Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch51 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch51 | Sandilyan | TamilNovel.in

147
0
Read Kadal Pura Part 3 Ch51 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch51 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch51 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 51 :முதல் மோதல்.

Read Kadal Pura Part 3 Ch51 | Sandilyan | TamilNovel.in

ஸ்ரி விஜயத்தைக் கைப்பற்றி விடுவதாகத் தான் கூறியது வெறும் கனவல்லவென்றும், அதற்காகவே ஏற்கெனவே திட்டமிட்டிருப்பதாகவும் காஞ்சனாதேவியிடம் கூறிவிட்டுக் கடல் புறாவின் தளத்துக்கு வந்த இளையபல்லவன், அங்கு தனது கட்டளைகளை மிக மும்முரமாக அமீரும், கண்டியத் தேவனும் மற்ற மாலுமிகளும் நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு பேருவகை கொண்டான். அவர்கள் மட்டுமல்ல, கடல் புறாவிலிருந்து நூலேணியில் இறங்கிய பாலிக்குள்ளனும் படகொன்றில் தனது மரக்கலத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்ததையும் கவனித்த படைத்தலைவன் திருப்திக்கு அறிகுறியாகத் தலையை ஒருமுறை ஆட்டிக்கொண்டான்.

கடல் புறாவின் தளம் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. ஒருபுறத்தில் கண்டியத்தேவன் மாலுமிகளைப் பாய்மரங்களில் ஏறிப் பாய்களை அவிழ்க்க ஏவிக் கொண்டிருந்தான். மற்றொரு புறத்தில் அமீர் போர்க் கருவிகளை இயக்கும் உருளைகளைச் சரி பார்க்க மாலுமிகளுக்கு உத்தரவிட்டு, சுக்கான் பிடித்திருந்த சேந்தனை நோக்கி ஓடினான்.

கண்டியத்தேவன் உத்தரவை நிறைவேற்றச் சில மாலுமிகள் கனவேகத்தில் பாய்மரங்களில் ஏறிக் கொண் டிருந்ததையும் அமீரின் உத்தரவுகளை நிறைவேற்ற உருளை களை அடைத்திருந்த குறுக்குக் கட்டைகளைப் பெரும் சம்மட்டிகளைக் கொண்டு மற்றும் சில மாலுமிகள் கழற்ற முயன்று கொண்டிருந்ததையும் கண்ட இளையபல்லவன் சுக்கானைப் பிடித்திருந்த சேந்தனிடம் சென்றான். சேந்தன் சுக்கானைத் திருப்பாமல் நடுப்புறத்தில் பிடித்து, பாய்கள் அவிழ்க்கப்பட்டதும் கப்பல் ஒருநிலையில் ஆடும்படி செய்ய முனைந்து கொண்டிருந்தான்.

அவனை அடுத்து நின்ற அமீர் பக்கத்திலும் பின்னாலும் வந்து நான்கு மரக்கலங்களையும் நோக்கி, கைகளை ஆட்டியும் விரித்தும் விரலால் பாய்களைக் குறிப்பிட்டும் ஏதோ சைகைகளைச் செய்து கொண்டிருந்தான். அவன் சைகைகள் பலன் அளிக்கத் தொடங்கிவிட்டதை, மற்ற மரக்கலங்களின் மாலுமிகள் பாய்களை இறக்க முற்பட்டதி லிருந்தே புரிந்து கொண்ட படைத்தலைவன், தன் திட்டப்படி காரியங்கள் நிறைவேறுவது குறித்து மகிழ்ச்சி அடைந்தவனாய் அவ்விடத்தை விட்டு அகன்று நூலேணி இருக்குமிடம் வந்து தனக்கு ஒரு படகை இறக்கும்படி மாலுமிகளுக்கு உத்தர விட்டான். அவன் உத்தரவுப்படி படகொன்று இறக்கப்படவே, நூலேணியில் இறங்கி அதில் ஏறிக்கொண்டு இரண்டு மாலுமிகளை விட்டுப் படகைத் துழாவச் சொல்லிப் பக்கத்தில் சற்றுத் தள்ளி நின்றிருந்த ‘காஞ்சனா’வை நோக்கிச் சென்றான்.

