Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch33 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch33 | Sandilyan | TamilNovel.in

85
0
Read Kadal Pura Part 3 Ch33 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch33 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch33 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 33 : மர்மச் சீலை சொன்ன மாயக் கதை.

Read Kadal Pura Part 3 Ch33 | Sandilyan | TamilNovel.in

கடாரத்துக் கட்டழகியான காஞ்சனாதேவியை ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினியாகக் கனவுகண்டு மாதங்கள் அறு கடந்த பின்பும், அதை நனவாக்கும் செயல் எதிலும் ஈடுபடாமலும் கவலை லவலேசமின்றியும் கடல் புறாவின் தளத்தில் பாய்மரங்களுக்கிடையே கட்டப்பட்டிருந்த கயிற்று ஊஞ்சலில் படுத்து ஆடிக்கிடந்த கருணாகரபல்லவன் வானத்தே ஊர்ந்து கடல் புறாவுடன் ஓடிவந்த முழுமதியைப் பார்த்து, சாந்தப் பெருமூச்சு ஒன்றை விட்டான். பிறகு ஊஞ்சலில் ஆடியபடியே திரும்பி, கடல்புறாவுக்கு அப்புறமும் இப்புறமும் பின்புறமும் ஊர்ந்து வந்த மற்ற நான்கு மரக் கலங்களைக் கண்டு பேருவகையும் எய்தி, அந்த உவகைக்கு அடையாளமாக முகத்தில் மகிழ்ச்சிக் குறியையும் படரவிட்டுக் கொண்டான்.

கடல் புறாவின் சூழ்நிலை மனோரம்மியமாக இருந்தது. மகான்கள் பிறக்கும்போது திக்குகள் நிர்மலமாயிருக்கும். காற்று மெல்ல இன்பமாக வீசும் என்று மகாகவி காளிதாசன் எழுதினான். அந்த மாதிரி யாரோ ஒரு மகான் அந்த இரவிலும் பிறந்திருக்கவேண்டும். அத்தனை நிர்மலமாயிருந்தன திக்குகள். காற்று தேகத்துக்கும் உள்ளத்துக்கும் இன்பமளிக்கும் வகையில் மிக மெதுவாக வீசிக்கொண்டிருந்தது.

மென்மையான காற்றினாலும் நிர்மலமான திக்குகளாலும் கடலும் அமைதியுற்றிருந்ததால் கடல் புறா உல்லாசப் படகுபோல் மிக நிதானமாக ஒரே சீராக ஓடிக் கொண்டிருந்தது. அதன் சீரைப் போலத்தான் சென்ற ஆறு மாதங்களில் இளையபல்லவன் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆறு மாதங்களில் அவன் பிரசித்தியும் கடல்புறாவின் புகழும் தூரக் கீழ்த்திசை நாடுகளில் மட்டு மல்லாமல் பாரதத்திலும் பரவிக்கிடந்தது. எட்டாக் கையிலிருந்த சீன நாட்டிலும் கடல்புறாவின் பெயரும் அதன் தலைவன் பெயரும் அடிபட்டன.

சில நாடுகள் அவனைப் பெரிய கடல் வீரனெனக் கொண்டாடின. இன்னும் சில நாடுகள் பயங்கரக் கொள்ளைக்காரனெனக் கூவின. மற்றும் சில நாடுகள் கொள்ளைக்காரனாயிருந்தாலும் நல்ல கொள்கைகளை யுடையவனெனக் கூறின. அவனுக்குக் கிடைத்தவை பலவிதப் பெயர்கள். அந்த மரக்கலத்தின் வேகத்தையும் போரின்போது சுழலும் புது விந்தையையும் அதன் பயங்கர யந்திரங்களைப் பற்றியும் ஆயுதங்களைப் பற்றியும் சிலாகித்துப் பேசாதவர்கள் எந்த நாட்டிலுமில்லை.

