Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch42 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch42 | Sandilyan | TamilNovel.in

102
0
Read Kadal Pura Part 3 Ch42 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch42 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch42 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 42 : இலக்கியமும் இலக்கணமும்.

Read Kadal Pura Part 3 Ch42 | Sandilyan | TamilNovel.in

அரபு நாட்டு அமீர் சோழநாட்டு இளவலுக்குக் கொடுத்துதவிய மயக்கப் பொடியின் மகத்துவத்தால் இரண்டு நாள் படுக்கையிலேயே இருக்கவேண்டிய அவசியம் இளைய பல்லவனுக்கு ஏற்பட்டது ஒரு விஷயத்தில் அவனுக்கு அனுகூலமாகவே இருந்தது. தலை சதா லேசாகக் கனத்துக் கொண்டிருந்ததால் எழுந்திருந்து சுதந்திரமாக நடப்பதற்கு இடைஞ்சலாய் இருந்ததே யொழிய அந்தக் கனத்தைத் தவிர வேறு தொந்தரவு ஏதுமில்லாததால்,
அவன் தனது நிலைமையைப் பற்றியும் தான் மேற்கொண்டு நடந்துகொள்ள வேண்டிய முறைகளைப் பற்றியும் நன்றாகச் சிந்திக்க அவகாசம் கிடைத்தது அந்த இரண்டு நாட்களிலும். அந்த இரண்டு நாளும் அநபாயன் புத்தித் திறமையையும், யாருக்கும் ஏமாறாத தன்னையே ஏமாற்றிவிட்ட அவனது தந்திரத்தையும் தனது சொந்த மாலுமிகளைக்கூடத் தன் மீதே திருப்பிவிடும் அவனது இணையற்ற சக்தியையும் நினைத்துத் திரும்பத் திரும்ப வியப்புக்குள்ளானான் சோழர் படைத்தலைவன்.

தான் இழுத்த கோட்டை எந்த நாளிலும் தாண்டியிராத அமீர்கூட அநபாயன் உத்தரவை நிறைவேற்றத் தன் உயிரையும் கொடுக்கத் துணிந்திருப்பதை நினைக்க நினைக்க அவன் புத்தியில் உதயமான ஆச்சரியம் எல்லை கடந்தது. தன்னை மயக்கமுறச் செய்து மரக்கலத்துக்கு அனுப்பிவிட்டதில் பங்கு அமீருக்கு மட்டும்தானா, அந்தப் பணியில் கண்டியத் தேவனுக்கும் பங்கு உண்டா என்று எண்ணிய இளையபல்லவன் அதைப்பற்றி அறியவும் தீர்மானித்தான்.

அப்படி அறிய எண்ணியும் அதற்காகக் கண்டியத்தேவனை அழைக்காமல், அவன் தன்னைப் பார்க்க வந்த சமயத்தில் சர்வ சாதாரணமாகப் பேச்சுக் கொடுத்து அவனுக்கும் தன் நிலைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதைப் புரிந்து கொண்ட இளையபல்லவன் இதயத்தில் சாந்தியும் ஓரளவு ஏற்பட்டது. கண்டியத்தேவனுக்கோ மற்ற மாலுமிகளுக்கோ கடாரத்து அரண்மனையில் நடந்தது எதுவும் தெரியாது என்பதை அறிந்துகொண்டதால் தன் திட்டங்கள் அடியோடு தவிடு பொடியாகவில்லை என்பதைப் புரிந்துகொண்டான் இளையபல்லவன்.

இளையபல்லவனின் இந்த அறிவுக்குக் கண்டியத்தேவன் பேச்சே காரணமாயிருந்தது. அமீர் சென்ற பல நாழிகைகள் கழித்து இளையபல்லவனைக் காண வந்த கண்டியத்தேவன் இளையபல்லவன் சுரணையடைந்ததைப் பற்றி மகிழ்ச்சி தெரிவித்தான். “நீங்களிருந்த நிலை கண்டு மிகவும் பயந்துவிட்டேன் படைத்தலைவரே!” என்று துவங்கினான் அவன் பேச்சை.

