Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch46 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch46 | Sandilyan | TamilNovel.in

105
0
Read Kadal Pura Part 3 Ch46 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch46 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch46 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 46 : பறவைகள் அளித்த கற்பனை.

Read Kadal Pura Part 3 Ch46 | Sandilyan | TamilNovel.in

கடாரத்திலிருந்து கடல் புறா புறப்பட்ட ஐந்தாவது நாளிரவில், அதன் நடுப் பாய்மரத்தண்டின் உச்சியில் இயற்கை சுற்றிலும் விரித்திருந்த கருமையின் சூழ்நிலையில், இன்ப ஊஞ்சலாட்டத்தில், உள்ளத்தையெல்லாம் கொள்ளை போகவிட்டுச் சொக்கிக் கிடந்த காஞ்சனாதேவிக்கு இளைய பல்லவன் தோளிலே வந்து உட்கார்ந்த சின்னஞ்சிறு பறவையும் அதைப்பற்றி அவன் சொன்ன தகவல்களும் விவரிப்பதற்கும் அப்பாற்பட்ட இன்பத்தை அளிக்கவே, அவள் பேசும் சக்தியைக்கூட நீண்ட நேரம் இழந்து கிடந்தாள். அப்படி இயற்கையின் வனப்பில் நெஞ்சத்தை நெகிழவிட்டுக் கிடந்த கடாரத்தின் அஞ்சுகத்தை மெள்ளக் கீழே இறக்கிக் கொண்டு வந்த இளையபல்லவன், கீழே வந்த பின்பும் அவள் பேசும் சக்தியை இழந்து கிடந்ததைக் கண்டு மெல்ல நகைத்தான்.

அந்த நகைப்பில் இயற்கையளித்த மயக்கத்திலிருந்து சற்று விடுபட்ட காஞ்சனாதேவி, “ஏன் நகைக்கிறீர்கள்?” என்று வினவினாள்.

“ஒரேயடியாகப் பேசா மடந்தையாகி விட்டாயே என்பதை நினைக்க நகைப்பு வந்தது,” என்ற இளையபல்லவன் அவளை இடையைப் பற்றி அழைத்துக்கொண்டு தனது அறையை நோக்கி நடக்க முற்பட்டான்.

காஞ்சனாதேவியின் கால்கள் அறைப் பக்கம் போக இஷ்டப்படாமல் சத்தியாகிரகம் செய்யவே அவளை நோக்கிய இளையபல்லவன், “ஏன் காஞ்சனா! அறைக்குப் போக வேண்டாமா?” என்று வினவினான் வியப்புடன்.

இடையை அவன் கையிலிருந்து விடுவிக்காமலே மரக் கலத்தின் பக்கப் பலகையை நோக்கித் திரும்பிய காஞ்சனா தேவி, “அறையில் என்ன இருக்கிறது?” என்று கேட்டாள்.

அவள் இடை தன் கையை வேறு பக்கம் இழுப்பதைக் கண்டதுமே அவள் நோக்கத்தைப் புரிந்துகொண்ட இளைய பல்லவன் அவள் சொற்களைக் கேட்டதும் இயற்கை அவளை எத்தனை தூரம் ஆட்கொண்டிருக்கிறதென்பதைப் புரிந்து கொண்டாலும் ஏதுமறியாதவனைப்போல், “என்ன! அறையில் என்ன இருக்கிறதா!” என்று மேலுக்கு வியப்பைக் காட்டி ஒரு கேள்வியையும் கேட்டு வைத்தான்.

“ஆம். அறையில் என்ன இருக்கிறது?” என்று திட்ட வட்டமாகக் கேள்வியைத் திருப்பினாள் காஞ்சனாதேவி.

“என்ன இல்லை அறையில்?” என்று தானும் ஒரு கேள்வியை வீசினான் இளையபல்லவன்.

“இந்த வானம் இருக்கிறதா?” நக்ஷத்திரங்களைத் தாங்கி நின்ற வானத்தைக் காட்டிக் கேட்டாள் காஞ்சனாதேவி.

“வானம் அங்கு எப்படியிருக்கும்? கூரை மறைக்கிறதே?”

“உங்கள் அறைக் கூரை என்ன லட்சணம்?”

