Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch58 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch58 | Sandilyan | TamilNovel.in

153
0
Read Kadal Pura Part 3 Ch58 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch58 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch58 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 58 : குருதட்சிணை.

Read Kadal Pura Part 3 Ch58 | Sandilyan | TamilNovel.in

ஜம்பி நதியின் முகத்துவாரத்திலிருந்து பின்னடைந்து நிற்கும்படி விஜயசந்திரனுக்கு யோசனை சொல்லியது தான்தானென்றும், தன் நெஞ்சம் பழைய இளகிய நெஞ்சம் அல்லவென்றும், கல்லென கெட்டிப்பட்டு விட்டதென்றும் இளையபல்லவனை நோக்கிக் கூறிய மஞ்சளழகி அதற்கு அத்தாட்சியும் காட்ட முற்பட்டு, “தூதரே! உம்மைச் சிறை செய்வது என் கடமையாகிறது” என்றொரு பெரு வெடியையும் எடுத்து வீசினாள்.

அதைக்கேட்ட இளையபல்லவன் அதிர்ச்சிக்குப் பதில் பெருவியப்பே அடைந்து மஞ்சளழகியின் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். மஞ்சளழகியின் அழகிய விழிகள் அவன் விழிகளை உறுதியுடன் சந்தித்தன. “எனக்கு சித்தப்பிரமை யில்லை படைத்தலைவரே! மிகுந்த தெளிவுடன் இருக்கிறேன். என் கடமையை நான் செய்ய வேண்டி இருக்கிறது” என்றும் கூறினாள், உறுதி பூரணமாகக் குரலில் துலங்க.

இளையபல்லவன் தனது ஆசனத்தில் சிறிது சங்கடத் துடன் அசைந்தான். ‘மஞ்சளழகியா இப்படிப் பேசுவது! அக்ஷயமுனைக் கடலோரத்தில் என் கரங்களில் பதுமை யெனக் கிடந்த அதே பைங்கிளியா இப்படிப் பேசுகிறாள்!’ என்று மிதமிஞ்சிய வியப்பால் தன்னைத் தானே இருமுறை கேட்டுக்கொண்ட இளையபல்லவன் அவளை நோக்கிக் கேட்டான் வெளிப்படையாக, “என்ன கடமை உனக்கு மஞ்சளழகி?” என்று.
“இந்தக் கோட்டையைப் பாதுகாக்கும் கடமை” என்றாள் அவள் சர்வ சாதாரணமாக,

“கோட்டைத் தலைவியென்ற முறையிலாக்கும்” என்று ஏளனத்துடன் கேட்டான் இளையபல்லவன்.

“வேறு முறையும் இருக்கிறது” என்று கூறினாள் மஞ்சளழகி.

“என்ன முறை?”

“இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறை தவிர-“

“தவிர?”

“இந்த நாட்டின்-” என்று துவங்கிய மஞ்சளழகி சிறிது தயங்கினாள்.

“சொல்லுங்கள் தலைவியாரே!” இளையபல்லவன் இகழ்ச்சியுடன் வினவினான்.

மஞ்சளழகியிடமிருந்து பதில் திடமாகவும் அதிகார மாகவும் வந்தது. “இளவரசி என்ற முறையும் இருக்கிறது” என்ற வார்த்தைகளை மிக நிதானமாக உச்சரித்தாள் மஞ்சளழகி. அவள் சொற்கள் பேராச்சரியத்தை மட்டுமல்ல, பெரும் சந்தேகத்தையும் கிளப்பி விட்டன, இளையபல்லவன் இதயத்தில். அவன் மஞ்சளழகியின் முகத்தை நன்றாக ஆராய்ந்தான். பிறகு, “அப்படியானால்-” என்று ஏதோ துவங்கினான். அவனைப் புரிந்து கொண்ட மஞ்சளழகி, “ஆம் இளையபல்லவரே, ஆம்” என்று கூறிக் கொண்டே தன் ஆசனத்தை விட்டு எழுந்தாள்.

