Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch60 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch60 | Sandilyan | TamilNovel.in

155
0
Read Kadal Pura Part 3 Ch60 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch60 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch60 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 60 : அழிவுத் திட்டம்.

Read Kadal Pura Part 3 Ch60 | Sandilyan | TamilNovel.in

இணைந்துவிட்ட இரு உள்ளங்களாலும் உள்ளங்கள் தூண்டிய உணர்ச்சிகளாலும், இழுபட்ட இரு ஜோடி உதடுகள் இழைவதற்கு முன்பாக எதிர்பாராத வண்ணம் ஏற்பட்ட விபரீதத்தால் மஞ்சளழகி விலகிவிட முயன்றாளானாலும் இளையபல்லவன் மட்டும் அதைப்பற்றி அதிகமாக்க் கவலைப் படாதவன்போல் இருந்த நிலையிலேயே நிலைத்ததன்றி, அவளையும் அகல முடியாதபடி தன்னிடம் இழுத்தே நிறுத்திக் கொண்டான்.

அந்த நிலை அவளுக்குப் பெரும் சங்கடத்தை மட்டுமின்றித் திகிலையும் அளித்ததால், அறை வாயிற்படியை நோக்கிய அவள் கண்களில் அந்தத்திகிலும் சங்கடமும் சந்தேகத்துக்கிடமின்றிச் சுடர்விட்டன. இளையபல்லவனும் வாயிற்படியை நோக்கத்தான் செய்தான். ஆனால் அவன் உள்ளத்தில் எந்தவித உணர்ச்சி இருந்தாலும் அதை அவன் முகம் லவலேசமும் காட்டவில்லை. கண்கள் சர்வ சாதாரணமாக வாயிற்படியை ஆராய்ந்தன.

வாயிற்படியை அடைத்துக் கொண்டு நின்ற கோட்டை உபதலைவன் முகத்தில் மாறுபட்ட பல உணர்ச்சிகள் தோன்றித் தோன்றி மறைந்தன. வைரம் பாய்ந்த உடலையும் வைரத்தைவிடக் கடினமான பார்வையுடைய கண்களையும் படைத்த அந்த உப தலைவனுக்கு மஞ்சளழகியின் சங்கடமும் திகிலும் புரிந்தது. ஆனால் புதிதாக வந்த தூதனின் உணர்ச்சியற்ற முகத்துக்கு மட்டும் காரணம் புரியவில்லை அவனுக்கு. ஆகையால் மஞ்சளழகியின் திகிலைக் கண்டு முதலில் மகிழ்ச்சி கொண்டவன் தூதனின் துணிவைக் கண்டு பெரும் சினத்துக்கே வசப்பட்டான். இருப்பினும் திடீரெனத் தன் கண் முன்பாக எழுந்த காட்சியின் விளைவாக, சினத்தை வெளிப்படையாகச் சொல்லாக்கி உதிர்க்கும் சக்தி மட்டும் அவனுக்கு உண்டாகவில்லை. அவன் வாயடைத்தே பல விநாடிகள் நின்றுவிட்டான்.

அப்படி அவன் நிலை குலைந்து ஸ்தம்பித்து வாயடைத்து நின்ற விநாடிகளுக்குள் உள்ள நிலைமையையும் வந்திருக்கும் உபதலைவன் திறமையையும் எடை போட்டுவிட்ட இளைய பல்லவன், அந்தத் தருவாயில் தான் நடந்துகொள்ள வேண்டிய முறை என்ன என்பதையும் ஒருவாறு முடிவு செய்துகொண்டான். கோட்டையின் உபதலைவன் எந்தவித முன்னெச்சரிக்கையின்றியும் தான் இளவரசியின் அந்தரங்க அறைக்கு வரலாமா என்பதைத் தோழிகளைக் கொண்டு அனுமதிகூடப் பெறாமலும் நாட்டு இளவரசியின் அந்தரங்க அறைக்கு வருகிறானென்றால் அவனுக்குள்ள அதிகாரம் அபரிமிதமாகவும், இளவரசிக்குள்ள அதிகாரத்தைவிட ஒரு பங்கு அதிகமாகவும் இருக்கவேண்டுமென்றும் தீர்மானித்துக் கொண்டான்.

