Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch52 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch52 | Sandilyan | TamilNovel.in

97
0
Read Kadal Pura Part 3 Ch52 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch52 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch52 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 52: ஒரு மாறுதல்.

Read Kadal Pura Part 3 Ch52 | Sandilyan | TamilNovel.in

சொர்ணத் தீவின் குறுகிய ஜலசந்தியில், ஜம்பிந்தியின் முகத்துவாரத்தில், ஸ்ரி விஜயத்துடன் ஏற்படப் போகும் முதல் மோதலையும், அதை வெற்றிகரமாக முடிக்கும் வழிகளையும் விளக்க முற்பட்ட இளையபல்லவன், தனது வலதுகை ஆள்காட்டி விரலாலேயே சைகை செய்து கொண்டு பேசத் தொடங்கி, “உபதலைவர்களே! சொர்ணத் தீவின் நதிகளில் பெரும்பாலானவை முரட்டு நதிகள், பெரும் வேகத்துடன் கடலில் கலப்பவை. ஆகவே நாம் நதிக்குள் முன்னேறித் தாக்குவது சிறிது சிரமம்” என்று சுட்டிக்காட்டி, அவர் களனைவரையும் ஒருமுறை உற்று நோக்கினான்.

மற்றவர்களுக்கு ஏதும் புரியாவிட்டாலும் அகூதாவிடம் இளையபல்லவனுக்கு முன்பே பழகிய காரணத்தால் அமீர் மட்டும் தலையை அசைத்து, “இளையபல்லவரே! ஜம்பி நதியின் வேகம் அதிகம். ஆகவே முகத்துவாரத்தை முழுதும் அடைத்து எதிரி மரக்கலங்கள் நிற்க முடியாது. இரு கரை களுக்கருகில்தான் நிற்க முடியும்” என்று கூறினான்.

இளையபல்லவன், “ஆம் அமீர்! அதைத்தான் உணர்த்த வந்தேன்” என்று ஆமோதித்துவிட்டு மற்றவர்களை நோக்கி, “ஜம்பி நதி முகத்துவாரத்தைக் குறுக்கே மரக்கலங்கள் அடைத்து நிற்க முடியாது. தவிர ஜம்பி நதி முகத்துவாரம் மரக்கலங்கள் நிற்பதற்கு வசதியான துறைமுகம் அல்ல. மரக் கலங்களை நிறுத்த வேண்டுமானால் நதிக்குள் அரைகாதம் செலுத்தி மலையூர் முன்புதான் நிறுத்த வேண்டும். மலையூர், முகத்துவாரத்திலிருந்து அரைகாதம் உள்ளேயிருக்கிற தென்பதையும் அதை அடைய நதிக்குள் மரக்கலங்கள் பயணம் செய்ய வேண்டுமென்பதையும் நான் கூறத் தேவையில்லை. ஆனால் ஸ்ரி விஜயத்தின் கடற்படையைச் சேர்ந்த மரக்கலங்கள் சதா நம்மைத் தேடித் திரிவதால் அவற்றை மலையூருக்கெதிரே நிறுத்தமாட்டான் ஜெயவர்மன்.

ஜல சந்தியில் ஜம்பியின் முகத்துவாரத்தில்தான் நம்மை எதிர்பார்ப்பான். அது மட்டுமல்ல, மலையூருக்கருகில் அவன் மரக்கலங்களிருக்கும் போது நாம் ஜம்பியின் கடல் வாயிலை அடைந்துவிட்டால் ஸ்ரி விஜயத்தின் போர்க்கப்பல்கள் நம்மை மீறி வெளியே கடலுக்குள் போக முடியாது என்பதும் ஜெயவர்மனுக்குத் தெரியும்” என்று கூறினான்.

உபதலைவர்கள் அனைவரும் தங்கள் தலைவன் பேச்சை உற்றுக் கேட்டுக்கொண்டிருந்ததால் அவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. இளையபல்லவனே மேலும் சொன்னான்: “ஆகவே என் ஊகம் சரியானால் ஸ்ரி விஜயத்தின் போர்க் கப்பல்கள் நான்கு அல்லது ஐந்து ஜம்பி நதியின் முகத்துவாரத்தின் இரு கரைகளிலும் மலையூர்நதி மார்க்கத்தைப் பாதுகாத்து நிற்கலாம். பக்கத்துக்கு இரண்டாகவோ மூன்றும் இரண்டுமாகவோ நிற்கலாம். எனக்குக் கிடைத்துள்ள செய்தி சரியானால் அதிகப் போர்க் கப்பல்கள் அங்கு இல்லை.

