Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch57 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch57 | Sandilyan | TamilNovel.in

95
0
Read Kadal Pura Part 3 Ch57 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch57 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch57 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 57 : கல் நெஞ்சம்.

Read Kadal Pura Part 3 Ch57 | Sandilyan | TamilNovel.in

அதுவரை தான் சொப்பனத்திலும் காணாத புதுவித மஞ்சளழகியைக் கண்டதுமே சித்தப்பிரமை பிடிக்கும் நிலையை அடைந்துவிட்ட இளையபல்லவன், அவள் விஜய சந்திரன் ஓலையைக் காட்டி விளக்கம் கூறிச் சிரிப்பொன்றையும் கலகலவென உதிரவிட்டதும் விவரிக்க இயலாத பலவித உணர்ச்சிகளுக்கு இலக்கானான். சொர்ணத்தீவின் டாஜாங் நடன இசைக்கருவிகளிலிருந்து உதிரும் ஸ்வர ஜாலங்கள் போல் மிக இனிமையாக உதிர்ந்த அவள் சிரிப்பொலி மிக ரம்மியமாகவே இருந்தது.

அந்தச் சிரிப்பொலியை மத்திய மண்டபத்தின் சுவர்களும் தூண்களும் வாங்கிச் செய்த எதிரொலியும் மயக்கம் தரக்கூடிய முறையிலேயே அமைந் திருந்தது. விஜயசந்திரனால் ஏமாற்றப்பட்டோமே என்ற நினைப்பும், தான் அக்ஷயமுனையில் வாரியணைத்த மஞ்சளழகி தன்னைக் கேவலம் மூன்றாவது மனிதனைப் போலும் தூதன் போலும் நடத்துகிறாளே என்ற ஆக்ரோஷமும் மட்டும் இளையபல்லவன் சிந்தையை நிலை குலையச் செய்திராவிட்டால் மஞ்சளழகியின் அந்தச் சிரிப்பை அவன் பெரிதும் ரசித்திருப்பான். அந்த ரசிகத் தன்மை வேறுபல ரசிகத்தன்மைகளுக்கும் இடங்கொடுத் திருக்கும். ஆனால் அந்தச் சமயத்தில் அவன் மனோநிலை பல துறைகளை மாறிமாறித் தொட்டுச் சிதைந்து கிடந்தது.

எந்த மஞ்சளழகியிடமிருந்து தப்ப அவன் படாத பாடு பட்டு, அமீரையும் தேவனையும் ஏமாற்றி அநபாயன் உத்தரவையும் மீறி, கடல் புறாவைத் திசை மாற்றி மலையூர் வந்தானோ அதே மஞ்சளழகி மலையூரில் தனக்காகக் காத்திருந்ததே பெரும் பிரமையையும் திகிலையும் அளித்தது இளையபல்லவனுக்கு. அந்த மஞ்சளழகி கோட்டைத் தலைவியாகவும் இருந்து தன்னை மட்டு மரியாதையின்றி நடத்தியது சினத்தைத் தந்தது சோழ நாட்டுப் படைத்தலைவனுக்கு.

எல்லாவற்றையும்விட மஞ்சளழகி எதற்காக அந்தக் கோட்டைக்கு வந்தாள், ஏன் தலைவியானாள் என்பது பெரும் விசித்திரமாயிருந்தது அந்த மாபெரும் கடல் வீரனுக்கு. இத்தனை சந்தேகங்களுக்கும் விளக்கம் பெறவேண்டிய அவசியம் அவனுக்கிருந்தாலும் முதன் முதலாக அவன் மஞ்சளழகி நீட்டிய ஓலையையே ஆராய்ந்தான். ஆனால் கூரிய அவன் புத்திக்குக்கூட அதில் ஏதும் புதுமை இருந்ததாகத் தெரியவில்லை. தான் சொன்னபடியே விஜயசந்திரன் எழுதியிருந்ததைப் பார்த்து, “இதில் அப்படி ஏதும் மர்மம் இருப்பதாகப் புரியவில்லையே எனக்கு?” என்றும் கூறினான் மஞ்சளழகியை நோக்கி.

