Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch47 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch47 | Sandilyan | TamilNovel.in

151
0
Read Kadal Pura Part 3 Ch47 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch47 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch47 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 47 : முதலை வாய்க்குள்ளே…!

Read Kadal Pura Part 3 Ch47 | Sandilyan | TamilNovel.in

பறவைகள் தனக்களித்த கற்பனையின் விளைவு இரண்டு நாட்களில் தெரியுமென இளையபல்லவன் கூறியபோது, அவன் சொற்களில் புதைந்து கிடந்த முழு உண்மை காஞ்சனா தேவிக்கு விளங்கவில்லையானாலும், அது விளங்கிய போது அவள், படைத்தலைவன் எத்தனை சூட்சுமமாக வேலை செய்திருக்கிறானென்பதை நினைத்துப் பெரிதும் வியந்தாள். அவள் மட்டுமல்ல, அமீரும், கண்டியத்தேவனும் கூட வியக்கவே செய்தார்கள்.

ஆனால் அவர்கள் வியப்பில் பெரும் ஆத்திரமும் ஏமாற்றமும் கலந்திருந்தன. திசை காட்டும் கருவிகளைப் பார்த்து மரக்கலத்தின் திசையைச் சரிசெய்யும் படி படைத்தலைவன் கூறியதும் அதை நிறைவேற்ற அமீரும் கண்டியத்தேவனும் விரைந்த சமயத்தில் அவர்களுக்குத் தோன்றாத உண்மைகள் இரண்டு நாட்கள் கழித்தே தோன்றின. தோன்றின சமயத்திலோ நிகழ்ந்துவிட்ட தவறைத் திருத்த மார்க்கமில்லாது போயிற்று அவ்விருவருக்கும்.

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏற்படவிருந்த விளைவை உணராமல் திசை காட்டும் கருவிப் பேழையைப் பார்க்கச் சென்ற சமயத்தில் அமீருக்கும் கண்டியத்தேவனுக்கும் இருந்த பரபரப்பில் அவர்கள் இருவரும் இளையபல்லவன் காட்டிய அசிரத்தையைப் பற்றியும் அலட்சியத்தைப் பற்றியும் இம்மியளவு கூடச் சிந்தித்தார்களில்லை. கூரிய புத்தியுடைய அமீர் கூட அதைப்பற்றிச் சிறிதும் சிந்தியாமலே படைத்தலைவன் அறையை நோக்கி விரைந்தான், பேழையைப் பார்த்துக் கப்பல் திசையை அறிந்துகொள்ள.

இளையபல்லவன் உத்தரவுப்படி அக்ரமந்திரத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பெரும் பெட்டியைத் திறந்து பேழையை எடுத்து அதனுள்ளிருந்த திசை காட்டும் கருவியைக் கண்டு பெரும் குழப்பமடைந்த அமீர் அந்தக் குழப்பத்துடனேயே, “இதோ பாருங்கள் தேவரே!” என்று தேவனிடம் திசை காட்டும் கருவியை நீட்டினான்.

பேழையைக் கையில் வாங்கி இரண்டு மூன்று முறை அதிலிருந்த முள்ளைப் பல திசைகளில் திருப்பிப் பார்த்த கண்டியத்தேவன் முகத்திலும் குழப்பமிருந்தது. “விசித்திரமா யிருக்கிறது அமீர்!” என்றான் கண்டியத்தேவன், குரலிலும் குழப்பம் துலங்க.

அமீர் மீண்டும் திசை காட்டும் கருவியைக் கையில் வாங்கி அதன் காந்தமுள்ளைக் கவனித்தான் பல விநாடிகள். பிறகு சொன்னான், “ஆம் தேவரே! விசித்திரமாகத்தானிருக் கிறது” என்று.

“கடாரத்திலிருந்து தென்மேற்கில் இருக்கிறது அக்ஷய முனை” என்று இழுத்தான் கண்டியத்தேவன்.
“ஆம். ” அமீரின் சொல் உயிரின்றி வெளிவந்தது.

“தென்மேற்கு செல்லத்தான் சுக்கானைத் திருப்பிக் கொடுத்தேன் சேந்தனிடம்” என்று மீண்டும் கூறினான் கண்டியத்தேவன்.

