Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch5 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch5 | Sandilyan | TamilNovel.in

117
0
Read Kadal Pura Part 3 Ch5 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch5 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch5 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 : வெண்புறா.

Read Kadal Pura Part 3 Ch5 | Sandilyan | TamilNovel.in

கடல் புறாவின் முதல் போரை முழுதும் காணாமல் மண்டையில் அடிபட்டு நினைவிழந்து இரண்டு நாட்கள் இளையபல்லவனின் அறைப் பஞ்சணையில் கிடந்த பலவர்மன், கடல் மோகினியை அடைவதிலிருந்த ஆபத்தை எடுத்துக் குணவர்மனுக்குச் சொல்லிப் புலம்பிய அதே சமயத்தில் கடல் புறாவின் தளத்தின் ஒரு மூலையில் கடல் புறாவின் எழிலைவிட ஆயிரம் மடங்கு அதிக எழிலுடன் விளங்கிய வெண்புறாவொன்று மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து கிடந்ததென்றால் அதற்குக் காரணங்கள் பல இருந்தன. முதல் காரணம் கடல் புறாவின் பிரமிக்கத்தக்க போர் முறை. இரண்டாவது காரணம் அந்தச் சந்திப்புக்கு உந்திய விதியின் விசித்திர கரம்.

இப்படியாகப் பல காரணங் களைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்ததால் மகிழ்ச்சி உடலையும் உள்ளத்தையும் ஆட்கொள்ள நின்ற அந்த வெண்புறா பக்கத்திலிருந்த வேட்டுவனை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தது. அந்தப் பார்வையில் அர்த்தங்கள் பல புதைந்து கிடந்தன. கேள்விகளும் பலப்பட எழுந்து ஒலித்தன. புதைந்து கிடந்த பொருள்களைப் புரிந்து கொண்டான் அந்த வேட்டுவன். கேள்விகளுக்கும் அவனால் பதில் சொல்ல முடியும். ஆனால் புரிந்ததைப் புரிந்ததாகக் காட்டிக்கொள்ள முடியவில்லை அவனால். கேள்விகளுக்கு எழுந்த பதிலை நாவும் சொல்ல மறுத்தது. இப்படியொரு விபரீத நிலை உண்டா என்று எண்ணிய வேட்டுவன் வேறு துறையில் பேச்சைத் திருப்பிக் கேட்டான், “வெண் புறாவுக்குக் கடல் புறாவைப் பிடித்திருக்கிறதா?” என்று.
வெண்புறா தன் அழகிய கண்களைத் திருப்பிச் சிவந்த வாயையும் திறந்து பதில் கூறியது: “வேட்டுவருக்குப் பிடித்த எதுவும் வெண்புறாவுக்கும் பிடிக்கும். “

வேட்டுவன் நகைத்தான்; “வேட்டுவனுக்குப் பிடிப்பது புறாவுக்கு எப்படிப் பிடிக்கும்? வேட்டுவனே புறாவைப் பிடிப்பவனாயிற்றே!” என்றும் கேட்டான்.

“இந்தப் புறாவை வேட்டுவர் பிடிக்கவில்லையே,” என்று கூறி வெண்புறாவும் நகைத்தது பதிலுக்கு.

“வேறு யார் பிடித்தது வெண்புறாவை?” பொய்க் கோபத்துடன் கேட்டான் வேட்டுவன்.

“விதி பிடித்தது. “

“அப்படியானால் வேட்டுவன் எதைப் பிடித்தான்?”

“புறா இருந்த கூண்டைப் பிடித்தார். ஆனால் கூண்டுக்குள் இருந்தது என்னவென்பது அவருக்குத் தெரியாது. “

“தெரிந்திருந்தால்?”

“மோசம் நடந்திருக்கும்?”

“என்ன மோசம்?”

“கூண்டைப் பிடித்திருக்க மாட்டார். “
“ஏன்?”

