Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch35 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch35 | Sandilyan | TamilNovel.in

153
0
Read Kadal Pura Part 3 Ch35 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch35 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch35 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 35 : வீரராஜேந்திரர் பிரதிநிதி.

Read Kadal Pura Part 3 Ch35 | Sandilyan | TamilNovel.in

கனவு காண்பது மனத்தின் இயற்கை, கனவை உடைப்பது விதியின் இயற்கை. வாழ்வின் போக்கு இது. இதிலிருந்து யாருமே தப்பமுடிவதில்லை. இளையபல்லவன் மட்டும் எப்படித் தப்புவான்?

தன் இதயத்தில் இடம் கொண்ட இரு பெண்களில் ஒருத்திக்கு அக்ஷயமுனையை அளித்த இளையபல்லவன், இன்னொருத்திக்கு ஸ்ரி விஜயத்தை அளிக்கத் தீர்மானித்து அதற்கான திட்டங்களையும் வகுத்து உறுதிப்படுத்திக் கொண்டு மாநக்காவரத்திலிருந்து இரண்டாம் முறையாகக் கடாரத்தின் துறைமுகத்தில் நுழைந்தபோது பெரும் திருப்தியுடனும் அலட்சியமாகவும் நுழைந்தான். தமிழர்கள் சங்க காலம் முதல் அறிந்த கடாரத்தின் சிறப்பையும் இயற்கைக் காவலையும் கூட அசட்டை செய்தவண்ணம் அவன் கடல் புறாகூட மிகுந்த கர்வத்துடன்தான் தலையைத் தூக்கிக் கொண்டு கடாரத்தின் முரட்டு அலைகள் மீது தவழ்ந்து சென்றது.

பார்வைக்கு மிக இன்பமாகக் காட்சிகளைத் தரும் கடாரத் துறைமுகத்தில் கடல் மட்டும் மற்றவர்களைச் சுலபத்தில் உட்புக முடியாத வண்ணம் திணற அடிக்கும் முரட்டு அலைகளை உடையதாயினும், தன் கடல்புறாவை அந்த அலைகள் எந்தவிதத்திலும் புரட்டியோ, சாய்க்கவோ முடியாதென்ற பெருமையுடன் தளத்தில் நின்றவாறே கடாரத் துறைமுகத்தை நோக்கிய இளையபல்லவன், ‘கடாரமென்ன, ஸ்ரி விஜயமும் என்னைத் தடைசெய்ய முடியாது. என் இதய ராணிக்கு ஸ்ரி விஜயத்தின் சாம்ராஜ்ய அரியணை இடம் கொடுத்தே ஆகவேண்டும்’ என்று கனவும் கண்டான். அவன் அப்படிச் சிந்தித்த காலத்தில் கடாரத்தின் துறைமுக அலைகள் மலைபோல் எழுந்து கடல்புறாவை நோக்கி வந்தன. பெரிதாகத் தாக்கிக் கப்பலை ஆட்டவும் செய்தன. எதற்கு? அவன் கனவை உடைக்கவா?

காரணம் என்னவோ தெரியாது. ஆனால், அந்த முரட்டு அலைகள் மீண்டும் மீண்டும் எழுந்து எழுந்து அவன் கண் முன்னால் உருண்டு உருண்டு பயங்கரமாக வந்தன. உருண்டு வந்த அந்த நீர்மலைகளைக் கண்டதும் வேறொரு கனவும் எழுந்தது இளையபல்லவன் இதயத்திலே. இராஜேந்திர சோழ தேவரின் பெருங் கடற் படையெடுப்பு அவன் மனக்கண்ணில் விரிந்தது. ‘அவருடைய மரக்கலங்களையும் இந்த முரட்டு அலைகள் பெரும்பாடு படுத்தியிருக்க வேண்டும்’ என்று நினைத்த சோழர் படைத்தலைவன், “தொடு கடல் காவல் கடுமுரட் கடாரமும்’ என்று இராஜேந்திர சோழ தேவர் தஞ்சை இராசராசேச்சுரத்துக் கர்ப்பக்கிருகத்தில், தென்புறத்திலுள்ள இரண்டாம் பட்டைக் கல்வெட்டில் படைத்த சாஸனத்தை நினைத்து ஓரளவு புன்முறுவலும் கொண்டான். அந்த சாஸனத்தின் நினைப்பாலும், இராஜேந்திர சோழதேவர் தூரக்கிழக்கில் அடைந்த கடல் வெற்றிகளை நினைத்த களி வெறியாலும், கடல்புறாவின் தளத்தில் நின்று அந்தப் பழைய சாஸனப் பிருதுகளில் கண்ட நான்கு அடிகளைப் பெரும் குரலெடுத்துப் பாடவும் செய்தான் படைத்தலைவன்.