மேலும் சொன்னாள்: “ஆம் இளையபல்லவரே! நாம் யாரும் எதிர் பார்க்காதது நடந்து விட்டது. இப்பொழுது நினைத்தால் கூட எனக்கு வியப்பாயிருக்கிறது படைத்தலைவரே. என் தந்தை என்னை எப்படி ஏற்றுக் கொண்டார் என்பது அன்றுகூட எனக்குப் புரிய வில்லை. யாரோ ஒரு சீனத்துப் பெண்ணின் மீது ஆசைப் பட்டு அவளிடம் பெற்ற பெண், மணமாகாதவளுக்குப் பிறந்த ஓர் அநாதை, அவளைத் தன் மகளெனச் சொல்லிக்கொள்ள எத்தனை திறன் வேண்டும்? அத்தனைத் திறன் என் தந்தைக்குப் பிறந்து விட்டது படைத்தலைவரே! அக்ஷயமுனை வந்த இரண்டாவது நாளே என்னை மகளென அழைத்தார். மகளென அறிவித்தார்.

அக்ஷயமுனைக் கோட்டையில் இருந்த அநாதைப் பெண் அன்று முதல் இளவரசியானாள். இன்று ஸ்ரி விஜயத்தில் என் சொல் ஜெயவர்மர் சொல்லுக்குச் சமானம். நான் காட்டும் திசையில் படைகள் நகரும். அந்தப் பதவியை எனக்களித்தார் ஜெயவர்மர்..”

இங்கு குறுக்கே புகுந்த இளையபல்லவன் சொன்னான், “இளவரசிப் பதவி உன் கண்களை மறைத்துவிட்டது மஞ்சளழகி,” என்று.

“இல்லை படைத்தலைவரே, இல்லை” எனக் கூறித் தலையையும் ஆட்டிய மஞ்சளழகி, “அந்தப் பதவியல்ல எனக்கு ஜெயவர்மரிடம் பக்தியை அளித்தது. அரசிப் பட்டமே தந்திருந்தாலும் அதைத் தூக்கி எறிந்திருப்பேன். ஆனால், பெண்களுக்கு வேண்டிய பட்டங்களில் ஒன்றைத் தந்தார் அவர்” என்றாள்.
இளையபல்லவன் ஏதுமறியாமல் குழம்பினான். “என்ன பட்டம் அது?” என்றும் வினவினான்.

“மகள் என்ற பட்டம். குழந்தைப் பருவத்தில் தந்தையிடம் மகள் என்ற பட்டத்தையும் வயது வந்தபின் கணவனிடம் மனைவியென்ற பட்டத்தையும், பிறகு மகனிடம் தாயென்ற பட்டத்தையும் பெறவே பெண்கள் துடிக்கிறார்கள். அவற்றில் ஒன்று கிட்டியது. ஒன்று கிட்டவில்லை” என்று மஞ்சளழகி பெருமூச்செறிந்தாள்.

“கிட்டியது எது? கிட்டாதது எது?” இளையபல்லவன் கேட்டான் பிரமிப்புடன்.

“நெருங்கிக் காதலித்தவர் கைவிட்டுப் போனார். மனைவி யென்ற பட்டம் கிடைக்கவில்லை. பருவப்பிராயம் வரையில் நெருங்காதிருந்த தந்தை வந்தார். மகளெனும் பட்டத்தைத் தந்தார். அதனால் எனக்கும் சமூகத்தில் ஒரு மதிப்பான வாழ்வை அளித்தார்” என்றாள் மஞ்சளழகி. அத்துடன் மேலும் தொடர்ந்து, “அத்தகைய தந்தைக்கு நான் கடமைப் பட்டிருப்பதும் அவரை அவருடைய விரோதிகளிடமிருந்து காப்பாற்றுவதும் நியாயமல்லவா?” என்றும் கேட்டாள்.

