Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch37 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch37 | Sandilyan | TamilNovel.in

89
0
Read Kadal Pura Part 3 Ch37 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch37 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch37 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 37 : மோதிரக்கை.

Read Kadal Pura Part 3 Ch37 | Sandilyan | TamilNovel.in

சோழ சாம்ராஜ்யத்தின் தூரக்கிழக்குத் தூதனாக வந்துள்ள குலோத்துங்கதேவன் செப்பேட்டின் பொருளை விளக்கி அறையின் சுவர்கள் எதிரொலிக்கச் சிரித்தும்கூட, அந்தச் சிரிப்பில் கலந்து கொள்ளாத கருணாகர பல்லவன் வியப்பின் வசப்பட்டுப் பல விநாடிகள் வாயடைத்தே உட்கார்ந்திருந்தான்.. முழந்தாள்களைக் கட்டிக்கொண்டு தரையில் அநபாயன் அருகில் உட்கார்ந்திருந்த சமயத்தில் இளையபல்லவனுக்கு நியாயமாக அவனும் அநபாயனும் அதேமாதிரி அக்கம்பக்கத்தில் உட்கார்ந்திருந்த போர்ப் பாசறைகள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.

அவர்கள் அப்படிச் சாதாரண மனிதர்களாக உட்கார்ந்த இடங்கள் பல. அப்படித் தரையில் உட்கார்ந்தது அவர்கள் இருவருக்கும் பெரும் உவகையை அளித்ததும் உண்டு. வேங்கி நாட்டிலும் ஒருமுறை அப்படித் தரையில் உட்கார்ந்தபோது இளையபல்லவன் கேட்டான் அநபாயனை, “ஏன் தரையில் உட்காருகிறீர்கள்?” என்று. “தரையில் என்று சொல்லாதே. மண்ணில் என்று சொல்” என வந்தது அநபாயன் பதில். “என்ன வித்தியாசம் இரண்டுக்கும்?” என்று வினவினான் இளையபல்லவன்.

“வேங்கி நாட்டு மண்ணில் சோழன் போய் உட்கார்ந்துவிட்டான் என்றால் அந்த நாட்டைப் பிடித்து விட்டானென்று பொருள்” என விளக்கினான் அநபாயன். பிற நாடுகளை வெற்றி கொள்வதில் அநபாயனுக்கிருந்த ஆர்வத்தை அன்று புரிந்து கொண்ட இளையபல்லவன் அதற்குப் பின்பு அந்தக் கேள்வியைக் கேட்டது கிடையாது. மஞ்சத்தில் உட்காருவதை விட மண்ணில் உட்காருவதை அத்தனை பெருமையாக அவனும் நினைத்தான். அப்படி அவ்விருவரும் உட்கார்ந்த இடங்கள் பலப்பல.

அந்த நினைப்புகள் மட்டும் இளையபல்லவனுக்கு அன்று வந்திருந்தால் கடாரத்தின் தரையில் ஏன் உட்கார்ந்தான் குலோத்துங்கன் என்பதற்கு ஒரு காரணமும் கற்பித்திருப்பான். ஆனால் இளையபல்லவன் நினைப்பெல்லாம் பிரமிப்பா யிருந்தது. செப்பேட்டையும் வீரராஜேந்திரன் தந்திரத்தையும் விட்டு அவன் நினைப்பு வேறு இடங்களுக்குத் தாவ மறுத்தது. குலோத்துங்கன் பொருள் விளக்கம் அத்தனை விசேஷமாய் இருந்தது. பொருளை விளக்குமுன்பு பட்டயத்தை மீண்டும் படிக்குமாறு தான் குலோத்துங்கன் இளையபல்லவனுக்குக் கூறினாலும் இளையபல்லவனுக்கு பொருளேதும் திட்டமாக விளங்காததால், “நீங்கள் விளக்குங்கள் அநபாயரே!” என்று கேட்டான் அவன் ஆரம்பத்தில்.

பொருளை விளக்கத் துவங்கிய அநபாயன், “கருணாகரா! குணவர்மன் என்னுடன் புகாருக்கு வந்தது உனக்கு நினைப்பிருக்கிறதல்லவா?” என்று வினவினான்.

