Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch53 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch53 | Sandilyan | TamilNovel.in

126
0
Read Kadal Pura Part 3 Ch53 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch53 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch53 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 53: விஜயசந்திரன்.

Read Kadal Pura Part 3 Ch53 | Sandilyan | TamilNovel.in

கடற்புறமெங்கும் மையிருள் கவிந்து கருமை தட்டிக் கிடந்ததால் ஜம்பிந்தி கடலில் கலப்பதுகூடச் சரியாகத் தெரிய வில்லை. இருகரைகளிலும் சற்றுத் தள்ளியிருந்த மீனவர் குடிசைகளில் தெரிந்த சிறு விளக்கொளிகளே ஜம்பிந்தி முகத்துவாரம் இருக்குமிடத்தை லேசாகத் தெரியப்படுத்தின. சாதாரண கண்களுக்குத்தான் இந்த ஊகம் தேவையா யிருந்ததே யொழிய, பல சந்தர்ப்பங்களில் இருளில் மரக் கலத்தைச் செலுத்தியிருக்கும் இளையபல்லவனுடைய கூர்மையான விழிகளுக்கு அந்த இருளையும் துழாவும் திறமை யிருந்ததால் ஊகம் எதுவும் அவனுக்குத் தேவையில்லாது போயிற்று. அகூதாவிடம் இணையற்ற பயிற்சி பெற்றிருந்த இளையபல்லவன்மீது வீசிய காற்றும் அது மெள்ள மெள்ளப் பெரிதாகிக் கொண்டிருந்ததைக் கீழே நீரைத் தொட்டுக் கொண்டிருந்த சுக்கானை அடிப்பாக அசைவின் இறுக்கமும் விளக்கவே, சுக்கானை பலமாகப் பிடித்து ஒரு குறிப்பிட்ட நெட்டில் நிலைக்க வைத்தான் கடல் புறாவின் தலைவன். நன்றாகப் பழக்கப்பட்ட பட்சியானது, வளர்ப்பவன் இஷ்டப்படி ஆடுவது போல கடல் புறா இளையபல்லவன் இஷ்டப்படி இயங்க ஆரம்பித்தது.

வடமேற்குப் பருவக்காற்று திடீரெனப் பெரு வேகத்துடன் வீசத் தொடங்கியதும் அலைகள் பெரிதாக எழுந்து ஜம்பி நதிக்குப் பிரவேசிக்க முற்படவே, இளையபல்லவன் சுக்கானை ஒரு திருப்புத் திருப்பி எதிரேயிருந்த முகத்துவாரத்தை உற்றுப் பார்த்தான். நக்ஷத்திரங்களும் மறைந்து கிடந்ததால் சரேலெனத் தெரிந்த அந்த எதிர்ப்பகுதியில் எது முகத்துவாரம் என்பதை அலைகள் புரண்டு எழுந்து உருண்டதிலிருந்தே புரிந்துகொண்ட இளையபல்லவன், சரேலெனச் சுக்கானை ஒரு புறமாகத் திருப்பவே, கடல் புறா வெகு வேகமாகத் தனது மூக்கை முகத்துவாரத்தை நோக்கித் திருப்பியது.

அடுத்தபடி மலையென எழும்பி இரண்டு அலைகள் கடல் புறாவை நீண்ட தூரம் மேலே எழுப்பிய முகத்துவாரத்தை நோக்கி உருட்டின. முகத்துவாரத்துக்கு அருகில் வந்தும் கூட எதிரி மரக்கலங்கள் எதுவும் இருக்கும் அறிகுறி தெரியாது போகவே சிறிது குழப்பமடைந்த இளையபல்லவன் மேற் கொண்டு யோசனை செய்யவோ தாமதிக்கவோ அவகாச மில்லாதபடி அலைகள் அடித்துவிடவே கடல் புறாவை முகத்துவாரத்தில் செலுத்தும் பணியில் மட்டும் ஈடுபட்டான் இளையபல்லவன்.