மலையூர்க் கோட்டையில் மஞ்சளழகி பெயருக்குத் தலைவியே ஒழிய உண்மை அதிகாரமெல்லாம் உபதலைவனிடமே இருக்கிறதென்பதையும் இளையபல்லவன் புரிந்துகொண்டான். இத்தனையிலும் அவனுக்கு ஒரு விஷயம் மட்டும் தெள்ளென. விளக்கமாயிற்று. தன்னை அழிக்க ஜெயவர்மன் எந்த ஆயுதத்தை வேண்டுமானாலும் கையாளத் தயாராயிருக்கிறானென்பதும், ஜெயவர்மன் தன்னை எதிர் பார்த்திருப்பது ஸ்ரி விஜய நகரில் மட்டுமல்லவென்பதும், ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தின் எல்லா மூலைகளிலும் அவன் கரம் நீண்டு கிடக்கிறதென்பதும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது சோழ நாட்டுப் படைத்தலைவனுக்கு.

அக்ஷயமுனை தனக்கு வெகு அருகிலிருந்தும், பருவ மெட்டிப் பல வருஷங்கள்வரை தன் மகளை ஏற்காமலும், பலவர்மனிடம் அவளை விட்டுவைத்துத் திரும்பிக்கூடப் பார்க்காமலும் இருந்துவிட்ட ஜெயவர்மனுக்குத் திடீரெனப் பெற்ற பாசம் கிளம்பிவிடக் காரணமில்லை என்றும், தன்னை எதிர்க்கவும் தன்னைப் பிடிக்கவும் மஞ்சளழகி ஒரு சாதன மாகையாலேயே அவளை அவன் ஏற்றுக்கொண்டிருக்கிறா னென்றும் தெரிந்து கொண்டான் இளையபல்லவன்.

ஜெயவர்மன் அக்ஷயமுனைக்கு விஜயம் செய்தது, பலவர்மன் தன்னிடம் சிக்கியதைப் பொருட்படுத்தாது மஞ்சளழகியை ஏற்றது, அவளைக் கொண்டே மலையூர்க் கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது,, ஆகிய ஒவ்வொரு காரியத்திலும் தன் அழிவுக்கான திட்டங்கள் புதைந்து கிடப்பதைப் புரிந்துகொண்ட இளையபல்லவன், பலவர்மனையும் கங்கதேவனையும் விடப் பலவிதங்களிலும் உயர்ந்த ஒரு பெரும் எதிரியைத் தான் சமாளிக்கவேண்டி இருப்பதை உணர்ந்துகொண்டான்.

தன் கோரிக்கை ஈடேற எதையும் செய்யக்கூடியவனும், மகளைக்கூட உபயோகப்படுத்தக் கூடியவனுமான ஜெயவர்மன் இதயம் மிகக் கடினமும் குரோதமும் வாய்ந்ததாயிருக்க வேண்டும் என்றும் முடிவு செய்துகொண்டான். அத்தகைய ஜெயவர்மனால் பரிபாலிக்கப்பட்ட ஸ்ரி விஜயத் தலைநகரையும் சாம்ராஜ்யத் தையும் உடைப்பதென்றால் அது சாதாரணமாக நடக்கக் கூடிய காரியமல்ல வென்பதும் திட்டவட்டமாகத் தெரிந்து விட்டது படைத்தலைவனுக்கு. தன் அறிவைச் சரியாகச் சாணை பிடித்துக் கொண்டாலொழிய ஜெயவர்மனை வெற்றி கொள்வது நடவாத காரியமென்றும் தனக்குள் சொல்லிக் கொண்டான் படைத்தலைவன்.
இப்படி ஜெயவர்மனைப் பற்றியும், ஸ்ரி விஜயத்தைப் பற்றியும் அதில் மஞ்சளழகியின் இடத்தைப்பற்றியும் எடை போட்ட இளையபல்லவன், தான் அந்தச் சமயத்தில் இருந்த நிலையை எண்ணிப் பார்த்ததும் தன் கதி உண்மையில் அதோ கதியாயிருந்ததை உணர்ந்துகொண்டான். வாயிற்படியில் நிற்கும் உபதலைவன் மட்டும் யாரையும் எதையும் கேட்காமல் தங்களிருவரையும் காவலில் வைத்துக் கோட்டை மீதுள்ள பாறைகளையும் தீப்பந்தங்களையும் யந்திரங்களைக் கொண்டு தனது மரக்கலங்கள் மீது வீசினால் தன் வாழ்வின் கடைசிப் பகுதி அந்தக் கோட்டையினுள்ளேயே முடிந்துவிடும் என்று அறிந்துகொண்டான்.

