Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch61 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch61 | Sandilyan | TamilNovel.in

161
0
Read Kadal Pura Part 3 Ch61 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch61 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch61 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 61 : செங்கதிர் வீழ்ச்சி.

Read Kadal Pura Part 3 Ch61 | Sandilyan | TamilNovel.in

கைப்பற்றுவதற்கரிதெனக் கடலோடிகள் அனைவரும் ஒப்புக்கொண்ட கடல் புறாவையும் அதன் துணை மரக் கலங்களையும் கைப்பற்ற மனக்கோட்டை கட்டிக்கொண்டு மலையூர்க் கோட்டையின் உபதலைவன் அந்த அறையை விட்டு அகன்றதும், மஞ்சளழகியின் மனக்கோட்டை பலவித உணர்ச்சி இடிகளால் தாக்கப்பட்டுத் தவிடு பொடியாகும் நிலைக்கு வந்ததன் விளைவாக, அவள் தன் அஞ்சுக முகத்தைப் பஞ்சணைத் தலையணையில் புதைத்துக்கொண்டு விம்மி அழுதாளென்றால், அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. தனது மரக்கலங்களைப் பிடிக்க லவலேசமும் அப்பழுக்கில்லாத அத்தனை சிறந்த வழியை உபதலைவனுக்குக் காட்டிக் கொடுத்திருந்தான் இளையபல்லவன்.

படிப்படியாக எப்படி நடந்து கொண்டால் கடல்புறாவும் மற்ற மரக்கலங்களும் மலையூர்க் கோட்டை உபதலைவன் கையில் விழும் என்பதை மிகத் தெளிவாக இளையபல்லவன் எடுத்துக் காட்டியதைக் காதில் வாங்க வாங்க, சுய அழிவுக்குப் படைத்தலைவன் வகுத்த திட்டத்தை விடத் திறமையான ஒரு திட்டத்தை வேறு யாராலும், வகுக்கமுடியாதென்பதை மஞ்சளழகி புரிந்துகொண்டாள். அவன் திட்டத்தை விவரிக்கத் தொடங்கி உரையாடலை வளர்த்துக்கொண்டு போன ஒவ்வொரு விநாடியும் விவரிக்க இயலாத மன வேதனையை அளித்தது அக்ஷயமுனைக் கோட்டை அழகிக்கு.

இளையபல்லவன் அந்தச் சுய அழிவுத் திட்டத்தை மிகுந்த நிதானத்துடனும், தான் போருக்கு அனுப்ப இருக்கும் தனது உபதலைவனொருவனுக்குக் கட்டளையிடும் தோரணையிலும், மிக விளக்கமாக மலையூர்க் கோட்டையின் உபதலைவனுக்கு எடுத்துரைக்கத் தொடங்கி, “உபதலைவரே! மிகக் கவனமாகக் கேளுங்கள்.

நான் சொல்லும் முறையில் சிறிது நழுவினாலும் உமது உயிர் உமது உடலில் நிலைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும். ஏனென்றால் நீர் சந்திக்கப் போகும் எனது உபதலைவர்கள் சாமான்னியப்பட்டவர்களல்ல. பெரிய அறிவாளிகள். அவர்களை அச்சுறுத்துவதால் விபரீதம் ஏற்படும். நீர் காட்டக்கூடிய நிதானத்திலும், உள்ள நிலையைச் சாவதானமாக விளக்கி உமக்கிருக்கும் சாமர்த்தியத்தாலும் இந்தப் பெரும் காரியத்தை நீர் சாதிக்க முடியும்” என்று கூறி உபதலைவனைச் சற்று உற்று நோக்கினான்.

கடல்புறாவையும் மற்ற மரக்கலங்களையும் பிடித்துவிடக் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த மலையூர்க் கோட்டை யின் உபதலைவன் பதில் ஏதும் வாய் திறந்து சொல்லாமல், இளையபல்லவன் எச்சரிக்கையைத் தான் உணர்ந்து கொண்டதற்கறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தான். இளையபல்லவன் மேலும் தொடர்ந்து, “அமீரும் கண்டியத் தேவனும் பாலிக்குள்ளனும்கூட பல போர்களைக் கண்ட வர்கள். போர்களை மட்டுமல்ல, இதைவிடப் பெரும் சிக்கலான நிலைமையையும் சமாளித்தவர்கள்.

ஆகவே, நீர் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அவர்கள் நம்பத் தகுந்ததாக அமைய வேண்டும். உமது குரல், தோரணை எல்லாவற்றிலுமே நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படவேண்டும்; ஒருவேளை அவர்கள் அவநம்பிக்கை கொண்டால்… ” என்று பேச்சைச் சிறிது நிறுத்தினான்.