“புறாவுக்கு அபாயம் நேருமோவென்று திகில் அடைந் திருப்பார். “

“புறாவிடம் அத்தனை ஆசையா அவனுக்கு?”

“ஆம். “

“அதை உண்ண ஆசையா?”

“உண்ண ஆசையோ, உள்ளத்தில் எண்ண ஆசையோ?”

“உம். சொல் வெண்புறாவே!”

“ஊஹூம். “

கலகலவென்று நகைத்தது வெண்புறா. கூண்டின் திறந்த வாயிலுக்குள் வலிய நுழையவும் செய்தது. வேட்டுவன் கரங்கள் கூண்டின் கதவுகளெனத் திறந்தன. அதில் நுழைந்த வெண்புறா தன் அழகிய தலையை வேட்டுவன் மார்பின்மீது சாய்த்துக்கொண்டது. வேட்டுவன் அழைத்தான் அதன் காதுக் கருகில் தன் உதடுகளைக் கொண்டுபோய் “வெண்புறாவே!” என்று .

வெண்புறா பதிலிறுக்க மறுத்தது. “வீட்டுப் புறாவே!” என்று அழைத்தான் மீண்டும் வேட்டுவன். அதற்கும் பதிலில்லை. “கடல்புறாவே!” என்றான் வேட்டுவன் மூன்றாம் முறையும். அதற்கும் பதில் கிடைக்காது போகவே, “ஏன் பதிலில்லை, கோபமா?” என்றும் வினவினான்.

“இந்தப் புறாவுக்குச் சொந்தப் பெயரும் இருக்கிறது,” என்று வந்தது பதில் சற்றுக் கோபத்துடன்.

“தங்கம்” என்று அடுத்தபடி அழைத்தான் வேட்டுவன் மீண்டும்.

“அதல்ல என் பெயர். ” இந்தப் பதிலும் உஷ்ணமாகவே உதிர்ந்தது.

“சொர்ணம்,” என்று மெள்ள அழைத்தான் அவன்.

“காஞ்சனா என்ற பெயரும் மறந்துவிட்டதா இளைய பல்லவருக்கு?” அதிக உஷ்ணத்துடன் எழுந்தது கேள்வி.

இளையபல்லவன் காஞ்சனாதேவியை இறுகப் பிடித்துக் கொண்டு பலமாக நகைத்தான். கடல் புறாவின் பக்கத்தே மெல்லவே அறைந்து கொண்டிருந்த அலைகளும் அவனுடன் சேர்ந்து நகைத்தன.

“எதற்காக நகைக்கிறீர்கள்?” என்று கேட்டாள் காஞ்சனா தேவி.

“வீணாகக் கோபம் வருகிறதே உனக்கு என்று நகைத்தேன்,” என்று பதில் கூறினான் படைத்தலைவன்.
“வீணாகக் கோபம் வரவில்லையே. ஏதேதோ பெயர் வைத்துக் கூப்பிடுகிறீர்களே என்றுதான் கோபித்தேன். “

“என்ன அப்படிக் கூப்பிட்டு விட்டேன்?”

“பாலூர்ப் பெருந்துறையில் வீட்டுப் புறா என்றீர்கள். காட்டுப் புறா என்றீர்கள். கடல்புறா என்றீர்கள். இப்போது வெண் புறாவாக மாறிவிட்டது… ”

“அதில்… ”

“பேசாதீர்கள், அதுதான் அப்படி என்றால் இப்பொழுது தங்கம், சொர்ணம் என்று ஏதேதோ புதுப் பெயர்கள் வைக்கிறீர்கள். ” என்று மேலும் பொரிந்து தள்ளப்போன காஞ்சனாதேவியின் வாயை ஒரு கையால் பொத்திய இளையபல்லவன், “அடடே! நிறுத்தமாட்டேனென்கிறாயே. பெண்களைப் பேசவிட்டால் நிறுத்தமாட்டார்கள். கொஞ்சம் பொறு,” என்றான்.

