Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch43 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch43 | Sandilyan | TamilNovel.in

125
0
Read Kadal Pura Part 3 Ch43 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch43 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch43 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 43 : பேழையும் திட்டமும்.

Read Kadal Pura Part 3 Ch43 | Sandilyan | TamilNovel.in

சற்று முன்பே விளக்கு ஏற்றப்பட்ட அந்த மாலை நேரத்தில் இளையபல்லவன் கண்கள் எதிரே சாய்ந்து வந்த எழில் இலக்கியத்தை மட்டும் ஆராய்ந்திருந்தால் அவன் திட்டங்கள் எந்தத் திக்கில் போயிருக்கும், எப்படி மாறியிருக்கும் என்பதைச் சொல்ல முடியாது. ஆனால் அந்த எழிலுடன் அவன் கண்கள் தன் தலைப்பக்கத்தே தூரத்திலிருந்த தளத்துப் புறச் சாளரம் மெல்லத் திறந்ததையும், அதில் தோன்றிய ஒரு கண் தன் நிலையைக் கவனித்ததையும் கூட ஆராய்ந்தன. அப்படி அந்த ஒற்றைக் கண்ணைத் தன் கண்கள் காண முடிந்தது, தனக்கு எந்த ஆபத்திலும் உதவி வந்த அதிர்ஷ்டமே என்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்டான் அவன் அந்தச் சில விநாடிகளில்.

வாழ்க்கையில் தான் எந்தச் சமயத்திலும் விடாது கைப்பிடித்து வந்த ரசிகத் தன்மையும் கலை உணர்ச்சியும் அந்த மாலையில் தனக்கு எத்தனை சுலபமாக, எத்தனை பெரிய உதவியை அளித்திருக்கிறதென்று நினைத்து அதைப் பற்றிய மகிழ்ச்சியும் கொண்டான் சோழ நாட்டுப் படைத்தலைவன். அவன் பஞ்சணையில் கால்மாட்டுக்கெதிரே எழுந்தவுடன் முகம் காணத்தான் மாட்டி வைத்திருந்த அழகிய சீனத்துத் தகளியொன்றில் தனக்குப் பின்னாலிருந்த சாளரமும் அந்த ஒற்றைக் கண்ணும் தெரிந்ததைக் கண்ட இளையபல்லவன் அந்தத் தகளியில் முழுக் கண்ணையும் ஓட்டாமல் அரைவாசியே அதை ஆராய்ந்தான்.

எதிரே தன் கைகளில் சிக்கி நின்ற எழில்மிகு மடந்தையைப் பார்த்தும், அவள் அழகு மிதமிஞ்சிச் சுடர் விட்டும், அவள் கண்கள் இணையிலாக் காதலைக் கொட்டியும், இளையபல்லவன் அதை மேலுக்குக் கவனித்தானே யொழிய அவன் கண்களின் முக்கியப் பார்வை பின்னாலிருந்த சாளரத்தின் மேலேயே இருந்தது. அதன் விளைவாக, காஞ்சனாதேவியின் தோள்களை அழுத்திப் பிடித்திருந்த கைகள் மேலே செயலெதிலும் இறங்காமல் உணர்ச்சியற் றிருக்கவே, அதற்குக் காரணத்தை உள்ளபடி அறியாத கடாரத்தின் இளவரசி, அவன் தன் அழகைக் கண்டு பிரமித்துச் செயலற்று இருக்கிறானென்று நினைத்துக் காமப் புன்முறுவல் கோட்டினாள் அவனை நோக்கி. அத்துடன் செம்பவள உதடுகளையும் அசைத்து, “என்ன, அப்படிப் பிரமித்து விட்டீர்கள்?” என்றும் வினவினாள் கொஞ்சும் சொற்களில்.

இளையபல்லவன் சற்றே அதிர்ச்சியடைந்ததற்கான அறிகுறி அவன் முகத்தில் விநாடி நேரம் தோன்றி மறைந்தது. “உம். உம்! என்ன கேட்டாய்?” என்று சொற்கள் ஆசையுடனும் அதிர்ச்சியுடனும் உதிர்ந்தன.

