Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch39 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch39 | Sandilyan | TamilNovel.in

102
0
Read Kadal Pura Part 3 Ch39 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch39 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch39 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 39 : வெற்றி யாருக்கு?

Read Kadal Pura Part 3 Ch39 | Sandilyan | TamilNovel.in

இளையபல்லவனைச் சிறை செய்யக் காவலர் நெருங்கு முன்பே அவன் காதுக்கருகே குலோத்துங்க தேவன் சொன்ன ரகசிய வார்த்தைகளைக் கேட்டதும் இளையபல்லவன் பிரமிப்புக்கும் கலவரத்துக்கும் உள்ளாகவும் காரணமிருந்தது. அவற்றைச் சொன்ன அநபாயன் பெரிதாக நகைத்து மஞ்சத்தில் தொப்பென்று விழுந்ததற்கும் காரணமிருந்தது. அப்படித் தொப்பென்று விழுந்த அநபாயன், இளையபல்லவன் சென்ற நீண்ட நேரத்துக்குப் பின்பும் மீண்டும் நகைத்துக்கொண்டே இருந்தான்.

ஆனால் காவலர்களுக்கிடையே சென்ற இளைய பல்லவன் அப்படி நகைக்கும் நிலையில் அடியோடு இல்லை. அவன் சித்தப் பிரமிப்பு விவரிக்க இயலாத அளவு விரிந்து அவனைக் கனவில் சிக்கி விட்டவன் போல் அடித்திருந்தது. ஏதோ கனவில் நடப்பவன்போல் காவலருக்கிடையில் நடந்து சென்றவன் அரண்மனைக் காவல் கூடமொன்றில் தனியே விடப்பட்ட பின்பும் சுமார் இரண்டு மூன்று நாழிகைகள் மட்டும் கனவிலிருப்பவன் போலவே நாற்புறமும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அக்ஷயமுனைக்குச் சென்றால் உனக்கென்ன நஷ்டம்? அங்கு மஞ்சளழகியுமிருக்கிறாள். ஒரு பெண்ணுக்கு இரண்டு பெண்களாயிற்று. போய் வா. உனக்கு யோக காலம் இப்பொழுது” என்ற வார்த்தைகளைத்தான் அநபாயன் இளையபல்லவன் காதில் ஓதி இருந்தான். தன் வாழ்வின் அந்தப் பகுதியை அநபாயன் அறிந்திருக்க வழி யில்லை என நினைத்திருந்த இளையபல்லவனுக்கு அந்த வார்த்தைகளைக் கேட்டதும் பேரதிர்ச்சியே ஏற்பட்டது. அதிர்ச்சி மட்டுமல்ல, வியப்பும், வியப்பினால் ஏற்பட்ட பிரமிப்பும், அங்கு செல்வதனால் ஏற்படக்கூடிய விளைவையும் எண்ணிப் பார்த்ததால் உண்டான பயமுங்கூட சோழர் படைத்தலைவன் இதயத்தில் வலம் வந்தன.

“மஞ்சளழகியைப் பற்றி யார் சொல்லி இருப்பார்கள் இளவரசருக்கு?” என்று பலமுறை திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்தும் விடை கிடைக்காத இளையபல்லவனுக்கு அத்தனை பிரமிப்பிலும் இணையிலாக் கௌரவ புத்தியும் ஏற்பட்டது அநபாயனிடத்திலே. ‘என்னைப் பிரிந்தது முதல் இளவரசர் என்னைப் பற்றியே நினைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் என் வாழ்வைப் பற்றிய ஒவ்வொரு நுணுக்கத்தையும் விசாரித்து அறிந்திருப்பாரா’ என்று நினைத்துப் பார்த்து இளவரசனுடைய அந்தரங்க நட்பைப் பெற்றது பற்றி அத்தனை பிரமிப்பிலும் ஓரளவு ஆனந்தமும் அடைந்தான் இளையபல்லவன்.

