Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch55 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch55 | Sandilyan | TamilNovel.in

120
0
Read Kadal Pura Part 3 Ch55 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch55 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch55 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 55 : மலையூர்க் கோட்டையில்….

Read Kadal Pura Part 3 Ch55 | Sandilyan | TamilNovel.in

நதியின் ஒரு புறத்தில் நங்கூரங்களைப் பாய்ச்சி மரக் கலங்களை நிறுத்தி வைத்த இளையபல்லவன் மலையூரைக் கைப்பற்ற தன் உதவியை நாடியதும் ஒருகணம் வியப்பெய்திய விஜயசந்திரன், தனது அருகில் அக்ரமந்திரத்தில் அமர்ந்திருந்த ஸ்ரி விஜயத்தின் எதிரியையும் அங்கு வரவழைக்கப்பட்ட அவன் உபதலைவர்களையும் ஒருமுறை தனது கண்களால் நோக்கினான். இளையபல்லவன் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே அவர்களின் பெயர்களைக் கேள்விப்பட்டிருந்த விஜய சந்திரன் அவர்களை நேருக்கு நேர் பார்த்ததும் அவர்கள் திறமையைப் பற்றி உலாவிய செய்தியில் பொய் எதுவுமில்லை என்பதைத் தீர்மானித்துக் கொண்டான். ஒரு ஜாமத்துக்கு முன்பு நடந்த ஜம்பிநதிப் போரில் இளையபல்லவன் திறமையை அவன் நேரில் அனுபவித்து விட்டதால் அவன் போர்த் திறமையைப் பற்றிய செய்திகளும் முழு உண்மை என்பதை உணர்ந்துகொண்ட ஸ்ரி விஜயத்தின் கடற்படைத் தளபதி, ‘இத்தகைய ஒரு சேர்க்கையைக் கொண்டு எந்த இடத்தைக் கைப்பற்றுவதும் பிரமாதமில்லை’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

இளையபல்லவனும் அவன் உபதலைவர்களும் தனக்குக் காட்டிய மரியாதை மட்டும் அவனுக்குப் புதிராயிருந்தது. அவர்களைப் பற்றிய கொடுமையான கதைகளையே அவன் கேட்டிருந்தான். மாநக்காவரத்தில் கங்கதேவன் கொல்லப் பட்டதைப் பற்றி வீண் புரளிகள் பல கிளம்பியிருந்தன ஸ்ரி விஜயத்தின் கடற்பகுதிகளில். அந்தப் புரளிகள் எத்தனை ஆதாரமற்றவை என்பதையும் இளையபல்லவன் கூட்டம் எத்தனை கண்ணியம் வாய்ந்தது என்பதையும் அந்த ஒரு ஜாமத்தில் புரிந்துகொண்ட விஜயசந்திரன் மனத்தில், சிறைப்பட்டிருந்த சமயத்திலும் சந்துஷ்டியே நிலவிக் கிடந்தது. அதன் விளைவாக அவன் வெகு தெளிவாகச் சிந்திக்கவும் பேசவும் முடிந்தது. ஆகவே இளையபல்லவன் மலையூரைப் பிடிக்க தனது உதவியைக் கேட்டதும் பெருவியப்புடன் அவனை நோக்கிய விஜயசந்திரன், “எதிரியின் உதவியை நீங்கள் நாடுவது எனக்கு வியப்பைத் தருகிறது” என்று கூறினான். அத்துடன் தொடர்ந்து கேட்கவும் செய்தான், “என்ன உதவியை என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று.

இளையபல்லவன் சொன்ன முதல் பதிலே விஜய சந்திரனைத் திக்குமுக்காட வைத்தது. அடுத்து வந்த விவரங்கள் அவன் திகைப்பை உச்சநிலைக்குக் கொண்டு போயின. விஜயசந்திரன் கேட்ட கேள்விக்கு, “நீங்கள் எங்களுக்குத் தலைவராக வேண்டும்,” என்று பதில் கூறினான் முதன் முதலாக இளையபல்லவன்.