மேலும் மேலும் பின்புறத்தில் மலையென எழுந்த அலைகளில் கடல் புறா தவழ்ந்து செல்லச் சுக்கானை இரு கைகளால் பலமாய்ப் பிடித்துக் கொண்டிருந்தான். மலையென எழுந்த அலைகள் முகத்துவாரத்துக்கு வெகு அருகில் கடல் புறாவை உந்தித் தள்ளிக் கொண்டு வந்த பின்புதான், எதிரி மரக்கலங்கள் நிற்கும் இடங்களைக் காண முடிந்தது, படைத்தலைவனால். அவை நின்ற நிலையைப் பார்த்துச் சிறிது அச்சமடைந்த படைத்தலைவன் வேறு யோசனை செய்யும் முன்பாகவே அடுத்த ஓர் அலை கடல் புறாவை ஜம்பி நதியின் முகத்துவாரத்துக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.

ஆட்டமோ அசைவோ இல்லாமல் ஏதோ ஒரு சாதாரண ஓலையைத் தாங்கிச் செல்வது போலப் பேரலையொன்று அப்படியே கடல் புறாவைத் தூக்கி அம்பு நுழைவது போல் முகத்துவாரத்தில் புகுத்திவிடவே, திடீரெனக் கடல் புறா நான்கு மரக்கலங்களுக்கிடையில் சிக்கிவிட்டதை இளையபல்லவன் புரிந்துகொண்டான். இளையபல்லவன் எதிர் பார்த்தபடி எதிரி மரக்கலங்கள் நான்கே அங்கு காவல் இருந்தன. அவன் எதிர்பார்த்தபடி இருகரைகளுக்கும் அருகே தான் அவை இருந்தன.

கரைக்கு இரண்டாகப் பிரிந்தும் நின்றன. ஆனால் அவன் எதிர்பார்த்ததில் ஒரு மாறுதல் இருந்தது. முகத்துவாரத்துக்கு அருகில் நிறுத்தப்படவில்லை அந்த மரக்கலங்கள். உள்ளே சிறிது தூரம் தள்ளி அலைகள் மடிந்து நதியின் எதிர் நீரால் நிதானப்படுத்தப்படும் இடத்தில் இருந்தன. அதனாலுண்டான ஆபத்து இளையபல்லவனுக்குத் தெள்ளெனப் புரிந்தது. அந்த நான்கு மரக்கலங்களும் இரு கரைகளிலிருந்தும் நெருங்கி வந்து தன்னை அடைத்து நின்று விட்டால்,
அந்த இடத்தில் அலைவேகம் இல்லாததால் அவற்றுக்கு ஏதும் ஆபத்தில்லையென்றும், அவற்றுக்குப் பின்னால் வரும் தனது மரக்கலங்களே அலைகள் புரளுவதால் நிற்க முடியாத நிலை ஏற்படும்போது பாலிக்குள்ளன் மரக்கலங்கள் கன வேகத்தில் முகத்துவாரத்துக்குள் நுழையுமென்றும் அவை நெருங்குமுன்பே நிதானத்துடன் நிற்கும் எதிரிக் கப்பல்கள் அவற்றின் மீது பாணங்களை வீசி விட்டால் அவை தீப்பிடித்து விடுமென்றும் எண்ணிப் பார்த்த இளையபல்லவன் திடீரெனத் தனது பழைய திட்டத்தை மாற்றிச் சேந்தனை அழைத்துச் சுக்கானைப் பிடிக்குமாறும், எதிரிக் கப்பல்கள் கடல்புறாவை நெருங்கி முகத்துவாரத்தை அடைக்க முற்பட்டால் சுக்கானை இரு புறங்களிலும் மாறிமாறித் திருப்பி மரக்கலத்தை ஒரு நிலையில் இல்லாமல் செய்து விடும்படியும் உத்தரவிட்டுத் திடுதிடுவெனத் தளத்தில் ஓடி மாலுமிகளை அழைத்து, “உம், உம், சீக்கிரம்.

நமது பந்தங்களைக் கொளுத்துங்கள். எரியம்புகள் தயாராகட்டும். இரண்டு பக்கங்களிலும் எரியம்புகள் பறக்கட்டும்” என்று உத்தரவிட்டுக் கிடுகிடுவென்று நடுப் பாய்மரத்தில் ஏறி எதிரி மரக்கலங்களின் நிலைமையைக் கவனித்தான்.
கடல் புறா நதி முகத்துவாரத்துக்குள் வேகமாக நுழைந்த வுடனேயே நங்கூரத்தை எடுத்துவிட்ட எதிரி மரக்கலங்கள் துடுப்புகளால் துழாவப்பட்டு நதியின் மத்திய பாகத்துக்கு வந்து கொண்டிருந்தன. அவை நடுமத்திக்கு வந்து சுவர்போல இணையுமுன்பே கடல் புறாவின் பெரும் உருளைகள் சுழன்று விற்கள் வளைந்து துடித்து நிமிர்ந்து எரியம்புகளை இரு புறத்திலும் வீசிவிடவே எதிரிக் கப்பல்கள் மீது பெரும் பந்தங்கள் சரேல் சரேலென விழத் துவங்கின.