“கூரை மரப் பலகைகளில் சித்திர வேலையைப் பார்க்க வில்லையா நீ?”

“இந்த வானக் கூரையின் சித்திர வேலையைப் பாருங்கள். அப்பப்பா! எத்தனை கோடுகள்! எத்தனை வைரக் கொத்துக்கள்! உங்கள் அறைக் கூரை இதைவிடச் சிறந்ததா?”

இளையபல்லவன் வானத்தின் மீது சில விநாடிகள் கண்களை ஓட்டினான். பிறகு ஏதும் பேசாமல் காஞ்சனா தேவியுடன் மரக்கலத்தின் பக்கப் பலகையை அடைந்தான். காஞ்சனாதேவி அதில் நன்றாகச் சாய்ந்து கொண்டு தலையை அண்ணாந்து கொண்டு மெல்ல வீசிக் கொண்டிருந்த இன்பமான காற்றை நாசியால் நுகர்ந்து நன்றாக இழுத்தாள். அவள் கண்கள் பாதி மூடிக்கிடந்தன. அப்பொழுதும் ஓரிரு பறவைகள் நடுப் பாய்மரத்தண்டில் எங்கிருந்தோ வந்து உட்கார்ந்தன. உட்கார்ந்தது மட்டுமல்ல, அவளை நோக்கவும் செய்தன.

“பார்த்தீர்களா! அதோ, அந்தப் பறவைகள் மீண்டும் வந்திருக்கின்றன” என்று தன் கையால் சுட்டிக்காட்டினாள் காஞ்சனாதேவி நடுப் பாய்மரத்தண்டை.

அதுவரை அவள் எதிரே நின்றிருந்த இளையபல்லவனும் பக்கப் பலகையில் சாய்ந்துகொண்டு அந்தப் பறவைகளை நோக்கினான். “ஆம். மீண்டும் வந்திருக்கின்றன,” என்று ஏதோ யோசனையுடன் சொன்னான்.

“இந்தப் பறவைகள் கடாரத்தில் கிடையாது” என்றாள் அவள்.
“கிடையாது. ” இளையபல்லவனின் இந்தப் பதிலிலும் ஆழ்ந்த யோசனை தெரிந்தது.

“வேறு எங்கிருந்து வருகின்றன இவை?”

“சொர்ணத் தீவிலிருந்து!”

“அப்படியானால் நாம் அக்ஷயமுனையைக் கிட்டி விட்டோமா?”

“இல்லை. “

“அக்ஷயமுனைக்கும் நமக்கும் இப்பொழுது எத்தனை தூரமிருக்கும்?”

“இந்தப் பறவைகள் வருவதிலிருந்து மூன்று காதத்துக்குள் இருக்கவேண்டும். “

அவன் பேச்சில் உண்மையில்லைபோல் தோன்றியது காஞ்சனாதேவிக்கு. தான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அனாயாசமாகவும் அலட்சியமாகவும் வந்தது போல் தோன்றியது கடாரத்து இளவரசிக்கு. ஆகவே கோபத்துடன் சொன்னாள் அவள், “இங்கு நிற்பது உங்களுக்கு இஷ்டமில்லையென்றால் அறைக்கே போய்விடலாம்” என்று.

“இஷ்டமில்லையென்று யார் சொன்னது காஞ்சனா!” என்று சமாதானப்படுத்த முயன்றான் இளையபல்லவன்.
ஆனால் காஞ்சனாதேவி சமாதானமடையவில்லை. “இஷ்டமில்லையென்று வாயால் சொல்லவேண்டியதில்லை” என்றாள் அவள், கோபம் ததும்பிய விழிகளை அவன் மீது நாட்டி.

“வேறு எப்படி உணர்த்தினேன்?”

“குரலே சொல்லுகிறதே. “

“அப்படி எதையும் குரலில் நான் காட்டவில்லையே?”

