Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch50 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch50 | Sandilyan | TamilNovel.in

109
0
Read Kadal Pura Part 3 Ch50 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch50 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch50 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 50 : கனவின் படிகள்.

Read Kadal Pura Part 3 Ch50 | Sandilyan | TamilNovel.in

காஞ்சனாதேவியைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அக்ரமந்திரத்துக்குள் நுழைந்த இளையபல்லவன் அறைக் கதவை இடது கையால் சாத்திவிட்டுப் பஞ்சணையை நோக்கி நகர முற்பட்டதைக் கண்டதும் கடாரத்துக் கட்டழகி, “இருங்கள் கதவைத் தாழிட்டு விடுகிறேன்” என்று கூறிக் கதவை நோக்கித் திரும்பினாள்.

“வேண்டாம் வா. திறந்தே இருக்கட்டும்” என்று கூறிய இளையபல்லவன் அக்ரமந்திரத்திலிருந்த தனது பஞ்சணை யில் உட்கார்ந்துகொண்டு சில விநாடிகள் ஏதோ யோசித்து விட்டு, “பறவைகளை எங்கே வைத்திருக்கிறாய்?” என்று வினவினான்.

காஞ்சனாதேவி அதற்குப் பதில் சொல்லவில்லை. பறவைகளைப் பற்றிய சிந்தனையைவிட இளையபல்லவனுக்கு ஏற்படவிருந்த ஆபத்தைப்பற்றிய சிந்தனையிலேயே திளைத் திருந்த அவள், “மாலுமிகள் ஒருவேளை… ” என்று கூறி வாசகத்தை முடிக்காமல் தயங்கிக்கொண்டே நின்றாள்.

“என்ன ஒருவேளை?” என்று அலட்சியமாக எழுந்தது இளையபல்லவன் கேள்வி.

“உங்கள் சொல்லை ஏற்காவிட்டால்?”

கவலையுடன் கேட்டாள் காஞ்சனாதேவி.
“ஏற்காவிட்டால் போகட்டும்?”

“ஏற்காவிட்டால் உங்களை எதிர்க்க வரமாட்டார்களா?”

“வரலாம். “

“வந்தால் ஆபத்தில்லையா?”

“ஆபத்துத்தான். “

“அதற்காகத்தான் தாழிடட்டுமா என்று கேட்கிறேன். ” இந்தக் கேள்வியைச் சற்று கோபத்துடனேயே கேட்டாள் காஞ்சனாதேவி.

இளையபல்லவன் மெள்ள நகைத்தான். “இந்தச் சிறு மரக்கதவும் தாழும் நம்மை மாலுமிகளின் கூட்டத்திலிருந்து காத்துவிடுமென்று நினைக்கிறாயா காஞ்சனா?” என்று கேட்ட இளையபல்லவன் தாழிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை விளக்கினான்.

காஞ்சனாதேவிக்கும் தான் செய்யப் புகுந்த ஏற்பாடு எத்தனை அற்பமானது என்பது புரிந்ததால் கதவைத் தாழிடாமலே அவனை நோக்கி வந்தாள். அவன் மேற்கொண்டு மாலுமிகளைப் பற்றிய சிந்தனை ஏதுமில்லாமல், “அந்தப் பறவைகளைப் போய் எடுத்து வா காஞ்சனா” என்றான்.

இதைக்கேட்ட காஞ்சனாதேவி அர்த்தமேதும் புரியாமல் அவனை ஒரு விநாடி நோக்கினாள். பிறகு இரண்டு அறை. களுக்குமிடையிலிருந்த கதவை நோக்கி நடந்தாள். இளைய பல்லவன் விழிகள் அவளை ஆச்சரியத்துடன் நோக்கின. “என்ன காஞ்சனா! இடைக்கதவு திறந்தா இருக்கிறது?” என்றும் வினவினான் வியப்புடன்.

கதவை நெருங்கிய காஞ்சனாதேவி திரும்பி, “ஆம்,” என்றாள்.