இந்த நான்கு ஐந்து போர்க்கப்பல்களைச் சமாளிப்பதையும் சுலபமென்று நினைக்க வேண்டாம். சென்ற ஆறுமாதங்களாகவே சீனத்து வாண மருந்துகளை ஜெயவர்மன் வாங்கிச் சேகரிப்பதாகக் கேள்வி எனக்கு வாண மருந்துகளின் சேமிப்பு என்றால் தீயை வீசுவது என்று பொருள். அதற்கு ஜெயவர்மன் என்ன ஏற்பாடு செய்திருக்கிறானோ, எத்தகைய பொறிகளை அமைத் திருக்கிறானோ நமக்குத் தெரியாது. ஆகவே மிகவும் எச்சரிக்கையுடனும் அதிகக்கால தாமதம் செய்யாமலும் நாம் எதிரிக் கப்பல்களை அழித்துவிட வேண்டும். அந்தப் பணிக்கு வழிகாட்ட முதலில் எனது தலைமையில் கடல் புறா செல்லும்… ”

இந்த இடத்தில் திடீரென அமீரும் கண்டியத்தேவனும் மட்டுமின்றி, பாலிக்குள்ளனும் குறுக்கிட்டுப் பேசினார்கள். “கூடாது கூடாது. நமது மரக்கலங்களில் அதிக சக்தி வாய்ந்தது கடல் புறா. அது செயலற்றுவிட்டால் மற்றக் கப்பல்களை நசுக்குவது எளிது” என்றான் அமீர்.

“தவிர ஆபத்தில் தலைவர் முதலில் தலையிடுவது தவறு. தலைவருக்கு ஆபத்து நேரிட்டால் நிலைமையைச் சமாளிக்க அப்புறம் யாரிருக்கிறார்?” என்றான் கண்டியத்தேவன்.

“போதாக்குறைக்கு நம்மிடமிருக்கும் இரு மரக்கலங்கள் சர்ப்ப மந்திரங்கள், உல்லாசப் பயணத்துக்கே உபயோக முள்ளவை. அவற்றில் பெரும்பாலும் விலை மதிக்க முடியாத பலப்பல வர்த்தகப் பொருள்கள் இருக்கின்றன” என்றான் பாலிக்குள்ளன்.

இளையபல்லவன் இந்த ஆட்சேபணைகளைக் கேட்டுப் புன்முறுவல் கொண்டான். “நீங்கள் படும் கவலைகள் எதற்கும் அர்த்தமில்லை உபதலைவர்களே! கடல் புறா, முதலில் செல்லும், ஆனால் போரிடாது!” என்று கூறவும் செய்தான்.

“போரிடாதா!” வாயைப் பிளந்தது பிளந்தபடி இருந்தான் பாலிக்குள்ளன்.

“போரிடாது. ஏனென்றால் நாம் மலையூர் போரில் மாநக்காவரத்துக்கு நேர்மாறாக நடந்து கொள்வோம்” என்று பாலிக்குள்ளனை நோக்கிக் கூறிய படைத்தலைவன், “அமீர், நினைப்பிருக்கிறதா உனக்கு? கடல் மோகினியை அடையும் போது, எப்படி அடைந்தோம்?” என்று அமீரை வினவினான்.

“நினைப்பிருக்கிறது படைத்தலைவரே! கடல் புறாவின் எல்லா விளக்குகளையும் பந்தங்களையும் பட்டப் பகல் போல் எரியவிட்டுக் கொண்டு அடைந்தோம்” என்றான் அமீர்.