“அத்தனை மோசமாகவா இருந்தேன் நான்?” என்று வினவினான் இளையபல்லவன் தன் நிலைக்குக் காரணம் தெரியாதவன் போல.

“மிகவும் மோசமாயிருந்தீர்கள். நீங்கள் உயிருடனிருக் கிறீர்களா அல்லவா என்பதுகூடச் சந்தேகமாயிருந்தது” என்று விளக்கினான் கண்டியத்தேவன்.

“பிரேதம் போல் கிடந்தேனா?” என்று வினவினான் இளையபல்லவன்.

“அப்படித்தான் இருந்தீர்கள் பார்வைக்கு. “

“அப்படியானால் என்னை ஏன் கரைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை செய்யவில்லை?”

கண்டியத்தேவனின் கண்கள் ஒரு விநாடி இளைய பல்லவனை நோக்கின. “செய்யவேண்டுமென்றுதான் நான் சொன்னேன்” என்று மெள்ள அவன் உதடுகள் சொற்களையும் உதிர்த்தன.

இளையபல்லவனின் விழிகள் சர்வ சாதாரணமாகவே நோக்கின தேவனை. “அதற்கு யாரும் ஒப்புக்கொள்ளவில்லை போலிருக்கிறது?” என்று வினவவும் செய்தான்.

கண்டியத்தேவன் உறுதி நிரம்பிய குரலில் சொன்னான், “எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். காஞ்சனாதேவிகூட வற்புறுத்தினார்கள். ஆனால் ஒருவன் மட்டும் அதற்கு இணங்கவில்லை” என்று.

அது யாரென்பது இளையபல்லவனுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்த போதிலும் விஷயம் கண்டியத்தேவன் வாயினாலேயே வரட்டும் என்பதற்காக, “யாரது?” என்று கேட்டான்.

“அமீர். ” பளிச்சென்று வந்தது தேவனின் பதில்.

“அமீரா?” இளையபல்லவன் மேலுக்கு வியப்பைக் காட்டினான்.

“அமீர்தான். தங்கள் மயக்கம் லேசானதென்றும் சீக்கிரம் சரியாகிவிடுமென்றும் கூறினான். “
“நீங்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டீர்களாக்கும்?”

“இல்லை, ஒப்புக்கொள்ளவில்லை. நீங்களிருந்த நிலை எனக்குப் பயமாயிருந்தது. எனக்கு மட்டுமல்ல, காஞ்சனா தேவிக்கும் பயமாயிருந்தது. திரும்பத் தன்னுடன் அரண் மனைக்கு உங்களை அனுப்பும்படி கூறினார்கள். அமீர் இணங்கவில்லை. உங்கள் உயிருக்கு, தான் பொறுப்பாளி என்றான். நான் அப்பொழுதும் நம்பவில்லை. சேந்தனை அழைத்து உங்கள் நாடியைப் பார்க்கச் சொன்னேன். நாடி ஒரே சீராகப் பலமாக இருப்பதாகவும் உயிருக்கு ஏதும் ஹானி இல்லையென்றும் சொன்னான் சேந்தன். “

“பிறகு?”

“அமீர் மரக்கலத்தின் நங்கூரத்தை எடுத்துக் கடலோடும் படி கூறினான். “

இளையபல்லவன் சற்று மௌனம் சாதித்துவிட்டுக் கேட்டான், “மரக்கலத்தைக் கடலில் செலுத்த யார் உத்தரவு தேவை?” என்று.

“உங்கள் உத்தரவு. ” திட்டமாக வந்தது கண்டியத்தேவன் பதில்.

“நானில்லாவிட்டால்?”

“என் உத்தரவு தேவை. “

“நீங்கள் உத்தரவிட்டீர்களா?”
“ஆம். உத்தரவிட்டேன். “

“ஏனிட்டீர்கள் உத்தரவை?”