மஞ்சளழகியின் இதழ்களில் ஏளன நகை விரிந்தது. “ஓலையைப் படியுங்கள்” என்ற அவள், படைத்தலைவன் ஓலைமீது மீண்டும் கண்களை ஓட்டியதும், “அப்படியில்லை தூதரே! இரைந்து படியுங்கள். நானும் கேட்கிறேன்” என்று சற்று அழுத்தமாகச் சொன்னாள்.

அவள் தன்னைத் தூதரே’ என்று அழைத்ததும் தன்னைக் குழந்தைபோல் எண்ணி இரைந்து படிக்க உத்தரவிட்டதும் இளையபல்லவனுக்குப் பிடிக்கவில்லை யென்றாலும், மஞ்சளழகியை மறுத்துச் சொல்ல இஷ்டப்படாமல் இரைந்தே படித்தான். “என்னால் ஸ்ரி விஜயத்தின் பிரபல விரோதி இளையபல்லவன் என்ற கொள்ளைக்காரன் முறியடிக்கப் பட்டான். அவனுடைய பெருவாரியான பொக்கிஷம் என்னிடம் சிக்கியிருக்கிறது. அவன் மரக்கலங்கள் இரண்டை மூழ்கடித்துக் கடல் புறாவையும் கைப்பற்றி விட்டேன். கோட்டைத்தலைவர் என்னை வந்து கடல் புறாவில் சந்தித்து, என்னிடம் சிக்கியிருக்கும் பொக்கிஷத்தையும், நமது ஸ்ரி விஜயத் துக்குப் பெரும் சேதத்தை விளைவித்துள்ள அந்த ராட்சதக்கப்பலையும் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன் – விஜய சந்திரன். “

இதைப் படித்து முடித்த இளையபல்லவன், “இதில் என்ன மஞ்சளழகி..” என்று துவங்கியவனைச் சற்றே கைதூக்கித் தடுத்த மஞ்சளழகி, “கோட்டைத் தலைவரே என்பது பொருந்தும்” என்று தன்னை அழைக்க வேண்டிய முறையை வலியுறுத்தினாள்.

இளையபல்லவன் இதயத்தில் சினம் துள்ளி எழுந்து கொண்டிருந்தது. இருப்பினும் தன்னை நிதானப்படுத்திக் கொண்ட இளையபல்லவன், “தவறிவிட்டேன். மன்னிக்க வேண்டும். பழைய பழக்கம் போகவில்லை” என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, “இந்த ஓலையில் என்ன புதுமை இருக்கிறது? என்ன மர்மம் இருக்கிறது?” என்று வினவினான்.

“ஓலையை நன்றாக ஊன்றிப் பாருங்கள் விளக்கொளி யில்” என்று மஞ்சளழகி வற்புறுத்தினாள்.

இளையபல்லவன் விளக்கொளியில் ஓலையை ஆராய்ந்தான். விளக்கம் கண்ணுக்கு அளித்தது விளக்கத்தை. ஆனால் சித்தத்துக்கு அளிக்காததால் கேட்டான் படைத் தலைவன், “தாங்களே மர்மத்தை விளக்குவது நல்லது,” என்று .

“எதையும் ஆராயும் கூரிய புத்தியுடையவர் என்று பிரசித்தி பெற்ற சோழநாட்டுப் படைத்தலைவரால் இந்தச் சிறு ஓலையைப் புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்று மஞ்சளழகி கேட்டாள் ஏளனமாக.

“இல்லை. ” வறண்ட குரலில் வந்தது படைத்தலைவன் பதில்.

“இந்த ஓலை உங்களைக் காட்டிக் கொடுத்துவிட்டது. நீங்கள் யார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது” என்றாள் மஞ்சளழகி மெதுவாக.

“எப்படிக் காட்டுகிறது?”

“பொதுவாகப் பார்க்கப் போனால் உங்களுக்குச் சௌகரியமாக வாசகத்தை அமைத்திருக்கிறார் ஸ்ரி விஜயத்தின் கடற்படைத் தளபதி. ஆனால் அந்த வாசகத்தில் மூன்று சொற்களைக் கவனியுங்கள். “

“எந்த மூன்று சொற்களை?”

