Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch34 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch34 | Sandilyan | TamilNovel.in

90
0
Read Kadal Pura Part 3 Ch34 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch34 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch34 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 34 : தாய்நாட்டு மண்ணும் காற்றும்.

Read Kadal Pura Part 3 Ch34 | Sandilyan | TamilNovel.in

கடல்புறாவின் தலைவனான கருணாகர பல்லவன் தனது அறையின் விளக்கொளியில் விரித்த மர்மச் சீலையைக் கண்டதும் அமீரும் கண்டியத்தேவனும் பெரும் பிரமிப்பின் வசப்பட்டார்களென்றால், அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அவன் பெட்டியில் அத்தனை நாள் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் வைத்துக் காப்பாற்றி அன்று விரித்தது ஒரு வெண்பட்டுச் சீலை. அதில் செம்பருத்தியிலிருந்து காய்ச்சி எடுத்த சிவப்பு மையினால் பல இடங்களில் புள்ளிகளை வைத்திருந்தான் இளையபல்லவன்.

அந்தப் புள்ளிகளுக்கு இருபக்கங்களிலும் நீண்டும் வளைந்தும் சென்ற கோடுகள் ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்துக்குள்ளடங்கிய நாடுகளின் எல்லைகளைக் குறித்தன. அந்தக் கோடுகளுக்குள் அடங்கி நின்ற புள்ளிகள் சென்ற ஆறுமாத காலத்தில் தாங்கள் விஜயம் செய்த பல இடங்களையும், நகரங்களையும் குறிக்கின்றன என்பதைப் புரிந்து கொண்ட அமீரும் கண்டியத்தேவனும், இளையபல்லவன் தீர்க்காலோசனையையும், அவன் முன்கூட்டி இட்ட திட்டங்களின் திட்டத்தையும் எண்ணிப் பெரும் வியப்புக்குள்ளாயினர்.

அந்தச் சீலையில் அக்கம் பக்கத்திலிருந்த இரண்டு கோடுகளுக்கு இடையே இருந்தது கடாரத்துக்கும் சொர்ணத் தீவுக்குமிடையே திகழ்ந்த கடல் பிராந்தியமென்பதையும், கோடுகளுக்கு அப்பால் உள்ளடங்கித் தெரிந்த புள்ளிகள் பல ஊர்களைக் குறிக்கின்றன என்பதையும் புரிந்துகொண்ட அமீரும் கண்டியத்தேவனும் அந்தப் புள்ளிகள் இருந்த இடங்களைக் கண்டு, ஸ்ரி விஜயம் எத்தனை ஜாக்கிரதையாகச் சூழப்பட்டிருக்கிறது என்பதை எண்ணி ஆச்சரியத்தின் வசப்பட்டனர்.

அவர்களின் அந்த மர்மச் சீலையைப் பார்த்த பார்வையிலிருந்தும் அவர்கள் முகங்களில் விரிந்த வியப்புக் குறியிலிருந்தும் அவர்கள் ஸ்ரி விஜயத்தின் நிலைமையை ஓரளவு புரிந்து கொண்டு விட்டார்கள் என்பதை உணர்ந்துகொண்ட இளையபல்லவன் மீண்டும் தனது அறைக் கோடிக்குச் சென்று பெட்டியைத் திறந்து கோழியின் வெண்ணிற இறகு ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தான். அந்த இறகைக் கொண்டு, சென்ற ஆறுமாத சாதனையை விளக்கவும் முற்பட்டு, “அமீர்! தேவரே! உங்களுக்கு ஓரளவு நிலைமை புரிகிறதென்று நினைக்கிறேன்.

இருப்பினும் சற்று விளக்கமாகக் கூறுகிறேன்” என்று சொல்லி, “இதோ பாருங்கள், மொத்தம் ஒன்பது புள்ளிகள் இருபுறத்திலும் அடங்கிக் கிடக்கின்றன. அதாவது கடாரத்தின் கடற்கரையோரத்திற்குள் வடக்கி லிருந்து தெற்காக ஐந்து புள்ளிகளும் சொர் ண பூமிக்குள் நான்கு புள்ளிகளும் தெரிகின்றனவல்லவா!” என வினவினான்.

