Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch62 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch62 | Sandilyan | TamilNovel.in

85
0
Read Kadal Pura Part 3 Ch62 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch62 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch62 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 62 : தேவிகள் இருவர்.

Read Kadal Pura Part 3 Ch62 | Sandilyan | TamilNovel.in

ஹரி நதியென்று ஆதிகாலத்திலும், மலையூர் நகரம் ஜம்பியெனப் புதுப்பெயர் கொண்டபிறகு ஜம்பி நதியெனப் பிற்காலத்திலும் வழங்கியதும், ராஜேந்திர சோழ தேவனுடைய மரக்கலங்கள் முதன் முதலாகச் சைலேந்திரர்களின் ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தில் ஊடுருவ இடம்கொடுத்ததால் சரித்திரப் பிரசித்தி பெற்றதும், மலையூரை அணைத்து ஓடியதுமான அந்த நதிப் பிராந்தியத்தைக் கோட்டையின் அந்தரங்க அறையிலிருந்து கவனித்த மஞ்சளழகி வியப்பின் எல்லையை அடைந்தாள். இளையபல்லவன் எத்தனை சாமர்த்தியமாக உபதலைவனை ஏமாற்றிவிட்டானென்பதையும், தான் இளையபல்லவனுடைய அழிவுத் திட்டமெனக் கருதியது உண்மையில் அவனுக்கு ஆதரவுத் திட்டமென்பதையும் உணர்ந்து கொண்ட மஞ்சளழகி மேலும் மேலும் ஜம்பி நதிப் பிராந்தியத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இளையபல்லவன் அந்த விளக்கெதிரே அந்தப் பெரும் நாகரத்தினக் கல்லை இடைவெளி விட்டு விட்டு ஆட்டிய படியே இருந்தான். முதல் இருமுறை அக்கல் ஆடி நின்றதுமே கடல் புறாவின் தளத்தில் திடீரென இரு பந்தங்கள் எழுந்து உலாவியதையும், அந்தப் பந்தங்கள் சில விநாடிகளுக்குள் மறைந்துவிட்டதையும் கவனித்தாள் மஞ்சளழகி. மீண்டும் இருமுறை இளையபல்லவன் அந்த நாகரத்தினக் கல்லை ஆட்டினான். அதன் பிரதிபலிப்பிலிருந்து நீண்ட செஞ்சோதி கிளம்பி அறைக்கு வெளியிலிருந்த வானவெளியை ஊடுருவிச் சென்று அசைந்ததையும், அந்த அசைவை மீண்டும் இரண்டுவிநாடிகள் இளையபல்லவன் நிறுத்தியதையும் கவனித்தாள் மஞ்சளழகி.

அந்த இரு விநாடிகள் முடிந்ததும் கடல் புறாவின்தளத்திலும் ஒரு சிறு விளக்கு எழுந்து ஆடியது. அந்த விளக்கு ஆடுமுன்பே கடல் புறாவின் தளத்திலிருந்து விளக்குகளும் பந்தங்களும் அடியோடு மறைந்து விட்டதால் அந்த விளக்காட்டம் மையிருளில் தனிப்படச் சிறப்புறத் தெரிந்தது. அந்த ஆட்டத்தைக் கண்டு மீண்டும் தனது நாகரத்தினத்தை விளக்கொளியில் பலமுறை பலவிதமாக ஆட்டிக்கொண்டிருந்த இளையபல்லவனைக் கண்ட மஞ்சளழகி அதற்குக் காரணம் புரியாமல் கேட்டாள்: “நீங்கள் ஆபத்தில் இருப்பதைத்தான் உங்கள் நண்பர்களுக்கு அறிவித்துவிட்டீர்களே, இன்னும் எதற்காக இந்தச் சைகை?”

இளையபல்லவன் அவளைச் சற்றும் திரும்பிப் பார்க்காம லும், நாகரத்தினச் சுடர் வீச்சைப் பலபடி கிளப்பிவிட்டுக் கொண்டும், “என் ஆபத்தைப்பற்றி நான் எதுவும் குறிப்பிட வில்லை, அமீருக்கும் கண்டியத்தேவனுக்கும்” என்று பதில் கூறினான்.

மஞ்சளழகியின் வதனத்தில் வியப்பின் சாயை விரிந்தது. “என்ன, உங்கள் ஆபத்தைப்பற்றித் தெரியப்படுத்தவில்லையா!” என்று வினவவும் செய்தாள் குரலிலும் வியப்பு ஒலிக்க.