“இங்கு நாம் அதைச் செய்யப் போவதில்லை. இங்கு எந்த மரக்கலங்களிலும் விளக்கிருக்காது. கிருஷ்ணபட்ச மாகையால் இருளும் மண்டிக் கிடக்கும். தவிர, வடமேற்குப் பருவக்காற்றின் மேகங்களும் நட்சத்திரங்களை மறைத்துவிடும். அந்த இருளில் கடல் புறாவை நான் துடுப்புகளைக் கொண்டு துழாவி ஜம்பி நதியின், முகத்துவாரத்துக்குள் நுழைவேன். நுழையும் தருவாயில் மிகுந்த வேகத்துடன் நுழைந்து விடுவேன்” என்றான்.

வேகமாக நுழையும் மர்மம் அமீருக்கும் கண்டியத் தேவனுக்கும் பாலிக்குள்ளனுக்கும் தெளிவாகத் தெரிந்திருந் தாலும், புதிதாக வந்திருந்த இரு உபதலைவர்களுக்குப் புரியாததால் அவர்களில் ஒருவன் கேட்டான், “தலைவரே! துடுப்புகளைக் கொண்டு மட்டும் வேகமாக முகத்துவாரத்தில் மரக்கலத்தை எப்படிச் செலுத்த முடியும்?” என்று.

“முதல் ஜாம முடிவில் நாம் முகத்துவாரத்தை அடைவோம்” என்றான் இளையபல்லவன்.
ஆம். “

“அப்பொழுது அலைமாறும் சமயம். பேரலைகள் பெரு வேகத்துடன் நதிக்குள் புகும் சமயம் அது. அந்த அலைகள் எழும் சமயம் பார்த்து மரக்கலத்தை இயக்கினால் பாய்கட்கு ஓடும் வேகத்தைவிட அதிக வேகத்தில் மரக்கலம் உள்ளே நுழைந்துவிடும். “

இந்த விளக்கத்தைக் கேட்டதும், “ஆச்சரியம்! ஆச்சரியம்! தலைவர் அனைத்தையும் யோசித்திருக்கிறார்” என்று குரலில் வியப்பு மண்டக் கூவினான் அந்த உபதலைவன்.

“இதில் வியப்பு ஏதுமில்லை உபதலைவரே? இன்னும் சில நாட்கள் இந்தக் கடல் புறங்களில் பழகினால், கடலின் நோட்டம், அலைகள் மாறும் சமயம், காற்று திசை மாறும் சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் நீங்களும் அறிந்து கொள்வீர்கள்” என்று கூறிய இளையபல்லவன் மேற்கொண்டு தனது திட்டத்தை விவரித்தான். “முதல் ஜாம முடிவில் நல்ல இருளில் அலை வேகமாக எழும் சமயத்தில் கடல் புறாவை நான் முகத்துவாரத்துக்குள் வெகு வேகமாகக் கொண்டு போவேன். நான் முகத்துவாரத்தை அடையும் வரையில் அங்குள்ள மரக்கலங்களுக்கு நமது வருகை தெரியாது. அதற்கு வடமேற்கு பருவக் காற்று அளிக்கும் மேகங்களின் உதவி இருக்கிறது. தவிர மலையூர், துறைமுக நகரமல்லவாதலால் இங்கு கலங்கரைவிளக்கம் வீசும் வெளிச்சமும் கிடையாது. நான் கடல் புறாவை முகத்துவாரத்துக்குள் செலுத்திய பிறகு தான் இரு கரைகளிலும் நிற்கும் எதிரிக் கப்பல்கள் இதைக் காண முடியும். கண்டவுடன் அதைத் தாக்க இருபுறங்களிலிருந்தும் ஒன்றுசேர முற்படும். அவற்றை ஒன்றுசேர விடுங்கள்… ”
இந்தச் சமயத்தில் கண்டியத்தேவன் இடைமறித்து, “என்ன! ஒன்றுசேர விடுவதா?” என்று வினவினான் வியப்புடன்.

“ஆம். ” திட்டமாக வந்தது இளையபல்லவன் பதில்.

“அவை ஒன்று சேர்ந்தால் நாங்கள் உங்களை அணுக முடியாதே. இடையே கப்பல்கள் உங்களை அடைத்துவிடுமே” என்று மீண்டும் வினவினான் தேவன்.

“ஆம். அடைத்துவிட வேண்டும்” என்றான் படைத் தலைவன்.