“ஆம் தெரிகிறது” என்றான் அமீர் சீலையிலிருந்து கண்ணை எடுக்காமலும் தலை நிமிர்ந்து இளையபல்லவனைப் பார்க்காமலும்.

“புள்ளிகள் ஒவ்வொன்றும் ஒரு பிராந்தியத்தைக் குறிக்கும். இதன்படி கடாரத்தின் ஐந்து பிராந்தியங்களுக்கும் சொர்ணத் தீவில் நான்கு பிராந்தியங்களுக்கும் நாம் விஜயம் செய்திருக் கிறோம்” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

“ஆம். விஜயம் செய்திருக்கிறோம்” என்றான் கண்டியத் தேவன் உணர்ச்சி மிகுந்த குரலில். அவன் குரலில் உணர்ச்சி தொனித்ததற்குக் காரணம் இருந்தது. விஜயம் செய்த பிராந்தியங்களில் இளையபல்லவன் சாதாரணமாக விஜயம் செய்யவில்லை என்பதையும், ஒவ்வொரு கடற்போருக்குப் பின்பே விஜயம் செய்திருக்கிறான் என்பதையும் கண்டியத் தேவன் உணர்ந்திருந்ததாலும், அந்த விஜயங்களின் பலனையும் அவன் அறிந்திருந்ததாலும் அவன் குரலில் சற்றே நெகிழ்ச்சி தெரிந்தது.

அந்த நெகிழ்ச்சியைக் காதில் வாங்கிய இளையபல்லவன் முகத்தில் மகிழ்ச்சிக் குறி பரவியது. “ஆம் தேவரே! நாம் இந்த ஒவ்வோர் இடத்தையும் ஒவ்வொரு கடற்போருக்குப் பின்புதான் அடைந்திருக்கிறோம்” என்று கூறிய அவன் குரலிலும் அந்த மகிழ்ச்சி இருந்தது.

அமீரும் அந்த மகிழ்ச்சியில் கலந்துகொண்டு, “அது மட்டு மல்ல இளையபல்லவரே! ஒவ்வோர் இடத்தையும் அடைந்த போது வெறும் கையுடன் அடையவில்லை” என்றான் உற்சாகம் குரலில் ததும்ப.

“இல்லை அமீர், வெறும் கையுடன் போகவில்லை நாம். கைப்பற்றிய மரக்கலங்களுடன் சென்றோம்” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

“அது மாத்திரமா? அந்த மரக்கலங்களை அந்த இடங் களுக்குப் பரிசாகவும் தந்தோம். நாம் கைப்பற்றிய மரக்கலங்கள் இன்று நம்மிடமிருந்தால் பெரும் கடற்படை நம் வசமிருக்கும்,” என்ற கண்டியத்தேவன் குரலில் வருத்தம் தொனித்தது.
அந்த வருத்தத்தில் பங்குகொள்ள மறுத்த இளைய பல்லவன், “தேவரே! அந்த மரக்கலங்கள் நமது வசமிருந்தால் நாம் என்ன செய்திருக்க முடியும்?” என்று வினவினான்.

“இன்று ஸ்ரி விஜயத்தை அதிக பலத்துடன் எதிர்க்கலாம்” என்றான் கண்டியத்தேவன்.

“உமது படைபலம் பெருகுவதை ஜெயவர்மன் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பானென்று நினைக்கிறீரா?” இதைக் கேட்ட இளையபல்லவன் குரலில் வியப்பு இருந்தது.

“இல்லாமல் என்ன செய்வான்?” கண்டியத்தேவன் தங்கள் பலத்திலுள்ள பெருமை குரலில் தொனிக்கக் கேட்டான்.

