Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch54 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch54 | Sandilyan | TamilNovel.in

102
0
Read Kadal Pura Part 3 Ch54 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch54 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch54 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 54 : எதிரியின் உதவி.

Read Kadal Pura Part 3 Ch54 | Sandilyan | TamilNovel.in

ஸ்ரி விஜயத்தின் கடற்படைத் தளபதியான விஜயசந்திரன் தான் விரித்த ஆரம்ப வலையிலிருந்து வெகு சாமர்த்தியமாகத் தப்பிவிட்டதையும், தப்பிய வேகத்தில் கடல்புறாவை அழித்து விடத் திடீரெனப் புது ஏற்பாட்டைச் செய்துவிட்டதையும் கண்ட இளையபல்லவன், அந்தப் புதிய ஏற்பாட்டிலிருந்து எப்படித் தப்புவது என்பதைப் பற்றித் துரிதமாக எண்ணமிடத் தொடங்கினான். கடல் புறாவின் இடது பக்கத்து இறக்கையைத் தூக்கி அதன்மீது தனது மாலுமிகளை நிறுத்தி விஜயசந்திரன் மரக்கலத்தின் மீது தாவ விட்டும், அதே சமயத்தில் இறக்கைகளுக்குக் கீழ் பெரும் துளைகளுக்குள் மறைந்து கிடந்த பெரும் ஈட்டிகளை இயக்கி வெளிக் கிளப்பி எதிரி மரக்கலத்தின் அடிப்பாகத்தைப் பிளந்தும் விட்டால் எதிரி மரக்கலம் மூழ்க முற்படுமென்றும், அதனால் அந்த மரக் கலத்தின் மீதுள்ள மாலுமிகள் கிலிக்குள்ளாகலாமென்றும், அப்படி கிலியில் சிக்கும் மாலுமிகள் தப்பவே பார்ப்பார் களாகையால் அவர்களை முறியடிப்பது ஒரு பெரும் காரிய மல்லவென்றும் திட்டமிட்டிருந்த இளையபல்லவன், தனது திட்டப்படி காரியங்கள் நடந்தும் விஜயசந்திரனால் இருந்த அபாயம் நீங்கவில்லை என்பதை உணர்ந்தான்.

இளையபல்லவனின் திட்டப்படி கடல்புறாவின் இடது இறக்கையிலிருந்து மாலுமிகள் எதிரி கப்பல்மீது தாவியே போரிட்டார்கள். அவன் திட்டப்படி கடல்புறாவின் அடிப் பாகத்திலிருந்த மாலுமிகள் உருளைகளைத் திருப்பி ஈட்டி களை வெளிக் கிளப்பி எதிரி மரக்கலத்தின் அடியைச் சர்ரென்ற ஓசையுடன் பிளக்கவும் செய்தார்கள். அதனால் பெரும் ஓசை ஏற்பட்டு மரக்கலம் அமிழத் தொடங்கியதன்றி எதிரி மாலுமிகளும் கிலியும் குழப்பமும் அடைந்தார்கள். இதுவரை திட்டம் சரியாகவே நடந்தது. அது மட்டுமல்ல.

கடல்புறாவுக்குப் பின்னால் வந்த இரு மரக்கலங்களுக்குத் தலைமை வகித்த பாலிக்குள்ளனும் வெகு திறமையுடன் போரில் கலந்தான். அவன் நேராகத் தனது மரக்கலங்களைக் கடல்புறாவுக்குப் பின்னால் கொண்டுவரவில்லை. கடல்புறா இடது புறமாக ஒதுங்கி விஜயசந்திரன் மரக்கலங்களை நோக்கிச் சென்றதையும் மற்றொரு கரையிலிருந்த எதிரி மரக்கலங்கள் இரண்டும் கடல் புறாவை நோக்கி இயங்க ஆரம்பித்ததையும் கண்டதும் கடற்போரில் யாருக்கும் பின்னடையாத பாலிக்குள்ளன் தனது மரக்கலங்களிரண்டை யும் வலது பக்கம் செலுத்தினான்.