காஞ்சனாதேவியின் பார்வை மேலும் கனிந்தது. அவள் உடலும் அவனை நோக்கித் தாழ்ந்தது. “பிரமித்து விட்டீர்களே என்று கேட்டேன்” என்றாள் அவள் காதல் சொட்டிய ஒலியில் சொற்களைக் கூட்டி.

“பிரமிக்காமல் என்ன செய்ய முடியும் காஞ்சனா?” என்ற இளையபல்லவன் கேள்வியில் விபரீதத் தொனி இருந்தது.

காமம், உணர்ச்சிகளுக்குப் பெரிதும் திரை போடுகிறது. அது சில சமயங்களில் உலோகத் திரையாகவும் இருக்கிறது. அந்தத் திரை செய்யும் எதிரொலி பொய்யை மெய்யைப் போல் காட்டுகிறது. ஆகவே இளையபல்லவன் சொற்களில் ஒலித்த விபரீத ஒலிக்குத் தவறான அர்த்தமே செய்து கொண்ட காஞ்சனாதேவி தன் கண்களால் அவன் முகத்தை ஆசையுடன் துழாவினாள். “பிரமிக்காமல் இருக்க முடியாதா?” என்றும் கேட்டாள்.

“முடியாது. ” இளையபல்லவன் இந்த ஒரு சொல்லைத் தான் பதிலாகச் சொன்னான். அது எத்தனையோ ஆனந்தத்தை அளித்தது காஞ்சனாதேவிக்கு.

“முடியாதா? ஓகோ!” என்றாள் அவள் காதலும் விஷமமும் கலந்த உணர்ச்சிகள் முகத்தில் விளையாட.

“முடியாது. ” மறுபடியும் அதே பதில் வந்தது இளைய பல்லவனிடமிருந்து.

“ஏன் முடியாதாம்?”

“நிகழ்ச்சிகள் அப்படி ஏற்படுகின்றன. “

“எங்கு ?”

“கடல் புறாவில். “

இதை அடுத்து அவன் காதுக்கருகில் குனிந்த காஞ்சனா தேவி, “கடல் புறாவிலா, கடல் புறாவின் இந்த அறையிலா?” என்று வினவினாள் ரகசியமாக.

“இந்த அறையில்தான்” என்ற இளையபல்லவன் அவள் முதுகைத் தடவிக் கொடுத்தான். அவள் எழுந்திருக்காமல் பிடிக்கவும் செய்தான். அது பெரும் அனுகூலமாயிருந்தது இளையபல்லவனுக்குச் சாளரத்தைக் கவனிக்க. அவள் முதுகுப் பக்கத்தின் மூலம் நன்றாக அவன் கண்கள் சாளரத்தின் பகுதியில் ஏற்பட்ட ஒவ்வோர் அசைவையும் கவனித்தன. ஆகவே அவன் மார்பு மீதிருந்த காஞ்சனாதேவி அவன் பார்வையைத் தடுக்கும் வகையில் எழுந்திருக்க முயன்றபோது அவன் கைகள் அவளை இறுகப் பிடித்து எழுந்திருக்கவொட்டாமல் செய்தன.

காஞ்சனாதேவியின் உடலில் இன்ப உணர்ச்சிகள் வெகு வேகமாக ஓடத் தொடங்கின. “ஊஹும். இது சரியல்ல” என்றாள் காஞ்சனாதேவி.

“எது சரியல்ல?”

“இந்த நிலை. “

“ஏன்? இதற்கென்ன?”

“யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?”

“இப்பொழுது யாரும் பார்க்கவில்லையென்பது என்ன நிச்சயம்?”

இந்தக் கடைசி வார்த்தைகளை மிக ரகசியமாக அவள் காதில் படும்படியாகத்தான் சொன்னான் கடல் புறாவின் தலைவன். ஆனால் அதைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்த காஞ்சனாதேவி, “யார்? யார் பார்க்கிறார்கள்?” என்று வெட்கம் முகத்தைச் சிவப்பாக அடிக்க வினவினாள்.
இளையபல்லவன் இதழ்களில் இளநகை கூடியது. “யார் பார்த்தால் நமக்கென்ன?” என்று வினவினான்.

