Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch6 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch6 | Sandilyan | TamilNovel.in

152
0
Read Kadal Pura Part 3 Ch6 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch6 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch6 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 6 : மருந்தும் மந்திரமும்.

Read Kadal Pura Part 3 Ch6 | Sandilyan | TamilNovel.in

அணுகிவரும் ஆபத்து மலைபோலிருந்தாலும் அசையாத நெஞ்சுரம் படைத்த அமீரின் முகத்திலேயே கலவரம் நிரவிக் கிடந்ததையும், “நாம் மோசம் போய்விட்டோம்” என்று அவன் அச்சத்துடன் இணைந்து கூறித் தன்னை தனியே வரும்படி அழைத்ததையும் கண்ட இளையபல்லவன் எதிர் நோக்கி வரும் ஆபத்து உண்மையில் பெரிதாகத்தானிருக்க வேண்டுமென்பதை உணர்ந்து கொண்டானாகையால் அருகிலிருந்த காஞ்சனாதேவியைச் சட்டென விட்டு அமீருடன் சற்று எட்டச் சென்று, “என்ன அமீர்? நாம் என்ன மோசம் போய்விட்டோம்?” என்றான்.

அமீரின் பெருலிழிகள் இளையபல்லவனைச் சஞ்சலத் துடன் ஏறெடுத்து நோக்கின. “நக்காவரம் நாம் ஓராண்டுக்கு முன் பார்த்த நிலையில் இல்லை,” என்ற அவன் பெரு உதடு களிலிருந்த சொற்களிலும் அது சந்தேகமற ஒலித்தது.

“வேறு எப்படியிருக்கிறது?” என்று வினவினான் இளைய பல்லவன், அமீரின் குரலிலும் முகத்திலும் தெரிந்த கவலையால் தானும் கவலைக்குள்ளாகி.

“விரோத பாவத்திலிருக்கிறது” என்று விளக்கினான் அமீர்.

“நக்காவரமா?” ஆச்சரியத்துடன் வினவினான் இளைய பல்லவன்.

“ஆம். “

“நக்காவரம் தமிழர்கள் வசமில்லையா?”

“இல்லையென்று தெரிகிறது. “

“அங்குள்ள சோழநாட்டுப் படைப்பகுதி?”

“என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. “

“இதெல்லாம் உனக்கு யார் சொன்னார்கள்?”

“நக்காவரத்தை அணுக வேண்டாமென்று பலவர்மன் சொன்னதாக முதலில் கண்டியத்தேவர் சொன்னார். இரண்டு நாட்களாக நினைவிழந்து படுத்திருந்த பலவர்மன், ‘கடல் மோகினியில் ஆபத்து. கப்பலைத் திருப்பு’ என்று அடிக்கடி கூவியதாக. அவனுக்குச் சிகிச்சை செய்த சேந்தன் சொன்னான். ஓராண்டுக்கு முன்னர் நக்காவரத்தில் தமிழர் குடியிருப்பும் படையிருப்புமிருந்ததைப் பார்த்திருந்ததால் பலவர்மன் வீண் பிரமையில் உளறுகிறானென்று நினைத்தேன். “

“நானும் அப்படித்தான் நினைத்தேன். என்னிடமும் கடல் மோகினியில் ஆபத்து காத்திருப்பதாகப் பலவர்மன் கூறினான். தமிழர் குடியிருப்பில் தமிழர் ஆதிக்கத்துக்குள் ளிருக்கும் அந்தத் தீவுகளில் என்ன ஆபத்திருக்க முடியும் என்று நானும்தான் எண்ணினேன்,” என்றான் இளைய பல்லவன்.

“நாம் எண்ணியது தவறு இளையபல்லவரே! மேலே வாருங்கள் காட்டுகிறேன்,” என்ற அமீர் சற்றுத் தூரத்தேயிருந்து நடுப் பாய்மரத்தின் உச்சியைத் தன் பெருவிழிகளால் நோக்கினான்.

அமீரின் நோக்கமின்னதென்று புரிந்துகொண்ட இளைய பல்லவன் காஞ்சனாதேவியை அணுகி அவளைத் தனது அறைக்குப் போகச் சொல்லிவிட்டு அமீருடன் நடுப் பாய்மரத் தண்டில் ஏறிச் சென்றான். மரத்தில் தொற்றி ஏறும் மந்திகளை விட அதிக லாகவமாகவும் துரிதமாகவும் பாய்மரத் தண்டில் ஏறிச் சென்ற அமீரையும் இளையபல்லவனையும் அவர்கள் உச்சியை அடையும் வரையில் பார்த்துக்கொண்டு தளத்தின் மீதே நின்ற காஞ்சனாதேவி உள்ளே எழுந்த விசாரத்தின் விளைவாகப் பெருமூச்சொன்றை விட்டுவிட்டு அக்ர மந்திரத்தை நோக்கி நடந்தாள்.