இப்படிக் கடல்புறாவை நோக்கி எதிர்க் கரையிலிருந்து நகர்ந்த எதிரி மரக்கலங்களிரண்டையும் பாலிக்குள்ளன் தடை செய்துவிடவே, அந்தப் பகுதியிலிருந்து தனக்கு உதவி கிடைக்காதென்பதை உணர்ந்து கொண்ட விஜயசந்திரன் அமிழத் தொடங்கிய மரக்கலத்திலிருந்து நூலேணியில் இறங்கி, தனது இன்னொரு மரக்கலத்திற்குச் சென்று அலை செல்லும் பாதையில் வேகத்துடனேயே செலுத்தினான். அப்படிச் செலுத்தினால்தான் கடல்புறாவிலிருந்து நன்றாக விலகிச் சென்றுவிடலாமென்பதையும் பக்கவாட்டில் இடது புறம் நகரும் கடல் புறாவை மீண்டும் அலை மார்க்கத்தில் கொண்டு வர நேரம் பிடிக்கும் என்பதையும் தீர்மானித்துக் கொண்ட விஜயசந்திரன் அப்படிப் பின்னடைந்து தீப்பந்தங்களை வீசுவது எளிதென்று முடிவு செய்தான். அது மட்டுமல்ல, தன்னிடமுள்ள தீப்பந்தங்கள் எதிரியிடமிருக்கக் காரணமில்லை என்பதையும் அவன் உணர்ந்தேயிருந்தான்.

உண்மையில் அத்தனை பெரிய தீப்பந்தங்கள் இளைய பல்லவனிடம் இல்லை. சீறி வரும் அந்தச் சீனத்து வாணப் பந்தங்கள் ஸ்ரி விஜயத்திடம் இருப்பதை இளையபல்லவன் அறிந்திருந்தாலும் அந்தப் பந்தங்கள் மலையூர் பகுதியிலேயே கையாளப்படுமென்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. அவற்றைச் சேகரித்து வந்த ஸ்ரி விஜய சக்கரவர்த்தி அதைத் தனது கடைசி அஸ்திரமாக வைத்திருப்பானென்றே எண்ணினான். ஆகவே அந்தப் பந்தத்தை ஜம்பியின் முகத்துவாரத்திலேயே எதிர்நோக்கும் அவசியம் நேரிட்டதும் அவன் ஓரளவு திணறிப் போனான்.

விஜயசந்திரன் வீசிய நெருப்புப் பந்தம் இரவிலேயே கதிரவனுதித்து இளைய பல்லவனை அழிக்க வருவது போல் மிகப் பயங்கரமாகக் கடல்புறாவை நோக்கி வந்தது. அதனிடமிருந்து தப்ப இளைய பல்லவன் எத்தனையோ முயன்றும் முடியாமல் போயிற்று. பந்தம் வெகு வேகமாக வந்ததால் கடல்புறாவின் தளத்தில் விழுந்த பின்பும் அதில் கலந்திருந்த மருந்து பெரிதாக எரிந்து தன்னை அண்ட முடியாதபடி கனலைக் கக்கியதால் அந்தப் பக்கத்திலிருந்த மாலுமிகள் அதை அணைக்க விரைந்தனர். அணைப்பதற்குள் தளத்தில் ஒரு பகுதியைக் கருக்கிவிட்டது அந்தப் பந்தம். அதை அணைத்ததும் மற்றொரு பந்தம் கடல் புறாவை நோக்கிப் பறந்து வந்தது.

இரண்டாவது பந்தத்தை நோக்கிய இளையபல்லவன் அப்படிப் பந்தங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தால் அதை அணைக்கும் வேலையே தனக்குச் சரியாயிருக்கும் என்பதையும், தொடர்ச்சியாக நான்கு பந்தங்கள் விழுந்தால் தளத்தின் பெரும் பகுதி தீக்கிரையாகி மரங்கள் வெடிக்கத் தொடங்கிவிடுமென்பதையும் உணர்ந்ததால், அவன் முகத்தில் கவலை பாய்ந்தது. சித்தத்தில் சிந்தனை வேகமாக ஓடியது. திடீரென ஒரு முடிவுக்கு வந்த இளையபல்லவன், “சீக்கிரம் அலைபுகும் வழிக்கு மரக்கலத்தைச் செலுத்துங்கள்.