“என்னால் என்ற சொல் ஒன்று. விரோதி என்ற சொல் ஒன்று. பெருவாரியான என்ற சொல் ஒன்று. “

“அவற்றில் என்ன விசேஷம்?”

“என்னால் என்ற சொல்லில் ‘எ’ என்ற எழுத்தும் விரோதி என்ற சொல்லில் ‘தி’ என்ற எழுத்தும், பெருவாரியான என்ற சொல்லில் ‘ரி’ என்ற எழுத்தும் மற்ற எழுத்துக்களைவிட அழுத்தமாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த மூன்றும் சேர்ந்தால்… ” என்று சொல்லிக்கொண்டே போன மஞ்சளழகியை, “இரு இரு” என்று அவசரத்தில் மரியாதையைக் கைவிட்டு இரைந்த இளையபல்லவன் மீண்டும் ஓலையைக் கவனித்தான். கவனித்தவன் பேசச் சக்தியற்று நின்றான். மஞ்சளழகி சொன்ன மூன்று எழுத்துக்களிலும் எழுத்தாணி அளவுக்கு அதிகமாகப் பதிந்திருந்தது. தவறைத் திருத்துபவன்போல் விஜயசந்திரன் அந்த எழுத்துக்களில், இரண்டாம் முறையும் எழுத்தாணியை ஓட்டியிருந்தான்.

பெரும் வாசகத்தினிடையே தூரத் தள்ளிக் கிடந்த அந்த எழுத்துக்கள் அழுத்தமாய் இருந்தது பொதுப் பார்வைக்குத் தெரியக் காரணமில்லை. ஏன்? கூரிய பார்வைக்கும் அது தெரியக் காரணமில்லை. ஆகவே மஞ்சளழகி சொன்ன பின்பே அதைக் கவனித்த இளையபல்லவனுக்குக் கோபத்துக்குப் பதில் விஜயசந்திரனிடம் பெரும் மதிப்பே ஏற்பட்டது. “ஆம், ஆம். மிகுந்த திறமையுடன் எழுதியிருக்கிறான் ஓலையை” என்று சிலாகிக்கவும் செய்தான் வெளிப்படையாக அத்துடன் கேட்கவும் செய்தான் மஞ்சளழகியை நோக்கி, “ஆம் மஞ்ச – இல்லை இல்லை, கோட்டைத் தலைவரே! உங்களுக்கு மட்டும் இந்த மர்மம் எப்படித் தெரிந்தது?” என்று.

மீண்டும் மண்டபத்தின் மத்திக்கு வந்த மஞ்சளழகி தனது ஆசனத்தில் அமர்ந்து எதிரேயிருந்த மஞ்சத்தில் அமரும்படி இளையபல்லவனுக்குச் சைகை காட்டினாள். இளைய பல்லவன் அமர்ந்ததும் பேச்சைத் துவங்கிய மஞ்சளழகி, “தூதரே! நாமிருவரும் சந்தித்து கிட்டத்தட்ட ஓராண்டு முடியப்போகிறது” என்றாள்.

“இன்னொரு சித்ரா பௌர்ணமி வர இரண்டு மாதங்களே இருக்கின்றன” என்றான் இளையபல்லவன் மெல்ல. இதைச் சொன்ன அவன் குரல் குழைந்து கிடந்தது. அக்ஷயமுனையின் கடற்கரை அவன் இதயத்தில் எழுந்தது. அக்ஷயமுனைத் தொழிலாளர் அமைத்த அந்த நடனமேடை எழுந்தது. அதன் பின்னால் எழுந்தான் முழுமதி. முன்னால் ஆடினாள் மோகன மங்கை. அவள் இடை அசைந்தது. கால்கள் மரப்பலகைமீது தட்டின. ஜல் ஜல் என்ற சதங்கை ஒலி மீண்டும் ஒலித்தது. அப்படியே மயங்கி உட்கார்ந்திருந்தான் இளையபல்லவன்.

