Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch49 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch49 | Sandilyan | TamilNovel.in

151
0
Read Kadal Pura Part 3 Ch49 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch49 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch49 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 49 :ஆபத்தை வெற்றி கொள்வது எது?

Read Kadal Pura Part 3 Ch49 | Sandilyan | TamilNovel.in

பாலிக்குள்ளன் அளித்த விளக்கத்தால் விவரிக்க இயலாத கொடுமைகளை விளைவிக்க ஜெயவர்மனின் ஆதிக்க எல்லைக்குள் தாங்கள் புகுந்துவிட்டதை உணர்ந்ததால் ஏற்பட்ட திகைப்பினாலும், அந்தத் திகைப்பின் விளைவாக ஏற்பட்ட கொதிப்பாலும், கொடூரப் பார்வை வீசிய கண்களுடனும் துடித்த உதடுகளுடன் இளையபல்லவனை நெருங்கி வந்த கடல் புறாவின் மாலுமிகள், அவன் தீட்சண்யமான கண்களின் சக்திக்குக் கட்டுப்பட்டுச் சில விநாடிகள் செயலிழந்து, வந்த வேகம் தடைப்பட்டு நின்றனர்.

அபாயமான அந்த ஜலசந்திக்குள் கடல்புறா நுழைந்ததற்கு அமீரும் கண்டியத்தேவனுமே காரணமென்று எண்ணி அவர்களைத் தாக்கச் சென்ற மாலுமிகள் இளையபல்லவன் விடுத்த “நில்!” என்ற ஒற்றைச் சொல்லின் வேகத்தாலேயே வேகம் தடைப்பட்டுத் திரும்பினார்களென்றால், அந்த இடத்திற்கு மரக்கலத்தைக் கொண்டு வந்ததற்குத் தானே பொறுப்பாளியென்று இளையபல்லவன் ஒப்புக்கொண்டதும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். சில மாலுமி களின் உள்ளங்களில் கோபம் அதிகப்பட்டது.

இன்னும் சிலர் உள்ளங்களில் அந்த நிலையிலும் படைத்தலைவன் காட்டிய அசட்டையும், நிதானமும் வியப்பை விளைவித்தது. ஆனால் கோபம் கொண்டவர்களும் துடித்தெழுந்து படைத்தலைவனை நெருங்கவில்லை. வியப்பு அடைந்தவர்களும் முகங்களில் அதற்கான குறியெதையும் காட்டவில்லை. பொதுவான ஒரு பிரமை அனைவரையும் கவர்ந்திருந்தது. இளையபல்லவனின் காந்தக் கண்களில் அபரிமித சக்தியை அந்த மாலுமிகள் அனைவருமே அந்தச் சில விநாடிகளில் உணர்ந்து கொண்டனர்.

மாலுமிகள் இளையபல்லவனை என்ன செய்துவிடு வார்களோ, ஏது செய்துவிடுவார்களோ என்று பயத்தால் முன்னதாக ஓடிவந்து திரும்பி, அவன் மார்பில் விழுந்து அவனைத் தன் உடலால் மறைத்துக் கைகளை அகல விரித்து மாலுமிகளைத் தடை செய்ய முயன்ற காஞ்சனாதேவி அந்தச் சமயத்தில் அவன் காட்டிய நெஞ்சுத் துணிவைப் பெரிதும் வியந்தாள். அவன் நெஞ்சுத் துணிவைப் பற்றிக் கடாரத்து இளவரசிக்கு என்றுமே சந்தேகமிருந்ததில்லை.

ஆனால் கடல் புறாவையும் அவன் எதைச் சொன்னாலும் கேட்கவல்ல மாலுமிகளையும் துணையாகப் பெற்றுச் சாகஸ காரியங்கள் பலவற்றைச் செய்த பழைய நிலைகளுக்கும், சொந்த மாலுமிகளே எதிரிகளாகிவிட்ட அந்தத் தன்னந்தனியான நிலைக்கும் இருந்த பெரும் மாறுபாடு காஞ்சனாதேவிக்குப் புரிந்திருந்தது. ஆகவே அவள் இதயத்தில் பெரிதும் திகிலே குடிகொண்டிருந்தது. அவள் இதயத்தில் மட்டுமல்ல திகில் குடிபுகுந்தது, கோபங் கொண்ட மாலுமிகள் கூட்டம் தங்களை விட்டு இளையபல்லவனை நோக்கித் திரும்பியதும் அவர்களைப் பின்பற்றி வந்து அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த அமீர், கண்டியத்தேவன் இருவர் மனங்களிலும் ஓரளவு அச்சம் ஏற்பட்டிருந்தது.