“கலைத்தக்கோர் புகழ் தலைத்தக் கோலமும் திதமாவல்வினை மாதமா லிங்கமும் கலாமுதிரக் கடுந்திறல் இலாமுரி தேசமும் தெனக்க வார்பொழில் மானக்காவரமும் தொடுகடல் காவல் கடுமுரட் கடாரமும்… ”
என்ற கல்வெட்டு வரிகளைப் பெருங்குரலெடுத்து இசைத்த இளையபல்லவன் அந்தக் கல்வெட்டுகள் குறித்த ஊர்கள் இராஜேந்திரர் காலத்துக்குப் பிறகு கலிங்கத்தின் வசப் பட்டாலும், தன் முயற்சியால் மீண்டும் தமிழ்க்கொடி அவ்விடங்களிலும் சோழர் பிருதுகளில் கண்ட மற்ற இடங்களிலும் பறப்பதை நினைத்து உவகை கொண்டு சற்று வாய்விட்டு நகைக்கவும் செய்தான்.

‘கடாரத்தின் முரட்டு அலைகளை எப்படிக் கடல்புறா லட்சியம் செய்யாமல் எதிர்த்துச் செல்கின்றதோ அப்படி நானும் ஸ்ரி விஜயத்தை எதிர்த்துச் செல்வேன்’ என்ற தீர்மானத்துடன் காஞ்சனாதேவியைச் சக்கரவர்த்தினியாகவே கனவு கண்ட இளையபல்லவனை நோக்கி, கடாரத்தைக் காவல் செய்யும் தொடு கடலும் முரட்டு அலைகளும் நகைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் அவன் கனவை உடைக்க ஒருவன் காத்திருப்பானா கடாரத்தின் அரச மாளிகையில்? அதுவும் சிறை செய்யப் போவதாகத்தான் கூறுவானா?

இப்படி எதுவும் நேருமென்பதைச் சிறிதளவும் நினைக் காமல் தன் கனவுகளிலேயே லயித்து, கடாரத் துறைமுகத்தில் கடல்புறாவைச் செலுத்திய இளையபல்லவன் மரக்கலத் தாரைகள் இரண்டாம் முறையாகக் கடாரத்தின் துறைமுகத் தில் சப்தித்தன. ஆனால், முதல் முறை அவன் அங்கு வந்த போதிருந்த குதூகலமும் வரவேற்பும் கடல்புறாவுக்கும் அவன் மரக்கலங்களுக்கும் அன்று கிடைக்கவில்லை. காஞ்சனா தேவியை முதன்முறை கடாரத்துக்கு அழைத்து வந்து தான் மட்டும் பின்வாங்கி வேறு திசை சென்று சில தினங்களுக்குப் பின் அவளைப் பார்க்க வந்தபோது அவன் தாரைகள் சப்திக்கவே செய்தன.

அந்தத் தாரைகளைக் கேட்டதும் கடாரத்தின் மக்கள் திரள் திரளாக ஓடி வந்தார்கள் நீர்க் கரைக்கு. இளையபல்லவன் கடல்புறாவிலிருந்து படகில் இறங்கிக் கரைக்கு வந்ததும் மங்கல வாத்தியங்கள் முழங்கின. அவன் மீதும் அவன் இருபுறமும் வந்த கண்டியத்தேவன், அமீர் இருவர் மீதும் பூமலர்கள் கொள்ளையாகத் தூவப்பட்டன. ஏதோ பேரரசனை அழைக்கும் மக்களைப்போல் கடாரத்தின் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதுமட்டு மல்ல, அரச மாளிகையின் வாயிலிலேயே காஞ்சனாதேவி மாலையும் கையுமாகக் காத்திருந்தாள். அவள் அவனுக்கு அன்று எல்லோர் எதிரிலும் மாலையிடவில்லைதான். மாலையைச் சிறுமியொருத்தியிடம் கொடுத்து அணிவித்ததும் உண்மைதான்.

