Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch59 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch59 | Sandilyan | TamilNovel.in

98
0
Read Kadal Pura Part 3 Ch59 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch59 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch59 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 59 : அவள் ஏக்கமும் ஊக்கமும்.

Read Kadal Pura Part 3 Ch59 | Sandilyan | TamilNovel.in

இளையபல்லவன் அணைப்பில் அவன் இரு கைகளுக் கிடையே இழைந்து நின்ற மஞ்சளழகி தான் அவனுக்கு அளிக்க எண்ணிய காணிக்கை என்னவென்று கூறியதும் இணையிலாத் துன்பமடைந்த படைத்தலைவன் நிலை குலைந்து, “முடியாது, முடியாது, அது மட்டும் முடியாது. என்னைச் சிறை செய், என் மரக்கலங்களை அழித்து விடு” என்று கூவினான் என்றால், அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. அவள் காணிக்கை அத்தனை விலைமதிக்க முடியாததாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அவன் மார்பில் இழைந்த வண்ணம் கூறினாள் மஞ்சளழகி மீண்டும், “என் உயிர், அது உங்களுக்குச் சொந்தமானது. அதை நான் கொடுக்கக்கூடத் தேவையில்லை. நீங்களே எடுத்துக்கொள்ள உரிமையுண்டு” என்று.

பதிலுக்கு இளையபல்லவன் கைகள் இறுகின. “உன் உயிரை நீ அர்ப்பணிக்கிறாய் மஞ்சளழகி, அதை ஏற்க நான் என்ன அசுரனா அல்லது அற்பனா?” என்று கூறவும் செய்தான், ஒரு கையை அவள் உடலைவிட்டு நீக்கி அவள் தலைக் குழலைக் கோதியவண்ணம்.

மஞ்சளழகி சோகப் பெருமூச்சு விட்டாள். “இளைய பல்லவரே! நீங்கள் தப்ப வேறு வழியில்லை. இந்தக் கோட்டை சிறியதுதான். ஆனால் மிகவும் பலமானது. இதன் காவலும் சென்ற சில தினங்களில் இரட்டிக்கப்பட்டிருக்கிறது. இங்கு எனக்கு ஓர் உபதலைவனும் இருக்கிறான்” என்றும் கூறினாள்.
இதைச் சொன்ன அவள் குரலில் ஏதோ ஒரு புதுவித ஒலி இருந்ததை இளையபல்லவன் கவனித்தான். “என்ன உபதலைவனா?” என்று வினவினான் அந்தப் புத்தொலியின் காரணத்தை அறிய.

தலையைச் சற்று நிமிர்ந்து இளையபல்லவனை நோக்கினாள் மஞ்சளழகி. “ஆம் படைத்தலைவரே. ஓர் உபதலைவன் இருக்கிறான். சக்கரவர்த்தியின் பகிரங்க உத்தரவுப்படி அவன் என் அடிமை. ஆனால் ரகசிய உத்தரவு எப்படியென்று எனக்குத் தெரியாது. சதா என்னை விட்டு இவன் அகலுவதில்லை. அகலும் சமயத்தில் உங்களை உள்ளே விட்ட இரு காவலரை எனக்குத் துணை வைத்துப் போகிறான். காரணம் கேட்டால், ‘அரசமகளிர் தனிப்பட இருக்கலாகாது’ எனக் கூறித் தலைவணங்குகிறான்.

என் கண்ணசைந்தால் காவலர் அசைவதென்னவோ உண்மை. ஆனால் கண்ணிருக்கும் இடங்களில் எல்லாம் காவலர் இருக்கிறார்கள். நான் இங்கு சிறையிருக்கிறேனா சுதந்திரமாய் இருக்கிறேனா என்று எனக்கே தெரியவில்லை. ஆகவே நான் முயன்றாலும் உங்களை உயிருடன் வெளியே அனுப்ப முடியாது. நீங்கள் தப்ப ஒரே வழி. அது தவறான வழியுமல்ல” என்றாள்.

“எது தவறான வழியல்ல?” என்று வினவினான் இளைய பல்லவன் சீற்றத்தால்.