எதிரிக் கப்பல்களும் திடீரெனத் துடிப்புப் பெற்றன. வெகு மும்முரமாக அந்தக் கப்பல்களிலொன்றின் தாரை ஊதப்பட்டதும் அவற்றிலும் பந்தங்கள் கொளுத்தப்பட்டன. அவற்றிலிருந்தும் எரியம்புகள் வந்து கடல்புறாவின் மீது விழுந்தன. கடல் புறாவின் இரு பக்கங்களிலிருந்தும், இரு கரைகளிலிருந்தும் அதை நெருங்கி வந்த எதிரி மரக்கலங்கள் நான்கும் வீசிய பந்தங்கள் ஒன்று சேர்ந்து ஏதோ அந்த நதிப் பிராந்தியத்தில் கோரமான வாண வேடிக்கை நடப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது.

இந்த நிலையைக் கடல் புறாவின் நடுப் பாய்மர உச்சியிலிருந்து கவனித்துவிட்டுக் கீழே வந்த இளையபல்லவன் ஒரு மாலுமியை அழைத்து, “மாலுமி! கீழே சென்று துடுப்புத் துழாவுவோரை இடது பக்கமுள்ள இரண்டு மரக்கலங்களை நோக்கிக் கடல்புறாவைச் செலுத்தச் சொல்” என்று உத்தர விட்டு மற்றொரு மாலுமியை நோக்கி ஏதோ உத்தரவிட்டான். பிறகு இன்னும் சில மாலுமிகளை விளித்து வலது பக்கமுள்ள எதிரி மரக்கலங்கள் இரண்டின் மீதும் வேல்கள் வீசக் கட்டளையிட்டான். வேறொரு மாலுமியிடம் ஏதோ ரகசிய மாகச் சொன்னான்.

இப்படிப் பலபடி உத்தரவைப் பெற்ற மாலுமிகள் ஒவ்வொருவரும் தங்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டனர். கடல் புறா நான்கு மரக்கலங்களுக்கிடையில் தன்னந்தனியாக அகப்பட்டுக் கொண்டதை அறிந்தனர். உத்தரவுகளைப் பிறப்பித்த இளையபல்லவன் முகத்திலிருந்த கவலை அவர்கள் முடிவுக்குச் சந்தேகமற்ற அத்தாட்சியைத் தந்ததால், அவர்கள் ஒவ்வொருவரும் அவன் ஆணையை நிறைவேற்றுவதில் துரிதமாக முனைந்தார்கள். இளையபல்லவன் தளத்தின் நடுவிலிருந்து திடீரெனப் பின்புறம் சென்றான்.

பின்புறத்தில் தூரத்தில் பாலிக்குள்ளன் மரக்கலமும் இன்னொன்றும் அலைகளில் எழுந்து கொண்டு இருந்தன. அடுத்த விநாடி அவை அலை வேகத்தில் சிக்கித் திண்டாடும் என்பதை உணர்ந்த இளையபல்லவன், அவை உதவிக்கு வர நேரம் பிடிக்கும் என்பதையும், அதற்குள் கடல் புறா சரியாகக் கையாளப்படாவிட்டால் அது அழிக்கப் படுமென்பதையும் தீர்மானித்துக் கொண்டு அவற்றைக் கவனிப்பதை விட்டு, கடல் புறாவை இயக்குவதில் முனைந்தான். திடீர் திடீரென உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தான். அந்த உத்தரவுகளின் விளைவு எதிரி மரக்கலங்களுக்குக் குழப்பத்தை விளைவித்திருக்க வேண்டும். அவை இருகரைகளிலும் இருந்து நெருங்குவதும் சிறிது தடைப் பட்டது.