இளையபல்லவன் சில விநாடிகள் பதில் சொல்லவில்லை. மௌனமாகவே இருந்தான். பிறகு ஏதோ முடிவுக்கு வந்து கேட்டான், “ஜெயவர்மரை நீ நம்புகிறாயா!” என்று.

“ஏன் நம்பக்கூடாது?”
“நம்பிக்கையைக் காப்பாற்றுபவரல்ல அவர் என்பது உலகப் பிரசித்தம். “

“நம்பிக்கையைக் காப்பாற்றுபவர் என்று ஒருவருக்கும் பெயர் உண்டு. அவரை நம்பினேன். அவர் என்னை விட்டுத் தான் சென்றார். நம்பிக்கை யார்மீது வைக்கவில்லையோ அவர் எனக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். உலக வழக்குக்கும் என் வழக்குக்கும் பெரும் விரோதம் இளையபல்லவரே. “

இளையபல்லவனுக்கு விஷயம் நன்றாகப் புரிந்தது. வருடக்கணக்கில் ஏற்காத மகளைத் திடீரென ஜெயவர்மன் ஏற்று அவளை இளவரசியாக்கியதில் பெரும் தந்திரம் புதைந்து கிடப்பது அவனுக்குத் திட்டமாகத் தெரிந்தது. துறவி மனப் பான்மை வாய்ந்த குணவர்மன், புதல்வியைத்தான் அரியணை யில் அமரவைப்பான் என்பதை அறிந்துள்ள ஜெயவர்மன், தானும் ஒரு பெண்ணைப் போட்டிக்குக் கொண்டுவந்தால் அரியணைப் போட்டியில் நாடு முழுவதும் குணவர்மனிடம் சேராது என்பதை அறிந்தே மஞ்சளழகியின் பிறப்பு மர்மத்தை அம்பலப்படுத்திவிட்டானென்பதையும், இதனால் ஸ்ரி விஜயத் தின் கதை பெரும் சிக்கலாகி வருகிறதென்பதும் இளைய பல்லவனுக்கு வெட்ட வெளிச்சமாகியது. காஞ்சனாதேவியிட ‘முள்ள பொறாமையால் மஞ்சளழகி தன்னைச் சிறை செய்யக் கூடத் தயங்கமாட்டாளென்பதையும் அவன் உணர்ந்திருந் தான்.

மஞ்சளழகியின் மோகன உருவமும் நல்ல குணங்களும் கோட்டை வீரர்களையும் மக்களையும் கவர்ந்திருக்கு மென்பதிலும் அவனுக்குச் சந்தேகமில்லை. அப்படி ஊரும் கோட்டையும் ஒன்றுபட்டு நின்றால் தனது மாலுமிகளைக் கொண்டு மலையூர்க் கோட்டையைக் கைப்பற்றுவது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை உணர்ந்து கொண்டான் படைத்தலைவன். ஆகவே தீவிர யோசனைக்குப் பிறகே எந்த நடவடிக்கையையும் முடிவு செய்யவேண்டுமெனத் தீர்மானித்த படைத்தலைவன் தனது கடைசி அஸ்திரத்தை வீசுவதற்குப் பூர்வாங்கமாக மஞ்சளழகியை நெருங்கி, “மஞ்சளழகி! என்னைச் சிறை செய்வதில் கஷ்ட மிருக்கிறது” என்று துவங்கினான்.

மஞ்சளழகி அவனைக் கூர்ந்து நிர்ப்பயமாக நோக்கினாள். “மற்றவர்களுக்குக் கஷ்டம்” என்றும் கூறினாள்.

“உனக்கு?”

“கஷ்டமில்லை. “

“ஏன்?”

“மற்றவர்களைவிட உங்களை நான் நன்றாகப் புரிந்து கொண்டவள். “

“அதனால்?”

“அதனால் உங்கள் தந்திரத்தையெல்லாம் முன்கூட்டி ஊகித்து எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள முடியும். “

“என் தந்திரத்தை ஊகித்துவிடுவாயா?”