“நன்றாக யோசித்துப் பாரும். தமிழகம் ஸ்ரி விஜயத்தின் விரோதி. தற்பொழுது தமிழர்களின் கடற்படையொன்று உருவாகிறது ஸ்ரி விஜயத்தின் அருகே. அதற்கு மேலும் மேலும்

மரக்கலங்கள் கிடைத்து வருகின்றன. இத்தகைய நிலைமையில் ஸ்ரி விஜயத்தின் சக்கரவர்த்தி கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது; நான் சக்கரவர்த்தியாய் இருந்தால் முதலில் என் படையை மாநக்காவரத்தின்மீது ஏவி அதை அழித்துவிடுவேன். அதைத்தான் ஜெயவர்மனும் செய் திருப்பான்” என்றான் இளையபல்லவன்.

“அதை இப்பொழுது ஏன் செய்யக் கூடாது?” என்று அமீர் வினவினான்.
“நம் சாதனை என்னுடன் சதா இருக்கும் உங்களுக்கே புரியவில்லையே, அவனுக்கு எப்படிப் புரியும்? அமீர்! ஜெய வர்மனுக்கு அணுகி வரும் ஆபத்தின் பயங்கரம் இன்னும் புரியவில்லை. நமது படையை ஒரு கடற்படையாக அவன் மதிக்கவில்லை. இது ஒரு கொள்ளைக் கூட்டம் என்றுதான் நினைக்கிறான். ஆகவே என்னைக் கைப்பற்றிக் கடல் புறாவை அழிப்பவர்களுக்கு வெகுமதியளிப்பதாகவும் பறைசாற்றி இருக்கிறான்” என்று விளக்கினான் இளையபல்லவன்.

“ஆம், உண்மை ” என்று ஒப்புக்கொண்டான் அமீர்.

இளையபல்லவன் மேலும் விளக்கினான்: “கடல்மோகினியைத் தளமாகக் கொண்ட பிறகு சென்ற ஆறு மாதங்களில் பன்னிரண்டு முறை கடற்போரில் நாம் ஈடுபட்டோம். கலிங்கத்தின் மரக்கலங்கள் பலவற்றைத் தாக்கினோம். கொள்ளையிட்டோம். சிலவற்றை அழித்தோம். சிலவற்றைக் கைப்பற்றினோம். கைப்பற்றிய மரக்கலங்களை அருகிலிருந்த தமிழர் நகரங்களுக்குச் செலுத்திச் சென்றோம். அந்த மரக் கலங்களை தமிழர்களுக்குப் பரிசாகவும் கொடுத்தோம்.

அவற்றைப் பதனப்படுத்திப் போரிடும் சன்னதத்திலும் வைத்தோம். முடிவு என்ன தெரியுமா? நன்றாகக் கவனியுங்கள் இந்தப் பட்டுச் சீலையை! இந்தப் புள்ளிகள் ஒவ்வொன்றும் தமிழர் பாசறை. இப்படி ஐந்து பாசறைகள் கடாரத்தின் மேற்குத் தரையிலும், நான்கு பாசறைகள் சொர்ணத்தீவின் கிழக்குக் கரையோரமாகவும் அமைந்திருக்கின்றன. இந்தப் பாசறைகளுக்கு, கப்பல் தளங்களுக்கு இடையே உள்ளது

ஸ்ரி விஜயத்தின் கடல் பகுதி. ஆகவே ஸ்ரி விஜயத்தின் கடற்பகுதி இன்று நமது பிடியிலிருக்கிறது. நன்றாகப் புள்ளிகளை உற்றுப் பாருங்கள். இதோ, மாயிருதிங்கம், இலங்கசோகம், மாப்பாப் பாளம், மாவிளம்பகம், தலைத்தக்கோலம் இவையனைத்தும் கடாரத்தின் ஓரத்திலிருக்கின்றன. சொர்ணத்தீவின் பகுதியில் அக்ஷயமுனை, பண்ணை, மலையூர் இந்த மூன்றும் இருக்கின்றன. நான்காவது புள்ளிதான் ஸ்ரி விஜயம். சீலையின் நிலையை நன்றாகப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்.