‘காஞ்சனா’வின் பாய்ச்சீலைகள் துரிதமாக இறக்கப்பட்டு முடிந்த சமயத்தில் அந்த மரக்கலத்தை அடைந்த இளைய பல்லவன் அதில் ஏறி மரக்கலம் முழுவதையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தான். பிறகு அதன் தலைவனிடம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி விளக்கிவிட்டு அதிலிருந்து கிளம்பி ‘மஞ்சளழகி’க்குச் சென்றான். இப்படி ஒவ்வொரு கப்பலாக நான்கு மரக்கலங்களுக்கும் சென்று மீண்டும் கடல் புறாவுக்கு இளையபல்லவன் வந்தபோது உச்சிவேளை தாண்டி ஐந்து நாழிகைகளும் ஓடிவிட்டன. காலை முதல் அவன் நீராடாமலும் உணவருந்தாமலும் மற்ற மரக்கலங்களுக்குப் போய்க் கொண்டிருந்ததால் தானும் உணவருந்தாமல் தவித்துக் கொண்டிருந்த காஞ்சனாதேவி அவன் மீண்டும் அக்ரமந்திரத்துக்குள் நுழைந்தபோது, “நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையே” என்றாள் கவலையுடன்.

“சாப்பாடு அவசியமில்லை காஞ்சனா?” என்றான் பதிலுக்கு இளையபல்லவன் குதூகலத்துடன்.

“ஏன்? வயிறு நிரம்பிக் கிடக்கிறதா?” என்று வினவினாள் காஞ்சனாதேவி.

“ஆம். “

“சாப்பிடாமலேயா?”

“ஆம். “

“அது எப்படி சாத்தியம்?”

“மனம் நிரம்பிக் கிடக்கிறது மகிழ்ச்சியால். “

“அதனால்?”

“வயிறு நிரம்பியது போலத்தான். பசியே தெரியவில்லை எனக்கு. “

“அத்தனை மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவோ?”

“கடல் புறாவிலிருந்த கலக்கம் நீங்கியது. மறுபடியும் இதன் மாலுமிகளும் உபதலைவர்களும் முன்போலவே இயங்கு கிறார்கள். காஞ்சனையும் அப்படி… மஞ்சளழகியும்… ” என்று வேகமாகச் சொல்லிக் கொண்டு போன இளையபல்லவனை இடைமறித்த காஞ்சனாதேவி, “அடிமைகளைப் பற்றிக் கேள்வி யென்ன?” என்றாள் சிரித்துக்கொண்டு.

இளையபல்லவனுக்கு அந்தச் சமயத்திலிருந்த உணர்ச்சி வேகத்தில், உற்சாகத்தில் அவள் என்ன சொல்கிறாளென்பது விளங்கவில்லையாகையால், “அடிமைகளா? யார் அடிமைகள்?” என்று வினவினான்.

“நீங்கள் குறிப்பிட்டீர்களே, அந்த இருவர்தான்,” என்றாள் காஞ்சனாதேவி.

“நான் குறிப்பிட்டேனா?”

“ஆம். காஞ்சனாதேவி, மஞ்சளழகி என்று குறிப்பிட வில்லை ?”

“ஆம். மரக்கலங்களைக் குறிப்பிட்டேன். “

“மரக்கலங்களாயிருந்தாலும், மனிதக் கலங்களாயிருந் தாலும் உங்களிஷ்டப்படிதானே அவை இயங்க முடியும்?” என்ற காஞ்சனாதேவி நகைத்தாள்.

அப்போதுதான் விஷயத்தைப் புரிந்து கொண்ட இளைய பல்லவனும், அந்தச் சமயத்திலிருந்த உற்சாகத்தில் வேடிக்கை யாகப் பேசத் துவங்கி, “அவர்களிருவரும் ராணிகள். அவர்கள் எப்படி எனக்கு அடிமையாக முடியும்? நான் என்ன ராஜாவா?” என்று கூறிச் சிரித்தான்.
“ஏனில்லை? ராணிகளுக்குப் புருஷனானால் ராஜா தானே.!” என்ற காஞ்சனாதேவி புன்முறுவல் பூத்தாள்.

“திருமணத்தால் ராஜாவாக நான் விரும்பவில்லை. அப்படி அரசனாகுபவன் அடிமையைவிடக் கேவலம்” என்ற இளையபல்லவன் திடீரெனப் பஞ்சணையில் தொப்பென உட்கார்ந்து, “ஆமாம் காஞ்சனா! ராணிகள் என்று சொல்கிறாயே அதற்கென்ன அர்த்தம்? ஒரு ராணியிடம், அடிமைத் தொழில் புரிவதே கஷ்டம். இரண்டு ராணிகளிடம் அகப்பட்டுக் கொண்டால் தீர்ந்தான் மனிதன். அது கிடக்கட்டும், நீதான் ராணி. மஞ்சளழகி எப்படி அரசி யாவாள்?” என்று விசாரித்தான்.