அதுவரை நிதானமாயிருந்த உபதலைவன் வதனத்தில் அச்சத்தின் சாயை சிறிது படர்ந்தது. அவநம்பிக்கை கொண்டால் தன்னை அமீரும் கண்டியத்தேவனும் என்ன செய்வார்கள் என்பதை அறிந்திருந்ததால், அச்சம் சிறிது குரலிலும் தொனிக்கக் கேட்டான் உபதலைவன், “அவநம்பிக்கை கொண்டால்?” என்று.

அந்த அச்சத்தைக் கவனித்து உள்ளூர மகிழ்ந்த இளைய பல்லவன், “உமது நிலை விரும்பத்தக்கதாக இருக்காது” என்று சுட்டிக் காட்டினான்.

“அது தெரியும் எனக்கு” என்ற உபதலைவன் குரலில் பீதி இருந்தது.

“ஆகவே அவர்கள் அவநம்பிக்கைக்குச் சிறிதும் இடம் தராத முறையில் அவர்களை நீர் சந்திக்கவேண்டும். அதற்கு வழி இருக்கிறது” என்று கூறினான் இளையபல்லவன், உபதலைவனுக்குத் தைரியத்தை ஊட்ட

“என்ன வழி?” என்று கேட்ட உபதலைவன் குரலில் அச்சத்தின் தொனி இருந்தது.

“இந்தக் கோட்டையின் உபதலைவன் என்ற முறையில் நீர் அவர்களைச் சந்திக்கக் கூடாது” என்றான் இளைய பல்லவன்.

உபதலைவனுக்கு இளையபல்லவன் சொற்களில் இருந்த சூட்சுமம் புரியவில்லையாகையால் அவன் குழப்பத்துடன் படைத்தலைவனை நோக்கினான். “வேறு எந்த முறையில் சந்திப்பது?” என்று வினவினான் குழப்பம் குரலிலும் மண்டிக் கிடக்க.
இளையபல்லவன் பதில் திடமாக வந்தது. “எனது நண்பன் என்ற முறையில்” என்று விளக்கிய இளையபல்லவன் உபதலைவன் முகத்தை ஆராய்ந்தான். உபதலைவன் முகத்தில் அந்த விளக்கம் எத்தகைய தெளிவையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. “உங்கள் நண்பன் என்ற முறையிலா!” என்ற உபதலைவன் கேள்வியில் குழப்பமும் வியப்பும் கலந்து ஒலித்தன.

இளையபல்லவன் சாய்ந்த நிலையை விட்டுப் பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்து கொண்டான். “வேறு முறையில் கடல் புறாவுக்குச் சென்றால் நீங்கள் உயிருடன் திரும்ப முடியுமென்று நினைக்கிறீர்களா?” என்று வெறுப்பு குரலில் மண்ட வினவவும் செய்தான்.

“நீங்கள் தானே இங்குள்ள நிலைமையை அமீருக்கும் கண்டியத்தேவனுக்கும் விளக்கச் சொன்னீர்கள்?” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டான் உபதலைவன்.

“ஆம். சொன்னேன். ” இளையபல்லவன் ஒப்புதலில் கூட ஒரு வெறுப்பு இருந்தது, உபதலைவனின் முட்டாள்தனத்தை நினைத்ததால்.

“நீங்கள் இங்கு சிறைப்பட்டிருப்பதையும், மரக்கலங்களை அழித்துவிட இங்குள்ள யந்திர வசதிகளைப் பற்றியும் அவர்களிடம் எடுத்துரைக்கச் சொல்லவில்லையா?” “சொன்னேன். ” “இவற்றையெல்லாம் சொன்னால் மட்டும் அமீரும் கண்டியத்தேவனும் காது குளிரக் கேட்டுக் கொண்டிருப்பார் களாக்கும்?” இதைக்கேட்ட உபதலைவன் சொற்களில் இகழ்ச்சி ஒலி நன்றாகத் தெரிந்தது.
அந்த இகழ்ச்சியை லவலேசமும் லட்சியம் செய்யாத இளையபல்லவன் பதில் கூறினான், “அவர்கள் கேட்பதும் கேட்காததும் சொல்பவர் யார் என்பதைப் பொறுத்தது” என்று.

இளையபல்லவனின் இந்தப் பதில், உள்ள குழப்பத்தை உயர்த்தவே, உபதலைவன் கேட்டான், “யார் சொன்னால் கேட்பார்கள் உங்கள் உபதலைவர்கள்?” என்று.