அவசியமான அபாயத்துக்கு அஞ்சாத மாலுமிகள் அனாவசியமான அபாயத்தில் இழுத்து விடப்படும்போது மரக்கலத் தலைவர்களின் கொலைக்குக் காரணமாயிருந்த கதைகள் பல அந்தப் பிராந்தியத்தில் உலாவிக் கொண்டிருந்ததை அவ்விருவரும் அறிந்தே இருந்தார்கள். அது மட்டுமல்ல, கடல் புறாவின் மாலுமிகள் எந்த ஒரு நாட்டையும் சேர்ந்தவர்கள் அல்ல. தமிழர்கள், அக்ஷயமுனையைச் சேர்ந்தர்வர்கள், அரபு, சீன நாட்டினர், பாலித் தீவினர் ஆகிய பலர் கடல் புறாவிலும் மற்ற மரக் கலங்களிலும் இருந்தனர். இவர்களில் பெரும்பாலோர் தமிழர் களென்றாலும் மற்றவர்கள் தொகையும் அப்படி யொன்றும் அற்ப சொற்பமானதல்ல. மாலுமிகள் கூட்டம் ஒரு கதம்பக் கூட்டம்.

தேசபக்தியாலேயோ, இன உணர்ச்சியாலேயோ ஒன்றுபட்ட கூட்டமல்ல அது. பொருள் வேட்கையாலும், கடல் ஓட்டத்தில் இருந்த பிரியத்தாலும் இளையபல்லவன் தலைமையிலிருந்த பெரும் பிரமையாலும் ஒன்றுபட்டவர்கள். இத்தகைய கூட்டத்தின் பிரதான அஸ்திவாரம் இளைய பல்லவன் திறமை. அது மட்டும் அகன்றுவிட்டால் அபாயம். இதை அமீரும் கண்டியத்தேவனும் திட்டமாக உணர்ந்து இருந்ததால் அந்தச் சில விநாடிகளில் அவர்கள் மனங்கள் பல திசைகளில் இழுபட்டுக் கிடந்தன.

இளையபல்லவனுக்கு ஏதாவது ஆபத்து வருமானால் முதல் பலியாக யாரையாவது கொடுத்துவிடத் தீர்மானித்த அமீர் தனது இடுப்புக் கச்சையில் தயாராகக் கையை வைத்திருந்தான். அவசியமானால் கடல் புறாவையே தீர்த்துவிடக்கூடிய பயங்கரத் திட்டமொன்று கண்டியத்தேவன் இதயத்தில் உருவாகிக்கொண்டிருந்தது. ஆனால் அவ்விருவர் ஏற்பாடு எதற்கும் அவசியமில்லாது போயிற்று இரண்டொரு நாழிகைகளுக்குள்.

இளையபல்லவன் கண்கள் எதிரேயிருந்த கூட்டத்தை நன்றாக ஆராய்ந்தன. “உங்களை வெற்றிப் பாதையில் நான் அழைத்துச் செல்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் மலையூர் நம் கைகளுக்கு மாறும்” என்ற சொற்கள் மிக உறுதியுடன் உதிர்ந்தன அவன் உதடுகளிலிருந்து. அவன் குரல் மிகத் தெளிவாக, இன்பமாக, ஆனால் விவரிக்க இயலாத பெரும் சக்தியுடன் ஊடுருவிச் சென்றது அந்தக் கூட்டத்தை. அதைக் கேட்டதால் அசைவற்றுத் தேங்கி நின்றுவிட்ட மாலுமிகள் கூட்டத்தில் ஒருவன்கூடச் சில விநாடிகள் பேசவேயில்லை. ஒருவன் மட்டும் துணிவு கொண்டு பேச்சைத் துவங்கினான், ஆதியில் ஏற்பட்ட பிரமையை உதறிக்கொண்டு. அவன் பாலிக்குள்ளன்!

உருவத்தில் குள்ளனாயிருந்தாலும், கடலோடுவதில் பெரும் பிரக்யாதி பெற்றிருந்த பாலி நாட்டு மாலுமி, “கடல் புறாவின் தலைவர் கூறும் உறுதியை மட்டும் நம்பி நாம் இந்த அபாயத்துக்குள் நுழைய முடியுமா?” என்று வினவினான்.