ஆகவே அத்தனை தூரத்துக்கு உபதலைவன் வல்லவனா என்று நிர்ணயிக்கத் தன் ஆராய்ச்சிக் கண்களை அவன் முகத்தில் லயிக்க விட்டான். உபதலைவன் முகத்தில் சினம் நிரம்பிக் கிடந்ததால் உள்ளூரச் சிறிது சாந்தியும் அடைந்தான். சினமிருக்கிற இடத்தில் நிதானக் குறைவு இருக்குமென்பதை அறிந்திருந்த இளையபல்லவன், இருந்த இடத்தை விட்டு எழுந்திராமலும் இருந்த நிலையைச் சீர் படுத்திக் கொள்ளாமலும் மஞ்சளழகியின் இடையிலிருந்த இடக்கரத்தை எடுக்காமல் ஓரளவு வெட்கத்தை விட்டும், உப தலைவனை நோக்கி, “யார் நீ?” என்ற அதிகாரத் தோரணையில் கேட்டான்.

இந்தக் கேள்வியைக் கேட்டதும் உபதலைவன் ஓரளவு அதிர்ச்சியடைந்தான் என்பதை அவன் முகம் காட்டியது. அந்த அதிர்ச்சி அடுத்த விநாடி பெரும் கோபத்துக்கு இடம் கொடுத்ததைக் கண்கள் விளக்கின. இளையபல்லவன் கேள்வி மஞ்சளழகிக்குப் பயத்தை அளித்தது. இளையபல்லவனிடம் அவளுக்கு அபாரமான நம்பிக்கையிருந்தாலும், அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் கேட்ட கேள்வி கெட்டிக்காரத்தனத் திற்கு அடையாளமாக அவளுக்குப் புலப்படவில்லை. ஆகவே ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காக, “அவர்… கோட்டையின் உபதலைவர்” என்று தட்டுத் தடுமாறிச் சொன்னாள், உபதலைவனைச் சுட்டிக்காட்டி.

இளையபல்லவன் கேட்ட கேள்விக்கு மஞ்சளழகி பதில் சொல்லிவிட்டதால் உபதலைவனுக்குப் பதில் சொல்லத் தேவையில்லாது போகவே அவன் உஷ்ணம் கொட்டிய குரலில் கேட்டான், “நீ யார்?” என்று.

இளையபல்லவன் முகத்தில் வருத்தக் குறி படர்ந்தது. “உனக்கு வயது அதிகமில்லை…?” என்று வருத்தம் குரலில் தொனிக்கவும் இழுத்தான்.

கோட்டைக்குத் தூதனாக வந்தவன் தகாத காரியத்தில் திளைத்ததன்றிச் சம்பந்தமில்லாமல் தைரியத்துடன் பேச்சும் கொடுத்தது மிக வியப்பையும் குழப்பத்தையும் உபதலைவனுக்கு அளிக்கவே, “என் வயதைப் பற்றி என்ன இப்பொழுது? என்று சீறினான்.

“வாலிபம்” என்று முணுமுணுத்தான் பதிலுக்குப் படைத் தலைவன்.

“அதனாலென்ன?” சினம் பெரிதும் ஓங்கி நின்றது உபதலைவன் குரலில்.

“இளங்கன்று பயமறியாது” என்றொரு தமிழ்ப் பழமொழி யையும் வீசினான் படைத்தலைவன்.
“என்னைச் சொல்கிறாயா?” என்று கேட்டான் உபதலைவன்.