இளையபல்லவன் திட்டத்தைத் தெளிவாக்க விரும்பி விளக்க முற்பட்டான். “உபதலைவரே! உமது அறிவை நன்றாகத் தீட்டிக்கொள்ளும். என் நலனில் அக்கறையுள்ள யார் சொல்வதையும் எனது உபதலைவர்கள் சிரம் வணங்கிக் கேட்பார்கள். ஆகவே நீர் எனது நண்பன் என்பதைச் சொல்லால் மட்டுமின்றிச் செயலாலும் வற்புறுத்த வேண்டும். நீர் எனது விரோதி என்ற முறையில் அமீரையும், கண்டியத் தேவனையும் சந்தித்து நான் இங்கு சிறைப்பட்டிருப்பதைக் கூறினால் அவர்கள் உம்மை மட்டுமின்றி விஜயசந்திரனையும் இரவோடு இரவாகக் கடல் புறாவின் தளத்திலேயே தூக்கி லிட்டு, கடல் புறாவிலும் மற்ற மரக்கலங்களிலும் உள்ள மாலுமிகளை இந்தக் கோட்டைக்கு அனுப்பி, இதையும் இங்குள்ள யந்திர வசதிகளையும் கைப்பற்றி விடுவார்கள்.

விஜயசந்திரன் எனது மரக்கலங்களைப் பிடித்துவிட்டதாக எண்ணி மலையூர் நகர மக்கள் பெரும் கோலாகலத்தில் இருப்பதால் வரும் மாலுமிகளை எதிரிகளென்று கருத மாட்டார்கள். கோட்டையின் வீரர் பலரும் இந்தக் கோலாகலத்தில் காலை முதலே ஈடுபட்டிருப்பதும் எனது உபதலைவர்களுக்குத் தெரியும். ஆகவே இதைப் பிடிப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. நகரத்தின் அசிரத்தை அவர்களுக்கு அனுகூலம்” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

உபதலைவனுக்குப் பெரும் அதிர்ச்சி உள்ளத்தில் ஏற்பட்டது. கோட்டை வீரர்கள் வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்குத் தானே அனுமதியளித்ததை எண்ணிப் பார்த்துக் கேவலம் இருநூறு வீரர்களே உள்ள கோட்டையைக் கடல் புறாவின் கடற்படையிலுள்ள சுமார் ஆயிரம் மாலுமிகள் கைப்பற்றுவது ஒரு பெரும் காரியமல்ல என்பதை உணர்ந்து கொண்டதால் பெரும் அச்சத்தை அடைந்தான் உபதலைவன். அந்த அச்சத்தைத் தவிர்க்கக் கூறினான் இளையபல்லவன் உபதலைவனை நோக்கி, “நிலைமை உமக்கு விரோதமாகத் தானிருக்கிறது உபதலைவரே! ஆனால் இந்த நிலைமையை உமக்கு அனுகூலமாக நீர் மாற்றிக் கொள்ள வழி இருக்கிறது. இதைவிட அபாயமான கட்டங்களிலிருந்து நான் மீண்டிருக் கிறேன்” என்று.

ஆதரவு தரும் படைத்தலைவன் சொற்கள் உபதலைவன் அச்சத்துக்கு அமுதமெனச் சாந்தியளித்தன. “வழியைச் சொல்லுங்கள்” என்ற உபதலைவன் சொற்களில் பணிவு இருந்தது.

“நான் ஏற்கெனவே சொன்னதுதான் வழி. எனது நண்பன் என்ற முறையில் கடல் புறாவுக்குச் செல்லுங்கள். கடல் புறாவில் உங்களை யாரும் அறியமாட்டார்களே?” என்று வினவினான் இளையபல்லவன்.

“ஸ்ரி விஜயத்தின் கடற்படைத் தலைவர் அறிவார்” என்றான் உபதலைவன்.

“யார் விஜயசந்திரனா?”

“ஆம். “

“அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். கடல் புறாவுக்குச் சென்றதும் அமீரையும் கண்டியத்தேவரையும் காண விரும்புவதாகச் சொல்லுங்கள். மாலுமிகள் உங்களை அவர்களிடம் அழைத்துச் செல்வார்கள். அவர்களைச் சந்தித்ததும் தனிமையில் பேசவேண்டுமென்று கூறுங்கள். நீங்கள் எனது நண்பனென்பதையும் எடுத்துச் சொல்லுங்கள். “

“அவர்கள் நம்பாவிட்டால்?” என்று உபதலைவன் பழைய கேள்வியைப் பயத்துடன் மீண்டும் திருப்பினான்.