காஞ்சனாதேவி மேற்கொண்டு பேச விரும்பாமல் சரேலென்று கிளம்பி விடுவிடு என்று அக்ரமந்திரத்தை நோக்கி நடந்தாள். “காஞ்சனா! இரு இரு,” என்று இருமுறை இளைய பல்லவன் விளித்ததைக்கூட அவள் லட்சியம் செய்யாமல் விரைந்து சென்றாள். அவள் போவதைப் பார்த்துக் கொண்டு பக்கப் பலகையிலேயே சாய்ந்து நின்றான் படைத்தலைவன். அவள் கோபத்துடன் நடந்து சென்றதால் அவள் பின்னழகு எத்தனை கவர்ச்சிகளை அள்ளித் தெளித்தன என்பதைப் படைத்தலைவன் கண்கள் கண்டாலும் அவன் உள்ளம் மட்டும் அந்த அழகில் லயிக்கவில்லை.

அவள் அழகையும் அணுகவிடாத முக்கிய யோசனைகள் பல அவன் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததால், அவன் பக்கப் பலகையில் நின்றவண்ணம் பல திசைகளில் தலையைத் திருப்பி மெல்ல வந்து கொண்டிருந்த கடற்காற்றை நாசியால் நுகர்ந்தான். பிறகு புடைத்திருந்த பெரும் பாய்களைக் கவனித்தான். அந்த நடுப் பாய்மரத்தண்டில் அப்பொழுதும் உட்கார்ந்திருந்த இரு சின்னஞ்சிறு பறவைகளைக் கவனித்தான்.

அந்தப் பறவைகளிரண்டும் தமிழகத்தில் சாதாரணமாகக் காணப்படும் மைனாவைப் போலவே இருந்தாலும் மைனாவின் நீள உடல் அவற்றுக்கில்லை. உடல் உருண்டு குண்டாகக் கடற் சங்குகள் போல் இருந்தன. பல வர்ணக்கடல் சங்குகளைப் போலவே அந்தப் பட்சிகளிலும் பல வர்ணங்களுண்டு என்பதை அறிந்திருந்த இளையபல்லவன், அவை ஒன்றுக்கொன்று மூக்குகளால் குத்தி விளையாடிக் கொண்டிருந்ததைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு அறையை நோக்கி நடந்தான். அக்ரமந்திரத்துக்குள் நுழைந்ததும் உக்கிரமாகப் பஞ்சணையில் உட்கார்ந்திருந்த காஞ்சனாதேவியைக் கண்ட இளையபல்லவன் அவளை மெல்ல அணுகி, “தேவியின் கோபம் சாந்தப்படவில்லை போல் தெரிகிறது” என்றான்.

அந்தக் கேள்விக்குக் கடாரத்து இளவரசி பதில் ஏதும் சொல்லவில்லை. பஞ்சணையிலிருந்து சட்டென்று எழுந் திருந்த காஞ்சனாதேவி தனது அறைக்குள் செல்ல இரண்டடி எடுத்து வைத்தாள்.

“அந்தக் கதவு மறு புறத்திருந்து தாழிட்டிருக்கிறதே, நினைப்பில்லையா உனக்கு?” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

இரு அறைகளுக்குமிருந்த இடைக்கதவைத் தாழிட்டுத் தன்னை தளத்தில் பக்கமிருந்த சிறு வாயில் வழியாக வெளியே போய்வர இளையபல்லவன் பணித்திருந்ததை அப்பொழுது தான் உணர்ந்த காஞ்சனாதேவி சட்டென்று மறுபுறம் திரும்பி அறையின் பிரதானக் கதவை நோக்கிச் செல்ல முயன்றாள். அவள் கதவை அடையுமுன்பே அந்தக் கதவை அடைந்து அதைச் சாத்திக் கொண்டு நின்ற இளையபல்லவன், “காஞ்சனா! என்ன கோபம் இது? காரணமில்லாத கோபம்?” என்று கெஞ்சினான்.

“காரணம் இருக்கிற கோபம்தான். ” முரட்டுத்தனமாக உதிர்ந்தது அவள் இதழ்களிலிருந்து சொற்கள்.

“என்ன காரணமோ?”

“நீங்கள் அறைக்கு வர ஏன் இத்தனை நேரம்?”

“பக்கப் பலகையில் சாய்ந்திருந்தேன். “

“இயற்கையழகை ரசித்துக் கொண்டு. “

“இல்லை , இல்லை . “

“ஆம், ஆம். “

“அதற்காக நிற்கவில்லை காஞ்சனா. “

“வேறெதற்கு? பறவைகளைப் பார்க்கவா?”