இளையபல்லவன் தன்மீது சாய்ந்திருந்த காஞ்சனா தேவியின் இரண்டு தோள்களையும் தன் கைகளால் பற்றிக் கொண்டும் நடுப் பாய்மரத்தண்டில் சாய்ந்த நிலையைச் சிறிதும் அகற்றாமலும் கேட்டான், “நாம் என்று யாரைச் சொல்கிறாய் மாலுமி?” என்று.

பாலிக்குள்ளன் மனம் சிறிது சஞ்சலப்பட்டது. இளைய பல்லவனின் நிதானமும் அலட்சியமும் ஓரளவு பயத்தைக் கூட அளித்தது அவனுக்கு. இருப்பினும் தைரியத்தை வர வழைத்துக்கொண்டு, “நாம் என்று பொதுவாக மாலுமிகளைச் சொன்னேன்” என்று கூறினான்.

இளையபல்லவன் குரல் மிகச் சாதாரணமாகச் சந்தேகம் கேட்பதுபோல் எழுந்தது. “உன் மாலுமிகளையா, என் மாலுமிகளையா?” என்று வினவினான் இளையபல்லவன்.

பாலிக்குள்ளன் சஞ்சலம் அதிகரித்தது. “அப்படி இரண்டு பிரிவு இருக்கிறதா நமக்குள்?” என்று வினவினான் அவன்.
“ஆம் மாலுமி! கலிங்கத்துக் கப்பல் ஒன்றையும் கங்க தேவன் மாலுமிகள் சிலரையும் உன் அதிகாரத்துக்குட் படுத்தினேன் அல்லவா?” என்றான் இளையபல்லவன்.

“உட்படுத்தினீர்கள். ஆனால் இந்தப் பிரிவைச் சேர்ந்த எல்லா மரக்கலங்களுக்கும் தாங்கள் தானே முதல் தலைவர்?” என்று மீண்டும் கேட்டான் பாலிக்குள்ளன்.

இளையபல்லவன் இதழ்களில் புன்முறுவல் விரிந்தது. “இல்லை” என்று ஒரே சொல்லில் பதிலும் சொன்னான் படைத்தலைவன்.

“இல்லையா!” பாலிக்குள்ளன் குரலில் வியப்பு ஒலித்தது.

“இல்லை. கடல் புறாவுக்கே நான் தலைவனில்லை. அப்படியிருக்க, மற்ற மரக்கலங்களுக்கு எப்படித் தலைவனா யிருக்க முடியும்?” என்று வினவினான் இளையபல்லவன்.

“இது உண்மையா?”

“சந்தேகமிருந்தால் அமீரையும் தேவரையும் கேட்டுப் பார். “

பாலிக்குள்ளன் தலை மெள்ளப் பின்னால் திரும்ப, கூட்டத்தின் விளிம்பில் இருந்த அமீரையும் தேவரையும் அவன் கண்கள் நோக்கின. மாலுமிகள் சிலரும் அவர்களை நோக்கினார்கள். அந்த நோக்கில் பயங்கரம் இருந்தது. அதிக நேரம் அவர்களை உணர்ச்சி வசப்படுத்தாத இளையபல்லவன், “அவர்கள் மீது கோபம் வேண்டாம். அவர்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை ,” என்றான்.
பாலிக்குள்ளன் மீண்டும் இளையபல்லவனை நோக்கி, “உங்கள் தலைமையைப் பறித்தது இவர்கள்தானே? உங்கள் சொற்களில் அந்தப் பொருள் தொனித்ததே!” என்றான்.

“பறித்தது இவர்கள்தான். இருப்பினும் பொறுப்பு இவர்களுடையது அல்ல. ” இளையபல்லவன் சொற்கள் புதிர் போட்டன.

அந்தப் புதிருக்கு விடை காணச் சொன்னான் பாலிக் குள்ளன், “எங்களுக்கு விளங்கவில்லை” என்று.

“இவர்கள் கருவிகள். என் தலைமையைப் பறித்தது… ”

“எது?”

“ஓர் ஓலை. “

“ஓலையா?”

“ஆம். “

“அதற்கு நீங்கள் ஏன் பணிந்தீர்கள்?”