“அநபாயர் நம்மை அக்ஷயமுனை செல்லும்படி இட்டுள்ள உத்தரவை எழுத்து மூலம் காட்டினான் அமீர். அரச கட்டளைக்குப் படியாமல் நான் என்ன செய்யமுடியும்? நீங்களாயிருந்தால் மட்டும் என்ன செய்திருப்பீர்கள்?” என்று வினவினான் கண்டியத்தேவன்.

தேவனின் நிலை நன்றாகப் புரிந்தது இளைய பல்லவனுக்கு. இளவரசன் உத்தரவை மீறி, கடாரத்தின் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டு இருந்தால் தேவனையும் மற்ற மாலுமிகளையும் அநபாயன் சிறைசெய்து இருப்பான் என்பதிலோ கடல்புறாவையும் அதன் துணை மரக்கலங்களையும் கைப்பற்ற குணவர்மனுக்கு உத்தரவிடுவா னென்பதிலோ சிறிதும் சந்தேகமில்லை இளையபல்லவனுக்கு அப்படி உத்தரவிடும் பட்சத்தில்,
வீரராஜேந்திர சோழ தேவரால் தூரக்கிழக்குப் பிரதிநிதியாகவும் ஸ்ரி விஜய அரியணைப் போட்டியின் முடிவு காணவும் அனுப்பப்பட்டுள்ள குலோத்துங்கதேவன் இஷ்டத்துக்கு விரோதமாகக் குணவர்மன்கூட நடக்க முடியாதென்றும் உணர்ந்து கொண்ட இளையபல்லவன், தலையணையிலேயே தலையை அசைத்து, “ஆம், தேவரே! இளவரசர் உத்தரவுக்கு எதிராக நாம் எதையும் செய்ய முடியாது” என்று ஒப்புக்கொண்டான். அத்துடன் அவனைச் செல்லுமாறும் கூறினான்.

அன்றையப் பகல் பொழுது உடல்நிலை சிறிது கஷ்டமா யிருந்தாலும் மாலையில் தலைக்கனம் சற்றுக் குறையவே இளையபல்லவன் தலையைப் பலமுறை தலையணையில் புரட்டினான். அமீரும் கண்டியத்தேவனும் வந்து சென்ற சமயங்கள் தவிர மற்ற சமயங்களில் காஞ்சனாதேவி இளையபல்லவன் பஞ்சணை முகப்பிலேயே உட்கார்ந்திருந்தாள். அன்று முழுதும் உணவை அறவே வெறுத்த படைத்தலைவனுக்குக் காஞ்சனாதேவியே குவளையில் சிறிது பாலைக் காய்ச்சிக் கொண்டுவந்து உதட்டில் வைத்து மெள்ள மெள்ளப் புகட்டினாள்.

காதலர் பிரிவினையில் கசக்கும் பால் அன்று காஞ்சனாதேவியின் உபசாரத்தில் பெரிதும் இனித்தது படைத் தலைவனுக்கு. அன்று காஞ்சனாதேவி பஞ்சணையிலிருந்து எழுந்து இருமுறைதான் தனது அறைக்குச் சென்றாள். காலையில் நீராட ஒருமுறை சென்றாள். மாலையில் மாற்றுடை அணிந்து தலைவாரி வர ஒருமுறை சென்றாள். மாலையில் மீண்டும் அவள் உள்ளே நுழைந்த போது மஞ்சள் நிறப் பட்டாடை புனைந்திருந்தாள்.

வாரி முடித்திருந்த தலையின் முற்பகுதியிலும் மஞ்சள் நிறக் கல்லொன்று பதிக்கப்பட்டிருந்த சுட்டியொன்றைக் கட்டித் தொங்க விட்டிருந்தாள். அன்று வாரி முடித்த தலையில் மூன்று சின்னஞ்சிறு பின்னல்கள் முகத்தின் பக்கங்களிலிருந்தும் நடு வகிட்டிலிருந்தும் கிளம்பிப் பின் சென்று முடி குழலில் மறைந்திருப்பதைப் பார்த்த இளையபல்லவன் புன்முறுவல் கொண்டான்.