அந்த ஆனந்தம் அதிக நேரம் நிலைக்கவில்லை இளைய பல்லவன் இதயத்திலே. மஞ்சளழகியை மீண்டும் நெருங்குவ தால் தனக்குண்டாகக்கூடிய மனக்கிளர்ச்சியை அவன் அறிந்தே இருந்தான். அவளை அந்தக் காவற் கூடத்தில் நினைத்த சமயத்தில் கூட அவள் எழில் முகமும், மயக்கும் விழிகளும், மஞ்சள் நிறத் தேகமும் அவன் கண்களுக்கெதிரே விரிந்தன. அந்தத் தோற்றத்திலிருந்து சிந்தையை விடுவித்துக் கொள்ள, காவற் கூடத்தின் சாளரத்தை நெருங்கி வெளியே பார்த்தவன் மென்மேலும் பிரமிப்பே அடைந்தான். அரண்மனையின் அந்தக் காவற்கூடம் அரண்மனையின் கோடியில் ஒருபுறமாக அமைக்கப்பட்டிருந்ததால் அதை அடுத்திருந்தது அரண்மனை நந்தவனம்.

அந்த நந்தவனத்துக்குக் குறுக்கே சாளரத்தின் பார்வையில் ஓடியது ஒரு குறுகிய பாதை. அந்தப் பாதையின் கோடியைக் கடலலைகள் தொட்டுக் கொண்டிருந்தன. பாதையின் இரு புறங்களிலும் நந்தவனத்தின் மலர்மரங்களின் கிளைகள் தரையைத் தொட்டுக்கொண்டு இருந்தன. சில கிளைகள் பூங்கொத்துக்களைக் காற்றில் அசைத்துத் தரையைப் பெருக்கியும் கொண்டிருந்தன. அந்தக் காட்சியைக் கண்ட இளையபல்லவன் அசந்து போனான்.

கடாரத்தின் அந்த அரண் மனையை நிர்மாணித்தவன் யாராயிருந்தாலும் அவன் பெரிய ரசிகன் என்பதைத் தீர்மானித்துக்கொண்ட இளையபல்லவன், தான் பல தெருக்களைத் தாண்டி அரண்மனைக்கு வந்தாலும் கடாரத்தின் கடற்கரை லேசாக வளைந்திருப்பதால்தான் அதன் ஒரு கோடியில் அரண்மனையை அத்தனை சிறப்பாக அமைக்க முடிந்தது என்றும் முடிவு செய்தான். அரண்மனைக் காவற் கூடத்திலிருந்து கடலுக்கு அழைத்துச் சென்ற அந்தக் குறுகிய பாதை எத்தனை அழகாயிருந்தது? தாழ்ந்த மலர்க் கிளைகளும் பாதையின் கோடியில் மோதிய கடலலைகளும் என்ன அற்புதக் காட்சியை அளித்தன.

அதுவும் அப்பொழுது காலை நேரம். கடலைக் கதிரவன் கிரணங்கள் தொட்டுவிட்ட வேளை. அந்தக் கிரணங்கள்தான் என்ன அழகை அந்த அலைகளுக்கு அளித்திருந்தது! இவற்றையெல்லாம் கண்டு உள்ளம் பிரமித்துக் கிடந்த அந்த நேரத்திலும் வியக்கவே செய்தான் இளையபல்லவன். அந்த வியப்பு உணர்ச்சியோடு நிற்கவில்லை சிந்தனையின் ஊர்வலம். அந்தக் குறுகிய பாதையின் கோடியில் நடந்து கொண்டிருந்த ஒரு பெண்ணையும் அவன் கண்கள் கண்டன. கண்கள் தாம் கண்டனவா அல்லது சித்தத்தின் பிரமையா அது? அவனுக்கே விளங்கவில்லை .

ஆனால் அந்த அலைகள் காலில் தொட நின்றிருந்தாள் மஞ்சளழகி. பின்புறத்தில்தான் அந்த உருவத்தை அவனால் பார்க்க முடிந்தது. பக்கம் எதுவாயிருந்தால்தானென்ன, அடையாளம் கண்டுபிடிக்கக் கண்களுக்குத்தான் சக்தி யில்லையா? அல்லது கருத்துக்குத்தான் பலமில்லையா? இரண்டும் இருந்தது. அது மஞ்சளழகிதான். சந்தேகமில்லை. அவள் நின்ற தோரணை, வெய்யிலில் பொன்னைப் போல் பளபளத்த மஞ்சள் நிறம், உருண்ட அந்தக் கால்களின் அழகு, அவள் காலில் கட்டியிருந்த அந்த நடனச் சலங்கை எல்லாமே அவளை மஞ்சளழகியென நிரூபித்ததால் அவன் அக்ஷய முனைக்கே சென்றுவிட்டான். அக்ஷயமுனையின் அழகிய மணற்பரப்பிலே முழுமதி எழுந்தான்.