“நானும் பணிய மறுக்க முடியாத இடத்திலிருந்து வந்தது. “

விஷயம் மற்ற மாலுமிகளுக்கு விளங்கினாலும், பாலிக் குள்ளனுக்கு விளங்கவில்லை. ஓலையுடன் வந்த அமீர் அதைக் கடல் புறாவின் மாலுமிகளுக்கு மட்டுமே படித்துக் காட்டியதால், மற்ற மரக்கலங்களிலிருந்த மாலுமிகள் அதை அறியவில்லை. வழக்கப்படி கடல்புறாவைத் தொடர்ந்து தங்கள் மரக்கலங்களைச் செலுத்தினார்கள். அதனால் விஷயம் விளங்காத பாலிக்குள்ளனுக்கு விஷயத்தை விளக்கினான் இளையபல்லவன்.

இளையபல்லவன் விளக்கத்தைக் கேட்ட பாலிக்குள்ளன் பல விநாடிகள் அசைவற்று நின்றான். பிறகு கேட்டான்: “உங்கள் நாட்டு இளவரசருக்கு நீங்கள் காட்டும் பணிவு இதுதானா?” என்று.

“ஏன்? பணியாமல் நான் என்ன செய்துவிட்டேன்?” என்று வினவினான் இளையபல்லவன்.

“அக்ஷயமுனை செல்லவேண்டிய மரக்கலத்தை ஸ்ரி விஜயத்தின் வாயிலுக்குக் கொண்டுவந்து விட்டீர்களே?” என்று கேட்டான் பாலிக்குள்ளன்.

“நான் கொண்டுவரவில்லையே” என்றான் இளைய பல்லவன்.

அதுவரை பொறுத்திருந்த அமீர் மாலுமி கூட்டத்தின் எல்லையில் இருந்து கூவினான்: “படைத்தலைவரே! இது நியாயமல்ல” என்று.

“எது நியாயமல்ல” இளையபல்லவன் கேள்வி சர்வ சாதாரணமாக எழுந்தது.

“மரக்கலத்தின் திசையை நீங்கள்தானே மாற்றிச் சொன்னீர்கள்?” என்று. சீறினான் அமீர்.

“நான் எங்கு மாற்றச் சொன்னேன்?”

“துருவ நக்ஷத்திரமிருக்கும் நிலைபற்றி நீங்கள் சொல்ல வில்லையா?”

“சொன்னேன். “

“பிறகு திசை காட்டும் கருவியைப் பார்க்கச் சொல்ல வில்லையா?”

“சொன்னேன். “

“திசை காட்டும் கருவியைக் கெடுத்தது யார்?”

“நான்தான்?”

“ஏனப்படிச் செய்தீர்கள்?”

“திசை காட்டும் கருவி அகூதாவால் எனக்களிக்கப் பட்டது. அதை நான் எது வேண்டுமானாலும் செய்வேன். “

இளையபல்லவன் இப்படிக் குழந்தைத்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் பேசியது அமீருக்கு மட்டுமல்ல, காஞ்சனாதேவிக்குக்கூட வேடிக்கையாய் இருந்தது. பாலிக் குள்ளனுக்குக் கோபமே வந்தது. “உங்கள் சொந்தச் சொத்தாயிருந்தாலும் அதைக் கெடுக்கவேண்டிய அவசியமென்ன?” என்று கேட்டான் சினத்துடன்.

“திசை காட்டும் கருவி மரக்கலத் தலைவனுக்குத்தான் தேவை. தலைமைப் பதவி போய்விட்ட பிறகு திசை காட்டும் கருவி எதற்கு எனக்கு?” என்று வினவினான் இளைய பல்லவன்.

இளையபல்லவன் மெள்ள மெள்ளத் தங்களை ஆபத்தில் இறக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்த அமீரும் கண்டியத் தேவனும் வியப்புடன் படைத்தலைவனை நோக்கினர். அவர்கள் பார்வையைக் கவனித்தும் கவனிக்காதவன் போலக் கூறினான் இளையபல்லவன் மாலுமிகளை நோக்கி, “என் நாட்டினிடம் எனக்குள்ள பற்றைவிட அதிகப் பற்று இளவரசரான அநபாயருக்குக்கூட இருக்க முடியாது. ஆனால் கடலின் சட்டதிட்டங்கள், ஒழுக்க முறைகள் வேறு. கப்பல் தலைவன் கப்பலைக் காதலிக்கிறான்.