அந்த ஆறு மாதங்களில் கடல்புறா பல போர்களைக் கண்டது. பல மரக்கலங்களை மூழ்கடித்தது. சிலவற்றைப் பிடிக்கவும் செய்தது. கடல்மோகினித் தீவுக்கும் அதற்குத் தென்கிழக்கே இருந்த கடாரத்துக்கும் இடையே அடிக்கடி உலாவிய அதன் பார்வையிலிருந்து, பாரதத்திலிருந்து வந்த எந்த மரக்கலமும் தப்ப முடியவில்லையாயினும், அது தாக்கிய மரக்கலங்கள் எல்லாம் கலிங்கத்தின் போர்க்கலங்களாகவே இருந்ததைக் கண்ட மற்றைய நாடுகளுக்கு அதன் காரணத் தைப் புரிந்து கொள்வது ஒரு பிரமாதமான காரியமாகவும் இல்லை.

தூரக் கீழ்த்திசை நாடுகளிலும் சின்னஞ் சிறு தீவுகளிலும் வர்த்தகத்தையும் நாகரீகத்தையும் பரப்ப வந்த தமிழர்களைக் கலிங்கம் படுத்திய பாட்டுக்குப் பதில் செய்யவே கடல்புறா அந்தப் பிராந்தியங்களில் நடமாடுகிற தென்பதை உணர்ந்து கொள்வது யாருக்கும் எளிதாயிருக்கவே, கலிங்கத்தின் மரக்கலங்கள் மேற்கொண்டு தனிப்பட அந்தப் பகுதியில் வராமல் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கின. ஆனால் அந்தக் கூட்டங்களும் தாக்கப்பட்டு அவற்றின் பொருள்களும் சூறையாடப்பட்டது பெரும் பீதியை அளித்தது கலிங்கத்திற்கு.

அதைப்பற்றிய செய்திகள் பல ஸ்ரி விஜயத்துக்கும் எட்டவே ஸ்ரி விஜயச் சக்கரவர்த்தியான ஜெயவர்மன் கடல் புறாவை அழித்து அதன் தலைவனைப் பிடித்துக்கொண்டு வரத் தனது கடற்படைக்கும் கட்டளை யிட்டான். ஆனால் அந்தக் கட்டளை பிறந்த பல மாதங் களுக்குப் பின்பும் கடல்புறாவும் சிக்கவில்லை, அதன் தலைவனும் சிக்கவில்லை ஸ்ரி விஜயத்தின் கடற்படையின் கைகளில்.

தூரக் கீழ்த்திசையின் பெரிய சாம்ராஜ்யத்தின் கடற் படையும், பாரதத்தின் கலிங்க நாட்டுக் கடற்படையும் சேர்ந்தும் தனது சிறு கப்பல் கூட்டத்தை அணுகவும் முடியா திருப்பதை நினைத்து அந்த இரவில் பெரிதும் திருப்தியடைந்து ஊஞ்சலில் படுத்துக் கிடந்த இளையபல்லவன் மெள்ளத் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

அத்தனை வலிமையைக் கடற்பகுதியில் தான் சம்பாதித்துக் கொண்ட தற்குத் தான் மட்டும் காரணமில்லை என்பதையும் தன் சகாக்களான அமீரும் கண்டியத்தேவனுங்கூடக் காரணமென்பதையும் நினைத்த இளையபல்லவன் அடுத்து வந்த மரக்கலங்கள் மீது மீண்டும் கண்களை ஓட்டினான். அந்த மரக்கலங்களை அவன் பார்ப்பதைச் சற்று தூரத்திலிருந்து கவனித்த கண்டியத்தேவன் அவனை நெருங்கி வந்தான். அந்த மரக்கலங்கள் இரண்டும் மாற்றியமைக்கப்பட்ட நாளிலிருந்து அவை இரண்டின் மீதும் தனிப்பட்ட பிரேமையை இளையபல்லவன் வைத்திருப்பதை அறிந்தும் அதற்குக் காரணம் மட்டும் புரியாத கண்டியத்தேவன் அதை அன்று கேட்டு விடுவதென்ற தீர்மானத்துடன் இளையபல்லவனை அணுகி, “படைத்தலைவர் கண்கள் அந்த இரண்டு மரக்கலங்களை மட்டும்தான் பல நாட்களாகப் பார்க்கின்றன” என்றான்.