“அது எப்படி நமக்கு அனுகூலம்? கடல் புறாவையும் மற்ற மரக்கலங்களையும் இரண்டாகப் பிரித்துவிடுவது பலவீனமல்லவா நமது படைக்கு?” என்று வினவினான் கண்டியத்தேவன் மறுபடியும்.

“எப்படி அனுகூலமா! கேளுங்கள். ஜம்பி நதி முகத்துவாரத்தில் அலைவேகம் அதிகம் என்று சொன்னேன். நான் உள்ளே நுழையும் சமயத்தில் இருகரையிலும் உள்ள எதிரிக் கப்பல்களின் வெளிச்சம் கடல் புறாவின் மீது வீசும். அப்பொழுதுதான் அம்மரக்கலங்களின் தளங்களில் காவல் புரியும் வீரர்கள் விழித்துக் கொள்வார்கள். உடனே அபாய தாரைகள் ஊதப்படும். மரக்கலங்கள் வேகமாக என்னைத் துரத்தி அழிக்க ஒன்றுபட இயக்கப்படும். இருகரைகளிலும் உள்ள நான்கு மரக்கலங்கள் துறைமுகத்தை அடைக்கும்போது அவையும் திடமாக நிற்க முடியாது. அலைவேகம் அவற்றை என்னை நோக்கித் தள்ளும். நான் கடல் புறாவின் ஆயுதங்களை அவற்றின் மீது திருப்புவேன்.

அதே சமயத்தில் பாலி மாலுமியின் மரக்கலமும் மற்றொன்றும் அவற்றைப் பின்புறம் தாக்கும் சமயத்தில் காஞ்சனாவும், மஞ்சளழகியும் பின்புறக் கடைசியில் இருக்க வேண்டும். அவை இரண்டையும் அமீரும் கண்டியத்தேவனும் பாதுகாப்பார்கள்… ” என்ற இளையபல்லவனை மேற்கொண்டு பேசவிடாத அமீரும் கண்டியத்தேவனும் ஏககாலத்தில் ஆசனங்களை விட்டு எழுந்து, “இளையபல்லவரே!” என்று ஆட்சேபணைக் கூச்சலைக் கிளப்பினார்கள்.

இளையபல்லவன் அனுதாபத்துடன் அவ்விருவரையும் பார்த்தான். பிறகு உறுதியுடன் சொன்னான்: “அமீர்! தேவரே! சென்ற ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நான் உங்களை முன்னணியில் நிறுத்தியே போரிட்டிருக்கிறேன். ஆகையால் உங்கள் துணிவையோ திறமையையோ நான் சந்தேகிப்பதாக எண்ண வேண்டாம். நாம் மலையூர் செல்லும்போது காஞ்சனாவிலும் மஞ்சளழகியிலுமுள்ள அபூர்வப் பொருள்கள் அனைத்தும் நமக்குத் தேவை. அவை வெகு ஜாக்கிரதையாகக் காப்பாற்றப்பட வேண்டும். அப்படி அடியோடு அந்த இரு மரக்கலங்களும் தப்பவும் முடியாது. ஒருவேளை அவை தாக்கப்பட்டால், அனுபவமுள்ள இரு தலைவர்கள் அவற்றைப் பாதுகாக்க வேண்டியிருக்க வேண்டும். ஆகவே அமீர் காஞ்சனாதேவியையும், தேவர் மஞ்சளழகியையும் காக்கட்டும்” என்று.

அதற்கு மேல் யாரும் ஏதும் சொல்லாமலிருக்கவே மீதித் திட்டத்தையும் விளக்கினான் இளையபல்லவன். “எதிரி மரக் கலங்கள் இணைந்தவுடன் அலைகளில் நடமாடும்போது நான் அவற்றை நதிக்குள்ளிருந்தும், நீங்கள் கடல் பகுதியில் இருந்தும் தாக்க வேண்டும். அப்படித் தாக்கினால் அந்த மரக்கலங்களை அழிக்கத்தான் முடியும், கைப்பற்ற முடியாது; அவற்றின் தலைவர்கள் சரணடைந்தாலொழிய. ஆனால் அவர்கள் சரணடைவதற்கு வழியுமிருக்காது. அலைவேகம் மிகுதி.