“என்ன அப்படிக் கேட்கிறீர்கள்?” என்று கோபிப்பவள் போல் கேட்டாள்.

“கேட்பதற்கு ஆதாரமிருக்கிறது” என்றான் இளைய பல்லவன் மெல்ல தகைத்து.

“என்ன ஆதாரமோ?”

“இலக்கிய ஆதாரம். “

“என்ன சமீபத்தில் ஒரே அடியாக இலக்கியத்தில் இறங்கி விட்டீர்கள்?”

” அத்தனை உதவுகிறது இலக்கியம். “

“இப்பொழுது உதவியிருக்கிறதா?”

“ஆம். உதவியிருக்கிறது. “

“எப்படி?”

“தன்னையே உதவியிருக்கிறது. நீயே இலக்கியமென்று நான் சொல்லவில்லையா!”

இதைக்கேட்ட காஞ்சனாதேவி புன்முறுவல் கொண்டாள். “ஆமாம், சொன்னீர்கள், சொன்னீர்கள். இன்னமும் சொன்னீர்கள்” என்று இதழ்களை மெல்ல விரித்துக் கூறினாள்.

“இன்னமும் சொல்லத்தான் சொல்வேன்” என்று இளைய பல்லவனும் பதில் சொன்னான்.

“என்ன சொல்வீர்கள்?”

“இலக்கியம் சொல்வதை. “

“இலக்கியம் என்ன சொல்கிறது?”

“காதலுக்கு கண்ணில்லை என்று. “

“அப்படியா!”

“ஆம். அதனால் என்ன ஏற்படுகிறது?”

“தெரியவில்லை. இந்த இலக்கியத்தில் நீங்கள் தான் கெட்டிக்காரர். சொல்லுங்கள்” என்றாள் காஞ்சனாதேவி விஷமமாக.

“காதலுக்கு கண்ணில்லை என்றால் காதலர்களுக்கும் கண்ணில்லை என்பது பொருள்” என்று இளையபல்லவன் பொருளை விளக்கினான்.

“நன்றாயிருக்கிறது வியாக்கியானம்!” என்றாள் காஞ்சனாதேவி.
“அது மட்டுமல்ல. காதலர்களுக்கு கண்ணில்லாததால் அவர்கள் தங்களைத் தவிர வேறெதையும், வேறு யாரையும் கவனிக்க முடியாது. ஆனால் மற்றவர்கள் அவர்களைக் கவனிக்க முடியும்?” என்றான் இளையபல்லவன். இதை அறை முழுவதும் எதிரொலிக்க இரைந்தே சொன்னான்.

“எதற்காக இதைச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள் காஞ்சனாதேவி.

“நான் முன் சொன்னதை நிரூபிக்க. “

“என்ன சொன்னீர்கள்?”

“நம்மை யாரும் பார்க்கவில்லையென்பது என்ன நிச்சயம் என்று கேட்டேனல்லவா?”

“ஆமாம் கேட்டீர்கள். “

“பார்த்திருக்கலாம் என்பதை நிரூபிக்க இலக்கியச் சான்று காட்டினேன். “

காஞ்சனாதேவி நகைத்தாள். “பாதகமில்லை. எதற்கும் இலக்கியம் வைத்திருக்கிறீர்கள்” என்றாள் நகைப்பின் ஊடே.

“எங்கள் இலக்கியத்தில் இது நிரம்ப உண்டு” என்றான் இளையபல்லவன்.

“எது?”

“காதல். “

“உங்கள் இலக்கியத்தில் இதுதான் முழுக்க முழுக்க இருக்கிறதாக்கும். “

“மனித உணர்ச்சியில் பிரதான உணர்ச்சி இன்பம். அதற்கு முக்கிய இடம் கொடுப்பதுதான் நல்ல இலக்கியத்துக்கு அடையாளம். இல்லையேல்… ” இந்த இடத்தில் சட்டென்று நிறுத்திய இளையபல்லவன், அந்த ஒற்றைக் கண் தகளியிலிருந்து அகன்று விட்டதையும் சாளரமும் மூடப்பட்டு விட்டதையும் கவனித்தான். அதன் விளைவாக அறுந்து போன இலக்கிய விமரிசனத்தைக் காஞ்சனாதேவியே தொடர்ந்தாள், “இல்லையேல்? என்ன சொல்லுங்களேன்” என்று.