நதிக்குள் புகுந்த கடல் புறாவுக்கு இடது புறத்தில் நெருங்கிய இரு எதிரி மரக்கலங்களில் ஒன்றின் தளத்தில் அந்தச் சிறு படையை இயக்கி வந்தவனும் ஸ்ரி விஜயத்தின் கடற்படையின் பிரதான தளபதியுமான விஜயசந்திரன் நின்று கொண்டிருந்தான். சுமாரான உயரத்துடனும் மெல்லிய தேகத்துடனும் இருந்தாலும் பெரும் கடற்போர் வீரனுக்குள்ள களை அவன் முகத்தில் பரவிக் கிடந்தது. ஸ்ரி விஜயத்தின் பிராந்தியங்களில் இளையபல்லவனுக்கு இருந்த கீர்த்தி அவனுக்கும் இருந்தது.

எந்த ஆபத்திலும் மரக்கலங்களைக் காப்பாற்ற வல்லவனென்றும், அபாரமான புத்திக்கூர்மை யுடையவனென்றும் பிரசித்தியடைந்திருந்த விஜயசந்திரன் கூட, கடல் புறாவின் நோக்கம் இன்னதென்று அறியாமல் அந்தக் கணத்தில் குழம்பினான். அலைகளின் நோட்டத்தை அறிந்ததாலும் புத்திசாலியான எந்த மரக்கலத் தலைவனும் உள்புகும் பருவக் காற்றலைகளில்தான் வருவானென்பதை உணர்ந்திருந்ததாலும், உள்ளே வந்த பின்பு எதிரியை மடக்குவதே சரியான முறையென்ற காரணத்தினாலும் முகத்துவாரத்திலிருந்து சற்றுத் தள்ளியே தன் மரக்கலங்களை நிறுத்தி வைத்திருந்தான் விஜயசந்திரன்.

கடலலைகள் வேகமும் நதி வேகமும் ஒன்றையொன்று எதிர்ப்புறம் தாக்கி நீர் சமனப்படும் இடத்தில் தனது மரக்கலங்கள் இணைந்தால் எதிரி மரக்கலங்களைத் தனது படை இரண்டாகப் பிரித்து விடுவதும் அவற்றைத் தனித்தனியே தாக்குவதும் சுலபமென்றும் கருதியே தனது மரக்கலங்களை இடம் பார்த்து நிறுத்தியிருந்தான் ஸ்ரி விஜயத்தின் கடற்படைத் தலைவன்.

அவன் நினைத்தபடிதான் சகலமும் நடந்தது. அவனும் முன் திட்டப்படியே தனது மரக்கலங்களை நெருக்கினான். அப்படி நெருக்கியபோது திடீரெனக் கடல் புறா எரியம்புகளை வீசத் துவங்கியது வியப்பாய் இருந்தது விஜயசந்திரனுக்கு. எரியம்புகள் பாய்மரச் சீலைகளுக்கே அதிக சேதத்தை விளைவிக்க முடியுமென்பதை உணர்ந்திருந்த விஜயசந்திரன், பாய் விரிக்காத தனது மரக்கலங்களின்மீது எதிரி எதற்காக எரியம்புகளை வீசுகிறான் என்பதை அறியாமல் வியப்பே எய்தினான்.

இளையபல்லவன் ஏதோ மிரண்டுபோய் கண்டபடி போர் துவங்கி விட்டான் என்பதை எண்ணித் தனது மரக்கலங்களிலிருந்தும் எரியம்பு வீசக் கட்டளையிட்டான். கடல் புறாவை விஜயசந்திரன் பார்த்த தில்லையே தவிர அதைப் பற்றியும் இளையபல்லவனைப் பற்றியும் பெரிதும் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே முதலில் எதிரி மிரண்டு போர் துவங்கிவிட்டான் என்று நினைத்த விஜயசந்திரன் அப்படி இருக்க முடியாது என்று தீர்மானித்துப் பிறகு மிகுந்த யோசனையுடன் போர் நடத்தினான்.

அவன் மரக்கலங்களில் இருந்த மாலுமிகள் பெரும் கூச்சலுடன் வேல்களை வீசினார்கள். எரியம்புகளையும் சரமாரியாகப் பொழிந்தார்கள். அத்தனை வீச்சுக்கும் இடையே திடீரெனக் கடல்புறா அதன் இடது புறத்தை நோக்கி, அதாவது தானிருந்த மரக்கலத்தை நோக்கி, நகர முற்பட்டதைக் கவனித்த விஜயசந்திரன் அதன் காரணத்தை அறியாமல் குழம்பினான். அந்தக் குழப்பம் அவனுக்கு அரை விநாடிதான் நிலைத்தது.