எதிரி மரக்கலத்துடன் அலை வேகத்திலேயே சென்று கடல்புறா மோதட்டும்” என்று மாலுமிகளை நோக்கிக் கூவினான். மாலுமிகளுக்கு இந்த உத்தரவு பெரும் வியப்பைத் தந்தது. பெரும் தீப்பந்தங்கள் வீசும் எதிரி மரக்கலத்தை நோக்கிக் கடல்புறா தானாகச் செல்வது சுய அழிவுக்கு அடிகோலுவதாகும் என எண்ணிய மாலுமிகள் பயத்தையும் வியப்பையும் ஒருங்கே அடைந்தாலும், போரில் இளையபல்லவன் எந்த உத்தரவையிட்டாலும் அடிபணிய வேண்டிய கடமையை முன்னிட்டு அவன் உத்தரவுப்படி கடல்புறாவின் துடுப்புக் களைத் துழாவி அலை வேகமாக நதிக்குள் பாய்ந்து கொண்டிருந்த இடத்துக்குக் கடல்புறாவைக் கொண்டு வந்தார்கள். இதுவும் விஜயசந்திரனுக்கு விந்தையாயிருந்தது. இத்தனை துரிதமாகக் கடல்புறாவை அலை மார்க்கத்துக்குக் கொண்டுவர முடியுமென்று அவன் நினைக்கவேயில்லை.

அடுத்த சில நிமிஷங்களில் கடல்புறா பெரும் அலைகளில் தாவித் தாவி விஜயசந்திரன் மரக்கலத்தை நோக்கி வெகு வேகமாகச் சென்றது. இந்தப் புதுப் போர் முறையைக் கவனித்த விஜயசந்திரன் ஒரு விநாடிதான் பிரமித்தான். இளையபல்லவன் எதற்காகத் தானாக அழிவைத் தேடுகிறான் என்பது முதலில் தெரியவில்லை அவனுக்கு. ஆனால் அடுத்த விநாடி இளையபல்லவன் ஏற்பாட்டின் கருத்தை அறிந்து கொள்ளவே பெரிதும் திகைத்தான். தான் வீசிய இரண்டொரு நெருப்புப் பந்தங்கள் கடல்புறாவின் தளத்தில் விழுந்து எரிந்து கொண்டிருந்தும் அதை லட்சியம் செய்யாமல் தன்னை நோக்கி வந்துகொண்டிருந்த அந்த அசுரப் பறவை மட்டும் தனது மரக்கலத்தின்மீது மோதினால் பழையபடி தனது மரக் கலத்தின் அடிப்பாகம் பிளக்கப்பட்டு, தனது இரண்டாவது மரக்கலமும் மூழ்கிவிடுமென்பதைப் புரிந்துகொண்ட விஜய சந்திரன் தனது மரக்கலத்தின் பாய்களை ஏற்றுமாறு உத்தர விட்டான். பாய்கள் விரிந்தால் வடமேற்குப் பருவக்காற்று தன்னை நதிக்குள் வெகு தூரம் கொண்டுபோய் விடுமென்றும் அதனால் இளையபல்லவனின் தாக்குதலில் இருந்து தப்பலா மென்றும் தீர்மானித்தான் விஜயசந்திரன்.

ஆனால் அதற்கு இடங்கொடுக்காத இளையபல்லவன் எதிரி மரக்கலத்தில் பாய் கிளம்பத் தொடங்கிய உடனேயே அந்தப் பாய்களின் மீது எரியம்புகள் வீசக் கட்டளையிட்டான் தனது மாலுமிகளுக்கு. அடுத்த சில விநாடிகளில் விஜய சந்திரன் பாய் ஒன்று பற்றி எரிந்தது. அதையடுத்த சில நிமிஷங் களில் கடல்புறா ஒரு பக்கம் திரும்பியது. அதன் இறகு உயர்ந்தது. அடியிலிருந்த ஈட்டிகள் விஜயசந்திரன் மரக் கலத்தின் அடிப்பாகத்தை வெகு வேகமாகப் பிளந்தன.

