Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch38 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch38 | Sandilyan | TamilNovel.in

92
0
Read Kadal Pura Part 3 Ch38 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch38 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch38 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 38 : குலோத்துங்கன் உத்தரவு.

Read Kadal Pura Part 3 Ch38 | Sandilyan | TamilNovel.in

அக்ஷயமுனைக்குச் செல்லும்படி இடப்பட்ட முதல் உத்தரவைக் கேட்டதுமே திகிலடைந்த இளையபல்லவன், இரண்டாவது உத்தரவைக் கேட்டதும் பெரும் குழப்பத்துக்கும் கலவரத்துக்கும் உள்ளாகி, “முடியாது. என்னால் முடியாது, நிச்சயமாக முடியாது” என்று கூவினானென்றால், அதற்கு அரசியல் காரணங்களைவிட சொந்தக் காரணங்கள் அதிக மென்பதை உணர்ந்திருந்த குலோத்துங்கன், மெள்ள இளநகை பூத்தான். தான் கூவியதும் குலோத்துங்கன் முகத்தில் பரவிய உணர்ச்சிகளையும், உணர்ச்சிகளைத் தொடர்ந்து இதழ்களில் விரிந்த இளநகையையும் கண்ட இளையபல்லவன், “இளவரசருக்கு இது விளையாட்டாயிருக்கலாம். ஆனால் என் வரையில் இது… ” என்று பேச முற்பட்டதும் அவன் சொற்களை இடையில் வெட்டிய அநபாயன், “பெரும் வினை போலிருக்கிறது” என்று வாசகத்தைப் பூர்த்தி செய்தான்.

குழப்பம் அப்பொழுதும் தணியாத பார்வையொன்றைக் குலோத்துங்கன் மீது செலுத்திய இளையபல்லவன், “சந்தேக மில்லை அநபாயரே! பெரும் வினைதான் இது” என்று பதில் கூறினான்.

ஏதும் விளங்காத பார்வையொன்று குலோத்துங்கன் கண்களில் விரிந்தது. “இதில் வினை என்ன இருக்கிறது? மனோபீஷ்டம் நிறைவேற்ற மார்க்கம் தானே இருக்கிறது!” என்று வினவினான் பொய் வியப்புத் தொனித்த குரலில்.

“மனோபீஷ்டமா!” என்ற இளையபல்லவன் குரலில் சங்கடம் பரிபூரணமாக ஒலித்தது.

“ஆமாம். உனக்கு அனுகூலத்தைத்தானே சொல்கிறேன்” என்று கேட்டான் குலோத்துங்கன், அப்பொழுதும் அந்தப் பழைய பொய் வியப்புத் தொனித்த குரலில்.

“நீங்கள் இடும் உத்தரவு எனக்கு அனுகூலமென்று நினைக் கிறீர்களா!” பழைய சங்கடம் அப்பொழுதுமிருந்தது இளைய பல்லவன் குரலில்.

“ஏன் அனுகூலமில்லாமலென்ன?” என்று மீண்டும் வினவினான் குலோத்துங்கன்.

“என்னை அக்ஷயமுனைக்குப் போகச் சொல்கிறீர்கள்” என்று இழுத்தான் இளையபல்லவன்.

“ஆமாம். “

“அங்கு செல்வதில் எனக்குச் சில கஷ்டங்கள் இருக்கின்றன. “

“அப்படியா!”

“ஆம். “

“சோழ நாட்டு நன்மைக்கு உகந்ததானால் கஷ்டங்களை நாம் அனுபவித்துத்தானே ஆகவேண்டும்?”
“அதில் சந்தேகமில்லை. அதை முன்னிட்டுத்தான் அங்கு போக ஒப்புக்கொள்கிறேன். ஆனால்… ”

“ஆனாலென்ன?”

இளையபல்லவன் பதில் சொல்லு முன்பு சற்றுக் குழம்பினான். “காஞ்சனாதேவியையும் அழைத்துப் போகச் சொல்கிறீர்களே?” என்று கூறி மென்று விழுங்கினான்.

குலோத்துங்கன் குழம்பி நின்ற கருணாகர பல்லவனை நோக்கி மீண்டும் குறுநகையொன்றை உதிர்த்தான். “கரும்பு தின்னக் கசப்பாக இருக்கிறதா கருணாகரா?” என்று வினவினான் குரலில் சிரிப்பொலி லேசாக விளையாட.