நடுப் பாய்மரத்தின் உச்சிக் கருகிலிருந்த சக்கர வட்ட மரப்பலகையில் அமீருடன் நின்று கொண்ட இளையபல்லவன் தூரத்தே தெரிந்த நக்காவரம் தீவுகளை நோக்கிக் கண்களை ஓடவிட்டான். நான்கு பெரும் தீவுகளையும், புள்ளி புள்ளியாகப் பல திட்டுகளையும் கொண்டிருந்த நக்காவரம் தீவுக் கூட்டத்தைக் கடல் மோகினியின் புஷ்ப ஒட்டியாணமென்று தமிழர்கள் அழைத்ததில் தவறில்லையென்றே இளையபல்லவன் அந்த விநாடியில் நினைத்தான்.

கடல் மோகினித் தீவுக் கூட்டத்தின் ஓரங்களில் மண்டிக் கிடந்த பூமரச்சோலைகள் அந்த இரவில் கண்ணுக்குச் சரியாகத் தெரியாவிட்டாலும் புஷ்பங்களின் நறுமணம் மட்டும் இளையபல்லவன் நாசியை எட்டியதாகையால் நக்காவரம் முகப்புத் தீவின் தூரம் அதிகமில்லை என்பதைப் புரிந்து கொண்டான் படைத்தலைவன். தூரத்தே அடர்த்தியாக, கரேலெனத் தெரிந்தது கரையோரத் தோப்பிலொன் றாகத்தானிருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்ட இளையபல்லவன் மீண்டும் அந்தத் திசையிலேயே கண்களை ஊன்றிக்கொண்டு, “கடல் மோகினியின் முகப்புத் தீவுக்கு அரை காத தூரமே இருக்கிறது அமீர்,” என்று உள்ளத்தில் எழுந்ததை வெளிப்படையாகவும் காரணமாகவே சொன்னான்.

“படைத்தலைவர் ஊகத்தில் தவறில்லை,” என்று ஆமோதித்தான் அமீர்.

“தரை அரை காதத்திற்குள் இருந்தால்தான் புஷ்ப வாசனை நாசியை எட்டும்” என்று புதிதாகக் கண்டுபிடித்து விட்டவன் போல் கூறினான் படைத்தலைவன்.

“ஆம்” ஏதோ ஆமோதிக்க வேண்டுமென்பதற்காக வந்தது அமீரின் பதில்.

“நமக்கும் கடல் மோகினிக் கரைக்குமுள்ள தூரம் அதிக மிருந்தால் கரையோ தோப்போ கண்ணுக்குப் புலப்படா. ” “ஆம் ஆம். “

இதற்குப் பிறகு சில விநாடிகள் மௌனம் சாதித்த இளையபல்லவன் தான் நின்றுகொண்டிருந்த நடு மரத்தின் பாயின் புடைப்பையும் தூரத்தே இருந்த கரையின் நிலையையும் பல விநாடிகள் ஆராய்ந்தான். பிறகு மீண்டும் அமீரை நோக்கி, “அமீர்! காற்று இருக்கும் வன்மையைப் பார்த்தால் விடிவதற்கு முன்பே நாம் கடல் மோகினியின் பிரதானத் துறைமுகத்தை அணுகிவிடுவோம்” என்றான்.

“சந்தேகமில்லாமல் அணுகி விடுவோம்” என்றான் அமீர்.

“அணுகினால்… ” என்று மேலும் ஏதோ சொல்லப்போன இளையபல்லவனை இடைமறித்த அமீர், “அதோ அந்த நான்கு பிசாசுகள் காத்திருக்கின்றன நம்மை வரவேற்க,” என்று துறைமுகத்தின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டினான்.

அந்த இடத்தை முன்பே கவனித்து அங்குக் காத்திருந்த நான்கு பிசாசுகளையும் பார்த்துவிட்ட இளையபல்லவன், “அந்த நான்கு ஏன் தமிழருக்குச் சொந்தமாயிருக்கக் கூடாது?” என்று வினவினான்.

“துறைமுகத்தை அடுத்துள்ள கோட்டையின் ஸ்தூபி அதோ அந்தத் தோப்புக்குள் தெரிகிறதல்லவா?” என்று தீவிலிருந்த ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினான் அமீர்.