அதுவும் இந்தக் கடல் புறா என் இதயம் போன்றது. அதை என்னைத் தவிர இன்னொருவர் எத்தனை நண்பராயிருந்தாலும் எப்படி நான் ஆட்கொள்ள விட முடியும்? கூடாத விஷயத்தில் அமீரும் கண்டியத்தேவரும் நுழைந்தார்கள். அந்த முயற்சியை உடைப்பது என் கடமையாயிற்று. அது மட்டுமல்ல, எந்த லட்சியத்துடன் நான் கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களாக வாழ்ந்து வருகின்றேனோ அந்த லட்சியத்தை முன்னிட்டும் கடல்புறா இந்த இடத்திற்கு வரவேண்டியதாயிற்று. அக்ஷய முனைக்கு இது சென்றிருந்தால் லட்சியம் ஈடேறாது. இத்தனையும் யோசித்துத்தான் அமீரையும் கண்டியத் தேவரையும் மீறி இந்த ஜலசந்திக்குக் கடல்புறாவைக் கொண்டு வந்தேன்” என்றான்.

“என்ன லட்சியம் அது?” என்று கேட்டான் பாலிக் குள்ளன்.

“ஸ்ரி விஜயத்தின் அரியணையில் அதற்கு உரிமையுடைய வரை அமர்த்துவது” என்ற இளையபல்லவன் குரல், ஏதோ பெரும் ஆணையை இடுவது போல் சப்தித்தது.

“யாரது உரிமையுடையவர்?” என்று கேட்டான் ஒரு மாலுமி.

“இவர்!” என்று கூவிய இளையபல்லவன் தன்மீது சாய்ந்திருந்த காஞ்சனாதேவியின் இடையை இரு கைகளாலும் பிடித்து அவளைச் சிறு பறவையைப்போல் உயரத் தூக்கிக் காட்டினான். அவளைப் பிறகு கீழே இறக்கி விட்டு மேலும் மாலுமிகளை நோக்கிச் சொன்னான்: “இளவரசர் நம்மை அக்ஷயமுனையில் இருத்தித் தாம் கடாரத்தில் இருந்து கொண்டு ஜெயவர்மனிடம் சமாதானப் பேச்சுப் பேச முயல்கிறார். ஆனால் ஜெயவர்மன் குணம் உங்களுக்குத் தெரியும். அவன் கலிங்கத்தின் நண்பன். தமிழர்களின் விரோதி. ஒருநாளும் எந்த ஏற்பாட்டுக்கும் இணங்க மாட்டான். இணங்குவதாகப் பாசாங்கு செய்து காலம் கடத்துவான். அப்படிக் கிடைக்கும் அவகாசத்தில் தன் கடற்படையைப் பலப்படுத்திவிடுவான்.

அவன் படையில் ஒரு பகுதி கலிங்க மரக்கலங்கள். அவற்றில் பலவற்றை நாம் அழித்துவிட்டோம். இப்பொழுது ஸ்ரி விஜயத்தின் கடற்படை சிறிது பலவீனப்பட்டிருக்கிறது. ஸ்ரி விஜயத்தின் பலத்தை இப்பொழுது உடைக்காவிட்டால் எப்பொழுதும் உடைக்க முடியாது. ஜெயவர்மனுக்கு அவகாசம் தருவது அபாயம். இது இளவரசருக்குத் தெரியாது. ஆகவே அவரையும் மீறி, இஷ்ட விரோதமாக நாம் ஸ்ரி விஜயத்துடன் கைகலக்க வேண்டி யிருக்கிறது. ஆகையால்தான் உங்களை இங்கு அழைத்து வந்தேன்..”

இங்கு சற்று நிதானித்த இளையபல்லவன் மாலுமிகளைக் கூர்ந்து நோக்கினான். அவர்கள் முகங்களில் குழப்பம் இருந்தது. பாலிக்குள்ளன் முகத்தில் மட்டும் குழப்பம் இல்லை. சந்தேகமே விரிந்தது. “தலைவரே! ஸ்ரி விஜயத்தின் கடற்படையின் பலம் உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினான்.

“தெரியும். சுமார் நூறு மரக்கலங்கள் இருக்கின்றன” என்று சொன்னான் படைத்தலைவன்.

