Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch56 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch56 | Sandilyan | TamilNovel.in

114
0
Read Kadal Pura Part 3 Ch56 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch56 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch56 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 56 : சினமும் சித்தினியின் சிரிப்பும்.

Read Kadal Pura Part 3 Ch56 | Sandilyan | TamilNovel.in

மலையூர்க் கோட்டையின் மத்திய மண்டபத்தில் கோட்டைத் தலைவரைக் கண்டதும் தலை வணங்கக் கூட திராணியில்லாமல் திகில் பிடித்து நின்ற இளையபல்லவன், தான் விஜயசந்திரனைத்தான் ஏமாற்ற முடிந்ததே தவிர, விதியை ஏமாற்ற முடியவில்லையென்பதை சந்தேகமறப் புரிந்துகொண்டான். மனிதனுடைய முன்னேற்பாடுகள் எத்தனை பலமாகவும் அறிவுக்குப் புறம்பில்லாமலும் செய்யப்பட்டாலும், அதே முன்னேற்பாடுகளையும் மீறி விதி முன்னணிக்கு வந்து முட்டுக்கட்டை போட முடியும் என்பதை அன்று மலையூர்க் கோட்டையில் புரிந்துகொண்ட இளையபல்லவன் பெரிதும் பிரமை பிடித்து அந்த மத்திய மண்டபத்தில் நின்றான். நின்ற அந்தச் சில விநாடிகளில் தான் செய்து வந்த ஏற்பாடுகளை எண்ணிப் பார்த்து அவற்றில் எவ்விதப் பலவீனமும் இல்லையென்பதை நினைக்க நினைக்க அத்தனை ஏற்பாடுகளும் அரை நொடியில் தான் எதிர்பாராத வண்ணம் தவிடுபொடியாகிவிட்ட காரணத்தால் அவன் உள்ளத்தில் ஊடுருவிவிட்ட பிரமை லேசாக உடைந்து பெருமூச்சாகவும் வெளிவந்தது.

இளையபல்லவன் உண்மையில் மிக உன்னிப்பாக நிலைமையை அலசியும் தன் திட்டத்துக்கு எந்தவித ஊறும் விளையாத வகையிலும் ஏற்பாடுகளைச் செய்திருந்தான். ஸ்ரி விஜயத்தின் கொடிகள் கம்பீரமாக மரக்கலங்களில் பறக்க மலையூரை அடைந்து நதியில் நங்கூரங்களைப் பாய்ச்சிய இளையபல்லவன், அன்று பகல் முழுவதும் வெளியே தலைகாட்டாமல் ஸ்ரி விஜய வீரர்களின் உடையில் தனது மாலுமிகளை மட்டும் கரைக்கு அனுப்பி மலையடிவாரத் திலிருந்த நகரத்தின் தெருக்களிலும் கடை வீதியிலும் உலாவ விட்டு, மெள்ள மெள்ளப் பேச்சுவாக்கில் விஜய சந்திரனின் வெற்றி வாகையைப் பற்றிப் பலவிதக் கதைகளை மலையூர் மக்களிடையே பரப்பினான்.

அப்படிப் பரப்பு முன்பு மரக்கலங்கள் நங்கூரம் பாய்ச்சிய உடனேயே தாரைகளுக்குப் பதில் ஸ்ரி விஜயத்தின் பெரும் சங்குகளை மரக்கலங்களிலிருந்து ஊதச் செய்து வெற்றியுடன் கடற்படை வந்திருப்பதை வலியுறுத்தினான். சங்குகள் பூம் பூம் என்று முழங்கிய உடனேயே கோட்டை வீரர்கள் கோட்டை மதில்களிலிருந்து கூட்டம் கூட்டமாக மரக்கலங்களைப் பார்த்ததையும் மக்களில் பலர் நதிக்கரைக்கு வந்து வேடிக்கை பார்த்ததையும் தன் அறையின் சாளரத்தின் மூலம் கவனித்த இளையபல்லவன், அடுத்தபடி இரண்டு மாலுமிகளை விளித்து மலையூர் கோட்டைக்குப் போய்வர ஏவினான்.