ஆனால் அவள் பங்கயக் கண்கள் அவனுக்கு மாலை சூட்டத்தான் செய்தன. அதை அவனும் அறிந்தான். அவளும் அறிந்தாள். ஆனால் மற்றவர்கள் அறியவில்லை. தன்னைக் காத்த மாவீரனுக்குத் தங்கள் இளவரசி செலுத்தும் தனி மரியாதை அதுவென்றே மக்கள் நினைத்தனர். குணவர்மனும் அப்படித்தான் நினைத்தான். அதன் விளைவாக இளையபல்லவனைக் கைலாகு கொடுத்து அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான்.

அந்த முறை இளையபல்லவன் கடாரத்தில் தங்கியது ஒரே நாள்தான். சில நாட்களாவது தங்கிப்போகவேண்டு மென்று வற்புறுத்திய குணவர்மனுக்கும் காஞ்சனாதேவிக்கும் அவன் சிறிதும் இடம் கொடுக்கவில்லை. தான் அங்கு தங்குவதால் கடாரத்துக்குள்ள ஆபத்தை விளக்கினான். “குணவர்மரே! உங்களை ஒரு கடற்கொள்ளைக்காரன் விடுவிப்பது தவறாகாது. அவனுக்கு நீங்கள் நன்றி காட்டுவதும் தவறாகாது. ஆனால் கொள்ளைப் படையை இங்கு தங்க விடுவது ஜெயவர்மன் இதன் மீது படையெடுக்கக் காரணம் கொடுக்கும். கொள்ளைப் படையை அழிக்க சாம்ராஜ் யாதிபதி முற்பட்டால் அது நியாயமென மற்ற நாடுகளால் கருதப்படும். ஆகவே சொல்கிறேன் குணவர்மரே! இங்கு வரும் சமயம் எனக்குத் தெரியும்” என்று கூறினான் இளைய பல்லவன்.

“சமயம் எப்பொழுது வரும்?” என்று துக்கம் தொண்டையை அடைக்க வினவினாள் காஞ்சனாதேவி.

“நான் இந்தக் கடல் நாடுகளில் காலை ஊன்றியதும் வருவேன்” என்றான் இளையபல்லவன்.

அப்படிச் சொல்லிச் சென்றவன் அன்று முதல் மெள்ள மெள்ள மலாக்கா ஜலசந்தி என்று தற்காலத்தில் அழைக்கப் படும் ஸ்ரி விஜய சாம்ராஜ்யக் கடற்பகுதி நாடுகளில் பல இடங்களில் தனது கால்களை ஊன்றினான். அப்படி ஊன்றி முடித்து இனி ஸ்ரி விஜயத்தை எதிர்க்கலாம் என்று உறுதி கொண்டு கனவு கண்டு வந்தவன், கடாரத்தின் சூழ்நிலையில் பெரும் வித்தியாசமிருப்பதைத் தனது தாரைகள் ஊதப்பட்ட உடனேயே புரிந்துகொண்டான்.

கடல்புறாவின் தளத்தில் நின்ற வண்ணமே நாற்புறமும் நோக்கிய இளையபல்லவன், துறைமுகத்தில் ஐந்தாறு பெரும் போர்க்கலங்கள் நிற்பதையும், அவற்றில் சோழர் கொடிகள் பறப்பதையும் கண்டான். கடாரத்தின் கடற்கரையிலும் சோழ நாட்டு வீரர்கள் காவல் புரிவதையும் கண்டான். சோழ நாட்டிலிருந்து யாரோ ஒரு பெரும் கடற்படைத்தலைவர் வந்திருக்க வேண்டுமென்பது அவனுக்குப் புரிந்ததென்றாலும் அத்தனை கெடுபிடிக்கும் காவலுக்கும் காரணமென்ன என்பது மட்டும் புரியவில்லை.