பதிலுக்கு இளையபல்லவன் தனது ஆள்காட்டி விரலில் இருந்த பெரும் சிவப்புக்கல் மோதிரமொன்றை எடுத்து உபதலைவனிடம் கொடுத்து, “இதைக் காட்டுங்கள்” என்றான்.

அந்த மோதிரத்தைக் கையில் வாங்கிக்கொண்டு விளக்கொளியில் அது படரவிட்ட பெரும் செங்கதிர்களை நோக்கிய உபதலைவன் முகத்தில் பெரும் திருப்தி நிலவியது. அந்தத் திருப்தியை அதிகரிக்கும் குரலில் பேசிய இளைய பல்லவன், “உபதலைவரே! இதைக் காட்டி நீர் எதைச் சொன்னாலும் எனது உபதலைவர்கள் நம்புவார்கள். ஆனால் எதைச் சொன்னால் அவர்கள் நம்பிக்கை உறுதியாகும் என்பதையும் நீர் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.

நீர் எனது நண்பர் என்பதற்கு இந்த மோதிரம் அத்தாட்சி. ஆனால் அடுத்து என்ன சொல்லப் போகிறீர்! என் நிலைமையை எப்படி அறிவிக்கப் போகிறீர்? நான் அளிக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை உமக்கு அனுகூலமாக எப்படி ஆக்கிக்கொள்ளப் போகிறீர்?” என்று வினவினான்.

உபதலைவனுக்கு என்ன சொல்வதென்று விளங்க வில்லை. திருதிருவென விழித்தான். சொல்ல வேண்டிய விஷயத்தையும் இளையபல்லவனே சொல்லிக் கொடுத்தான். “உபதலைவரே! நான் இந்தக் கோட்டையில் தலைவனால் சிறைப்படுத்தப்பட்டுவிட்டேன் என்று வைத்துக்கொள்ளும். நீர் எனது நண்பரானால் என்ன செய்வீர்?” என்று கேட்டான்.

இந்தக் கேள்விக்கும் உபதலைவனிடம் பதில் வராமல் போகவே இளையபல்லவன் சொன்னான்: “நான் உமது நிலையிலிருந்தால் உபதலைவன் உடையுடன் போக மாட்டேன். மாற்றுடையில் செல்வேன். அக்கம்பக்கம் பார்த்துத் திருடன்போல் பதுங்கி ஒரு தனிப் படகை எடுத்துக் கொண்டு கடல்புறாவை அடைவேன். அடைந்ததும் பயத் துடனும் பரபரப்புடனும், ‘அமீர் எங்கே? தேவர் எங்கே?” என்று கேட்பேன். மாலுமிகள் என்னை யாரென்று கேட்டால், ‘அவசரம், அமீர் எங்கே? தாமதிக்க நேரமில்லை ‘ என்று மிரட்டுவேன். அமீரோ தேவரோ வந்தால் பதில் பேசாமல் இந்த மோதிரத்தைக் காட்டுவேன். அவர்கள் புரிந்து கொள் வார்கள். தனிமையில் பேச அவர்களே அழைத்துப் போவார்கள்… ” என்று.

இதைக்கேட்ட உபதலைவன் பிரமித்தான். மஞ்சளழகி யின் அஞ்சன விழிகள் அச்சத்தின் எல்லையைக் காட்டின. “இளையபல்லவரே! உம்மைவிடச் சிறந்த தந்திரசாலி கிடையாது என்று ஸ்ரி விஜயமே பாராட்டுகிறதென்றால் அதற்குக் காரணம் இருக்கிறது” என்று உபதலைவன் சிலாகிக்கவும் செய்தான்.
அந்தச் சிலாகிப்பைக் காதில் வாங்கிக் கொள்ளாத இளையபல்லவன், “அடுத்தபடி நான் என்ன செய்வேன் தெரியுமா?” என்று வினவினான்.

“என்ன செய்வீர்கள்?” ஆவலுடன் எழுந்தது உபதலைவனின் கேள்வி.

“இங்கு இளையபல்லவர் வந்ததாகவும், அவரை அடையாளம் கண்டுகொண்ட கோட்டையின் தலைவன் அவரைச் சிறை செய்துவிட்டதாகவும் கூறுவேன். பதிலுக்கு விஜயசந்திரனைக் கொன்று விடுவதாக அமீர் மிரட்டலாம்.