கயிற்று ஊஞ்சலில் சற்று ஒருக்களித்து எழுந்த இளைய பல்லவன் அரைப் படுக்கையும் அரை உட்காரலுமாகச் சாய்ந்த வண்ணம் சொன்னான், “அவை இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை தேவரே” என்று. அதைச் சொன்ன குரலில். இன்பம் மிகவும் துளிர்த்து நின்றது.

“அது எனக்குத் தெரிகிறது படைத்தலைவரே,” என்றான் கண்டியத்தேவன் குற்றம் சாட்டும் குரலில்.

“எப்படித் தெரிகிறது தேவரே?” என்று வினவிய இளைய பல்லவன் இதழ்களில் குறுநகை துளிர்த்தது.

“அந்த இரண்டு மரக்கலங்களும் முதல் முதலில் கடல் புறாவினால் கைப்பற்றப்பட்ட கலிங்கத்தின் மரக்கலங்கள்” என்று சுட்டிக் காட்டினான் தேவன்.

“அதனாலென்ன?”

“முதலில் கிடைத்த கடல் பரிசுகள் அவை. “

“அதனால் எனக்கு அவற்றின்மீது பிரியம் அதிகம் என்கிறீரா?”

“அதனால் மட்டுமல்ல. “
“வேறு எதனால்?”

“மற்ற மரக்கலங்களைவிட அவை இரண்டிலும் அதிக ஆயுதங்களைப் பொருத்தியிருக்கிறீர்கள். “

“உம். “

“தவிர அவற்றை *சர்ப்ப மந்திரங்களாக மாற்ற உத்தர விட்டீர்கள்… ”

கண்டியத்தேவன் எதைச் சொல்ல முற்படுகிறான் என்பதை ஊகித்துக் கொண்ட இளையபல்லவன் புன்முறுவலின் சாயை முகம் பூராவும் படர்ந்தது. “சொல்லுங்கள் தேவரே!” என்று ஊக்கினான் மகிழ்ச்சியுடன்.

“கலிங்கத்தின் மரக்கலங்கள் நம்மிடம் சிக்கிய போது அவற்றுக்கு முகங்கள் மட்டுந்தான் சர்ப்பம். மற்றபடி வெறும் போர்க்கப்பல்கள். நீங்கள் அவற்றை சர்ப்ப மந்திரங்களாக மாற்றக் கட்டளையிட்டீர்கள். சர்ப்ப மந்திரங்கள் போருக்காக ஏற்பட்டவையல்ல. அரசாங்கப் பொக்கிஷம், மாதர், குதிரைகள் இவற்றை ஏற்றிச் செல்ல ஏற்பட்டவை. ஆனால் இப்பொழுது. “

“பாதகமில்லை, சொல்லுங்கள். “

“அவற்றில் போர்க்கலங்களையும் பொருத்தச் சொன்னீர்கள். பொருத்தியும், கடற்போர் என்று வரும்போது அவற்றைத் தற்காப்புப் போருக்கு மட்டும் ஏவுகிறீர்கள். தாக்குதலைக் கடல் புறாவும் மற்ற இரு மரக்கலங்களுமே நடத்துகின்றன” என்று சுட்டிக் காட்டினான் கண்டியத் தேவன்.
“உண்மைதான் கண்டியத்தேவரே!” என்ற இளைய பல்லவன் கயிற்று ஊஞ்சலிலிருந்து கீழே குதித்து மடமட வென்று கடல்புறாவின் தளத்தில் நடந்து அதன் கீழ்த்திசை ஓரத்துக்கு வந்தான். “தேவரே! இப்பொழுது பாருங்கள், அந்த இரு மரக்கலங்களையும்” என்று அவற்றை நோக்கிக் கையை நீட்டினான்.

