Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch36 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch36 | Sandilyan | TamilNovel.in

104
0
Read Kadal Pura Part 3 Ch36 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch36 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch36 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 36 : ஏடும் பொருளும்.

Read Kadal Pura Part 3 Ch36 | Sandilyan | TamilNovel.in

கடாரத்தின் எழில்மிகு அரண்மனையில் அநபாயனான குலோத்துங்க தேவன் சோழ சாம்ராஜ்யப் பிரதிநிதியாக வந்து உட்கார்ந்திருந்ததே இளையபல்லவனுக்குப் பெரும் பிரமிப்பா யிருந்ததென்றால், அதைவிடப் பிரமிப்பை அளித்தன அநபாயனின் சுடுசொற்கள். வீரராஜேந்திர சோழ சாம்ராஜ்ய பீடத்தில் அமர வேண்டிய இளவரசனான அநபாயனை, சதா போரும் கொள்ளையும் நிகழும் அபாயமான சொர்ணத் தீவின் கடல் பிராந்தியத்திற்குச் சோழ மன்னன் அனுப்புவார் என்பதைக் கனவில்கூட கருணாகர பல்லவன் கருதவில்லை. அந்தச் சந்தேகம் கருணாகர பல்லவனுக்கு மட்டுமல்ல, தற்கால சரித்திர ஆசிரியர்கள் பலருக்கும் உண்டு.

பேராசிரியர் ஆர். ஸி. மஜும்தார் ‘ஸ்வர்ணத் தீபம்’ என்ற நூலின் முதல் பாகத்தில் கி. பி. 1062 வது வருஷத்திற்குப் பிறகு குலோத்துங்க தேவன் கடாரத்தில் வீரராஜேந்திரன் பிரதிநிதி யாகப் பணியாற்றியதாகவும், சோழநாட்டுத் தூதனாக கி. பி. 1067ல் சீனத்துக்கும் சோழத் தூதராகச் சென்றதாகவும் கூறுகிறார். பேராசிரியர் பிடி. ஸ்ரி நிவாசய்யங்கார் அவர்களும் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்களும், அவ்விதமே அபிப்பிராயப்படுகிறார்கள். இதைப் பற்றிச் சீன நாட்டில் ஸாங் வம்ச சரித்திர ஏடுகளிலும் குறிப்புகள் காணப் படுகின்றன.

“1067-ல் சூளியனிடமிருந்து (சோழனிடமிருந்து) ஒரு தூதன் சீன ராஜசபைக்கு வந்தான். அவன் பெயர் திஹுவா-கியா-லோ” என்ற குறிப்பு அந்த ஏடுகளில் இருக்கிறது. தி-ஹுவா-கியா-லோ என்ற சொற்கள் தேவ-குலோ என்ற சொற்களின் விகாரமாயிருக்க வேண்டும் என்றும், ஆகவே குலோத்துங்க தேவன் 1067-ல் சீனாவிலும் அதற்கு முன்பு கடாரத்திலும் இருந்திருக்க வேண்டுமென்றும் மேற்சொன்ன பேராசிரியர்கள் கருதுகிறார்கள். அது தவறு, குலோத்துங்கன் தூரக்கிழக்கு செல்லப் பிரமேயமேயில்லை என்று கூறுவோரும் உண்டு.

ஆனால் பெருவாரியான ஆசிரியர்கள் குலோத்துங்கன் வீரராஜேந்திரன் பிரதிநிதியாகச் சென்று ஸ்ரி விஜயத்தின் அரியணைப் போட்டிச் சச்சரவைத் தீர்த்து வைத்தானென்று நம்புவதாலும், அதற்குச் சீன சரித்திர ஏடுகளையே அத்தாட்சி காட்டுவதாலும், சோழ சாம்ராஜ்ய செல்வாக்கு கடல் கடந்து ஜொலித்தது உண்மையாகையாலும், குலோத்துங்கன் ஸ்ரி விஜயத்திலும் சீனத்திலும் பணியாற்றினான் என்றே இக்கதை சம்பந்தப்பட்டவரை கொள்வோம்.