காஞ்சனாதேவியின் வதனத்தில் மந்தகாசம் விரிந்தது. “என்னைச் சக்கரவர்த்தினியாகச் சபதம் செய்திருக்கிறீர்க ளல்லவா!” என்று கேட்டாள் அவள் எல்லையில்லா உவகையுடன்.

“ஆம். ” குதூகலத்துடன் சொன்னான் இளையபல்லவன்.

“அவளை என்னவாக்கச் சபதம் செய்திருக்கிறீர்களோ? ஒருவேளை ராணியாக்கச் சபதம் செய்திருக்கலாம்….”

“நாடு ஏது ராணியாக்க?”

“நாட்டைவிடப் பெரிது இருக்கிறதே!”

“எது? உலகமா?”
“உலகத்தைவிடப் பெரிது?”

“அப்படியொன்று இருக்கிறதா? ஆம் ஆம், சொர்க்கம். “

“சொர்க்கத்தைவிடப் பெரிது. “

“அதைவிடப் பெரிது எது?”

“இருக்கிறது. உங்கள் இதயம். அதற்கு அவளை ராணி யாக்குவீர்கள்?” இதைச் சொன்ன காஞ்சனாதேவியின் குரலில் அதிருப்தி மண்டிக் கிடந்தது. பொறாமையும் ஊடுருவி நின்றது.

அதைக் கவனிக்கவே செய்த இளையபல்லவன் ஆறுதல் கலந்த பெருமூச்சொன்றை விட்டான். “அப்பாடா?” என்று வாய்விட்டும் அந்த ஆறுதலைக் குறிப்பிட்டான்.

காஞ்சனாதேவியின் பொறாமை சிறிது கோபத்தையும் ஊட்டியது. ஆகவே கேட்டாள், “என்ன அப்பாடா?” என்று கோபத்தைக் குரலில் காட்டி.

“நல்ல வேளை, தப்பினேன்” என்றான் இளையபல்லவன், மெல்ல நகைத்து.

“எதிலிருந்து தப்பினீர்கள்? யாரிடமிருந்து தப்பினீர்கள்? என்னிடம் இருந்தா?” என்று படபடவெனச் சொற்களைக் கொட்டினாள் காஞ்சனாதேவி.

“ஆம் தேவி” என்றான் இளையபல்லவன், மேலும் நகைத்து. அவன் நகைப்பு அவள் கோபத்தை அதிகப்படுத்தியது. அவள் கண்களில் சீற்றம் நன்றாகத் தெரிந்தது. அதைக் கண்ட இளையபல்லவன் மேலும் நகைத்துவிட்டுச் சொன்னான்: “காஞ்சனா! உனக்கும் மஞ்சளழகிக்கும் இடையேயுள்ள தூரம் மிக அதிகம். அவள் அக்ஷயமுனையில் இருக்கிறாள். நீ மலையூருக்கு அருகில் இருக்கிறாய். இப்படியிருக்கையிலே உனக்கு அவள் மீது வெறுப்பு இருக்கிறது. அநபாயர் திட்டப்படி நாம் அக்ஷயமுனை போயிருந்தால் என் கதி என்னவாயிருக்கும்?” என்று.

“என்னவாயிருக்கும்?” என்று சீறிய காஞ்சனாதேவி பஞ்சணையை விட்டுப் பட்டென்று எழுந்தாள்.

“நான்கு வேல்களுக்கிடையிலிருக்கும் கைதி போல இருக்கும். “

“எது நான்கு வேல்கள்?” ஏதோ கேட்கவேண்டு மென்பதற்காகக் கேட்டாள் காஞ்சனாதேவி.

அவள் கையைப் பிடித்து இருந்த இடத்திலேயே நிறுத்திய இளையபல்லவன் தனது வலதுகை விரலொன்றால் அவள் கண்களிரண்டையும் சுட்டிக் காட்டி, இதோ இருக்கின்றன இரண்டு வேல்கள்,” என்றான் அன்புடன்.

அந்த அன்பு சாதாரண சமயத்தில் காஞ்சனாதேவிக்குக் கரும்பாயிருந்திருக்கும். ஆனால் அவள் அந்தச் சமயத்தில் தன் கண்களுக்கு அவன் சொன்ன உவமையைக் கவனிக்க வில்லை. அதே உவமையைத்தானே மஞ்சளழகியின் கண்களுக்கும் சொன்னான் என்ற கோபமே இதயத்தில் எழுந்து நின்றது. அதை வாய்விட்டும் கேட்டாள் அவள், “மற்ற இரண்டு வேல்கள் மஞ்சளழகியின் திருவிழிகளாக்கும்” என்று.