“ஸ்ரி விஜயத்தின் கடற்படைத் தளபதி விஜயசந்திரன் வெற்றியுடன் வந்திருப்பதாகவும், மரக்கலங்களின் போர்க் காயங்களைக் கவனித்த பின்பு மாலையில் கோட்டைக்கு வருவதாகவும் கோட்டைத் தலைவரிடம் தெரிவித்துவிட்டு வாருங்கள்” என்ற இளையபல்லவன் திடீரென உத்தரவை மாற்றி, “கோட்டைத் தலைவரைச் சந்திக்க வேண்டாம், காவலாளிகளிடம் தெரிவித்தாலும் போதும்” என்றான். அந்த உத்தரவை நிறைவேற்றக் காவலர் சென்றதும் வேறு மாலுமிகளை, படகுகளில் கரைக்கு அனுப்பினான். அவர்களுடன் செல்லப் பாலிக்குள்ளனையும் பணித்த படைத்தலைவன் கேட்டான், “மாலுமி, உனக்கு இந்த ஊர் பழக்கமுண்டா ?” என்று .

“உண்டு. ” பாலிக்குள்ளன் பதில் திட்டமாக வந்தது. “கலிங்கத்து கங்கதேவன் துணைவனென்று உன்னை இங்கு மக்கள் அறிவார்களா?” என்றும் வினவினான் படைத் தலைவன்.
“அறிவார்கள். “

“அப்படியானால் ஒன்று செய். “

“சொல்லுங்கள் படைத்தலைவரே. “

“கங்கதேவனிடமிருந்து நான் உன்னைச் சிறைபிடித்த தாகவும், ஸ்ரி விஜயத்தின் தளபதி உன்னைச் சிறை மீட்ட தாகவும் வதந்தியைப் பரப்பு. “

“எதற்கு அந்த வதந்தி?”

“கங்கதேவன் ஜெயவர்மன் நண்பன். அவனிடம் நீ உபதலைவனாய் இருந்து இருப்பதை மக்கள் அறிவார்கள். ஆகையால் நீ சொல்வது எதுவும் இங்கு செலாவணியாகும். “

பாலிக்குள்ளன் விஷயத்தைப் புரிந்துகொண்டதால் புன்முறுவல் பூத்ததன்றி, “புரிந்து கொண்டேன்” என்று கூறவும் செய்தான்.

“ஆம் மாலுமி! இன்று பகலுக்குள் மலையூர் மக்களிடம் பூரண நம்பிக்கையை நிலவச் செய்யவேண்டும். விஜய சந்திரனின் வெற்றியையும் என் தோல்வியையும் உண்மை யென்று நம்பி மக்கள் வெற்றி விழாக் கொண்டாடும் அளவுக்கு நாம் நம்பிக்கையைப் பரப்ப வேண்டும். மக்கள் நம்பிக்கைக் கோட்டையில் அசிரத்தையை உண்டாக்க வேண்டும். அந்த அசிரத்தையை நான் நாளை இரவு உபயோகப்படுத்திக் கொள்வேன்” என்று விளக்கினான் இளையபல்லவன்.

பாலிக்குள்ளன் படைத்தலைவன் ஆணையை நிறைவேற்ற மாலுமிகளைத் தொடர்ந்து தானும் ஒரு படகில் சென்றான். அவன் சென்ற பின்பும் தனது அறையை விட்டு அகலாத இளையபல்லவன் நகரத்திலும் கோட்டையிலும் ஏற்பட்டு வந்த நிலைமையைச் சாளரத்தின் மூலமே கவனித்து வந்தான். அவன் எதிர்பார்த்தபடி சகலமுமே நடந்தது. கோட்டைக்குச் சென்ற மாலுமிகள் திரும்பி வந்து கோட்டையில் செய்தியைத் தெரிவித்துவிட்டதாகவும் கோட்டைத் தலைவர் அன்றிரவு ஸ்ரி விஜயத தளபதியைச் சந்திப்பாரென்றும் கூறினர். கரை சென்ற மாலுமிகள் பணியும் பலனளிக்கவே ஏராள மக்கள் நதியின் பக்கம் கரையில் நின்றபடியே ஆரவாரித்தார்கள்.