அத்தகைய சோழ சாம்ராஜ்ய விஸ்தரிப்பை நினைக்க நமக்குப் பெருமையும் பிரமிப்பும் ஏற்படுகிறது. நமது நாட்டு இளவலொருவன் தற்கால வசதிகளில்லாத அக்காலத்தில் கடாரத்தில், அங்குள்ள மன்னர்களுக்கும் உத்தரவிடும் நிலையில் அமர்ந்திருந்தான் என்பதை நினைக்க நமக்குப் பெரும் பிரமை ஏற்படுவதில் என்ன வியப்பிருக்கிறது? ஆகவே அன்று இளையபல்லவன் குலோத்துங்கனைக் குணவர்மன் அரண்மனையில் கண்டதும் அவனுக்கு ஏற்பட்ட பிரமிப்பு எத்தன்மையதா யிருக்கும்?

அளவிட முடியாத பிரமிப்பையே அடைந்தான் இளைய பல்லவன் அநபாயனைக் கண்டதுமே. அநபாயனின் துணிவைப் பற்றி இளையபல்லவனுக்கு என்றும் எந்தவித சந்தேகமும் இருந்ததில்லை. ஆனால் இன்னும் கலிங்கத்துக் கப்பல்களின் தொந்தரவு கடல்களில் இருந்துகொண்டிருக்கக் கேவலம் ஐந்தாறு போர்க்கலங்களுடன் குலோத்துங்கன் கடாரத்துக்கு வந்து சேருவானென்றோ, அவற்றைக் கொண்டு அந்தப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்த எண்ண மிடுவானென்றோ அவன் கனவிலும் நினைக்கவில்லை.

அப்படி வந்தவன் தன் ஆருயிர்த் தோழனாதலால் அவன் தன் சந்திப்பைப் பெரிதும் விரும்புவானென்றே நினைத்திருந்த இளையபல்லவன் அவன் தன்மீது சீறுவானென்று எண்ணாத தால், “நீ நீதிக்குப் புறம்பானவன், கொள்ளைக்காரன்” என்று உக்கிரத்துடன் அவன் கூறியதும் அதிர்ச்சியுற்று நின்ற இடத்திலேயே நின்றுவிட்டான்.

ஆனால் அந்த அதிர்ச்சி அதிக நேரம் நிலைக்கவில்லை. பாலூர்ப் பெருந்துறையிலிருந்து தப்பிய பிறகு அபாயத்துடன் சதா தோழமை கொண்ட கருணாகரபல்லவன் சில விநாடி களுக்குள் அந்த அதிர்ச்சியை உதறிவிட்டு மெல்ல நகைக்கவும் செய்தான். அந்த நகைப்பொலி குணவர்மன் அரண்மனையின் அந்த அறைச் சுவர்களில் மோதி எதிரொலி செய்யவே தன் கூரிய விழிகளால் இளையபல்லவனை நோக்கிய அநபாயன், “நகைக்கும் கட்டமா இது கருணாகரா?” என்று வினவினான் அதிகாரம் பூரணமாகத் தொனித்த குரலில்.

இளையபல்லவன் விழிகள் நிர்ப்பயமாக குலோத்துங்கள் விழிகளுடன் கலந்தன. “அநபாயரே! சென்ற முக்கால் ஆண்டு களாக எனக்கு இத்தகைய கட்டங்களே கிடைத்திருக்கின்றன, நகைப்பதற்கு” என்றும் கூறி மெள்ளப் புன்முறுவலும் செய்தான்.

அநபாயன் விழிகளில் எந்தவித மாறுதலும் இல்லை. முகத்தில் கூட லவலேசமும் எந்தவித உணர்ச்சியையும் காட்ட வில்லை அவன். சொற்களிலும் உணர்ச்சியேதும் துளிர் விடாமலே கேட்டான், “அப்படியா!” என்று.
“ஆம்!” கருணாகரன் பதிலில் அலட்சியம் இருந்தது.

அந்த அலட்சியத்தைக் கவனிக்கத் தவறாத குலோத்துங்கன், “கொள்ளைக்காரனுக்கு இருக்க வேண்டிய நெஞ்சுறுதி இருக்கிறது” என்றான்.

“நெஞ்சுறுதி இல்லாமல் கொள்ளைக்காரனாக முடியாது” என்று சுட்டிக் காட்டிய இளையபல்லவன் குரலில் விஷமம் இருந்தது.

அந்த விஷம ஒலியையும் கவனித்த அநபாயன், “அந்த நெஞ்சுறுதியைச் சட்டத்தை ஒட்டி நீ உபயோகித்திருந்தால்

சோழ நாட்டுக்கும் பெரும் லாபம் ஏற்பட்டிருக்குமே கருணாகரா?” என்றான்.