இந்தப் பதிலைக் கேட்ட விஜயசந்திரனுடைய உணர்ச்சிகள் குலுங்கின. “என்ன! இன்னொரு முறை சொல்லுங்கள்” என்று கேட்டான் அவன்.

“நீங்கள் எங்களுக்குத் தலைவராக வேண்டும். ” வெகு நிதானமாகவும் சகஜமாகவும் அதே பதிலைத் திருப்பினான் இளையபல்லவன்.

இளையபல்லவன் வார்த்தையில் ஏதோ சூதிருக்கிற தென்பதை விஜயசந்திரன் நொடிப் பொழுதில் புரிந்து கொண்டானே யொழிய அது என்ன என்பது அவனுக்குத் திட்டமாகத் தெரியாததால், “நான் உங்களுக்குத் தலைவனாக வேண்டுமா? எதற்கு?” என்று வினவினான் சந்தேகத்துடன்.

“மலையூரைப் பிடிக்க,” என்று உணர்த்தினான் இளைய பல்லவன்.

“மலையூரை என்னைப் பிடித்துக் கொடுக்கச் சொல் கிறீர்களா?” விஜயசந்திரன் சொற்களில் வியப்பு நன்றாக ஒலித்தது.

“கிட்டத்தட்ட என் திட்டம் அதுதான்,” என்றான் இளையபல்லவன்.

“கிட்டத்தட்ட என்றால்?” விஜயசந்திரன் மெள்ளக் குழம்பினான்.

“நீங்கள் தலைவராக வேண்டியதில்லை. தலைவராக நடித்தால் போதும்” என்று கூறினான் இளையபல்லவன்.

விஜயசந்திரனுக்கும் விஷயம் ஓரளவு விளங்கிவிட்டது. தன்னை உபயோகப்படுத்தி மலையூரைப் பிடிக்க இளைய பல்லவன் ஏதோ திட்டம் தயாரித்திருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்ட அவன், அது என்ன என்பதை அறிந்து கொள்ளக் கேட்டான், “தலைவனாக நடித்தால் போதுமா?” என்று.

“ஆம், நடித்தால் போதும். மீதி விஷயங்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். “
“மீதி விஷயங்கள் எவை?”

“கோட்டையிலுள்ள வீரரை வெளிப்படுத்துவது, கோட்டையைப் பிடிப்பது முதலியன. “

“கோட்டையிலுள்ள வீரரை என் உதவி கொண்டு வெளிப்படுத்தி, கோட்டையைப் பாதுகாப்பின்றிச் செய்து பிடித்துவிடத் திட்டமா?”

“ஆம். “

இதைக்கேட்ட விஜயசந்திரன் சற்று ஆலோசித்தான். “சரி! உங்கள் திட்டத்தைச் சொல்லுங்கள் பார்ப்போம்,” என்றான்.

“சொல்கிறேன் கேளுங்கள்! தளபதி அவர்களே,” என்று விஜயசந்திரனை நோக்கிக் கூறிய படைத்தலைவன், தனது உபதலைவர்களையும் நோக்கி, “நீங்களும் கவனமாய்க் கேளுங்கள்,” என்று சொல்லிவிட்டுத் திட்டத்தை விவரிக்க முற்பட்டான்…

“தளபதி அவர்களே! இப்பொழுது மூன்றாம் ஜாமம் துவங்கியிருக்கிறது. இப்பொழுது நாம் பயணத்தைத் துவங்கி னாலும் மலையூரை கதிரவன் கிளம்பி இரண்டு நாழிகைகள் கழித்துத்தான் அடையலாம். நல்ல வெளிச்சத்தில் எனது மரக்கலங்கள் மலையூருக்கு முன்பு நின்றால் மலையூர் மக்கள் கலவரப்படுவார்கள். எனக்குத்தான் கொள்ளைக்காரனென்று பட்டம் இருக்கிறதே. ஆகையால் மக்கள் கலவரப்பட்டால் அதிக வியப்புமில்லை. ஆனால் அங்கு நான் கலவரத்தையோ குழப்பத்தையோ விளைவிக்க விரும்பவில்லை. மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த மரக்கலங்களின் வருகையை வரவேற்க வேண்டும். புரிகிறதா?” என்று வினவினான் இளைய பல்லவன்.