ஆகவே, நமது தாக்குதலின் வேகமும் மிகுதி. அநேகமாக அந்த நான்கு மரக்கலங்களையும் கொளுத்தி விடுவோம். அவற்றிலுள்ள மாலுமிகள் நதியில் விழுந்து நீந்தித் தப்ப முயன்றால் யாரும் அவர்களைக் கொல்ல வேண்டாம். தப்புவதைத் தடை செய்யவும் வேண்டாம். அவர்கள் தப்பிச் செல்வதில் நமக்கு அனுகூலமிருக்கிறது. மரக்கலங்கள் எரியும்போதே, அழிந்துவிடு முன்பாகவே, நமது மரக்கலங்கள் எல்லாம் நதிக்குள் வந்துவிட வேண்டும். எதிரி மரக்கலங்கள், சரியாகத் தீக்கு இரையாகாமல் அடிமரம் வெடித்து மூழ்கிவிட்டால் முகத்துவாரம் தடைப்படலாம். தடைப்பட்டால் நீங்கள் கடற்புறத்திலும் நான் நதிப்புறத்திலும் இருப்பேன். ஜாக்கிரதை. ஆனால் எதற்கும் கவலைப்படாதீர்கள். செல்லுங்கள். “

இத்துடன் தனது பேச்சு முடிந்து விட்டதற்கறிகுறியாக இளையபல்லவன் தனது இருப்பிடத்தை விட்டு எழுந்து நின்றான். அதற்குமேல் ஏதும் பேசாத உபதலைவர்கள் இளையபல்லவன் கட்டளையை நிறைவேற்ற சென்றார்கள். அவன் போர்த் திட்டம் எல்லோருக்கும் புரிந்திருந்தாலும், இரு உல்லாசக் கப்பல்களை அவன் ஏன் காப்பாற்றச் சொன்னான்? அவற்றிலிருந்த விலையுயர்ந்த வைரங்கள், மாணிக்கங்கள், தங்க நகைகள், பட்டுப் பீதாம்பரங்கள் இவற்றில் ஏற்பட்டுள்ள ஆசையா, என்று அதற்குக் காரணம் புரியாமல் திணறினார்கள். ஆனால் அவற்றையெல்லாம் யோசிக்க அவகாசமில்லை யாருக்கும். மற்ற உபதலைவர்கள் அவரவர் மரக்கலங்களுக்குச் சென்றார்கள். அமீரும் கண்டியத் தேவனும் காஞ்சனாவையும் மஞ்சளழகியையும் நோக்கிப் படகில் விரைந்தார்கள்.

அடுத்த ஒரு நாழிகைக்குள் எல்லா மரக்கலங்களும் துடுப்புப் பெற்று அசைந்தன. மரக்கலங்களின் தளங்களில் அதனதன் தலைவர்கள் மிகத் துரிதமாக உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள். கதிரவன் மறைய முற்பட்டு எங்கும் மஞ்சள் வெய்யில் வீசியதும் மரக்கலங்கள் மெள்ள மெள்ள முன்னேற முற்பட்டன. பாய்கள் ஏதுமின்றித் துடுப்புக்களால் மட்டுமே துழாவப்பட்டதால் மரக்கலங்கள் அலைகளில் ஊர்ந்தே சென்றன. அலைகள் ஆரம்பத்தில் மிக நிதானமாக இருந்ததால் மரக்கலங்களின் வேகமும் பரம நிதானமாக இருந்தது.

அப்படி நிதானமாகத் தனது பெரும் மூக்கை மலையூரை நோக்கித் தூக்கித் தூக்கித் தூரத்தே தெரிந்த மலையூரின் மலைக்கோட்டையைத் தனது அழகிய கண்களால் ஆராய்ந்து ஆராய்ந்து சிந்திப்பதுபோல் கடல் புறா மிதந்து நிதானமாகவும் அதே சமயத்தில் திடத்துடனும் நகர்ந்தது. அதன் இறக்கை களின் அடியிலிருந்து துழாவிய துடுப்புகளும் ஒரே சீராகச் சர்ரென்ற ஒலியுடன் நீரைத் துழாவின. அதன் தளத்தில் நின்ற இளையபல்லவன் எதிரே தூரத்தே தெரிந்த மலைக் கோட்டையை மட்டும் கண்டான்.