“அப்படியா!” இளையபல்லவன் குரலில் சந்தேகம் ஒலித்தது.

“ஏன்? சந்தேகமாயிருக்கிறதா உனக்கு?”

“இல்லை, இல்லை. சந்தேகமில்லை. “

“எதில் சந்தேகமில்லை ?”

“சட்டப்படி நடந்திருந்தால் என்ன ஏற்பட்டிருக்கு மென்பதில் சந்தேகமில்லை. “

“என்ன ஏற்பட்டிருக்கும்?”
“முதலில் நீங்கள் பாலூரைவிட்டுத் தப்பி இருக்க மாட்டீர்கள். அப்படித் தப்பியிருந்தாலும் கடாரத்துக்கு வந்திருக்க மாட்டீர்கள். அப்படியே வந்தாலும் இந்த அரண்மனையில் இத்தனை சௌக்கியமாக அமர்ந்து கொண்டு பேசியிருக்க மாட்டீர்கள்” என்று இளையபல்லவன் சொன்னான் குரலில் வெறுப்புத் துலங்க.

அந்த வெறுப்புக்குப் பின்பும் அநபாயன் மசியவில்லை. “நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை” என்றான் சர்வ சாதாரணமாக.

இளையபல்லவன் இரண்டடியில் அநபாயனுக்கெதிரில் அருகில் வந்து நின்றுகொண்டான். பிறகு வெறுப்பும் கசப்பும் விஷமமும் கலந்த குரலில் சொன்னான்: “விளங்கச் சொல் கிறேன், கேளுங்கள் அநபாயரே! பாலூர்ப் பெருந்துறையில் கலிங்கத்துப் பீமன் உங்களைச் சிறையிட்டான். தமிழர்களைச் சித்திரவதை செய்தான். அங்கு நீங்களும் நானும் சட்டப்படி நடக்கவில்லை. கலிங்கத்தின் சட்டப்படி காரியம் நடந் திருந்தால் நம்மிருவர் தலையும் வெட்டுப் பாறையில் உருண்டிருக்கும். சட்டத்தை மீறினோம், திருட்டுத்தனமாகத் தப்பினோம்.

அங்கும் தப்ப கொள்ளைக்காரன் உதவி தேவையாயிருந்தது உங்களுக்கு. தப்பிப் புகார் சென்றீர்கள், வீரராஜேந்திர சோழ தேவரைச் சந்தித்தீர்கள். குணவர்மருக்கு உதவியளிப்பதாக உறுதி கூறியும் அனுப்பினீர்கள். ஆனால் அந்தக் குணவர்மர் கலிங்கத்தின் போர்க்கப்பல் ஒன்றில் சிறைப்பட்டுக் கிடந்தார் தனது மகளுடன். அவர்களைச் சட்டம் காப்பாற்றவில்லை. நீதிக்குப் புறம்பில்லாத சோழ நாட்டுக் கடற்படைத் தலைவர்கள் காப்பாற்றவில்லை. ஒரு கொள்ளைக்காரன் காப்பாற்றினான். அவன் யார் தெரியுமா? இவன். “

இதைச் சொன்ன இளையபல்லவன் தனது மார்பை முஷ்டியால் குத்திக் காட்டினான். குத்திக் காட்டி மேலும் சொன்னான்: “அநபாயரே! இன்னும் கேளுங்கள்! இராஜேந்திர சோழ தேவர் காலத்தில் வாணிபம் செய்ய இந்தத் தீவுக்குக் குடியேறிய தமிழர்கள் ஸ்ரி விஜயத்தின் அதிகாரிகளால் அடைந்துள்ள துன்பத்துக்கு அளவில்லை. கலிங்கம் ஸ்ரி விஜயத்திடம், அதாவது ஸ்ரி விஜயத்தின் அதிபதி ஜெயவர்மனிடம் நட்புக் கொண்டிருக்கிறது. சோழ நாட்டையும் தமிழர்களையும் விரோதிகளாகப் பாவிக்கிறது. ஆகவே தமிழர்கள் அடைந்துள்ள துன்பத்துக்கு அளவில்லை. அதைத் துடைக்கத் தீர்மானித்தவனும் ஒரு கொள்ளைக்காரன். அதற்காகத் தளம் தேடினான். அக்ஷயமுனையில் அதை அமைக்க முயன்றான். முடியவில்லை.