“உம்! உம்! கரும்புதான்” என்று கருணாகர பல்லவன் உறுமினான்.

“அதற்குள் கசந்து விட்டதா உனக்கு?” என்று கேட்டு மெல்ல நகைத்தான் அநபாயன்.

“எது?” இளையபல்லவனின் குரலில் கோபம் துளிர்த்தது.

“கரும்பு. “

“ஆம் ஆம். கரும்புதான்!”

“ஏன் காஞ்சனாதேவி அழகாயில்லையா?”

“இல்லையென்று யார் சொன்னது?”

“அப்படியானால் அவளை அழைத்துச் செல்ல ஏன் ஆட்சேபணை உனக்கு?”

“அழைத்துச் செல்லும்படி சொல்லவில்லையே நீங்கள்?”

“பின் என்ன சொன்னேன்?”

“அபகரித்துச் செல்லும்படி அல்லவா சொல்கிறீர்கள்?”

“அதில் உனக்கென்ன கஷ்டம்?”

“உலகம் என்ன நினைக்கும் என்னைப்பற்றி?”

“சரியாகத்தான் நினைக்கும். “

“நீங்கள் சொல்வது விளங்கவில்லை. “

“விளங்காததற்கு என்ன இருக்கிறது இதில்? கொள்ளைக்காரன் தன் தொழிலைச் செய்துவிட்டானென்று சொல்லும்” என்று கூறி விஷமமாக நகைத்த அநபாயன் இளைய பல்லவனை அணுகி, “அது மட்டுமல்ல கருணாகரா! காஞ்சனாதேவிக்கும் இதில் ஆட்சேபணை இருக்காதென்று நினைக்கிறேன்” என்று ரகசியமாகக் கூறினான்.

குலோத்துங்கன் முகத்திலும் பேச்சிலுமிருந்த விஷமத்தைக் கவனித்த இளையபல்லவன் எரிச்சல் உச்சஸ்தாயிக்குப் போகவே, “அநபாயரே! சோழ நாட்டு இளவலாகிய நீங்கள் பேச வேண்டிய பேச்சல்ல இது” என்று கோபத்துடன் கூறவும் செய்தான்.

“சோழ நாட்டு இளவல் பேச வேண்டிய பேச்சுத்தான் இது” என்று மீண்டும் கூறி நகைத்தான் அநபாயன்.

“அப்படியா!”

“ஆம். சோழ நாட்டு இளவல் உண்மையைத் தவிர வேறு எதைப் பேச முடியும்?”

“எது உண்மை அநபாயரே?”

“நீ கடத்திக்கொண்டு போவதைவிட காஞ்சனாதேவிக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவம் உலகத்தில் ஏதுமில்லை யென்பது” என்று சுட்டிக்காட்டினான் அநபாயன்.

“நீங்கள் கடாரத்து இளவரசியைத் தவறாக எடை போட்டிருக்கிறீர்கள்” என்றான் இளையபல்லவன் கோபம் குரலை விட்டு அகலாமலே.

அநபாயன் விழிகளில் சிரிப்பு உதிர்ந்தது. “சரியாகத்தான் எடை போட்டிருக்கிறேன் கருணாகரா! மிகச் சரியாக எடை போட்டிருக்கிறேன். உன் நண்பனுக்கு அத்தனை புத்திக் கூர்மையில்லை என்று நினைக்காதே. காஞ்சனாதேவியையும் உன்னையும் பாலூர்ப் பெருந்துறையில் பார்த்திருக்கிறேன். உன்னைக் கண்டபோதெல்லாம் அவள் மெழுகென உருகியதைக் கவனித்துமிருக்கிறேன். அனந்தவர்மன் நீதி மண்டபத்தில் நீயும் சேந்தனும் விசாரிக்கப்பட்டபோது அங்கிருந்து உங்களைத் தப்புவிக்க நான் திட்டமிட்டேன். நினைப்பு இருக்கிறதா உனக்கு….?” என்று வினவினான் இளநகை உதடுகளில் அரும்ப.

“இருக்கிறது. ” வறண்ட குரலில் வந்தது இளையபல்லவன் பதில்.