“ஆகா. “

“எப்படி?”
“உதாரணமாக, நீங்கள் இங்கு சிறைப்பட்டால் விஜய சந்திரனைத் தீர்த்து விடும்படி அமீரிடம் கூறி வந்திருப்பீர்கள்” என்றாள் மஞ்சளழகி.

இதைக்கேட்ட இளையபல்லவன் ஆசனத்தை அடைந்து ஸ்தம்பித்து உட்கார்ந்துவிட்டான். மஞ்சளழகி தன் இதயத்தை எத்தனை உன்னிப்பாக அறிந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணரப் பெரும் பிரமிப்பாயிருந்தது படைத்தலைவனுக்கு. இருப்பினும் அதிலொரு சிறு விஷயமிருந்ததை அவள் அறிய வில்லை என்று நினைத்து உள்ளூரச் சிரித்துக்கொண்டான். அந்த நினைப்பையும் உடைத்தெறிந்தாள் மஞ்சளழகி. அவள் மெள்ள நகைத்துக்கொண்டு சொன்னாள், “ஆனால் அதை நீங்கள் விஜயசந்திரன் எதிரில் சொல்லியிருப்பீர்கள்” என்று.

வாயைப் பிளந்தான் வியப்பால் படைத்தலைவன். “என்ன சொல்கிறாய் மஞ்சளழகி?” என்று வினவவும் செய்தான், அந்த வியப்பு குரலில் விரவிக் கிடக்க.

“விஜயசந்திரனைக் கொல்லும் உத்தேசம் உங்களுக் கில்லை” என்றாள் மஞ்சளழகி.

“எப்படித் தெரியும் உனக்கு?”

“உங்களுக்கு அனாவசியக் கொலை பிடிக்காது, ஆகவே. “

“ஆகவே… ”

“விஜயசந்திரன் மரணத்தைச் சுட்டிக்காட்டி இங்குள்ள கோட்டைத் தலைவனை மிரட்டத் திட்டமிட்டிருப்பீர்கள். ஆனால் எனக்குத் தெரியாதா அது வீண் பயமுறுத்தல் என்று? அமீருக்கும் கண்டியத்தேவனுக்கும் வேறு உத்தரவிருக்கும். ஆகையால் விஜயசந்திரனுக்கு ஆபத்து ஏதுமில்லை . ஆகவே, உங்களையும் நான் விடப்போவது இல்லை. “

இளையபல்லவனுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. “அப்படியே வைத்துக் கொள். கடல் புறாவையும், என்னுடைய மற்ற நான்கு மரக்கலங்களையும் வெற்றி கொள்ள முடியுமென்று நினைக்கிறாயா? என்னிடம் எத்தனை மாலுமிகள் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று கேட்டான் கோபத்துடன்.

மஞ்சளழகி, “இப்படி வாருங்கள்” என்று அவனை அழைத்துக்கொண்டு மத்திய மண்டபத்தின் வாயிலை நோக்கிச் சென்றாள். இளையபல்லவன் ஏதும் பேசாமல் அவளைப் பின்தொடர்ந்தான். மத்திய மண்டபத்தின் தெற்கு வாயில் வெளிப் பிராகாரத்துக்கு வழிவிட்டது. அந்தப் பிராகாரம் நல்ல அகலத்துடனும் மிகவும் பலமாக எழுப்பிய சுவர்களுடனும் காணப்பட்டது. சுமார் ஐந்நூறு வீரர்களுக்கு மேல் அந்தப் பிராகாரத்தில் நின்றார்கள்.

பிராகாரக் கோடியில் இருந்த பலமான கோட்டைச் சுவர் மிக உயரமாக இருந்ததால் அதன்மீது ஏறிச்செல்லப் படிகள் இருந்தன. இடையேயிருந்த காவல் வீரர்களைத் தாண்டிப் பிராகாரத்தின் இடைப்பகுதியில் புகுந்து கடந்து மதில் சுவர்ப்படிகளில் ஏறிச் சுவரை அடுத்திருந்த கருங்கல் பாதையை அடைந்தாள் மஞ்சளழகி. அவளைப் பின்தொடர்ந்து வந்த இளைய பல்லவன் அங்கிருந்த காவல் ஏற்பாடுகளைப் பார்த்துப் பிரமித்தான்.