“ஆம்” என்ற சொல் தவறி வந்துவிட்டது இளைய பல்லவன் வாயிலிருந்து. அவ்வளவுதான், காஞ்சனா எரிமலை யானாள். “ஏன் அந்தப் பறவைகளை நான் பார்க்கக் கூடாதோ? நீங்கள் பார்த்தால்தான் புதுப் புதுக் கற்பனைகள் உதிக்குமோ?” என்று விடுவிடு எனச் சொற்களைக் கொட்டிய காஞ்சனாதேவி அவனருகே வந்து, “தயவு செய்து வழியை விடுங்கள்” என்றாள்.
அவள் இரு தோள்களையும் இறுகப் பிடித்தான் இளைய பல்லவன். “இப்படி வா காஞ்சனா. உனக்குச் சில உண்மை களைச் சொல்கிறேன்,” என்று அவளை அழைத்துக் கொண்டு போய் பஞ்சணையில் தனது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு கூறினான், “காஞ்சனா, நீ சொன்னதில் உண்மை யிருக்கிறது” என்று.

“என்ன உண்மை?” காஞ்சனாவின் குரலில் அப்பொழுதும் கடுப்பு இருந்தது.

“பறவைகளைப் பார்க்கும்போது புதுப் புதுக் கற்பனைகள் எனக்கு உதிக்குமோ என்று கேட்டாயல்லவா?”

“ஆம் கேட்டேன். “

“உண்மையில் புதுப் புதுக் கற்பனைகள் எனக்கு உதிக்கும். “

“எனக்கு உதிக்காதோ?”

“எனக்கு உதிக்கும் அளவுக்கு உனக்கு உதிக்காது. “

“ஏன்? என் அறிவு… ”

“சேச்சே! உன் அறிவைப்பற்றி நான் குறை சொல்ல வில்லை . “

“வேறெதைப் பற்றியாம்?”

“அனுபவத்தைப் பற்றி. உன்னைவிட எனக்குக் கடல் பயணத்தில் அனுபவம் அதிகம். ஒப்புக்கொள்கிறாயா இல்லையா?”

“உம்! உம்!” அரைகுறை மனத்தோடு ஒப்புக்கொள்வதற்கு அறிகுறியாக அந்த இரண்டு ‘உம்’களையும் வெளியிட்டாள் காஞ்சனாதேவி.

“ஆகவே கேள். இந்தப் பறவைகள் பல புதுக் கற்பனை களை எனக்கு அளிக்க முடியும். உனக்கே தெரியும். எனக்குப் பறவைகள் அளிக்கக்கூடிய கற்பனைகளும் உண்மைகளும் அதிகம்” என்று உணர்த்தினான் இளையபல்லவன்.

“எப்படி எனக்குத் தெரியும்?” என்று வினவினாள் காஞ்சனாதேவி.

“நன்றாகச் சிந்தித்துப் பார். “

“சிந்தித்துப் பார்த்தேன், புரியவில்லை. நீங்களே சொல்லுங்கள். “
இளையபல்லவன் பஞ்சணையில் உட்கார்ந்தபடி அறையின் மரத்தரையை நோக்கிக்கொண்டு சொன்னான் “காஞ்சனா! உன் நினைப்பைக் கடந்த காலத்துக்கு ஓட்டு’ என்று .
“கடந்த காலமா?”

“ஆம்! பாலூர்ப் பெருந்துறையில் நாம் சந்தித்த காலத்துக்கு. ” அவள் எண்ணங்கள் அந்தக் காலத்துக்குப் பின்நோக்கி ஓடின. அவள் பாலூர்ப் பெருந்துறை வெளி நாட்டுப் பிரமுகர் வீதியிலுள்ள அந்த மாடியறையை நினைத்தாள். அதனால் உடல் புல்லரிக்க, “ஆம்! ஓர் அறையில் வந்து குதித்தீர்கள் திருடன் போல்” என்றாள்.

“திருடன் போல்தான். எதையும் திருடவில்லை” என்றான் இளையபல்லவன்.

