Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch40 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch40 | Sandilyan | TamilNovel.in

211
0
Read Kadal Pura Part 3 Ch40 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch40 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch40 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 40 : உண்மையைச் சொல்.

Read Kadal Pura Part 3 Ch40 | Sandilyan | TamilNovel.in

பஞ்சணை முகப்பில் உட்கார்ந்திருந்த கடாரத்து அஞ்சுகம் எழுந்திருக்க முயன்ற தன்னை, “வேண்டாம் எழுந் திருக்காதீர்கள்” என்று கூறியதன்றி, தன் கையால் மெல்ல நுதலைத் தடவியதும், தன்னை அநபாயன் ஏமாற்றி விட்டா னென்பதைப் புரிந்துகொண்ட இளையபல்லவன் பெரும் பிரமிப்படைந்து சுற்றுமுற்றும் தன் கண்களைச் சுழல விட்டான். கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகத்தையும் கண்கள் தீர்த்து வைத்தன. அறையின் மரத்தூண்களிலிருந்தும் அமைப்பிலிருந்தும் தானிருப்பது கடாரத்தின் காவற் கூடமல்ல என்பதையும், கடல் புறாவின் தனது சொந்த அறையே என்பதையும் உணர்ந்து கொண்டான் இளையபல்லவன்.

ஒரே சீராகச் சென்று கொண்டிருந்த மரக்கலத்தின் ஆட்டமும் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகத்தைத் தீர்த்து வைத்தது படைத்தலைவனுக்கு. ஏதோ தந்திரத்தால் அநபாயன் தன்னைக் கடல் புறாவுக்கு அனுப்பிவிட்டதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டதும் கோபத்தின் வசப்பட்ட இளையபல்லவன் காஞ்சனாதேவியின் கையை அகற்றியெறிந்து பஞ்சணையிலிருந்து எழுந்திருக்க முயன்ற போது தான் அவனுக்கு முழு உண்மை புலப்பட்டது. தலை பெரும் பாறைபோல் கனத்ததால் எழுந்திருக்க முடியாமல் மீண்டும் பஞ்சணைத் தலையணையில் தலையைத் தொப்பென்று போட்ட இளையபல்லவன் முகத்தில் கோபத்தின் சாயை உச்சஸ்தாயியை அடைந்தது.

அந்தக் கோபத்தைக் கவனித்த காஞ்சனாதேவி துயரம் தோய்ந்த புன்முறுவலொன்றை வெளியிட்டு, “எழுந்திருக்க முயலாதீர்கள். உங்கள் உடல்நிலை சரியாகவில்லை,” என்று அவனைத் தடுத்துப் படுக்க வைத்துத் தலையை லேசாக அழுத்தவும் செய்தாள். அத்துடன் இடது கையை அவன் உடலுக்குக் குறுக்கே கொடுத்து அவன் கன்னத்தோடு தன் கன்னத்தையும் வைத்து இழைத்தாள். சாதாரண சமயமாயிருந்தால் அந்த இன்பச் சூழ்நிலையில் மெய்மறந்திருக்கக் கூடிய இளையபல்லவன் அன்று உள்ளே எழுந்திருந்த கோபாக்கினியால் அவள் கையை எடுத்து அப்புறம் எறிந்தான். அதற்கும் கடாரத்துக் கட்டழகி மசியாமல் கன்னத்தை இழைத்துக்கொண்டே கேட்டாள், “ஏன் என்னிடம் இத்தனை கோபம்?” என்று.

இளையபல்லவன் அவள் தலையைத் தூக்கிவிட்டுச் சரியாக உட்கார அவளைக் கட்டாயப்படுத்தினான். அதன் விளைவாக எழுந்து உட்கார்ந்த காஞ்சனாதேவியை இளைய பல்லவன் சுடுவிழிகள் நோக்கின. “நீ எப்பொழுது வந்தாய் இங்கே?” என்ற அவன் கேள்வியிலும் அதிக உஷ்ணம் இருந்தது.

அந்த உஷ்ணக் கேள்விகூடக் காஞ்சனாதேவியின் புன்முறுவலை மாற்றவில்லை.

“இன்று விடியற்காலையில் வந்தேன்,” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாள் அவள்.

இளையபல்லவன் விழிகள் அவள் முகத்தை நன்றாக ஆராய்ந்தன. “யார் தூண்டுதலின் மீது வந்தாய்?” என்ற மற்றொரு கேள்வி எழுந்தது அந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து.