“திட்டமிட்ட சமயத்தில் என்னுடைய நீதிமண்டபத்துக்கு யார் வரமுடியும் என்று கேட்டேன். நான் வருகிறேன் என்று எழுந்தாள் காஞ்சனாதேவி. அப்படி எழுந்தபோது அவள் துடிப்பைப் பார்த்தேன், நீங்கள் வேண்டாம் அங்கு அபாயம் மிகுதி என்று தடுக்க முயன்றேன். உயிர் போவதாயிருந்தாலும் வரத்தான் வருவேன் என்றாள் கடாரத்து இளவரசி. அவளை அழைத்து வந்து உன்னை மீட்டேன். பிறகு கோதாவரிக் கரைக் குடிகளில் நிகழ்ந்தனவற்றை அமீரிடமிருந்து தெரிந்து கொண்டேன் விவரமாக. அந்த நிகழ்ச்சியை நான் விவரிப்பது பண்பாட்டுக்கு விரோதம்… உம்… ” என்று நிறுத்தினான் அநபாயன்.

இளையபல்லவன் பதிலேதும் சொல்லாமல் சிலையென நின்றிருந்தான். அநபாயனே மேற்கொண்டு சொன்னான், “பிறகு காஞ்சனாதேவியைத் தஞ்சை அரண்மனையிலும் பார்த்தேன். உன் பெயர் அரசர் முன்பு சொல்லப்பட்ட சமயங்களிலெல்லாம் அவள் கண்களில் புத்தொளி சுடர் விட்டது. முகத்தில் உன்னைப்பற்றித் தெரிந்து கொள்ள ஆவல் மிதமிஞ்சி இருந்தது. கருணாகரா! இன்னும் நான் என்ன சொல்ல?” என்று.

இளையபல்லவன் மௌனமே சாதித்தான். திடீரென குலோத்துங்கன் பேச்சை மாற்ற, “ஒன்று கேட்க மறந்து விட்டேன் உன்னை . கடல் மோகினியைக் கலிங்கத் தலைவன் ஒருவன் கையிலிருந்து மீட்டதாகக் கூறினாயே, அவன் இப்போது கடல்மோகினியில் தமிழர் கையிலிருக்கிறானா?” என்று வினவினான்.

“இல்லை . ” திட்டமாக வந்தது இளையபல்லவன் பதில்.

“பின் எங்கே அவன்?”

“அவனைக் கொன்றுவிட்டேன். “

“ஏன் ஏதாவது கலகம் செய்தானா?”

“கலகம் செய்யவில்லை … ”

“உன்மீது கையை வைக்க முயன்றானா?” என்று அநபாயன் சிரித்தான்.

“என்ன சிரிக்கிறீர்கள்?” கோபத்துடன் எழுந்தது இளைய பல்லவன் கேள்வி.

“இல்லை இல்லை. அவன் காஞ்சனாதேவி மீது..” என்று துவங்கிய குலோத்துங்கனை, “நில்லுங்கள்” என்ற இளைய பல்லவன் சுடுகுரல் தடுத்தது.

அதைக்கேட்ட குலோத்துங்கன் சிறிது வாய்விட்டே நகைத்தான். பிறகு இளையபல்லவனை நோக்கி, “காஞ்சனா தேவிக்காக நீ அவனைக் கொன்றதாக இங்கு யாரும் நம்ப வில்லை. நீ ஏதோ தந்திரம் செய்து அவனைக் கொன்று கடல்மோகினியைக் கைப்பற்றவே அந்த நாடகம் ஆடியதாக எல்லோரும் நம்புகிறார்கள். எல்லோரும் வேறு, உன் நண்பன் வேறல்லவா? அந்தக் கதையைக் கேட்டதும் நான் புரிந்து கொண்டேன், காஞ்சனாதேவிக்காக அந்தக் கொலை நடந் திருக்கிறதென்று. ஆகவே என் திட்டத்தில் உனக்குக் கஷ்ட மில்லை.

காஞ்சனாதேவிக்கு நீ சைகை செய்தால் போதும். உன்னுடன் ஓடத் தயாராயிருக்கிறாள். பெண்களின் குணமே அப்படி. அவர்கள் என்ன காரணத்தாலோ நல்லவர்களை விரும்புவதில்லை. கொள்ளைக்காரர்கள், காமுகர்கள், இப்படிப்பட்ட அயோக்கியர்களையே விரும்புகிறார்கள்” என்று கூறித் தனது நகைச்சுவையைக் காட்டினான் சோழ நாட்டு இளவல்.