விஜயசந்திரனுக்கு அந்த ஜாலவித்தை எப்படி சாத்தியம் என்று விளங்கவில்லை . கடல் புறாவைப் பற்றியும் இளைய பல்லவனைப் பற்றியும் கேள்விப்படாதவர்கள் அந்தப் பகுதியில் யாருமே இல்லை என்பதை அவன் உணர்ந் திருந்தான். ஆகவே கேட்டான், “அதற்கு எந்த மந்திரத்தை உபயோகப்படுத்துவது?” என்று, இகழ்ச்சி குரலில் தொனிக்க.

“மந்திரம் தேவையில்லை. மாயம் இருந்தால் போதும்” என்று கூறினான் இளையபல்லவன் அர்த்தபுஷ்டியுடன் தளபதியை நோக்கி.

“மாயமா?”

“ஆம். மாயம். மாயமென்றால் எது தெரியுமல்லவா?”

“சொல்லுங்கள். “

“இல்லாததை இருப்பதுபோல் காட்டுவது. “

“எது இல்லாதது? எதை இருப்பதுபோல் காட்ட வேண்டும்?”

இளையபல்லவன் தனது ஆசனத்திலிருந்து எழுந்தான். பிறகு மெள்ள விஜயசந்திரன் புத்தியில் உறையும்படியாக ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரிக்கத் தொடங்கி, “நடந்த

போரின் முடிவை” என்று அழுத்திச் சொன்னான் இளைய பல்லவன்.

விஜயசந்திரனுக்கு அப்பொழுதும் விளங்கவில்லை. “போரின் முடிவையா?” என்று வினவினான் குழப்பத்துடன்.

“விஜயசந்திரரே! போரில் நாங்கள் வெற்றி பெற்றோம். நீர் தோல்வியுற்றீர். இதுதான் முடிவு. அதைச் சிறிது மாற்றிக் கொண்டால் என்ன?”

“மலையூர் புகும்போது நீர் வெற்றி வீரராகவும், நாங்கள் தோற்றதாகவும் மாறினாலென்ன?”

இதைக்கேட்ட விஜயசந்திரனுக்கு மெள்ள மெள்ள இளையபல்லவன் திட்டம் விளங்கலாயிற்று. இருப்பினும் முழு விவரங்களை அறிந்துகொள்ள விரும்பி, “ஓரளவு புரிகிறது எனக்கு. வெற்றி பெற்றது நானென்றால் மக்கள் மகிழ்வார்கள். கோட்டைப் பாதுகாப்பில் வீரர்களுக்கும் அசட்டை இருக்கும். அந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறீர்கள். ஆனால் அது சாத்தியமல்ல” என்றான்.

“ஏன் சாத்தியமில்லை” என்று வினவினான் இளைய பல்லவன்.

“முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியாது. “

“பூசணிக்காயில்லாமல் சிறு பிஞ்சாயிருந்தால்?”

“பிஞ்சல்ல, முழுப் பூசணிக்காய்தான் அது. “

“எதைச் சொல்கிறீர்கள்?”