பிறகு மாநக்காவரத்தில் அமைத்தான். அந்தத் தளத்தை நோக்கிச் சென்றபோதிருந்த நிலை உங்களுக்குத் தெரியாது அநபாயரே! அங்கிருந்த தமிழர்கள் சிலர் கொல்லப்பட்டார்கள். சிலர் காட்டுக்குள் ஓடிவிட்டார்கள். அது கலிங்கத்தின் கடற்படைத் தலைவன் ஒருவன் கையிலிருந்தது. அதை இவனிடமிருந்து மீட்கவும், அவன் கையிலிருந்து நீங்கள் அபயம் கொடுத்து அனுப்பிக் குணவர்மரைக் காக்கவும் ஒரு கொள்ளைக்காரனே தேவையா யிருந்தது. அது மட்டுமல்ல. நீங்கள் இங்கு ஐந்தாறு மரக் கலங்களுடன் தங்கு தடையின்றிக் கடலில் ராஜபவனி வந்திருக்கிறீர்களே, அது எப்படி?”

இந்தக் கேள்வியை மிகப் பலமாக வீசினான் இளைய பல்லவன். அநபாயன் மிக நிதானமாகவே கேட்டான், “அதுவும் கொள்ளைக்காரன் தயவினால்தான் போலிருக் கிறது” என்று.

“சந்தேகம் வேண்டாம் அநபாயரே! அந்தக் கொள்ளைக் காரன் சென்ற ஆறு மாதங்களில் திரும்பத் திரும்ப இந்தக் கடல் பகுதிகளில் உலாவி, கலிங்கத்தின் பெரும் மரக்கலங்கள் பலவற்றைக் கைப்பற்றியிராவிட்டால் உங்கள் ஐந்தாறு மரக் கலங்களும் இங்கு வந்திருக்க முடியாது. இப்பொழுது இந்தக் கடல் பிராந்தியத்தில் உலாவக் கலிங்கத்தின் போர்க்கலங்கள் நடுங்குகின்றன. காரணம் நீதிக்குப் புறம்பில்லாத நீங்களல்ல. சோழ மன்னரின் நீதிக் கப்பல்களுமல்ல, நீதிக்குப் புறம்பான நான், எனது கடல்புறா, எனது காஞ்சனை, எனது மஞ்சளழகி..!” என்று சொல்லிக்கொண்டே போன இளைய பல்லவனை இடைமறித்த அநபாயன், “இரு இரு! ஏதோ பெண்களின் பெயர்களைச் சொல்கிறாயே?” என்று வினவினான்.

“என் மரக்கலங்கள் இரண்டின் பெயர்கள். “

“பெண்களின் பெயர்களை ஏன் சூட்ட வேண்டும் அவற்றுக்கு?”

“கொள்ளைக்காரனால் காக்கப்பட்ட இரு பெண்கள் அவர்கள். “

அநபாயன் முகத்தில் சிந்தனைக்குறி லேசாகப் படர்ந்தது. “கொள்ளைக்காரன் பல நல்ல காரியங்களைப் புரிந்திருக் கிறதாகத் தெரிகிறது” என்றும் கூறி மெள்ளப் புன்முறுவல் செய்தான் அநபாயன்.
இளையபல்லவன் உள்ளம் குமுறிக் கொண்டிருந்ததால் அவன் குலோத்துங்கனின் குறுநகையைக் கவனிக்கவில்லை. தன்னை இரு கைகளால் தழுவவேண்டிய உயிர்த் தோழன், தான் சோழநாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த சேவைக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய ராஜப்பிரதிநிதி தன்னை நிற்க வைத்துப் பேசியதாலும் தன்னைக் கொள்ளைக்காரனாகக் கருதி இழிவாக உரையாடியதாலும் கோபத்தின் வசப்பட்டிருந்த இளையபல்லவன், அநபாயனின் முகமாறுதலைக் கவனியாமல் அந்த அறைக் கூரையை நோக்கியவண்ணம், “கொள்ளைக்காரனால்தான் இங்கு நல்ல காரியங்களைச் செய்யமுடியும்?” என்றான்.

“ஏனப்படி?”