சிலர் படகுகளிலும் வந்து மரக்கலங்களைப் பார்த்தார்கள். இளையபல்லவன் உத்தரவுப்படி மாலுமிகள் சிலர், படகுகளில் வந்த நகர மக்களை ‘மஞ்சளழகி’யிலும் ‘காஞ்சனா’விலும் ஏறிப் பார்க்க அனுமதித்தனர். அந்த அனுமதியின் பலன் அன்று மாலையிலேயே பெரிதாகப் பரிமளித்தது. ‘மஞ்சளழகி’யிலும் ‘காஞ்சனா’விலும் இருந்த பெரும் செல்வத்தைப் பற்றிய செய்தி தீயென மலையூர்வாசிகளிடையே பரவவே மக்கள் மாலையில் திரள் திரளாக வந்து மரக்கலங்களைப் பார்த்துப் பார்த்து வெற்றி கோஷம் செய்தார்கள்.

அன்று விஜயசந்திரன் பெயர் மலையூர் வாசிகளிடை பெரும் பிரசித்தியை அடைந்தது. மிகுந்த பயபக்தியுடனும் சந்துஷ்டியுடனும் மக்கள் அந்தப் பெயரை உச்சரித்தார்கள். இப்படிப் பிரமை தட்டிக் கிடந்ததன் விளைவாக எப்பொழுது விஜயசந்திரன் காட்சியளிப்பான், வெற்றிப் பவனி எப்பொழுது நடக்கும் என்று மக்கள் ஏங்கிக் கிடந்தார்கள்.

முன்னதாக இரவில் விஜயசந்திரன் வருவதாகக் கோட்டைக்குச் செய்தியனுப்பிவிட்டதால் கோட்டை வீரர்கள் மரக்கலங்களுக்கு வராதபடி தடுத்தும், விஜயசந்திரன் வெற்றி மயக்கத்தை மக்களுக்குத் தந்துவிட்டதால் நகரத்தில் கூச்சலையும் கொண்டாட்டத்தையும் வளரவிட்டு அங்கு அசிரத்தையை ஏற்படுத்தியும், தனது நிலையைப் பலப் படுத்திக்கொண்ட இளையபல்லவன் மாலை நகர்ந்ததும் கோட்டைக்குச் செல்லத் தன்னைத் தயார் செய்து கொண்டான். அதற்காக ஸ்ரி விஜயத்தின் உபதலைவர்கள் அணியும் உடையை அணிந்து கொண்டான். விஜயசந்திர னிடம் ஓலையெழுதியும் வாங்கிக்கொண்டான். ஓலை எழுதி முடிந்ததும் அதை வாங்கிப் படித்த இளையபல்லவன் பெரும் திருப்தியைக் காட்டினான்.

“நல்லது ஸ்ரி விஜயக் கடற்படைத் தலைவரே! ஓலை திருப்தியாயிருக்கிறது. என்னை நீர் முறியடித்த விஷயமும் என் பொக்கிஷத்தைக் கைப்பற்றியதகவலும் இருக்கிறது,” என்று கூறிவிட்டு ஓலையை வாங்கிக் கொண்டு கிளம்ப முற்பட்டான். கிளம்பு முன்பு காஞ்சனா தேவியிடம் விடைபெற்றுக் கொண்டபோது அவள் அச்சத்தைத் தவிர்க்கச் சொன்னான் வேடிக்கையாக, “அஞ்சாதே! என் திட்டத்தில் ஏதும் பலவீனமில்லை ” என்று .