“அதை எப்படி மறக்க முடியும்?” என்று கேட்டான் இளையபல்லவன்.

“ஆம். மறக்க முடியாத நிகழ்ச்சிதான் அது. பாலூர்ப் பெருந்துறையில் எத்தனை கஷ்டப்பட்டுத் தப்பினோம்! அங்கிருந்து நான் குணவர்மனையும், உன் இன்னொரு கப்பலுக்குப் பெயர் வைத்திருக்கிறாயே காஞ்சனை, அந்தப் பெயருடைய பெண்ணையும் அழைத்துக் கொண்டு சோழ நாடு சேர்ந்தேன், வீரராஜேந்திரரிடம் அவர்களை அறிமுகப் படுத்த முயன்றேன். பல மாதங்கள் அவர்களைப் பார்க்கவும் மறுத்தார் மன்னர். ஏற்கெனவே கலிங்கத்துடன் சச்சரவிருக்க, அந்தச் சச்சரவை தூரக்கிழக்கு நாடுகளுக்கும் விஸ்தரிக்க அவர் இஷ்டப்படவில்லை. பல மாதங்கள் கழித்து உன்னைப் பற்றிய செய்திகள் வணிகர் மூலம் சோழ நாட்டுக்குக் கிடைத்தன. ஸ்ரி விஜயத்தின் தீவுகளில் தமிழர் துன்புறுத்தப் படுவதாகவும் அவர்களை இளையபல்லவன் என்ற ஒரு கொள்ளைக்காரன் காப்பாற்றுவதாகவும் மன்னர் காதில்

விழுந்தது. வீரராஜேந்திரரின் புத்திக்கூர்மையைப் பற்றி உனக்கு நான் சொல்லத் தேவையில்லை. அந்தக் கொள்ளைக்காரன் யாரென்று புரிந்துகொள்வது ஒரு கஷ்டமில்லை அவருக்கு. அப்பொழுதும் அவர் குணவர்மனுக்கு இடம் கொடுக்கவில்லை. ஓராண்டுக்குப் பின்னர் அந்தக் கொள்ளைக்காரனைப் பற்றிக் கலிங்கத் தூதரும் பெரும் குற்றச்சாட்டுக்களைச் சோழ மன்னரிடம் சமர்ப்பித்தார்கள். அதைச் சாக்காக வைத்துக்கொண்டு வீரராஜேந்திரர் ஸ்ரி விஜயத் தூதரை வரவழைத்தார். தூதரிடம் மன்னர் என்ன கேட்டார் தெரியுமா?” என்று வினவினான் குலோத்துங்கன்.

“என்ன வினவினார்?” இளையபல்லவன் கேள்வியில் விஷயத்தை அறிந்துகொள்ளும் துடிப்பு ஒலித்தது.

“அந்தக் கொள்ளைக்காரன் ஏன் புரட்சிக்காரனா யிருக்கக்கூடாது?” என்று ஸ்ரி விஜயத் தூதரை வினவினார். ஜெயவர்மனுக்கும் குணவர்மனுக்கும் ஸ்ரி விஜய அரியணைப் போட்டி இருப்பதாகத் தமக்குக் கேள்வியென்றும், ஜெயவர்மன் ஆட்சிக்கொடுமையாலேயே கொள்ளைக்காரனை மக்கள் ஆதரிப்பதாகவும் தமக்குச் செய்தி கிடைத் திருப்பதாகவும் கூறினார். அதுமட்டுமல்ல, தூரக்கிழக்கில் ஸ்ரி விஜயத்தில் சரியான ஆட்சியிருந்தாலொழிய கொள்ளைக்காரனைச் சிறைசெய்யத் தாம் தமது கடற்படையை அனுப்புவதில் அர்த்தமில்லையென்றும் கூறினார். முதலில் ஆட்சேபித்தார் ஸ்ரி விஜயத்தூதர். பிறகு ஆட்சி தகராறையும் வீரராஜேந்திரரே விசாரிக்கலாமென ஒப்புக் கொண்டார்.

அதற்குப் பின்புதான் குணவர்மரையும் அவர் பெண்ணையும் மரக்கலமொன்றில் தக்க துணையுடன் அனுப்பினோம். அவர்களைக் கலிங்கப் போர்க்கலம் சிறை செய்ய நீ மீட்டாய்… ” என்ற குலோத்துங்கன் சிறிது நிதானித்தான்.