அதனால் பலனில்லை என்பதையும், அடுத்து இளைய பல்லவனும் கொல்லப்படுவான் என்பதையும் வலியுறுத்து வேன். எந்த நிமிஷத்திலும் கடல் புறாவுக்கும் மற்ற மரக் கலங்களுக்கும் இங்குள்ள யந்திர வசதிகளால் ஆபத்து என்பதையும் விளக்கிச் சொல்வேன். ” என்று வழி சொன்ன இளையபல்லவன் சற்றுத் தன் பேச்சை நிறுத்தி உபதலைவனை உற்று நோக்கினான்.

அதுவரை திட்டம் தொடர்ச்சியாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் இருந்ததைக் கண்ட உபதலைவனுக்கு அந்த இடம் வந்ததும் சந்தேகம் ஏற்படவே, “நான் எப்படி இளைய பல்லவனுக்குத் தூதனானேன் என்று அமீர் வினவினால் என்ன செய்வது?” என்று கேட்டான்.

“அக்ஷயமுனைக் கோட்டையில் நீர் மஞ்சளழகியின் மெய்க்காவலனாக இருந்ததாகவும் அவள் விரும்பும் இளைய பல்லவனுக்கு உதவுவது உமது கடமையாயிற்றென்றும் சிறையில் என்னைக் கோட்டைக் காவலரில் ஒருவனாகச் சந்தித்ததாகவும் கூறலாம். இளையபல்லவன் இறந்தால் மஞ்சளழகி என்ன செய்துகொள்வாளோ என்று பதறவும் பதறலாம். உமது உணர்ச்சிகளின் எழுச்சி, உதடுகளின் துடிப்பு, முகத்தின் சோகம், இவற்றைக் கண்டு அவர்கள் ஏமாற வேண்டும். நீர் எத்தனை திறமையுடன் இந்த நாடகத்தை முடிக்கமுடியும் என்பதிலிருக்கிறது உமது வெற்றி” என்றான் படைத்தலைவன்.

இளையபல்லவன் சுட்டிக்காட்டிய விளக்கம் அமீருக்கும் கண்டியத்தேவனுக்கும் திருப்தியை அளிக்குமென்பதைப் புரிந்துகொண்ட உபதலைவன், “அடுத்து உங்களை மீட்க அவர்கள் வழி கேட்பார்களே, அதற்கென்ன செய்வது?” என்று வினவினான்.

“கோட்டையில் வெற்றி விழாவில் காவல் அதிகமில்லை யென்றும், அமீரும் கண்டியத்தேவரும் பத்துப் பதினைந்து மாலுமிகளுடன் வந்தால் ரகசியமாக அவர்களைக் கோட்டைக்குள் அனுமதித்து விடுவதாகவும், சிறைக்காவலரை வெட்டிப் போட்டு என்னை மீட்பதன்றி இங்குள்ள யந்திர சாதனங்களையும் அழித்து விடலாமென்றும் கூறுங்கள். அவர்கள் வருவார்கள். இங்கு அமீரையும் கண்டியத் தேவனையும் பத்துப் பதினைந்து பேரையும் சிறை செய்வது உமக்கொரு பிரமாதமா?” என்று வினவினான் இளைய பல்லவன்.

உபதலைவன் முகத்தில் திருப்தி பரிபூரணமாக நிலவியது. அவன் மனத்தில் வெற்றிக் கோட்டை பெரிதாக விரிந்தது. மீண்டும் மீண்டும் இளையபல்லவனின் திட்டத்தை அவன் அலசிப் பார்த்தான். அதில் அப்பழுக்கு, பலவீனம் எதுவும் எள்ளளவும் இல்லை. அவன் சொன்னபடி விஷயங்களை விளக்குவதோ சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி நடப்பதோ தனக்கு ஒரு பிரமாதமில்லையென்று நிச்சயித்துக் கொண்டான். கடல் புறாவும் மற்ற மரக்கலங்களும் தன் கைவசமாகி விட்டதாகவே எண்ணினான் மலையூர்க் கோட்டையின் உபதலைவன்.

