Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch48 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch48 | Sandilyan | TamilNovel.in

149
0
Read Kadal Pura Part 3 Ch48 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch48 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch48 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 48 : அபயம்.

Read Kadal Pura Part 3 Ch48 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா திசை திருப்பப்பட்ட இரண்டாவது நாள் அதாவது கடாரத்திலிருந்து கடல் புறா கிளம்பிய எட்டாவது நாள். பெரும் பிரயத்தனப்பட்டுக் கடல் புறாவின் தளத்துக்கு வந்து சுடுவிழிகளுடன் அமீரையும் மற்றவர்களையும் நோக்கி, “நீங்கள் முதலையின் வாய்க்குள் இருக்கிறீர்கள். மலையூர் இன்னும் அரைக்காத தூரத்திலிருக்கிறது” என்று பாலிக்குள்ளன் பெருவெடியை எடுத்து வீசியதும் தளத்தில் அவனைச் சுற்றி நின்றிருந்த அனைவருமே பெரும் திகைப்புக் குள்ளானார்கள். தனது மரக்கலத்திலிருந்து கடல் புறாவிலிருந்த பலருக்கும் சைகை செய்து கொண்டு இருந்ததால், பாலிக்குள்ளன் போக்கைப் பற்றிக் கடல்புறாவிலிருந்த பலரும் சென்ற இரண்டு நாட்களாகவே வியப்புக்குள்ளாகியிருந்தார்கள்.

ஆகவே மூன்றாவது நாள் காலையில் அபாயகாலத்தில் ஊதும் தாரைகளை எடுத்து ஊதிக் கடல்புறாவின் வேகத்தைத் தளர்த்தச் சொல்லி அதன் தளத்துக்கு வந்த பாலிக்குள்ளனைப் பார்க்கக் கடல் புறாவின் மாலுமிகள் மட்டுமின்றி காஞ்சனாதேவியும் கூடத் தளத்தில் கூடினார்கள். கூடின அனைவருக்கும் அவன் சொன்ன சேதி திகைப்பைத் தந்ததென்றாலும், திகைப்பைவிடக் கோபத்தை அதிகமாக அடைந்திருந்த அமீர், பாலிக்குள்ளனை நோக்கி, “மலையூர் அருகிலிருக்கிறதா! என்ன உளறுகிறாய்? அக்ஷயமுனை அருகி லிருக்கிறதென்று சொல்” எனக் கூவினான் தனது பெரு விழிகளை உக்கிரத்துடன் உருட்டி.

அமீரின் ராட்சத விழிகளுக்கோ, உக்கிரச் சொற்களுக்கோ பாலிக்குள்ளன் மசிந்ததாகத் தெரியவில்லை. “நான் சொல்லலாம் உங்களைத் திருப்தி செய்ய அக்ஷயமுனை அருகிலிருக்கிறதென்று. ஆனால் அக்ஷயமுனை வராது இந்த இடத்துக்கு” என்று குரலில் இகழ்ச்சி துலங்கக் கூறினான் பாலி நாட்டு மாலுமி.

அமீரின் கோபம் பன்மடங்கு அதிகமாகவே, அவன் மீண்டும் ஏதோ சொல்லப் போனான் பாலித் தீவின் மாலுமியை நோக்கி. ஆனால் அமீருக்கு முந்திக்கொண்ட கண்டியத்தேவன் அமீரைப் பேசாமலிருக்கும்படி சைகை செய்து, “மாலுமி! நாம் அக்ஷயமுனையை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம் என்று கூறுகிறாயா?” என்று நிதானமாகவே வினவினான் அதுவரை இருந்த திகைப்பைச் சற்று உதறிக் கொண்டு.

“ஆம். ” திட்டமாக வந்தது பாலிக்குள்ளன் பதில்.

“நாம் இப்பொழுதிருப்பது…?” என்று மேலும் ஏதோ கேட்கப்போன கண்டியத்தேவனை இடைமறித்த பாலிக் குள்ளன், “சொர்ணத்தீவு கிழக்குக்கரையின் சரி மத்தியபாகம். பூமியின் மத்தியபாகம் என்று கூட இதைச் சொல்கிறார்கள்” என்று விளக்கினான்.

“இது எப்படி உனக்குத் தெரிந்தது?” என்று விசாரித்தான் கண்டியத்தேவன்.