இந்தக் கேள்வி காஞ்சனாதேவியின் முகத்திலும் சினத்தின் சாயையை மெல்லப் பரப்பவே அவள் சொன்னாள், “யார் தூண்டுதலும் எனக்குத் தேவையில்லை” என்று.

“அநபாயர் அனுப்பவில்லையா உன்னை இங்கு?” என்று சீறினான் இளையபல்லவன்.

காஞ்சனாதேவியின் சீற்றம் முன்னைவிட அதிகப்படவே அவள் சொன்னாள், “நீங்கள் மயக்கமாகப் படுத்திருப்ப தாகத்தான் கேள்விப்பட்டேன். உங்களுக்குச் சித்தப் பிரமையும் ஏற்பட்டிருப்பது எனக்குத் தெரியாது” என்று.

பெண்ணின் கோபத்துக்கு முன் ஆண் மகன் கோபம், என்ன செய்ய முடியும். ஆகவே சற்றுக் கோபத்தை அடக்கிக் கொண்ட இளையபல்லவன், அநபாயன் ஏதோ பெரும் நாடகமாடியிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு, அதன் முழு விவரத்தையும் ஆராயத் தீர்மானித்து, “ஆமாம் காஞ்சனா, நான் மயக்கமாய் இருப்பதாக யார் சொன்னது உனக்கு?” என்று வினவினான் குரலில் சாந்தத்தை வர வழைத்துக்கொண்டு.

அந்தக் குரல் அவள் இதயத்தைத் தொடவே அவள் உள்ளத்தில் எழுந்த கோபமும் மறைந்தது. ஆகவே சொன்னாள் அவள், “என் தந்தைதான் சொன்னார்,” என்று.

“உன் தந்தையா?” என்று சற்றே சந்தேகம் மண்டிய குரலில் கேட்டான் இளையபல்லவன்.

“பார்த்தீர்களா? மீண்டும் சந்தேகம் உங்களுக்கு நான் சொல்வதில்,” என்றாள் காஞ்சனாதேவி.
“இல்லை. இல்லை. உன் தந்தையா சொன்னார் என்று கேட்டேன்,” என்று சங்கடப்பட்டுக் கேட்டான் இளைய பல்லவன்.

“ஆம். “

“அவருக்கு யார் சொன்னது?”

“அதை நிதானித்துக் கேட்கக் கூட எனக்கு அவகாச மில்லை. “

“அத்தனை அவசரமாக வந்துவிட்டாயா?”

“ஆம்,” என்று சொன்ன காஞ்சனாதேவி அவனைத் தன் அழகிய கண்களில் அன்பு ததும்ப நோக்கினாள். அத்துடன் சொன்னாள், “பெண் உள்ளம் உங்களுக்கு எங்கு புரியப் போகிறது? கல்நெஞ்சம் உங்களுக்கு,” என்று.

“எனக்கா? கல்நெஞ்சமா?” என்று வினவினான் இளைய பல்லவன் வியப்பு குரலில் ஒலிக்க.

“ஆம்; சந்தேகமென்ன?”

“எப்படித் தெரிந்து கொண்டாய் அதை?”

“நீங்கள் எப்பொழுது கடாரம் வந்தீர்கள்?”

“நேற்றுக் காலையில்?”
“எத்தனை மாதம் கழித்து?”

“அறு மாதங்களுக்குப் பிறகு. “

“ஆறு மாதங்களுக்குப் பிறகு வருகிறீர்கள் கடாரத்துக்கு. அதுவும் வெகு காலையில் வருகிறீர்கள். வந்து அன்றிரவு வரை என்னை வந்து பார்க்கக்கூடத் தோன்றவில்லை உங்களுக்கு. இன்று விடிவதற்கு நான்கு நாழிகைகளுக்கு முன்பு என் தந்தை என்னை எழுப்பி நீங்கள் திடீரென நேற்றிரவு அரண்மனையில் மயக்கமாகி விட்டதாகவும் உங்களை அமீரும் வேறு இருவரும் மரக்கலத்துக்கு எடுத்துப்போய் விட்டதாகவும் கூறுகிறார்.

இதைக்கேட்ட என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? என் உடல் தங்கியிருக்குமா அரண்மனையில்?” என்று விடுவிடு என்று பேசிச் சற்றே நிறுத்திய காஞ்சனாதேவி, “உம். உம்… உங்களுக்கெங்கே தெரியப்போகிறது என் மனோநிலை? நீங்கள் மயக்கமுற்றிருப்பதைக் கேட்டதும் ஓடோடி வந்தேன். என் தந்தை தடுத்தும் கேட்காமல் ஓடி வந்தேன். துறைமுகமடைந்து அங்குள்ள படகொன்றில் ஏறி மரக்கலம் வந்தேன் இளையபல்லவரே” என்று கூறி அவனைப் பார்த்தாள் தன் கருவிழிகளால்.