“எதற்குப் பொறுக்க வேண்டும்?” என்று வினவினாள் அவள் வாயை மூடிய அவன் கையைத் தன் கையால் அகற்றி.

“அவசரப்படுவதே பெண்களுக்கு அலுவலாகப் போய் விட்டது. ” என்றான் இளையபல்லவன்.

“அவசரப்படாவிட்டால் என்ன விளக்கிவிடுவீர்கள்?” என்று காஞ்சனாதேவி அவன் மார்பில் சாய்ந்தபடியே அவன் முகத்தை நோக்கித் தன் கண்களை உயர்த்தினாள்.
இளையபல்லவன் கண்கள் அவள் கண்களுடன் சில விநாடிகள் உறவாடின. அந்த உறவாடலுக்கு, உறவாடலால் உந்தப்பட்ட உணர்ச்சிகளுக்குச் சூழ்நிலையும் பெரிதும் உதவி செய்தது. கடல் புறாவின் முதற்போர் முடிந்து இரண்டு நாட்களாகி மூன்றாம் நாளிரவு முதிர்ந்துவிட்டதால் ஆரம்ப மதியும் மறைந்து இருள் சூழ்ந்து கிடந்த நேரம் அது.

எசமான் அகன்றுவிட்ட நேரங்களில் பணியாட்கள் பிரகாசிப்பதைப் போல வெண்மதி மறைந்து விட்டதால் தாரகைகள் பிரமாதமாக ஜொலித்துக்கொண்டிருந்தன. போர் நடந்த அன்று வீசிய பெருங்காற்று மறைந்து மந்தமாருதம்போல மெல்ல வீசிக் கொண்டிருந்தது. ஆகவே கடலலைகளின் ஆர்ப்பாட்டமும் அடங்கிக் கடல்புறா ஒரே சீரான வேகத்துடன் ஓடிக்கொண் டிருந்தது. அதன் பாய்கள் தேவையான அளவுக்குப் புடைத் திருந்ததால் கடல் புறாவின் அழகு இணையற்றதாயிருந்தது. இரவு ஏறிவிட்டதாலும் அவசியம் எதுவுமில்லாததாலும் பந்தங்களில் சிலவும் விளக்குகளில் சிலவுமே தளத்தில் எரிந்து கொண்டிருந்ததால் தளத்தின் சில பாகங்களில் மட்டுமே வெளிச்சம் விழுந்திருந்தது.

அப்படி விழுந்திருந்த வெளிச்சப் பகுதிகளை விலக்கி இருள் சூழ்ந்த இடமாகப் பார்த்து ஒதுங்கி பரஸ்பர அணைப்பில் நின்ற அந்தக் காதலர் இருவரும் தெய்வ வானத்தின் கீழே நின்ற இரு அற்புதக் குழந்தைகளைப் போலக் காட்சியளித்தார்கள். அவர்கள் இணைப்பைப் பார்த்து அவர்களைப் பிரிக்க விரும்பாத கடலின் அடிப்பகுதி ‘உச், சர்’ என்று புதுவிதமான எச்சரிக்கையைச் சூழ்நிலைக்குச் செய்து கொண்டிருந்தது..

இயற்கையின் இந்த எண்ணத்தை அள்ளும் சூழ்நிலையில் காஞ்சனாவின் அஞ்சன விழிகளைக் கவர்ந்து நின்ற இளையபல்லவனின் காந்தக் கண்கள் நீண்ட நேரம் அவள் உள்ளத்தையே விழிகள் மூலமாகப் பார்த்து விடுவனபோல் அசைவற்று நின்றன. அவை உள்ளத்தை ஊடுருவியும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காஞ்சனாதேவி ஏன் அப்படிச் சங்கடப்பட்டுப் படைத்தலைவன் பிடியில் அசைய வேண்டும்! அவள் நாசி ஏன் மெள்ள மலர முற்படும் செண்பக மொட்டுப் போல லேசாக விரிந்து புடைத்துப் பெருமூச்சொன்றை வெளியிடவேண்டும்? அவள் மார்பு ஏன் எழுந்து ஒருமுறை தாழ வேண்டும்? அவள் பொன்னிறக் கன்னம் ஏன் அவன் மார்பில் புரண்டு உராய வேண்டும்?