இந்தப் பயங்கரப் போரை, இளையபல்லவனுடைய துணிகரத் தாக்குதலைத் தூரத்திலிருந்து கவனித்த அமீரும் கண்டியத் தேவனும் பிரமித்துத் தளத்தில் நின்றிருந்தார்கள். பெரும் தீப்பந்தங்களை எதிர்த்துத் தளத்தில் வாங்கிக் கொண்ட. சேதத்தைக்கூட லட்சியம் செய்யாமல் கடல் புறா வெகு வேகமாக அலைகளில் சென்று எதிரி மரக்கலத்துடன் இணைந்துவிட்டதையும், இடையே வீசப்பட்ட எரியம்புகளால் எதிரி மரக்கலப் பாய்களும் எதிரி வீசிய தீப்பந்தங் களால் கடல் புறா தளத்தின் ஒரு பகுதியும் எரிந்து கொண்டிருந்ததையும் கண்ட அமீர், இளையபல்லவன் மரம் வெடிக்கக்கூடியதையும் அசட்டை செய்து தற்காப்பு வேலையில்கூட ஈடுபடாமல் எதிரியைத் தாக்கிவிட்டதை எண்ணி வியந்தான். அத்தனை வியப்பிலும் ஒன்று திட்ட மாகப் புரிந்துவிட்டது அவனுக்கு. அதற்குமேல் அதிக நேரம் போர் நடக்காது என்பதுதான் அது.

அமீரின் ஊகம் சரியாகவே இருந்தது. ஏற்கெனவே ஒரு மரக்கலம் அமிழ்ந்துகொண்டிருந்ததாலும் அதே வகையில் தங்கள் மரக்கலமொன்று மறுபடியும் பிளக்கப்பட்டதாலும் பீதியடைந்த விஜயசந்திரன் மாலுமிகள் பெரும் பீதியுடன் தளத்தில் நாலாபக்கமும் ஓடத் துவங்கினார்கள். சிலர் பக்கப் பலகைகள் மீது ஏறி நதியில் குதித்து நீந்தித் தப்ப முயன்றார்கள். நின்று போரிட்ட சிலர் இளையபல்லவன் மாலுமிகளால் கொல்லப்பட்டார்கள். அத்தனைக்கும் அசங்காமலும் தளத்தை விட்டு நகராமலும் தன் வாளை எடுத்துப் போரிட்டுக் கொண்டிருந்த விஜயசந்திரன் தன்னைச் சுற்றிலும் ஏற்பட்டுக்கொண்டிருந்த நாசத்தைக் கண்டு பயத்துக்குப் பதில் சினமே கொண்டான். அந்தச் சினத்தின் விளைவாக இளையபல்லவனின் மாலுமிகளுடன் பலமாகப் போரிடவும் முற்பட்டான். அவனைத் தனியாகப் பத்துப் பதினைந்து மாலுமிகள் வளைத்துக் கொண்டார்கள்.

அவர்களை வெகு அலட்சியமாகப் பார்த்துச் சிரித்து வாளை வீசிய விஜயசந்திரன் தனக்கு மரணம் சம்பவிக்க அதிக நேர மில்லை என்பதை உணர்ந்தான். அவனைச் சூழ்ந்திருந்தவர்கள் அவனை வெட்டிப்போட நெருங்கினார்கள். “நில்லுங்கள்” என்ற இளையபல்லவன் சொல் அவர்கள் பழிச்செயலை நிறுத்தியது.

மாலுமிகளை விலக்கிக் கொண்டு விஜயசந்திரனை நோக்கிய இளையபல்லவன், “மாபெரும் வீரனை நான் அழிக்க விரும்பவில்லை. ஆகவே ஸ்ரி விஜயத்தின் படைத்தலைவர் வாளை உறையில் போட்டுவிடுவது நல்லது,” என்றான்.

“மடிய எனக்குப் பயமில்லை,” என்றான் விஜயசந்திரன் அப்பொழுதும்.

“வீரனை அழிக்க எனக்கு விருப்பமில்லை. தயவு செய்யுங்கள். கத்தியை இப்படிக் கொடுங்கள்” என்ற இளைய பல்லவன் தனது கையை நீட்டிக்கொண்டு விஜயசந்திரனை அணுகினான்.