“மீண்டும் வாலிபம் தெரிகிறது. “

“என்ன தெரிகிறது?”

“பயமின்மை. “

“எதற்குப் பயப்படவேண்டும் நான்?”

“என்னை மரியாதையின்றி அழைத்த யாரும் இதுவரை உயிர் வாழ்ந்ததில்லை” என்று சர்வ சாதாரணமாகச் சொன்ன இளையபல்லவன் மஞ்சளழகியின் இடையிலிருந்த கையை எடுத்துக்கொண்டு அவளுக்குச் சற்று விடுதலையளித்து, பஞ்சணையில் லேசாகச் சாய்ந்தும் கொண்டான்.

தன்னைப் பார்த்ததும் அஞ்சவோ அல்லது கத்தியை உருவி எதிர்க்கவோ வேண்டிய தூதன் சொந்தப் படுக்கையறை யிலிருப்பதுபோல் பஞ்சணையில் சாய்ந்துகொண்டதைக் கண்டு வியப்பும் எய்திய உபதலைவன், “தங்களை மரியாதையுடன் அழைக்க வேண்டுமாக்கும்?” என்று ஏளனத்துடன் வினவினான்.

“உயிரில் ஆசையுள்ளவர்கள் அப்படித்தான் அழைப் பார்கள்” என்றான் இளையபல்லவன்.

“இல்லாவிட்டால் கொன்று விடுவீர்களாக்கும்?” இந்தச் சமயமும் ஏளனம் தொனித்தது உபதலைவன் பதிலில்.
“அந்த விபத்து பலருக்கு நேர்ந்திருக்கிறது. “

“எனக்கு நேராது. “

“ஏன்? நீ மட்டும் சாகாவரம் பெற்றிருக்கிறாயா?”

“நான் பிழைக்க அந்த வரம் தேவையில்லை. “

“வேறு வழி இருக்கிறதாக்கும்?”

“ஆம். மத்திய மண்டபத்தில் ஆறு வீரர்களை நிறுத்தி யிருக்கிறேன், கூப்பிட்டால் ஓடி வர. “

“கூப்பிடவேண்டுமே. “

“ஏன் கூப்பிடாமலென்ன?”

“கூப்பிட உயிர் வேண்டாமா?”

உபதலைவன் இளையபல்லவனைப் பிரமிப்புடன் நோக்கினான். “ஏன் உயிர் அத்தனை துரிதமாகப் போய்விடுமா?” என்று வினவினான்.

“அதில் சந்தேகமே வேண்டாம். உன் உதடு அசையுமுன்பு போய்விடும்” என்று உறுதி கூறினான் இளையபல்லவன்.

‘இவன் என்ன யமனா இஷ்டப்பட்ட விநாடி உயிரை எடுத்துவிட?’ என்று உள்ளூரக் கேட்டுக்கொண்ட உப தலைவன் கண்களில் அவநம்பிக்கை உதயமாயிற்று. அதைக் கண்ட இளையபல்லவன் சொன்னான் மிகுந்த மரியாதையுடன், “மலையூர் உபதலைவரே! நான் சொல்வதில் ஐயம் வேண்டாம். சொன்னபடி செய்யக்கூடியவன் நான் என்பதை ஸ்ரி விஜயம் அறியும். ஸ்ரி விஜயமென்ன, இந்தக் கிழக்குக் கடற்பகுதியே அறியும். என் இடையிலிருக்கிற குறுவாளைக் கவனியுங்கள். நினைத்த விநாடியில் அதை உம்மீது மின்னல் வேகத்தில் எறிந்துவிட என்னால் முடியும். இதை நான் பயின்ற இடம் அப்படி” என்று.

இளையபல்லவன் குரலிலிருந்த உறுதி சற்று அசர வைத்தது கோட்டைத்தலைவனை. “யாரிடம் பயின்றீர்?” என்று வினவினான் ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காக.

“அமீரிடம். ” நிதானமாகச் சொன்னான் இளையபல்லவன்.

“யார் இளையபல்லவனின் உபதலைவனிடமா?” அதிர்ச்சியும் ஆச்சரியமும் இருந்தது உபதலைவனின் குரலில்.