“நான் சொன்ன வழி. ” “உன்னைக் கொன்றுவிட்டுப் போகச் சொன்னாயே அதுவா ?”

“ஆம், இளையபல்லவரே! இங்கு நாம் தனிமையிலிருக் கிறோம். உங்கள் குறுவாளை எடுத்து என் இதயத்தில் பாய்ச்சி விடுங்கள். இதோ என் கையில் இருக்கிறது ஸ்ரி விஜயத்தின் முத்திரை மோதிரம். இதை எடுத்துச் செல்லுங்கள். நான் நித்திரை புரிவதாகச் சொல்லுங்கள். காவலாளிகள் நம்புவார்கள். தடை செய்யமாட்டார்கள். இங்கிருந்து மரக்கலங்களுடன் தப்பிச் சென்று விடுங்கள். ” இந்த வார்த்தைகளை மஞ்சளழகி சர்வ சாதாரணமாகச் சொன்னாள். அவள் உள்ளத்தில் உணர்ச்சி வேகமிருந்ததால், அது குரலில் சற்றும் தெரியவில்லை.

இளையபல்லவன் கொடுமையாக நகைத்தான். “நன்றா யிருக்கிறது மஞ்சளழகி! உன் உயிரை என் கையால் எடுக்கவா?” என்றான் அந்தக் கொடுமையும் துன்பமும் குரலில் துலங்க.

“உங்களுக்கு உரியதைத்தானே எடுத்துக் கொள்கிறீர்கள்? இதில் என்ன தவறு?” என்று வினவினாள் மஞ்சளழகி.

“என்னை இதயமற்ற கொலைகாரன் என்று நினைக் கிறாயா?” என்று கேட்டான் கடுங்கோபத்துடன்..

“அதைவிடக் கொடியவர் நீங்கள்?” என்றாள் மஞ்சளழகி துன்பம் நிறைந்த குரலில்.

“நானா! கொடியவனா!”

“ஆம். “

“என்ன செய்துவிட்டேன் நான்?”
“இன்னும் என்ன செய்யவேண்டும். என்னை நிராகரித்து விட்டீர்களே. அது போதாதா? நீங்கள் என்னை விட்டுச் சென்றபோதே இந்த உயிர் எனக்கு அர்த்தமற்றதாகி விட்டது இளையபல்லவரே! என்றோ அதைத் துறந்திருப்பேன். ஆனால், ஒரு வீண் ஆசை, ஒருநாள் நீங்கள் திரும்பி வருவீர்கள் என்னைப் பார்க்க என்று. அதனால் உயிரை வைத்திருந்தேன். இளவரசிப் பதவியை ஏன் ஏற்றேன் தெரியுமா? நீங்கள் ஸ்ரி விஜயத்தைப் பிடிக்க வருவீர்கள். உங்களைப் பார்க்கலாம் என்பதற்காக.

பெண் இதய்ம் உங்களுக்குப் புரியாது இளைய பல்லவரே! இந்த உயிர் எனக்குத் தேவையில்லை. நீங்கள் இப்பொழுதிருக்கும் அபாயகரமான நிலையில் அதை ஏற்பது தான் சரி. இல்லையேல் உங்கள் கனவுகள் பறந்துவிடும். ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தை வெற்றி கொள்வதெல்லாம் வெறும் பேச்சளவில் நிற்கும். என் காணிக்கையை ஏற்றுக்கொள் ளுங்கள்” என்று கூறிய மஞ்சளழகி அவன் பிடியை விட்டு விலகி நின்றாள்.

இளையபல்லவன் வாயடைத்து ஸ்தம்பித்து அவளை வெறித்து நோக்கிக்கொண்டு பல விநாடிகள் நின்றான். அவன் சித்தத்தில் பல உண்மைகள் வலம் வந்து கொண்டிருந்தன. அவள் இதயத்தின் ஆழத்தை, அந்த ஆழத்தில் புதைந்து கிடந்த அன்பை, அந்த அன்பில் முளைத்த மாபெரும் தியாகத்தை எண்ணி எண்ணிப் பெரும் பிரமிப்பின் வசப்பட்டான் அவன். அவள் முதலில் தன்னை வரவேற்ற முறை, நெஞ்சம் கல்லாகி விட்டதாகச் சொன்ன கதை எல்லாம் உள்ளக் குமுறலை மறைக்கப் போடப்பட்ட பெரும் வேஷம் என்பதை உணர்ந்து கொண்டான் இளையபல்லவன்.

