Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch45 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch45 | Sandilyan | TamilNovel.in

141
0
Read Kadal Pura Part 3 Ch45 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch45 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch45 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 45 : வானத்தே பறவைகள்.

Read Kadal Pura Part 3 Ch45 | Sandilyan | TamilNovel.in

அந்தப் பயங்கர விளைவு கடாரத்தை விட்டுப் புறப்பட்ட எட்டாவது நாள் இரவில்தான் புலப்பட்டது, கடல் புறா மாலுமிகளுக்கு. அது புலப்பட்டபோது பரிகாரத்திற்கு வழி ஏதுமில்லாது போகவே கடல் புறாவிலும் மற்ற மரக்கலங் களிலுமிருந்தவர்கள் பெரும் திகைப்பையே அடைந்தார்கள். ஆனால் அந்த விளைவும் திகைப்பும் ஏற்படுவதற்கு முந்திய நாட்கள் மிக இன்பமாகவும் குதூகலமாகவும் கழிந்தன கடல் புறாவிலும் மற்ற மரக்கலங்களிலும். முக்கியமாகக் கடல் புறாவிலும் அதன் தலைவனுக்கும் அமீருக்குங்கூட உள்ளூரப் புண்கள் ஆறியிருக்க வேண்டும். பழையபடி இருவரும் மிகுந்த நட்புடனும் சகஜத்துடனும் நடந்து கொண்டார்கள்.

கடாரத்திலிருந்து புறப்பட்ட மூன்றாவது நாளே மயக்கம் அடியோடு நீங்கி, சுயநிலை அடைந்துவிட்ட இளையபல்லவன் நல்ல ஆகாரம் உண்டதாலும், காஞ்சனாதேவியின் பணிவிடையாலும், நான்காவது நாள் காலையிலேயே பூரண சக்தியைத் திரும்பப் பெற்றுவிட்டான். சுக்கானைப் பிடித் திருந்த சேந்தனுடன் பேசிய சமயத்தில் அவன் பார்வை யிலிருந்த தெளிவையும் பேச்சிலிருந்த உறுதியையும் கவனித்த அமீர், தான் படைத்தலைவனுக்கு அளித்த விஷப் புகை அவன் உடலிலிருந்து அடியோடு அகன்று விட்டதை உணர்ந்து பெரிதும் சாந்தியடைந்தான். அந்தச் சாந்தி அடுத்த நாள் பெருமகிழ்ச்சியையும் அமீருக்கு அளித்தது. இளையபல்லவன் கடாரத்துச் சம்பவத்தை அடியோடு மறந்து விட்டதை எண்ணிப் பெருமகிழ்ச்சி கொண்டான் அவன்.

ஆகவே ஐந்தாவது நாள் இரவில் இளையபல்லவன் காஞ்சனா தேவியையும் நடுப் பாய்மரத்தண்டில் ஏறவிட்டுத்தானும் அதில் ஏறிச் சென்றதைக் கண்டும் காணாதவன்போல் சிரித்துக்கொண்டே வேறு புறம் சென்றான். காஞ்சனா தேவியின் மையலில் இளையபல்லவன் அடியோடு மூழ்கி விட்டதாகவே தீர்மானித்த அமீர், காஞ்சனாதேவி பாய்மரத் தண்டில் ஏறுவதைத் தடுக்க கண்டியத்தேவன் முயன்ற போது அவனை இடைமறித்து, “தேவரே! நீர் எதற்காகத் தலையிடுகிறீர்?” என்று தேவனைக் கையைப் பிடித்து நிறுத்தினான்.

கையைப் பிடித்துத் தன்னை நிறுத்திய அமீரை ஆச்சரியத்துடன் பார்த்த கண்டியத்தேவன், “என்ன அமீர்? ஏன் தடுக்கிறாய் என்னை ?” என்று வினவினான்.

அமீரின் பெரு உதடுகள் விஷமத்துடனும் சங்கடத் துடனும் அசைந்தன. “காஞ்சனாதேவிக்கும் இளைய பல்லவருக்கும் உள்ள உறவுமுறை உமக்குத் தெரியாதா தேவரே?” என்று வினவினான் அமீர் லேசாகப் புன்முறுவலும் செய்து.