அவன் மனோநிலையை உணர்ந்துகொண்டாள் மஞ்சளழகி. அவள் இதயத்திலும் அந்தப் பழைய நினைவுகள் எழுந்தன. ஆனால் என்ன காரணத்தாலோ அவற்றையெல்லாம் உதறிவிட்டு வறண்ட குரலில் சொன்னாள், “பழைய கதைகளை நினைக்க வேண்டாம் தூதரே. இன்றைய நிலைமையை ஆராய்வோம். நாம் சந்தித்துப் பல மாதங்கள் ஓடிவிட்டன. அத்துடன் நமது வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ” என்று.

“என்ன மாற்றம்?” என்று இடைமறித்துக் கேட்டான் இளையபல்லவன்.

“கொள்ளையடிப்பதில் உங்கள் புகழ் இந்தச் சொர் ண பூமிப் பிராந்தியம் முழுவதும் பரவிவிட்டது” என்றாள் அவள்.

“அந்தப் புகழ் அக்ஷயமுனைக்கு வருமுன்பே உண்டே?”

“உண்டு. ஆனால் இத்தனை பயம் ஸ்ரி விஜயத்துக்கு உங்களிடம் அப்பொழுது இல்லை. “
“அப்படியா?

“ஆம். அப்பொழுது கலிங்கத்தின் பெரும் கடற்படையின் உதவியிருந்தது ஸ்ரி விஜயத்துக்கு. இப்பொழுது அதில் முக்கால் வாசிக்கு மேல் உங்களால் அழிக்கப்பட்டது, ஸ்ரி விஜயத்தின் நண்பனும் கலிங்கத்தின் கடற்படைத் தளபதிகளில் ஒருவருமான கங்கதேவன் வசமிருந்த கடல் மோகினியும் உங்கள் வசமாகிவிட்டது. அதனால் ஸ்ரி விஜயத்துக்குக் கலிங்கத்திடமிருந்து கப்பல்கள் வருவது நின்றுவிட்டது. கடல் புறாவின் சஞ்சாரம் இந்தக் கடற்பகுதிகளில் அதிகமாகி விட்டதால் ஸ்ரி விஜயத்தை உங்களிடமிருந்து பாதுகாப்பது அவசியமாகி விட்டது..” இந்த இடத்தில் மஞ்சளழகி சிறிது நிறுத்தினாள்.

“உம், உம் சொல் மேலே. ” படைத்தலைவன் ஊக்கினான் உணர்ச்சி ஏதுமற்ற குரலில்.

அவன் சொற்களில் மரியாதை இல்லாதிருந்ததைக்கூட மஞ்சளழகி கவனிக்கவில்லை. அவன் ஏகாங்கியாக இடி விழுந்தவன்போல் உட்கார்ந்து விட்டது அவளுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும். அவள் நகைத்தாள். சிரிப்பொலியைச் சிறிது அதிகமாகவே உதிரவிட்டாள். அந்தச் சிரிப்பைப் படைத்தலைவன் லட்சியம் செய்யவில்லை. “உம், உம் சொல் மேலே” என்று இரண்டாம் முறையும் சொன்னான்.

அவள் சொன்னாள்: “உங்கள் பலம் இப்படிப் பெரிது ஓங்கியதும் ஸ்ரி விஜய சாம்ராஜ்யாதிபதி ஜெயவர்மர் ஓரளவு அச்சமே கொண்டார். அவருக்குப் பெரும் பக்கபலமாயிருந்த பலவர்மர் உங்களால் சிறைப்படுத்தப்பட்டார். குணவர்மரும் உங்கள் காதலியும் கடாரம் வந்துவிட்டார்கள். ஜெயவர்மரை எதிர்த்த அவர்களுக்குச் சோழநாடு உதவுமென்றும் இங்கு வரும் வணிகர்கள் அறிவித்தார்கள். ஸ்ரி விஜயத்தின் கடற் படையை மேலும் வலுப்படுத்த வழியில்லை. அதில் பல மரக்கலங்களை நீங்கள் கைப்பற்றித் தமிழ் வணிகர்களுக்குக் கொடுத்துவிட்டீர்கள். ஆகவே ஸ்ரி விஜயத்தைக் காக்க ஜெயவர்மர் ஏற்பாடு செய்தார். “