அப்படியானால் தன் மரக்கலங்களை முகத்துவாரத்துக் குள்ளிருந்து எதிர்பார்க்க விஜயசந்திரனுக்குப் பிறப்பித்த உத்தரவு? தன் மரக்கலங்களை விநாடி நேரத்தில் அழிக்க அவள் தன் வழிகளையே பின்பற்றச் செய்த ஏற்பாடுகள் எல்லாம் எதற்காக? இதற்கு முதலில் விடை காண முடியவில்லை அவனால். ஆனால் யோசிக்க யோசிக்க அவனுக்கு உண்மை ஓரளவு விளங்கவும் முற்பட்டது. வருஷக்கணக்கில் பெண்ணை ஏற்காத ஜெயவர்மன் திடீரென்று அவளை ஏற்றதற்கும் மலையூர் கொண்டு வந்ததற்கும் பெரும் காரணங்கள் இருக்கவேண்டுமென்று தீர்மானித்தான் அவன்.

மஞ்சளழகியைக் கோட்டைத் தலைவியாக்கி இளவரசியாகவும் செய்துவிட்டால் அவள், மக்களைப் பாதுகாத்தாக வேண்டும். மீறினால் மக்களே அவளை அழித்துவிடுவார்கள். அவள் கடமை தவறாதிருக்க ஓர் உபதலைவனும் கோட்டையில் நியமிக்கப்பட்டிருக்கிறான்.

அந்த உபதலைவன் உண்மை யில் மஞ்சளழகியின் சிறைக்காவலன். இதையெல்லாம் உடைக்கத் தன்னையே அர்ப்பணிக்கிறாள் அக்ஷயமுனை அழகி ஸ்ரி விஜயத்தின் பிற்காலச் சக்கரவர்த்தினி. அவளைக் கொன்று அந்த மண்டபத்தில் கிடத்தி அவள் உறங்குவதாகக் கூறி அவள் முத்திரை மோதிரத்துடன் சென்றால் யாரும் அவனைத் தடுக்க மாட்டார்கள். மரக்கலங்களிடை சென்றதும் நங்கூரத்தை எடுத்துத் தப்பியும் சென்றுவிடலாம். ஆனால்…? நினைக்கவும் அருவருப்பாய் இருந்தது படைத்தலைவனுக்கு. அவள் செய்ய முற்பட்ட மகத்தான தியாகம் மலைபோல் அவன் இதயத்தைத் தாக்கியது. ‘ஆயிரம் ஸ்ரி விஜயங்களைக் கைப்பற்றலாம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு பெண்ணை என்னால் திரும்பப் பெறமுடியாதே’ என்று நினைத்த இளையபல்லவன் நின்றபடியே இருந்தான்.
மஞ்சளழகியும் பேசவில்லை. அவன் சிந்தையிலோடிய எண்ணங்களை நன்றாகப் புரிந்துகொண்டாள் அவள். அந்த மௌனத்தைக் கலைக்க அவள் வாயைத் திறந்தபோது அவன் அவளைப் பேசவேண்டாமென்று கையினாலேயே தடுத்தான். பிறகு அந்த மத்திய மண்டபத்தில் அங்கும் இங்கும் உலாவினான். கடைசியில் ஏதோ முடிவுக்கு வந்து, “மஞ்சளழகி! உன் காவலரை அழை” என்றான்.

“எதற்கு?”

“என்னைச் சிறை செய்ய. “

“அப்படியானால் என் காணிக்கையை ஏற்க மறுக் கிறீர்கள்?”

“ஆம். “

“ஏன்?”