ஸ்ரி விஜயத்தின் மீது தமிழர் கடற்படையின் எட்டு வேல்கள் திரும்பியிருக்கின்றன என்று. இன்று ஸ்ரி விஜயத்தின் கடல் பிராந்தியம் இந்த முக்கிய ஜலசந்தி நமது கையில் இருக் கின்றது. தமிழர் இடங்கள் விட்டு விட்டும் பரவிக் கிடப்பதால் அவற்றின் பலம் எதிரிக்குத் தெரியவில்லை. ஆனால் போர் என்று ஏற்படும்போது கலிங்கத்தாலோ வேறு எந்த நாட்டாலோ எந்தவித உதவியும் ஸ்ரி விஜயத்துக்குக் கிடையாது. நமது காவலைத் தாண்டி ஸ்ரி விஜய ஜலசந்திக்குள் எந்த மரக்கலமும் நுழைய முடியாது. “

இதைச் சொன்ன இளையபல்லவன் சற்று நிதானித்தான். திடீரென அவன் பேச்சை நிறுத்திவிடவே அமீரும் கண்டியத் தேவனும் சீலையிலிருந்து தலையை நிமிர்த்தி அவனை நோக்கினார்கள். இளையபல்லவன் முகத்தில் பரிபூரண திருப்தி நிலவிக் கிடந்தது. அவன் எழுந்து கையைப் பின்புறம் கட்டிக் கொண்டு சில விநாடிகள் அந்த அறையில் அப்புறமும் இப்புறமும் உலாவினான். பிறகு மகிழ்ச்சியுடன் அவ்விருவரை யும் நோக்கி, “இப்பொழுது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்” என்றான்.

“புரிகிறது தலைவரே” என்று இருவரும் ஏககாலத்தில் கூவினார்கள்.
இளையபல்லவன் அந்த இருவரின் ஏகோபித்த ஆமோதிப்பால் உவகை கொண்டான். மீண்டும் அவர்கள் மீது கண்களை நிலைக்கவிட்டான் சில விநாடிகள். பிறகு தனது அறையின் சாளரத்தின் மூலம் தெரிந்த கடல்நீரைச் சுட்டிக்

காட்டி, “தேவரே! நீர் சுங்க அதிகாரி. தவிர மரக்கல நிர்மாண நுணுக்கங்களை நன்றாக அறிந்தவர். அமீர் ஏற்கெனவே மாலுமியாகப் பணியாற்றியவன். அகூதாவினிடம் மாலுமியாயிருந்தவன். கடலில் மீண்டும் சஞ்சரிப்பதற்காகக் கலிங்கத்தில் தன் வர்க்கத்தையே விட்டு வந்தவன். ஆனால் நான் ஏன் இந்தக் கடலுக்கு வந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. நான் தரையில் படைகளை நடத்திச் செல்பவன். கடல் போரையும் மரக்கல அமைப்பு முறைகளையும் அடியோடு அறியாதவன்.

இருப்பினும் கடல் என்னை இழுத்தது, இப்பொழுதல்ல தேவரே! ஆரம்பத்திலேயே இழுத்தது. தரை மார்க்கமாகக் கலிங்கம் வர வசதியிருக்க, என்ன காரணத் தினாலோ வீரராஜேந்திரதேவர் புகாரிலிருந்து என்னை மரக் கலத்தில் அனுப்பி வைத்தார். அவர் கைராசி என்னைக் கடல் கொள்ளைக்காரனாகவே ஆக்கிவிட்டது. நிலத்திலிருந்து நீரில் இறங்கிவிட்டேன். தரைப் போர் போய் கடல் போரில் ஈடு பட்டேன். தாய்நாடு விட்டு எங்கோ வந்துவிட்டேன்; எதற்கோ போராடுகிறேன்.

விதியின் விளையாட்டென்றால் இப்படித் தான் இருக்குமா தேவரே?” என்ற இளையபல்லவன் மேலும் சொன்னான்: “ஆம் தேவரே! விதியின் விளையாட்டுதானிது. இல்லையேல் கலிங்கத்துடன் சமாதானம் பேசவந்தவன் கடல் கொள்ளைக்காரனாக மாறுவானேன்? ஸ்ரி விஜயத்தை முறி யடிக்கத் திட்டம் போடுவானேன்? தமிழகத்திலிருந்து இங்கு வருவானேன்?” என்று.
இந்த இடத்தில் தலையை நிமிர்ந்து அறையின் உச்சியைப் பார்த்த இளையபல்லவன் பெருமூச்சு விட்டான்.