“மேலே சொல்லுங்கள்” என்ற இளையபல்லவன் முழுக் கதையையும் கேட்கக் காதைத் தீட்டிக்கொண்டான்.

அநபாயன் மேலே சொன்னான். “பிறகும் சில மாதங்கள் தாமதித்தார் வீரராஜேந்திரர். திடீரென்று ஒருநாள் எனக்கு அழைப்பு வந்தது. அவர் ஆஸ்தான அறையில் ஸ்ரி விஜயததூதர் நின்றிருந்தார். சோழ மன்னர் முகத்தில் கோபம் சுடர் விட்டுக் கொண்டிருந்தது. நான் சென்றதும் ‘அநபாயா, கடாரத்துக்குப் பயணப்படு. அந்தக் கொள்ளைக்காரன் இளையபல்லவனைச் சிறைபிடித்து இங்கு அனுப்பு. அவனுக்குத் தக்க தண்டனை விதிக்காவிட்டால் சோழ நாட்டு நீதி தர்மம் எல்லாம் குலைந்துவிடும்’ என்று சீறினார் மன்னர்.

ஸ்ரி விஜயத் தூதரும் அவருடன் கலந்துகொண்டு ‘என் அரசாங்கம் சீக்கிரம் இந்தக் கொள்ளைக்காரனிடமிருந்து பாதுகாப்பை விரும்புகிறது. தவிர இவனை அழித்தால் சோழர் கௌரவமும் கடாரத்தில் நிலைக்கும்’ என்றார் உதடுகள் துடிக்க. அந்தச் சமயத்தில் கையில் வைத்திருந்த செப்பேட்டை என்னிடம் நீட்டிய சோழர் பெருமான், ஸ்ரி விஜய அரியணைப் போட்டியைப் பற்றி விசாரிக்கவும் கொள்ளைக்காரனைப் பிடிக்கவும் இதோ உனக்கு அதிகாரம் என்றும் கூறினார். அதை வாங்கிக்கொண்டு நான் அரண்மனையில் எனது அறைக்குத் திரும்பினேன். மறுநாள் முதற்கொண்டு என் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பலமாக நடந்தன. போர்க்கலங்கள் தயாராயின.

நானும் பயணப்படச் சித்தமானேன். என் மரக்கலத்துக்கும் மன்னரே என்னுடன் வந்தார். நான் என் அறைக்குள் நுழைந்ததும் உடன் நுழைந்த அவர், ‘அநபாயா! நீண்ட தூரம் பிரயாணம் செய்கிறாய். சோழ சாம்ராஜ்யக் கொடி தூரக்கிழக்கில் முன்போல் பறக்க ஆண்டவன் உனக்குத் துணை செய்யட்டும்’ என்றார். எனக்கு ஏதும் புரியவில்லை . ‘என்ன சொல்கிறீர்கள்?’ என்று வினவினேன் நான். ‘பட்டயம் விளக்கும் அநபாயா! பொருளை மட்டும் சரியாகப் புரிந்து கொள். ஸ்ரி விஜயத்தின் அசரபீடத்தில் தக்கவரை அமர்த்த வேண்டுமென்றால் பீடத்துக்குத் தக்கவரை என்றல்ல பொருள். நமக்குத் தக்கவரை என்று பொருள்.

சோழமண்டலத்துக்கு யார் பணிந்து நிற்பாரோ, தமிழர்கள் வாணிபத்துக்கு யாரால் தடையில்லையோ அவர்தான் நமக்குத் தக்கவர்’ என்றார் மன்னர். ‘அப்படியா?’ என்று வியந்தேன் நான். ‘அது மட்டுமல்ல, கொள்ளைக்காரனைச் சமயம் பார்த்துச் சிறை செய்யும் படிதான் உத்தரவிட்டிருக்கிறேன்’ என்றும் சொன்னார் மன்னர். அதன் பொருளையும் விளக்கினார். ‘எந்தச் சமயத்தில் அவனைச் சிறை செய்தால் தமிழர் பாதுகாப்புக்கு நஷ்டமில்லையோ அந்தச் சமயம் பார்த்துச் சிறை செய். அவனால் கூடியவரை நன்மை தமிழர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் நினைப்பில் வைத்துக் கொள்’ என்றார். எனக்கு வியப்புத் தாங்கவில்லை கருணாகரா! அவர் எண்ணம் எனக்குப் புரிந்தது.