“ஆம். தெரிகிறது, நடுவே சிறிது வெண்மையாய்,” என்று தலையை ஆட்டினான் இளையபல்லவன்.

“அந்த ஸ்தூபியின் உச்சியில் விளக்கு இருக்கிறதா?”

“இல்லை. “

“துறைமுகத் தளத்தில் எங்காவது விளக்கு இருக்கிறதா?”

“இல்லை. எங்குமே விளக்கில்லை. “

“ஊர் உறங்குகிறது. பிரதான மாளிகைகூட உறங்குகிறது என்றெல்லாம் வைத்துக் கொள்வோம். ஆனால் கலங்கரை விளக்கம் கூடவா உறங்கும்?” இப்படிக் கேட்ட அமீர் துறைமுக முனையில் தெரிந்த ஒரு பெரும் தூணைச் சுட்டிக் காட்டினான்.

தூரம் அதிகமிருந்ததால் அது ஒரு தூணாக இளைய பல்லவன் கண்களுக்குத் தெரியாவிட்டாலும் தூரக்கிழக்கில் பல வருஷங்கள் அகூதாவுடன் கழித்திருக்கும் அமீரின் கூரிய கண் பார்வையும் ஊகமும் தவறாயிருக்க முடியாதென்பதை உணர்ந்து கொண்ட படைத்தலைவன், “ஆமாம், அமீர்! எந்தத் துறைமுகத்திலும் கலங்கரை விளக்கத்தை அணைக்க மாட்டார்கள். ஏன் அதை அணைத்து விட்டார்கள் இங்கே?” என்று கேட்டான்.

“தூரக்கிழக்கு நாடுகளில் ஒரு பழக்கமுண்டு படைத் தலைவரே! புதிதாகப் பிடிக்கப்படும் தீவுகளில் அதைப் பிடிப்பவர்கள் ஆதிக்கம் நிலைக்கும்வரை கலங்கரை விளக்கம் எரியாது. வேறு விளக்குகளும் இல்லங்களுக்கு வெளியே அனுமதிக்கப்படமாட்டாது. கடற்கரை எங்கணும் காவல் மட்டும் பலமாயிருக்கும்” என்று அமீர் விளக்கினான்.

கடற்போரில் வெகு சீக்கிரம் மிகுந்த திறமை எய்தியிருந்த இளையபல்லவனுக்கு அந்தப் பகுதிகளிலிருந்த தீவுகளின் பழக்க வழக்கங்கள் சரியாகத் தெரியாதிருந்தாலும் அமீரின் விளக்கத்திலிருந்து பல விஷயங்களை அவன் ஊகித்துக் கொண்டான். அவன் ஊகித்துக்கொண்ட விஷயங்களில் முதலாவது கடல் மோகினி சமீப காலத்தில் கைமாறியிருக்கிற தென்பது.

ஆகவே அதுவரை அங்கிருந்த தமிழர் ஆதிக்கம் நீங்கிவிட்டது என்பது இரண்டாவது. தமிழர் விரோதிகளிடம் சிக்கியிருந்தால், ஒன்று ஸ்ரி விஜயத்திடம் சிக்கியிருக்க வேண்டும், அல்லது கலிங்கத்திடம் சிக்கியிருக்க வேண்டும் என்பது மூன்றாவது. இரண்டும் தூரக்கிழக்கில் கடலாதிக்கம் உள்ள நாடுகள். ஆகவே கடல் புறாவை எதிர்க்கச் சித்தமாய் இருப்பவை என்பது நான்காவது. எதிரே தூரத்தில் துறைமுகப்பில் தெரிந்த நான்கு பிசாசுகளும் நான்கு பெரும் மரக்கலங்கள் என்பது ஐந்தாவது. ஆறாவதும் ஒன்றிருந்தது.

ஆனால் அந்தக் கேள்விக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை இளையபல்லவனுக்கு. ‘கடல் மோகினி கலிங்கத்திடமிருந் தாலும் ஸ்ரி விஜயத்திடம் இருந்தாலும் பலவர்மன் அச்சமுறக் காரணமில்லை. அப்படியானால் ஏன் திகில் படுகிறான் அவன்” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் இளையபல்லவன். ஆகவே தன் ஊகத்துக்கு மேற்பட்ட மர்மம் ஒன்று எதிரேயுள்ள துறைமுகத்தில் தன்னை எதிர்நோக்கி யிருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்ட இளைய பல்லவன், “சரி, வா அமீர்,” என்று அந்த அரபுநாட்டு வணிகனை அழைத்துக்கொண்டு பாய்மரத்தின் கீழே இறங்கித் தளத்துக்கு வந்து சில விநாடிகள் யோசித்துவிட்டு, “அமீர்! இந்த நிலையைச் சற்று சாமர்த்தியத்துடன்தான் கையாள வேண்டும்,’ என்று கூறினான்.