அன்று மாலை காஞ்சனாதேவி தனது எழிலெல்லாம் அசைந்து அசைந்து, பற்பல கனவுகளை அள்ளித் தெளிக்க அறைக்குள் வந்து, அங்கிருந்த விளக்கை முதன் முதலில் ஏற்றினாள். ஏற்றித் திரியையும் நன்றாகத் தூண்டினாள். இருள் கவியத் தொடங்கிவிட்ட அந்தச் சமயத்தில் கடல் புறாவின் தனது அறைக்குள் வந்த மஞ்சள் நிற மாடப்புறாவைக் ‘கண்ட படைத்தலைவன் அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்தான். அழகுகள் அசங்க வந்த காஞ்சனாதேவி விளக்கருகில் நின்ற தோரணையும் விளக்கைக் கொளுத்தித் திரியைத் தூண்டிய தோரணையும் கூட இளையபல்லவன் கண்களுக்குப் பேரானந்தமாக இருந்தது. தூண்டிய விளக்கின் ஒளி அவள் மஞ்சள் நிற ஆடையைப் பொன் போல் அடித்தது.

தலைச்சுட்டியிலிருந்த மஞ்சள் நிறக் கல் வேறு பெரும் மஞ்சள் ஒளியைக் கிளப்பியது. இப்படிப் பலபடி ஒளிவிட்ட அந்த மஞ்சள் சிலையைக் கண் கொட்டாமல் பார்த்தக்கொண்டிருந்த இளையபல்லவனை மெல்ல மெல்ல அணுகிய அந்தச் சிலை அவன் தலையில் தன் கையை வைத்துப் பரிசோதித்து அவன் உடல் நிலையை, அப்பொழுதும் அவன் இமை கொட்டாமல் தன்னைப் பார்ப்பதைக் கண்டு புன்முறுவல் கொண்டு, “என்ன அப்படிப் பார்க்கிறீர்கள் என்னை !” என்று வினவவும் செய்தது.

இளையபல்லவன் அவள் கையைத் தன் கையால் பிடித்துக்கொண்டான். மெள்ள அவளை இழுத்துப் பஞ்சணை முகப்பிலும் உட்கார வைத்துக்கொண்டான். “ஆமாம் காஞ்சனா! என் தலையைத் தொட்டுப் பார்த்தாயே எப்படி இருக்கிறது? சுடுகிறதா?” என்று விசாரித்தான்.

“இல்லை, சுடவில்லை. ஏன் கேட்கிறீர்கள்? உங்களுக்கு சுரம் இருக்கிறதுபோல் தோன்றுகிறதா?” என்று வினவினாள் காஞ்சனாதேவி கவலையுடன்.

“ஆம். அப்படித்தான் தோன்றுகிறது” என்றான் இளைய பல்லவன்.

“குளிர்கிறதா?”

“இல்லை. குளிர்விட்டு எத்தனையோ நாளாகிறது. “

இதைக்கேட்ட காஞ்சனாதேவி பொய்க் கோபத்தை முகத்தில் காட்டி, “அதைக் கேட்கவில்லை நான்” என்றாள். அவள் இதழ்கள் அந்தப் பொய்க்கோபத்தில் அழகாக மடிந்து, உதயமாக இருந்த புன்முறுவலை மறைத்தது.

“வேறெதைக் கேட்கிறாய்?”

“சுரம் சம்பந்தமான குளிரை. “

“அதுவும் ஒருவித சுரம் என்றுதான் இலக்கிய கர்த்தாக்கள் சொல்கிறார்கள். “

“நான் உங்களுடன் இலக்கியம் பேச வரவில்லை. ” காஞ்சனாதேவியின் பொய்க்கோபம் பலமாகத் தொனித்தது குரலில்.

இளையபல்லவன் அவள் கையைத் தன் கையால் நன்றாக அழுத்தினான். “நீ இலக்கியம் பேச வேண்டியதில்லை காஞ்சனா” என்று முணுமுணுக்கவும் செய்தான்.