தனது உள்ளத்தையே அலசிப் பார்க்கும் படைத் தலைவனின் கண்களைப் பார்க்கச் சக்தியற்ற காஞ்சனாதேவி சில விநாடிகளுக்குள்ளாகவே தன் கண்களை அவன் காந்த விழிகளிலிருந்து விடுவித்துக் கொண்டாள். மேலும் தன்னைச் சுற்றி இளையபல்லவன் பின்னிவிட்ட இன்ப வலையிலிருந்து விடுபடவும் முயன்ற அவள் அந்த வலை எத்தனை பலமானது என்பதையும் புரிந்து கொண்டாள். வேடன் விரித்த வலையில் விழுந்துவிட்ட தன்னைப் புறாவென்று அவன் நினைப்பதில் தவறில்லையென்றே நினைத்தாள் அவள்.

மற்றதும் தவறில்லை என்பதைச் சுட்டிக் காட்ட முயன்ற இளையபல்லவன் மெதுவாகச் சொன்னான்: “காஞ்சனாதேவி! உன்னைப் புறா வாகத்தான் நான் எண்ணுவேன். அதை நீ மாற்ற முடியாது. முதலில் பாலூர்ப் பெருந்துறையில் சாளரத்தின் மூலம் வந்ததே தூதுப் புறா, அந்தக் காட்டுப் புறாதான் உன் அறையிலிருந்து என் அறைக்கு உன்னை இழுத்து வந்தது. நினைப் பிருக்கிறதா உனக்கு? அப்பொழுதும் வெண்மையான ஆடை தான் நீ புனைந்திருந்தாய். இதோ இன்று புனைந்திருக்கும் இதே வெண்பட்டுதானென்று நினைக்கிறேன். இந்த வெண்பட்டு அன்றுகூட உன் பொன்னிற மேனிக்கு எத்தனை சோபையை அளித்தது தெரியுமா காஞ்சனா? அன்று அந்தப் புறாவைத் தொடர்ந்து ஓடிவந்ததை இன்றுவரை நான் மறக்க முடியவில்லை . “

காஞ்சனாதேவி உணர்ச்சி வசப்பட்டுக் கிடந்ததால் பதிலேதும் சொல்லவில்லை. இளையபல்லவனே மேற் கொண்டு பேச முற்பட்டு, “இன்றிரவு அந்த வெண்பட்டைப் புனைந்து நீ அறையிலிருந்து வெளிப்போந்த போது நான் இருக்குமிடத்தை மறந்தேன், அதோ கூட வரும் இரு மரக் கலங்களை மறந்தேன், கடலைக்கூட மறந்தேன். பாலூர்ப் பெருந்துறையில் அந்த வெளிநாட்டுப் பிரமுகர் வீதி மாளிகை யிலிருப்பதாகவே நினைத்தேன். அதே வெண்புறா என்முன் காட்சி அளித்ததை நினைத்தேன். அந்த வெண்புறாவை எண்ணி, புறாவினால் இணைக்கப்பட்ட நமது இதயங்களை எண்ணித்தான் இந்த மரக்கலத்துக்கும் கடல்புறா எனப் பெயர் சூட்டினேன். ஆகவே வெண்புறாவென்று உன்னை அழைத்ததில் தவறில்லை” என்றான்.

“அப்படியானால் தங்கம், சொர்ணம் என்ற புதுப் பெயர்கள்?” காஞ்சனாதேவி மெல்ல முணுமுணுத்தாள்.