“அந்தக் கடல் புறாவைத்தான்” என்று கூறிய விஜய சந்திரனும் ஆசனத்திலிருந்து எழுந்து இளையபல்லவன் எதிரில் நின்றுகொண்டும் அறையில் உலாவிக் கொண்டும் பேசினான்: “இளையபல்லவரே! நீங்கள் நினைக்கும் திட்டம் நிறைவேற முடியும். ஆனால் அதற்கு மூன்று இடையூறுகள் இருக்கின்றன. முதல் இடையூறு கடல் புறா, இரண்டாவது இடையூறு நீங்கள், மூன்றாவது உங்கள் உபதலைவர்கள். கடல் புறாவின் அமைப்பு, திறமை இவற்றைப் பற்றியும் உங்கள் அங்க அமைப்பு, அமீர், கண்டியத்தேவன் இருவரைப் பற்றியும் விவரங்கள் ஆகிய எல்லாம் அவ்வப்பொழுது வரும் வணிகர் மூலமாகவும் உங்களால் விடுதலை செய்யப்பட்ட சில மாலுமிகள் மூலமாகவும் ஸ்ரி விஜயத்தின் சக்கரவர்த்திக்குத் தெரிந்திருக்கிறது: அவற்றை அவர் பறையறைவிப்பவர்களைக் கொண்டு ஸ்ரி விஜயத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் பறையறைவித்திருக்கிறார். ஆகவே உங்கள் மூவரையும் அனைவருக்கும் தெரியும். உங்களை மறைத்தாலும் ராட்சதப் பறவை போலிருக்கும் இந்தப் போர்க்கப்பலை மறைப்பது நடவாது. இதைப் பார்த்ததும் யார் வந்திருப்பது என்பது மக்களுக்குத் தெரியும். கோட்டை வீரர்களுக்கும் தெரியும். “

விஜயசந்திரனின் இந்த விவரணத்துக்குப் பின் அந்த அறையில் சிறிது நேரம் மெளனம் நிலவியது. அமீர் கூடச் சங்கடத்தால் அசைந்தான். “தளபதி சொல்வதில் பொருளிருக் கிறது” என்று கண்டியத்தேவனும் கூறினான்.
இளையபல்லவன் முகத்தில் மட்டும் அந்த விவரம் எந்த மாறுதலையும் விளைவிக்கவில்லை. அவன் தளபதிக்குச் சொன்ன பதிலில் தெளிவும் உறுதியும் தொனித்தன. “இதெல்லாம் நான் ஏற்கெனவே அறிந்தவை. ஓர் எதிரியைப் பற்றி இன்னொரு எதிரி அறிந்துகொள்ள முயல்வதில் வியப்பென்ன இருக்கிறது? அதுவும் கடற் பிராந்தியத்தில் பெரும் சாகஸக் காரியங்களைச் செய்திருக்கும் கடல் புறாவைப் பற்றி அறிந்திருப்பதிலும் ஆச்சரியமில்லை . ஆனால் எது ஆச்சரியம்? எது மக்களைப் பிரமிக்கச் செய்யும்? ஒரே ஒரு விளைவு” என்ற இளையபல்லவன் விஜயசந்திரனை நோக்கினான்.

“என்ன விளைவு?” விஜயசந்திரன் குரலில் முதலில் இருந்த திடமில்லை.

“அத்தகைய கடல் புறாவையே ஸ்ரி விஜயத்தின் தளபதி கைப்பற்றியிருந்தால் அதன் பெருமை எத்தனை?” என்று வினவினான் இளையபல்லவன்.

விஜயசந்திரன் வியப்பினால், “என்ன? கடல் புறாவையா? நான் கைப்பற்றினேனா?” என்று கேட்டு வாயைப் பிளந்து கொண்டு சில விநாடிகள் நின்று விட்டான்.

இளையபல்லவன் மேலும் சொன்னான்: “இந்தச் சம்பவம் உங்களுக்கே பிரமிப்பாயிருக்கிறதல்லவா? அப்படியானால் மலையூர்வாசிகளுக்கு எத்தனை பிரமிப்பாயிருக்கும்? அந்தப் பிரமிப்பை நீங்கள் அளிக்கவேண்டும். கடல் புறாவின்மீது ஸ்ரி விஜயத்தின் கொடி ஏற்றப்படும். மற்ற மரக்கலங்களிலும் அதே கொடி பறக்கும். முதலில் அமீர், கண்டியத்தேவனின் மரக்கலங்களிரண்டும், அவற்றிற்குப் பின்னால் கடல் புறாவும், அதற்குப் பின்னால் பாலி மாலுமி மரக்கலங்களிரண்டும், அவற்றுக்கும் பின்னால் கடைசியாக உங்களுடைய மரக் கலங்கள் இரண்டும் வர, நாம் மலையூரை அடைவோம். அங்கு நதியின் ஆழமான பகுதியில் நங்கூரம் பாய்ச்சி மரக்கலங்களை நிறுத்துவோம்.