இருப்பினும் கேட்டேன் நான், ‘கொள்ளைக்காரனை ஆதரிக்கிறீர்களே’ என்று. ‘ஜெய வர்மனையும் பீமனையும்விட இளையபல்லவன் பெரிய கொள்ளைக்காரனல்ல’ என்று கூறிவிட்டு மன்னர் கப்பலை விட்டுச் சென்றார். “
இத்துடன் பேச்சை நிறுத்திய அநபாயன், “இப்பொழுது வீரராஜேந்திரரைப் பற்றி என்ன நினைக்கிறாய் கருணாகரா” என்று வினவினான். அந்தச் சமயத்தில்தான் இளையபல்லவன் தன் நண்பனின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, “உங்களையும் வீரராஜேந்திரரையும் பெறத் தமிழகம் என்ன தவம் செய்தது?” என்று கூவினான்.

பிறகு அந்தச் செப்பேட்டையும், அநபாயனையும், வீர ராஜேந்திரரின் விளக்கத்தையும் எண்ணி எண்ணிப் பூரித்துப் பூரித்துப் பிரமித்து நீண்ட நேரம் ஏதும் பேசாமல் உட்கார்ந்து விட்டான் இளையபல்லவன். அவன் பேச முற்பட்டபோது அவன் குரல் உணர்ச்சியின் மிகுதியால் லேசாக நடுங்கியது. “இப்பொழுது எனக்கு உத்தரவு இடுங்கள் அநபாயரே!” என்று வினவினான் இளையபல்லவன்.

அநபாயன் இளையபல்லவனைப் பாராமல் தலையைக் குனிந்து கொண்டே சொன்னான்: “என்ன உத்தரவிடுவதென்று எனக்குப் புரியவில்லை கருணாகரா! ஆனால் ஒன்று நிச்சயம். உன்னைத் தற்சமயம் சிறையில் தள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை ” என்று .

“சமயம் பார்த்துத்தானே சிறைபிடிக்கச் சொல்லி இருக்கிறார் மன்னவர்?” என்று வினவினான் இளைய பல்லவன்.

“ஆம். “

“இப்பொழுது என்னைச் சிறை செய்வதில் தமிழர்களுக்கு நஷ்டம் இருக்கிறதே. “
“ஆம். அதுவும் எனக்குத் தெரியும். “

“அப்படியிருக்க ஏன் சிறைபிடிக்க முயலுகிறார்கள்?”

“கருணாகரா! பட்டயத்தின் பகுதிகள் இரண்டு. ஸ்ரி விஜய அரியணையில் குணவர்மனை அமர்த்துவது ஒன்று. உன்னைச் சிறை செய்வது இரண்டு. நான் புறப்பட்டபோது உன்னைத் தேடிவர நான் உத்தேசிக்கவில்லை. நீயாக இங்கு வந்து விட்டாய். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உன்னைச் சிறை செய்யாவிட்டால் என் நீதியைப் பற்றிச் சந்தேகம் ஏற்படும். ஜெயவர்மன் என் விசாரணைக்கு ஒப்புக்கொள்ள மாட்டான். என்னை எதிர்க்க முற்பட்டாலும் முற்படுவான். அப்பொழுது நானும் கொள்ளைக்காரனாக மாறுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று விளக்கினான் அநபாயன்.

அநபாயன் நிலை நன்றாகப் புரிந்தது இளைய பல்லவனுக்கு. கலிங்கத்துக்கும் ஸ்ரி விஜயத்துக்கும் நம்பிக்கை உண்டாக்குவதற்காகவாவது அநபாயர் தன்னைச் சிறைசெய்ய வேண்டும் என்று உணர்ந்தான் கருணாகர பல்லவன். அதை வாய்விட்டும் சொன்னான், “ஆம் ஆம், வேறு வழியில்லை உங்களுக்கு. என்னைச் சிறை செய்யத்தான் வேண்டும்” என்று.