“உண்மைதான் படைத்தலைவரே!” என்று அமீர் கூறினான்.

“அதற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டான் இளைய பல்லவன்.

“நமது மரக்கலத்திலும் நம்மைத் தொடரும் இரண்டு மரக்கலங்களிலுமுள்ள பந்தங்களையும் விளக்குகளையும் அணைத்துவிட வேண்டும். “

“உம்… ”

“இப்பொழுது நமது மரக்கலத்தில் மூன்று பாய்களே விரிந்திருக்கின்றன. “

“உம். “

“மற்றவற்றையும் விரித்துவிட்டால் இருட்டிருக்கும் போதே நாம் துறைமுகத்திற்குள் பிரவேசித்துவிடலாம். “

“பிறகு?”

“பிறகு நமது கடல் புறாவையும் மற்ற இரு மரக்கலங் களையும் கொண்டு அந்த நான்கு மரக்கலங்களையும் அழித்து விடலாம். “

அமீரின் திட்டத்துக்கு இளையபல்லவன் முகத்தில் சிறிதும் ஆதரவில்லை . தீவிர சிந்தனையில் இளையபல்லவன் இறங்கிவிட்டதை அவன் முகம் சந்தேகமற நிரூபித்தது. பல விநாடிகள் மௌனமாயிருந்த பிறகு இளையபல்லவன் சொன்னான்: “அமீர்! உன் திட்டங்களில் இரண்டு பலவீனங்கள் இருக்கின்றன” என்று.

“என்ன பலவீனங்கள்?” என்று ஏதும் புரியாமல் வினவினான் அமீர்.

“முதலாவது, உன் திட்டம் நிறைவேற வேண்டுமானால் நமது மரக்கலம் வருவதைத் துறைமுக வீரர்கள் காணாதிருக்க வேண்டும். ஆனால் இதுவரை பெரும் பந்தங்களுடனும் விளக்குகளுடனும் நம்து மரக்கலம் வந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது அதோ அந்த நான்கு மரக்கலங்களும் போருக்குத் தயாராயில்லாமல் உறங்கிக் கொண்டிருக்க வேண்டும். மூன்றாவது ஒன்றிருக்கிறது. “

“என்ன படைத்தலைவரே?”

“நாம் கைப்பற்றியிருக்கும் இரண்டு மரக்கலங்களிலுள்ள கலிங்கத்து மாலுமிகள் ஒத்துழைக்க வேண்டும்?”

“அவர்கள் ஏன் ஒத்துழைக்க வேண்டும்?”

“நம் கைவசமிருக்கும் மாலுமிகளைக் கொண்டு மூன்று மரக்கலங்களை நடத்திச் செல்வதே கஷ்டம். போர் என்றால் எப்படி சாத்தியம்?” என்று வினவினான் இளையபல்லவன்.

இளையபல்லவன் சொல்லியதில் உண்மை ததும்பிக் கிடந்ததைக் கவனித்த அமீர், ஓராண்டுக்குள் கடற்போர் தத்துவங்களை அவன் தன்னைவிட அதிகமாகப் புரிந்து கொண்டதை நினைத்துப் பெரும் ஆச்சரியத்துக்குள்ளானான். “உண்மை படைத்தலைவரே! இந்த விஷயங்களை நான் யோசிக்கவில்லை” என்றும் கூறினான் ஆச்சரியம் குரலில் பிரதிபலிக்க.

இளையபல்லவன் மீண்டும் தீவிர யோசனையில் ஆழ்ந்தான். பிறகு தானே தலையை இருமுறை ஆட்டிக் கொண்டான். அவன் தீவிர யோசனையிலிருக்கும்போது தலையிடுவது ஆபத்தென்பதைப் பலமுறை உணர்ந்து கொண்டுள்ள அமீர் அவன் பக்கத்தில் மௌனமாகவே நின்றான். பல விநாடிகளுக்குத் தனது ஈட்டி விழிகளை அமீரை நோக்கித் திருப்பிய படைத்தலைவன், “அமீர், விளக்குகள் தளத்தில் நன்றாக எரியட்டும். அணைந்த பந்தங்களையும் கொளுத்திவிடு” என்று அமீர் சொன்ன யோசனைக்கு நேர் விரோதமான யோசனையைச் சொன்னான்.

