போயிற்று அப்பொழுது. இப்பொழுதும் அவசியமில்லை. அந்த அறுநூறு பேர், கடல்மோகினியின் தமிழர் இருநூறு பேர், கடல்புறா மாலுமிகள் இருநூற்றுச் சொச்சம் பேர். ஆ க ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகையினர், வரப்போகும் கலிங்கத்து மாலுமிகள் நானூறு பேரைச் சிறை செய்வது ஒரு பெரிய காரியமல்ல” என்று விளக்கினான்.

அவன் திட்டத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டாள் காஞ்சனாதேவி. அது எத்தனை திடமானது என்பதை அடுத்த நாளே அவள் புரிந்து கொண்டாள். அவளைவிட்டு அந்த அறையிலிருந்து கிளம்பி அன்று காலை கடற்கரையோடு சென்ற இளையபல்லவன் அன்று மாலைதான் மீண்டும் மாளிகைக்குத் திரும்பினானென்றாலும், நீராடி உணவருந்திய வேளை போக மீதி நேரம் முழுவதையும் அந்தச் சாளரத்திலேயே உட்கார்ந்து கழித்த காஞ்சனாதேவி இளையபல்லவன் நடவடிக்கை ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண் டிருந்தாள்.

கடற்கரையோரம் சென்ற இளையபல்லவன் அங்கிருந்த படகொன்றில் ஏறி, கடல்புறாவுக்குச் சென்றான். அங்கிருந்து நீண்ட நேரம் கழித்து கடல்புறாவிலிருந்து மீண்டும் கரைக்கு வந்தபோது அங்கிருந்த உடையைக் கண்டு ஸ்நானபானாதி களைப் படைத்தலைவன் கடல்புறாவிலேயே முடித்துக் கொண்டான் என்பதை உணர்ந்து கொண்டாள். கரைக்கு வந்தபோது அவனுடன் அமீரும் வந்ததையும் அமீரிடம் அவன் மாளிகையைச் சுட்டிக்காட்டி ஏதோ உத்தரவிட்டு, கொள்ளைக்கார மாலுமிகள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றதையும் அவள் கவனித்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் அமீரும் சேந்தனும் மாளிகையிலிருந்த பணப்பெட்டிகளைப் பலர் தூக்கித் தொடர்ந்து வர, கொள்ளை மாலுமிகளிருந்த இடத்துக்குச் சென்றதையும் கவனித்தாள். அந்தப் பெட்டிகள் ஆறும் திறக்கப்பட்டு அதிலிருந்து நிதிக்குவியல்கள் விநியோகிக்கப்பட்டதையும், அந்தக் கொள்ளை மாலுமிகள் இளையபல்லவனைச் சூழ்ந்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டதையும் கண்டு, அதன் காரணத்தையும் புரிந்துகொண்டாள்.

அன்று பிற்பகலில் யாரும் தடை செய்யாமல் தமிழர்கள் இருநூறு பேரும் கடற்கரையை அடைந்தார்கள். அங்கிருந்து படகுகளில் ஏறி வடதிசையில் நின்ற கங்கதேவன் மரக்கலங்களை அடைந்தார்கள். கடைசியில் பாலிக்குள்ளன் மட்டும் தனிப் படகொன்றில் சென்று அந்த மரக்கலம் ஒன்றில் ஏறினான். இந்த ஏற்பாடுகளைக் கண்ட காஞ்சனாதேவி கடல் மோகினி திட்டமாக இளையபல்லவன் வசப்பட்டு விட்ட தென்பதையும், இனிமேல் அது தமிழர் தீவாகி விடுமென்பதையும் தீர்மானித்துக் கொண்டாள்.

அன்று மாலை இளையபல்லவன் மாளிகை வந்த போது மாடியறையில் காஞ்சனாதேவி உணவு பரிமாற அருந்திக்கொண்டே, “இன்னும் நான்கு நாட்களில் வெளியே சென்றிருக்கும் மரக்கலங்களை எதிர்பார்க்கிறேன். அவை வந்ததும் எனது திட்டம் பூர்த்தியாகிறது கடல்மோகினி

சம்பந்தப்பட்டவரை. எனது அடுத்த நோக்கம்… ” என்றவன் வார்த்தையை அரைகுறையாக விட்டான். “என்ன சொல்லுங்கள்?”

இளையபல்லவன் உணவருந்திய தட்டில் கையைக் கழுவி எழுந்திருந்து வாயையும் கையையும் துடைத்துக்கொண்டான். பிறகு காஞ்சனாதேவியை நோக்கினான். அவன் சொற்கள் உறுதியுடனும் பெருமையுடனும் உதிர்ந்தன. “அடுத்த நோக்கம் ஸ்ரி விஜயத்தின்மீது. அந்த சாம்ராஜ்ய அரியணையில் உன்னை அடுத்த சித்ரா பௌர்ணமியில் அமர்த்துகிறேன்.

இப்பொழுது உனக்கிருப்பது கடாரம். நீ அதன் இளவரசி. ஆனால் அடுத்த சித்ரா பௌர்ணமியின்போது நீ கடாரத்தின் கட்டழகி மட்டுமல்ல, ஸ்ரி விஜயத்தின் ஸ்ரி தேவியாகவும் மாறுவாய். இளவரசியல்ல நீ அப்பொழுது. கீழ்த்திசையின் பெரும் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி. இது சத்தியம்” என்ற இளையபல்லவன் அவளை அப்படியே வாரித் தன்னை நோக்கி இழுத்தான். அவன் கண்களில் பெரும் கனவு உலாவிக் கொண்டிருந்தது. அது நனவாகும் திட்டங்கள் உள்ளத்தே உருவாகிக் கொண்டிருந்தன.

Previous articleRead Kadal Pura Part 3 Ch31 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch33 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here