“இடைக் கதவைத் தாழிட்டு வைக்கச் சொன்னேனே?” என்று வினவினான் படைத்தலைவன்.

“ஆம். சொன்னீர்கள். “

“சொன்னதைச் செய்ய இஷ்டமில்லை போலிருக்கிறது. “

“இஷ்டமிருந்தது, முதல்நாள் தாழிட்டும் வைத்தேன். ஆனால் அடுத்த மரக்கலத்திலிருந்து அபாயத் தாரை ஊதப்பட்டதும் திறந்துவிட்டேன். “

அவள் மனோபாவம் நன்றாகப் புரிந்தது அவனுக்கு. அபாயத் தாரை ஊதப்படுவதற்கு முன்பே இடைக் கதவை அவள் திறந்திருக்க வேண்டுமென்றும், அமீருடைய போக்கு அவளுக்குப் பெரும் சந்தேகத்தை அளித்திருக்க வேண்டு மென்றும் தீர்மானித்த இளையபல்லவன் அதற்கு மேல் ஏதும் கேட்காதிருக்கவே காஞ்சனாதேவி தனது அறைக்குச் சென்று பறவைகள் இரண்டையும் கொண்டு வந்தாள். அந்தப் பட்சிகள் ஒவ்வொன்றின் காலொன்றில் சிறு நூலைக் கட்டியிருந்ததைக் கவனித்த இளையபல்லவன், “இவற்றைக் கட்டிப் போட்டிருந்தாயா காஞ்சனா?” என்று வினவினான்.
“ஆம். இல்லாவிட்டால் பறந்து போகாதா?” என்று வினவினாள் அவள்.

“பறக்காது. இதோ பார்” என்ற இளையபல்லவன், அவற்றின் கால்களிலிருந்து நூலை அவிழ்த்து விட்டு அவற்றைப் பஞ்சணைமேல் விட்டான். இரண்டு பறவைகளும் அவனை உற்று உற்று நோக்கின. பிறகு மஞ்சள் அலகுகளை ஆட்டின. அடுத்தபடி தத்தித் தத்திப் பஞ்சணையில் ஓடின. பிறகு பறந்து இரண்டு மரக் கம்பங்களில் உட்கார்ந்து கொண்டன.

“பறக்கின்றன, பறக்கின்றன” என்று கூவினாள் காஞ்சனா தேவி.

“பறக்காது. இதோ பார்” என்ற இளையபல்லவன் பஞ்சணையிலிருந்து எழுந்து சென்று தூண்களிலிருந்து அவற்றை எடுத்து வந்து மீண்டும் பஞ்சணையில் விட்டான். அவை பஞ்சணையில் தத்தித் தாவி விளையாடின.

அவை விளையாடியது மனத்தைக் கவரும்படியாகத் தானிருந்தது. வேறு சமயமாயிருந்தால் அந்த விளையாட்டைப் பெரிதும் ரசித்திருப்பாள் கடாரத்தின் இளவரசி. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் அவள் எண்ணமெல்லாம் அக்ரமந்திரத்துக்குப் புறம்பேயிருந்த தளத்திலும், தளத்திலிருந்த மாலுமிகள் மீதும் நிலைத்திருந்ததால் அவள் அந்த விளையாட்டைப் பார்க்கக் கூட விரும்பாமல் பஞ்சணை மீது உட்கார்ந்து பெருமூச்சு விட்டாள்.

இளையபல்லவன் அவள் பெரு மூச்சைக் கூட லட்சியம் செய்யாமல் பறவைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். விளையாட்டில் நாழிகைகள் இரண்டு ஓடிவிட்டது கூட இளையபல்லவனுக்குத் தெரிய வில்லை. ஆனால், அந்த நாழிகைகள் இரண்டின் ஒவ்வொரு விநாடியும் காஞ்சனாதேவிக்கு ஒவ்வொரு யுகமாக நகர்ந்தது. அந்த யுகம் முடியும் தருவாயில் மாலுமிகள் தடதடவென வரும் சத்தமும் கேட்டது. கதவும் தடாலெனத் திறக்கப்பட்டது. பாலிக்குள்ளனும் மற்ற மாலுமிகளும் தலைகளை உள்ளே நீட்டினர்.