மேற் கொண்டு பல விநாடிகள் அவன் பேசவுமில்லை. அவன் உள்ளத்தின் வேட்கை கண்டியத்தேவனுக்கு நன்றாகப் புரிந்து விட்டது. படைத்தலைவன் தமிழகத்தை நினைத்துக்கொண்டு விட்டானென்பதை உணர்ந்து கொண்ட கண்டியத்தேவன் இளையபல்லவனிடமிருந்து எழுந்த பெருமூச்சை நினைத்து வியப்பின் வசப்பட்டான். ‘தூரக்கிழக்கில் கடல் போரில் நிகரற்றவனென்று பெயர் பெற்றிருக்கிறார்

. கடல்மோகினியைச் சொந்தமாக்கிக் கொண்டார். ஒன்பது பெரும் கடல் தளங்களை அமைத்து ஸ்ரி விஜயத்தின் கடல் வாயிலையே அடைத்துவிட்டார். இத்தனை சாதனைகளைச் செய்தவர் எதற்காக ஊரை நினைத்துப் பெருமூச்சு விடுகிறார்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அவன் உள்ளூரக் கேட்டுக்கொண்ட வினாக்களைப் பகிரங்கமாகவே தொடுத்தான் அமீர். “தாய் நாட்டிலிருந்து வந்ததால் உங்கள் புகழ் ஒன்றும் குறைந்துவிடவில்லையே?” என வினவினான்.

இளையபல்லவன் அமீரை நோக்கித் திரும்பினான். “இல்லை அமீர். குறைந்துவிடவில்லை” என்று சோகத்துடன் சொன்னான்.

“உங்களுக்கு என்ன குறை இப்பொழுது? செல்வத்தில் குறைவா? புகழில் குறைவா? நிலபுலத்தில் குறைவா?” என்று வினவினான் அமீர்.

“எதிலும் குறைவில்லை” என்றான் இளையபல்லவன். “வேறு என்னதான் குறை?” “தாய்நாட்டில் இல்லாத குறைதான். ” “இங்கில்லாதது தமிழகத்தில் என்ன இருக்கிறது?”
இளையபல்லவன் முகத்தில் விசனமும் இன்பமும் கலந்துலாவின. “நான் சொன்னாலும் உனக்குப் புரியாது அமீர்.

இருப்பினும் சொல்கிறேன் கேள். எங்கள் தமிழ்நாடு உன் அரபு நாட்டைப்போல் பாலைவனமல்ல. பெண்ணையும் பொன்னியும் வைகையும் தாமிரபரணியும் பாயும் நாடு. பொதிகை மலையும் உதயகிரியும் உள்ள நாடு.

அதன் மண் வாசனையும், காற்றின் இன்பமும் உனக்குத் தெரியாது. இந்த மாதிரி ஆயிரம் கடல்மோகினித் தீவுகளையும், ஏன் ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தையுமே எனக்குச் சாசனம் செய்தாலும் எனக்கு இங்கு இருப்புக் கொள்ளாது. தமிழ் மண்ணில் இருப்பு வேண்டும் எனக்கு. அதுதான் விருப்பு. மற்ற மண் எனக்கு வெறுப்பு. அந்தச் சுகத்தை நீ அறியமாட்டாய்” என்றான். இதைச் சொன்ன இளையபல்லவன் வேறு திக்கில் தனது தலையைத் திருப்பிக்கொண்டான்.

அதற்குக் காரணமும் அமீருக்குத் தெரிந்தது. தூரக்கிழக்கில் யார் பெயரைக் கேட்டால் ஸ்ரி விஜய சாம்ராஜ்யம் நடுங்குகிறதோ அப்பேர்ப் பட்ட இளையபல்லவன் தாய்நாட்டை நினைத்து உருகுவதையும், அதைப்பற்றி அவன் பேசிய போது அவன் குரல் தழுதழுத்ததையும், கண்களில் கூட நீர் திரண்டதையும் கண்ட அமீர் வியப்புடன் கண்டியத்தேவனை நோக்கினான்..