“ஆம்” என்றான் இளையபல்லவன்.

“அப்படியானால் தங்கள் பெயர்?”

“இளையபல்லவன்?” மிகுந்த நிதானத்துடனும் அலட்சியத்துடனும் இந்தப் பதிலைச் சொன்னான் சோழர் படைத் தலைவன். இந்தப் பதிலைக் கேட்ட மஞ்சளழகிக்கு மட்டு மின்றி உபதலைவனுக்கும் அந்த அறையே சுழல்வது போல் இருந்தது. அந்தப் பதில் பல விஷயங்களை விளங்கவைத்தன உபதலைவனுக்கு. தூதனாக வந்தவனிடம் இளவரசி இழைந்ததன் காரணத்தைச் சந்தேகமறப் புரிந்துகொண்டான் உபதலைவன். தான் திடீரென அந்த இருவர் நிலையையும் கண்டுபிடித்த பின்பும் தூதன் சரிவர நடந்துகொள்ளாதது முதலில் பிரமிப்பாயிருந்தது உபதலைவனுக்கு. இந்தப் பதில் அந்த பிரமிப்பை அடியோடு உடைத்து எறிந்து விட்டது. ‘என்ன முட்டாள்தனம்! இளையபல்லவன் ஒருவனைத் தவிர இத்தனை துணிவு வேறு யாருக்கு இருக்கும்? இதை நான் புரிந்துகொள்ளவில்லையே’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டான் உபதலைவன்.

மஞ்சளழகிக்கு உலகமே சுழன்றது. அவள் சித்தம் குழம்பியது. மிதமிஞ்சிய அதிர்ச்சியால் அவள் பஞ்சணையில் குப்புற விழுந்தாள். அவளைத் தாங்கி மடியில் கிடத்திக் கொண்ட இளையபல்லவன், “உபதலைவரே! கொஞ்சம் நீர் கொண்டு வாரும். இளவரசி மயக்கமடைந்து விட்டாள்” என்றான்.

உபதலைவன் மயங்கினான். “மயங்க வேண்டாம் உப தலைவரே! என் வாளின் மேல் ஆணையாகச் சொல்கிறேன். நான் உமது அனுமதியின்றி இந்த இடத்தை விட்டு அகலுவ தில்லை. அகன்றும் பயனில்லை. என் வேஷம் வெளுத்து விட்டது. ஆகவே செல்லும், முதலில் இளவரசியைக் கவனிப்போம்” என்றான் படைத்தலைவன்.

படைத்தலைவன் வார்த்தைகளில், அவற்றின் தொனியில் அதை உச்சரித்தவன் தோற்றத்தில், ஏதோ மந்திரமிருந்திருக்க வேண்டும். அதைக் கேட்டதும் விடுவிடு என்று சென்ற உபதலைவன் ஒரு பொற்கிண்ணத்தில் நீர் கொணர்ந்தான். அதை மஞ்சளழகியின் முகத்தில் தெளித்து அவள் மயக்கத்தை நீக்கிய இளையபல்லவன் அவளைப் பஞ்சணையில் படுக்க வைத்தான். அவள் படுக்க மறுத்து எழுந்து உட்கார முற்பட்டு, “உபதலைவரே! இளவரசி ஆணையிடுகிறாள். இவரை நீங்கள் தொடவும் கூடாது. தொட்டால் இங்குள்ள அனைவரையும்… அனைவரையும்… ” என்று ஏதோ சொல்ல முற்பட்டு முடியாமல் திணறினாள். அவள் விழிகள் உபதலைவனை நோக்கிச் சீறின. இளையபல்லவன் உபதலைவனை நோக்கி, “இளவரசி என்னிடமுள்ள அன்பால் ஏதோ சொல்கிறார்கள். நீங்கள் அதைப் பொருட்படுத்த வேண்டாம்” என்று கூறி விட்டு, “படு மஞ்சளழகி! நீ பெரிதும் அதிர்ச்சியுற்றிருக்கிறாய்” என்று கூறி அவளைப் பிடித்துப் படுக்க வைத்தான். பிறகு மீண்டும் உபதலைவனை நோக்கிக் கேட்டான், “இப்பொழுது என்னை என்ன செய்ய உத்தேசம்?” என்று.