முகத்துவாரம் அரைக் காதமிருந்ததால் கண்ணுக்குப் புலப்படவில்லை. அடுத்த அரை ஜாமத்தில் இருள் நன்றாகக் கவிந்தது. மலைக்கோட்டை உச்சியிலிருந்த ஒரு தீபம் மட்டும் மினுக் மினுக்கென்று எரிந்தது. இளையபல்லவன் உத்தரவுப்படி கடல் புறாவிலும் மற்ற மரக்கலங்களிலும் விளக்குகளோ பந்தங்களோ கொளுத்தப்படவில்லை. கருமை தட்டிக் கிடந்த அந்த இருளிலேயே தளத்தில் நடந்தும் ஓடியும் இளையபல்லவன் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான். மெள்ள முதல் ஜாமமும் நகர்ந்து கொண்டிருந்தது.

அது முடிவடையும் தருவாயில் ஜம்பியின் முகத்துவாரமும் நெருங்கியது. அத்தனை இருளிலும் நன்றாகப் பார்த்தும் சக்தி வாய்ந்த தனது கண்களால் முகத்துவாரத்தையும் நோக்கி, கீழே எழுந்து கொண்டிருந்த அலைகளையும் நோக்கிய இளையபல்லவன் வெகு வேகமாகச் சேந்தனிருந்த இடம் சென்று, “சேந்தா! சுக்கானை இப்படிக் கொடு” என்று வாங்கிக் கொண்டான்.

“ஏன் இளையபல்லவரே? சுக்கானைப் பிடிக்க..” என்று ஏதோ துவங்கிய சேந்தனைச் சட்டென்று இடைமறித்த இளையபல்லவன், “எதுவும் பேசாதே. சுக்கானை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ என் அறைக்குச் சென்று காஞ்சனாதேவியை அறையை விட்டு நகர வேண்டாமென்று சொல். உம், செல்” என்று கடுமையுடன் உத்தரவிட்டான். வெகு வேகமாக அக்ரமந்திரத்தை நோக்கி ஓடிய சேந்தன் அதன் முகப்பிலேயே காஞ்சனாதேவி நின்று கொண்டிருப்பதைக் கண்டு “தேவி! தேவி! உள்ளே செல்லுங்கள். நீங்கள் வெளியே வரக்கூடாது” என்றான்.

“ஏன்?” கோபத்துடன் கேட்டாள் காஞ்சனாதேவி. “இளையபல்லவர் உத்தரவு. “

“நான் கீழ்ப்படியும் உத்தேசமில்லை அதற்கு… ” என்று மேலும் எதோ சொல்லப் போன காஞ்சனாதேவி திடீரென அதற்குப் பணிந்தாள், இஷ்டத்துடனல்ல, இஷ்டவிரோதமாக. கடல் புறா திடீரென மேலெழுந்து விர்ரென்று அக்ரமந்திரத்தை ஒரு சாய்ப்புச் சாய்க்கக் காஞ்சனாதேவி வெகு வேகமாக அறைக்குள் போய் விழுந்தாள். அடுத்த விநாடி சேந்தனும் அவளருகில் வந்து விழுந்தான். கடல் புறா கடலில் பெரும் அலைகளில் சிக்கி ஜம்பி நதியின் பிரவாகத்துக்குள் அம்புபோல் பாய்ந்து சென்றது. அடுத்த அரை நாழிகைக்குள் ஸ்ரி விஜயத்தின் கடற்படையுடன் முதன் முதலாக மோதினான் கருணாகர பல்லவன். போர் துவங்கியது, மும்முரமாக. ஆனால் அவன் வகுத்த திட்டப்படி மோதல் நடக்கவில்லை. அவனும் எதிர்பாராத ஒரு பெரும் மாறுதல் இருந்தது. அந்த மாறுதல் எதற்கும் அஞ்சாத கருணாகர பல்லவனுக்கும் அச்சத்தைத் தந்தது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch51 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch53 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here