நடன மண்டபத்திலே தேவதையெனத் தோன்றினாள் மஞ்சளழகி. அவள் காலைத் தட்டித் தட்டி ஆடினாள், கொள்ளையரும் ஆடினர்! மீண்டும் அந்தப் பழைய நடன நிகழ்ச்சி அவன் மனக்கண் முன் எழுந்தது. அவ்ன் எத்தனை நாழிகைகள் அப்படி நின்றிருந்தானோ அவனுக்கே தெரியாது. மஞ்சளழகியின் கால்களில் அலைகள் தாக்குவதையே அவன் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. அவள், அன்று புனலாடித் தன் பக்கத்தில் கடற்கரையில் அமர்ந்து சொன்ன சொற்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் காதுகளில் ஒலித்தன. “நீங்களும் இந்த அலைகளைப் போலத்தான். என்னைத் தொட்டு விட்டுச் சென்று விடுவீர்கள்” என்ற சொற்களை மஞ்சளழகி மீண்டும் சொல்வது போன்ற பிரமை ஏற்பட்டது அவனுக்கு.

அந்தக் காட்சிகள் மனத்திலெழ எழ அவனுக்குக் கடாரத்தின் சிந்தனையும் காஞ்சனாதேவியின் நினைப்பும் அறவே அகன்றுவிட்டன. ‘ஒரு பெரும் சாம்ராஜ்யாதிபதியின் மகளாகிய மஞ்சளழகி எத்தனை அநாதை!’ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டான் ஒரு விநாடி. அவன் இதயத்தில் பரிதாபமும் அழகும் நிரம்பிய மஞ்சளழகியின் முகம் எழுந்தது. ஆகவே கண்கள் அந்தப் பாதைக் கோடியில் நின்ற அவள் உருவத்திலேயே திளைத்தன. “இவள் எப்படி இங்கு வந்தாள்?” என்று திரும்பத் திரும்பப் பல விநாடிகள் யோசித்தும் கருணாகர பல்லவனுக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை. பாதைக் கோடியில் நின்ற அந்தப் பாவையும் லேசில் திரும்பித் தன் மலர்முகத்தைக் காட்டி அவனை மகிழ்விப்பதாயில்லை.

அவள் நின்ற இடத்திலிருந்து அலை ஓரமே பக்கவாட்டில் நகர்ந்தாள். பத்தடிகள் அவள் நடந்ததால் பாதையின் பக்க மரங்கள் அவளைத் தன் கண்களிலிருந்து மறைத்துவிடும் என்பதை எண்ணிய இளையபல்லவன், “இரு மஞ்சளழகி! இரு!” என்று கூவினான். ஆனால் அவன் கூச்சல் அந்தப் பாவையின் காதுகளில் விழவில்லை. மெள்ள அவள் நடந்து மரங்களுக்கிடையே மறைந்துவிட்டாள்.

மஞ்சளழகியின் எழிலுருவம் மறைந்ததும் சாளரத்தை விட்டுத் திரும்பிய இளையபல்லவன் அந்த அறையிலிருந்த ஒரு மஞ்சத்தில் படுத்துக்கொண்டு கண்களை மூட எண்ணினான். ஆனால் கண்களை மூடுவதும் பிரம்மப் ‘பிரயத்தனமாய் இருந்தது. அவன் வாழ்க்கையில் மறக்க விரும்பிய காட்சிகளெல்லாம் அவன் புத்தியில் வலம் வரத் தொடங்கின. சிக்கலான வாழ்க்கையுள்ளவனுக்கு நிம்மதி இல்லை என்ற வேதாந்தத்தின் உட்கருத்து அந்தச் சமயத்தில் அவனுக்கு நன்றாக விளங்கியது.