இளையபல்லவன் கைகள் அவள் உடலை மீண்டும் உயர்த்தி அவள் கண்களை அராய்ந்தன. “இல்லையேல் இலக்கியம் வறட்டு இலக்கியம். சுவையற்றது, எங்கும் சுனையோ சோலையோ அற்ற பாலைவனம் போன்றது” என்று கூறிய அவன் அவள் எழிலைக் கண்களால் பருகினான்.

காஞ்சனாதேவி நகைத்தாள், முத்துப் பற்கள் பவள இதழ்களுக்கிடையே ஒளிவிட. “உங்களுக்கு வேதாந்தத்தில் நம்பிக்கையில்லை போலிருக்கிறது?” என்றும் கேட்டாள்.

“ஏனில்லை? நன்றாக இருக்கிறது” என்றான் இளைய பல்லவன்.

“அந்த வேதாந்தத்திலும் நீங்கள் சொன்ன அந்தப் பிரதான ரசம் இருக்கிறதாக்கும்?” என்று வினவினாள் காஞ்சனாதேவி.
“வெளிப்படையாக இல்லை. ஊடுருவி நிற்கிறது. “

“அப்படி யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. “

“இதுதான் உண்மை காஞ்சனா. வேதாந்தம் வறட்டுப் பாலைவனமல்ல. அறிவு, இன்பம் இரண்டும் கலந்தது வேதாந்தம். இல்லையேல் பெரிய வேதாந்திகள், முற்றுந் துறந்த முனிவர்கள் எழுதிய பேரிலக்கியங்களில் இன்பம் பிரதான இடம் பெற்றிருக்குமா?” என்று வினவினான்.

“வேதாந்திகளின் நூல்களில் இன்பத்துக்குப் பிரதானமா?”

“வான்மீகரும், வியாசரும், சுகரும் எழுதிய நூல்களை நீ படித்ததில்லை. தமிழ் முனிவர் வகுத்த குறளில் காமத்துப்பால் என ஒரு பகுதியே தனித்துப் பிரித்துவிடப்பட்டிருக்கிறது” என்ற இளையபல்லவன் அத்துடன் அந்தச் சர்ச்சையை முடித்துக்கொண்டு, “காஞ்சனா நேரமாகிறது? எனக்குக் கொஞ்சம் உணவு கொண்டு வா” என்று கூறினான்.

அவன் குரலில் ஒலித்த வேட்கையைக் கவனித்த காஞ்சனாதேவி மிகுந்த மகிழ்ச்சியுடன் பஞ்சணையிலிருந்து எழுந்து பக்கத்திலிருந்த தனது அறைக்குச் சென்றாள். அவள் சென்றதும் மீண்டும் தகளியை நோக்கித் தீவிர சிந்தனையில் இறங்கிய இளையபல்லவன் அக்ஷயமுனைக்கு எப்படியும் தன்னைக் கொண்டு போக மட்டுமின்றி, தனது நடவடிக்கை ஒவ்வொன்றையும் கண்காணிக்க அநபாயன் ஏற்பாடு செய் திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான்.

தான் மட்டும் மிகுந்த நிதானத்துடனும் ஆழ்ந்த யோசனையுடனும் நடந்து கொள்ளாவிட்டால், தான் நிச்சயமாக அக்ஷயமுனைக்குப் போக வேண்டியிருக்குமென்பதைத் தீர்மானித்தும் கொண்டான். அப்படி அக்ஷயமுனையைத் தான் அடைந்து விடும் பட்சத்தில் நீண்ட நாட்களாக ஸ்ரி விஜயத்தைப் பணிய வைக்கத் தான் செய்துள்ள ஏற்பாடுகள் பயனற்றுப் போகும் என்பதையும் உணர்ந்து கொண்டான் கடல் புறாவின் தலைவன்.