அவள் விளக்கம் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது இளைய பல்லவனுக்கு. சொர்ணபூமியின் போர் நிலையை எத்தனை விவரமாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் மஞ்சளழகி என்று எண்ண எண்ண அவன் வியப்பு உச்சநிலையை அடைந்தது. அந்த வியப்பு குரலில் ஒலிக்கக் கேட்டான் இளையபல்லவன், “என்ன ஏற்பாடு செய்தார் ஜெயவர்மர்?” என்று.

“ஸ்ரி விஜயத்தின் தலைநகரை உங்கள் தாக்குதலினின்றும் காக்க ஏற்பாடு செய்தார்” என்றாள் மஞ்சளழகி திட்டமாக.

“எப்படி?”

“ஸ்ரி விஜயத் தலைநகரத்தின் அருகே இருக்கும் பெரிய அரண் இந்த மலையூர். இதைப் பிடித்தால் தலைநருக்குப் பேராபத்து. “

“ஆம். “

“முந்திய சோழர் படையெடுப்பில் ராஜேந்திர சோழ தேவரும் இந்த மலையூர்க் கோட்டையைக் கைப்பற்றித்தான் ஸ்ரி விஜயத்தைத் தாக்கினாராம். “

“ஆம். “

“அப்படித்தான் இப்பொழுதும் நடக்கும் என்று ஜெயவர்மர் கூறினார்!”

இளையபல்லவன் புருவங்கள் ஆச்சரியத்தால் உயர்ந்தன. “என்ன! ஜெயவர்மர் கூறினாரா?” என்று கேட்டான் இளைய பல்லவன்.

“ஆம்,” என்றாள் மஞ்சளழகி.

“யாரிடம்?”

“அவர் உபதலைவியிடம். “

“யாரது உபதலைவி?”

“நான்தான். “

“நீயா!” இளையபல்லவன் குரலில் அவநம்பிக்கை ஒலித்தது.

“ஆம் படைத்தலைவரே! நான்தான். ஜெயவர்மர் என்னைத் தமது உபதலைவர்களில் ஒருவராக நியமித்தார். அக்ஷயமுனையை விட்டு நீங்கள் சென்ற பின் அங்கு ஏற்பட்ட சீர்திருத்தங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் கேள்விப்பட்ட ஜெயவர்மர் நேரிடையாக அக்ஷயமுனைக்கு வந்தார். பார்த்தார். பிரமித்தார். நீங்கள் கூட இப்பொழுது அக்ஷயமுனை சென்றால், அதைக் கைப்பற்ற முடியாது. இப்பொழுது அங்கு கொள்ளையரில்லை. சரியாக அமைக்கப் பட்ட போர்ப்படை இருக்கிறது.

அந்த மாறுபட்ட நிலையைக் கண்ட ஜெயவர்மர் அக்ஷயமுனையை ஆண்டவளே மலையூரை ஆளவல்லவள் என்று தீர்மானித்திருக்கவேண்டும். ஆகவே ஆபத்து வந்தபோது என்னை மலையூரைக் காக்க நியமித்தார். விஜயசந்திரன் கடற்படையும் என் ஆணையின் மேல்தான் ஜம்பி முகத்துவாரத்தில் நின்றது” என்று விளக்கிய மஞ்சளழகி இளையபல்லவனைக் கூர்ந்து நோக்கினாள். இளையபல்லவன் முகத்தில் தெரிந்தது அவநம்பிக்கையா அல்லது ஆச்சரியமா என்பதை ஊகிக்க அவளால் முடிய வில்லை. அவநம்பிக்கையாயிருந்தால் அதை அகற்ற மாத்திரம் தீர்மானித்த மஞ்சளழகி, “கொள்ளைக்காரரே! விஜயசந்திரன் படை ஜம்பியின் முகத்துவாரத்திலல்லாமல் உள்ளே தள்ளி நின்றது உங்களுக்கு வியப்பாயிருந்திருக்கலாம்?” என்று ஒரு பெரு வெடியை எடுத்து வீசினாள்.