அதனால் பிற்காலத்தில் ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தில் தனக்கேற் படக்கூடிய பெரும் பதவியை எண்ணிப் பார்த்து அளவிலா உவகையடைந்த உபதலைவன், “நான் வருகிறேன் இளைய பல்லவரே! இந்தக் கடல் புறா என் வசம் சிக்கினால் எனது பதவி ஸ்ரி விஜயத்தில் சக்கரவர்த்திக்கு அடுத்தபடியாக உயர்ந்து விடும். அப்படி உயர்ந்தால் உமது உயிரைக் காப்பது என் கடமை. நன்றியற்ற உள்ளமல்ல என்னுடையது. நீர் இன்று தரும் வெற்றி உம்மைக் காத்துவிட்டது. ஸ்ரி விஜயத்தின் பெரும் படைத்தலைவனின் கரம் உமக்குத் துணை நிற்கும்” எனக் கூறிவிட்டுக் காவலரை விளித்து, “இந்த அறையை நான் திரும்பும் வரை காத்து நில்லுங்கள்! இந்த இருவரில் எவரும் வெளியே செல்ல இடந்தர வேண்டாம்” என்று திட்டம் செய்து கிளம்பிச் சென்றான்.

இளையபல்லவனிடம் உபதேசம் பெற்று மலையூர்க் கோட்டையின் உபதலைவன் அறையைவிட்டு வெளியே சென்றதும், மஞ்சளழகி பெரும் திகிலின் வசப்பட்டு பஞ்சணைத் தலையணையில் தொப்பென விழுந்து முகத்தைப் புதைத்துக் கொண்டாள். இளையபல்லவன் தன்னையும் தனது கடற்படையையும் அழித்துக்கொள்ளத் திட்டம் வகுத்து அதை விளக்க முற்பட்டவுடனேயே அதிர்ச்சிக்கு உள்ளான அக்ஷயமுனைக் கோட்டை அஞ்சுகத்தின் பஞ்சு மனம், அவன் திட்டத்தின் அம்சங்களை அணு அணுவாக விவரிக்க விவரிக்கப் பயங்கர உணர்ச்சிகள் பலவற்றின் வசப்பட்டு அவளுக்குச் சொல்லவொண்ணா வேதனையை விளை விக்கவே, அந்த வேதனையைத் தாங்கமாட்டாமல் விம்மி விம்மி அழவே ஆரம்பித்தாள்.

பஞ்சணைத் தலையணையில் தனது பங்கஜ முகத்தைப் புதைத்த வண்ணம், இளைய பல்லவன் மலையூர்க் கோட்டைத் தலைவனுக்குச் சொல்லிக் கொடுத்த வழிகளைத் திரும்பத் திரும்ப அலசிப் பார்த்த அவள் மனம் அந்த வழிகளில் பழுதேதுமில்லையென்று உணர்ந்து உணர்ந்து உருகிக் கண்ணீரைத் தாமரை விழிகள் மூலம் தாரைதாரையாகப் பிரவாகித்தது. இளையபல்லவன் அடியோடு அழிந்து போனானென்றே அவள் எண்ணினாள்.

அந்த எண்ணம் அவள் உள்ளத்தைத் துன்பக் கோடாரியால் பிளந்து கொண்டிருந்தது. மனதில் கிடைத்த அந்தத் துன்ப இடிகள் அவள் பூவுடலைக் குலுக்கின. துன்பத்தின் அந்தக் குலுக்கலிலும் அந்த உடல் எத்தனை அழகாயிருந்தது என்பதைப் பஞ்சணையிலிருந்து எழுந்து சில விநாடிகள் நின்ற படைத்தலைவன் கவனித்தான். பிறகு இரண்டெட்டில் வாயிற்படிக்குச் சென்று அறைக் கதவைத் தாழிட்டு வந்து பஞ்சணையில் அவளருகே உட்கார்ந்து அவள் முதுகை ஆறுதலுடன் தடவிக் கொடுத்தான்.

காதலன் கைப்பட்டதும் ஆறுதலைப் பெறும் அந்தக் காரிகையின் உடல் அன்று சிறிதளவும் ஆறுதலையடைய வில்லை. விம்மல்கள் அதிகப்பட்டன. உடல் வேதனையால் துவண்டது பஞ்சணையில். இளையபல்லவனுக்குப் பேராபத்து நிகழ்ந்துவிடப் போகிறது அடுத்த ஒரு ஜாமத்தில் என்ற நினைப்பு அவன் கையின் ஸ்பரிசத்தைக்கூடப் புறக்கணித்தது. அப்படித் தன் நிலையை எண்ணி வேதனைப் பட்ட அந்த உடலைத் தன் இருகைகளாலும் திருப்பித் தன் மடியில் கிடத்திக்கொண்ட இளையபல்லவன் அவள் கண்களில் உற்பத்தியாகிக் கன்னங்களில் வழிந்தோடிய நீர்த் துளிகளைத் துடைத்தான். “இதோ பார் மஞ்சளழகி, அழுவதற்குக் காரணமில்லை” என்று தைரியமூட்டும் சொற்களையும் உதிரவிட்டான்.