நீங்கள் ஜம்பி முகத்துவாரத்தில் போரிட்டு என்னை முறியடித்து எனது மரக்கலங்களிரண்டை மூழ்கடித்து, கடல் புறாவையும் பிடித்து வந்திருப்பதாகக் கோட்டைத் தலைவருக்கு ஓலை எழுதி அனுப்புங்கள். கோட்டைத் தலைவன் வந்து உங்களைக் கடல் புறாவில் சந்திக்கட்டும். இங்கு தீப்பிடித்திருக்கும் பகுதிகளைப் பார்த்தால் அதைக் கோட்டைத் தலைவரும் நம்புவார். நீங்கள் இளையபல்லவனின் பெரும் பொக்கிஷத்தைக் கைப்பற்றியிருப்பதாகவும் கூறுங்கள். அமீரும், கண்டியத்தேவரும் இருக்கும் மரக்கலங்களில் நிரம்பச் செல்வம் இருக்கிறது. அதை வேண்டுமானாலும் கோட்டைத் தலைவனுக்குக் காட்டலாம். இதுவரை நீங்கள் செய்தால் போதும். மீதியை நான் கவனித்துக் கொள்கிறேன். “

இளையபல்லவன் திட்டத்தைக் கேட்ட விஜய சந்திரனுக்கு அடுத்து இளையபல்லவன் என்ன செய்யப் போகிறானென்று விளங்காததால், “அடுத்து என்ன செய்ய உத்தேசம்!” என்று வினவினான்.

“அது என் இஷ்டம்” என்றான் இளையபல்லவன்.

“உங்களிஷ்டத்துக்கு நான் இணங்க மறுத்தால்?”

“ஸ்ரி விஜயம் தனது சிறந்த படைத்தலைவனை இழக்கும். “

இதைக் கேட்டதும் இளையபல்லவனை அலட்சியத் துடன் நோக்கிய விஜயசந்திரன், “நான் மரணத்துக்குப் பயப்படுவேனென்று நினைக்கிறாயா?” என்று வினவினான். கோபத்தில் மரியாதையைக் கைவிட்டுப் பேசினான்.

“இல்லை. மரணம் சாதாரணமானது. அதை அடையும் முறைகளையும் கவனிக்க வேண்டும்” என்று கூறிய இளைய பல்லவன் குரலில் விபரீதத் தொனி இருந்தது.

அதைக்கேட்ட விஜயசந்திரன் உடலில் சிறிது நடுக்கம் ஊடுருவிச் சென்றது. “என் நாட்டைக் காட்டிக் கொடுக்க உதவச் சொல்கிறாய். இது நாணயமானவன் செய்யக் கூடியதல்ல” என்ற விஜயசந்திரன் முகத்தில் அந்த நடுக்கத்துடன் கோபமும் இணைந்து உச்சநிலைக்குச் சென்றதற்கான அறிகுறி இருந்தது.

“அந்தப் பெயர் உங்களுக்கு வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று இளையபல்லவன் உறுதி கூறினான். அத்துடன் கூறினான், “என் திட்டப்படி நடந்தால் நாளைக்கு மறுநாள் மலையூர்க் கோட்டை என் கைவசமிருக்கும். இங்குள்ள எனது மாலுமிகளில் இருநூறு பேரை மட்டுமே கொண்டு கோட்டையைக் கைப்பற்றிவிடுவேன்” என்று.

இதைக்கேட்ட விஜயசந்திரன் பெரிதாக நகைத்தான் அந்த அறையே நடுங்க. “இருநூறு பேரைக் கொண்டு மலையூர்க் கோட்டையைப் பிடிக்கப் போகிறாயா? உனக்கேதாவது சித்தப்பிரமையா?” என்றும் கேட்டான் சிரிப்புக்கிடையே. அத்துடன் வினவினான், “என் ஓலையை யார் கொண்டு போகப் போகிறார்கள்?” என்று.
“நான். ” இளையபல்லவன் சர்வ சகஜமாகப் பதில் சொன்னான்.