‘மனிதப் பிரயத்தனத்தில் பலவீனமில்லைதான். ஆனால் மனிதப் பிரயத்தனம் விதியின் வலிய கரத்துக்கு முன்பு எத்தனை அற்பமானது!’ என்பதை மலையூர்க் கோட்டையின் மத்திய மண்டபத்தில் நின்ற அந்தச் சில விநாடிகளில் உணர்ந்து கொண்டான் இளையபல்லவன். அந்த மத்திய மண்டபத்தில் நுழைந்தபோது சிறிது சந்தேகம் துளிர்த்தது இளையபல்லவனுக்கு வெற்றிவாகை சூடி வரும் ஒரு படைத் தலைவனுக்கு அளிக்கக் கூடிய மரியாதையின் அம்சங்களை அந்த மண்டபத்தின் சூழ்நிலை குறிக்கவில்லை. பெரும் விளக்குகள் இல்லை.

நடை பாவாடையில்லை. வாத்திய முழக்கம் இல்லை. மண்டபத்தின் கோடியில் மட்டும் இரண்டு சிறு விளக்குகள் இருந்தபடியால் அதிக வெளிச்சம் இல்லை. மண்டபத்தின் மத்தியில் பெரிய மஞ்சத்தில் உட்கார்ந்திருந்த கோட்டைத் தலைவரை அணுகச் சொல்லிவிட்டுக் காவலர் வெளியே சென்றுவிட்டது விசித்திரமாயிருந்தது இளைய பல்லவனுக்கு. ஏதோ தானும் எதிர்பாராதது நடந்துவிட்ட தெனத் தீர்மானித்துக் கொண்டு மண்டபத்தின் நடுப்பகுதியை நோக்கி மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்தான்.

வெளியே சென்ற காவலரிருவரும் தனக்குப் பின்பிருந்த மண்டபக் கதவைச் சாத்திவிட்ட சத்தமும் விழுந்தது சோழ நாட்டுப் படைத் தலைவனின் பாம்புச் செவிகளில். ஆகவே சற்று சஞ்சலத் துடனேயே மண்டபத்தின் நடுவுக்கு வந்து மஞ்சத்திலிருந்த கோட்டைத் தலைவருக்குத் தலைவணங்கி நிமிர்ந்தான். நிமிர்ந்தவன் நிமிர்ந்தபடி நின்றான். மஞ்சளழகியின் அழகிய விழிகள் அவனை ஏறெடுத்து நோக்கின.

அதிர்ச்சி என்ற சொல்லுக்குத் தனிப் பொருளிருந்தால் அதன் முழு வேகத்தையும் அந்த விநாடியும் இளையபல்லவன் அனுபவித்தான். அடியோடு விவரிக்க இயலாத உணர்ச்சிகள் அவன் சித்தத்தில் என்ன, உடல் நரம்புகள் ஒவ்வொன்றிலும் ஊடுருவிச் சென்றன. வைத்த கண் வாங்காதபடி மஞ்சளழகியைப் பார்த்துக்கொண்டே பல நிமிஷங்கள் நின்றான் படைத்தலைவன். அதுவரை அவள் தலையில் போர்த்தியிருந்த முக்காடு விலகி ஆசனத்தின் பின்பக்கம் தொங்கிக் கிடந்தது.