“இதற்கு ஆராய்ச்சி வேறு தேவையா!” என்ற பாலிக் குள்ளன் பதிலில் இகழ்ச்சி தொனித்தது.

இதைக் கேட்டதும் அமீரின் கோபம் உச்சநிலைக்குப் போகவே, “ஆராய்ச்சி தேவையில்லை இவருக்கு. சோதிடத்தால் கண்டுபிடித்தார்” என்று இரைந்தான்.

பாலிக்குள்ளன் மேலும் இகழ்ச்சி துலங்கவே பேசினான், “ஆராய்ச்சியும் தேவையில்லை; சோதிடமும் தேவையில்லை. மாலுமிகளுக்கு வேண்டிய சாதாரண அறிவு இருந்தால் போதும்” என்று.

இதற்குப் பிறகு அமீருக்கும், பாலிக்குள்ளனுக்கும் சச்சரவு முற்றும் போலாகிவிடவே, “மாலுமி, மரியாதையுடன் பேசு. கேட்பதற்கு மட்டும் பதில் சொல். அமீர், நீ சற்றுச் சும்மாயிரு” என்று இருவரையும் அடக்கிவிட்டு, “மாலுமி! எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு நாம் திசை மாறி வேறு இடத்திற்கு வந்துவிட்டதாகச் சொல்கிறாய்?” என்று வினவினான் கண்டியத்தேவன்.

“தேவரே! இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கடல் புறா தென்மேற்குத் திசை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. கடாரத்திலிருந்து நேராகத் தென்மேற்கில் சென்றால் அக்ஷய முனையைத் தொட்டுவிடுவோம். ஆனால் திடீரெனக் கடல் புறாவின் திசை மாறியது. அரை நாள் மேற்கே சென்றது. பிறகு திடீரெனத் தெற்கே திரும்பியது. காரணம் எனக்குப் புலப்படவில்லை. புலப்படவைக்க என்னாலான வரை முயன்றேன். என் சைகைகளை யாரும் லட்சியம் செய்ய வில்லை.

விஷயம் முற்றுமுன்பு கடல் புறாவை நிறுத்தவே இன்று அபாயத் தாரைகளை ஊதினேன்” என்று விவரித்தான் பாலிக்குள்ளன். கண்டியத்தேவன் பாலிக்குள்ளனைக் கூர்ந்து நோக்கினான். பாலிக்குள்ளன் முகத்திலிருந்த உறுதி தேவனுக்கும் சிறிது சந்தேகத்தைக் கொடுத்தது. இருப்பினும் திசை காட்டும் கருவியைத் தானே பார்த்திருந்ததால் சிறிது தைரியத்துடன் பாலிக்குள்ளனை நோக்கி, “தவறு மாலுமி! முதலில் கடல் புறா திசை மாறிச் சென்றது. ஆகையால்தான் திருத்தினேன்” என்றான்.

“திசை மாறிச் சென்றதை எப்படி அறிந்தீர்கள்!” என்று வினவினான் பாலிக்குள்ளன்.

“திசை காட்டும் கருவியால் அறிந்தேன்” என்றான் கண்டியத்தேவன்.

அதுவரையில் கையில் வைத்திருந்த சிறு பேழையைக் கண்டியத்தேவனிடம் நீட்டிய பாலிக்குள்ளன், “இதோ இருக்கிறது திசை காட்டும் கருவி, என்ன சொல்கிறது இது?” என்று கேட்டான்.

அந்தக் கருவியை நோக்கிப் பல தலைகள் குவிந்தன. கண்டியத்தேவன், அமீர், காஞ்சனாதேவி இன்னும் பல மாலுமிகள் அனைவரும் அதைக் காணக் குவிந்தனர். எல்லோரும் காணமுடியவில்லைதான். ஆனால் கண்டவர் திகைத்தனர். அதைப் பார்த்த மறுவிநாடி அமீரும் கண்டியத் தேவனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். “இதன்படி… ” என்று இழுத்தான் அமீர் மறுகணம்.

“மாலுமி சொல்வது சரியாயிருக்க வேண்டும்” என்று வாசகத்தைப் பூர்த்தி செய்தான் கண்டியத்தேவன்.