குலோத்துங்கனுடைய குறுநகை சொட்டிய விழிகள் இளையபல்லவனை ஏறெடுத்து நோக்கின. “என் நிலைமை மிகவும் தர்மசங்கடமானது” என்றான் அவன் சற்று சிந்தனை முகத்தில் உலாவ.

“என்ன தர்மசங்கடம் இல்லை. ” சங்கடத்துடன் எழுந்தது இளையபல்லவன் கேள்வி.

“உன்னை இப்பொழுது சிறை செய்வதை வீரராஜேந்திரர் விரும்பமாட்டார். சிறை செய்வதால் இடைஞ்சல்களும் இருக்கின்றன. நீ சிக்கிவிட்டால் தமிழர்கள் பலத்தில் பாதி இந்தப் பிராந்தியத்தில் ஒதுங்கிவிடும். உன்னிடமுள்ள பயத்தினாலும் உன்னை நான் பிடிப்பேனென்ற எண்ணத்தி னாலும்தான் ஸ்ரி விஜய சாம்ராஜ்யாதிபதி நான் இங்கு வருவதை ஆட்சேபிக்கவில்லை. உன்னை நான் சிறை செய்து அடுத்த மரக்கலத்தில் சோழ நாடு அனுப்பிவிட்டால் என்னைச் சிறை செய்ய ஜெயவர்மன் தயங்கமாட்டான்.

என்னிடமோ ஆறு போர்க்கலங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு ஸ்ரி விஜயத்தின் பெரும் கடற்படையை முறியடிக்க முடியாது. உன்னைச் சிறையிட்டால் தமிழருக்கு நஷ்டம். சிறை செய்யாவிட்டால் ஜெயவர்மனுடன் பேச முடியாது. அதனால் குணவர்மனுக்கு நஷ்டம். நீ இந்தச் சமயத்தில் இங்கு வந்தது பெரும் உபத்திரவம் எனக்கு” என்று கூறிய குலோத்துங்கன், திடீரென எழுந்திருந்து அந்த அறைச் சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே சில விநாடிகள் நோக்கினான்.

பிறகு திரும்பி, “உன்னைச் சிறை செய்யத் தீர்மானித்து விட்டேன் கருணாகரா” என்று கூறினான். இதைச் சொன்ன குரலில் உறுதி இருந்தது. அவன் ஏதோ முடிவுக்கு வந்துவிட்டான் என்று புரிந்துகொண்ட இளைய பல்லவன் அந்த முடிவு என்ன என்பதை அறிய விரும்பி, “சிறை செய்ய உத்தரவிடுங்கள் அநபாயரே! குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படுகிறேன்” என்றான்.

“மோதிரக் கையால் குட்டுப்படுகிறாயா?” என்று வினவினான் குலோத்துங்கன்.
“நான் சிறைப்பட்டாலும் குலோத்துங்கன் கையால்தான் சிறைப்படுகிறேன்” என்று விளக்கினான் இளையபல்லவன்.

குலோத்துங்கன் முகத்தில் புன்முறுவல் அரும்பியது. “எது மோதிரக்கை என்பதுதான் கேள்வி கருணாகரா, யார் குட்டுப்படப் போகிறார்கள் என்பதும் கேள்வி” என்றான் அநபாயன்.

“உங்களதுதான் மோதிரக் கை, குட்டுப்படப் போவது நான்தான்” என்றான் இளையபல்லவன்.

“உன் கை ஏன் மோதிரக் கையாக இருக்கக் கூடாது? நான் ஏன் குட்டுப்படக் கூடாது?”

“அப்படி நினைப்பது ராஜ துரோகம். “

“அரசனே குட்டுப்பட விரும்பினால்?”

இந்தக் கேள்வி பெரும் வியப்பை அளித்தது இளைய பல்லவனுக்கு. அரசன் ஆள வேண்டியதே தவிர, ஆட்பட வேண்டியது இல்லை என்று உறுதியாக நம்பிய இளைய பல்லவன், “அந்த விருப்பத்தை யாரும் நிறைவேற்ற முடியாது” என்றான்.

“நிறைவேற்றும்படி உத்தரவிட்டால்?”