கடல் புறா துடுப்புகள் ஒரு பக்கத்தில் மட்டும் துழாவப்பட்டுத் தன் மரக்கலத்தை முதலில் தாக்க வருவதை உணர்ந்து கொண்ட விஜயசந்திரன் தனது தாரையை எடுத்துப் பலமாக ஒருமுறை ஊதவே கடல் புறாவின் வலது புறத்திலிருந்த எதிரி மரக்கலங்கள் இரண்டும் கடல் புறாவை நோக்கித் துரிதமாக வந்தன. விஜயசந்திரன் நான்கு மரக்கலங்களுக்கும் இடையில் கடல் புறாவை நெரித்துவிடத் திட்டம் செய்தான்.

இளையபல்லவனைத் தவிர வேறு கடற்படைத் தலைவன்யாராய் இருந்தாலும் தனது மரக்கலத்தை நதிக்குள் வேகமாகச் செலுத்தி இருபுறத்திலும் தாக்கப்படுவதைத் தடுக்கப் பார்த்திருப்பான். செய்ய வேண்டியதும் அதுதான். ஆனால் அந்த அபாயத்தை வேண்டுமென்றே அழைப்பவன் போல் இளையபல்லவன் கடல் புறாவை விஜயசந்திரன் மரக்கலத்தை நோக்கிச் செலுத்தினான். இரு மரக்கலங்களும் நெருங்கியதும் போருக்கும் எதிரி சன்னத்தமாகி விட்டதைக் கண்ட விஜய சந்திரன் அவன் துணிவை எண்ணிப் பெரிதும் வியந்தான். தன் அழிவைத் தேடிக்கொள்ள இதைவிடச் சிறந்த முடிவை இளையபல்லவன் செய்து இருக்க முடியாதென்று தீர்மானித்தான் விஜயசந்திரன். ஆனால் எத்தனை தவறான முடிவு அது! எதிரியை எத்தனை அற்பமாக எடை போட்டு விட்டோம் என்பதை விஷயம் முற்றிப்போன பிறகே உணர்ந்தான் ஸ்ரி விஜயத்தின் தளபதி.

கடல்புறா அவன் மரக்கலத்தை நோக்கி மெள்ள மெள்ள வந்தது. அதன் இடது பக்கத்தில் அதைத் தாக்க விஜயசந்திரன் தயாராக நின்றான் இரு மரக்கலங்களுடன். வலது புறத்தி லிருந்து அதை நோக்கி வந்தன விஜயசந்திரனின் மற்ற இரு போர்க்கலங்கள். ஆனால் அந்த மரக்கலங்கள் நதியின் மத்தியை அடையுமுன்பாகவே கடல்புறா விஜயசந்திரனிருந்த மரக்கலத்தை நெருங்கியது. விஜயசந்திரனின் மாலுமிகள் எறிந்து கொண்டிருந்த வேல்களையும் எரியம்புகளையும் மீறி நெருங்கிக் கொண்டிருந்தது. விஜயசந்திரன் மேலும் வியப்படைந்தான். அவனது மரக்கலம் கடல்புறாவை விடப் பெரியது. பெரும் பாரமுள்ளது. அதை மோதக் கடல்புறா வந்தது வியப்பாயிருந்தது அவனுக்கு.

அந்த மோதலால் கடல் புறா பெருவேகத்துடன் பின்னுக்குத் தள்ளப்படுமென்பதை உணர்ந்தான் ஸ்ரி விஜயத்தின் கடற்படைத் தளபதி. தவிர, போர்க்கலம் இன்னொரு போர்க்கலத்தை நெருங்கும்போது எதிரியை அருகில் இழுக்க உபயோகப்படுத்தப்படும் இரும்புக் கொக்கிகளைக் கூடக் கடல் புறா வீசவில்லை என்பதையும் கவனித்த விஜயசந்திரன், எதிரி எதைத்தான் அந்த மோதலால் ‘சாதிக்க இஷ்டப்படுகிறானென்பதையும் அறியாமல் திகைத்தான். அடுத்த சில விநாடிகளுக்குள் கடல்புறா அவன் மரக்கலத்தை நெருங்கிவிட்டது.