ஒருகணமே ஏதோ யோசித்த அமீர் திடீரெனத் தன்னைச் சுற்றி நின்றவர்களை விலக்கிக்கொண்டு அக்ரமந்திரத்தை நோக்கி ஓடினான். வெகு வேகமாக அந்த அறையின் கதவைத் திறந்து உள்ளே நோக்கினான். உள்ளே இளையபல்லவன் இல்லை. அதைப்பற்றி அதிகம் கவலைப்படாத அமீர், படைத் தலைவன் மரப்பெட்டியைத் திறந்து அதிலிருந்த பேழையை எடுத்து நோக்கினான். மறுவிநாடி அத்துடன் ஓடிவந்தான் தளத்துக்கு. அவன் எங்கு ஓடியிருக்கிறான் என்பதை ஊகித்துக் கொண்ட கண்டியத்தேவன் அவன் வரும்வரை பொறுத் திருந்து அவன் வந்ததும் அவன் கையிலிருந்த பேழையை வாங்கி நோக்கினான். இரண்டு பேழைகளையும் இரண்டு கைகளில் வைத்துக்கொண்டு மாறிமாறிப் பார்த்த கண்டியத் தேவன் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து, “மாலுமி! இதைப்பார்,” என்று கூறி இளையபல்லவனின் பேழையைப் பாலிக்குள்ளனிடம் கொடுத்தான்.

அதை வாங்கிப் பார்த்த பாலிக்குள்ளன் சில விநாடிகள் குழம்பினான். பிறகு தனது பேழையையும் வாங்கி இரண்டை யும் மாறிமாறிப் பார்த்தான். “ஆச்சரியமாயிருக்கிறது,” என்று கடைசியில் கூறவும் செய்தான்.

“ஆம் மாலுமி!” என்றான் தேவன்.

“மனிதர்கள் வித்தியாசப்படலாம். ஆனால் இந்த முட்கள் வித்தியாசப்படக் காரணமில்லையே!” என்று குழப்பத்துடன் கூறினான் பாலிக்குள்ளன்.

“உன் பேழையிலிருக்கும் முள் காந்த ஊசிதானா!” என்று இகழ்ச்சியுடன் வினவினான் அமீர், தான் வெற்றி கொண்டு விட்ட பெருமிதத்தால்.

பாலிக்குள்ளன் அந்த இகழ்ச்சியை லட்சியம் செய்ய வில்லை. தன்னைச் சுற்றியிருந்த மாலுமிகளை விலக்கிக் கொண்டு கடல் புறாவின் பக்கப் பலகையோரம் சென்று கீழிருந்த கடலலைகளை உற்று நோக்கினான். பிறகு காற்றைச் சுவாசித்துப் பார்த்தான். பிறகு திரும்பி வந்து கண்டியத் தேவனை நோக்கி, “தேவரே! பாலித்தீவு மிகச் சிறியது. எங்களுக்கு அதிக நிலமில்லாத காரணத்தால் கடலே எங்கள் நாடு. பாலி மாலுமிகளுக்குப் புரியாத கடல் பிராந்தியம் எதுவும் தூரக்கிழக்கில் கிடையாது. நன்றாகப் பாருங்கள். இப்பொழுது நடுக்கடலில் இருக்கிறோம். இங்கு ஏன் அலை அபரிமிதமாயிருக்கிறது?” என்று வினவினான்.

“காற்றினாலிருக்கலாம்” என்றான் அமீர், கடல் விவகாரங் களில் தனது புலமையைக் காட்டி.

“வடமேற்குப் பருவக் காற்றுதான் வீசுகிறது. அது அலை எழுப்பும் பலமான காற்றல்ல. பாருங்கள்” என்று தன் தோளிலிருந்த துண்டை எடுத்துக் காற்றில் நீட்டினான். துண்டு மெல்லப் படபடவென்று அடித்தது.

பாலிக்குள்ளன் சொல்வதைக் கண்டியத்தேவன் ஆமோதித்தான். “உண்மை மாலுமி, காற்றின் வேகத்தாலல்ல இந்தப் பெரிய அலைகள் கிளம்புவது,” என்று ஒப்புக் கொண்டான்.
“கடலாழம் குறைவாயிருக்கிற இடத்தில் காற்று மென்மையாலேயே பெரிய அலைகள் கிளம்பும்” என்று சுட்டிக் காட்டினான் பாலிக்குள்ளன்.

“ஆம். ” அதையும் ஒப்புக்கொண்டான் தேவன்.

