Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch44 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch44 | Sandilyan | TamilNovel.in

103
0
Read Kadal Pura Part 3 Ch44 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch44 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch44 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 44 : தவறு, திருத்தம், விளைவு!

Read Kadal Pura Part 3 Ch44 | Sandilyan | TamilNovel.in

கடல் புறாவின் முகப்பில் இருந்த தனது அறையின் பெரு மரப்பெட்டியைத் திறந்து அதிலிருந்த பேழையொன்றை எடுத்து அதன் உட்புறத்தைச் சிற்றுளியாலும் சின்னஞ்சிறு ஊசிகளாலும் மெல்லிய ரம்பத்தாலும் செப்பனிடத் தொடங்கிய இளையபல்லவன் அந்த அலுவலில் பாதி இரவைக் கழித்தான். தன் அறையின் மரத்தரையில் சப்பளம் போட்டு உட்கார்ந்தும், சில சமயங்களில் மண்டியிட்டு உட்கார்ந்தும் ஏதேதோ பேழையின் உட்புறத்தைப் பழுது பார்த்து முடுக்கிக் கொண்டிருந்த இளையபல்லவன் பாதி இரவு ஓடியதும் வேலை முடியவே அந்தப் பேழையிலிருந்த வஸ்துவைப் பலமுறை திருப்பியும் ஆட்டியும் பார்த்தான்.

அதன் விளைவாக அவன் முகத்தில் பூரண திருப்தி ஏற்படவே பேழையைப் பழையபடி பத்திரப்படுத்திவிட்டுப் பஞ்சணையில் வந்து தொப்பென்று விழுந்து கவலை தீர்ந்து விட்டதற்கான பெருமூச்சொன்றையும் விட்டு, உறங்கக் கண்களை மூடினான். மனத்தில் இருந்த பெரும் சுமையொன்று இறங்கி விட்டதால் அன்றிரவு நன்றாகத் தூங்கினான் இளைய பல்லவன். அந்தத் தூக்கத்தின் விளைவாகக் காலையில் எழுந்திருந்தபோது உடலும் புத்தியும் மிகச் சுறுசுறுப்பாக இருக்கவே, விடியற்காலைப் பனியைக்கூட அதிகமாகக் கவனிக்காமல் தளத்துக்கு வந்து தளத்தில் உலாவினான். இரண்டொரு சமயம் கடல் புறாவின் பக்கப் பலகை மீது குனிந்து கீழே மடிந்து கிடந்த அதன் இறக்கையையும், இறக்கையின்மீது வாரியடித்து வழிந்தோடி மரக்கலத்தின் வேகத்தைக் காட்டிய கடல் நீரின் பிளவையும் கவனித்தான்.

பிறகு தளத்தின் ஒரு கோடிக்குச் சென்று ஆங்காங்கு பணி புரிந்து கொண்டிருந்த மாலுமிகளிடம் வேடிக்கையாகப் பேசிக்கொண்டு காலத்தை ஓட்டினான். ஒருசமயம் கடல் புறாவின் மற்றொரு கோடியில் சுக்கானைப் பிடித்து உட்கார்ந்து கொண்டிருந்த கூலவாணிகன் சேந்தனிடம் போய் அவன் பக்கத்திலமர்ந்து கடல் புறாவின் புடைத்த பாய்களைக் கவனித்து மகிழ்ந்தான்.

படைத்தலைவன் வந்து பக்கத்தில் உட்கார்ந்தது பெரும் திருப்தியாயிருந்தது கூலவாணிகனுக்கு. அதை அவன் வாய்விட்டுப் பாராட்டவும் முற்பட்டு, “வெகு சீக்கிரம் குணமடைந்து விட்டீர்கள் படைத்தலைவரே,” என்று கூறினான் சேந்தன்.

பதிலுக்கு இளையபல்லவன் மெல்ல நகைத்துவிட்டுக் கேட்டான், “ஏன் சேந்தா! நான் குணமடைந்து விட்டது அத்தனை வியப்பாயிருக்கிறதா உனக்கு?” என்று.

ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை. முதலில் அசைத்த சேந்தன், “உங்களை அமீர் கடல் புறாவுக்குக் கொண்டு வந்தபோது பார்த்ததும் உண்மையில் பயந்தே விட்டேன்” என்று கூறினான்.

“அத்தனை மோசமாகவா இருந்தேன்?” இளையபல்லவன் வேடிக்கையாகக் கேட்டான்.

“ஆம். பார்ப்பதற்கு உயிருடனிருப்பதாகவே தெரிய வில்லை. “

“பிறகு ஏதாவது மருந்து கொடுத்தாயா?”

“இல்லை. அமீர் வேண்டாமென்று சொல்லிவிட்டான். அது மட்டுமல்ல, ஒரு விஷயம் எனக்குப் புரியவும் இல்லை. “

“என்ன புரியவில்லை உனக்கு?”

“நீங்கள் பெரு மயக்கத்திலிருந்தீர்கள். ஆனால் உங்கள் நாடி ஒரே சீராகப் பலமாக அடித்துக் கொண்டிருந்தது. மயக்கப்பட்டிருக்கும் யாருக்கும் நாடி லேசாக இருக்கும். பலவீனமாகவும் தெரியும். உங்கள் கதை விசித்திரம்” என்ற சேந்தன் இளையபல்லவனை நோக்கினான்.

அவன் சொற்களில் எத்தனை உண்மையிருந்த தென்பதைப் புரிந்து கொண்ட இளையபல்லவன், “ஆம் சேந்தா! என் கதையே ஒரு விசித்திரம். இன்னும் என்னென்ன விசித்திரம் நடக்கப் போகிறதோ?” என்று சொல்லி நகைத்தான்.

சேந்தனும் மெல்ல நகைத்தான். அதற்குக் காரணத்தை அறியாத இளையபல்லவன், “சேந்தா! ஏன் நகைக்கிறாய்?” என்று வினவினான்.

“இன்னும் என்ன விசித்திரம் நடக்கப் போகிறதோ என்றீர்களே, அதை நினைத்துச் சிரித்தேன்” என்றான் கூலவாணிகன்.

“அதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று மற்றுமொரு கேள்வியை வீசினான் இளையபல்லவன்.
“இப்பொழுது அக்ஷயமுனையை நோக்கி ஓடுகிறது கடல் புறா” என்றான் சேந்தன்.

“ஆம். “

“அங்கு பெரிய தொந்தரவு இருக்கிறதே உங்களுக்கு?”

“என்ன தொந்தரவு அங்கே? பலவர்மன்கூட இல்லையே?”

“பலவர்மன் இல்லாவிட்டாலென்ன? மஞ்சளழகி இல்லையா?”

“அவள் இருந்தால் நமக்கென்ன?”

“நமக்கு என்று சொல்லாதீர்கள் பொதுப்படையாக. “

“எனக்கு என்று சொல்ல வேண்டுமா?”

“ஆமாம். மஞ்சளழகி இருக்கிற இடத்தில் காஞ்சனா தேவியும் சேர்ந்தால் உங்கள் கதி-விசித்திரம்தான். சந்தேகமே யில்லை . “

இளையபல்லவன் மெல்ல நகைத்தான். “ஆமாம் சேந்தா! பெரும் தொல்லைதான் எனக்கு. அக்ஷயமுனைக்குப் போகாமலிருந்துவிட்டால் என்ன!” என்று கேட்ட இளையபல்லவன் பாய்மரங்களை நோக்கினான்.

கூலவாணிகன் அக்கம்பக்கத்தில் பார்த்துவிட்டுச் சொன்னான், “அதுதான் முடியாது” என்று.
இளையபல்லவன் மேலுக்கு வியப்பைக் காட்டி, “ஏன் முடியாது சேந்தா?” என்று வினவினான்.

“கடல் புறாவில் இருப்பவர்கள் யாரும் நீங்கள் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்” என்று ரகசியம் சொன்னான் சேந்தன்.