கதவு திறந்ததையோ மாலுமிகள் வந்ததையோ கவனிக்காமல் பறவைகளைக் கவனித்துக் கொண்டிருந்த இளையபல்லவனை, “மாலுமிகள் வந்துவிட்டார்கள்” என்று கூறி இந்த உலகத்துக்குக் கொண்டுவர முயன்றாள், காஞ்சனா தேவி.

அவள் கூறியதை வாங்கிக்கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த இளையபல்லவன் பறவைகளை விட்டுக் கண்களை அகற்றாமலே, “வாருங்கள் உள்ளே” என்று இரைந்து அழைத்தான் மாலுமிகளை.

பாலிக்குள்ளன் முன்னே வர அவனைத் தொடர்ந்து மாலுமிகள் ஐந்தாறுபேர் வந்தனர். அவர்கள் பஞ்சணைக்குச் சிறிது தூரத்தில் வந்து நின்றதும் பறவைகளிலிருந்து பார்வையை அவர்கள் மீது திருப்பினான் படைத்தலைவன். அவர்களுக்கு மிகவும் தள்ளிப் பின்னால் நின்று கொண் டிருந்தனர் அமீரும் கண்டியத்தேவனும். அவர்கள் மீது மட்டும் ஒரு விநாடி பார்வையை நிலைநாட்டிய இளையபல்லவன் கடைசியில் பாலிக்குள்ளனை நோக்கி, “என்ன மாலுமி! என்ன முடிவு செய்தீர்கள்?” என்று வினவினான்.
“எங்களை அபாயத்துக்குள் அழைத்துக்கொண்டு வந்து விட்டது நீங்கள்… ” என்று துவங்கிய பாலிக்குள்ளன் குரல் வறண்டு கிடந்தது.

“தயங்க வேண்டாம். சொல்லு மாலுமி?” என்று ஊக்கினான் படைத்தலைவன் சர்வசகஜமான குரலில்.

“அபாயத்துக்குள் புகுத்தியவர்தான் அதிலிருந்து எங்களை மீட்கவும் வழி காண வேண்டும்” என்றான் பாலிக்குள்ளன்.

இளையபல்லவன் இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வில்லை. சிறிது நேரம் மாலுமிகளின் முகங்களை ஊன்றிக் கவனித்தான். பிறகு திட்டமாகச் சொன்னான், “அந்த உறுதியை நான் அளிக்க முடியாது” என்று.
இந்தப் பதில் பாலிக்குள்ளன் முகத்தில் மட்டுமின்றி காஞ்சனாதேவியின் முகத்திலும் அச்சத்தை விளைவித்தது. காஞ்சனாதேவி ஏதும் சொல்லாவிட்டாலும் பாலிக்குள்ளன் சற்றுக் கோபத்துடன் சொன்னான், “இது நியாயமல்ல” என்று.

“எது நியாயமல்ல?” அதிகாரத் தொனியில், அதட்டும் குரலில் எழுந்தது இளையபல்லவன் கேள்வி.

“அபாயத்தில் இழுத்துவிடும் ஒரு தலைவர் அதிலிருந்து தமது மாலுமிகளை மீட்க மறுப்பது. ” பாலிக்குள்ளன் பதிலில் கோபம் சிறிதும் தணியாமல் தொனித்தது.

இதைக்கேட்ட இளையபல்லவன் பஞ்சணை முகப்பில் நகர்ந்து உட்கார்ந்து ஒரு காலைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டான். அத்துடன் சொன்னான்: “மாலுமிகளின் கடமையை மாலுமிகள் செய்தால் தலைவன் அவன் கடமையைச் செய்ய முடியும்” என்று.

“மாலுமிகள் எங்கு கடமை தவறினார்கள்?”