“பாய்களையும் அதற்கு வேண்டிய முறையில்தான் நானும் விரிக்கச் சொன்னேன்” என்றான் அமீர்.

“அப்படியிருக்க இது இத்தனை தூரம் திசை மாறி ஓடவேண்டிய காரணம்?” கண்டியத்தேவன் குரலில் சந்தேகம் இருந்தது.

“அதுதான் எனக்கும் புரியவில்லை” என்று அமீர் கண்டியத்தேவனை ஏறிட்டு நோக்கினான்.

அந்த நோக்கிலிருந்த கேள்வி கண்டியத்தேவனுக்கு நன்றாகப் புரிந்தது. இருப்பினும் அதை வாயால் சொல்ல அவன் இஷ்டப்படவில்லை. “அமீர்!” என்ற எச்சரிக்கைக் குரலொன்றை மட்டும் கொடுத்தான் தேவன்.

ஆனால் அந்த எச்சரிக்கையையும் மீறித் துணிவை வரவழைத்துக் கொண்ட அமீர், “ஏன் வாய்விட்டுத்தான் பேசுவோமே, அவர்தான் இங்கில்லையே” என்று துவங்கினான்.

“இருந்தாலும் படைத்தலைவரைச் சந்தேகிப்பது தவறல்லவா?” என்றான் கண்டியத்தேவன்.
“தவறுதான். இருந்தாலும் இந்தத் திசை மாற்றம் ஏற்பட்டு இரண்டு நாட்கள் ஆகியிருக்க வேண்டுமே. இதுவரை அவர் ஏன் நம்மை எச்சரிக்கவில்லை?” என்று கேட்டான் அமீர்.

“நேற்றுதான் துருவ நக்ஷத்திரத்தைக் கவனித்தாரோ என்னமோ?” என்று படைத்தலைவனை ஆதரிக்கும் முறையில். பேசினான் கண்டியத்தேவன்.

அப்படியிருந்தாலும் இருக்குமென அமீர் நினைத்தா னானாலும் இதில் தனக்கு விளங்காத ஏதோ சூட்சுமம் இருப்பதாகத் தோன்றியது அமீருக்கு. “என்னவோ தேவரே! எனக்குச் சந்தேகமாகத்தானிருக்கிறது” என்றான் அமீர்.

“எதில் சந்தேகம்?” கண்டியத்தேவன் ஏதும் புரியாமல் கேட்டான்.

“நாம் உண்மையில் திசைதான் மாறியிருக்கிறோமா என்பதில். “

“அதில் சந்தேகத்துக்குக் காரணமில்லையே. திசை காட்டும் கருவிதான் திட்டமாக வடக்கை எதிர்ப்புறம் தள்ளிக் காட்டுகிறதே. கருவிகூட இளையபல்லவருடன் சேர்ந்தா சதி செய்யும்?”

கண்டியத்தேவனின் இந்தக் கேள்வி நியாயமாகத்தான் பட்டது அந்தச் சமயத்தில் அமீருக்கு. ஆகவே அவன் கடைசியில் தேவனுடன் தளத்துக்கு மீண்டபோது தவறைச் சரி செய்யும் தீர்மானத்துடனேயே வந்தான். அக்ரமந்திரத்திலிருந்து வெளிவந்த அவ்விருவரையும் ஓரக்கண்ணால் கவனித்தும் கவனிக்காதவன் போலவே பக்கப் பலகையில் சாய்ந்து கொண்டு காஞ்சனாதேவியுடன் பேசிக்கொண்டிருந்த இளையபல்லவனை அமீரே நெருங்கி, “படைத் தலைவரே! பேழையைப் பார்த்தோம் நானும் தேவரும்” என்றான்.

“நான் ஒருவேளை” என்று சந்தேகப்படுபவன் போல் துவங்கினான் இளையபல்லவன்.

“இல்லை இல்லை. நீங்கள் சொன்னதில் தவறில்லை” என்று குறுக்கே புகுந்து சொன்னான் அமீரின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த கண்டியத்தேவன்.

“எனக்கே சிறிது சந்தேகமாகத்தானிருந்தது முதலில்” என்றான் இளையபல்லவன் மீண்டும், தளத்தில் வந்து கொண்டிருந்த காற்றை முகர்ந்து.

“அப்படியா?” அமீரின் கேள்வியில் சந்தேகம் தொனித்தது.