‘கடல் புறாவின் உண்மைச் சக்தியையும் என் சக்தியையும் அறியாததாலேயே அநபாயர் என்னை அகற்றவும் ஸ்ரி விஜயத்துடன் சமாதானம் நாடவும் ஏற்பாடு செய்கிறார். ஆனால் ஸ்ரி விஜயம் எந்தச் சமாதானத்துக்கும் தயாராயில்லை என்பது இவருக்குத் தெரியாது. ஆனால் சீக்கிரமே புரிந்து கொள்வார்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

ஆனால் அநபாயர் புரிந்து கொண்டபின் ஏற்படக் கூடிய நிலைமை மிகவும் பயங்கரமாயிருந்தது அவனுக்கு நினைக்கக் கூட. அநபாயர் அழைத்து வந்திருக்கும் ஐந்தாறு மரக்கலங்கள் ஸ்ரி விஜயத்தை எதிர்க்க முடியாது. எதிர்த்தாலும் முறியடிக்கப் படுவது நிச்சயம். அப்படியிருக்க, அநபாயர் எந்தத் தைரியத்தில் என்னை மூட்டை கட்டி அனுப்பி விட்டார்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

இத்தனையிலும் ஒரு விஷயம் மட்டும் அவனுக்கு ஆறுதலை அளித்தது. அநபாயனின் புத்திக்கூர்மையும் எந்த நிலையையும் எடை போடும் திறமையும் இணையற்றது என்ற உணர்வு பெரும் ஆறுதலாயிருந்தது அவனுக்கு. ஆகவே எப்படியும் வெகு சீக்கிரம் விஷயத்தை அநபாயன் புரிந்து கொண்டு தனது உதவியை நாடுவான் என்று தீர்மானித்துக் கொண்டான் இளையபல்லவன்.

இருப்பினும் ஒரு விஷயம் மட்டும் அவனுக்குக் கசப்பை அளிக்கவே செய்தது. நீண்ட காலம் பிரயத்தனம் செய்து கலிங்கத்தின் கடல் பலத்தை ஒடுக்கி ஸ்ரி விஜயத்துக்கும் பாடம் கற்பிக்கும் நிலைமை ஏற்படுத்திய சமயத்தில், தாழியை உடைக்க அநபாயர் முற்பட்டது அவனுக்குப் பெரும் துன்பத்தை அளித்தது. அவன் மனக்கண்ணில் ஏற்கெனவே ஸ்ரி விஜயத் தலைநகர் பிடிபட்டுவிட்ட கனவு மலர்ந்தது. சுவர்ணத் தீவின் கிழக்குப் புறத்திலும் கடாரத்தின் மேற்குப் புறத்திலும் ஏழு தமிழ் அரண்களைச் சிருஷ்டித்து விட்டுச் சொர் ண பூமி ஜலசந்தியில் தன் ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ளான். இந்தச் சமயத்தில் ஸ்ரி விஜயத் தலைநகர் மீது தாவுவது எத்தனை பயனளிக்கும் என்று எண்ணிய அவன் துன்பப் பெருமூச்சு விட்டான்.

இதற்கிடையில் எழுந்தது அக்ஷயமுனையின் அழகிய கடலோரம். மஞ்சளழகியும் கடலலைகளில் நடந்து வந்தாள், அவளை நினைக்க நினைக்க விவரிக்க இயலாத ஏக்கம் அவன் மனத்தில் விரிந்தது. அந்த ஏக்கத்தின் ஊடே ஒரு யோசனையும் பிறந்தது. அந்த யோசனை பெரும் சாந்தியை அளித்திருக்கவேண்டும் இளையபல்லவனுக்கு. அவன் முகத்தில் என்றுமில்லாத அமைதி நிலவியது. அவன் உதடுகள் குறுநகை கொண்டன. சில விநாடிகளில் பழைய இளையபல்லவனாகி விட்டான் அவன்.