“என்ன வாழ்க்கை இது! சே! சே! சிறிதும் நிம்மதி இல்லை” என்று தனக்குள்ளேயே அலுத்துக் கொண்டான். பிறகு மீண்டும் எழுந்திருந்து அறையில் சில விநாடிகள் நடமாடினான். பிறகு இரு கைகளையும் பலமாகத் தட்டி, “யாரங்கே?” என்று விளித்தான். அந்த அழைப்பின் விளைவாகக் கதவைத் திறந்து கொண்டு வந்த காவலனை நோக்கி, “நான் சோழ நாட்டு இளவரசரைக் காணவேண்டும் உடனடியாக” என்று கூறினான்.

காவலன் பதில் சட்டென்று கிடைத்தது. “இளவரசர் இப்பொழுது யாரையும் பார்க்கப் பிரியப்படவில்லை” என்றான் திட்டமாக.

“ஏன்?” கோபத்துடன் கேட்டான் இளையபல்லவன்.

“மந்திராலோசனையிலிருக்கிறார்?” என்று வந்தது பதில்.

“யாருடன் மந்திராலோசனையிலிருக்கிறார்?”

“படைத் தலைவர்களுடன். “

சிறிது நேரம் யோசித்தான் இளையபல்லவன். “அப்படி யானால் குணவர்மரை நான் பார்க்க வேண்டும்” என்றான் அடுத்தபடியாக. “அதுவும் முடியாது. ” “ஏன்?” “அவரும் மந்திராலோசனையிலிருக்கிறார். “

“என்ன எல்லோருக்கும் மந்திராலோசனை இப்பொழுது?” என்று சீறினான் படைத்தலைவன்.

“அதைக் கேட்க எனக்கு அதிகாரமில்லை. தங்களுக்கும் அதிகாரமில்லையென நினைக்கிறேன்” என்ற காவலன் பதில் பணிவாகவே வந்தது. ஆனால் அவன் குரலில் சிறிது ஏளனமும் கலந்திருந்தது.
இளையபல்லவன் கோபம் மெள்ள மெள்ள ஏறிக் கொண்டிருந்தது. “சரி அப்படியானால் காஞ்சனாதேவியிடம் என் வரவை அறிவித்து வா” என்றான் ஓரளவு கோபத்தைத் தணித்துக்கொண்டு.

“யாரைச் சொல்கிறீர்கள்? இளவரசியாரையா?” என்ற காவலன் பயத்துடன் அந்தக் கேள்வியைத் தொடுத்தான்.

“ஆம் இளவரசியாரைத்தான்” என்றான் இளைய பல்லவன்.

காவலன் முகத்தில் வியப்பு மறைந்தது. “ஒன்று உங்களுக்கு சித்தப் பிரமையாயிருக்க வேண்டும். அல்லது எனக்குச் சித்தப் பிரமையாயிருக்க வேண்டும்” என்றான் காவலன்.

இளையபல்லவன் கண்கள் காவலன் முகத்தை நன்றாக ஊடுருவி ஓரளவு நிதானத்துக்கும் வந்துவிட்ட இளைய பல்லவன் கேட்டான், “இதில் சித்தப் பிரமைக்கு என்ன இருக்கிறது!” என்று.

“கடாரத்தின் இளவரசியாரை நான் எப்படி அணுகுவது செய்தி சொல்ல?” என்று வினவினான் காவலன்.

“ஏன் அணுகமுடியாது?”

“முதலில் அந்தப்புரம் எங்கிருக்கிறதென்று நான் கேட்டு அறிய வேண்டும். பிறகு தேவியாரைப் பார்க்க வேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமா?”
இதைக்கேட்ட பின்புதான் மெள்ள மெள்ள இளைய பல்லவன் இதயத்தில் சந்தேகம் சிறிது உதயமாயிற்று. அந்தச் சந்தேகத்தின் விளைவாகக் கேட்டான், “நீ இந்த ஊர்தானே?” என்று.

“இல்லை. ” மிகத் தெளிவாக வந்தது காவலன் பதில்.

“அப்படியானால் நீ…?” என்று மீண்டும் துவங்கிய கேள்வியை இளையபல்லவன் முடிக்கும் முன்னதாகவே இடைமறித்த காவலன், “நான் சோழ நாட்டவன்” என்றான்.