அவள் தலையின் சூழலைச் சுற்றி அணைத்துக் கிடந்தது ஒரு வைரச்சுருள். அக்ஷயமுனையில் கண்ட அவள் அழகு சிறிதுகூடக் குன்றவில்லை. ஆனால் கண்களிலும் முகத்திலும் மட்டும் விரவிக் கிடந்தது ஒரு சோகம். லேசாக அவள் இளைத்திருந்தது பழைய அழகைப் பலமடங்கு அதிகப் படுத்தியதே தவிர எள்ளளவும் குறைக்கவில்லை. முகத்தில் விரவிக் கிடந்த சோகம்கூட அந்த முகத்துக்கு ஒரு தனிப் பொலிவைக் கொடுத்தது. அந்த முகத்தை, கண்களை மீண்டும் மீண்டும் பருகினான் இளையபல்லவன். பருகியது மட்டுமல்ல, திகைக்கவும் திகைத்தான். அந்தச் சில விநாடிகளில் அவன் கோட்டையை மறந்தான். ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தை மறந்தான். தனது கடமையையும் கடல் புறாவையும் மறந்தான், காஞ்சனா தேவியைக்கூட மறந்தான்.

பெரும் குழப்பம் அவன் புத்தியைச் சூழ்ந்து நின்றது. ‘இவள் அக்ஷயமுனையை விட்டு ஏன் வந்தாள்? எதற்காக வந்தாள்? இந்தக் கோட்டைக்கு ஏன் தலைவியானாள்?’ என்ற பல கேள்விகள் அவன் சித்தத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன. ஆகவே அவன் பேசவும் சக்தியற்று அவள் முன்னிலையில் நின்றான். மஞ்சளழகியின் அழகிய விழிகள் அவனை ஆராய்ந்தன. அந்த ஆராய்ச்சியில் மகிழ்ச்சியைவிடப் பரிதாபம் நிரம்பி நின்றது. சாதாரணமாக அவள் கடையிதழில் தவழும் புன்னகையில்கூட அன்று வருத்தமே தெரிந்தது. அத்தனை வருத்தத்திலும் அவள் அவனை வரவேற்கவில்லை. உறவாடவில்லை. உரையாடவும் இல்லை. தனது இடது கையை மெள்ள நீட்டினாள் அவனை நோக்கி.

அவள் கை நீட்டியதைத் தவறாகப் புரிந்துகொண்ட இளையபல்லவன் அதைத் தன் இரு கைகளாலும் பற்றப் போனான். “உம் உம். அதற்கல்ல கை நீட்டியது. ஓலையை எடுங்கள்” என்றாள் மஞ்சளழகி தெளிவான குரலில்.
அவள் கையைப் பற்றப் போன படைத்தலைவன் கால்கள் தடைப்பட்டு நின்றன. அவள் போக்கு அவனுக்குப் பெரும் விசித்திரமாயிருந்தது.

“என்ன ஓலை?” என்று சற்றுத் தடுமாற்றத்துடன் கேட்டான் இளையபல்லவன்.

“விஜயசந்திரன் கொடுத்த ஓலை. ” வறண்ட குரலில் வந்தது மஞ்சளழகியின் பதில்.

“விஜயசந்திரன் ஓலை கொடுத்ததாக யார் சொன்னது?” என்று கேட்டான் படைத்தலைவன் வியப்புடன்.

“யாரும் சொல்ல வேண்டியதில்லை தூதரே.!” என்று துவங்கிய மஞ்சளழகியை இடைமறித்த இளையபல்லவன், “என்ன! தூதனா?” என்று வினவினான் ஆத்திரத்துடன்.

“ஆம்” என்றாள் மஞ்சளழகி உணர்ச்சியற்ற குரலில்.

“யார் தூதன்?”

“நீங்கள்தான். “

“எப்படித் தெரியும் உனக்கு?”

மஞ்சளழகி தன் விழிகளில் சீற்றத்தைக் காட்டினாள். “கோட்டைத் தலைவரைத் தூதர்கள் மரியாதையின்றி அழைப்பது குற்றமாகும். அதற்கு மரணதண்டனை உண்டு. ஆகவே ‘உனக்கு’ என்று ஏக வசனத்தில் பேச வேண்டாம்,” என்ற மஞ்சளழகியின் சொற்களில் சீற்றம் நன்றாகப் பிரதி பலித்தது.