“இந்தப் பிராந்தியத்தில் அதிக ஆழமில்லாத கடல் பகுதி எது தெரியுமா?” பாலிக்குள்ளன் இந்தக் கேள்வியைக் கண்டியத்தேவனை நோக்கித்தான் கேட்டான். ஆனால் அமீரையும் ஒரு கண்ணால் நோக்கினான்.

“எது?” அமீரின் சொற்களில் சீற்றமிருந்தது.

“சொர்ணத்தீவின் கிழக்குக் கரைக்கும், பொற்கிரிஸே என்று அரபு நாட்டார் அழைக்கும் கடாரத்தின் மேற்குப் பகுதிக்கும் இடையேயுள்ள குறுகிய ஜலசந்தி. ” பாலிக்குள்ளன் இதை விளக்கிவிட்டு மீண்டும் குழப்பத்துடன் கையிலிருந்த இரண்டு திசை காட்டும் கருவிகளையும் நோக்கினான். அடுத்த விநாடி அவன் பெரிதாக நகைத்தான் பைத்தியம் பிடித்தவன் போல்.

அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் நகைத்தது எல்லோருக்கும் கசப்பாகத்தானிருந்தது. அதனால் வெகுண்ட மாலுமிகளுக்கு இன்னும் அதிகக் கசப்பைக் கொடுக்கக்கூடிய உண்மையை எடுத்துச் சொன்னான் பாலிக்குள்ளன் நகைப்பினூடே. “யாரோ உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள். ஆகாகா! என்ன திறமை! என்ன திறமை! நானே ஏமாந்து விட்டேனே இத்தனை நேரம்!” என்று வியப்புடன் கூவினான் பாலிக் குள்ளன்.
அவனை மாலுமிகள் சூழ்ந்துகொண்டார்கள். “ஏமாற்றி விட்டார்களா! யார் ஏமாற்றி விட்டார்கள்? எப்படி?” என்று பல குரல்கள் கிளம்பின ஏககாலத்தில். அந்தக் கூச்சலுடன் வடமேற்குப் பருவக்காற்றின் மெல்லிய ஊதலும் சேர்ந்து அவர்களைப் பரிகசித்தது. அந்தக் காலையில் மேகங்கள் வானத்தில் மண்டிக் கிடந்ததால் நாழிகைகள் ஆறு ஆகியும் கதிரவன் தலைகாட்டவில்லை. இருண்ட அவர்கள் சூழ்நிலையை அதிக இருட்டாக அடிக்க இஷ்டப்பட்டன போல் மேகங்கள் மேலும் மேலும் எங்கிருந்தோ ஊர்ந்து வந்தன.

அந்த மேகங்களையும் உற்று நோக்கி, மாலுமிகளையும் நோக்கிய பாலிக்குள்ளன் சொன்னான்: “ஆம். உங்களையாரோ ஏமாற்றியிருக்கிறார்கள். இந்த திசை காட்டும் கருவியின் முள் சரியாக ஆடவில்லை. இதோ பாருங்கள் தேவரே!” என்று இரண்டு கருவிகளையும் ஒருமுறை ஆட்டிக் காட்டினான்.

பாலிக்குள்ளன் கையிலிருந்த திசைக்கருவியின் முள் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிவரை ஆடியதையும் இளைய பல்லவன் பேழையின் முள் சிறிதளவே அசைந்ததையும், அதன் வட நுனி ஒரு குறிப்பிட்ட இடத்தைவிட்டு அதிகம் அசையாததையும் கண்ட கண்டியத்தேவன் மனத்தில் மட்டு மல்ல, அமீரின் மனத்திலும் பெரும் சந்தேகம் எழுந்தது. அந்தச் சந்தேகத்தைப் பாலிக்குள்ளனே தீர்த்து வைத்தான். தன் திசைக் கருவியைக் கண்டியத்தேவனிடம் கொடுத்துவிட்டு இளையபல்லவன் திசைக் கருவியைத் தன் கையாலேயே பிரிக்க ஆரம்பித்த பாலிக்குள்ளன், காந்த முள்ளைத் தாங்கி நின்ற நடுக்கம்பியை முக்கால் பாகம் மறைத்து நின்ற சிறு பலகையை நீக்கிக் கருவியின் அடிப்பாகத்தைக் காட்டினான் கண்டியத்தேவனிடம்.