அவன் மடியிற் கிடந்தபடி மஞ்சளழகி தனது மலர்விழி களைத் திறந்து அவனை நோக்கினாள். அவன் முகத்தில் சிறிதளவு அச்சமோ, சிந்தனையோ குழப்பமோ கூட இல்லாதது அவளுக்கு விந்தையாயிருந்தது. அவன் வதனத்தில் புன்னகையின் சாயையே படர்ந்து நின்றது.

மஞ்சளழகி மெள்ள விம்மல்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனை நோக்கினாள். “ஏன் காரணமில்லை? நீங்கள் உபதலைவனுக்குச் சொல்லிக்கொடுத்த திட்டத்தில் பழுதென்ன இருக்கிறது?” என்று வினவினாள்.

“பழுது ஏதுமில்லை” என்று சகஜமாகச் சொன்னான் இளையபல்லவன்.

“அப்படியானால் உங்கள் நிலை?”

“ஏன்? என் நிலைக்கு என்ன?”

“ஆபத்தல்லவா?”

“ஆபத்துக்கும் எனக்கும் எப்பொழுதும் தொடர்பு உண்டு. “
“இந்த அறையில் அடைபட்டுக் கிடக்கிறீர்களே எப்படித் தப்பமுடியும்?”

“தப்ப வேண்டிய அவசியமில்லை. தப்ப எனக்கு இஷ்ட மில்லை . “

இளையபல்லவனின் இந்தக் கடைசிப் பதிலும், பதிலில் கண்ட உறுதியும் மஞ்சளழகிக்கும் சிறிது தைரியத்தை அளிக்கவே அவள் அவன் மடியிலிருந்து எழுந்திருந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். அவள் சொன்ன பதிலிலிருந்து அவன் விவரித்த திட்டத்திலோ வேறு எதிலோ எங்கோ ஓர் ஊனத்தை அவன் வைத்திருக்கிறான் என்பதை அவள் புரிந்துகொண்டாள். அது என்ன என்பதை அறிய முற்பட்டு ஒருமுறை தனது முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டு இளையபல்லவனை நோக்கிக் கேட்டாள், “திட்டத்தில் ஏதாவது ஊனமிருக்கிறதா?” என்று.

“ஏதுமில்லையென்று முன்னமேயே சொன்னேனே” என்றான் இளையபல்லவன் சர்வ சாதாரணமாக.

“அப்படியானால் அந்தத் திட்டம் நிறைவேறினால்… ” என்று மேலும் ஏதோ கவலையுடன் சொல்லப் போன மஞ்சளழகியைக் கையின் சைகையால் அடக்கிய இளைய பல்லவன், “மஞ்சளழகி! முக்கியமாக ஒன்றை மறந்துவிட்டாய், திட்டங்கள் மட்டும் வெற்றியளிப்பவையல்ல” என்று சுட்டிக் காட்டினான் பஞ்சணையிலிருந்து எழுந்து அவளுக்கெதிரில் நின்றுகொண்டு.

“நீங்கள் சொல்வது புரியவில்லை ” என்றாள் மஞ்சளழகி.
“திட்டத்தை வகுத்தது யார்?” என்று வினவினான் இளையபல்லவன்.

“நீங்கள்தான். வேறு யாரால் இந்தத் திட்டத்தை வகுக்க முடியும்?” என்று எரிச்சலுடன் கூறினாள் மஞ்சளழகி.

“வேறு யாரும் வகுக்க முடியாது, வேறு யாரும் நிறை வேற்றவும் முடியாது. “

“என்ன சொல்கிறீர்கள்?”

“வகுத்தது இளையபல்லவனுக்கான திட்டம். அதை இளையபல்லவன்தான் நிறைவேற்ற முடியும். “

அவன் தற்புகழ்ச்சியைக் கேட்ட அவள் பதிலேதும் சொல்லவில்லை. அது உண்மையென்பதை உணர்ந்து கொண்டாள் மஞ்சளழகி. அந்த உண்மையை மேலும் வலியுறுத்திச் சொன்னான் இளையபல்லவன், “மஞ்சளழகி! பலவர்மனைவிட அறிவாளியல்ல இந்த உபதலைவன்.