“நம்மிடமிருப்பது ஐந்து மரக்கலங்கள்தான்… ”

“ஆம். “

“அவற்றில் இரண்டு உல்லாசப் பயணத்துக்கு ஏற்பட்டவை. இரண்டுக்கும் பெண்களின் பெயர்கள்… ”

“ஆம்,

காஞ்சனா ஒன்று, மஞ்சளழகி ஒன்று. “

“மூன்று ஆண்மரக்கலங்களையும், இரண்டு பெண் மரக்கலங்களையும் வைத்துக்கொண்டு ஸ்ரி விஜயத்தின் பெரும் படையைச் சமாளிக்க முடியுமென்று நினைக்கிறீர்களா?”

பாலிக்குள்ளனின் இந்தக் கேள்வி மற்ற மாலுமிகளிடையும் அச்சத்தை உண்டாக்கவே, “ஆம், எப்படி முடியும்? ஒரே நாளில் நமது மரக்கலங்கள் அழிந்து போகும்” என்று குரல்கள் கிளம்பின.

இளையபல்லவன் அவர்களைக் கூர்ந்து நோக்கினான். “எத்தனை மரக்கலங்களை வைத்துக்கொண்டு அக்ஷய முனையை வென்றோம்? எத்தனை மரக்கலங்களையும் வீரர் களையும் வைத்துக்கொண்டு மாநக்காவரத்தைக் கைப்பற்றி னோம்” என்று வினவவும் செய்தான்.

“அந்த இடங்களில் நிலைமை வேறு” என்றான் பாலிக் குள்ளன்.

“நிலைமை எல்லா இடங்களிலும் ஒன்றுதான் மாலுமி, நமது பலம் குறைவு; எதிரி பலம் அதிகம். நமது ஆபத்து அதிகம், எதிரிக்கு ஆபத்தே இல்லை . ஆனால் முடிவுகள் நமக்கு அனுகூலம்? ஏன்? ஆபத்து ஆள் பலத்தால் மட்டும் சமாளிக்கப்படுவதில்லை. அறிவு பலத்தால்தான் பெரும்பாலும் சமாளிக்கப்படுகிறது. எதிரியின் மனோபாவம், அவனைச் சேர்ந்தவர்களின் சக்தி, ஆசாபாசங்கள் இவற்றை எடை போடுவதிலும், அவற்றுக்கு மாற்றுக் கண்டுபிடித்து சமயத்தில் தாக்குவதாலுமே பெரும் வெற்றிகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அந்த அறிவு இன்னும் எனக்கு மழுங்கி விடவில்லை. அதை நம்பி வர இஷ்டமிருந்தால் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்ல நான் தயார்.

இல்லையேல் உங்கள் இஷ்டப்படி எதையும் செய்யலாம். நீங்கள் ஒரு முடிவுக்கு வர இரண்டு நாழிகைகள் அவகாசம் தருகிறேன்” என்று கூறிய இளையபல்லவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் திடீரெனக் காஞ்சனாதேவியை நோக்கி, “தேவி! வா! உன் பறவைகள் எப்படியிருக்கின்றன, பார்ப்போம்” என்று அவளைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அக்ரமந்திரத்தை நோக்கி நடந்தான்.

காஞ்சனாதேவியின் இதயத்தில் அச்சம் பரவிக் கிடந்தது. அவள் கனவில் நடப்பவள் போல் நடந்து சென்றாள். அக்ரமந்திரத்தில் படைத்தலைவன் அவனது பஞ்சணையில் உட்கார்ந்து பறவைகளைப் பிடித்து விளையாடியதைக் கூட அவளால் ரசிக்க முடியவில்லை. ‘இன்னும் இரண்டே நாழிகைகள்! மாலுமிகள் என்ன முடிவைச் சொல்வார்களோ இவரைப்பற்றி? இவர் பேராபத்தில் அவர்களை இழுத்து வந்து விட்டாரே!’ என்று மனம் கிலிவசப்படத் தவித்துக் கொண் டிருந்தாள். இரண்டு நாழிகைகளும் ஓடிவிட்டன.

மாலுமி களுக்குள் ஏதோ ஒரு முடிவு ஏற்பட்டுவிட்டதென்பது, அவர்கள் அறையை நோக்கி வந்தபோது ஏற்பட்ட தடதட வென்ற காலடிச் சத்தத்திலிருந்து தெரிந்தது. அக்ரமந்திரத்தின் கதவு முரட்டுத்தனமாகப் படேரென்று திறக்கப்பட்டது. பாலிக்குள்ளன் தலையை உள்ளே நீட்டினான் முதலில். அவனுக்குப் பின்னால் எழுந்தன மற்ற மாலுமிகளின் தலைகள்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch48 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch50 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here