“சிறை செய்ய உத்தேசம். ” தடையின்றி வந்தது உப தலைவனின் பதில்.

“அதில் ஒரு சங்கடமிருக்கிறது” என்றான் இளைய பல்லவன்.

“என்ன சங்கடம்?”

“சங்கடத்தை விளக்குமுன்பு ஒரு மர்மத்தை விளக்க வேண்டியிருக்கிறது. “

“என்ன மர்மம்?” “

வெற்றியடைந்தது விஜயசந்திரனல்ல. “
இந்தப் பதில் உபதலைவனை வியப்புக்குள்ளாக்கவில்லை. பஞ்சணையில் அமர்ந்திருந்தவன் இளையபல்லவன் என்பதை அறிந்த உடனேயே ஏதோ சூது நடக்கிறதென்று ஊகித்துக் கொண்டான் உபதலைவன். ஆகவே சர்வ சாதாரணமாகச் சொன்னான், “அது தெரியும்” என்று.

“தெரிந்தது ஒரு விதத்தில் நல்லது. ஆகவே விஜயசந்திரன் நிலையையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது” என்றான் இளையபல்லவன்.

“கடற்படைத் தலைவருக்கு-” சந்தேகத்துடன் இழுத்தான் உபதலைவன்.

“ஆபத்திருக்கிறது. இங்கிருந்து நான் ஒரு ஜாமத்திற்குள் திரும்பாவிட்டால் விஜயசந்திரனைத் தூக்கிலிட அமீருக்கும் கண்டியத்தேவனுக்கும் உத்தரவிட்டிருக்கிறேன்” என்று கூறினான் படைத்தலைவன்.

கடற்பகுதிகளில் இளையபல்லவனுக்கு அடுத்தபடி பிரசித்தமான அந்த இரண்டு பெயர்களையும் உபதலைவன் கேட்டதும் சிந்தனைக்குள்ளானான். ஆனால் அந்தச் சிந்தனை சில விநாடிகளே நிலைத்தது. இளையபல்லவன் திரும்பாவிடில் விஜயசந்திரனின் அழிவு நிச்சயமென்பதை உணர்ந்து கொண்ட உபதலைவன் கடைசியில் சொன்னான், “ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தின் நலனைவிட நான் ஒரு தனி மனிதன் நலனை அதிகமாக மதிப்பிட முடியாது” என்று.

“என்ன சொன்னீர்?” “விஜயசந்திரன் உயிர் அத்தனை முக்கியமல்ல. ” “மிகத் திறமைசாலியான கடற்படைத் தளபதி. ” “ஜம்பிப் போர் முடிவு திறமையைக் குறிக்கவில்லை . ” “போரில் வெற்றியும் தோல்வியும் சகஜம். ” “அந்த சகஜம் ஸ்ரி விஜயத்துக்குப் பயனளிக்காது. ” “அப்படியானால் என்ன செய்ய உத்தேசம்?”

“உங்களைச் சிறை செய்ய உத்தேசம்,” என்று திட்டமாகக் கூறினான் உபதலைவன்.

“பின்பு?” இளையபல்லவன் கேள்வி தாமதமின்றித் துரிதமாக எழுந்தது.

“உங்கள் மரக்கலங்களை அழித்துவிட உத்தேசம். “

“எப்படி?”

“கோட்டைத் தளத்திலுள்ள யந்திரங்களைக் கொண்டு இளவரசியார் அவற்றை நன்றாக அமைத்திருக்கிறார்கள். ” இதைச் சொன்ன உபதலைவன் குரூரச் சிரிப்புச் சிரித்தான்.

இளையபல்லவன் முகம் உணர்ச்சியற்றுக் கிடந்தது. “விவேகமான வழி அதல்ல” என்று கூறினான்.

“எது விவேகம்? எது விவேகமல்ல?” என்று கேட்டான் உபதலைவன் கொடுமை நிறைந்த குரலில்.