“என் உடம்பிலும் நல்ல உணர்ச்சிகள் ஓடுகின்றன. இந்தக் கொள்ளைக்காரன் அடியோடு கெட்டுவிடவில்லை. “

“சிறை செய்தால் நீங்கள் தப்ப முடியாது. “

“தப்ப இஷ்டமில்லை. “

“உங்கள் உயிரைத் தந்தை வாங்கிவிடுவார். “

“உன் உயிரைவிட எனக்கு அது சிறந்ததல்ல. ” இந்தக் கடைசிச் சொற்களை வெகு கோபத்துடன் கூறினான் இளைய பல்லவன். அவன் கோபத்தின் வேகம் அவனுக்கு அவளிட மிருந்த காதலைக் காட்டியது. அதைக்கேட்ட மஞ்சளழகியின் கொவ்வை இதழ்களில் இளநகை அரும்பியது. அவள் அவனை நெருங்கி வந்து அவன் தோள்மீது இரு கைகளையும் வைத்துத் தலையை நிமிர்த்தி அவன் முகத்தை நோக்கினாள். உடலை யும் மெள்ள அவன்மீது சாய்த்தாள். உடல் அழுந்தியது, மெல்ல கண்கள் கலந்தன. உணர்ச்சிகள் உடல் மாறிவிட்டவை போல் சுழன்றன. “இது போதும் எனக்கு” என்று குழைந்த குரலில் சொற்களை உதிரவிட்டாள் மஞ்சளழகி.

“எது?” என்று ஏதுமறியாமல் வினவிய இளையபல்லவன் கைகள் அவனை அறியாமலே அவள் பொன்னிற மஞ்சள் உடலைச் சுற்றிச் சென்றன. பெரிய பல புஷ்பங்களிணைந்த ஆரம்போல் அவன்மீது துவண்ட அவள் உடல், அந்தக் கைகளின் ஊடே மெல்லத் துடிப்புடன் அசைந்தது. அவன் கேட்ட “எது?” என்ற கேள்விக்குப் பதில் சொல்ல அவளுக்குப் பல விநாடிகள் பிடித்தன. இடையே ஒரு காவியமே நிகழ்ந்தது. முடிவில் சொன்னாள் அவள், “என் உயிரைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் மதிப்பு” என்று.

இளையபல்லவன் அந்த மோகனாங்கியின் சமீபத்தில், அவள் உடலழுந்திய காரணத்தால் மெய்மறந்திருந்தான். பேசும் சக்தியைக்கூட அவன் அந்தச் சில விநாடிகளில் அடியோடு இழந்திருந்தான். இத்தனை பலவீனம் தனக்கு உண்டு என்பதை அவன் அப்பொழுதுதான் உணர்ந்தான். யாருடைய காதலை அவன் வரவேற்றானோ அந்தக் காஞ்சனாதேவியின் அருகாமைகூட அளிக்காத கற்பனைக்கும் எட்டாத பெரும் பிணைப்பு ஒன்று மஞ்சளழகியிடம் தனக்கு ஏற்பட்டதை எண்ணிப் பிரமித்தான் அவன்.

அந்தச் சில விநாடிகளில் தான் யாரைக் காதலிக்கிறோம் என்ற உண்மைகூட விளங்காதிருந்தது அவனுக்கு. அப்படி அவனைக் குழப்பியது மஞ்சளழகியின் மோகன உருவமா, அவள் அன்பின் ஆழமா, அவள் செய்ய முற்பட்ட தியாகத்தின் பலமா? அவனுக்கே புரியவில்லை. ஒன்று மட்டும் புரிந்திருந்தது அவனுக்கு. எது எப்படி யானாலும் மஞ்சளழகியைக் கைவிடுவதில்லை என்ற உறுதி பூண்டான் அவன். அந்த உறுதியின் விளைவாக அவளை அந்த மண்டபத்தின் கோடிக்கு அழைத்துச் சென்று, “மஞ்சளழகி! உன் அந்தரங்க அறை எங்கிருக்கிறது?” என்று வினவினான்.

“இதற்குப் பின்னால். ஏன் கேட்கிறீர்கள்?” என்று வினவினாள் அவள்.

“அதைப் பார்க்க வேண்டும் எனக்கு” என்றான் இளைய பல்லவன்.

மஞ்சளழகியின் முகத்தில் சங்கடமும் குழப்பமும் தெரிந்தன.