“நான் உங்கள் தலைவனல்லவா?” என்று கேட்டான் இளையபல்லவன்.

“தலைவர்தான், அதை யாரும் மறுக்கவில்லை … ” என்று இழுத்தான் சேந்தன்.

“பின்?”

“தலைவராயிருந்தாலும் தற்சமயம் உங்கள் சொல்லை யாரும் கேட்கமாட்டார்கள். “

“ஏன்?”

“அமீர் எல்லோரையும் தன் வழிக்குத் திருப்பியிருக் கிறான். “

“எப்படி?”

“உங்களைக் கடாரத்து அரண்மனையிலிருந்து கொண்டு வந்தானா?”

“எனக்கு எப்படித் தெரியும்?”

“சரி, சரி, தெரியாது. கொண்டு வந்தான். “

“உம். “

“உங்களை அக்ரமந்திரத்தில் படுக்க வைத்தான். படுக்க வைத்ததும் உங்களுக்குச் சிகிச்சை தேவையில்லை யென்றான். “

“அதற்கு எல்லோரும் ஒப்புக் கொண்டார்களா?”

“இல்லை. கண்டியத்தேவன் ஒப்புக் கொள்ளவில்லை. என்னை அழைத்துப் பரிசோதிக்கச் செய்தார். உயிருக்கு ஏதும் ஹானி இல்லையென்றேன் நான். பிறகுதான் அவரும் திருப்தி யடைந்தார். “

இளையபல்லவன் சில விநாடிகள் ஏதும் பேசவில்லை. பிறகு கேட்டான், “அடுத்தபடி என்ன செய்தான் அமீர்?” என்று.

கூலவாணிகன் தங்கு தடையின்றிப் பதில் சொன்னான். “மாலுமிகளைத் தளத்தில் கூட்டிக் கண்டியத்தேவருக்கெதிரில் அநபாயர் உத்தரவைப் படித்துக் காட்டினான். எல்லோரும் தலைதாழ்த்தி அந்த உத்தரவை ஏற்றார்கள். அந்தச் சமயத்தில்தான் காஞ்சனாதேவி விரைந்து படகொன்றில் வந்தார்கள். அவர்களை உங்களுக்குப் பணிவிடை செய்ய அனுப்பினான் அமீர். பிறகு நங்கூரமெடுத்தோம். நமது மற்ற மரக்கலங்களுக்கும் உத்தரவிடப்பட்டது, கடல் புறாவைத் தொடர்ந்து வர. கடல் புறாவின் சுக்கானைத் திருப்பி, அக்ஷய முனைக்குக் கப்பல் ஓட ஏற்பாடு செய்தான் அமீர். அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது” என்று சேந்தன் நடந்ததை நடந்தபடி விளக்கினான். மீண்டும் ஏதோ யோசித்தான். அவன் முகத்தில் லேசாகப் பயம் உதய மாவதைக் கண்ட இளையபல்லவன் கேட்டான், “ஏதாவது விஷயத்தை ஒளித்திருக்கிறாயா சேந்தா?” என்று.

“ஒரு விஷயமிருக்கிறது. ஆனால் சொல்லத்தான் பயமா யிருக்கிறது” என்று இழுத்தான் சேந்தன். இழுத்த குரலில் பயத்தின் ஒலி பூரணமாக இருந்தது.

“நானிருக்கப் பயமேன் உனக்கு?” என்று இளைய பல்லவன் அவனுக்குத் தைரியமூட்டினான்.

அந்தத் தைரிய வார்த்தைகள் ஏதும் பயனளிக்கவில்லை. “உங்கள்பாடே திண்டாட்டம். இதில் எனக்கு நீங்கள் என்ன உதவ முடியும்?” என்று கேட்டான் கூலவாணிகன்.

இளையபல்லவன் முகத்தில் குறுநகையின் சாயல் விரிந்தது. “அஞ்சாதே, சொல் சேந்தா” என்று கூறினான் இளையபல்லவன்.