அவன் அறிவில் இவன் அறிவு ஆயிரத்தில் ஒரு பங்குகூட இல்லை . அந்த பலவர்மன் காவலிலும் நான் இருந்திருக்கிறேன். அந்தக் காவலை ஒத்திட்டுப் பார்த்தால் இந்தக் காவல் ஒரு காவலே அல்ல. பலவர்மன் மாளிகையில் மாடியறையில் பல வீரர்கள் கண்காணிப்பில் நான் குடித்தவனாகவும் மதி இழந்தவ னாகவும் பல வேடங்கள் தரிக்க, பலபடி நடிக்க அவசிய மிருந்தது. இங்கு அந்த அவசியமில்லை .

இந்த உபதலைவன் அளித்த சிறையைவிட எனக்கு உபயோகமானது வேறு எதுவும் இல்லை ” என்று கூறிய இளையபல்லவன் குரல் திடீரென உணர்ச்சி வேகத்தில் உயர்ந்தது. “இதோ பார் மஞ்சளழகி” என்று தனது அங்கியைக் கழற்றிப் பஞ்சணை மீது எறிந்த இளையபல்லவன் தனது கழுத்திலிருந்த தங்க ஆரத்தைக் கழற்றி அதன் இடையே பதிக்கப்பெற்ற நாகரத்தினச் சிவப்புக்கல்லை அவள் முன்னிலையில் ஆட்டிக் காட்டினான்.

எலுமிச்சம்பழத்தின் அரை மூடிப் பரிமாணமுள்ளதும் பத்தரை மாற்றுத் தங்கத்தில் பதிக்கப்பெற்றிருந்ததுமான அந்தப் பெரும் மாணிக்கத்தைப் பிரமிப்புடன் பார்த்தாள் மஞ்சளழகி. அந்தப் பெரும் நாகரத்தினம் அறை விளக்கில் எதிரொளி விட்டு அந்த அறையெங்கும் செங்கதிர்களைப் பரப்பியது. அந்தச் செங்கதிர்களில் குளித்த மஞ்சளழகி அந்த நாகரத்தினத்தின் அதிதேவதை போலக் காட்சியளித்தாள். அந்தச் செஞ்சோதிக்குள் இன்னொரு பொற்சோதியெனத் திகழ்ந்த மஞ்சளழகியின் இணையற்ற எழிலைச் சில விநாடிகள் பருகிய இளையபல்லவன், “மஞ்சளழகி! சீக்கிரம் அந்த விளக்கை எடுத்து வா” என்று அறை மூலையில் எரிந்து கொண்டிருந்த சிறு விளக்கைக் காட்டினான்.

மஞ்சளழகியின் எண்ணங்கள் எங்கெங்கோ சுழன்றன. அவள் பிரமிப்பின் வசப்பட்டிருந்தாள். இளையபல்லவனின் வேகத்துக்கும் உணர்ச்சியின் எழுச்சிக்கும் காரணம் அவளுக்குப் புரியவில்லை. பதுமையைப் போல் நடந்து சென்று அந்த விளக்கை எடுத்து வந்தாள். அந்த விளக்கை கையிலும் செங்கதிர் வீசும் அந்த மாணிக்கத் தங்கச் சங்கிலியை மற்றொரு கையிலும் பிடித்தவண்ணம் இளைய பல்லவன் பஞ்சணைமீது ஏறித் தவழ்ந்து பஞ்சணை அணைத் திருந்த சாளரத்தினிடம் சென்று உட்கார்ந்து மஞ்சளழகி யையும் தன் பக்கத்தில் வந்து உட்காரும்படி சைகை செய்தான்.

அவள் உட்காருமுன்பே சாளரக் கட்டையில் விளக்கை வைத்து அதன் திரியை நன்றாகத் தூண்டிச் சுடரைப் பெரிதாக்கிய இளையபல்லவன் அந்தப் பெரும் மாணிக்கத் தைச் சுடருக்கு முன்பாக ஆடவிட்டான். கடற்காற்றில் சுடர் ஆடியபோதிலும் அதன் ஒளியை வாங்கிய மாணிக்கம் தனது செங்கதிர்களை வெளியே பளீர்பளீரென்று அனுப்பத் தொடங்கியது. அந்த மாணிக்கத்தை அந்தச் சுடர் முன்பு ஆட்டிவிட்டபடியே திரியிலிருந்து இடது கையை எடுத்த இளையபல்லவன், “இப்பொழுது பார் மஞ்சளழகி? ஜம்பி நதித் துறையை ஊன்றிப் பார்!” என்றான். ஊன்றிப் பார்த்தாள் மஞ்சளழகி.

விளைவு புரிந்தது அவளுக்கு. எப்பேர்ப்பட்ட விளைவு அது! எண்ணவும் முடியாத விளைவு அவள் கண்ணெதிரே விரிந்தது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch60 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch62 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here