இளையபல்லவன் அமீரைப் பார்க்காமல் வானத்தைப் பார்த்துக்கொண்டு சொன்னான்: “நான் காஞ்சனாதேவிக்குப் பறவைகளைப் பிடிக்க உச்சி மரத்துக்கு ஏறியபோது தற்செயலாகத்தான் துருவ நட்சத்திரத்தைப் பார்த்தேன். நான் பார்த்துக்கொண்டே இருக்கையில் மேகங்கள் அதன்மீது ஊர்ந்துவிட்டன. இருப்பினும் திட்டமாக அந்த நட்சத்திரம் பக்கவாட்டிலிருந்ததாகத் தோன்றிற்று. எதற்கும் திசை காட்டும் கருவியைப் பார்த்துவிடுவது நல்லதென்று தோன்றியது எனக்கு” என்று.
அமீர் இதற்குப் பதிலேதும் சொல்லவில்லை. “அப்படியானால் திசையை மாற்றிவிடட்டுமா?” என்று கேட்டான்.

“உனக்குச் சரியென்று தோன்றுவதைச் செய், அமீர்” என்றான் இளையபல்லவன்.

“உங்கள் உத்தரவு… ” அமீர் ஏதோ சொல்ல முற்பட்டான்.

“என் உத்தரவுப்படி காரியங்கள் நடப்பதானால் இந்த மரக்கலம் அக்ஷயமுனை போகாது. ஆனால் என் உத்தரவையும் மீறிய உத்தரவு உனக்கிடப்பட்டிருக்கிறதே அமீர். அதன்படி நடந்துகொள். நான் ஏதாவது சொல்லி அதன்படி நீங்கள் நடந்து தவறு ஏற்பட்டால் பொறுப்பு என்மேல் விழும். பொறுப்பை நான் ஏற்கத் தயாரில்லை” என்று திட்டவட்டமாகச் சொன்னான் இளையபல்லவன்.

அமீரும் கண்டியத்தேவனும் என்ன சொல்வதென்றறியாமல் ஸ்தம்பித்து நின்றார்கள். அநபாயரின் உத்தரவை நிறைவேற்றுவதில் இளையபல்லவனுக்கு அடியோடு இஷ்டமில்லை என்பதை அவர்கள் ஆரம்பத்திலிருந்தே அறிந்து இருந்தபடியால் இளையபல்லவன் மனக்கசப்பு அவர்களுக்குப் புரிந்தேயிருந்தது. அதைப் புரிந்துகொண்டதால் பேசச் சக்தியற்று நின்ற தன் இரு உபதலைவர்களையும் நோக்கிய இளையபல்லவன் சொன்னான், “அமீர்! தேவரே! கடலோட்டம் உங்களுக்குப் புதிதல்ல.

இருப்பினும் அநபாயர் உத்தரவை நிறைவேற்றுவதிலிருந்த மும்முரத்தில் நீங்களிருவரும் சுக்கானையும் பாய்களையும் தவிர வேறெதையும் கவனிக்கவில்லை. இந்தப் பறவைகளின் வருகை, காற்றின் திசை மாற்றத்தைக் கூறுகிறதென்பது உங்களுக்குப் புதிதா? வடமேற்குப் பருவக் காற்று இரண்டு நாட்களாகவே துவங்கி விட்டது. ஆகையால் பாய்கள் அளவுக்கதிகமாகப் புடைத்துத் தென்கிழக்குத் திசையில் அளவுக்கதிகமாக மரக்கலத்தை ஓட்டிவிட்டது. நாம் அக்ஷயமுனைப் பாதையை விட்டு வேறெங்கோ போகிறோம். இதையெல்லாம் மாலுமிகளாகிய நீங்கள் ஏன் கவனிக்கவில்லை ?” என்று.