யார் வந்திருந்தாலும் தான் சோழ நாட்டுக் கடலாதிக்கத்துக்குப் புரிந்திருக்கும் சேவைக்குத் தனக்குப் பாராட்டுதல் கிடைக்குமே தவிர, வேறு எந்தவித இடையூறும் கிடைக்கக் காரணமில்லை என்ற நினைப்பில் அவன் மாற்றுடை அணியப் புறப்பட்டதுமே அவன் அறைக்குள் வந்த கண்டியத் தேவன் சோழர் கொடியுடன் ஒரு படகு கரையிலிருந்து கடல் புறாவை நோக்கி வருகிறதென்று அறிவித்தான். “சரி யாராயிருந்தாலும் இங்கு அழைத்துவா! என உத்தரவிட்ட இளையபல்லவன் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்வதில் முனைந்தான்.

சோழநாட்டிலிருந்து வந்துள்ள கடற்படைத் தலைவர், யாராயிருந்தாலும் அவர் அந்தஸ்து தனது அந்தஸ்தை மீறியதல்ல என்பதை உணர்ந்து விலையுயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்தான் இளையபல்லவன். ஆங்காங்கு பெரும் சரிகைப் பட்டையுள்ள அங்கியையும் அரபு நாட்டுச் சராயையும் அணிந்துகொண்டு ஒரு காதில் பச்சைக்கல் தொங்கிய பெரும் வளைந்த குண்டலத்தையும், மார்பில் அந்தப் பழைய நெருப்புத்துண்ட சிவப்புக்கல் ஆரத்தையும் அணிந்தான். கச்சையில் நவரத்ன சகிதமான குறுவாளைச் செருகிக்கொண்டு, கச்சையில் விலை மதிக்க முடியாத கற்களிழைத்த பிடியை உடைய நீண்ட வாளொன்றையும் அணிந்து நெற்றியில் திலகம் தீட்டிப் புறப்படத் தயாரானான். அவன் அலங்காரம் முடிவதற்கும் கண்டியத்தேவன் படகில் வந்தவனை அழைத்து வருவதற்கும் நேரம் சரியாயிருந்தது.

வந்தவனை ஏறெடுத்து நோக்கினான் இளையபல்லவன். வந்தவன் நெற்றியில் அவன் சோழ நாட்டவன் என்பது எழுதி ஒட்டி இருந்தது. அந்த முகத்தில் சோழநாட்டு விஷமம் துளிர் விட்டுக் கொண்டிருந்தது. அவன் வணக்கத்திலும் சற்று ஏளனம் தொனித்ததாகப் பட்டது படைத்தலைவனுக்கு. அதைக் கண்டதால் உள்ளூரக் கோபப்படாமல் தமிழனொருவனைக் கண்டுவிட்டோம் என்ற உவகையால், “யார் நீ? என்ன செய்தி?” என்று அதிகாரத்துடன் வினவிய படைத்தலைவன் குரலில் அதட்டலுடன் மகிழ்ச்சியும் தெரிந்தது:
சோழ நாட்டான் அதைக் கவனித்திருக்க வேண்டும். அவன் பதில் அதைத் தெரியப்படுத்தியது. “நீங்கள் என்னைக் கண்டு மகிழ்வதற்கு நியாயமிருக்கிறது. தமிழன் தமிழனைக் கண்டு மகிழ்வதில் அர்த்தமுண்டு. ஆனால் நான் கொண்டுவரும் செய்தி மகிழ்ச்சியை அளிக்க வல்லதல்ல” என்றான் சோழ நாட்டவன்.

“செய்தியைச் சொல்” என்றான் படைத்தலைவன் வியப்பு விரவிய குரலில்.

“உங்களைக் கையுடன் அழைத்து வர உத்தரவு” என்றான் அந்த வீரன்.

“எனக்கு உத்தரவா! யார் அந்த உத்தரவை இட்டது?” என்று வினவினான் இளையபல்லவன் வியப்புடன் ஆச்சரியம் கலக்க.

“எங்கள் தலைவர். “

“யாரவர்?”

“சொர்ணபூமிக் கடல் பிராந்தியங்களுக்குச் சோழ மன்னரால் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர். “

“அவர் பெயர்?”

“சொல்ல உத்தரவில்லை?”

“நான் வர மறுத்தால்?”

“உங்களைப் பலவந்தமாக அழைத்து வரும்படி உத்தரவு. “

இதைக்கேட்ட இளையபல்லவன் பெரிதாக நகைத்தான். “உங்கள் தலைவருக்குச் சித்தப் பிரமையா?” என்றும் வினவினான்.