அந்த நகைச்சுவை வேப்பங்காயாயிருந்தது இளைய பல்லவனுக்கு. “என்னைப்பற்றி இன்னும் என்ன அவதூறு கூறப்போகிறீர்கள் இளவரசே?” என்று வினவினான் இளைய பல்லவன் சற்றே கோபத்துடன்.

“இதில் அவதூறு ஏதுமில்லை. நான் ஏற்கெனவே சொன்னபடி உண்மைதான் இது. தவிர, உனக்கு உதவத்தானே நான் இத்தனையும் செய்கிறேன்?” என்றான் பழையபடி மெல்ல நகைத்து.

“இது உதவியா?”

“உதவியில்லாமலென்ன! நீ காஞ்சனாதேவியை விரும்பு கிறாய். அவளும் உன்னை விரும்புகிறாள். நீங்கள் தனித்துச் செல்ல உதவி செய்கிறேன். நண்பனிடமிருந்து இதைவிட என்ன எதிர்பார்க்கிறாய்?”
“என்னை உங்களுக்குத் தெரியாதா அநபாயரே!” “நன்றாகத் தெரியும். “

“நீதிக்கும் தர்மத்துக்கும் புறம்பான எதையும் நான் செய்ய இஷ்டப்படவில்லை. “

“கொள்ளைக்காரன் நீதியையும் தர்மத்தையும் பற்றிப் பேசினால் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படியே இருக்கட்டும். நீதிக்குப் புறம்பாகவோ தர்மத்துக்குப் புறம்பாகவோ நான் எதையும் உன்னைச் செய்யச் சொல்ல வில்லையே!”

“காஞ்சனாதேவியை அபகரித்துச் செல்வது எதில் சேர்ந்தது? நீதியிலா, தர்மத்திலா?”

“இரண்டிலும் சேர்ந்தது. க்ஷத்திரியர்களுக்கு ராக்ஷஸ விவாகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நீ காஞ்சனாதேவியைத் தூக்கிச் சென்றால் அது க்ஷத்திரிய தர்மத்துக்குப் புறம்பான தல்ல. நீதிக்கும் அப்பாற்பட்டதல்ல. “

இளையபல்லவனுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியாததால் சில விநாடிகள் திணறினான். பிறகு மெள்ளத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “காஞ்சனாதேவியை அபகரித்துச் செல்வதானால் அக்ஷயமுனைக்கு ஏன் செல்ல வேண்டும்? திரும்ப மாநக்காவரத்துக்கே சென்றுவிட்டா லென்ன?” என்று வினவினான்.

குலோத்துங்கன் இளையபல்லவனைக் கூர்ந்து நோக்கி விட்டுக் கூறினான், “நமது திட்டத்துக்கு அது உகந்ததல்ல” என்று.
“என்னை நீங்கள் சிறையிட்டு நான் அதிலிருந்து தப்பி இளவரசியையும் கடத்திச் சென்றால் என்னைப் பிடிப்பவருக்கு வெகுமதி தருவதாகப் பறைசாற்ற எண்ணுகிறீர்கள்… ” என்று கூறி நிதானித்தான் இளையபல்லவன்.

“ஆம்” என்றான் குலோத்துங்கன்.

“அப்பொழுது ஸ்ரி விஜய மன்னர் பிரகடனத்துக்கும் உங்கள் பிரகடனத்துக்கும் வித்தியாசமிருக்காது.

“ஆம். “

“நீங்கள் இதை ஒரு பொது அஸ்திவாரமாக வைத்துக் கொண்டு ஸ்ரி விஜய மன்னருடன் அரியணைப் போட்டியைப் பற்றிப் பேச முடியும். “

“ஆம். “

“ஆ க நான் எங்கு சென்றாலென்ன உங்களுக்கு?” இந்தக் கேள்வியைச் சற்று வேகத்துடன் கேட்டான் இளையபல்லவன்.

அநபாயன் சற்றுப் பின்வாங்கிச் சென்று தனது மஞ்சத்தில் அமர்ந்தான். பிறகு சில விநாடிகள் இளைய பல்லவன் முகத்தை ஆராய்ந்துவிட்டுக் கேட்டான், “அக்ஷய முனைக்குப் போவதில் உனக்கென்ன கஷ்டம்?” என்று.