“இங்கு சட்டத்தின் பொருளும் நீதியின் பொருளும் தடம் மாறிக் கிடக்கின்றன. ஸ்ரி விஜய சாம்ராஜ்ய சட்டத்தின் கீழ் அக்ஷயமுனை ஆளப்பட்டதைக் கண்டேன். இலங்காசோகம், இலாமுரிதேசம், மாபப்பாளம், மலையூர் இந்த இடங்களில் ஸ்ரி விஜய சட்டத்தின் கீழ் தமிழர் நிலையைக் கண்டேன். சட்டத்துக்கு இங்கு பொருள் வேறு என்பதைப் புரிந்து கொண்டேன். ஆகவே அதற்கு மாறுபட்டேன். கொள்ளைக் காரனானேன், அதில் பெருமையடைகிறேன். “

மிகத் திட்டவட்டமான குரலில் பேசினான் இளைய பல்லவன். அநபாயன் முதன் முதலாக வாய்விட்டு நகைத்தான். பிறகு, “கொள்ளைக்காரா! அறைக்கதவைச் சாத்திவிட்டு வா” என்றும் உத்தரவிட்டான் நகைப்பின் ஊடே. அந்த நகைப்பையும் அந்த நகைப்பினூடே ஒலித்த அன்பையும் கவனித்த இளையபல்லவன் சற்று வியப்புடன் சரேலென்று குலோத்துங்கன் மீது தனது கண்களை நாட்டினான். குலோத்துங்கன் முகத்தில் தவழ்ந்திருந்த குறுநகை முகம் பூராவும் விரிந்தது. “சொன்னபடி செய் கருணாகரா?” என்ற சொற்களில் நட்புத் தொனித்தது.

ஏதும் புரியாமல் குலோத்துங்கன் சொன்னபடி அறைக் கதவைச் சாத்திவிட்டுத் திரும்பிய இளையபல்லவனை அநபாயன் தனக்கெதிரே இருந்த ஆசனத்தில் அமரச் சொல்லி அவன் இரு கைகளையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவன் முகத்தை உற்று நோக்கினான் பல விநாடிகள். பிறகு மெள்ளப் புன்முறுவல் கொண்டு, “கருணாகரா! சோழ நாட்டில் சொல்வது சரியாகத்தானிருக்கிறது. ஒற்றைக் காதில் அந்தக் குண்டலம், முகத்தில் தொங்கும் அந்தப் பயங்கர முடி, மார்பில் ஊசலாடும் அந்தச் சிவப்புக் கல் ஆரம், சாட்சாத் கொள்ளைக்காரன் போலவே காட்சியளிக்கிறாய்” என்றான் அநபாயன்.

நண்பனின் கைகளுக்குள் பிணைந்து கிடந்த தன் கைகளை எடுக்காமலே, “என்னைப் பற்றிச் சோழ நாட்டில் அத்தனை கேவலமாகவா பேசுகிறார்கள்?” என்று வினவினான் இளையபல்லவன் துயரத்துடன்.

“மக்கள் உன்னைப் பற்றிப் பெருமையுடன் பேசுகிறார்கள். மன்னர் மட்டும்… ” என்று சொற்களைப் பூர்த்தி செய்யாமல் விட்டான் அநபாயன்.

“மன்னர் மட்டும்!”

“உன்னை வெறுக்கிறார் பலர் முன்னிலையில். “

“அப்படியா!”

“ஆம். தனிமையில் அவரும் மக்களுடன் சேர்ந்து கொள்கிறார். “

“அதாவது… ”

“உன்னை மன்னர் புகழ்வதற்கு அளவே இல்லை. “

“அதனால்தான் என்னைச் சிறை செய்ய உங்களை அனுப்பி இருக்கிறாரா?” இளையபல்லவனுடைய இந்தக் கேள்வியில் வெறுப்பே கலந்து கிடந்தது.

அதைக் கவனித்த குலோத்துங்கன், “கருணாகரா! மன்னர் நிலைமை மிகவும் சங்கடமானது. கலிங்கத்துக்கும் நமக்கும் இன்னும் போரில்லை. ஸ்ரி விஜயத்துக்கும் நமக்கும்கூடப் போரில்லை. இரண்டு நாடுகளும் உன்னைப் பற்றி எதிர்த்து வீரராஜேந்திரரிடம் தூதுவர்களை அனுப்பியிருக்கின்றன. அரசுகளின் வேண்டுகோளை மன்னர் புறக்கணிக்க முடியாது. ஆகையால்தான் உன்னைச் சிறை செய்ய என்னை அனுப்பி யிருக்கிறார். உன்னைச் சிறை செய்ய அவர் மறுத்தால் கலிங்கத்திலுள்ள தமிழர்களைக் கொன்று விடுவதாக அனந்த வர்மனும், பீமனும் பயமுறுத்தியும் இருக்கிறார்கள். ஆகையால் தான் மன்னர் என்னை அனுப்பியிருக்கிறார். இரு அவர் பத்திரத்தைக் காட்டுகிறேன்” என்று கூறிவிட்டு அந்த அறைக் கோடிக்குச் சென்று தனது பேழை ஒன்றிலிருந்து பெரும் செப்பேடு ஒன்றை எடுத்து வந்து நீட்டினான் இளைய பல்லவனிடம்.