“தங்கம், சொர்ணம், பொன், காஞ்சனம் எல்லாமே ஒரே உலோகத்தின் பெயர்கள்தாம்” என்று இளையபல்லவனும் முணுமுணுத்து அவள் கன்னத்தைத் தடவிக் கொடுத்துப் புன்முறுவலும் கோட்டினான்.

“அப்படியானால் நான் உலோகமா? சடப்பொருளா?”

“என்ன அப்படிக் கேட்டுவிட்டாய். தங்கத்தை நாடித் திரிபவர்கள் எத்தனை பேர்?”

“நீங்கள் அப்படித் தேடவில்லையே. தானாக வந்துதானே காலில் இடறியது. காலிலா? இல்லை இல்லை , கடலில். “

“எப்படியிருந்தாலென்ன? அதிர்ஷ்டக்காரனைச் சீதேவி வலிய வந்து அடைகிறாள். “

காஞ்சனாதேவி சற்று வாய்விட்டு நகைத்தாள். “கெட்டிக்காரத்தனமாகத்தான் பேசுகிறீர்கள்” என்றும் சொன்னாள் நகைப்புக்கிடையே. “ஆனால்… ” என்று மேலும் ஏதோ சொல்ல முற்பட்டு நிறுத்தினாள்.

“என்ன ஆனால்?” என்று வினவினான் இளைய பல்லவன்.

“நான் போரில் கிடைத்த அடிமைதானே?”

“இங்குதான் ஆச்சரியம் இருக்கிறது. “

“என்ன ஆச்சரியம்?”

“சாதாரணமாக ஒரு மரக்கலம் மற்றொரு மரக்கலத்தை வெற்றி கொள்ளும்போது, பிடிபடும் மரக்கலத்திலிருப்பவர்கள் பிடித்த மரக்கலத்தின் தலைவனிடம் அடிமைப்படுவார்கள். இங்கு விஷயம் நேர் விரோதமாயிருக்கிறது. “

இதைக்கேட்ட காஞ்சனாதேவி கலகலவென நகைத்தாள். அவளை இன்னும் இறுக்கிப் பிடித்தான் இளையபல்லவன். அந்த நிலையில் சற்றுத் திடப்பட்டுப் பேசினான் அவன். “காஞ்சனாதேவி! விதி நம்மைத் திடீர் திடீரென எதிர்பாராத இடங்களில் முட்ட வைக்கிறது. முன்பு பாலூர்ப் பெருந்துறை. இப்பொழுது கடல் மோகினிக்கு அருகில். இதிலும் நான் விதியின் கரத்தைக் காண்கிறேன்” என்றான்.

“கடல் மோகினியா?” என்று வினவினாள் காஞ்சனா தேவி.

“ஆம் தேவி! நக்காவரம் தீவுகளைத் தமிழகத்தில் அப்படித்தான் அழைக்கிறோம். “

“ஏன்?”

“அது இராஜேந்திர சோழதேவர் வைத்த பெயர். “

“எதற்காக அப்படிப் பெயர் வைத்தார்?”

“தமிழகத்துக்கும் பொற்கிரிசே எனப்படும் சொர் ண பூமிக்கும் இடையே இருக்கின்றன இந்த நக்காவரம் தீவுகள். இவற்றின் ஓரங்களைப் புஷ்பச்சோலைகள் சூழ்ந்திருக்கின்றன. ஆகவே இந்தத் தீவுகளின் கூட்டத்தை வெற்றி கொண்ட இராஜேந்திர சோழதேவர் இவற்றுக்குத் தென் கடல் மோகினியின் புஷ்ப ஒட்டியாணம் என்று பெயர் வைத்தார். “

“என்ன அழகான பெயர்!” என்றாள் காஞ்சனாதேவி.