இளையபல்லவன் தன்னைப் பெண்டாளத் தீர்மானிக்க வில்லை என்பதை அவள் நன்றாக உணர்ந்திருந்தாள். அவன் அப்படிப்பட்ட காமுகனுமல்ல, அற்பனுமல்ல என்பது அவளுக்குச் சந்தேகமறப் புரிந்திருந்தது. ஆகவே கேட்டாள் மீண்டும், “ஏன் பார்க்க விரும்புகிறீர்கள்?” என்று.

“காரணம் கேட்காதே. சொல்கிறபடி செய்” என்று அதட்டினான் இளையபல்லவன்.

மஞ்சளழகி புன்முறுவல் பூத்தாள். பெண்ணை எந்த நிலையிலும் அதட்டும் அந்த ஆண்பிள்ளைக் குணம் அந்த ஆபத்தான நிலையிலும் ஓங்கி நிற்பதை எண்ணிய மஞ்சளழகி மெல்ல நகைக்கவும் செய்தாள்.

“ஏன் நகைக்கிறாய்?” என்று வினவினான் படைத் தலைவன்.

“என்னை அதட்டுகிறீர்களே?” என்று கேட்டாள் அவள் மீண்டும் நகைத்து.

“ஏன் அதட்டக் கூடாதோ?”

“எப்படி அதட்டலாம்? நான் இந்தக் கோட்டையின் தலைவி. இந்த நாட்டின் இளவரசி. “

“அதெல்லாம் புதுப் பதவிகள். “

“பழைய பதவிகள்… ”

“பலவர்மனின் வளர்ப்புப் பெண், தாய் தந்தை யாரென்று தெரியாத அநாதை. அத்துடன். ” இதைச் சொல்லி நிறுத்திய இளையபல்லவன் குரலில் ஏதோ புதுவித ஒலி இருந்தது.

அதை மஞ்சளழகி கவனித்தாள். ஆகவே கேட்கவும் செய்தாள்: “அத்துடன்… ”
“என்னைப் பைத்தியமாக அடித்த ஒரு பைங்கிளி” என்றான் இளையபல்லவன், அவளை விழுங்கி விடுபவன் போல் பார்த்து.

மஞ்சளழகி மோகப் புன்முறுவல் செய்தாள். தன்னிட முள்ள காதலைப் பகிரங்கமாகச் சொல்லப் படைத்தலைவன் பயப்படுகிறான் என்பதைப் புரிந்துகொண்டாள். அந்தப் பயத்துக்குக் காரணமும் அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. காஞ்சனாதேவியிடம் ஏற்கெனவே காதல் கொண்ட மனம் தன்னிடமும் லயித்துக் கிடப்பதால் திண்டாடுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது பெண்ணின் கூரிய புத்திக்கு. அவன் இதய வீட்டில் பாகச் சுவர் எழுப்பப்பட்டு இருபுறங்களிலும் இரு பெண்களிருப்பதை மனக்கண்ணால் பார்த்த மஞ்சளழகி பெருமகிழ்ச்சி கொண்டாள். அவனை மேற்கொண்டு சோதிப்பதில் அர்த்தமில்லை என்பதையும், சோதனை மிகக் கடுமையானால் அவன் தாங்குவதும் கஷ்டமென்பதையும் புரிந்துகொண்ட மஞ்சளழகி, “இப்படி வாருங்கள்” என்று அவனை அழைத்துக் கொண்டு மத்திய மண்டபத்தின் ஒரு கோடியில் இருந்த கதவைத் திறந்து கொண்டு உட்புறம் சென்றாள்.

அந்தக் கதவுக்குப் பின்பு ஒரு குறுகிய தாழ்வாரம் ஓடியது. அதன் கோடியில் இருந்த அறைக் கதவைத் திறந்தாள் அவள். அறை சிறியதாகத்தான் இருந்தது. ஆனால் மிக மனோகரமா யிருந்தது பார்வைக்கு. அத்தனை அழகாக வைத்திருந்தாள் அந்த அறையை மஞ்சளழகி. கோடியில் இருந்த சாளரம் நேரே ஜம்பி நதியை நோக்கிக் கொண்டிருந்தது. ஒரு மூலையி லிருந்த விளக்கின் சுடர் ஜம்பி நதியின் மெல்லிய காற்றில் அவ்விருவர் உள்ளங்களைப்போல் படபடத்துக் கொண் டிருந்தது. புதிதாக உள்ளே நுழைந்த இளையபல்லவனை அறைக் கோடிக் கூண்டிலிருந்த பஞ்சவர்ணக் கிளி கழுத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தது. அறையின் ஒரு மூலையில் சாளரத்தை ஒட்டிப் போடப்பட்டிருந்தது ஒரு சிறு பஞ்சணை. அதன் கீழே விரிக்கப்பட்டிருந்தது பெரும் கம்பளம்.