இளையபல்லவன் திணறினான். அந்தச் சமயத்தில் அவன் எண்ணமெல்லாம் மஞ்சளழகியின் மீது திரும்பியது. அவன் உள்ளத்தில் அவள் உருவம் எழுந்து நின்றது. நின்ற உருவம் சும்மா இருக்கவில்லை. சலங்கை கட்டிய கால்களைக் கொண்டு அவன் இதயத்தில் ஆடியது. அழகிய பெருவிழிகள் அவன் இதயத்திலிருந்து கூர்ந்து நோக்கின. அந்த மஞ்சள் நிற முகத்தில் சோகம் பூரணமாகப் பரவிக் கிடந்தது. “மஞ்சளழகிக்கும் ஸ்ரி விஜயத்தின் அரியணையில் உட்காரச் சொந்தமுண்டு.

அவளும் சக்கரவர்த்தினியாக வேண்டியவள். ஆனால் அவள் துர்பாக்கியசாலி. தந்தையால் ஒப்புக் கொள்ளப்படாதவள். பாவம்! அதிர்ஷ்டமற்றவள்! அவளுக்கு அரசுமில்லை நானுமில்லை” என்று உள்ளூரச் சொல்லிக் கொண்ட இளையபல்லவனின் சிந்தனை மஞ்சளழகியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. அலையோரத்தில் உட்கார்ந்த அந்த நாளில், ‘நீங்களும் அந்த அலையைப் போலத்தான், என்னைத் தொட்டுவிட்டுப் போய்விடுவீர்கள்’ என்று மஞ்சளழகி சொன்னதை எண்ணிப் பார்த்தான். ‘அவள் சொன்னது உண்மையாகத்தான் போய்விட்டது.

தொட்டு விட்டு வந்துவிட்டேன். ஆனால் நல்ல வேளை நிலைமை மிஞ்சுமுன் விலகிவிட்டேன்’ என்று தன்னைச் சமாதானப் படுத்தியும் கொண்டான். என்ன சமாதானம் படுத்திக் கொண்டும் அவன் நெஞ்சம் சமாதானப்படவில்லை.

முகபாவத்திலிருந்து இளையபல்லவன் மனோநிலையைப் புரிந்துகொண்ட காஞ்சனாதேவி என்ன செய்வதென்றறியாமல் நின்ற இடத்திலேயே நின்றாள். ‘எதற்காக இந்தப் பேச்சைக் கிளப்பினோம்? பெண் புத்தி சின்ன புத்தியென்பது சரியாகப் போய்விட்டது’ என்று தன்னைத்தானே கடிந்தும் கொண்டாள் கடாரத்துக் கட்டழகி. அவள் மனநிலையை இளையபல்லவன் தவறாகப் புரிந்துகொண்டான். அவள் மஞ்சளழகியின்மீது பூரா வெறுப்புக் கொண்டுவிட்டதாகத் தோன்றியது அவனுக்கு. ஆகவே அவன் பேச்சை அடியோடு மாற்ற முற்பட்டு, “காஞ்சனா! அவகாசமில்லை. சீக்கிரம் உணவை எடுத்து வை. நான் நீராடிவிட்டு வருகிறேன். என் உபதலைவர்கள் வந்துவிடுவார்கள்” என்று கூறிவிட்டுத் தளத்துக்குச் சென்றுவிட்டான் மீண்டும்.

தளத்தின் ஒரு மூலையிலிருந்த மரக் குடங்களால் கடல்நீரை மொண்டு இரு மாலுமிகள் ஊற்ற நீண்ட நேரம் நீராடிய இளையபல்லவன் அங்கேயே உடல் துவட்டிக் கொண்டு அறைக்கு வந்தான். வந்து இடுப்பில் ஒரு துணியை மட்டும் கட்டிக்கொண்டு உணவருந்த உட்கார்ந்தான். காஞ்சனாதேவி உணவருந்திக்கொண்டே அவனைப் பார்த்தாள்.

அவன் தேகம் பாதி உடையின்றியிருந்ததால் விசாலமான மார்பையும், பணைத்த தோள்களையும் கண்ட காஞ்சனாதேவி அவன் அங்கங்களில் புருஷத்தன்மை முழுக்க முழுக்கப் பொலிவுறுவதைக் கண்டு வியந்தாள். மார்பிலாடிய பெரும் ஒற்றைக்கல் ரத்தினமும் காதிலிருந்த ஒற்றைக் குண்டலமும், முகத்தில் தொங்கிய சுருட்டை மயிரிழைகளும் அவன் கொள்ளைக்காரனென்பதை பறைசாற்றியும் அவள் மனம் அவனையே நாடி நின்றது.

ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபடியால் பேசாமலே இருவரும் உணவருந்தி முடித்தனர். அதற்குப் பிறகு சீக்கிரம்

புது உடை புனைந்து வருமாறு காஞ்சனாதேவியிடம் கூறிய இளையபல்லவன் தானும் உடையணிவதில் முனைந்தான்.

ஒரு நாழிகை சென்றது. காஞ்சனாதேவி புத்தாடை புனைந்து இரண்டொரு ஆபரணங்களை மட்டுமே அணிந்து இடைக் கதவைத் திறந்து கொண்டு மோகனாகாரமாக இளையபல்லவனிருந்த அறைக்குள் நுழைந்தவள் பிரமித்துப் பல விநாடிகள் நின்றுவிட்டாள். இளையபல்லவன் போர்க் கோலத்திலிருந்தான்!

அவன் உடை படாடோபமாயிருந்தது. கால் சராயின் விலை மதிக்க முடியாததாயிருந்தது. மேலே தரித்த அங்கியும் விலை உயர்ந்ததாயிருந்ததை அங்கியின் கைப்புறங்கள் காட்டின. மார்பை மட்டும் சிறு இரும்புக் கவசமொன்று மறைத்திருந்தது. இடைக்கச்சையில் குறுவாளொன்றையும், நீண்ட வாளொன்றையும் பொருத்தியிருந்தான் படைத் தலைவன். நெற்றியில் பளிச்சென திலகமும் இட்டிருந்தான். அந்தக் கோலத்தைப் பார்த்த காஞ்சனாதேவி பிரமித்துப் பல விநாடிகள் நின்றாள். பிறகு மெள்ள பிரமிப்பை உதறி, “என்ன, போர்க்கோலத்திலிருக்கிறீர்களே!” என்று வினவவும் செய்தாள் தட்டுத் தடுமாறி.

“போர் காத்திருக்கிறது ஜம்பி நதியின் வாயிலில்! ஆகவே போருக்குத் தயாராயிருக்கிறேன்,” என்ற இளையபல்லவன் புன்முறுவல் கொண்டான். அதே சமயத்தில் அக்ரமந்திரத்தின் தளக்கதவு திறக்கப்பட்டு அமீர், கண்டியத்தேவன், பாலிக் குள்ளன் ஆகியோரும் மற்ற மூன்று மரக்கலங்களின் உப தலைவர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களுள் ஒவ்வொருவரும் போருக்குச் சன்னத்தமாக வந்திருந்ததைக் கவனித்த காஞ்சனாதேவி ஏதும் பேசாமல் பஞ்சணையில் உட்கார்ந்து கொண்டாள். அனைவரும் அமர்ந்த பின் அவர்களை ஒருமுறை தன் கண்களால் ஆராய்ந்து விட்டுத் திருப்திக்கறிகுறியாக “நல்லது, உபதலைவர்களே! நல்லது!” என்றும் கூறிப் பஞ்சணையில் தானும் அமர்ந்தான் இளையபல்லவன்.

“உங்கள் உத்தரவுப்படி வந்துவிட்டோம்” என்றான் பாலிக்குள்ளன்.

“இப்பொழுது மஞ்சள் வெயில் வந்துவிட்டதா?” என்று. வினவினான் இளையபல்லவன்.

“இல்லை” என்றான் அமீர்.

“சரி. மஞ்சள் வெயில் புறப்பட்டதும் மரக்கலங்கள் துடுப்புகளால் துழாவப்பட்டு நகரட்டும். அப்பொழுது கிளம்பினால் ஜம்பி நதி முகத்துவாரத்தை இரவு புகுந்த முதல் ஜாம முடிவில் அடைவோம். அங்கு ஸ்ரி விஜயத்தின் மரக்கலங்களுடன் நமது முதல் போர் துவங்கும்” என்று இளையபல்லவன் மேலும் கூறத் தொடங்கி, “அமீர்! தேவரே! உபதலைவர்களே! நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் போராடினால் வெற்றியை இரண்டு நாட்களில் அடையலாம். உற்றுக் கேளுங்கள், சொல்லும் எதையும் மறக்காதீர்கள். ஜாக்கிரதை! இதுதான் நமது முதல் மோதல் ஸ்ரி விஜயத்துடன் நேருக்கு நேராக” என்றான். அத்துடன் தனது திட்டத்தையும் அணு அணுவாக விவரிக்கத் தொடங்கினான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch50 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch52 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here