பதக்குகளைச் சமாளிக்கத் தான் அக்ஷய முனையில் எந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தானோ அதே ஏற்பாடுகள் அங்கும் செய்யப்பட்டிருப்பதைக் கண்டான். பாறைகளை எறியும் பெரும் யந்திரங்களும், எரி பந்தங்களை வீசும் ராட்சத விற்களும் ஆங்காங்கு இடைவெளி கொடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் பார்த்துப் பிரமித்த இளையபல்லவனை நோக்கி இளநகை பூத்த மஞ்சளழகி, “குருநாதரே! எப்படியிருக்கிறது ஏற்பாடு?” என்று வினவினாள்.

இளையபல்லவன் கண்கள் நாலா பக்கங்களையும் துழாவிக்கொண்டு நின்றன. மஞ்சளழகியின் சொல்லைக் கேட்டதும் திடீரெனத் திரும்பிய இளையபல்லவன், “குருநாதரே! இது என்ன புதுப் பட்டம் மஞ்சளழகி!” என்று வினவினான்.

“நீங்கள் அக்ஷயமுனைப் பாதுகாப்புக்கு எந்த ஏற்பாடு களைச் செய்தீர்களோ அவற்றையே இங்கு நான் செய்திருக் கிறேன். “

“ஆம். “

“உங்களிடமிருந்து கற்ற படிப்பினைதானே அது?”

“ஓகோ. “

“ஆமாம். ஆகையால் நீங்கள் இந்த வித்தையில் குருநாதரல்லவா!” வேடிக்கையாகக் கேட்டாள் மஞ்சளழகி.

“ஆமாம், ஆமாம். ” எரிச்சலுடன் வந்தது இளையபல்லவன் பதில்.
“சீனப் பெண்ணைப் பற்றிப் பெருமைப்படுகிறீர் களல்லவா?”

“ஆமாம் ஆமாம். மிகவும் பெருமைப்படுகிறேன். “

அவன் குரலில் தொனித்த எரிச்சலைக் கண்டு லேசாக நகைத்த மஞ்சளழகி, “சீனப் பெண்ணின் திறமையை இன்னும் பாருங்கள். இப்படி வாருங்கள்” என்று அவனை அழைத்து மதில் சுவரின் மீது சாய்ந்து வெளியே எட்டிப் பார்க்கும்படி கூறினாள். தானும் அவன் பக்கலில் நின்று விளக்கினாள், “அதோ பார்த்தீர்களா இளையபல்லவரே, உமது மரக்கலங்களை. அதோ நீங்கள் கைப்பற்றிய இரண்டு ஸ்ரி விஜயத்தின் மரக்கலங்கள், அத்தனை மரக்கலங்களும், இந்தக் கோட்டையில் இந்தப் பகுதியிலிருக்கும் எரிபந்தங்கள், பாறை வீசும் பயங்கர யந்திரங்கள் இவற்றின் குறியில் இருக்கின்றன. நான் கையசைத்தால் சில நிமிடங்களில் உமது மற்ற மரக்கலங்கள் அழிந்துவிடும். கடல்புறா பலமானது. அதை அழிப்பது சிறிது சிரமம். ஆனால் முடியாத காரியமல்ல,” என்று.