“இல்லை” என்றான் இளையபல்லவன்.

“ஏன் தெரியப்படுத்தவில்லை?” என்று கேட்டாள் அவள் மீண்டும்.

“ஆபத்து இருந்தாலல்லவா தெரியப்படுத்துவதற்கு?” இளையபல்லவன் கேள்வியும் முதல் பதிலைப் போலவே சர்வ சகஜமாயிருந்தது.

“ஆபத்தில்லையா உங்களுக்கு?”

“இல்லை. “

“வெளியிலிருக்கும் காவலர்கள்!”

“சிறைப்பட்டவர்கள். “

“யாரிடம்?”

“என்னிடம். “

“உங்களிடமா?” இந்தக் கேள்வியைக் கேட்ட மஞ்சளழகியின் குரலில் சற்றுக் கோபமிருந்தது.

பஞ்சணையில் பக்கத்தில் அமர்ந்திருந்த அவளை நன்றாக அருகில் இடக்கையால் இழுத்துக்கொண்ட இளையபல்லவன், “உனக்குப் புரியவில்லையா மஞ்சளழகி? இந்த மலையூர்க் கோட்டை என் கையில் விழுந்துவிட்டது” என்று கூறினான்.

“எப்படி அத்தனை உறுதியாகச் சொல்ல முடியும்?” என்று வினவினாள் மஞ்சளழகி.

“இன்னும் ஒரு நாழிகைக்குள் இந்த உபதலைவன் கடல் புறாவுக்குச் செல்லுவான். அங்கு என்ன நடக்கும் என்று நான் உனக்குச் சொல்லத் தேவையில்லை” என்றான் இளைய பல்லவன்.

என்ன நடக்குமென்பதை மஞ்சளழகி அறிந்தே இருந்தா ளாகையால், “இல்லை, சொல்லத் தேவையில்லை” என்றாள்.

“அங்கு சென்றதும் உபதலைவன் சிறைப்படுத்தப் படுவான். “

“அது தெரியும் எனக்கு?”

“என் திட்டமே அதுதானே! புரியவில்லையா உனக்கு?” “என்ன உங்கள் திட்டம்?”

“உனக்கு ஏன் நான் ஸ்ரி விஜயத்தின் கடற்படைத் தலைவனிடமிருந்து ஓலை வாங்கி வந்தேன்?”

இந்தக் கேள்வியை இளையபல்லவன் கேட்டதும் பல விஷயங்கள் திடீரென ஒளிர்விட்டன மஞ்சளழகியின் சிந்தையிலே. “ஆம், ஆம். புரிகிறது, புரிகிறது” என்ற அவள் குரலில் ஆச்சரியம் பெரிதாகத் தொனித்தது.

அவளுக்கு விஷயம் நன்றாக விளங்கிவிட்டதென்பதை அறிந்தும்கூடத் தன் உள்ளத்திலோடிய எண்ணங்களைச் சொற்களில் வடிக்கத் துவங்கினான் இளையபல்லவன். “ஆம் மஞ்சளழகி! இந்த மலையூர்க் கோட்டையை எனக்கோ மக்களுக்கோ சேதமின்றிப் பிடிக்கத் தீர்மானித்தேன். இந்த
ஊரில் தமிழர்களே பெரும்பான்மையர் என்பது எனக்குத் தெரியும். தொலைக் கிழக்கிலுள்ள தமிழர் கூட்டத்தின் பெரும் பிரிவு இங்கிருப்பதும், அவர்கள் ஜெயவர்மன் ஆக்கினைக்குள் அச்சத்துடன் வர்த்தகம் செய்து வருவதும் எனக்குத் தெரியும். ஆகவே இந்தக் கோட்டையின் பலத்தை மட்டும் நான் உடைத்துவிட்டால் இந்த ஊரை நான் வெற்றிகொண்டது போலாகும். இதன் அமைப்பையும் முக்கியத்துவத்தையும். எனக்கு யார் உணர்த்தியது தெரியுமா?” என்று வினவினான் இளையபல்லவன்.