அந்தச் செப்பேட்டை வாங்கிப் படித்தான் இளைய பல்லவன். அதன் வாசகம் சிறியதாகத்தானிருந்தது. ஆனால் பலவித வியாக்கியானங்களுக்கு இடங் கொடுத்தது. “ஸ்வஸ்திஸ்ரி திருவளர திரள்புயத்திரு நிலவலையந்தன் மணிப் பூணென” என்ற பிரசஸ்தியுடன் துவங்கிய அந்தச் செப்புப் பட்டயம், “கடாரத்தின் அரியணைப் போட்டியை விசாரித்துத் தக்கவரை அரசபீடத்தில் அமர்த்தவும், கடற் கொள்ளைக் காரனான கருணாகரனைச் சமயம் பார்த்துச் சிறைபிடித்துச் சோழ நாட்டுக்குக் காவலுடன் அனுப்பவும் சோழர் பிரதிநிதி இளவல் அநபாயனுக்கு அளிக்கும் கட்டளை. எழுதினன் ஊர்க்கரணத்தான் வடுகன் பாக்கர நென். இவை என் எழுத்து” என்ற வரிகளைத் தாங்கி நின்றது. அதன் அடியில் அரச முத்திரை இருந்தது.

பட்டயத்தைப் பலமுறை படித்த இளையபல்லவன் அதை மீண்டும் அநபாயனிடம் கொடுத்தான். அநபாயன் கேட்டான், “பட்டயத்தைப் படித்தாயல்லவா?” என்று.

“படித்தேன். “

“என்ன புரிந்து கொண்டாய்?”

“புரிந்தது சொற்பம். புரியாதது பல. “

“புரியாதது எது?”

“கடாரத்தின் அரியணையில் யார் அமர வேண்டும் என்று திட்டமாகக் குறிப்பிடவில்லை. தவிர என்னைச் சமயம் பார்த்துச் சிறை செய்யச் சொல்லி இருக்கும் காரணமும் புரியவில்லை . “
அநபாயன் மஞ்சத்திலிருந்து எழுந்தான். இளவரசன் எழுந்ததால் இளையபல்லவனும் எழுந்து நின்றான். இரண்டு நண்பர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நீண்ட நேரம் நின்றனர். அதில்தான் வீரராஜேந்திரனின் இணையற்ற விவேகமும் ராஜதந்திரமும் அடங்கியிருக்கிறது கருணாகரா! விளக்குகிறேன் கேள். இப்படி உட்கார்” என்று மஞ்சத்தை விட்டுத் தரையில் நன்றாக உட்கார்ந்து கொண்டான். இளைய பல்லவனும் அவனுக்கு அருகில் உட்கார்ந்தான்.

அப்படி அக்கம்பக்கத்தில் பல இடங்களில் தரையில் உட்கார்ந்த அந்த நண்பர்கள் இருவரும் பழைய அந்நியோந் நியத்தில் திளைத்தார்கள். அப்படி உட்கார்ந்த குலோத்துங்கன் வீரராஜேந்திரன் செப்பேட்டின் பொருளை விளக்கினான். பொருள் விளங்க விளங்கப் பெரும் ஆச்சரியத்துக்குள்ளான இளையபல்லவன், இருவருக்குமிருந்த ஏற்றத்தாழ்வுகளை அறவே மறந்து, “நண்பனே! உன்னைப் பெறவும் வீரராஜேந்திர ரைப் பெறவும் தமிழகம் என்ன தவம் செய்தது?” என்று கூறி அநபாயனை அணைத்துக் கொண்டான்.

மகிழ்ச்சியுடன் நகைத்தான் அநபாயன். அந்த அறைச் சுவர்கள் அந்த நகைப்பொலியை ஆமோதிப்பனபோல் எதிரொலி கிளப்பின.

Previous articleRead Kadal Pura Part 3 Ch35 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch37 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here