அந்த இரு மரக்கலங்களையும் மாற்றியமைத்த கண்டியத் தேவனுக்கு அவற்றின் அமைப்பு அணு அணுவாகத் தெரிந்திருந்தும் இளையபல்லவன் கட்டளையை முன்னிட்டு அவற்றை வேண்டா வெறுப்பாகப் பார்த்தான். அவன் முகத்தில் விரிந்த வெறுப்பைக் கவனிக்காமலே இளையபல்லவன் கூறினான்: “தேவரே, அந்த இரு மரக்கலங்களும் இரண்டு ராணிகளை ஏற்றிச் செல்லக் கூடியவை. பெரும் பொக்கிஷத்தையும் சாதிப் புரவிகளையும் ஏற்றிச் செல்லக் கூடியவை.

தவிர, தனிப்பட எதிர்க்கப்பட்டாலும் போரிட ஆயுத பலமும் உள்ளவை. அந்த இரண்டு மரக்கலங்களும் இரண்டு ராணிகளுக்கு ஏற்பட்டவை. ஒன்று கடாரத்து ராணிக்கு. இன்னொன்று அக்ஷயமுனை ராணிக்கு. அந்த இரண்டு ராணிகளும் இவற்றில் புரவிகளுடனும் பொருள் களுடனும் உல்லாசப் பயணம் செய்வார்கள். நங்கூரம் பாய்ச்சி நிற்கும் துறைமுகங்களில் தங்கள் புரவிகளிலேயே சஞ்சரிப்பார்கள். அவர்கள் இருவருக்கும் நானளிக்கும் பரிசுகள் இவை. ஆகவே இவற்றைப் பாதுகாக்கிறேன். “

கண்டியத்தேவனுக்கு அப்பொழுதுதான் உண்மை தெரிந்தது! இளையபல்லவன் இதயத்தில் இரு பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்பதையும், இருவரும் தனக்குக் கிட்டமாட்டார்கள் என்பதையும் புரிந்து கொண்டதன் விளைவாக அவர்களுக்கு இரு பெரும் பரிசுகளைப் படைத் தலைவன் தயார் செய்திருக்கிறானென்பதையும் புரிந்து கொண்ட கண்டியத்தேவன், ‘இவர் எண்ணம் அப்படியானால் இவற்றை ஏன் இத்தனை நாள் அவ்விருவருக்கும் அளிக்கவில்லை?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

தவிர ஆறு மாதங்களில் தனக்குப் புரியாத பல விஷயங்களை அன்று கேட்டுக் கொண்டு விடுவதென்றும் தீர்மானித்துக் கொண்டான். இளையபல்லவன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் உண்டென்பதை அவன் அக்ஷயமுனையிலிருந்தே உணர்ந்து கொண்டான். அந்த உணர்வு கடல்மோகினியில் உறுதியாயிற்று. கடல்மோகினியில் அவன் கங்கதேவனுடன் நட்புக்கொண்டதும், கைப்பற்றிய கலிங்க மரக்கலங்களை கங்கதேவனின் ஆட்களைக் கொண்டே வெளியே அனுப்பியதும், அந்த இரு மரக்கலங்கள் திரும்பு முன்பாக கங்கதேவனுக்கும் மற்றைய மாலுமிகளுக்கும் மித்ரபேதம் செய்து கங்கதேவனைக் கொன்றதும், பிறகு அந்த இரண்டு மரக்கலங்கள் திரும்பியதும், அவற்றிலிருந்த கலிங்க மாலுமிகள் சிறைப்படுத்தப்பட்டதும் ஒன்றுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கோத்துப் பார்த்தபோது எத்தனை முன் யோசனையுடன் இளையபல்லவன் நடந்து கொண்டிருக்கிறானென்பதைப் புரிந்துகொண்டான் கண்டியத் தேவன்.