“தெரியும் அமீர். ” கண்டியத்தேவன் குரலில் கோபமே இருந்தது.

“தெரிந்திருந்தும் எதற்காகப் போகிறீர் அவர்களைத் தடுக்க?”

“பாய்மரத் தண்டில் காஞ்சனாதேவி ஏறுவது அபாய மல்லவா?”

“அபாயமிருந்தாலென்ன? உதவுவதற்குத்தான் இளைய பல்லவர் இருக்கிறாரே?”

“என்ன வேண்டிக் கிடக்கிறது இது?” என்று அலுத்துக் கொண்டான் கண்டியத்தேவன்.

“உமக்கேன்ய்யா இந்தத் தொல்லை? காதல் உச்சிக்குப் போகிறதே!” என்றான் அமீர்.

“வேறு இடமில்லை போலிருக்கிறது?”

“இல்லாமலென்ன? சில சமயங்களில் இருவரையும் பக்கப் பலகைகளுக்கு அருகே பார்க்கலாம், சில சமயங்களில் சுக்கான் பிடிக்கும் சேந்தனுக்கு அருகே பார்க்கலாம்… ” என்ற அமீரை இடைமறித்த கண்டியத்தேவன், “அங்கெல்லாம் அபாயமில்லை. பாய்மரத் தண்டு வழக்கமாக ஏறும் மாலுமிகளுக்கே வழுக்கும், அரண்மனையில் வளர்ந்த இளவரசிக்கு என்ன செய்யாது? எங்காவது விழுந்து கால் ஊனமானால் அநபாயர் நம்மைச் சும்மா விடமாட்டார்” என்றான்.

இதைக்கேட்ட அமீர் சிரித்துக்கொண்டு, “நம்மைச் சும்மா விடாமல் என்ன செய்வது? நாமா ஏறச் சொன்னோம் பாய்மரத்தில்?” என்று கூறிக்கொண்டே அகன்றான் அவ்விடத்தை விட்டு.

அப்பொழுதும் கண்டியத்தேவன் விடவில்லை. விடுவிடு என்று நடுப் பாய்மரத்தண்டு இருந்த இடத்துக்குச் சென்றான். அப்பொழுதுதான் கடாரத்து இளவரசி இரண்டு முழ உயரத்தில் ஏறி இடையே இருந்த இரும்பு வளையத்தில் காலை ஊன்றிக்கொண்டு நின்றிருந்தாள். அவள் தலை கீழே குனிந்து இளையபல்லவனைப் பார்த்தது. இளையபல்லவன் கைகள் அவள் இடுப்பைப் பிடித்து மேலே தூக்கிவிட முயன்று கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் அருகே சென்ற கண்டியத்தேவன் அவர்களிருவரையும் சில விநாடிகள் பார்த்துக்கொண்டு நின்றான். பிறகு குரலில் சலிப்புத் தட்டக் கேட்டான், “காஞ்சனாதேவிக்கு ஏன் இத்தனை கஷ்டம்?” என்று.

இளையபல்லவன் அவனைத் திரும்பிப் பார்க்காமல் காஞ்சனாதேவியை அடுத்த வளையத்தில் ஏற்றிவிட முயன்று கொண்டே, “இதில் கஷ்டமென்ன இருக்கிறது?” என்று வினவினான்.

“பாய்மரம் மாலுமிகளுக்கே வழுக்கும். ” கண்டியத்தேவன் குரலில் எச்சரிக்கை இருந்தது.

“ஆமாம். ” திரும்பிப் பாராமலே பதில் சொன்னான் இளையபல்லவன்.

“அப்படியிருக்க காஞ்சனாதேவிக்கு… ”

“கஷ்டமாயிற்றே என்று சொல்கிறாயா?”

“ஆமாம். “

“கஷ்டமென்று தெரிந்துதான் இன்று காலையில் இந்த வளையங்களை நடுப் பாய்மரத்தண்டில் பொருத்தினேன். “
இதைக்கேட்ட கண்டியத்தேவன் ஆச்சரியத்துடன் பாய்மரத் தண்டில் கண்களை ஓடவிட்டான். அடியிலிருந்து உச்சிக்குச் சற்றுக் கீழேயிருந்த மரத்தட்டு வரை வரிசையாக ஆறு இரும்பு வளையங்கள் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்ட கண்டியத்தேவன் அவற்றில் அதிகக் கஷ்டமில்லாமல் யாரும் ஏறிவிட முடியுமென்பதை அறிந்தான். ஆகவே சொன்னான்: “முன்னேற்பாடு செய்திருக்கிறீர்கள்” என்று.