“உத்தரவை மீறத்தான் வேண்டியிருக்கும்?”
“நான் உத்தரவிட்டு இதுவரை மீறியவர்கள் யாரும் பிழைத்ததில்லை. “

“நான் உயிர் துறக்கச் சித்தமாயிருக்கிறேன். “

இதைக் கேட்டதும் அநபாயன் இளையபல்லவனை நெருங்கி வந்து அவன் இரு தோள்களின் மீதும் கையை வைத்து, “உன் நட்பும் ராஜ விசுவாசமும் புரிகிறது எனக்கு கருணாகரா! ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாம் வெளி உலகத்தை முன்னிட்டு, நாட்டு நன்மையை முன்னிட்டு, சிறிது மாறுபட்டு நடக்க வேண்டியிருக்கிறது. ஆகவே உன் கைதான் இப்பொழுது மோதிரக் கை. நினைவு வைத்துக் கொள்” என்றான்.

இளையபல்லவனுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாததால் அவன் பெரிதும் குழம்பினான். அப்படிக் குழம்பி நின்ற இளையபல்லவன் கண்களைக் கூர்ந்து நோக்கிய அநபாயன், “கருணாகரா! லட்சக்கணக்கான தமிழர்களுடைய நன்மை, சோழ சாம்ராஜ்யத்தின் செல்வாக்கு எல்லாம் இப்பொழுது நமதிருவர் கைகளிலும் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அதை நிறைவேற்றும் வழிகள் எல்லாமே உத்தமமானவை. நிறைவேற்றுபவரில் யார் பெரியவர் யார் சிறியவர் என்பதல்ல கேள்வி. முறைகளும் இரண்டாம் பட்சம். விளைவை முன்னிட்டுத்தான் நாம் சாதன உபாயங்களை எண்ணிப் பார்க்க வேண்டும்” என்றான்.

அதற்கு மேல் ஏதும் சொல்ல முடியாத இளையபல்லவன், “உத்தரவிடுங்கள் இளவரசே” என்றான்.
உத்தரவை உதிர்க்கத் தொடங்கிய குலோத்துங்கன் “கருணாகரா! உன்னைச் சிறை செய்து காவலில் வைத்து விடுகிறேன். ஆனால் காவலில் இருந்து தப்பிச் செல்வது உனக்கு ஒரு பிரமாதமில்லை என்பது எனக்குத் தெரியும்” என்றான்.

புரிகிறது என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் கருணாகரன். குலோத்துங்கனின் அடுத்த உத்தரவு அவனுக்கு அதிர்ச்சியை அளித்தது. “தப்பியதும் நீ கடல்மோகினிக்குச் செல்ல வேண்டாம்… ” என்று இழுத்தான் அநபாயன்.

“வேறெங்கு செல்ல வேண்டும்?” என்று வினவினான் இளையபல்லவன்.

“அக்ஷயமுனைக்குச் செல். ” திட்டமாக வந்தது பதில்.

இளையபல்லவன் அதிர்ச்சி அவன் குரலில் நன்றாகத் தெரிந்தது. “அக்ஷயமுனைக்கா? எதற்கு?” என்றான் இளைய பல்லவன்.

“காரணம் பிறகு உனக்கே தெரியும். ஸ்ரி விஜயத்தில் நடக்கும் செயல்களை உனக்கு அவ்வப்பொழுது அறிவிக் கிறேன்” என்றான்.

அக்ஷயமுனை என்றதும் ஏதேதோ யோசனைகள் இளைய பல்லவன் இதயத்தில் எழுந்து தாண்டவமாடவே, “வேண்டாம் அநபாயரே! வேறு எங்காவது செல்ல என்னைப் பணியுங்கள்” என்று கெஞ்சினான்.
அதற்கு இசையவில்லை அநபாயன். அந்த உத்தரவை வலியுறுத்திய மற்றொரு உத்தரவும் இட்டான். அந்த உத்தரவு இளையபல்லவனை அடியோடு அசர வைத்தது. “முடியாது. என்னால் முடியாது. நிச்சயமாக முடியாது” என்று குழம்பிக் கலங்கிக் கலவரத்துடன் கூவினான் இளையபல்லவன். அதுமட்டுமல்ல, மோதிரக் கையின் குட்டு தன் தலைமேல் பலமாக விழுந்துவிட்டதையும் உணர்ந்தான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch36 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch38 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here