இளையபல்லவன் முகத்தில் பெருமையின் சாயை மிகப் பெரிதாகப் படர்ந்தது. “இராஜேந்திர சோழதேவரைப் போன்ற வீரரும் ரஸிகரும் தமிழகத்தில் இருந்ததில்லை காஞ்சனாதேவி. அவர் கங்கை கொண்டதுமே வியந்த பாரதம் அவரைக் கங்கைகொண்ட சோழர் என்று அழைத்தது. அவர் கங்கை யைக் கொண்டதன்றிக் கடாரத்தையும், ஏன் அந்தக் கீழ்த்திசை முழுவதையுமே வெற்றி கொண்டதும் உலகமே வியந்தது. அத்தகைய வீரர் இந்த நக்காவரம் தீவுகளைக் கண்டார். அதன் ஓரங்களில் மண்டிக் கிடந்த புஷ்பச் சோலைகளைக் கண்டார். ரசிகரான அந்தப் பேரரசர் இதற்குத் தென் கடல் மோகினியின் புஷ்ப ஒட்டியாணம் என்று பெயர் இட்டார். காலம் பெயரைத் தேய்த்தது. புஷ்ப ஒட்டியாணம் மறைந்தது. “தென்’ என்ற சொல்லும் மறைந்தது. கடல் மோகினி மாத்திரம் மிஞ்சியது” என்றான் இளையபல்லவன்.

“சரி, இந்த கடல் மோகினிக்கும் நாம் சந்தித்ததற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டாள் காஞ்சனாதேவி.

“பெரும் சம்பந்தம் இருக்கிறது தேவி! பாலூர்ப் பெருந் துறைக்கு நீங்கள் வந்தது ஸ்ரி விஜயத்தில் ஜெயவர்மன் ஆதிக்கத்தைக் குலைக்க. அதைப்பற்றி அங்கு பேசினோம். ஆனால் அதன் அலுவல் துவங்கப் போவது கடல் மோகினியில்” என்றான் இளையபல்லவன்.

அவன் கூறுவதை ஆமோதிப்பதுபோல் கடல் புறாவின் தாரைகள் மற்றுமொருமுறை பெரிதாகச் சப்தித்தன. “கடல் மோகினியை நெருங்குகிறோம் வெண் புறாவே! இனி புஷ்பச் சோலைகளில் வெண்புறா இஷ்டப்படி திரியலாம். ஆனால் பறந்தோடி விட முடியாது. கூட வேடனும் இருப்பான்” என்று கூறினான் இளையபல்லவன், தாரைகளின் அலறலைக் கேட்டதும். இதற்குச் சற்று முன்புதான், “கெட்டது குடி” என்று அக்ரமந்திரத்தின் பஞ்சணையில் நினைவிழந்தான் பலவர்மன்..

அடுத்த இரண்டு நாழிகைக்குள்ளாகவே பலவர்மன் சொன்னது சரியென்பதற்கு அடையாளம் கிடைத்தது. உள்ள ஆபத்தை அறிவிக்க வந்த அமீர் முகத்தில் ஈயாடவில்லை.

அமீரின் முக பாவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளையபல்லவன், “என்ன அமீர்” என்று வினவினான் கவலையுடன்.

“நாம் மோசம் போய்விட்டோம்” என்றான் அமீர்.

“என்ன மோசம் போய்விட்டோம்” என்று கேட்டான் இளையபல்லவன்.

“இப்படி வாருங்கள்” என்று இளையபல்லவனைத் தனியாக அழைத்துச் சென்று அமீர் ஏதோ மிக ரகசியமாகச் சொன்னான். அதைக் கேட்டு திரும்பி வந்த இளையபல்லவன், “காஞ்சனா! நீ உன் தந்தையிருக்குமிடம் போ! அங்கேயே இரு. நான் சொல்லும்போது தளத்துக்கு வரலாம்” என்று கூறிவிட்டு, நடுப் பாய்மரத் தண்டை நோக்கி ஓடினான். அடுத்த நிமிஷம் இளையபல்லவனும் அமீரும் அந்தப் பாய்மரத்தின் உச்சிக்குத் தொத்தித் தொத்திப் போய்க் கொண்டிருந்தார்கள்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch4 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch6 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here