இதைக்கேட்ட சேந்தன், “இளையபல்லவரே! நாமிருவரும் பேசுவதாகவே தெரிய வேண்டாம். நேராகப் பாருங்கள். என்னைப் பார்க்காதீர்கள்” என்று எச்சரித்துவிட்டுப் பாய்மரங்களைப் பார்த்த வண்ணம், “அமீரைப் பற்றி உங்கள் அபிப்பிராயத்தை நான் மாற்ற முடியாது. இருப்பினும் அவனிடம் எச்சரிக்கையாயிருங்கள்” என்று கூறினான்.
சேந்தன் பேச்சு எந்தவித வியப்பையும் இளையபல்லவ னுக்கு அளிக்கவில்லையாயினும் அவன் மேலுக்குக் குரலில் வியப்பைக் காட்டி, “நம் அமீரிடமா?” என்று கேட்டான்.

“ஆமாம், நம் அமீரிடம்தான்” என்ற சேந்தன், ‘நம்’ என்ற சொல்லை அளவுக்கதிகமாக அழுத்தித் தனது வெறுப்பைத் தெரிவித்தான்.

“அமீரிடம் எதற்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?”

“அவன் உங்களைக் கண்காணிக்கிறான். “

“என்ன! என்னைக் கண்காணிக்கிறானா?”

“ஆம், இளையபல்லவரே. “

“நீயே பார்த்தாயா?”

“ஆம். “

“என்ன செய்தான் அவன்?”

“நேற்றைக்கு முந்திய நாள் இரவு… ” என்று துவங்கிய சேந்தன் நிதானித்தான்.

“சொல் சேந்தா” என்று இளையபல்லவன் ஊக்கவே, “நேற்றைக்கு முந்திய நாள் இரவு உங்கள் அறையை நோக்கி நடந்தான் அமீர்… ” என்று துவங்கினான்.

“நடந்து?”

“அறைப் பக்கம் வந்ததும் அப்புறமும் இப்புறமும் திருடன் போல் பார்த்தான். பிறகு உங்கள் அறையில் தளத்துப்புறம் ஒரு சாளரம் இருக்கிறதே, அதை மெள்ளத் திறந்தான். “

“திறந்து என்ன செய்தான்?”

“திறந்து அறையைத் தன் கண்ணால் நீண்ட நேரம் ஆராய்ந்தான். “

இளையபல்லவன் பதிலேதும் சொல்லவில்லை. தலையை மட்டும் ஆட்டினான். சேந்தனே மேற்கொண்டு பேசினான். “அமீரின் போக்கு மிகவும் விசித்திரமாயிருக்கிறது இளைய பல்லவரே. அதுவும் கடாரத்து அரண்மனையில் இருந்து தங்களை எடுத்து வந்த நாட்களாக விசித்திரமாக நடந்து கொள்கிறான். அவன் உங்களிடம் திடபக்தியுள்ள பழைய அமீரல்ல. ஆகவே எச்சரிக்கையாயிருங்கள். தவிர… ” சற்று நிறுத்தினான் பேச்சை இந்த இடத்தில்.

“தவிர?”

“நான் சொன்னதை மட்டும் அவனிடம் சொல்லி விடாதீர்கள். என் கழுத்தை நெரித்து விடுவான் அமீர்” என்று கூறினான் சேந்தன். அந்தக் குரலில் பயத்தின் ஒலி ஊடுருவி யிருந்தது. முகத்திலும் பயத்தின் சாயை திடீரெனப் படர்ந்தது. கடல் புறாவின் மற்றொரு பகுதியிலிருந்து அமீர் தங்களிருவரையும் நோக்கி நடந்து வருவதைச் சேந்தன் கவனித்தான். அதனால் அவன் தேகமும் லேசாக நடுங்கியது. “அதோ அவன் வருகிறான்” என்று பிசாசைக் கண்டு நடுங்குபவன் போல் நடுங்கிக்கொண்டே உளறினான்.