“தலைவன் உத்தரவுக்கு மேல் இன்னொரு உத்தரவு உண்டு என்று நினைத்தபோது, அந்த உத்தரவுக்குப் பணிய முற்பட்டபோது. “

இதைக் கேட்டுக்கொண்டு மற்ற மாலுமிகளுக்குப் பின்னால் நின்ற அமீர் சிறிது சங்கடத்துடன் அசைந்தான். அதைக் கவனித்தும் கவனிக்காதவன் போல் இளையபல்லவன் பாலிக்குள்ளனை நோக்கி, “மாலுமி, மரக்கலம் எப்படியோ அப்படித்தான் மாலுமிகளும். மரக்கலத்தின் துடுப்புகளும், பாய்களும், சுக்கானும், சிறுசிறு உருளைகளும் எப்படித் தங்கள் தங்கள் அலுவல்களைச் சரியாகச் செய்தால் எப்படி மரக்கலம் பழுது இன்றி ஓடுகின்றதோ அப்படி மாலுமி ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பணிகளைக் கேள்விகள் கேட்காமலும் தலைவன் சொற்படி கேட்டும் நடந்து கொண்டால் மரக் கலத்தின் இயக்கம், போர் முறைகள் எல்லாம் திட்டமாகவும் வெற்றிகரமாகவும் நடக்கும். ஒரு மரக்கலத்துக்கு இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது. கரையில் ஒரு தலைவனும் கடலில் ஒரு தலைவனும் ஒரே மரக்கலத்தின் மாலுமிகளுக் கிருந்தால் கப்பல் சம்பந்தப்பட்டவரை காரியம் சரிவர நடக்காது.

ஆகவே உங்களுக்கு என்மேல் நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை இருக்கிறதென்ற நினைப்பு எனக்குப் பலமூட்டும். என் சித்தத்துக்குச் சிந்தனை செய்ய சக்தியும் கொடுக்கும்” என்றான்.
“நாங்கள் உங்களிடம் நம்பிக்கை வைக்கவில்லை என்று யார் சொன்னது?” என்று வினவினான் பாலிக்குள்ளன்.

“அபாயத்தைக் கண்டு நீங்கள் அடைந்துள்ள கிலியே அதற்கு அத்தாட்சி” என்று கூறினான் இளையபல்லவன்.

“கிலி அடைவது நம்பிக்கையின்மையை எப்படிக் குறிக்கும்?” என்று கேட்டான் பாலிக்குள்ளன்.

இளையபல்லவன் பஞ்சணையை விட்டு எழுந்து மாலுமி களின் அருகில் வந்து நின்றுகொண்டான். பிறகு தனது அறையின் கூரையை நோக்கிக் கையை உயர்த்திக் கேட்டான், “இந்தக் கடல்புறாவை உங்களைவிட நான் குறைவாகவா நேசிக்கிறேன்?” என்று. மேலும் தொடர்ந்த படைத்தலைவன், “அது மட்டுமல்ல, உங்கள் உயிரைவிட என் உயிர் அற்பமானது? அதை நான் குறைவாக மதிப்பிடுவேனா? அதைக் குறைத்து மதிப்பிட்டாலும் இதோ இருக்கிறார்களே கடாரத்து இளவரசி, இவர் என் உயிரைவிடப் பன்மடங்கு எனக்கும் ஸ்ரி விஜயத்துக்கும் அரிதல்லவா? அவர்களை ஏன் இந்த ஆபத்துக்கு இழுத்து வந்தேன்? அன்புக் குறைவாகவா? இவர்களிருக்கட்டும்.

அமீரிடமும் தேவரிடமும் எனக்கு அன்பு குறைவா? இல்லை, உயிரினும் பன்மடங்கு அதிகமாக நேசிக்கும் சோழ நாட்டு இளவலும் என் நண்பருமான அநபாயரை வெறுத்து விட்டேனா? இல்லை இல்லை. இத்தனை பேர் மீதும் என் உயிரை வைத்திருக்கிறேன். இவர்கள் மீது மட்டுமல்ல, இந்தக் கடற்படையைச் சேர்ந்த ஒவ்வொரு மாலுமியின் உயிரும் சிறந்தது எனக்கு. இருப்பினும் இந்த அபாயத்தில் ஏன் இழுத்து வந்தேன்? காரணம் பெரும் கடமை.