திசை காட்டும் கருவியின் நடுக்கம்பி நன்றாக உள்ளே வளைக்கப்பட்டிருந்தது. அந்த வளைவு தெரியாதிருக்க அதைச் சுற்றித் துணியும் திணிக்கப்பட்டிருந்தது. காந்த முள் மட்டும் தெரியும்படியும் நடுக்கம்பியின் வளைவு தெரியாதிருக்கும் படியும் அதன் மேலே சிறு பலகை சாமர்த்தியமாகப் பொருத்தப்பட்டிருந்தது. எந்தத் தூரத்துக்கு வளைக்கப்பட்டால் காந்த முள் வடதிசையை வேறுபுறத்தில் காட்டுமோ அதுவரை நடுக்கம்பி வளைக்கப்பட்டிருந்ததையும் தவிர, முள் அதிகமாகத் திரும்ப முடியாதபடி குறுக்கிலும் ஒரு கம்பி பிணைக்கப்பட்டு அதன் கீழ்ப்பாகத்தை லேசாகத் தொட்டுக் கொண்டிருந்ததையும் கவனித்த கண்டியத்தேவனும் அமீரும் தங்களை இளையபல்லவன் அடியோடு ஏமாற்றி விட்டா னென்பதைப் புரிந்துகொண்டனர்.

காஞ்சனாதேவிக்கும் நிலைமை வெட்ட வெளிச்சமாகி விட்டது. அது மட்டுமல்ல, சூழ்ந்து நின்ற மாலுமிகள் முகங்களில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு காஞ்சனாதேவி ஓரளவு அஞ்சவும் செய்தாள். இளையபல்லவன் அவர்களை வேண்டுமென்றே திசையை மாற்றி, ஸ்ரி விஜயத்தின் எல்லைக்குள் கொண்டு வந்து விட்டதை அவர்கள் உணர்ந்துகொண்டுவிட்டதையும், அதனால் அவர்கள் பெரிதும் வெகுண்டிருப்பதையும் கண்டு, அந்த மனநிலையில் அவர்கள் இளையபல்லவனை எதுவும் செய்யக்கூடும் என்பதை உணர்ந்திருந்தாள். அந்த பயம் அவளுக்கு மட்டுமல்ல, கண்டியத்தேவனுக்கும் அமீருக்கும் கூட இருந்தது. அநபாயன் உத்தரவை நிறைவேற்ற இளைய பல்லவன் தலைமையை அவர்கள் சட்டை செய்யாதிருந் தாலும் இளையபல்லவனிடம் அவர்கள் இருவருக்குமிருந்த அன்பு எல்லை கடந்தது. ஆகவே மாலுமிகளைச் சமாதானம் செய்ய முயன்ற அவ்விருவரில் கண்டியத்தேவனே பேச்சைத் துவங்கி, “மாலுமிகளே! இதை விசாரித்துப் பார்ப்போம். நீங்கள் உங்கள் அலுவல்களைக் கவனியுங்கள்” என்றான்.

“எது எங்கள் அலுவல்?” மூர்க்கம் ததும்பிய குரலில் கேட்டான் ஒரு மாலுமி.

“சுக்கானைப் பிடித்தல், பாய்களைச் சரியாக இயக்குதல், துடுப்புக்களைத் துழாவுதல்” என்று கோபத்துடன் விளக்கினான் அமீர்.

“இத்தனையும் செய்து… ”

“முதலை வாய்க்குள் நுழைய வேண்டும்” என்று இன்னொரு மாலுமி முடித்தான்.

“அபாயத்தைப் பற்றிப் பயப்படும் கோழைகளா நீங்கள்?” என்று சீறினான் அமீர்.

“தெரிந்து வரும் அபாயம் வேறு. மூடத்தனத்தால் சம்பாதித்துக் கொள்ளும் அபாயம் வேறு” என்று கூவினான் மற்றொரு மாலுமி.

“மலையூர் போவோம். காத்திருக்கிறது, இந்த அத்தனை மரக்கலங்களுக்கும் அழிவு” என்று இரைந்தான் இன்னொரு மாலுமி.
“அவசரப்படாதீர்கள். விசாரிப்போம், இந்த இடத்துக்கு நாம் ஏன் வந்தோம் என்பதை” என்று சாந்தப்படுத்த முயன்ற கண்டியத்தேவனை நோக்கி, “ஏன் வந்தோமா? திசையைத் திருப்பினோம், வந்தோம்” என்று கூறினான் ஒரு மாலுமி.