“ஏன் திருடவில்லை? என் இதயத்தைத் திருடினீர்கள்,” என்ற காஞ்சனாதேவி இன்பப் புன்முறுவல் கொண்டாள்.

“அப்படியானால் நீயும் திருடிதான். என் இதயத்தை நீ மட்டும் திருடவில்லையா?” என்ற இளையபல்லவன், “அது கிடக்கட்டும் காஞ்சனா! நானும் நீயும் உன் தந்தையும் உட்கார்ந்திருந்தபோது அறைச் சாளரத்தில் வந்து உட்கார்ந்ததே ஒரு பறவை ” என்று மேலும் ஏதோ சொல்லப் போனவனை இடைமறித்த காஞ்சனாதேவி, “ஆமாம், வெண் புறா வந்தது! எத்தனை அழகு அது!” என்றாள்.

“ஆம் காஞ்சனா, மிக அழகிய வெண்புறா அது. உனக்கு அதன் அழகு மட்டும்தான் தெரிந்தது. ஆனால் என் அறிவு அத்துடன் திருப்தியடையவில்லை. “

“ஆம், ஆம், நினைப்பிலிருக்கிறது. நீங்கள்தான் அது தூதுப் புறா என்று கண்டுபிடித்தீர்கள். “

“என் கற்பனை உன் கற்பனைக்கு அப்பாலும் ஓடியது அந்தப் புறாவைக் கண்டதும். அதன் உடலிலிருந்து அநபாயரின் தூதுச் செய்தியை எடுக்கவில்லை நான்?”

“ஆம் எடுத்தீர்கள். “

“பிறகு அன்றிரவு.-“

“உங்கள் அறையை நோக்கி அந்த வெண்புறா ஓடி வந்தது. “

“தவறு. “

“என்ன தவறு?”

“ஓடி வந்தவை இரண்டு வெண்புறாக்கள். நீயும் அன்றிரவு வெண்பட்டுத்தான் கட்டியிருந்தாய். “

“நன்றாய் இருக்கிறது! கற்பனை அளவு மீறிப் போகிறது. “

“நான்தான் சொன்னேனே பறவைகளைக் கண்டால் என் கற்பனை அதிகமாகுமென்று. அந்தத் தூதுப் புறா கொடுத்தது ஒரு வீட்டுப் புறாவை. அந்த வீட்டுப்புறாவின் நினைப்பி லிருந்து எழுந்தது கடல் புறா. “

பழைய நினைவுகள் காஞ்சனாதேவியின் சிந்தனையில் வலம் வந்தன. அவன் தன்னை வீட்டுப் புறாவென்றும் மறுநாள் மரக்கலத்தில் செல்ல இருந்ததால் கடல்புறா வென்றும் அமீர் விடுதியின் தனி அறையில் தாங்களிருவரும் தனித்திருந்த இரவில் கூறியிருந்தது நன்றாக நினைப்பில் சுழன்றது அவளுக்கு. அந்த நினைப்பினாலேயே அவன் அந்த மரக்கலத்துக்குக் கடல்புறாவெனப் பெயர் சூட்டினானென்ப தையும் உணர்ந்திருந்தாள் அவள். ஆகவே முணுமுணுத்தாள், “ஆம் ஆம்! பறவைகள் உங்களுக்கு அளவற்ற கற்பனைகளை அளிக்கின்றன” என்று.

இளையபல்லவன் அவளை இறுக அணைத்துக்கொண்டு “இன்னும் பார் காஞ்சனா, இந்தப் பறவைகள் எனக்களித்துள்ள கற்பனையின் விளைவை? நாளை முதல் இன்று பார்த்ததுபோல் பலப்பல வர்ணங்களில் பலப்பல பறவைகள் தளத்தில் குறுக்கும் நெடுக்கும் பறக்கும். சின்னஞ்சிறு குண்டு குண்டு பறவைகள், எல்லாவற்றுக்கும் மஞ்சள் மூக்கு, ஆனால் உடலோ மஞ்சள் நிறம், மேகவர்ணம், வெள்ளை வர்ணம், வெள்ளையில் கறுப்புத் திட்டுகள், இப்படிப் பல வகையா யிருக்கும் அவை பறக்கும் தளத்தில் என் கற்பனையும் அவற்றுடன் பறந்து பறந்து சுழலும். விளைவைப் பார்! பார் காஞ்சனா!” என்று உணர்ச்சி மிகுதியுடன் கூவினான் இளையபல்லவன்.