இளையபல்லவன் புத்தியில் மெள்ள மெள்ள அநபாயன் திட்டம் புரியலாயிற்று. எதற்கும் அதைப்பற்றி முழுதும் தெரிந்துகொள்ள இஷ்டப்பட்டு, “உன் மீது நான் கோபித்தது தவறுதான் காஞ்சனா” என்று கூறிவிட்டுத் தலையை நகர்த்தி அவள் மலர்க்காலின் அருகே சாய்த்துக் கொண்டான்.

அவள் கை அவன் தலையை லேசாக வருடிக் கொடுத்தது. அந்தக் கையைத் தலையிலிருந்து எடுத்துத் தன் கையில் இறுகப் பிடித்துக் கொண்டான் இளையபல்லவன். பிறகு அழைத்தான் அவளை, “காஞ்சனா?” என்று.

“உம்… ” அந்தச் சப்தமே பதிலாக வந்தது காஞ்சனாதேவி யிடமிருந்து.

“நான் நேற்றுக் காலையில் வந்தேனல்லவா?”

“ஆமாம். “

“பகல் பூராவும் எங்கிருந்தேனென்று நீ ஏன் விசாரிக்க வில்லை?”

“கடல் புறாவின் தாரைகள் ஊதப்பட்ட அரை நாழிகைக்குப் பிறகு தந்தையை விசாரித்தேன். நீங்கள் இளவரசருடன் அந்தரங்க ஆலோசனையில் இருப்பதாகச் சொன்னார். ” “காவலர்யாரையும் விசாரிக்கவில்லையா?”

“விசாரித்தேன், இரண்டொருவரை. அவர்களுக்குத் தகவல் ஏதும் தெரியவில்லை. நீங்கள் இளவரசருடன் இருப்பதாகவே தெரிவித்தார்கள். பிறகு இளவரசரையும் பார்த்தேன். “

இதைக் கேட்டதும் துடித்து எழுந்திருக்க முற்பட்டு மீண்டும் பஞ்சணையில் விழுந்த இளையபல்லவன், “என்ன! இளவரசரைப் பார்த்தாயா?” என்று பெருவியப்புடன் வினவினான்.

காஞ்சனாதேவியின் கண்கள் அவன் கண்களைச் சந்திக்க சக்தியற்றதாயின. அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டு சொன்னாள்: “ஆம் வெட்கத்தையும் விட்டுத்தான் போய் அவரைப் பார்த்தேன். “

“எப்பொழுது பார்த்தாய்?”

“நீங்கள் வந்து சில நாழிகைகள் பொறுத்திருந்தேன். உதய காலமும் வந்துவிட்டது, ஆகவே நானே போனேன் அவரிடம். என்னைப் பார்த்ததும் உண்மையில் அநபாயர் ஆச்சரியப் பட்டிருக்க வேண்டும். அந்தப்புரத்தில் இருக்க வேண்டிய இளவரசி காவலேதும் இல்லாமல், முன்னறிவிப்பு இல்லாமல் வந்தது பற்றி அப்படி ஏதும் ஆச்சரியப்படவில்லை அவர். சாதாரணமாக வரவேற்றார். பேசினார். பிறகு உங்களைப் பற்றி அவரே சொன்னார்… ”

“அவரே சொன்னாரா? என்ன சொன்னார்?”

“அத்தனை நேரம் வரை நீங்கள் அங்குதான் இருந்த தாகவும் அப்பொழுதுதான் கடற்கரையோரம் போனதாகவும் சொன்னார்?”

“அவ்வளவுதான் சொன்னாரா?”

“இல்லை. நீங்கள் நீராடச் சென்றதாகவும் சொன்னார். மற்றும் ஏதேதோ சொன்னார்… ” இந்த இடத்தில் காஞ்சனா தேவி வார்த்தைகளை விழுங்கினாள்.

“சொல், என்ன சொன்னார் சொல்,” என்று துடிப்புடன் ஊக்கினான் இளையபல்லவன்.

“மஞ்சளழகி யாரென்று விசாரித்தார். “

“அப்படியா?”

“ஆம். நான் எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். பிறகு அவர் மஞ்சளழகி எப்படி இருப்பாளென்று விவரித்தார். அவள் உடை, கால் சதங்கை எல்லாவற்றையும் பற்றிக் கூறினார். இதையெல்லாம் பலவர்மரிடமிருந்து அறிந்ததாகவும் கூறினார். மஞ்சளழகியின் கால்களும் பொன்னிற மஞ்சளாமே?” இதைச் சொன்ன காஞ்சனாதேவியின் குரலில் பொறாமை நிரம்பிக் கிடந்தது.