உண்மை நன்றாகப் பளிச்சிட்டது, இளையபல்லவன் புத்தியில். ‘அநபாயர் வேண்டுமென்றே தனது காவல னொருவனை என்னைக் காக்கப் பணித்திருக்கிறார். கடாரத்தின் பணிமக்களாயிருந்தால் இளையபல்லவன் சொற்படி கேட்பார்களென்பது அநபாயருக்கா தெரியாது! நல்லது. உமது சாமர்த்தியத்தை என்னிடமே காட்டுகிறீர் இளவரசே! இருக்கட்டும் இருக்கட்டும்!’ என்று உள்ளூரச் சொல்லிக்கொண்ட இளையபல்லவன், காவலனை நோக்கி, “நான் யாரென்பது உனக்குத் தெரியுமா!” என்று வினவினான்.

“தங்கள் பெயர் இந்தப் பிராந்தியங்களில் பிரசித்தமென்று நான்கு நாட்களுக்கு முன்பே தெரியும்” என்றான் காவலன்.

“நான்கு நாட்களுக்கு முன்பா!” என்று வியப்புடன் வினவினான் இளையபல்லவன்.

“ஆம். “

“அப்படியானால் நீங்கள் வந்து நான்கு நாட்கள்தான் ஆகின்றனவா?”

“ஆம். “

“இங்கு மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்னைப்
பற்றி?”

“தமிழர்களைக் காக்கும் வீரர் என்று சொல்கிறார்கள். “

“நீ அதை நம்புகிறாயா?”

“நம்பாதிருக்க எனக்குக் காரணமில்லை. உயிரைப் பணயம் வைத்துப் பாலூரில் நீங்கள் அநபாயர் தப்ப வசதி செய்ததாகச் சோழர் நாட்டில் பேசிக்கொள்கிறார்கள். “

“நல்லது. அப்படியானால் உன் இளவரசருக்கு உதவிய எனக்கு நீ ஓர் உதவி செய்ய முடியுமா?”

“இளவரசர் உத்தரவுக்கு மாறுபடாத எதையும் செய்கிறேன். “

இதைக் கேட்டதும் மெள்ள காவலனை நெருங்கிய இளையபல்லவன், “வீரனே! துறைமுகத்தில் கடல் புறா என்னும் மரக்கலம் இருக்கிறது. அதில் என் நண்பன் அமீர் என்று ஒருவனிருக்கிறான். அவனை இங்கு வரச் சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.
“அவர் இங்கு வந்து என்ன செய்யப் போகிறார்?” என்று வினவினான் காவலன்.

“அவனுடன் சில விஷயங்கள் பேச வேண்டும் நான். “

“தங்களிடமும் யாரும் பேசக் கூடாதென்று பணித் திருக்கிறார் இளவரசர். ஆனால் ஒரு விலக்கு மட்டும் உண்டு” என்றான் காவலன்.

இளையபல்லவன் இதயத்தில் நம்பிக்கை துளிர்விட்டது. “என்ன அது?” என்று வினவினான் படைத்தலைவன்.

“வேண்டுமானால் இன்றிரவு உங்களை இளவரசர் சந்திப்பார்” என்றான் காவலன்.

இளையபல்லவன் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. அந்தக் காவற் கூடத்தில் அன்றைய பொழுதைக் கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்டான். ஆகவே காவலனை வெளியே போகச் சொல்லிவிட்டு அன்றையப் பொழுதை மெள்ள மெள்ளக் கழித்தான். பகலில் கொண்டுவரப்பட்ட உணவையும் மாலைக்குச் சற்று முன்பு கொண்டுவரப்பட்ட சிற்றுண்டியையும் அவன் அறவே தொடவில்லை. அநபாயன் போட்ட திட்டத்தை மாற்றாமல் தன் இஷ்டப்படி நிறைவேற்ற முடிவு செய்திருப்பதை நினைத்துப் பெரிதும் வெகுண்டான் அவன்.

“என்னைவிட இந்தக் கடல் பிராந்தியத்தின் மர்மங்கள் தெரியுமா இவருக்கு? என் வழியில் விட்டால் இன்னும் ஆறே மாதங்களில் ஸ்ரி விஜயத்தை நானே பணியவைத்து விடுவேனே! எனக்குக் கொள்ளைக்காரனெனும் பெயரைச் சோழ அரசாங்க பூர்வமாக ஏற்படுத்தி, முடிந்தால் சமாதானமாகவும் முடியா விட்டால் போராலும் ஸ்ரி விஜயப் பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்திருக்கிறீர்களல்லவா அநபாயரே! இருக்கட்டும்! உமது திட்டம் நிறைவேறுவதை நான் பார்த்துவிடுகிறேன்” என்று உள்ளுக்குள்ளேயே குமுறிய இளையபல்லவன் குலோத்துங்கன் திட்டத்தை முறியடிக்க ஒரு வழியையும் ஏற்படுத்திக் கொண்டான்.