மஞ்சளழகி சொல்வது முற்றிலும் உண்மை என்பதை அறிந்த இளையபல்லவன் பேசுவதற்கு ஏதுமில்லாததால் வாயடைத்து நின்றான். அவனை மீண்டும் அழைத்துக் கொண்டு மத்திய மண்டபத்துக்கு வந்த மஞ்சளழகி, “இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

பதிலுக்கு இளையபல்லவன் வெறுப்புக் கலந்த சிரிப்பொன்றை உதிரவிட்டான். “நீ குருவை மிஞ்சிய சீடப் பெண்ணாகிவிட்டாய். குரு உன் கையிலிருக்கிறார்,” என்றான்.
இந்தக் கடைசிப் பதில் அவளைச் சற்று உலுக்கவே செய்தது. ‘குரு மட்டும் என் கையிலிருந்தால் இன்றைய கதையே வேறு’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள். பெண்மைக் குணம் அவள் உள்ளத்தில் பெரிதாக எழுந்து நின்றது. இதை மட்டும் இவர் உண்மையாகச் சொன்னால்? என் கையில் இவர் இருந்தால்’ என்று நினைத்த அவள் சில விநாடிகள் மெய்மறந்தாள். ‘சே! சே! இதென்ன வீண் கனவு. இவர் இருப்பது அவள் கையில்’ என்று கடாரத்துக் கட்டழகியை நினைத்துப் பெருமூச்செறிந்தாள். பிறகு சில விநாடிகள் அந்த மத்திய மண்டபத்தில் அங்கும் இங்கும் நடந்தாள். கடைசியில் திடீரென நின்றாள். “இளைய பல்லவரே! நீங்கள் உங்கள் நாட்டை நேசிக்கிறீர்களா?” என்று வினவினாள்.

“சந்தேகமென்ன?” என்றான் இளையபல்லவன் அந்தக் கேள்வியின் காரணத்தை அறியாமல்.

“காஞ்சனாதேவியை நேசிக்கிறீர்களா?” இரண்டாவது கேள்வியும் எழுந்தது மஞ்சளழகியிடமிருந்து.

இதற்கு இளையபல்லவன் பதில் சொல்லவில்லை. அவன் பதிலை அவள் எதிர்பார்க்கவும் இல்லை. “இரண்டையும் நீங்கள் அடைய வழி இருக்கிறது இளையபல்லவரே” என்றாள், முடிவாக.

“என்ன வழி?” ஆத்திரத்துடன் கேட்ட இளையபல்லவன் தானிருக்கும் இடத்தையும், வந்த காரியத்தையும் மறந்தான். இரண்டெட்டில் மஞ்சளழகியை அடைந்து இறுக அவளை அணைத்துக் கொண்டான். “என்ன வழி மஞ்சளழகி?” என்று அவள் காதுக்கருகில் குனிந்து கேட்டான்.
அவள் மெள்ளச் சொன்னாள், “நீங்கள் குருநாதரல்லவா?” என்று.

“ஆம் ஆம். ” அர்த்தம் தெரியாமல் முணுமுணுத்தான் இளையபல்லவன்.

“உங்களுக்குக் குருதட்சிணை கொடுக்க விரும்புகிறேன்” என்று மிக மெதுவாகச் சொன்னாள் மஞ்சளழகி, அவன் அணைப்பிலிருந்து விடுபடாமலே.

“என்ன தட்சிணை?”

“பெற்றுக்கொண்டால் நீங்கள் தப்பிச் செல்லலாம் இங்கிருந்து. அவளையும் அடையலாம், நாட்டையும் ஆளலாம். “

“என்ன! என்ன! சொல். ” துரிதப்படுத்தினான் படைத் தலைவன்.

மஞ்சளழகி இளையபல்லவனை ஏறெடுத்து நோக்கினாள். அவள் கண்கள் விளக்கு வெளிச்சத்தில் பளபளத்தன. காணிக்கை என்னவென்று சொன்னாள் அந்தக் காரிகை. அதைக்கேட்ட இளையபல்லவன் அவளை உதறி விலகினான். “முடியாது முடியாது. அது முடியாது மஞ்சளழகி. கூப்பிடு காவலரை. என்னைச் சிறை செய். என் மரக்கலங்களை அழித்துவிடு” என்று ஆவேசம் வந்தவன் போல் கூவினான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch57 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch59 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here