அடுத்தபடி பல குரல்கள் எழுந்து அந்தச் சூழ்நிலை யையே குழப்பின. இருந்தாற்போலிருந்து ஒரு மாலுமி ஒரு புதுக் கதையைக் கிளப்பி, “இளையபல்லவர் உத்தரவில்லாமல் ஏன் திசையைத் திருப்பச் சொன்னீர்கள்? உங்களையும் அமீரையும் யார் இந்தக் கடல் புறாவுக்குத் தலைவர்களாக நியமித்தார்கள்?” என்று கூவினான்.

“ஆம்! ஆம்! யார் நியமித்தது?” என்று பல குரல்கள் கிளம்பின.

“மாலுமிகளே! பொறுங்கள். ஆத்திரத்தால் தவறை நாம் திருத்த முடியாது. இந்தத் திசை காட்டும் கருவியால்தான் நாம் ஏமாந்தோம். இதைக் கெடுத்தது யார், ஏன் கெடுத்தார்கள் என்பதை ஆராய்வோம்” என்றான் கண்டியத்தேவன்.

“அதற்கு ஆராய்ச்சி அவசியமில்லை. மலையூரில் மரணம் காத்திருக்கிறது. ஜெயவர்மன் கடற்படை எந்த நேரத்திலும் நம்மை நோக்கி வரலாம்” என்று மாலுமிகள் பெரும் கூக்குரல் களை எழுப்பினார்கள். பிறகு கண்டியத்தேவனையும் அமீரையும் நோக்கி நெருங்கவும் தொடங்கினார்கள். சில விநாடிகள் மட்டும் அவர்களை அடக்குவாரில்லாதிருந்தால் கண்டியத்தேவன், அமீர் இருவரின் கதி என்னவாயிருக்கு மென்று ஊகிக்க முடியாது. அமீர் அந்தச் சந்தர்ப்பத்திலும் கோபமாக நகைத்துத் தன்னை நோக்கி வந்த மாலுமிகளைப் பலி வாங்க இடையிலிருந்த குறுவாள்களில் ஒன்றை எடுத்து உயர்த்தினான். அந்த விநாடியில்.

“நில்!” என்ற சொல் அந்தக் கூட்டத்தை மிகுந்த அதிகாரத் துடன் ஊடுருவியது. மாலுமிகள் சட்டென்று நின்றார்கள். அமீரின் உயர்ந்த கை உயர்ந்தபடி நின்றது. அனைவர் கண்களும் சொல் வந்த திசையை நோக்கின. கடல்புறாவின்

நடுப் பாய்மரத்தண்டில் சாய்ந்த வண்ணம் இளையபல்லவன் நின்று கொண்டிருந்தான். அவனை நோக்கி நகர்ந்தது கூட்டம். அதற்கு முன்பு அவனை நோக்கிப் பாய்ந்த காஞ்சனாதேவி அவனுக்கு முன்பு நின்று மறைத்து அவன் மார்பில் சாய்ந்தாள்.

இளையபல்லவன் கைகள், அவள் தோள்களைத் தடவிக் கொடுத்துத் தைரியம் ஊட்டின. அணுகி வந்த மாலுமிகளை நோக்கிய இளையபல்லவன், “நம்மை நாமே அழித்துக் கொள்ள அவசியமில்லை. அதற்கு மலையூரில் இருக்கிறது ஸ்ரி விஜயத்தின் கடற்படை” என்றான் சர்வ நிதானமாக. மாலுமிகள் ஏதோ சொல்ல வாயெடுத்தார்கள். அவர்களைப் பேச வேண்டாமென்று ஒரு கையை உயர்த்தித் தடுத்த இளையபல்லவன், “இங்கு வந்ததற்குக் கண்டியத்தேவனோ அமீரோ பொறுப்பல்ல. நான்தான் பொறுப்பாளி” என்று கூறினான்.

அவன் கண்கள் அவர்களைக் கவர்ந்து நின்றன. சில விநாடிகள் கடல்புறாவின் தளத்தில் மெளனம் நிலவியது. “அஞ்சவேண்டாம், உங்களை வெற்றிப் பாதையில் நான் அழைத்துச் செல்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில், மலையூர் நம் கைக்கு மாறும்” என்று உறுதி கூறி அபயமும் அளித்தான் படைத்தலைவன்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch47 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch49 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here