உணர்ச்சி வேகத்துடன் உதிர்ந்த அவன் சொற்களையும் தமிழ் வணிகர் நிலை பற்றி அவன் பேசிய போது குரலில் தொனித்த கடுமையையும் கண்ட மஞ்சளழகி, அவன் உணர்ச்சிக்கும் கடுமைக்கும் காரணமிருப்பதை உணர்ந்து கொண்டாளானாலும் அதைப்பற்றி ஏதும் குறிப்பிடாமல், “யார்?” என்று ஏதோ கேட்கவேண்டுமென்பதற்காகக் கேட்டு வைத்தாள்.

இளையபல்லவன் மேலும் உணர்ச்சி பொங்கப் பேசத் துவங்கினான்: “ராஜேந்திர சோழ தேவர் மஞ்சளழகி, ராஜேந்திர சோழ தேவர். ஸ்ரி விஜயத்தைவிட இந்த மலையூரை வெற்றி கொண்டதை அதிகப்படியாகத் தமது சாசனத்தில் பொறித்திருக்கிறார். கோட்டை வலுவுள்ள மலையூர் என்று பொருள்பட சாசனம் அமைத்திருக்கிறார். அதைக் கொண்டே நான் புரிந்துகொண்டேன், கோட்டை விழுந்தால் மலையூர் விழுந்ததென்று. இந்த ஊரில் வேறு அரண்கள் இல்லை யென்பதையும் இன்று பகலே புரிந்துகொண்டேன். பாலிக் குள்ளனும்..” என்று மேலும் ஏதோ சொல்லப் போன இளைய பல்லவனை இடைமறித்த மஞ்சளழகி, “யாரது பாலிக்குள்ளன்!” என்று வினவினாள்.

“கீழ்த்திசையின் சிறந்த மாலுமிகளில் ஒருவன். இந்தக் கடல் பகுதிகளை அணு அணுவாக அறிந்தவன். உடல் குள்ளமே யொழிய, அறிவு குள்ளமல்ல அவனுக்கு. போர்க் கலங்களை நடத்துவதில் அமீருக்கோ கண்டியத்தேவனுக்கோ
சற்றும் சளைத்தவனல்ல. முன்பு கங்கதேவனின் உபதலைவன். இப்பொழுது எனது பக்தன். ” இந்தச் சொற்களைப் பெரும் பெருமையுடன் சொன்னான் இளையபல்லவன். அத்துடன் மேலும் கூறினான், “ஒரு தலைவனுக்கு விவேகம் மட்டும் போதாது பெரும் காரியங்களைச் சாதிக்க. அவன் உப தலைவர்களும் சிறந்தவர்களாயிருக்க வேண்டும். உதாரணமாக இந்தக் கோட்டையை எடுத்துக் கொள். நீ விவேகமுள்ள தலைவி. என்னை அழிப்பதற்கு வேண்டிய சகல வசதி களையும் இங்கு ஏற்படுத்தியிருக்கிறாய். ஆனால் பாவம்?” என்று.

மஞ்சளழகியின் கோபம் மெள்ள ஏறத் தொடங்கியது. “என்ன பாவம்! எதற்கு இந்தப் பரிதாபம்!” என்று வீசினாள் கேள்வியை.

“இந்தக் கோட்டை கடல்புறாவை அழிக்கும் சாதனங் களை உடையது. ஆனால் கடல்புறா இந்தக் கோட்டையை அழிக்கும் நிலைமையில் இருக்கிறது இப்பொழுது. இங்குள்ள அழிவு யந்திரங்களை உபயோகப்படுத்த உத்தரவு தேவை. அந்த உத்தரவை இடக்கூடியவர்கள் ஒன்று இளவரசியாகிய நீ. அல்லது உன் உபதலைவன். நீ இந்த அறையில் என்னுடன் சிறையிருக்கிறாய். உன் உபதலைவன் கடல் புறாவுக்குச் செல்கிறான் சிறைப்பட. இந்த யந்திரங்களை இயக்க யாரும் உத்தரவிட முடியாது இப்பொழுது.

செல்வமிருந்தும் அனுபவிக்க முடியாத உலோபியின் நிலையிலிருக்கிறது இந்தக் கோட்டை. அது மட்டுமல்ல..” என்று இளையபல்லவன் சற்று நிதானித்துவிட்டு மேலும் சொன்னான்: “இங்கு நான் வந்ததே இந்தக் கோட்டையின் தலைவனை அழைத்துச் சென்று கடல் புறாவில் சிறைப்படுத்திவிட்டு இரவோடு இரவாக இந்தக் கோட்டையை ஆதரவற்றதாகச் செய்து பிடித்துவிட வேண்டும் என்பதற்காக. அந்த உத்தேசத்துடன்தான் நான் விஜயசந்திரனிடமிருந்து ஓலையும் வாங்கி வந்தேன். ஆனால் ஓலை பலிக்கவில்லை.