“ஏன் பேச வேண்டாம்?” இப்படியொரு குறுக்குக் கேள்வியை வீசினாள் காஞ்சனாதேவி.

“இலக்கியம் இலக்கியத்தைப் பேசுமா?” என்று வினவினான் இளையபல்லவன் புன்முறுவல் கொண்டு.
“என்ன சொல்கிறீர்கள்?”

“நீ இலக்கியம் பேசத் தேவையில்லை காஞ்சனா, நீயே இலக்கியம். உன்னைப் பற்றித்தான் கவிகள் பாடுவார்கள். “

“நல்ல இலக்கணம் இது?”

“இலக்கியத்துக்கு இலக்கணம் தேவையல்லவா?”

“ஆம் ஆம். தேவைதான். ” காஞ்சனாதேவியின் பேச்சில் இன்பமிருந்தது.

அதைக் கவனித்த இளையபல்லவன் சொன்னான், “காஞ்சனா, ஒன்று தெரியுமா உனக்கு!” என்று.

“என்ன?”

“இலக்கணத்திலிருந்து இலக்கியம் பிறக்கவில்லை. “

“அப்படியா?”

“ஆம். இலக்கியத்திலிருந்துதான் இலக்கணம் பிறந்திருக் கிறது” என்ற இளையபல்லவன், கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டே சொன்னான்: “காஞ்சனா! ஜீவராசிகளுக்கு அடிப்படையானவை உணர்ச்சிகள். அந்த உணர்ச்சிகள் அழகைக் கண்டு, சோகத்தைக் கண்டு உற்சாகத்தைக் கண்டு கொந்தளிக்கின்றன. அந்தக் கொந்தளிப்பு கவிதையாகச் சொற்களில் மலர்கிறது. ஆகையால்தான் மலையழகு, மலரழகு, நதியழகு, கடலழகு எல்லாம் கவிதைகளாக வடித்திருக் கின்றன. இத்தனையும் சேர்ந்த பெண்ணழகைப்பற்றி வடித்துள்ள கவிதைகள் அனந்தம். “

இளையபல்லவன் சொற்கள் காஞ்சனாதேவியைக் கனவுலகத்துக்கு இழுத்தன. “சொல்லுங்கள்” என்ற சொல் மிக மிருதுவாக உதிர்ந்தது அவள் அழகிய இதழ்களிலிருந்து. “சொல்வதற்கு அதிகமில்லை காஞ்சனா! உணர்வதற்குத்தான் நிரம்ப இருக்கிறது. உன்னைப் போன்ற அழகிகள் கவிகளின் இலக்கியம். உன் அழகு கவிதையைத் தூண்டும் அழகு” என்றான் இளையபல்லவன்.

“நீங்கள் கவி ஏதும் புனையவில்லையே, இலக்கியம் கண்ணெதிரே இருந்தும்!”

“சுரமிருப்பவன் எப்படிக் கவி பாடுவான்?”

“என்ன சுரம் உங்களுக்கு?”

“காமாலை. “

“காமாலையா!”

“ஆம். “

காஞ்சனாதேவியின் முகத்தில் கவலை படர்ந்தது. இளையபல்லவன் கண்களை உற்று நோக்கினாள் அவள். “கண்களில் மஞ்சள் தெரியவில்லையே?”

“ஆனால் என் கண்களுக்கு எல்லாம் மஞ்சளாகத் தெரிகிறது” என்றான் இளையபல்லவன்.

“அப்படியா!” கவலை காஞ்சனாதேவியின் முகத்தில் பெரிதும் விரிந்தது.

“ஆம். உன் கைகள் மஞ்சளாகத் தெரிகின்றன. உன் வெண்மையான உடைகூட மஞ்சளாகத் தெரிகிறது!”

காஞ்சனாதேவி புரிந்து கொண்டாள்.

“ஊஹும்! அப்படியா விஷயம்” என்றாள் விஷமத்துடன்.