“அதனாலென்ன லாபம் உங்கள் திட்டத்துக்கு?” என்று வினவினான் இளையபல்லவன்.
“அக்ஷயமுனை இன்றும் கொள்ளைக்காரர்களுக்குப் புகலிடமாக இருக்கிறது. நீ சூளூக்களை முறியடித்து விட்டாலும் அவர்கள் பலம் முழுவதும் போகவில்லை. இன்னும் அவர்கள் நடமாட்டம் அக்ஷயமுனையில் இருக்கிறது. ஆகவே கொள்ளைக்காரர்கள் இருப்பிடத்துக்குக் கொள்ளைக்காரன் போவதுதான் பொதுமக்கள் நம்பக் கூடியது. “

“கொள்ளைக்காரன் ஏற்கெனவே பிடித்துள்ள இடத்துக்குப் போனால் நம்பமாட்டார்களாக்கும்?”

“நம்புவார்கள். ஆனால் கடல் மோகினி இந்த ஜலசந்தி யிலிருந்து அதிக தூரம் இருக்கிறது. அக்ஷயமுனை அக்கரை யில் இருக்கிறது. நான் இக்கரையிலும் நீ அக்கரையிலும் இருப்பது இந்த ஸ்ரி விஜய கடல் பகுதியைக் காப்பதற்கு உதவும். ஒருவேளை போர் ஏற்பட்டாலும் இருபுறத்திலும் ஸ்ரி விஜயம் நெருக்கப்படும்” என்று சுட்டிக் காட்டினான் அநபாயன்.

அநபாயன் திட்டத்தைக் கேட்ட இளையபல்லவன் பிரமித்தான். அந்தப் பகுதிக்குப் புதிதாக வந்திருந்த அநபாயன் அதைப்பற்றி எத்தனை விவரங்களை அறிந்திருந்தானென்பதை எண்ணி வியந்தான். சென்ற ஒன்றே முக்கால் ஆண்டுகளில் இங்கு நடந்துள்ள சகல விவரங்களையும் அநபாயன் அறிந்திருக்கிறானென்பதைப் புரிந்துகொண்டதால் சோழ சாம்ராஜ்ய அரியணையில் உட்காரக் குலோத்துங்கன் எத்தனைத் தகுதியைப் பெற்றிருக்கிறான் என்பதையும் உணர்ந்து அதிக ஆச்சரியத்துக்குள்ளானான்.

ஆனால் அவனுக்குத் தன் வாழ்வின் ஒரு முக்கிய விஷயம் மட்டும் தெரியவில்லை என்பதை அறிந்ததால் அதை எப்படிச் சொல்வதெனத் தெரியாமல் விழித்தான். அந்தச் சமயத்தில் தங்கு தடையின்றி எழுந்தது குலோத்துங்கன் குரல் பலமாக, “கருணாகரா, உன்னை இப்பொழுது சிறை செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நண்பன் என்பதற்காக உன்னை நான் மன்னிக்க முடியாது. ஆகவே புறப்படு சேவைக்கு” என்ற குலோத்துங்கன் வெகு வேகமாக நடந்து சென்று அறைக் கதவைத் திறந்து, “யாரங்கே?” என்று கூவினான். அவன் குரலைக் கேட்டதும் விரைந்த இரு காவலாளிகளைப் பார்த்து, “இங்கு அறைக்குள் உள்ள கொள்ளைக்காரனைக் காவலில் வையுங்கள்.

என் அனுமதியின்றி அவனையாரும் பார்க்கக் கூடாதென்றும் திட்டம் செய்யுங்கள். இந்த உத்தரவு குணவர்மருக்குத் தெரியப்படுத்தப்படட்டும்” என்று கூறி விடுவிடுவென்று உள்ளே வந்து, “செல்” என்று இளைய பல்லவனுக்கு உத்தரவிட்டான். கதவை நோக்கி வெகு வேகமாகச் சென்ற இளையபல்லவனைக் குறுக்கே நின்று ஒரு விநாடி தடுத்த இளவரசன் கையைப் பிடித்து மரியாதை யாக, மெள்ள நட” என்று இரைந்து பிறகு சட்டென்று அவனை நெருங்கிக் காதுக்கருகில் ஏதோ சொல்லிவிட்டு விலகினான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch37 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch39 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here