இளையபல்லவனுக்குச் சகலமும் புரிந்துவிட்டது. “அதற்காகத்தான் நீயும் மஞ்சளழகி போல் கால்களுக்கு மஞ்சள் பூசி சதங்கையணிந்து கடல் நீராட ஓடினாயா!” என்று வினவினான் கோபத்துடன்.

காஞ்சனாதேவிக்கு ஏற்பட்ட வியப்பில் அவள் இளைய பல்லவன் குரலில் ஒலித்த கோபத்தைக்கூடக் கவனிக்க வில்லை. “நான் ஓடினது உங்களுக்குத் தெரியுமா?” என்று வியப்பு குரலில் பெரிதும் பிரதிபலிக்கக் கேட்டாள் அவள்.

“தெரியாமலென்ன? உன் கோலத்தைப் பார்க்கவும் பார்த்தேன். “
“எங்கு?”

“கடல் அலைகளுக்கருகில். “

“பார்த்தீர்களா?”

“பார்த்தேன். நந்தவனக் குறுக்குப் பாதை ஓரத்தில் அளித்த காட்சியை. “

“பார்த்துமா என்னை அழைக்கவில்லை நீங்கள்? எங்கு ஒளிந்து கொண்டிருந்தீர்கள்? அந்தக் கோலத்தில் என்னைப் பார்க்க ஆசையாய் இருந்ததா உங்களுக்கு? அப்படியானால் மஞ்சளழகியிடம் உங்களுக்கு… ” என்று குழைந்தாள் காஞ்சனா தேவி. இளையபல்லவன் தன்னை மறைந்து நின்று பார்த்து ரசித்திருக்க வேண்டும் என்ற நினைப்பு அவளுக்குப் பேரின்பத்தை அளித்தது. அந்த இன்பத்தில் மஞ்சளழகியின் அழகு தன் அழகைவிட அத்தனை உயர்ந்ததா என்ற எண்ணமும் பொறாமையும் கலந்து உறவாடின. அந்த உணர்ச்சிகள் பலவும் அவள் முகத்திலும் தாண்டவ மாடின.

அவை எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை இளைய பல்லவன். அநபாயன் மனித உணர்ச்சிகளை எத்தனை தூரம் புரிந்துகொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்ததால் பெரும் வியப்பும் அவன் தன்னையும் காஞ்சனாதேவி உட்பட எல்லோரையும் கைப்பாவைகளாக்கிக் கொண்டு விட்டானே என்பதால் ஏற்பட்ட கோபமும் அவன் உள்ளத்தே கலந்து எழுந்து கொண்டிருந்தன. ஆகவே அவன் காஞ்சனாதேவி கேட்க முற்பட்ட பொறாமைக் கேள்விக்குப் பதில் கூறாமல், “நந்தவனத்தை அடுத்து நிற்கும் அறை எது, காவற் கூடமா?” என்று வினவினான்.

காஞ்சனாதேவி கலகலவென நகைத்தாள். “உங்கள் கேள்வி நன்றாயிருக்கிறது!” என்று அந்த நகைப்பின் ஊடே கேலியாகவும் பேசினாள்.

“என்ன விசித்திரம் இதில்?” என்று கேட்டான் இளைய பல்லவன்.

அந்தப்புர நந்தவனத்துக்கருகில் காவற் கூடத்தை யாராவது அமைப்பார்களா? ஒருவேளை உங்கள் நாட்டில் அப்படிப் பழக்கமா?” என்று வினவினாள் காஞ்சனாதேவி கேலிக் குரலை மாற்றாமலே.

இளையபல்லவன் அவள் குத்தலாகக் கேட்ட கேள்வியை அசட்டை செய்தே பேசத் தொடங்கி, “அப்படியானால் அதை அடுத்திருக்கும் அறை யாருடையது?” என்று வினவினான்.

“சாதாரணமாக அந்தப்புரப் பணிசெய்யும் பெண்கள் விடுதி அது. அங்கு தோட்டத்தை அடுத்திருக்கும் அறை, அந்தப்புர மகளிர் நீராட்டத்துக்குப் பிறகு ஆடை புனையும் அறை” என்றாள் காஞ்சனாதேவி. “இப்பொழுதும் அது பணி மக்களிடம்தான் இருக்கிறதா?”