திடீரெனப் பெரும் பிரமை விஜயசந்திரனின் உள்ளத்தைக் கவிந்து கொண்டது. அவன் அதுவரை கண்டிராத காட்சியைக் கண்டான். கடல்புறா தனது இடது இறக்கையைத் திடீரென விரித்தது. இந்தப் பெரும் இறக்கையில் கடல் புறாவின் தளத்திலிருந்த மாலுமிகள், வில், வேல், வாட்களுடன் தோன்றி விஜயசந்திரன் மரக்கலத்தின் மீது குதித்தனர். அவ்வளவுதான், விஜயசந்திரன் மாலுமிகள் கைகலக்கத் தாரை ஊதினான். கடல்புறா மாலுமிகளும் விஜயசந்திரன் மாலுமிகளும் பெருங்கூச்சலுடன் வேல்களை வீசியும் வாட்களை உருவியும் போரில் இறங்கினார்கள்.

போருக்கு மாலுமிகளை ஏவிக்கொண்டிருந்த விஜய சந்திரன் திடீரெனத் திகைத்து நின்றான். அவன் மரக்கலத்தில் அடியில் சர்ரென்று பெரும் ஓசை கேட்டது. அடுத்த விநாடி அதே மாதிரி ஓசை மீண்டும் கேட்டது. கடல்புறா திடீரென அந்த மரக்கலத்தை விட்டுப் பின்னடைந்தது. சில விநாடிகள் பறந்தன. விஜயசந்திரன் மரக்கலத்தில் பெருங் குழப்பம் ஏற்பட்டது. மெள்ள மெள்ள அது மூழ்கத் தொடங்கியதை அந்த மரக்கல மாலுமிகள் உணர்ந்தனர். விஜயசந்திரன் வாயடைத்து நின்றான்.

திடீரெனத் தனது மரக்கலம் அமிழத் தொடங்கிவிட்ட காரணம் அவனுக்குப் புரியவில்லை. எதிரே அக்கரையை நோக்கினான் அவன். தோல்வி அங்கும் எதிர்நோக்கிக் கொண்டிருந்தது அவனை. அதனால் பெரிதும் வெகுண்ட விஜயசந்திரன் தோற்பதானால் தனக்கு அபஜயத்தை அளித்த கடல் புறாவை அழித்துவிட்டே தோற்பதென்று தீர்மானித்து, திடீரென மரக்கலத்திலிருந்த நூலேணியில் கிறுகிறுவென இறங்கினான். அந்த மரக்கலம் சிறிது நேரத்தில் மூழ்கியது. அதற்குப் பின்னாலிருந்த மரக்கலத்தை அடைந்த விஜயசந்திரன் முதன்முதலாகத் தனது சக்தியைக் காட்டினான். கடல்புறாவை நோக்கிப் பெரும் தீப்பந்தமொன்று அடுத்த சில விநாடிகளில் பறந்து வந்தது.

வானத்தில் வரவர அதன் பரிமாணம் பெரிதாகியது. அது கடல்புறாவின் மீது விழுந்தால் பெரு நாசம் ஏற்படுமென்பதை உணர்ந்த படைத்தலைவன் என்ன செய்வது என்று அறியாமல் ஒருகணம் திகைத்தான். அந்தக் கணத்தில் ஒரு மகிழ்ச்சியும் உண்டாயிற்று அவன் இதயத்தில். தனக்குச் சமதையான ஒரு கடல் வீரனைத் தான் சந்தித்து விட்டதால் உண்டான மகிழ்ச்சி அது. விஜயசந்திரன் அந்தக் கனல் பந்தத்தைக் கடல்புறாவின்மீது வீசிவிட்டு அந்த மரக்கலத்தைக் கொண்டு வேறு ஒரு புது அபாயத்தையும் சிருஷ்டித்தான் கடல் புறாவுக்கு. அதைச் சமாளித்தால்தான் கடல் புறா பிழைக்கும் என்பதை உணர்ந்த இளையபல்லவன் புத்தி துரிதமாக ஏதேதோ எண்ணமிடத் தொடங்கியது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch52 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch54 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here