ஆனால் இப்படிச் சிறைபிடித்த கலிங்க மாலுமிகள் நானூறு பேருக்கும் ஒரு மரக்கலத்தை இலவசமாகக் கொடுத்து அவர்கள் நாட்டுக்குத் திரும்ப ஏன் அனுமதித்தான் என்பது புரியாமலிருக்கவே அதைப் பற்றி அவன் கேட்டான்.

கண்டியத்தேவன் விடுத்த சந்தேக வினாவுக்கு இளைய பல்லவன் மிகச் சாந்தமாகப் பதில் சொன்னான், “எல்லோரையும் தீர்த்துக்கட்ட தமிழர்கள் அரக்கர்களல்ல. தவிர, தமிழர்கள் அதிகமில்லாத கடல் மோகினியில் நானூறு கலிங்க மாலுமிகளை விட்டு வைப்பது நாமில்லாத சமயத்தில் அவர்கள் தயவில் தமிழர்களை விட்டுவைப்பதாகும். ஆகவே கங்கதேவன் மரக்கலங்களில் ஒன்றை அவர்களுக்கு அளித்து அவர்களை அவர்கள் நாட்டுக்கு அனுப்பினேன். இன்னொரு மரக்கலம் ஆயுத பலத்துடன் சதா கடல்மோகினியைக் காத்து நிற்கிறது. கடல்புறாவும் மற்ற நான்கு மரக்கலங்களும் கடலில் உலாவுகின்றன, கலிங்கத்தின் கடல் பலத்தை முறிக்கவும் தமிழர் மரக்கலங்களைப் பாதுகாக்கவும். “

கண்டியத்தேவனுக்கு இளையபல்லவன் இதயம் நன்றாகப் புரிந்தது. சென்ற ஆறு மாதங்களாக யாரிடமும் திறக்காத தன் இதயத்தை அந்த இரவில், முழுமதி வாரித் தெளித்த அமுத நிலவில், ஆழ்கடலின் மத்தியில், நன்றாகத் திறந்து கண்டியத்தேவனுக்குக் காட்டினான் இளையபல்லவன்.

மேலும் சொன்னான்: “தேவரே! கடல்மோகினியை நான் கைப்பற்றியதும் காஞ்சனாதேவியையும் குணவர்மனையும் பலவர்மனையும் ஏன் கடாரத்துக்குக் கொண்டுபோய் விட்டேனென்பதைப் பற்றி அமீர் பலமுறை கேட்டான். நான் பதில் சொல்லவில்லை. உமக்குச் சொல்லுகிறேன். இப்பொழுது குணவர்மன் கடாரத்தின் அரியணையிலிருக்கிறான். அவன் நாடுவிட்டுச் சென்று வருஷம் ஒன்றுக்கு மேலாகிவிட்டது. நீண்ட நாள் நாடு துறந்து மன்னன் இருந்து விட்டால் மன்னனுக்கும் மக்களுக்குமுள்ள நல்லுறவு போய் விடும். படைத்தலைவர்கள் என்ன திறமைசாலிகளானாலும் மன்னனில்லாத நாட்டைக் காக்கமுடியாது. ஆகையால் தான் அவர்களை நாடு சேர்ப்பித்தேன்.

பிறகு பல தடவை கடாரத்துக்கு அருகில் சென்றதும் நான் கடாரத்தின் துறைமுகத்துக்குள் செல்லவில்லை. அதற்குக் காரணம் உண்டு. சோழ நாட்டுக் கடற்கொள்ளைக்காரனுடன் உறவு கொண்டவன் குணவர்மன் என்ற சாக்கில் ஸ்ரி விஜயத்தின் சக்கரவர்த்தி அவரைத் தாக்க முற்பட்டால் நாம் அவரையோ கடாரத்தையோ காத்திருக்க முடியாது. ஆகையால் அவர்களை நாட்டில் சேர்த்ததோடு நின்றுவிட்டேன். அக்கம் பக்கத்திலும் எதிர்ப்புறத்திலும் பல ஊர்களுக்குச் சென்றேன். பல இடங்களில் சோழர் கொடியை நாட்டினோம். பல போர்களை வென்றோம். “

இந்த விவரத்தைக் கேட்ட கண்டியத்தேவன் ஏதும் பேசாமலிருந்தான் பல விநாடிகள். பிறகு கேட்டான், “அப்படி யானால் இப்பொழுது ஏன் கடாரத்துக்குப் போகிறோம்?” என்று.