“முன்னேற்பாடில்லாமல் எந்தக் காரியத்திலும் நான் இறங்குவதில்லை என்பது உமக்குத் தெரியாதா?” என்று இளையபல்லவன் வினவினான், அடுத்த வளையத்துக்கு காஞ்சனாதேவியைத் தூக்கிவிட்டுக் கொண்டே.

ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்த கண்டியத் தேவன் அப்புறமும் சற்றுத் தயங்கியதல்லாமல், தயக்கத்துடன் கேட்கவும் செய்தான், “இதில் ஏற வேண்டிய அவசிய மென்ன?” என்று.

“காஞ்சனாதேவி கடலழகைக் காண விரும்புகிறாள்” என்றான் இளையபல்லவன்.

“கீழே பக்கப் பலகையில் சாய்ந்து பார்த்தாலே தெரியுமே?”

“தெரியும். ஆனால் மேலேயிருந்து சுற்றிலும் நீண்ட தூரம் கண்ணை ஓட்டுவதுபோல் பக்கப் பலகையிலிருந்து பார்க்க முடியுமா?” “முடியாது. “

“அதனால்தான் காஞ்சனாதேவி உயரே செல்ல விரும்பு கிறாள்” என்று கூறிய இளையபல்லவன், கண்டியத்தேவனுடன் அதற்குமேல் பேசாமல் மேற்கொண்டு காஞ்சனா தேவியைப் பாய்மரத் தண்டில் ஏற்றுவதில் முனைந்தான். ஒரு வளையத்தில் அவள் கால்களை ஊன்றியதும், தான் கீழ் வளையத்திலிருந்து அவளைத் தழுவிய வண்ணம் அடுத்த வளையத்திலேறி அதற்கு மேலிருந்த வளையத்தில் அவளை ஏற்றி, மெள்ள மெள்ள எல்லா வளையங்களையும் தாண்டி மரத்தட்டிற்கு வந்தான். மரத்தட்டில் நின்றபடி பாய்மரத் தண்டில் சாய்ந்து கொண்ட காஞ்சனாதேவி எதிரே விரிந்த காட்சியைக் கண்டு அதன் வனப்பில் மனதைப் பறி கொடுத்தாள்.

இரவு அப்பொழுதுதான் புகுந்திருந்தது. கீழேயிருந்த மரக்கலத்தில் பந்தங்களும் விளக்குகளும் ஜாஜ்வல்யமாக எரிந்து கொண்டிருந்தன. அந்தக் காட்சியைக் கண்ட இரவு களில் ரசித்திருக்கும் காஞ்சனாதேவிக்கு, அந்த உச்சி மரத் தட்டிலிருந்து தெரிந்த அற்புதக் காட்சி பெரும் பிரமிப்பா யிருந்தது. மதியொளி அடியோடு இல்லாததால் எங்கும் இருள் மண்டிக்கிடந்தது. அந்த இருளில் கூட, கடலலைகள் நெடுந் தூரம் மட்டும் கறுப்புத் தூண்களாக மெல்ல உருண்டு கொண்டிருந்தன. ஆகாயம் தனது கறுப்புக் கம்பளியைப் பிரமாதமாக விரித்திருந்தது.

அதில் விசிறி எறியப்பட்ட வைரங்கள் போல் நக்ஷத்திரங்கள் ஜொலித்துக் கொண் டிருந்தன. நக்ஷத்திர வைரங்களாலான அந்த வானக் கம்பளம் கடலன்னையைச் சுற்றிலும் தொட்டுப் போர்த்தியிருந்தது. அதன் விளைவாக தொடுவானத்தருகே நக்ஷத்திரங்களை முத்தமிடக் கடலலைகள் முயன்று கொண்டிருந்தன. எல்லாம் தெளிவாகத் தெரியவில்லை காஞ்சனாவின் கண்களுக்கு. இருளின் விளைவாக அரைகுறையாகத்தான் தெரிந்தன. அந்த அரைகுறையே பேரின்பம் தந்தது கடாரத்துக் கட்டழகிக்கு.