விஜயசந்திரன் பிரமை மேலும் விரிந்தது. எதிரியின் துணிவைக் கண்டு அசந்து போனான். “உனக்குச் சித்தப் பிரமைதான். சந்தேகமில்லை. உன்னை அனைவருக்கும் அங்கு தெரியும். போனதும் தூக்கிலாடுவாய், அல்லது வாளுக்கு இரையாவாய்,” என்றான்.

“என்னை யாரும் கொல்ல முடியாது” என்றான் இளைய பல்லவன்.

“ஏன்?”

“நான் சென்று ஒரு ஜாமத்திற்குள் திரும்பாவிட்டால் உன் உயிர் அரைக்காசு பெறாது” என்று கூறி அமீரைக் கவனித்தான் தன் கண்களால்.

புரிந்ததற்கறிகுறியாகத் தலையை அசைத்தான் அமீர். விஜயசந்திரனுக்கு விஷயம் பூரணமாகப் புரிந்தது. இளைய பல்லவன் மலையூர்க் கோட்டைக்குச் சென்றால் திரும்ப மாட்டான் என்பது உறுதியாயிருந்தது அவனுக்கு. ஆகவே தானும் இறப்பது நிச்சயமென்ற முடிவுக்கு வந்தான். அந்த முடிவின் விளைவாக, ‘இறப்பதானால் அந்தப் படையை அழித்துவிட்டு இறக்கிறேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட விஜயசந்திரன் மேலுக்கு ஓலை எழுத இணக்கம் தெரிவித்தான். ஓலையும் எழுதிக் கொடுத்தான்.

ஆனால் அந்த ஓலையின் வாசகத்தில் இளையபல்லவனும் காணமுடியாத பயங்கரப் புதிரொன்றையும் புதைத்திருந்தான். இளைய பல்லவன் திட்டப்படி காரியங்கள் நடந்தன. ஸ்ரி விஜயத்தின் கொடிகளுடன் கடல் புறாவும் மற்ற மரக்கலங்களும் மலையூரை அடைந்தன, மறுநாள் காலையில். கடல் புறாவின் தளத்திலிருந்து வெற்றி முரசு கொட்டப்பட்டது. அன்று மாலை வரை கடல்புறாவை விட்டு நகராத இளையபல்லவன் அன்றிரவில் மலையூர்க் கோட்டைக்குச் செல்ல மாற்றுடை அணிந்தான். அவன் புறப்படு முன்பு அவனைத் தனிமை யில் காஞ்சனாதேவி சந்தித்துக் கண்கலங்கி நின்றாள்.

“எனக்கென்னவோ நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொள்கிறது” என்று தன் பயத்தையும் தெரிவித்தாள்.

“அஞ்சாதே! என் திட்டத்தில் பலவீனம் ஏதுமில்லை” என்று கூறி, அவளிடம் விடைபெற்று மலையூர்க் கோட்டைக்குச் சென்ற இளையபல்லவன், கோட்டைத் தலைவரைப் பார்க்க அனுமதி கேட்டான். அனுமதி அளிக்கப்பட்டு, தலைவரிருந்த கோட்டையின் மத்திய மண்படத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். மண்டபத்தின் மத்தியில் அமர்ந்திருந்த உருவத்தைக் கண்டதும் கூடவந்த வீரர் தலைவணங்கி விலகினர். இளையபல்லவன் தலை வணங்கவில்லை. பெரும் திகில் பிடித்து நின்றான். யாரை எதிர்பார்த்தாலும் அந்த உருவத்தை அந்த இடத்தில் அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விதியின் கரம் தன்னை மீளா ஆபத்தில் இறக்கிவிட்டதை உணர்ந்து செயலற்று நின்று விட்டான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch54 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch56 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here