இளையபல்லவன் கண்கள் தேவன் கண்களைச் சந்தித்தன. பிறகு “உமக்கு விளங்கவில்லையா தேவரே?” என்ற சொற்கள் அவன் உதடுகளிலிருந்து நிதானமாக உதிர்ந்தன.

“எது?” தேவன் ஏதும் புரியாமல் விழித்தான்.

அவனைத் தன்னுடன் வரும்படி சைகை செய்து தனது அறைக்கு அழைத்துச் சென்ற இளையபல்லவன் அவனை உட்காரச் சொல்லிவிட்டு அமீரையும் அழைத்துவர மாலுமி யொருவனை அனுப்பினான். அமீர் வந்ததும், கண்டியத் தேவன் கேட்ட சந்தேகங்களையும் தான் சொன்ன பதில்களையும் விளக்கமாகச் சொல்லிவிட்டு, “அமீர்! நாம் மீண்டும் இரண்டாம் முறையாகக் கடாரம் செல்லுகிறோம். நாம் இம்முறை செல்வதற்கும் ஆறு மாதத்திற்கு முன்பு சென்ற தற்கும் வித்தியாசம் உண்டு.

இந்த ஆறு மாத இடைக்காலத்தில் நாம் பெரிதும் வலுத்துவிட்டோம். ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தை நேரிடையாக எதிர்க்கும் காலம் வந்துவிட்டது” என்று கூறி அவனையும் அமரச் சொன்னான். பிறகு அறையின் மூலை யிலிருந்த பெட்டியிலிருந்து பெரும் சீலையொன்றைக் கொண்டுவந்து அவர்கள் முன்னிலையில் விரித்தான். “இது நமது ஆறுமாத கால சாதனை. கடல்மோகினியில் நாம் தளமமைத்தது வீண்போகவில்லை” என்று கையால் அந்தச் சீலையின் பல பகுதிகளைச் சுட்டிக் காட்டினான்.

அந்தச் சீலையைக் கண்ட அமீரும் கண்டியத்தேவனும் பெரும் பிரமிப்பை அடைந்தார்கள். அந்தச் சீலையை அவன் அத்தனை நாள் யாரிடமும் காட்டவில்லை. அவர்களிடம் காட்டியபோது அந்த மர்மச் சீலை சொன்ன மாயக் கதை அவர்கள் மனக்கண்களைப் பெரிதும் திறந்துவிட்டது. மர்மச் சீலை விரிந்தது உலகத்தின் அந்தக் கோடியிலும். ஆறு மாத சாதனை அற்புத சாதனை என்று உணர்ந்த அந்த இரு பெரும் கடல் வீரரும் கருணாகர பல்லவனைப் பெருமையும் பிரமிப்பும் நிரம்பிய கண்களால் நோக்கினர்.

இளையபல்லவன் திருப்தியுடன் தலையை அசைத்தான். “இன்னும் ஆறே மாதங்கள்! ஸ்ரி விஜயம் வீழ்ச்சியடையும். கடல் புறாவின் கீர்த்தி எங்கும் பாடப்படும்” என்றும் கூறினான், திருப்தி அவன் குரலில் நன்றாகப் பிரதிபலிக்க. ஆனால் அதே சமயத்தில் அவன் திட்டங்களுக்கு இடையூறாகக் கடாரத்தின் மற்றொரு துறைமுகத்தில் காலை வைத்துக் கொண் டிருந்தான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch32 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch34 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here