பாய் காற்றில் ஆடியதால் அது பிணைக்கப்பட்டிருந்த பாய்மரத்தண்டும் லேசாக ஆடியது. அதன் மீது சாய்ந்திருந்த காஞ்சனாதேவியும் அத்துடன் ஆடினாள். இடதுகையால் அவளைத் தாங்கிப் பிடித்திருந்த இளையபல்லவனும் ஆடினான். என்ன இன்ப ஊஞ்சலாட்டம் அது! இயற்கையின் மென்மைக் கரங்கள் ஆட்டும் அந்த இன்ப ஊஞ்சலை வாழ்க்கையில் அந்த இடத்தில் தவிர வேறு எந்த இடத்திலும் காணமுடியாதென்று காஞ்சனாதேவி நினைத்தாள்.

இடையில் அழுந்திக் கிடந்த இளையபல்லவன் கரமும் எதிரே விரிந்த கடலும், வீசிய மென்காற்றும் ஊஞ்சலாட்டமும் எல்லாமே அவளைச் சொர்க்கலோகத்துக்கு இழுத்துச் சென்று கொண் டிருந்தன. அந்த ஆட்டம் மரத்தின் ஆட்டமல்ல, காதலர் மனத்தின் ஆட்டம் என்பதைப் புரிந்து கொண்டாள் காஞ்சனாதேவி. மெல்லிய சிரிப்பு ஒன்றும் அவள் உதடு களிலிருந்து மிக இன்பமாக உதிர்ந்தது.

இளையபல்லவன் அவள் முகத்தை உற்று நோக்கினான். அந்த இருட்டில் அவள் கண்கள் நக்ஷத்திரங்கள் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன. நெற்றிச் சுட்டியில் சுடர் விட்டுக் கொண்டிருந்த வைரத்தைவிட அந்த எழிலில் அவன் மெய்மறந்தான் சில விநாடிகள். பிறகு கேட்டான், “ஏன் சிரிக்கிறாய் காஞ்சனா?” என்று.

“இந்த ஊஞ்சலாட்டம். ” என்று சம்பந்தமில்லாமல் பதில் சொன்னாள் காஞ்சனாதேவி.
“அதற்கென்ன?”

“இதற்கிணையான இன்பத்தை நான் கண்டதில்லை. “

“கடலில் சஞ்சரிக்காத யாருமே கண்டிருக்க முடியாது?”

“கடலில் கவர்ச்சி … ”

“அத்தன்மையது. அதை ஒருமுறை அனுபவித்துவிட்டால் தரையில் வாழ யாரும் இஷ்டப்பட மாட்டார்கள். அமீர் இந்த வாழ்க்கைக்காகத்தானே பாலூர்ப் பெருந்துறையிலிருந்த தன் வாணிபத்தை ஏறக் கட்டிவிட்டான்?”

அந்தப் பழைய சம்பவம் காஞ்சனாதேவிக்கும் நினை விருந்தது. அந்தச் சமயத்தில் அது தங்களுக்காக அமீர் செய்யும் பெரும் தியாகம் என்று எண்ணினாள் அவள். ஆனால் இந்த ஊஞ்சலாட்டம், இந்த மகிழ்ச்சி, இயற்கை தரும் இந்த இன்பம், இதற்கு ஓர் அரசையே வழங்கலாமே’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் காஞ்சனாதேவி.

அவள் பதில் சொல்லாததைக் கண்ட இளையபல்லவன், “என்ன யோசிக்கிறாய் காஞ்சனா? நான் சொன்னதில் தவறு ஏதேனுமிருக்கிறதா?” என்று கேட்டான்.

“இல்லை. ஏதுமில்லை. ” இன்பமாக உதிர்ந்தது காஞ்சனாவின் பதில்.

“இந்த இன்பம் இணையற்றது காஞ்சனா. இதன் மகிமை..” என்று ஏதோ சொல்ல முயன்ற இளையபல்லவனை இடை மறித்த காஞ்சனா, “இளையபல்லவரைக் கூடப் பொய்யராக அடித்துவிட்டது” என்று கூறிக் கலகலவென நகைத்தாள்.