‘நான் இந்த இடத்திலிருந்து காஞ்சனாதேவியை அபகரித்துக்கொண்டு உங்களிஷ்டப்படி தப்பிச் சென்றா லல்லவா நீங்கள் இடும் திட்டம் பலிக்கும்? இந்தக் காவற் கூடத்தை விட்டு நான் நகராவிட்டால் என்ன செய்வீர்? ஒன்று என்னைச் சிறையில் வைத்து ஜெயவர்மனுடன் சமாதானம் பேச வேண்டும். அல்லது என்னைத்துணை கொண்டு அவனுடன் போராட வேண்டும். இரண்டாலும் ஆபத்திருக்கிறது அநபாயரே! அந்த ஆபத்தை எப்படிச் சமாளிப்பீர் பார்க்கலாம். இந்த ஒருமுறை நான் உமது கட்டளையை நிறைவேற்றப் போவதில்லை.

ஏன் நிறைவேற்ற வேண்டும்? சோழ நாடு சம்பந்தப்பட்டவரை நான் ஒரு கொள்ளைக்காரன். அப்படி இருக்க அரச ஆக்ஞை என்னை எப்படிக் கட்டுப்படுத்தும்? கட்டுப்படுத்தாது. ஒருக்காலும் கட்டுப்படுத்தாது,’ என்று சொல்லிக் கொண்டே இளையபல்லவன் மெள்ளச் சிரித்தான். ‘காஞ்சனாதேவி, மஞ்சளழகி இருவரும் கடாரத்திலிருக்க நான் காஞ்சனாதேவியை மட்டும் தூக்கிச் செல்வானேன்?’ என்று தன்னைக் கேட்டுக் கொண்டான். ஒருவேளை தான் கண்டது பகற் கனவாயிருக்குமோ என்ற யோசனைகூடத் தோன்றியது அவனுக்கு.

சூரிய வெளிச்சத்தில் கனவு காண முடியாதென்ற முடிவுக்கு வந்த அவன் மஞ்சளழகி அந்த அரண்மனையில் தானிருக்கிறாளென்பதைத் தீர்மானித்துக் கொண்டதன்றி அங்கு அவள் வரவேண்டிய அவசியத்தையும் அறிய முடிவு செய்தான். ஆகவே கடாரத்தை விட்டு நகருவதில்லை என்று தீர்மானித்துக்கொண்ட இளையபல்லவன் மாலைப் பொழுதையும் இரவையும்கூட மகிழ்ச்சியுடன் வரவேற்றான். இரவு அந்தக் காவற் கூடத்திலும் ராஜோபசாரம் நடந்தது அவனுக்கு. பணிமக்கள் உணவும் பாலும் பழமும் கொண்டு வந்து வைத்தார்கள்.

அவற்றை அவன் உண்டபின் அந்த அறை மூலையில் அகிற் புகையையும் போட்டார்கள். அகிற் புகை அளித்த சுகந்தத்தை நாசியில் நன்றாக இழுத்துப் பஞ்சணையில் படுத்த இளையபல்லவன், தான் செய்த முடிவின் விளைவாகப் பரமதிருப்தியுடன் உறங்கினான். கண்களை விழித்தபோது வெற்றியளித்த மகிழ்ச்சியுடன் விழித்தான். விழித்த பின்புதான் புரிந்துகொண்டான் தான் அடைந்தது வெற்றியல்ல என்பதை. பஞ்சணையில் அவனருகே உட்கார்ந்திருந்தாள் காஞ்சனாதேவி. “வேண்டாம். எழுந்திருக்காதீர்கள்” என்று உதிர்ந்தன அவள் உதடுகளிலிருந்து இனிய சொற்கள். அவள் மலர்க்கரம் அவன் நுதலை லேசாகத் தடவியது!

Previous articleRead Kadal Pura Part 3 Ch38 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch40 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here