அநபாயரையும் மீறிச் செய்யவேண்டிய காரியம் இருக்கிறது. மலையூரைக் கைப்பற்ற இதுதான் சமயம். உண்மையில் மாநக்கவாரத்தை விட்டு நான் மலையூர் வரவே கிளம்பினேன். இடையே காஞ்சனாதேவியைக் காணும் ஆசையால்தான் கடாரத்துக்குச் சென்றேன். ஆனால் அங்கு நிகழ்ந்தன நான் சற்றும் எதிர்பாராத விளைவுகள். உயிர் நண்பரே என்னை மீறி அலுவல் புரியத் திட்டமிட்டார். மற்றொரு நண்பன் அமீர் என்னை ஏமாற்றினான். இன்னும் சிறிது காலம் இருந்தால் நான் அவர்கள் இஷ்டப்படி நடந்து கொண்டிருப்பேன்.

ஆனால் சமயம் இது மலையூரைத் தாக்க. அங்கு ஸ்ரி விஜயத்தின் கடற்படை தற்சமயம் இல்லை. இருப்பவை நான்கைந்து மரக்கலங்கள் ஜம்பிந்தி முகத்துவாரத்தில். அவற்றைத் தகர்த்து நதிக்குள் நுழைந்து விட்டால் பழமெனக் காத்திருக்கிறது மலையூர் நம் கையில் விழ. அங்கும் ஆபத்திருக்கலாம். ஆனால் அது சமாளிக்கக் கூடிய ஆபத்தாக இருக்கும்” என்றான்.

“மலையூர் நிலை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான் பாலிக்குள்ளன்.

“மாநக்காவரத்தை நான் மாதக் கணக்கில் தளமாகக் கொண்டது வீணாகவில்லை. அங்கு வரும் வணிகர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஸ்ரி விஜய நிலைமையைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஸ்ரி விஜயத்தின் போர் மரக்கலங்களின் பாகுபாடு, இருப்பிடங்கள் எல்லாவற்றையும் அறிந்து இருக்கிறேன். ஆகவே செல் உன் மரக்கலத்துக்கு. மாலுமி, பாய்களை ஏற்றாதே. மீதி அரைக்காத தூரத்தைத் துடுப்புகளைக் கொண்டு அடைவோம். நமது மரக்கலங்கள் ஜம்பி நதி முகத்துவாரத்தை இருள் கவிந்த நீண்ட நேரத்துக்குப் பின்னரே அடையவேண்டும். போய் வா, உம். நீங்களும் செல்லுங்கள். உங்கள் அலுவல்களைக் கவனியுங்கள்” என்று முடிவு கட்டினான் இளையபல்லவன், பாலிக்குள்ளனையும் மற்ற மாலுமிகளையும் நோக்கி.

இளையபல்லவன் உணர்ச்சி வேகத்தில் பேசப்பேசப் பிரமை பிடித்து நின்ற மாலுமிகள் அவன் பார்வையாலும் சொற்களில் ஊடுருவிய உணர்ச்சி வேகத்தாலும் உந்தப்பட்டு வேறு எதுவும் பேசாமல் திரும்பித் தடதடவெனத் தளத்துக்கு ஓடினார்கள். பாலிக்குள்ளன் ஒரு விநாடி ஏதோ யோசித்துக் கொண்டு நின்றான். பிறகு அவனும் திரும்பி வெளியே வேகமாகச் சென்றான். மீதி அந்த அறையில் இருந்தவர்கள் இளையபல்லவனைத் தவிர மூன்றே பேர். அமீர், கண்டியத் தேவன், காஞ்சனாதேவி.