விஜயசந்திரனின் கூரிய விழிகள் இளையபல்லவனை ஏறிட்டு நோக்கின. பிறகு நதிப் பிராந்தியத்தை ஒருமுறை வளைத்துப் பார்த்தன. பிறகு பெருமூச்சு விட்ட விஜயசந்திரன் ஏதும் பேசாமல் தனது வாளை நீட்டினான் இளைய பல்லவனிடம். வாளைப் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்த இளையபல்லவன் விஜயசந்திரனையும் அழைத்துக்கொண்டு விஜயசந்திரன் மரக்கலத்தைத் தொட்டு நின்ற கடல்புறாவின் இறக்கையில் ஏறி நடந்து கடல்புறாவின் தளத்தை அடைந்தான். விஜயசந்திரன் அந்த மரக்கலத்தை மிகுந்த ஆச்சரியத்துடன் நோக்கினான். அதன் தளத்திலிருந்த பல உருளைகளிலிருந்தும் ஆப்புகளிலிருந்தும் அதில் நூதன யந்திர வசதிகள் நிரம்ப இருப்பதை உணர்ந்தான். அத்தகைய மரக் கலத்தில் சில பகுதிகளையாவது தான் தீய்த்துவிட்டதை எண்ணிச் சற்றுப் பெருமையும் கொண்டான் விஜயசந்திரன்.

அவன் கண்கள் சென்ற திக்குகளை நோக்கிய இளைய பல்லவன், ஆம் படைத்தலைவரே! போர் அநேகமாக முடிந்து விட்டது. அதோ பாலிநாட்டு மாலுமி உங்கள் மீதி மரக் கலங்களையும் கைப்பற்றியாயிற்று. ஆனால் என்னைப்போல் அத்தனை கடுமையல்ல என் உபதலைவன் நிலை” என்று கூறிப் புன்முறுவல் பூத்தான்.

“உங்கள் நிலையிலும் பெரும் கடுமை ஏதுமில்லை” என்றான் விஜயசந்திரன் சற்று தூரத்தே பாய்ச்சீலை பற்றி எரிந்து அமிழ்ந்து கொண்டிருந்த தனது மரக்கலத்தை நோக்கி.

“அப்படிச் சொல்லாதீர்கள். இந்தக் கடல்புறாவை நீங்கள் கருக்கிய அளவுக்கு இதுவரை யாரும் கருக்கியதில்லை ” என்றான் இளையபல்லவன்.

இந்தப் பாராட்டுதலால் விஜயசந்திரன் திருப்தியடைவா னென்று எதிர்பார்த்ததால் இளையபல்லவன் ஏமாந்தே போனான். “கருக்கியதில் என்ன பெருமையிருக்கிறது? இந்தப் பந்தங்களுக்குத் தப்பிப் பிழைத்த மரக்கலங்கள் இதுவரை கிடையாது. தவிர தோல்வி தோல்விதானே” என்றான் விஜயசந்திரன் அருவருப்புடன்.

அந்த மகாவீரனை நோக்கிய இளையபல்லவன் கண் களில் அனுதாபம் வீழ்ந்தது. “படைத்தலைவர் சொல்வது தவறு. தோல்வியெல்லாம் தோல்வியல்ல. வெற்றியெல்லாம் வெற்றியுமல்ல. உங்கள் தோல்வியும் ஒருவகை வெற்றிதான்” என்றும் கூறினான் இளையபல்லவன்.

“எப்படி வெற்றி ஆகும் அது?” விஜயசந்திரன் கேள்வியில் வெறுப்பிருந்தது.

“இதுவரை நான் பல போர்களில் ஈடுபட்டிருக்கிறேன். “

“கேள்விப்பட்டிருக்கிறேன். “

“ஆனால் இதுவரை நான் எந்த எதிரியைக் கண்டும் திகைத்ததில்லை. “

“அப்படியா!”

“ஆம். முதன் முதலில் உங்களைக் கண்டுதான் திகைத்தேன். ஒரு விநாடி கடல்புறா அழிந்துவிடுமோ என்று கூடக் கலங்கினேன். இதுவே உங்களுக்குப் பெருவெற்றி” என்று கூறிய இளையபல்லவன் இரண்டு மாலுமிகளை விளித்து விஜயசந்திரனை அக்ரமந்திரத்துக்கு அழைத்துச் செல்ல உத்தர விட்டான். மாலுமிகளுக்கிடையே விஜயசந்திரன் சென்றதும் தளத்தில் அப்பொழுது கனிந்துகொண்டிருந்த தீப்பந்தங்களின் நெருப்பை அணைப்பதிலும் மீண்டும் தனது மரக்கலங்களை ஒன்று சேர்ப்பதிலும் முனைந்த இளையபல்லவன் பாலிக்குள்ளனின் மரக்கலங்களிரண்டையும் நோக்கினான்.