படைத்தலைவன் சொன்ன வார்த்தைகளில் உண்மை பெரிதும் ததும்பி நின்றதை இருவரும் கவனிக்கவே செய்தார்கள். பறவைகள் வருவது காற்றின் திசைமாற்றத்தைக் குறிக்குமென்றாலும் அந்த திசை மாற்றத்தால் இரண்டு நாள் ஓட்டத்தில் மரக்கலம் அதிகமாகக் கடற் சுவட்டை மாற்றி யிருக்க முடியாதென்பது மட்டும் அவ்விருவருக்கும் புரிந்திருந்தது. ஆகவே இருவரும் சற்று விழித்துக்கொண்டு நின்றார்கள். அந்த விழிப்பின் காரணத்தைப் புரிந்துகொண்ட இளையபல்லவன் மேலும் சொன்னான்: “எனக்கே சந்தேக மாகத்தானிருந்தது அமீர். இரண்டு நாள் காற்று மாற்றத்தில் கப்பல் அப்படி அதிகம் பாதையைவிட்டு விலக முடியாதே என்று நினைத்தேன். ஆனால் துருவ நக்ஷத்திரம் திட்டமாக அறிவித்தது வழி தவறிவிட்டோம் என்று. ஆகையால்தான் எதற்கும் திசை காட்டும் கருவியைப் பார்க்கச் சொன்னேன்” என்று .

இந்த விளக்கத்துக்குப் பின் அமீருக்கும் கண்டியத் தேவனுக்கும் சந்தேகம் அடியோடு நீங்கிவிட்டதால் இருவரும் நேர்ந்துவிட்ட தவறைச் சரிசெய்யச் சென்றுவிட்டார்கள். அமீர் சுக்கானைத் திருப்பச் சென்றான். கண்டியத்தேவன் மாலுமிகளை விளித்து நடுப் பாயையும், மரக்கலத்தின் இடது பக்கத்திலிருந்த இரு பாய்களையும் இறக்க உத்தரவிட்டான். அடுத்த நான்கு நாழிகைகளுக்குள் கடல் புறா அதன் வலப் பக்கத்திலிருந்த இரண்டே பாய்களை மட்டும் புடைத்துக் கொண்டு ஓடியதாலும், கீழறையில் துடுப்புத் துழாவுவோர் துடுப்புக்களைப் பலமாக இழுத்ததாலும் சுக்கான் மாற்றிப் பிடிக்கப்பட்டதாலும் கடல் புறாவின் மூக்கு மீண்டும் திசை மாறித் திரும்பியது.

அன்றிரவு பூராவும் மேற்குப் பக்கமே ஓடிக்கொண்டிருந்த கடல் புறாவின் திசையை மறுநாள் அமீர் மெள்ளத் தெற்கு நோக்கித் திருப்பினான். திசை காட்டும் கருவியை முதல் நாளிரவும் அன்று காலையும் பலமுறை தளத்திலேயே கொண்டுவந்து பார்த்த அமீர் தான் மரக்கலத்தைச் செலுத்தும் திசை சரிதானென்றும், முதலில் ஏதோ தவறு தான் நேர்ந்திருந்ததென்றும் தீர்மானித்தான். அன்று பூராவும் வானம் மூடிக் கிடந்தது. காற்று மெள்ள மெள்ள வலுத்து மேகங்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண் டிருந்தன. விட்டு விட்டுச் சிறு சிறு தூறலும் போட்டது. அந்தத் தூறலிலும் இளையபல்லவன் தளத்துக்கு வந்து கடல் புறாவின் திசையைக் கவனித்துக் கொண்டும் மாலுமிகளுக்குக் கண்டியத்தேவனும் அமீரும் இட்டுக்கொண் டிருந்த உத்தரவுகளைப் பார்த்துக்கொண்டும் தளத்தில் உலாவினான்.

அவன் அப்படி உலாவிக் கொண்டிருந்த சமயத்தில் கடல் புறாவுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த மரக் கலத்திலிருந்து சங்கு ஒன்று பெரிதாக ஊதப்படவே அமீரும் கண்டியத்தேவனும் கடல் புறாவின் பின்பகுதிக்கு ஓடி வந்தார்கள். அந்த மரக்கலத்தின் தளத்தில் நின்ற ஒருவன் இரு கைகளாலும் ஏதோ சைகை செய்தான். அந்தச் சைகையைக் கவனித்த அமீர், “எதற்காக அந்தப் பாலிக்குள்ளன் கையை வீசுகிறான்?” என்று விசாரித்தான் தேவனை.

கண்டியத்தேவன் பாலிக்குள்ளன் கையாட்டத்தைச் சில விநாடிகள் கவனித்துவிட்டு, “நாம் மரக்கலத்தின் திசை மாற்றியதைப் பற்றி ஏதோ சொல்கிறான்” என்றான்.