அந்த நகைப்பை அள்ளிச் சென்ற காற்று கூட நகைத்த தாகத் தோன்றியது இளையபல்லவனுக்கு. “என்ன! என்னைப் பொய்யனாக அடித்துவிட்டதா?” என்று வினவினான் வியப்புடன்.

“ஆம். “

“நான் எப்பொழுது பொய் சொன்னேன்?” என்று கேட்டான் இளையபல்லவன்.

“இப்பொழுதுதான். “

“இப்பொழுதுதானென்றால்?”

“சில நிமிஷங்களுக்கு முன்பு. “

“யாரிடம் பொய் சொன்னேன்?”

“கண்டியத்தேவரிடம். “

“என்ன பொய் சொன்னேன்?”

“நான் இந்த உச்சிக்கு வர விரும்புவதாகச் சொல்ல வில்லையா?”

“ஆமாம். சொன்னேன். “

“நானா விரும்பினேன்?”

“விரும்பாவிட்டால் மாட்டேனென்று சொல்வது தானே?”

காஞ்சனாதேவி மீண்டும் நகைத்துவிட்டுச் சொன்னாள்: “நன்றாயிருக்கிறது உங்கள் பேச்சு. நீங்கள் தானே சொன் னீர்கள் பாய்மரத்தண்டின் உச்சிக்கு வா, சொர்க்கத்தைக் காண்பாய் என்றெல்லாம்?”

“சொன்னது வாஸ்தவம். நீ முடியாதென்று மறுத்து விடுவதுதானே?” என்ற இளையபல்லவன் கரம் அவள் இடுப்பில் அழுந்தியது.

“மறுக்கக்கூடிய தோரணையிலா இருந்தது உங்கள் விளக்கமும் வீம்பும்?” என்ற காஞ்சனாதேவியின் குரல் பெரிதும் குழைந்தது.

அந்தக் குழைவுக் குரல் இளையபல்லவனைப் பெரிதும் கனிய வைத்தது. அவன் அவளை நெருங்கிச் சாய்ந்தான். அவளும் அவனை நோக்கிச் சாய்ந்தாள். பாய்மரத்தண்டில் சாய்ந்து கிடந்த அந்த இரு காதலர்களும் இயற்கையின் ஊஞ்சலாட்டத்தில் திளைத்து மௌனமாயினர். அவர்களின் இதயங்களிரண்டும் வானப் பறவைகள் போலே நெடுந்தூரக் கனவில் சிறகடித்து நெடுந்தூரம் பறந்தன.
அப்படி நீண்ட நேரம் நின்றிருந்த அந்த இருவரில் இளையபல்லவனுக்கு அருகே எங்கிருந்தோ பறந்து வந்த சிறு பறவையொன்று அவன் தோளில் உட்கார்ந்தது. அதைக் கண்டு பெரிதும் வியந்த இளையபல்லவன், “காஞ்சனா! இதோ பார்!” என்று கூவினான்.

காஞ்சனாதேவி அதைப் பார்த்தாள். “ஏது இது? எங்கிருந்து வந்தது?”

“கடலில் நீண்ட தூரம் பறக்கும் சிறு பறவை இனத்தைச் சேர்ந்தது இது,” என்று விளக்கினான் இளையபல்லவன்.

“நீண்ட தூரமென்றால் காதக் கணக்கில் பறக்குமா?”

“ஆம். மூன்று காதங்களுக்குமேல் பறக்கும். இது பறக்கும் காலமும் உண்டு. “

“எப்பொழுது பறக்கும்?”

“காற்று திசை மாறும்போது பறக்கும். “

“அப்படியானால் காற்று திசை மாறுமா?”

“ஆம் நாளைக்குள் மாறும். “

இதைச் சொன்ன இளையபல்லவன் முகத்தில் பெரும் திருப்தி ஏற்பட்டதைக் கண்ட காஞ்சனாதேவி அதற்குக் காரணம் புரியாமல் விழித்தாள். “காற்று மாறினால் நமக்கு அனுகூலமா?” என்று வினவினாள்.
“ஆம். “

“அதனால் என்ன பயன்?”