இளையபல்லவன் இடதுகை பயப்பட வேண்டாமென்று சேந்தன் தொடையைப் பலமாக அழுத்தியது. தங்களை நோக்கி வந்த பிறகு வேறு திசையில் திரும்ப முயன்ற அமீரை, “அமீர்! வா இப்படி!” என்று இளையபல்லவனே வலுவில் அழைத்தான்.

அமீர் மீண்டும் அவர்களை நோக்கி நடந்து வந்தான். “உட்கார் இப்படி” என்று சற்று நகர்ந்து தன் பக்கத்தில் அமர அவனுக்கு இடமும் அளித்தான் இளையபல்லவன். அமீரின் கண்களில் சலனமிருந்தது. ஒரு விநாடி இளையபல்லவனைச் சந்தேகத்துடன் நோக்கினான் அவன். “என்மேல் உங்களுக்குக் கோபமல்லவா இருக்கவேண்டும்?” என்று வினவவும் செய்தான்.

இளையபல்லவன் அமீரின் முதுகை அன்புடன் தட்டிக் கொடுத்தான். “உளறாதே அமீர்! உன்னிடம் எதற்குக் கோபம் எனக்கு?” என்றும் கேட்டான்.

“உங்களை இஷ்ட விரோதமாக அக்ஷயமுனை அழைத்துப் போகிறேனே” என்றான் அமீர் அலுப்புடன்.

“நம் இஷ்டப்படி நாம் எந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது?” என்றான் இளையபல்லவன்.

“ஆம். செய்ய முடிவதில்லை படைத்தலைவரே! உமது ஆணை எதையும் மீற எனக்கு இஷ்டமில்லை. ஆனால் உங்கள் ஆணையையும் மீறிய ஆணை பிறந்துவிட்டது. அதை நான் நிறைவேற்ற வேண்டியவனாயிருக்கிறேன்” என்றான் அமீர்.

இளையபல்லவன் பதில் கூறிய போது அவன் குரலில் வருத்தமிருந்தது. “அந்தப் பொறுப்பு உனக்கு மட்டும்தானா?” என்று வினவினான் இளையபல்லவன் துன்பம் தொனித்த குரலில்.

“என்ன சொல்கிறீர்கள்?” அமீரின் கேள்வியில் வியப்பு இருந்தது.

“அநபாயரின் உத்தரவு உன்னைவிட என்னைத்தான் கட்டுப்படுத்தும். நீயாவது அரபு நாட்டவன். நானோ தமிழன். எங்கள் இளவரசர் கட்டளையை நான் எப்படி மீற முடியும்?”

“பின் உங்களுக்கு… ”

“அக்ஷயமுனை செல்ல இஷ்டமில்லைதான். இருப்பினும் அநபாயர் கட்டளை அரச கட்டளை. அதற்கு எந்தப் பிரஜையும் கீழ்ப்படிய வேண்டியவன். அப்படி இருக்க சோழர் படைத்தலைவனான நான் மட்டும் மீற முடியுமா?”

இளையபல்லவன் பேச்சு பெரும் புதிராயிருந்தது அமீருக்கு. இரண்டு நாட்களுக்கு முன்பு, “உன்னை ஏன் தூக்கி லிடக் கூடாது” என்று கேட்ட இளையபல்லவன் அடியோடு சுவடு மாறிப் பேசுவதைக் கண்டு உள்ளூர வியப்பும் சந்தேகமும் ஒருங்கே அடைந்தான் அமீர். அவன் உள்ளத்தில் எழுந்த சந்தேகம் இளையபல்லவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆகவே சொன்னான் படைத்தலைவன், “அமீர்! என் பேச்சு உனக்கு வியப்பாயிருக்கும். மதிமயங்கியிருந்த சமயத்தில் உன்னை ஏதேதோ சொன்னேன்.