பறவைகளை நினைத்து ஏன் இத்தனை கூச்சல் போடுகிறான் படைத்தலைவன் என்பது புரியவில்லை காஞ்சனாதேவிக்கு. அவனை அதிகம் வற்புறுத்திக் கேட்க இஷ்டப்படாத காஞ்சனாதேவி அவனுக்கு உணவளித்துத் தானும் உண்டு தன் அறைக்குச் சென்றாள்.

மறுநாள் பொழுது புலர்ந்ததும் கண்ணை விழித்த காஞ்சனாதேவியின் முகம் பெரும் தாமரையென மலர்ந்தது. அவள் அறைச் சாளரத்தில் சின்னஞ்சிறு பறவைகள் இரண்டு உட்கார்ந்து அவளை உற்றுப் பார்த்தன.

“உங்களைக் கண்டால் அவருக்குக் கற்பனை ஓடுமா?” என்று அவற்றை நோக்கி வாய்விட்டே கேட்டாள் காஞ்சனா தேவி.

அவை இரண்டும் அவள் கேள்வியைப் புரிந்து கொண்டனபோல் தலையை ஆட்டின. அவற்றின் அழகில் மெய்மறந்த காஞ்சனாதேவி பஞ்சணையை விட்டு எழுந் திருந்து அவற்றைப் பிடிக்கச் சென்றாள். அவள் எழுந்து இரண்டடி வைத்ததும் அவை அறையின் குறுக்கே பாய்ந்து அறையில் சுற்றலாயின. விர்விர்ரென்று சுற்றிய அந்தப் பறவை களைக் கண்டு ஆனந்தத்துடன் அறைக்கதவைத் திறந்து தளத்துக்கு வந்த காஞ்சனாதேவி அங்கு எழுந்த காட்சியைக் கண்டு பிரமித்தாள். நூற்றுக்கணக்கான பறவைகள் தளத்தில் பறந்து கொண்டிருந்தன. குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண் டிருந்த மாலுமிகளின் தலைகளின்மீது கூட இரண்டொன்று உட்கார்ந்தது.

இவற்றையெல்லாம் கண்டு பிரமித்தவண்ணம் தளத்திலேயே ஒரு மாலுமியை நீர் கொண்டு வரச் சொல்லிப் பல் துலக்கி முகம் கழுவிய காஞ்சனாதேவி நீண்ட நேரம் காலை உணவைக்கூட அருந்தவில்லை. அவளை இளைய பல்லவனே வந்து அழைத்துப் போய் வலுக்கட்டாயமாக ஒரு குவளை கஞ்சியைக் குடிக்க வைத்தான். “பறவைகளைப் பார்த்தீர்களா?” என்று கேட்டாள் காஞ்சனாதேவி அந்த நவதானியக் கஞ்சியைக் குடிப்பதைப் பாதியில் நிறுத்தி.

“பார்த்தேன். “

“உங்கள் கற்பனை?”

“அதிகரித்திருக்கிறது. “

“எத்தனை தூரம்?”

“மாலையில் தெரியும். ” இந்தப் பதிலைத் திட்டமாகத் தெரிவித்தான் இளையபல்லவன். அந்தக் குரலிலிருந்த உறுதியின் காரணம் அப்பொழுது புரியவில்லை அவளுக்கு. ஏன், மாலையில்கூடப் புரியவில்லை . புரிய இரண்டு நாட்கள் பிடித்தன. ஆனால் அன்று மாலை நேரத்தில் இளையபல்லவன் கற்பனை ரகசியம் புரியாவிட்டாலும், மாலையில் அவன் சொன்னபடி பறவைகள் அதிகமாக வந்தன.

அந்த நேரத்தில் தளத்தின் பக்கப் பலகையில் நின்று கொண்டிருந்த இளையபல்லவனை நோக்கிய காஞ்சனாதேவி பாய்மரத்தண்டில் தொத்திக் கொண்டிருந்த பறவைகளைக் காட்டி, “அந்தப் பறவைகளில் இரண்டை எனக்குப் பிடித்துத் தருவீர்களா?” என்று வினவினாள்.