“என்ன சொல்கிறான்?” என்று அமீர் கேட்டான்.

“திசையை ஏன் மாற்றிவிட்டீர்கள் என்று கேட்கிறான்,” என்று விளக்கினான் தேவன்.

“அதைக் கேட்பதற்கு இவன் யார்? கடல் புறாவைத் தொடர்ந்து வரச் சொல்லுங்கள்,” என்று கூறிய அமீர், அந்த இடத்தை விட்டுத் தன் அலுவலைக் கவனிக்கச் சென்றான். அவன் கூறியபடியே பாலிக்குள்ளனை நோக்கிப் பதில் சைகை செய்த கண்டியத்தேவன் விடுவிடு என்று பாய்களை நோக்கி நடந்தான்.

அங்கு நடந்த அத்தனையையும் கவனிக்காதவன் போல் உலாவிக் கொண்டிருந்த இளையபல்லவன் கடல் புறாவின் பின்பகுதிக்குச் சென்று பின்னால் வந்த மரக் கலத்தை நோக்கினான். இளையபல்லவனைக் கண்டதும் பாலிக்குள்ளன் பலமாகக் கைகளை ஆட்டினான். மேற்புறமும் கீழ்ப்புறமும் கைகளை ஆட்டி, ஏதோ ஆட்சேபித்தான். அந்தச் சைகைகளுக்கு எந்தப் பதில் சைகையையும் காட்டாமல் புன்முறுவலுடன் நின்றுகொண்டிருந்த இளையபல்லவன் திடீரெனத் திரும்பினான். அவன்மீது மோதிவிடுபவள்போல் காஞ்சனாதேவி நின்றுகொண்டிருந்தாள்.

வானம் பன்னீர் தெளித்துக் கொண்டிருந்தது. அந்தத் தூறலில் சில காஞ்சனாதேவியின் முகத்தில் முத்துக்களென மின்னின. இளையபல்லவன் அந்தத் தூறல் அவள் முகத்துக்குச் சூட்டிய முத்துக்களைக் கையால் துடைத்து, “இந்தத் தூறலில் ஏனிங்கு வந்தாய்?” என்று வினவினான்.

அவள் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. “அந்தப் பாலிக்குள்ளன் எதற்குக் கையாட்டுகிறான்?” என்று விசாரித்தாள்.

“மரக்கலத்தின் திசையை மாற்றியதை ஆட்சேபிக்கிறான். “

“ஏன்?”

“அவனைத்தான் கேட்க வேண்டும்?”

“எப்பொழுது கேட்கலாம்?”

“அவன் இங்கு வரும்போது. “

“எப்பொழுது வருவான்?”

“இரண்டு நாட்களில். “

“எல்லாம் இரண்டு நாட்களிலா?”
“ஆம். “

ஏதும் விளங்கவில்லை காஞ்சனாதேவிக்கு. ஆனால் இரண்டு நாள் கழித்து மீண்டும் சைகைகளைப் பலமாகச் செய்து கடல்புறாவின் ஓட்டத்தைத் தளர்த்தச் சொல்லித் தனது மரக்கலத்திலிருந்து ஒரு படகில் வந்த பாலிக்குள்ளன் அமீரையும் கண்டியத்தேவனையும் சுடுவிழிகளால் நோக்கினான். “நீங்கள் இப்பொழுது இருக்குமிடம் தெரியுமா?” என்று உஷ்ணத்துடன் கேட்டான்.

“எங்கிருக்கிறோம்?” என்று மிகுந்த உஷ்ணத்துடன் எழுந்தது அமீரின் கேள்வி. அவன் பெருவிழிகள் பயங்கரமாக உருண்டன.

அந்த விழிகளை அறவே லட்சியம் செய்யாத பாலிக்குள்ளன், “முதலையின் வாய்க்குள் இருக்கிறீர்கள்” என்றான்.

“விளங்கவில்லை எனக்கு” என்றான் அமீர்; உஷ்ணம் சிறிதும் தணியாத குரலில்.

“இன்னும் அரை காதத்தில் மலையூர் இருக்கிறது,” என்று பெரும் வெடியை எடுத்து வீசினான் பாலிக்குள்ளன்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch46 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch48 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here