ஏமாந்தேன். உன் புத்திக்கூர்மையில் நான் அழிந்திருப்பேன். நீ செய்ய முற்பட்ட தியாகத்தில் நான் கடல்புறாவையும் என்னையும் என்னைச் சேர்ந்தவர்களையும் அழித்துக் கொண்டிருப்பேன். என் நல்ல காலம், உன் அறிவுடன் என் அறிவு மோதவில்லை. உபதலைவன் இடையே புகுந்தான், என்னைக் காக்க. ஆசை வலை விரித்தேன். அதில் விழுந்தான்.

எந்தக் காரியத்துக்கு நான் வந்தேனோ அதை அவனே முடித்துக் கொடுத்தான். இக்கோட்டையின் தலைவனைக் கடல்புறாவுக்கு அழைத்துப் போகவந்தேன்; நான் அழைத்துப் போவதற்குப் பதில், அவனே போயிருக்கிறான். வேலை மிகச் சுலபமாகி விட்டது,” என்ற இளையபல்லவன் அதுவரை ஆட்டிக் கொண்டிருந்த நாகரத்தினத்தை விளக்கொளியின் முன்பிருந்து எடுத்து விட்டான். விளக்கையும் அணைத்து விட்டான். பின்பு மஞ்சளழகியைத் திரும்பி நோக்கினான்.

அறையின் விளக்கு அணைக்கப்பட்ட போதிலும் வானத்தில் ஜொலித்த விண்மணிகள் அளித்த அற்ப வெளிச்சத்தில் மஞ்சளழகியின் முகத்தில் அழகு பன்மடங்கு அதிகமாக இருந்தது. அவன் முகத்தைப் பெருமிதத்துடனும் ஆவலுடனும் நோக்கிய அக்ஷயமுனைக் கோட்டை அழகி கேட்டாள்: “ஆமாம், எதற்காகத் திரும்பத் திரும்ப நாக ரத்தினத்தை ஆட்டிக் கொண்டிருந்தீர்கள்?” என்று.

இளையபல்லவன் அவளைத் திருப்பிப் பஞ்சணையில் தனக்கெதிரில் உட்கார வைத்து அவள் முகத்தின் முன்பு அந்த நாகரத்தினத்தை ஆட்டினான். அந்த அற்ப வெளிச்சத்திலும் அந்த நாகரத்தினம் நெருப்புத் துண்டமென ஜொலித்தது. “மஞ்சளழகி! இதை நான் ஆட்டவில்லை. இதைக் கொண்டு பேசினேன்” என்றான்.

“பேசினீர்களா?”

“ஆம் பேசினேன், அமீருடனும் கண்டியத்தேவனுடனும். “

“இந்த நாகரத்தினத்தின் மூலமா?”

“ஆம். “

“எப்படிப் பேசினீர்கள்!”

“எனது மற்ற மரக்கலங்கள் கடல் புறாவைத் தொடரும் போது பந்தங்களை ஆட்டி ஒளிச் சைகை செய்து என் கருத்துக்களை அந்த மரக்கலங்களிலுள்ள மாலுமிகளுக்கு அறிவிப்பேன். வாய்மூலம்தான் பேசவேண்டுமென்பதில்லை மஞ்சளழகி. ஒளி. மூலமும் பேசலாம். அந்த ஒளி இலக்கணத்தை என் மாலுமிகளுக்கு நன்றாகப் போதித் திருக்கிறேன். நான் வாய்மூலம் உத்தரவிட்டால் அதை எப்படி அவர்கள் அறிந்து கொள்வார்களோ அப்படியே ஒளிமூலம் நான் சொல்வதையும் அறிந்து கொள்வார்கள். இப்படி மஞ்சளழகியிடமும் காஞ்சனாதேவியிடமும் எத்தனையோ முறை நான் பேசி இருக்கிறேன்” என்றான்.

இதைக்கேட்ட மஞ்சளழகியின் முகம்லேசாகச் சுளித்தது. “காஞ்சனாதேவியிடம் பேசியிருப்பீர்கள். ஆனால் உங்களை நான் சந்தித்துத்தான் கிட்டத்தட்ட ஓராண்டு ஆகப்போகிறதே” என்றாள் அவள்.