இளையபல்லவனுக்கு ஏதும் புரியவில்லை. இத்தகைய ஒரு மஞ்சளழகியை அவன் பார்த்ததேயில்லை. “தாங்கள்… ” என்று ஆரம்பித்தான்.

“உம். இது சரி” என்றாள் மஞ்சளழகி.

“நான் தூதன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” படைத்தலைவன் குரலில் ஏளனம் இருந்தது.

அதைக் கவனிக்கவே செய்தாள் மஞ்சளழகி. இருப்பினும் அதை அசட்டை செய்து, “விஜயசந்திரன் வருவதானால் அவர் கப்பலை விட்டுப் புறப்படு முன்பு இரண்டுமுறை சங்குகள் ஒலிக்கும். இது ஸ்ரி விஜய சம்பிரதாயம். தூதர்களுக்கு அது கிடையாது” என்றாள்.

படைத்தலைவன் பதிலேதும் சொல்லவில்லை. கச்சை யிலிருந்த ஓலையை எடுத்து நீட்டினான் அவளிடம். அவள் மண்டபத்தின் கோடியிலிருந்த விளக்கினருகில் சென்று ஓலையைப் படித்தாள். படைத்தலைவனும் அவளைத் தொடர்ந்து சென்று அவள் பின்புறம் நின்றான். அவன் உடலின் பின்புறம் லேசாக அவள் மீது பட்டுக்கொண்டிருந்ததால் அவன் உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. மஞ்சளழகியின் நிலையைப் பற்றி ஏதும் சொல்ல முடியவில்லை. ஓலையைப் படித்துத் திரும்பியபோது அவள் முகத்தில் எந்த உணர்ச்சி வேகமும் இல்லை . அவள் விழிகள் இளையபல்லவனை ஓர் அடிமையை நோக்குவது போல் நோக்கின. “ஓலை திறமையுடன் எழுதப்பட்டிருக்கிறது” என்ற அவள் சொற்களில் கொடுமை இருந்தது.

குழைவும் அன்புமே சொட்டும் தன்மை வாய்ந்த மஞ்சளழகியின் சொற்களில் கடுமை மண்டிக் கிடந்ததைக் கண்ட இளையபல்லவன், ‘மஞ்சளழகி எத்தனை தூரம் மாறிவிட்டாள்’ என்று எண்ணி ஏங்கினான். அந்த ஏக்கம் தொனிக்கும் குரலில் கேட்டான், “ஓலையில் என்ன திறமை யிருக்கிறது!” என்று.

“படைத்தலைவரையும் ஏமாற்றும் திறமையிருக்கிறது,” என்ற மஞ்சளழகி ஏளனமாக நகைத்தாள்.

அந்த நகைப்பு அவனுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது. மஞ்சளழகி பழைய மஞ்சளழகியல்ல என்பதைப் புரிய வைத்தது. புது மஞ்சளழகி உருவெடுத்திருப்பதை உணர்ந்த இளையபல்லவன் “ஓலையில் என்ன எழுதி இருக்கிறது?” என்று வினவினான்.

“ஓலை என்ன புரிய வைக்கிறது என்று கேட்பது பொருந்தும்” என்றாள் மஞ்சளழகி.

“என்ன புரிய வைக்கிறது?” எரிச்சலுடன் கேட்டான் இளையபல்லவன்.

பதிலுக்கு மஞ்சளழகி ஓலையை அவனிடம் கொடுத்து விளக்கமும் தந்தாள். விளக்கத்தைக் கேட்ட படைத்தலைவன் மிதமிஞ்சிய சினத்தின் வசப்பட்டுச் சிலையென நின்றான். ஓலை பெரும் விபரீதக் கதையைச் சொல்லியது. இளைய பல்லவனின் சினத்தைக் கண்ட அந்தச் சித்தினிப்பாவை பொருள் பல துளிர்த்த சிரிப்பொன்றைக் கலகலவென உதிரவிட்டாள்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch55 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch57 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here