அந்த இரண்டு மரக்கலங்களின் தாக்குதலைத் தாங்க முடியவில்லை எதிரி மரக்கலங்களால். தங்கள் தலைவனிருந்த மரக்கலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அமிழ்ந்து விட்டதாலேயே குழம்பிப்போன ஸ்ரி விஜய மாலுமிகள் இரண்டு மூன்று நாழிகைகளே போரிட்டனர். பிறகு மரக்கலங்களை விட்டு நீரில் குதித்துத் தப்ப முயன்றனர். இளையபல்லவன் உத்தரவு திட்டமாய் இருந்ததால் அவர்களை யாரும் தடை செய்யவோ கொல்லவோ முன்வரவில்லை. எதிரி மரக்கலங்கள் இரண்டையும் கைப்பற்றிய பாலிக்குள்ளன் தனது மாலுமிகளில் சிலரை அவற்றில் ஏவி அவற்றை நடத்திக் கொணர உத்தரவிட்டான். பிறகு தளத்துக்கு வந்து பெரும் பந்த மொன்றை எடுத்துக் கடல்புறாவை நோக்கி ஆட்டினான்.

இளையபல்லவனும் இரண்டு பந்தங்களைக் கையி லெடுத்துக் கொண்டு முதலில் பாலிக்குள்ளனையும், பிறகு அவனுக்குப் பின்னால் நதிக்குள் நுழைந்துவிட்ட அமீர், கண்டியத்தேவன் இருவரிருந்த மரக்கலங்களையும் நோக்கி பலபடி பந்தங்களை ஆட்டி என்ன செய்ய வேண்டுமென்பதை அறிவுறுத்தினான். பந்தங்களால் படைத்தலைவன் செய்த சைகையை அனுசரித்து மரக்கலங்கள் இயக்கப்படவே அடுத்த அரை ஜாமத்திற்குள் கடல்புறாவும், கடல் புறாவைச் சேர்ந்த நான்கு மரக்கலங்களும், பிடிபட்ட இரு எதிரி மரக்கலங்களும் அணிவகுத்து நதிக்குள் சென்றன.

இப்படி சுமார் ஒரு ஜாம நேரம் பயணம் செய்ததும் எல்லா மரக்கலங்களையும் நதியின் வலக்கரைக்கு வந்து நங்கூரம் பாய்ச்ச உத்தரவிட்ட இளைய பல்லவன் கடல் புறாவின் நங்கூரத்தையும் நதிக்குள் இறக்கினான். எல்லா மரக்கலங்களும் நிலைத்து நின்றதும் மாலுமியொருவனைப் படகில் அனுப்பி, தனது படைத் தலைவர்களை அக்ரமந்திரத்திற்கு வரவழைத்தான். அவர்கள் வந்ததும், விஜயசந்திரனை அவர்களுக்கு அறிமுகப்படுத்திய இளையபல்லவன் விஜயசந்திரனை நோக்கி, “படைத் தலைவரே! போர் முடிந்துவிட்டது. அடுத்த ஏற்பாட்டை நான் கவனிக்க வேண்டும்” என்றான்.

“என்ன ஏற்பாடு?” விஜயசந்திரன் குரலில் வியப்பிருந்தது.

“மலையூர் எங்கள் கைவசமாக வேண்டும். “
“நல்ல எண்ணம்தான். அதற்கு என்னை ஏன் கேட்கிறீர்கள்?”

“உங்கள் உதவி அதற்குத் தேவை. “

விஜயசந்திரன் புருவங்கள் ஆச்சரியத்தால் உயர்ந்தன. “என் உதவியா?” என்ற கேள்வியில் வியப்பின் உச்சநிலை தெரிந்தது.

“ஆம். ” திட்டமாக வந்தது இளையபல்லவன் பதில்.

“எதிரி உதவியா!”

“ஆம்!”

இளையபல்லவன் விளக்கினான். அதை விளக்க முற்பட்டவுடனேயே சினத்தின் வசப்பட்ட விஜயசந்திரன் இளையபல்லவன் முடித்ததும், பிரமித்துப் பல விநாடிகள் ஏதும் பேசாமல் உட்கார்ந்து விட்டான். திட்டம் அத்தனை விபரீதமாயிருந்தது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch53 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch55 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here