இளையபல்லவன் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. “யார் சொன்னது ஓராண்டு ஆயிற்றென்று? எப்பொழுதும் உங்களைப் பக்கத்தில்தானே வைத்துக்கொண்டிருக்கிறேன்” என்றான் விஷமமாக.

“எங்களையா?” கேள்வியில் கடுமையிருந்தது.

“உன்னையும் காஞ்சனாவையும் தான்!”

“ஊஹும், இப்பொழுது அவள் காஞ்சனாதேவியிலிருந்து காஞ்சனாவாகி விட்டாளா?”

“இல்லையில்லை, இப்பொழுதும் தேவிதான். “

“யாருக்குத் தேவி? உங்களுக்கா?”

“ஆமாம். எனக்கு இரு தேவிகள். “
“ஒரு தேவி போதாதாக்கும்?”

“போதவில்லை, ஆகையால்தான்… ”

மஞ்சளழகி இதைக் கேட்டதும் பஞ்சணை முகப்புக்கு நகர்ந்து கீழே இறங்க முற்பட்டாள். இளையபல்லவன் அவள்கையைப் பிடித்து மீண்டும் இழுத்து, “மஞ்சளழகி! இப்படி வா. என் காஞ்சனாவை உனக்குக் காட்டுகிறேன்” என்றான்.

“வேண்டாம், எனக்கு. விடுங்கள் கையை” என்று திமிறினாள் மஞ்சளழகி.

ஆனால் இளையபல்லவன் கை அவள் மெல்லிய கையை இரும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தது. “வா! அவளை மட்டுமல்ல, உன்னையும் காட்டுகிறேன்” என்று கூறிச் சிரித்தான் இளையபல்லவன். அவன் சிரிப்பு மஞ்சளழகிக்கு வேப்பங்காயாக இருந்தது. “விடுங்கள், நீங்கள் இத்தனை கேவலம், இத்தனை காமுகர் என்பது எனக்குத் தெரியாது. உங்களை… உங்களை… ” என்று பேச்சு வராமல் கோபத்தில் திணறினாள்.

“யோக்கியனென்று நினைத்தாய்” என்று அவள் வார்த்தைகளைப் பூர்த்தி செய்த இளையபல்லவன், அவளை இழுத்து மறுபடியும் சாளரத்தருகில் இருத்தி, “ஜம்பி நதிப் பகுதியைப் பார். கடல் புறாவுக்கு இருபக்கத்திலும் நிற்கும் அந்த இரு மரக்கலங்களையும் பார். அவள் மஞ்சளழகி, இவள் காஞ்சனா,” என்று அந்த மரக்கலங்களிருந்த இடத்தைச் சுட்டிக்காட்டினான் இளையபல்லவன்!

மெள்ள மெள்ள விஷயம் புரிந்தது மஞ்சளழகியின் சஞ்சலப்பட்ட சித்தத்துக்கு. அவள் கண்கள் அவன் காட்டிய திசையை நோக்கின. அந்த இரு பெரும் உல்லாச மரக்கலங் களையும் பார்த்த மஞ்சளழகி பிரமித்தாள். அந்தப் பிரமிப்பை அதிகப்படுத்த இளையபல்லவன் சொன்னான்: “அந்த இரு மரக்கலங்களிலும் இருக்கும் செல்வத்தைக் கொண்டு இந்த ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தை விலைக்கு வாங்கிவிடலாம் மஞ்சளழகி. அவை உல்லாச மரக்கலங்கள் மட்டுமல்ல, போர்க்கலங்களும் கூட. அவற்றிலுள்ள பொக்கிஷத்தைக் களவாட முற்படும் எந்த மரக்கலத்தையும் நாசம் செய்யும் சக்தி அவற்றுக்கிருக்கிறது. ஒன்று உனக்கு மஞ்சளழகி, ஒன்று காஞ்சனாதேவிக்கு. முன்பு சம்பிரதாயப்படி காஞ்சனாதேவி ஒருத்திதான் இளவரசி. இப்பொழுது நீயும் இளவரசி. இரண்டு இளவரசிகளும் என் அருகிலேயே இருந்திருக் கிறார்கள்,” என்று அறிவித்தான் இளையபல்லவன்.