“நேரில் சந்திக்கும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்” என்றான் சோழ நாட்டான் விஷமத்துடன்.

“என்ன புரிந்து கொள்வேன்?”

“சித்தப் பிரமை யாருக்கேற்பட்டாலும் அவருக்கு ஏற்படா தென்பதை. “

“என்னைச் சிறை செய்ய முடியுமென்று நினைப்பதே சித்தப்பிரமையைக் குறிக்கவில்லையா?”

“இல்லை. “

“ஏன்?”

பதிலுக்கு வந்த வீரன் தனது கச்சையிலிருந்து ஒரு மோதிரத்தை எடுத்து இளையபல்லவன் முன்பு நீட்டி, “இதற்கு நீங்கள் பணிவீர்களென்று திட்டமாகச் சொன்னார் தலைவர்” என்றான்.

இளையபல்லவன் அந்த மோதிரத்தைக் கண்டதும் பிரமித்துப் போனான் சில விநாடிகள். பிறகு தலையை அதை நோக்கி நன்றாகத் தாழ்த்தினான். மோதிரத்தைக் கையில் வாங்கிக் கண்களிலும் ஒற்றிக் கொண்டான். வீரராஜேந்திர சோழ தேவரின் முத்திரை மோதிரம் அது. தமிழன் எந்த இடத்திலிருந்தாலும் அதற்குத் தலைவணங்கக் கடமைப் பட்டவனென்பதை உணர்ந்த இளையபல்லவன் சிறிதும் ஆலசியம் செய்யாமல் சோழ நாட்டானுடன் புறப்பட்டான்.

உடன் வருவதாகச் சொன்ன கண்டியத்தேவனையும் அமீரையும் கூட வேண்டாமென்று தடுத்துவிட்டுத் தான் மட்டும் படகில் இறங்கி, சோழ நாட்டானுடன் கரை சேர்ந்தான். கரையிலிறங்கியதும் வெகு வேகமாகக் கடார நகரத்துக்குள் நுழைந்த இளையபல்லவன் முந்திய முறை போல் அந்த நகரத்தின் சிறப்புக்கள் மீது கண்களை ஓட்டவேயில்லை. அதன் மாளிகைகளின் பொன் மகுடங்களைக் கூட அவன் கண்கள் நாடவில்லை. வலைஞர் வீதி, வணிகர் வீதிகளின் சிறப்பு அபாரம்தான். ஆனால், கண் இருப்பவன் தானே அவற்றைப் பார்க்க முடியும்?

அன்று, இளையபல்லவன் புத்தியில் பல எண்ணங்கள் தாண்டவமாடியதால் கண்கள் பார்வையிழந்து கிடந்தன. அந்த இரண்டு வீதிகளைத் தாண்டியதைக்கூட அறியாமல் இராசவீதி புகுந்த இளையபல்லவன் அரண்மனைக்கு வந்த பின்பே சுய உணர்வு பெற்றான். அதன் படிகளை அடைந்ததும் சட்டென்று ஒரு விநாடி நின்றான். இந்த இடத்தில்தான் பல மாதங்களுக்கு முன்பு காஞ்சனாதேவி அவனை வரவேற்க மாலையும் கையுமாக நின்றாள். இன்று அந்தப் படியை நோக்கினான்.

அது வெறிச்சென்றிருந்தது அவன் கண்களுக்கு. அதனால் சில விநாடிகள் நின்று பெருமூச்செறிந்த இளையபல்லவன், படிகளில் ஏறி மாளிகைக்குள் நுழைந்தான். பல கட்டுக்காவல்களைத் தாண்டி இளையபல்லவனை அழைத்துச் சென்ற அந்தச் சோழநாட்டு வீரன், குணவர்மன் அறைக்கு வந்ததும் வெளியே நிற்கும்படி இளையபல்லவனிடம் கூறிவிட்டு உள்ளே சென்றான்.