அமீரும் கண்டியத்தேவனும் என்ன பேசுவதென்றறி யாமல் நின்றார்கள். என்ன காரணத்தாலோ அமீரிடம் பெரு விழிகளில் நீர் திரண்டது. அதைக் கண்ட இளையபல்லவன் மனமும் நெகிழவே அவன் இரண்டே எட்டில் அமீரிடம் சென்று அவனைத் தழுவிக்கொண்டான். அமீர் திடீரெனத் தன் பெரிய தலையை இளையபல்லவன் தோளில் புதைத்துக் கொண்டு விம்மிவிம்மிக் குழந்தைபோல் அழ ஆரம்பித்தான்.

இளையபல்லவன் அந்த ராட்சதக் குழந்தையைத் தடவிக் கொடுத்துக்கொண்டு உள்ளம் உருகச் சொன்னான், “அமீர்! உன்னிடம் நான் உயிரையே வைத்திருக்கிறேன். ஆனால் நான் என்ன செய்யட்டும்? உனக்கு அநபாயரிடம் இருக்கும் பக்தி எனக்குத் தெரியும். ஆகவே உன்னையும் ஏமாற்றுவது அவசிய மாகிறது. நாம் சுமார் இரண்டு வருஷ காலம் தோளுக்குத் தோள் நின்று பல அபாயங்களைச் சமாளித்தோம். கடல் புறா செய்யவேண்டிய அமானுஷ்யமான காரியங்கள் இன்னும் சில இருக்கின்றன. இன்னும் சில நாட்கள் நான் தலைவனாயிருக்கிறேன். ஸ்ரி விஜயம் பணியட்டும். பிறகு நான் உனக்குப் பணிகிறேன். நீ எதைச் சொன்னாலும் கேட்கிறேன்” என்றான்.

அமீரின் குலுங்கல் அதிகமாயிற்று. அவனை ஒரு கையால் தடவிக் கொடுத்த இளையபல்லவன் இன்னொரு கையை நீட்டிக் கண்டியத்தேவன் கையைப் பற்றினான். கண்டியத் தேவன் கையும் அவன் கையில் ஆதரவை நாடிப் புதைந்தது. இப்படி நின்ற அந்த மூன்று உயிர்த் தோழர்களையும் கண்ட காஞ்சனாதேவி கண்களிலும் நீர் திரண்டது. இந்தச் சோக நிலை சாதாரண நிலைக்கு மாறப் பல நிமிடங்கள் பிடித்தன. சுயநிலை மெள்ள நிலவியதும் சற்று இளையபல்லவனை விட்டு விலகிய அமீர், “வாரும் தேவரே! தளத்துக்குச் செல்வோம்” என்று தேவனை அழைத்தான்.

“தளத்தில் என்ன செய்ய?” என்று எழுந்தது இளைய பல்லவன் குரல்.

இளையபல்லவர் உத்தரவை நிறைவேற்ற” என்ற அமீர் அத்தனை சோகத்திலும் புன்முறுவல் பூத்தான்.

இளையபல்லவன் இதழ்களில் பெருமிதப் புன்னகை விரிந்தது. தனது உபதலைவர்கள் இருவரும் ஒருவர் பின்னொருவராக வெளியே சென்றதைக் கண்டு கொண்டு பெருமகிழ்ச்சியுடன் நின்ற இளையபல்லவன் அவர்கள் சென்றதும் காஞ்சனாதேவியை நெருங்கினான்.

பஞ்சணையில் பலவீனத்துடன் அமர்ந்திருந்தாள் காஞ்சனாதேவி. அவள் கண்களில் நீர் தளும்பிக் கொண் டிருந்தது. அதைக் கண்ட இளையபல்லவன் கேட்டான், “நீ எதற்காக அழுகிறாய்!” என்று.

“நீங்கள்… ” என்று துவங்கிய காஞ்சனாதேவி சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

“ஏன் நிறுத்தி விட்டாய்? சொல்” என்றான் இளைய பல்லவன்.

நீர் தளும்பிய கண்களில் மட்டுமின்றி முகம் பூராவுமே வெட்கத்தின் சாயை படர்ந்தது. “ஊஹூம், மாட்டேன்” என்றாள் காஞ்சனாதேவி.