“இதோ பிடித்துக்கொண்டு வருகிறேன்,” என்று சொல்லி விட்டு நடுப் பாய்மரத்தண்டில் ஏறிப்போன இளையபல்லவன் இரண்டு பறவைகளைப் பிடித்துக்கொண்டு வானத்தை ஒரு விநாடி ஆராய்ந்துவிட்டு கிடுகிடுவென்று கீழே இறங்கி வந்ததும் காஞ்சனாதேவியின் கைகளில் பறவைகளைத் திணித்துவிட்டு, “அமீர்! தேவரே!” என்று படபடப்புடன் இரைந்தான்.

அவன் கூச்சலைக் கேட்டு ஓடிவந்த அந்த இருவரையும் மிகுந்த உக்கிரத்துடன் நோக்கிய இளையபல்லவன், “நீங்கள் மாலுமிகள் தானே? உங்களுக்கு மரக்கலம் செலுத்திப் பழக்கமுண்டா ?” என்று சீறினான்.

“இளையபல்லவரே!” அமீர், தேவன் இருவர் குரலும் ஏககாலத்தில் கோபத்துடன் எழுந்தன.

அவர்கள் கோபத்தை லட்சியம் செய்யாத இளைய பல்லவன், “கோபித்துப் பயனில்லை. கப்பல் திசை மாறிப் போகிறது. அக்ஷயமுனைக்குப் போகவில்லை” என்றான்.

“என்ன?”

“இப்பொழுதுதான் நடுப் பாய்மரத்தண்டின் உச்சியிலேறி காஞ்சனாதேவிக்குப் பறவைகள் பிடித்து வருகிறேன். “

“அதனாலென்ன?” அமீரின் கேள்வியில் குழப்ப மிருந்தது.

“அதனால்தான் துருவ நக்ஷத்திரத்தைப் பார்க்க முடிந்தது. அக்ஷயமுனைக்குப் போக வேண்டுமானால் துருவ நக்ஷத்திரம் கடல் புறாவின் பின்பக்கத்தில் இருக்க வேண்டும். இடப் பக்கத்திலிருக்கிறது. “

அதைக்கேட்ட அமீர் பிரமிப்படைந்து, “இதோ பார்க் கிறேன்” என்று கூறி நடுப் பாய்மரத்தண்டில் ஏறப் போனான்.
“அங்கு போய் பயனில்லை. மேகங்கள் நக்ஷத்திரத்தை மறைத்துவிட்டன,” என்ற இளையபல்லவன் குரலில் வெறுப்பு இருந்தது.

“இப்பொழுது என்ன செய்வது?” என்று கண்டியத்தேவன் கேட்டான்.

“என் அறையிலுள்ள பேழையை எடுத்துத் திசை காட்டும் கருவியைப் பார்த்துத் திசையைச் சரி செய்யுங்கள்” என்று உத்தரவிட்டான் இளையபல்லவன். அமீரும் கண்டியத் தேவனும் விரைந்தனர் படைத்தலைவன் அறையை நோக்கி. அவர்கள் போவதைப் பார்த்துவிட்டுத் திருப்திக்கு அறிகுறி யாகத் தலையை அசைத்த இளையபல்லவன் காஞ்சனா தேவியிடம் நெருங்கி, “பறவைகள் எப்படி இருக்கின்றன?” என்று வினவினான்.

“எனக்கு ஏதுமே விளங்கவில்லை” என்றாள் காஞ்சனா தேவி.

“விளங்காமலென்ன? பறவைகள் எனக்குக் கற்பனை யளித்தன” என்றான் இளையபல்லவன்.

“இன்னும் விளங்கவில்லை” என்றாள் காஞ்சனாதேவி.

“இரண்டு நாளில் விளங்கும்” என்று இளையபல்லவன் கூறினான். இரண்டு நாளில் விளங்கத்தான் செய்தது. ஆனால் எத்தனை பயங்கர விளக்கம் அது! பறவைகள் அளித்த கற்பனையின் விளைவு அப்படியா இருக்க வேண்டும்?

Previous articleRead Kadal Pura Part 3 Ch45 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch47 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here