“என்ன சொல்கிறாய் காஞ்சனா!”

“உங்களுக்கு எல்லாமே கொஞ்ச நாட்களாக மஞ்சளாகத் தான் தெரிகிறது!”

“கொஞ்ச நாட்களாக என்றால்!”

“அக்ஷயமுனைக்குச் சென்று வந்த நாட்களாக. “

“என்ன விசேஷம் அங்கே?”

“நீங்கள் பெயர் சூட்டினீர்களல்லவா?”

“யாருக்கு?”

“அவளுக்குத்தான். “
“அவளுக்கா?”

“ஆகா! ஒன்றும் புரியவில்லை உங்களுக்கு! மஞ்சளழகி யென்று பெயர் சூட்டியது நீங்கள்தானே?”

இளையபல்லவன் முகத்தில் மெள்ள சந்தேகக்குறி உதய மாயிற்று. “இதை யார் சொன்னது உனக்கு. அமீரா?” என்று வினவினான்.

காஞ்சனாதேவி வியப்பின் எல்லையை அணுகினாள். “ஆம், அமீர்தான்! உங்களுக்கு என்ன சோதிடம் கூடத் தெரியுமா? நீங்கள் கவிக்கு இலக்கணம் வகுப்பவர் என்று மட்டுந்தான் நினைத்தேன்!” என்றாள் கடாரத்துக் கட்டழகி.

இளையபல்லவன் சில விநாடிகள் யோசித்தான். “வேறு என்ன சொன்னான் அமீர்!” என்று வினவினான்.

“நீங்கள் அக்ஷயமுனைக்குச் செல்ல அஞ்சுவதாகவும் கூறினான். “

“ஏன்?”

“காரணம் உங்களுக்குத் தெரியாதா?”

“தெரியவில்லை எனக்கு. “

“அங்கு மஞ்சளழகி இருக்கிறாள். நானும் அங்கு வருகிறேன். இலக்கணத்தை எந்த இலக்கியத்துக்கு வகுப்பீர்கள்?”
“இதையும் அமீரே சொன்னானா?”

“இந்தச் சொற்களை உபயோகிக்கவில்லை. கருத்து அதுதான். “

இளையபல்லவன் பல விநாடிகள் சிந்தனையில் ஆழ்ந்து விட்டான். அதைக் கவனித்த காஞ்சனாதேவியின் கருத்தில் இன்பமும் கவலையும் கலந்து தாண்டவமாடின. ‘உண்மையில் இவர் மஞ்சளழகியைத்தான் விரும்புகிறாரா? என்னை இலக்கியமென்றும் தாம் இலக்கணம் வகுப்பதாகவும் சொல்வதெல்லாம் வெறும் புரட்டா?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். அந்தக் கேள்வியின் விளைவாகவோ என்னவோ மெள்ள அவன் கையைத் தன் கையால் பற்றினாள் காஞ்சனாதேவி. அந்தப் பிடிப்பு ஏதோ பெரும் ஆதரவைத் தேடுவதைப் போலிருந்தது படைத்தலைவனுக்கு. அவள் வடிவழகை ஒருமுறை கண்களால் பருகினான். அவன் கைகள் அவளை நோக்கி எழுந்தன. “இலக்கியமே! வா இப்படி!” என்று அவன் உதடுகள் அழைத்தன.

“எதற்கு? இலக்கணம் வகுக்கவா?” என்று முணுமுணுத் தாள் காஞ்சனாதேவி.

“ஆம். “

“மஞ்சளழகிக்கா? எனக்கா?”

“சொல்கிறேன், வா. “

இலக்கியம் நெருங்கியது. இலக்கணக் கண்கள் இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டன. வேறொரு ஆராய்ச்சியும் நடந்து கொண்டிருந்தது அந்த அறையில். தளத்துப் புறத்திலிருந்த அந்த அறைச் சாளரத்தின் கதவு லேசாகத் திறக்கப்பட்டு அதன் மூலமாகக் கண்ணொன்று இந்த நாடகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch41 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch43 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here