“என்ன மாட்டேன்?”

“சொல்ல மாட்டேன். “

“எதை?”

“என் அழுகைக்குப் பரிகாரம். “

“பரிகாரமா?”

“ஆம். அமீர் அழுதபொழுது என்ன செய்தீர்கள்?”

இளையபல்லவன் வாய்விட்டு நகைத்தான். “அந்த முரடனை அணைத்ததையா சொல்கிறாய் காஞ்சனா? அவன் உள்ளம் உன் உடலைவிட எத்தனை மென்மையானது தெரியுமா?” என்று வினவவும் செய்தான் படைத்தலைவன்.
“சரி சரி. அமீரையே கட்டிக் கொள்ளுங்கள்” என்ற காஞ்சனாதேவி நகைத்தாள் பெரிதாக. அந்தச் சமயத்தில் பஞ்சணையில் கத்திக் கொண்டிருந்த இரு பறவைகளி லொன்று பறந்து அவள் தலைமேல் உட்கார்ந்தது. அந்தக் காட்சி இளையபல்லவன் இதயத்தை அப்படியே இழுத்தது. இன்னொரு பறவையையும் எடுத்து அவள் தலை மீது உட்கார வைத்துப் படைத்தலைவன் அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்தான். கடாரத்தின் அஞ்சுகத்துக்கும் அந்தக் கடற் பறவைகளுக்குமிருந்த தாரதம்மியம் அதிகம். காஞ்சனா தேவியின் எழில் பறவைகளின் அழகைவிட ஆயிரம் மடங்கு அதிகமாகத் தெரிந்தது.

“ஸ்ரி விஜயத்தின் கிரீடத்தை நீ தரிக்கும்போது, இந்தப் பறவைகளில் ஒன்றை அதன்மீது கண்டிப்பாக உட்கார வைக்கிறேன்” என்றான் இளையபல்லவன், அவள் தோள் களைத் தன்னிரு கைகளால் வருடிக் கொண்டே.

“இப்பொழுதே ஸ்ரி விஜயத்தை வெற்றி கொண்டதாக அர்த்தமா? பெரும் கனவு காண்கிறீர்களே” என்றாள் காஞ்சனாதேவி இளையபல்லவனைப் பார்த்துப் பெருமையுடன்.

“வெறும் கனவல்ல காஞ்சனா அது. திட்டத்துடன் ஏற்பட்டுள்ள கனவு. அதன் முதற்படி இன்றிரவில் உனக்கும் தெரியும், மற்றவர்களுக்கும் தெரியும்” என்று கூறிய இளைய பல்லவன் பஞ்சணையிலிருந்து எழுந்து தளத்தை நோக்கிச் சென்றான். அவன் சொன்னது பெரும் பிரமிப்பாயிருந்தது காஞ்சனாதேவிக்கு. ‘ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தை வெற்றி கொள்வதை சர்வசகஜமாகச் சொல்லிவிட்டாரே படைத் தலைவர்?’ என்பதை எண்ண அவள் பெரிதும் வியப்படைந்தாள்.

அவள் கனவின் படிகளும் கனவாகவே முடிந்துவிட்டால் என்ன செய்வது என்று ஏங்கினாள் அவள். ஜெயவர்மனை அவள் நன்கு அறிந்திருந்தாள். சாணை பிடித்த அவனது அறிவுக்கெதிரில் இளையபல்லவனின் அபாரமான அறிவு மோதினாலும் ஸ்ரி விஜயத்தின் பலமெங்கே, இளைய பல்லவனுடைய சிறு படையின் பலமெங்கே! என்று எண்ண எண்ணத் திகைத்தாள் அவள். இரவில் தோன்றியது இளைய பல்லவன் கனவின் முதல் படி. அது அனுகூலமாகத் தானிருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்த அடுத்த இரண்டு படிகள் இளையபல்லவன் ஆபத்தை உச்சநிலைக்குக் கொண்டு போயின.

Previous articleRead Kadal Pura Part 3 Ch49 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch51 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here