சித்தம் தெளிந்ததும் உன் நிலைமை – உன் நிலைமை என்ன, என் நிலைமைகூட – எனக்குப் புரிந்துவிட்டது. சோழ சாம்ராஜ்யக் கொடியைத் தூரக்கிழக்கில் நாட்ட வந்த நானே சாம்ராஜ்யாதி பதியின் தூதரின் கட்டளைக்கு மாறாக நடந்தால் மற்றவர்கள் என்ன செய்யமாட்டார்கள்? நான் அநபாயர் இஷ்டத்துக்குப் பணிந்துதானாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அக்ஷயமுனைக்குச் செல்வதில் எனக்கு சொந்தக் கஷ்டங்கள் இருக்கின்றன. ஆனால் நான் அவற்றை எப்படிக் கவனிக்க முடியும்? சாம்ராஜ்ய நன்மை, தமிழர் பெருமை இவைதான் முன்னணியில் வைக்க வேண்டியவை. “

இளையபல்லவன் பேச்சைக் கேட்ட அமீர் சாந்திப் பெருமூச்சு விட்டான். “இப்பொழுதுதான் என் மனம் நிம்மதியடைந்தது, இளையபல்லவரே” என்றும் கூறி இளைய பல்லவன் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான். இளையபல்லவன் தன் கையால் அமீரின் பெரும் முதுகைத் தட்டிக் கொடுத்து, “சே! சே! இதென்ன அமீர்! பெரும்’ சதுரங்கத்தில் நாம் வெறும் காய்கள். இதில் நாம் செய்யும் குற்றம் எதுவுமில்லை. உன் நடத்தை எனக்குக் கஷ்டமாகத் தானிருந்தது. ஆனால் கடமையை முன்னிட்டு நான் அதை மறந்துவிட்டேன். போய் உன் அலுவலைக் கவனி” என்றான்.

அத்துடன் அமீர் சென்றான். இளையபல்லவன் பேச்சினால் பெரும் ஆறுதல் ஏற்பட்டிருந்தது அமீருக்கு. இருப்பினும் அமீரின் கூரிய புத்தி இளையபல்லவன் போக்கில் ஏதோ புரிந்துகொள்ள முடியாத அம்சம் ஒன்று இருப்பதாக அறிவுறுத்தியது. ஆனால் அது என்னவென்பது புரியவில்லை அமீருக்கு. தவிர, அடுத்த இரண்டு நாட்களில் கொஞ்ச நஞ்ச மிருந்த சந்தேகமும் நீங்கிவிட்டது அமீருக்கு. கடல் புறாவை ஆசையுடன் அக்ஷயமுனை மார்க்கத்தில் இளையபல்லவனே செலுத்தினான். கண்டியத்தேவனும் தானும் செய்த தவறைக் கூட இளையபல்லவன். திருத்தியது கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகத்தைக்கூடத் துடைத்துவிட்டது. அவர்கள் செய்த தவறை ஆறாவது நாள் இரவில் இளையபல்லவன் கண்டு பிடித்தான்.

அமீரையும் கண்டியத்தேவனையும் அழைத்து எச்சரித்தான். அந்த எச்சரிக்கை சரியென்று முதலில் புலப்பட வில்லை அவ்விருவருக்கும். பிறகு இளையபல்லவன் நிரூபித்த பின்தான் இருவரும் தவறை உணர்ந்தார்கள். தவறு துரிதமாகத் திருத்தப்பட்டது. ஆனால் அந்தத் திருத்தத்தின் விளைவு என்ன என்பதைக் கண்டியத்தேவனோ அமீரோ கடல் புறாவிலும் பின் வந்த மரக்கலங்களிலும் இருந்த மாலுமிகளோ யாரும் அறியவில்லை . அறிந்தது இளையபல்லவனைத் தவிர வேறொருவன். அவனுக்குக் கடல் புறாவிடம் தொடர்பு அற்றுப் போயிற்று. அவன் திகைத்தான். திண்டாடினான். பயனில்லை, விளைந்தது விளைந்துவிட்டது. விளைவு பயங்கரமாயிருந்தது. எண்ணிப் பார்ப்பதற்கும் பயங்கரமான விளைவு அது!

Previous articleRead Kadal Pura Part 3 Ch43 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch45 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here