இளையபல்லவன் இதயத்தில் விவரிக்கவும் முடியாத வியப்பு தாண்டவமாடியது. “என்ன! என்ன சொன்னாய் மஞ்சளழகி?” என்று கூவினான் ஆசனத்தையும் விட்டு எழுந்து.

“அலை எழும்போது உங்கள் கடல் புறா வேகமாக நதிக்குள் புகுந்து விடுமென்றும், அதற்கும் மற்ற எதிரி மரக் கலங்களுக்கிடையில் சிக்கிக்கொள்ள வேண்டாமென்றும், சற்று நதியின் உட்புறத்திலேயே நிற்கும்படிக்கும் யோசனை சொன்னேன் விஜயசந்திரனுக்கு” என்றாள் மஞ்சளழகி.
“நீயா சொன்னாய் அதை?” படைத்தலைவன் குரலில் வியப்பு மண்டிக் கிடந்தது.

“ஆம், தூதரே! ‘ வேறு யாருக்கு உமது தந்திரங்களும் கடலின் தந்திரங்களும் தெரியும்?” என்று கேட்டாள் மஞ்சளழகி.

“கடலின் தந்திரங்கள் உனக்குத் தெரியுமா?” என்று ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காகக் கேட்டான் இளைய பல்லவன்.

மஞ்சளழகியின் முகத்தில் கடலின் பெயரைக் கேட்டதுமே இன்பம் படர்ந்தது. கண்கள் கனவுலகத்தை எட்டின. “கடலை என்னைவிட அறிந்தவர் யார்? எங்கள் இனமே கடலோடும் இனம். என் தாயின் இனத்தைச் சொல்கிறேன் இளையபல்லவரே! தவிர பிறந்த சில நாட்களில் அக்ஷயமுனை வந்தேன். வளர்ந்த நாட்களில் கடலைத் தவிர எனக்கு நண்பர் யாரும் இல்லை. கடலில் விளையாடினேன், நீந்தினேன். மரக்கலங்களிலும் படகுகளிலும் சென்றேன்.

அலையெழுச்சி, காற்று வேகம் அனைத்தையும் என்னைவிட யாரறிவார்? இப்பொழுதுகூட என் கண் முன்னால் அக்ஷய முனைக் கடற்கரையில் பழுப்பு மணல் தெரிகிறது. அதோ எழுந்து வருகின்றன பேரலைகள்; அதோ மடிந்து நுரைத்து என் காலைத் தொடுகின்றனவே! தொட்டுத் திரும்பு கின்றனவே இளையபல்லவர் போல்” என்ற மஞ்சளழகி பெருமூச்சு விட்டாள். சில விநாடிகள் மௌனம் சாதித்தாள். பிறகு சொன்னாள்: “ஆம் படைத்தலைவரே! நான்தான் யோசனை சொன்னேன் விஜயசந்திரனுக்கு, உம்மைச் சமாளிக்கும் வழியை” என்று.

“நீயா?” பிரமிப்பை அள்ளித் தெளித்தது இளைய பல்லவன் குரல்.

“ஆம்” என்றாள் மஞ்சளழகி.

“உன் நெஞ்சம் அதற்கு இடம் கொடுத்ததா?” என்று வினவினான் படைத்தலைவன்.

“கொடுத்தது. “

“உன் நெஞ்சம் இளகியதாயிற்றே மஞ்சளழகி” என்று குழைந்தது இளையபல்லவன் குரல்.

“பழைய நெஞ்சம் அது. “

“இப்பொழுது?”

“கல்நெஞ்சம். அத்தாட்சி வேண்டுமா?”

“என்ன அத்தாட்சி?” என்று வினவினான் இளைய பல்லவன். பதிலுக்கு ஒரு பெருவெடியை எடுத்து வீசினாள் மஞ்சளழகி.

Previous articleRead Kadal Pura Part 3 Ch56 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch58 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here