ஆகவே உணவு எடுத்துக்கொண்டு காஞ்சனாதேவி வந்தபோது மிகவும் சகஜமாகச் சிரித்துப் பேசினான். அவளை அந்தப் பக்கத்து அறையிலேயே தங்கச் சொன்னதன்றி, “உன் அறைக்கும் என் அறைக்கும் இடையே உள்ள கதவைத் தாழிட்டுவிடு காஞ்சனா! நீ வருவதானால்கூடத் தளத்துப் பக்கமிருக்கும் ரகசியக் கதவு மூலம் வா” என்றான். .

“ஏன் அப்படி வரவேண்டும்? ஏனிதைத் தாழிட வேண்டும்?” என்று கேட்டாள் காஞ்சனாதேவி.
“தாழிடாவிட்டால் இது ஒரே அறை… ” என்றான் இளைய பல்லவன்.

“ஆம். “

“மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?”

இதைக்கேட்ட இளையபல்லவன் வாய்விட்டு நகைத்தான். தான் சற்று முன்பு கேட்ட அதே கேள்வியை அவன் சந்தர்ப்பம் பார்த்துத் திருப்பியதைக் கவனித்த காஞ்சனாதேவியும் நகைத்தாள். இந்த இன்ப நகைப்புடன் தான் கொண்டு வந்திருந்த பாலையும் அவன் வாயில் மெல்ல மெல்ல ஊற்றினாள். அவன் குழந்தைபோல் அருந்தினான். அதைக் குடித்ததும், “ஏன், வேறு ஏதும் உணவில்லையா?” என்று கேட்டான்.

“இருக்கிறது. அமீர் கொடுக்க வேண்டாமென்று சொன்னார். இந்த நிலையில் அதிக உணவு கொடுத்தால் வயிற்றில் தங்காதாம். “

“சரி, சரி, அவன் சொல்வது சரியாகத்தானிருக்கும். “

“என்ன அப்படித் திட்டமாகச் சொல்கிறீர்கள்!”

“என் உடல் நிலை அவனுக்குத்தான் நன்றாகத் தெரியும். “

“என்னை விடவா?”

“தற்சமயம் அப்படி. “

இந்தப் பேச்சுக்குக் காரணம் புரியவில்லை காஞ்சனா தேவிக்கு. இளையபல்லவன் ஏதோ வேடிக்கையாகப் பேசுவ தாகவே நினைத்தாள். ஆகவே சிறிது நேரத்திற்கெல்லாம் சந்துஷ்டியுடன் தனது அறைக்குச் சென்றாள்.

இளையபல்லவன் அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினான். மறுநாளும் சர்வசகஜமாகக் கழித்தான். மறுநாள் இரவே அவன் தலைக்கனம் பூராவும் இறங்கி விட்டதால் தன் அறையில் எழுந்து நடமாடினான். மூன்றாவது நாள் மாலை தளத்துக்கு வந்த இளையபல்லவன் தளம் பூராவும் உலவி, கடல் புறாவை அணு அணுவாகக் கவனித்தான். பிறகு திடீரென எதையோ நினைத்துக்கொண்டு நடுப் பாய்மரத் தண்டின் மீது தாவித் தொத்தி மேலே ஏறிச் சென்றான்.

சென்றவன் நீண்ட நேரம் அந்தப் பாய்மரத்தண்டின் உச்சிக்குச் சற்றுக் கீழேயிருந்த மரத்தண்டில் நீண்ட நேரம் சாய்ந்து நின்றான். அவன் முகத்தில் திடீரெனப் பூரண திருப்தி நிலவிற்று. அந்தத் திருப்தியுடன் வெகு வேகமாகக் கீழே இறங்கி வந்து தனது அறைக்குச் சென்றான். சென்றவன் சாளரக் கதவை உட்புறம் மூடித் தாழிட்டான். பிறகு தன் பெரும் மரப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த பேழை யொன்றை எடுத்துக் கொண்டான். அத்துடன் கீழே உட்கார்ந்து உளி, சில ஊசிகள், மரத்துண்டுகள் இவற்றைக் கொண்டு ஏதோ மும்முர வேலையில் இறங்கினான். “இது பலித்தால் என் திட்டமும் பலித்தது” என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன. கைகள் துரிதமாக வேலையில் இறங்கின.

Previous articleRead Kadal Pura Part 3 Ch42 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch44 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here