அந்தக் கம்பளத்தைச் சுட்டிக்காட்டிய இளையபல்லவன் கேட்டான், “இளவரசிக்கு இது நடை பாவாடையோ?”

என்று.

“நடை பாவாடை இத்தனை அகலமாக உள்ளே அடைக்கும்படியாக இருக்காது” என்றாள் மஞ்சளழகி.

“இது எதற்கு?”

“சேடிகள் படுக்க. “

“நீ தனியாக உறங்குவதில்லையா?”

“இளவரசிகள் உறங்கமாட்டார்கள். ஆனால்….”

“ஆனால்… ”

“தனியாக உட்கார்ந்திருப்பார்கள். “

“உட்கார்ந்திருப்பார்களா!”

“ஆம்” என்ற மஞ்சளழகி, “இப்படி வாருங்கள்” என்று கூறி அவனைப் பஞ்சணையிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அதில் உட்காரச் செய்தாள். “இப்பொழுது சாளரத்தின் வழியாக நோக்குங்கள்” என்றாள்.

அவள் சொற்படி நோக்கிய இளையபல்லவன் எதிரே விரிந்த காட்சியைக் கண்டு பிரமித்தான். அந்த இடத்திலிருந்து ஜம்பி நதியின் அந்தப் பகுதி மட்டுமல்ல முகத்துவாரங்கூடத் தெரிந்தது. “முகத்துவாரம் தெரிகிறதல்லவா?” என்று கேட்டாள் மஞ்சளழகி.

“தெரிகிறது” என்றான் இளையபல்லவன், எதற்காகக் கேட்கிறாள் என்பதை அறியாமல்.

பதில் சொல்லுமுன்பு மஞ்சளழகியும் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அத்துடன் சொன்னாள், “இளையபல்லவரே, எத்தனையோ பகல்கள், எத்தனையோ இரவுகள், இந்த இடத்தில் தனிமையில் உட்கார்ந்து அந்த முகத்துவாரத்தை நான் நோக்கிக் கொண்டிருப்பேன். நீங்கள் வருவீர்கள் என்று ஏங்கியிருப்பேன். இந்த இடம் எனக்கு ஏக்கமும் அளித்தது. உங்களை ஒரு நாள் சந்திக்கலாம் என்ற ஊக்கமும் அளித்தது. விஜயசந்திரன் என்ன முயன்றாலும் உங்களை வெற்றி கொள்ள முடியாதென்பது எனக்குத் தெரியும். ஆனால் ஸ்ரி விஜயத்தின் கொடிகளைப் பறக்கவிட்டு நீங்கள் வந்தபோது மற்றக் காவலர் ஏமாந்தார்கள். நான் மட்டும் ஏமாறவில்லை ,” என்று.

இதை முடித்த அவள் கடலையும் நதியையும் மீண்டும் நோக்கினாள். அவள் அழகிய நாசியிலிருந்து பெருமூச் சொன்று கிளம்பி உடலை ஒருமுறை எழுப்பித் தாழ்த்தியது. இளையபல்லவன் அடியோடு நிலை குலைந்தான். அவன் ஏக்கம், எதிர்பார்ப்பு எல்லாம் அவனை அடியோடு குழப்பி விட்டிருந்தன. அவன் இடது கரம் அவள் இடையை நாடிச் சென்று அவளை அருகில் இழுத்துக்கொண்டது. கண்கள் கண்களை நாடின. உதடுகளும் உதடுகளை நாடியிருக்கும், ஒரு விபரீதம் மட்டும் அந்தச் சமயத்தில் நேர்ந்திராவிட்டால்!

Previous articleRead Kadal Pura Part 3 Ch58 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch60 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here