“இளையபல்லவரே! நீங்கள் கூறுவது… ” மேலும் ஏதோ கூறப்போன அமீர்மீது இன்னும் பெரிய இடியை எடுத்து வீசிய இளையபல்லவன், “நம்மைத் தொடரும் மற்ற இரு மரக்கலங்களிலும் பந்தங்கள் கொளுத்தப்படட்டும். விளக்குகளும் எரியட்டும்” என்று.

அமீரின் முகத்தில் வியப்பு மட்டுமல்லாமல் எரிச்சலின் சாயையும் விரிந்தது. “நாம் வருவது எதிரிகளுக்கு நன்றாகத் தெரிய வேண்டுமா?” என்று வியப்பும் எரிச்சலும் குரலிலும் தொனிக்கக் கேட்டான் அவன்.

இளையபல்லவன் பதில் தங்கு தடையின்றி வந்தது. “மிக நன்றாகத் தெரியவேண்டும்” என்றான் அகூதாவின் உபதலைவனாகப் பிரசித்தி பெற்ற இளையபல்லவன்.

“அடுத்தபடி என்ன செய்ய வேண்டும்?”

“பாய்களை அவிழ்த்துச் சுருட்டிவிட வேண்டும். “

“மரக்கலம் எப்படித் துறையை நோக்கிப் போகும்?”

“மாலுமிகள் துடுப்புகளைக் கொண்டு துழாவட்டும். “

அதுவரை பொறுத்த அமீர் அதற்குமேல் பொறுக்காமல், “துடுப்புகளைக் கொண்டு துழாவினால் கடல்புறா துறைமுகத்துக்கருகில் எப்பொழுது போகும் தெரியுமா?” என்று வினவினான்.

“தெரியும். விடிந்து பல நாழிகைகளுக்குப் பிறகுதான் போகும்” என்றான் படைத்தலைவன்.

“அப்பொழுதுதான் எதிரிகள் நம்மைக் கஷ்டமில்லாமல் எதிர்த்து அழிக்க முடியுமாக்கும்?” என்று இகழ்ச்சியுடன் வினவினான் அமீர்.

இளையபல்லவன் மெல்ல நகைத்தான். “எதிர்க்கவும் மாட்டார்கள், அழிக்கவும் மாட்டார்கள்” என்று கூறினான் சிரிப்புக்கிடையே.

“அவர்களை மயக்க மந்திரம் வைத்திருக்கிறீர்களாக்கும்!” அமீரின் அந்தக் கேள்வியில் இகழ்ச்சி அதிகமாக ஒலித்தது.

“மந்திரமும் வைத்திருக்கிறேன். மருந்தும் வைத்திருக் கிறேன். சொன்னபடி செய் அமீர். நான் மருந்தைத் தயார் செய்துவிட்டு வருகிறேன். பிறகு உனக்கு மந்திரம் சொல்லித் தருகிறேன்” என்று இளையபல்லவன் கூறிவிட்டு விடுவிடு என்று அக்ரமந்திரத்தை நோக்கி நடந்தான்.

இளையபல்லவன் ஏதோ பெரும் திட்டத்தை வகுத்து விட்டானென்பதை மட்டும் அமீர் புரிந்துகொண்டானே யொழிய அத்திட்டம் என்ன என்பது அவனுக்குப் புரிய வில்லையாகையால் முகத்தில் மிகுந்த குழப்பத்துடன் இளைய பல்லவன் போவதைப் பார்த்துக்கொண்டே நின்றுவிட்டுப் பிறகு படைத்தலைவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றச் சென்றான். விடியற்காலைக்குச் சற்று முன்பு அக்ரமந்திரத் திலிருந்து மீண்ட இளையபல்லவன், “மருந்தைத் தயார் செய்து விட்டேன். வா, மந்திரத்தைச் சொல்லித் தருகிறேன்” என்று அமீரை அழைத்தான்.

அமீர் அருகில் வந்ததும் காதோடு காதாக மந்திரத்தை நீண்ட நேரம் ஓதினான். மந்திரத்தின் சக்தி அளவிட முடியாத தாயிருக்க வேண்டும். அமீரின் முகத்தில் அதுவரையிருந்த கலக்கம், குழப்பம், சோர்வு அனைத்தும் மறைந்தன. வெற்றிக் குறி பரந்துலாவியது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch5 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch7 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here