“என்னைச் சிறை செய்வது விவேகம். ஆனால் மரக் கலங்களை அழிப்பது விவேகமல்ல. “
“ஏன்?”

“மரக்கலங்களில் ஸ்ரி விஜயத்தின் திறமை மிக்க மாலுமிகள் இருக்கிறார்கள். திறமையான படைத்தலைவன் இருக்கிறான். மரக்கலங்களில் இரண்டைத் தவிர மற்றவை இணையற்ற போர்க்கலங்கள். அவற்றை அழிப்பது ஸ்ரி விஜயத்துக்குக் கிடைக்கும் பெரும் சொத்தை அழிப்பதாகும். ஸ்ரி விஜயத்தை எந்த எதிரியிடம் இருந்தும் காக்கத் தக்க பெரும் கடற் படையை அழிப்பதாகும். இதை ஜெயவர்மன் விரும்ப மாட்டார். இந்தப் படை உமது கையிலிருக்கிறது. அதை அப்படியே கைப்பற்றுவது விவேகம். “

“எப்படிக் கைப்பற்ற முடியும்?”

“ஏன் முடியாது? என்னைச் சிறை செய்து விட்டதையும், மரக்கலங்களை அழிக்க யந்திர சாதனங்களிருப்பதையும் என் உபதலைவர்களுக்குத் தெரியப்படுத்தினால் உடனே சரணடைந்து விடுவார்கள். மரக்கலங்களைக் காப்பாற்ற அல்லாவிட்டாலும் என் உயிரைக் காக்கவாவது சரணடை வார்கள். “

இளையபல்லவன் சொற்கள் அனைத்தும் உண்மை யென்பது உபதலைவனுக்குத் தெரிந்திருந்தது. இளைய பல்லவனுடைய உபதலைவர்களும் மாலுமிகளும் அவனுக்காகத் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்கும் அன்புடையவர்கள் என்பதை அநேகரைப் போல அவனும் அறிந்திருந்தான். அது மட்டுமல்ல, இளையபல்லவன் சிறைப் பட்டதைச் சுட்டிக் காட்டிக் கடல் புறாவையும் மற்ற மரக் கலங்களையும் கைப்பற்றினால் தன் பதவி ஸ்ரி விஜயத்தில் எத்தனை உயரும் என்பதையும் எண்ணிப் பார்த்தான்.

அவற்றை அழிப்பதைவிட கைப்பற்றும் ஆசை விரிந்தது அவன் உள்ளத்தில். அந்த ஆசைக்குத் தூபம் போட்டான் இளையபல்லவன். அந்தத் தூபத்தைத் தீபமாகவும் ஆக்கி ஜொலிக்க வைத்தான். அதற்காக உபதலைவனின் வலையில் தன்னைத் தானே அழுத்திக்கொண்டு தன் அழிவு மார்க்கத்தையும் உபதேசித்தான் எதிரிக்கு! உபதலைவன் மெள்ள அந்தத் திட்டத்துக்கு இணங்கினான். இளைய பல்லவன் திட்டம் அவன் வாழ்வுக்கே உலை என்று முடிவு செய்த மஞ்சளழகியின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதைக்கூடப் பொருட்படுத்தாத இளையபல்லவன் கோட்டை உபதலைவனுக்கு மரக்கலங்களைப் பிடிக்கும் மந்திரத்தை ஓதினான். மந்திரத்தைக் கைக்கொண்ட உபதலைவன் அடுத்த சில விநாடிகளில் தன் காவலரை அந்த அறைக்குக் காவல் வைத்துத் தானே கிளம்பினான் ஜம்பி நதித்துறையை நோக்கி. அவன் சென்றபின் அறைக்கதவைச் சாத்தினான் இளையபல்லவன். சாத்தப்பட்டது அவன் வாழ்வின் கதவு என்று தீர்மானித்த மஞ்சளழகி, காதலும் சோகமும் கலந்த விம்மல்களை வெளியிட்டாள், பஞ்சணைத் தலையணையில் தன் அஞ்சுக முகத்தைப் புதைத்துக் கொண்டு.

Previous articleRead Kadal Pura Part 3 Ch59 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch61 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here