“இல்லை. அநபாயர் வந்ததிலிருந்து அவர் வீரர்கள் அங்கு தங்குகிறார்கள். “

இளையபல்லவன் சில விநாடிகள் சிந்தனையில் இறங்கினான். பல விஷயங்கள் அவனுக்கு வெட்ட வெளிச்ச மாகி விட்டன. தன்னை எப்படியும் கடாரத்திலிருந்து கிளப்பி விட அநபாயன் சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டா னென்பதையும் உணர்ந்துகொண்டான் இளையபல்லவன். பிறகு மீண்டும் ஒரு கேள்வி கேட்டான் காஞ்சனாதேவியை, “நான் மயக்கமுற்றது உனது தந்தைக்கு எப்படித் தெரியும்?” என்று.

“அநபாயரே அவரிடம் சொன்னாராம்” என்றாள் காஞ்சனாதேவி.

“குணவர்மரை அத்தனை விடியற்காலையில் இளவரசர் எழுப்பினாரா?”

“ஆம், காவலனை விட்டு அழைத்து வரச்சொல்லி விஷயத்தைக் கூறினாராம். “

“என்ன அவ்வளவு அவசரமாம் அவருக்கு?”

“அரண்மனையில் உங்களுக்கு நேர்ந்த விபத்தை என் தந்தைக்குத் தெரிவிக்க வேண்டியது தன் கடமையென்று கூறினாராம். “

“ஓகோ!” என்று கூறிக்கொண்ட இளையபல்லவன் மேற் கொண்டு ஏதும் கேட்கவில்லை. பல விநாடிகள் மௌனம் சாதித்தான். பிறகு காஞ்சனாதேவியை நோக்கி, “காஞ்சனா, நீ போய் அமீரை அழைத்துவா” என்றான்.
அவன் குரலில் கண்டிப்பு இருந்ததைக் கவனித்த காஞ்சனாதேவி பஞ்சணையைவிட்டு எழுந்திருந்து வெளியே சென்றாள். அடுத்த சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளே நுழைந்த அமீரின் முகம் மகிழ்ச்சியால் விகசித்தது. “இப்பொழுதுதான் எனக்கு உயிர் வந்தது இளையபல்லவரே!” என்று மகிழ்ச்சி துலங்கக் கூறிப் பெருமூச்சும் விட்டான்.

“அருகே வா அமீர்!” என்று தீனமான குரலில் அழைத்தான் இளையபல்லவன்.

அமீர் அருகே வந்தான். இளையபல்லவன் பஞ்சணையில் தன் பக்கத்தில் உட்காரும்படி சைகை செய்தான். அமீர் சற்றுத் தயங்கிவிட்டு உட்கார்ந்தான். “அமீர் எத்தனை நாழிகை களாக நான் மயக்கமாயிருக்கிறேன்? எப்பொழுது மயக்க மடைந்தேன்?” என்று வினவினான் சாவதானமாக.

“எப்பொழுது மயக்கமுற்றீர்களோ தெரியாது. இளவரசரிடமிருந்து தகவல் வந்து அரண்மனை சென்றேன். நீங்கள் மயக்கத்துடன் படுத்திருந்தீர்கள். சேந்தன் மரக்கலத்தில் இருந்தான். ஆகவே இங்கு கொண்டு வந்தேன் உங்களுக்குச் சிகிச்சை செய்ய” என்றான்.

“எந்த இடத்திலிருந்து கொண்டு வந்தாய்?”

“அரண்மனையிலிருந்துதான். “

“அரண்மனையில் எங்கிருந்து?”

“அநபாயர் அறையிலிருந்து. உங்கள் பஞ்சணைகள் அக்கம் பக்கத்தில் இருந்தன. “

“அரண்மனையிலேயே எனக்கு ஏன் சிகிச்சை நடக்க வில்லை?”

“எனக்கெப்படித் தெரியும்?” என்றான் அமீர்.

அடுத்த விநாடி அமீர் பெரிதாக அலறினான். “விடுங்கள் இளையபல்லவரே! விடுங்கள்!” என்ற அமீரின் பயங்கர ஒலி அந்த அறை பூராவும் பரவியது. இளையபல்லவன் இரு கைகளும் அமீரின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தன. “சொல்! உண்மையைச் சொல்” என்ற சீற்றம் மிகுந்த இளைய பல்லவன் குரலொலிகள் அமீரின் பயங்கர ஒலிகளுடன் இணைந்து அந்த அறையின் அமைதியைச் சரேலென ஊடுருவின.

Previous articleRead Kadal Pura Part 3 Ch39 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch41 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here