சோழ நாட்டு வீரன் அந்த அரண்மனைக்குத் தன்னை அழைத்து வந்ததே பெரும் வியப்பாயிருந்தது இளைய பல்லவனுக்கு. அயல்நாட்டுத் தூதுவர்கள் தங்கும் விடுதி அந்த அரண்மனையிலிருந்து நாலைந்து மாளிகைகள் தள்ளி இருந்தது. ‘அங்கே அழைத்துப் போகாமல் இங்கழைத்து வந்ததன்றிக் குணவர்மன் ஆஸ்தான அறை வாயிலில் நிற்க வைத்துவிட்டானே இவன்? ஒருவேளை குணவர்மனே எனக்கு உத்தரவு போடப் போகிறானா? சோழ நாட்டுத் தூரக்கிழக்கு அதிபர் என்னை நேரில் பார்க்க விரும்ப வில்லையா?’ என்று தன்னைத்தானே பலமுறை கேட்டுக் கொண்ட இளையபல்லவன் உள்ளே சென்றவன் வரட்டும் எனக் காத்திருந்தான்.

சில விநாடிகள் கழித்து வெளியே வந்த சோழ நாட்டு வீரன் உள்ளே செல்லும்படி சைகை செய்தான் இளைய பல்லவனை நோக்கி. இளையபல்லவன் தன் ஆடைகளைச் சரிப்படுத்திக்கொண்டு உள்ளே சென்றான். விசாலமான அந்த அறையின் ஒரு மூலையில் சோழநாட்டுத் தூதர் தலைகுனிந்து ஓலையில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் அவர் தலை நிமிரவேயில்லை. பிறகு தலைநிமிர்ந்து அவனை நோக்கியதும் இளையபல்லவன் தலை சுழலும் நிலைக்கு வந்தது.

தான் காண்பது கனவா என்று பிரமித்து அப்படியே கல்லாய் சமைந்துவிட்டான் சோழர் படைத்தலைவன். தான் அடியோடு சொப்பனத்திலும் நினைக்காதவர் அங்கு எப்படி வந்தார், ஏன் வந்தார் என்பதை நினைத்துப் பேராச்சரியமும் பிரமிப்பும் அடைந்த அவன் மனம் ஸ்தம்பித்துக் கிடந்தது. தலையைத் தூக்கி அவனை மிகுந்த கம்பீரத்துடன் நோக்கியவர் வேறு யாருமல்ல. அவன் அந்தரங்கத் தோழரும் சோழ நாட்டு இளவரசனுமான அநபாயன்தான்.

பாலூர்ப் பெருந்துறையில் விபரீத நிலைமையில் பிரிந்த அநபாயர் ஒன்றே முக்கால் ஆண்டுகளுக்குப் பிறகு தன்னைக் கடாரத்தில் சந்திப்பார் என்பதை இளையபல்லவன் எப்படி எதிர்பார்க்க முடியும்? எதிர்பார்க்காத சந்திப்பு அவன் உணர்ச்சிகளைப் புரட்டி இழுத்தது. நட்பு உள்ளத்தே குமுறி எழுந்தது. “அநபாயரே! இளவரசே!” என்று கூவிக்கொண்டு அவரை நோக்கி விரைந்தான் இளையபல்லவன்.

அவன் நாலடி எடுத்து வைத்ததும், “நில் அப்படியே கருணாகரா!” என்ற அநபாயனின் உக்கிரக் குரல் இளைய பல்லவன் காலுக்குச் சட்டென்று தடை போட்டது.

“என்ன இது! என்ன இளவரசே! நான் உங்கள் நண்ப னல்லவா?” என்று குமுறினான் இளையபல்லவன்.

“நண்பன்தான் கருணாகரா! ஆனால் நான் இங்கு நட்புரிமை பாராட்ட வரவில்லை. வீரராஜேந்திர தேவர் பணியை நிறைவேற்ற வந்திருக்கிறேன்” என்றான் அநபாயன்.

“என்ன பணி அது?” சற்றுக் கடுமைப்பட்டது இளைய பல்லவன் குரல்.
“சொர்ணபூமியில் நீதியை நிலைநிறுத்துவது” என்றான் இளவரசன்.

“அதற்காக?”

“உன்னைச் சிறை செய்ய வேண்டியிருக்கிறது?”

“ஏன்?” இந்தக் கேள்வியை மிகுந்த கோபத்துடன் கேட்டான் இளையபல்லவன்.

“நீ நீதிக்குப் புறம்பானவன், கொள்ளைக்காரன்” என்ற சொற்களைப் பெரும் உறுதியுடன் உதிர்த்தான் வீர ராஜேந்திரரின் பிரதிநிதியான அநபாயன்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch34 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch36 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here