“சீக்கிரம் நாம் சேரவேண்டிய இடத்தை அடையலாம். “

“அக்ஷயமுனைதானே” என்று வினவினாள் காஞ்சனா தேவி.

“அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்” என்றான் இளையபல்லவன்.

அவன் பேச்சு விசித்திரமாயிருந்தது காஞ்சனாதேவிக்கு. அவன் உள்ளத்தின் ஆழத்தில் ஏதோ யோசனை உலாவுகிற தென்று புரிந்து கொண்டாள் அவள். இருப்பினும் அது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை அவளால். ஆகவே, “என்ன புதிர் போடுகிறீர்கள்?” என்று கேட்டாள் அவள்.

“கடல் சஞ்சாரத்தில் எது எப்படியாகுமென்று திட்டமாகச் சொல்ல முடியாது காஞ்சனா. இதோ இப்பொழுது அடிக்கிறது இன்பக் காற்று. இதே துன்பக் காற்றாக மாறினாலும் மாறலாம். வாழ்க்கையைப் போலத் தான் கடலும் நிலையற்றது, எப்படியும் மாறும் தன்மை யுள்ளது” என்றன் இளையபல்லவன் சகஜமாக. அவன் தத்துவம் பேசுவது போலிருந்தாலும் அது தத்துவமல்ல என்பதைப் புரிந்து கொண்டாள் அவள்.

“ஏதாவது மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்களா?” என்று வினவினாள்.

“ஆம். “

“என்ன மாற்றம்?”.

“இந்த மாதிரிப் பறவைகள் பல, நாளை முதல் கடல் புறாவுக்குக் குறுக்கே பறந்து வரும். “

“அந்தக் காட்சி இன்பமாயிருக்குமே. “

“இருக்கும். ஆனால் அதைத் தொடர்ந்து மூன்றாம் நாள் வானம் கறுக்கும். “

“மழை பெய்யுமா?”

“பெய்தாலும் பெய்யும். இல்லாவிட்டாலும் இல்லை. ஆனாலும் நாளை இரவு முதலே நக்ஷத்திரங்களைக் காண முடியாது. “

அப்படி இரவில் கறுத்த வானத்தையும் ஊடே பறந்து வரும் சிறு பறவைகளையும் எண்ணிப் பார்த்த காஞ்சனாதேவி அதுவும் கண்ணைக் கவரும் காட்சிதானென்று நினைத்தாள். “அந்தப் பறவைகளில் இரண்டை எனக்குப் பிடித்துத் தருவீர்களா?” என்றும் கேட்டாள்.

பிடித்துத் தருவதாக ஒப்புக்கொண்டு அதற்காக மறுநாள் பாய்மரத்தண்டிலும் ஏறி இரண்டு பறவைகளைப் பிடித்துக் கொண்டும் வந்தான். வந்ததும் பறவைகளைக் காஞ்சனா தேவியிடம் கொடுத்துவிட்டு, “அமீர்! கண்டியத்தேவரே!” என்று கூவினான் பெரிதாக.
அந்தக் கூச்சலைக் கேட்ட அமீரும், கண்டியத்தேவனும் இரைக்க இரைக்க ஓடிவந்தார்கள். அவர்களை நோக்கித் தீவிழி விழித்த இளையபல்லவன், “நீங்கள் மாலுமிகள்தானா?” என்று சீறினான்.

“என்ன நேர்ந்துவிட்டது இப்பொழுது” என்று மிரண்டு வினவினான் அமீர்.

“கடல் புறா திசை மாறிப் போகிறது. அக்ஷயமுனை மார்க்கம் இதல்ல” என்று கூறினான் இளையபல்லவன். இதைக்கேட்ட இருவரும் அசைவற்று திகைத்து நின்றனர்.

ஏற்பட்ட தவறைச் சுட்டிக் காட்டினான் இளைய பல்லவன். தவறை அறிந்த இருவரும் அதைத் திருத்த வெகு வேகமாக விரைந்தார்கள். அவர்கள் விரைந்ததும் இளைய பல்லவன் மட்டும் விரையவில்லை. காஞ்சனாதேவியை அணுகி, “பறவைகள் எப்படி இருக்கின்றன?” என்று கேட்டான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch44 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch46 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here