கண்டியத்தேவன் முகத்தில் சோகம் படர்ந்து கிடந்தது. அதிகமாக மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாமென்று சைகையும் காட்டினான் தேவன் அமீரை நோக்கி. சில விநாடிகள் மௌனம் நிலவியது அந்த அறையில். திடீரென்று சோகமும் அன்பும் கலந்த குரலில் கேட்டான் இளையபல்லவன் அவர்களை நோக்கித் திரும்பாமலே, “அமீர்! பாரதத்தில் இராமாயணம் என்ற நூல் இருக்கிறது தெரியுமா உனக்கு?” என்று.
“கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் அமீர், அந்த நூலைப்பற்றி எதற்குப் பிரஸ்தாபம் என்பதை அறியாமல்.

“அதன் கதாநாயகன் இராமன் சொல்கிறான்: ‘எந்த தேசத்திலும் மனைவிமார்கள் அகப்படுவார்கள். பந்துக்கள் அகப்படுவார்கள். ஆனால் சகோதரன் கிடைக்கும் நாட்டை மட்டும் நான் கண்டதில்லை’ என்று. அது தாய்நாட்டுக்கும் பொருந்தும். ஆயிரம் நாடுகள் கிடைக்கலாம் நமக்கு. ஆனால் அவை அனைத்தும் தாய்நாடாகாது” என்றான் இளைய பல்லவன். அப்படிச் சொல்லிக்கொண்டே ஒரு புறத்திலிருந்த திசை காட்டும் கருவியை எடுத்து நோக்கினான். நோக்கி விட்டுப் பரபரப்புடன் சாளரத்தை நோக்கி ஓடி வெளியே தலையை நீட்டிக் காற்றை நன்றாக முகர்ந்து இழுத்து, “அமீர், இதோ தாய்நாட்டின் காற்று வருகிறது. என்ன இன்பம்! இன்பம்!” என்று கூவினான் மெய்மறந்து.

பிறகு திரும்பிய படைத்தலைவன் பல விநாடிகள் கழித்து அவர்கள் இருவருக்கும் வெளியே செல்ல விடையளித்தான். இருவரும் சென்றதும் தனது பஞ்சணையில் மல்லாந்து விழுந்தான். அவன் வாழ்வின் முக்கிய கட்டங்களெல்லாம் அவன் மனக்கண் முன்பு வலம் வந்தன. கலிங்கம் வந்தது. காஞ்சனா வந்தாள்.

மஞ்சளழகி வந்தாள். சொர் ண பூமியும் வந்தது. ஆனால் தொண்டை மண்டலமும், சோழ மண்டலமும், பாண்டிய நாடும், சேரர் ஊரும் அவன் மனத்தை ஆக்ரமித்துக்கொண்டன. ‘சீக்கிரம் ஸ்ரி விஜயத்தைச் சீர்படுத்திக் காஞ்சனாதேவிக்கு அளித்துவிட்டுத் தாய்நாடு திரும்புகிறேன். கடாரத்தில் காலை வைத்ததும் போருக்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று தன் மார்புமீது கையை வைத்துப் பிரதிக்ஞையும் செய்தான் படைத்தலைவன். .
அடுத்து நான்கு நாட்களில் கடல் புறா கடாரத்தை அடைந்தது. ஆனால் பிரதிக்ஞைக்குப் பிரதிகூலம் காத்திருந்தது அங்கே. கடல்புறா கடாரத்தின் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியதும் வந்தது அழைப்பு. அழைத்தவனைப் பார்க்க விரைந்தான் படைத்தலைவன் படகுமூலம் துறையை எய்தி. ஆனால் அவனுக்காக அரண்மனையில் காத்திருந்த மனிதனைக் கண்டதும் பேரதிர்ச்சி ஏற்பட்டது படைத் தலைவனுக்கு. அவன் உத்தரவு அந்த அதிர்ச்சியை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றது. “உன்னைச் சிறைசெய்யக் கட்டளை எனக்கு” என்று மிக நிதானமாக அறிவித்தான் இளையபல்லவனை அழைத்தவன்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch33 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch35 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here