இளையபல்லவன் இதயத்தில் தனக்கும் இடமிருந்தாலும் காஞ்சனாதேவிக்கும் அதில் இடமிருப்பதை அவள் அறிந் திருந்ததால் இன்பத்துக்குப் பதில் துன்பமே ஏற்பட்டது அவளுக்கு. இளையபல்லவன் நாகரத்தினம் பதித்த சங்கிலியை அவள் கழுத்தில் போட்டு, “இது என் பரிசாக இருக்கட்டும் உனக்கு” என்று சொல்லி அவள் கன்னங்களை வருடியதுகூட இன்பத்தை அளிக்கவில்லை அவளுக்கு. எப்படியும் அவன் தன்னைவிட காஞ்சனாதேவியையே விரும்புகிறான் என்ற எண்ணம் அவள் மனத்தை அடைத்துக் கொண்டது. ஆகவே அவள் ஏதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தாள்.

இளையபல்லவன் நிலை அவள் நிலையைவிடச் சங்கடமாயிருந்தது. எந்த மஞ்சளழகிக்குப் பயந்து அவன் அக்ஷயமுனைக்குச் செல்லாமல் பல திருட்டுத்தனங்களைச் செய்து மலையூர் வந்தானோ அந்த மஞ்சளழகியிடமே தான் சிக்கிக்கொண்டதை எண்ணினான். அது மட்டுமல்ல, மலையூர்க் கோட்டை அன்றிரவு பிடிபட்டதும் மறுநாள் காஞ்சனாதேவியும் மஞ்சளழகியும் சந்திக்கும்படி இருக்குமே, அந்த ஆபத்தை எப்படித் தவிர்ப்பதென்று யோசித்து உள்ளூரப் பயம் கொண்டான்.

எதற்கும் அஞ்சாத அந்தக் கடல் வீரன் தன் காதலிகள் இருவர் சந்திப்பையும் நினைத்து அஞ்சினான். ‘இந்த நிமிஷம் வரை காஞ்சனாதேவி கடல் புறாவிலிருப்பது மஞ்சளழகிக்குத் தெரியாது. நாளை தெரிந்து விட்டால்? இதை எண்ணி நடுங்கினான். ஆகவே மலையூர்க் கோட்டையை அறவே மறந்து அந்த இருவர் சந்திப்பையும் எப்படித் தடுக்கலாமெனத் திட்டம் போட முற்பட்டான் இளையபல்லவன். அதைப்பற்றி எண்ணப்போன சமயத்தில் மஞ்சளழகி திடீரெனக் கூவினாள், “அதோ பாருங்கள், பாருங்கள்,” என்று

இளையபல்லவன் அவள் காட்டிய திசையை நோக்கினான். “ஆம், மஞ்சளழகி! கடல் புறாவிலிருந்து மாலுமிகள் படகுகளில் இறங்குகிறார்கள்,” என்று அவன் மேலும் ஏதோ சொல்லப் போய் வார்த்தைகள் வராமல் நின்றான். மஞ்சளழகி நதிப் பகுதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கடல் புறாவிலிருந்தும், மற்ற மரக்கலங்களிலிருந்தும் மாலுமிகள் இறங்கினார்கள். அடுத்த அரை நாழிகைக்குள் படகுகள் நகர முற்பட்டன. ‘கோட்டை பிடிபட்டது போலத்தான்,’ என்று எண்ணிய மஞ்சளழகி இளையபல்லவனை நோக்கினாள்.

அவன் முகத்தில் அச்சம் பரவிக் கிடந்தது. உதடுகள் மடிந்து கடுமையைக் காட்டின. அவளைப் பார்க்கப் பயந்த கண்கள் கடலை நோக்கின. அவன் புத்தி அத்தனை அச்சத்திலும் துரிதமாக வேலை செய்து கொண்டிருந்தது. என்ன செய்துமென்ன, அவன் எதிர்பார்த்த இடி மறுநாள் பொழுது புலருமுன்னமே அவன்மீது இறங்கிவிட்டது. அதிகச் சத்தமின்றி மலையூர்க் கோட்டைப் போர் முடிந்ததும் விடியற்காலையில் அந்த அந்தரங்க அறையின் கதவு தடதட வெனத் தட்டப்பட்டது. அறைக் கதவை மஞ்சளழகியே திறந்தாள். நிலைப்படியினருகில் நின்றிருந்தாள் கடாரத்தின் இளவரசி காஞ்சனாதேவி.

Previous articleRead Kadal Pura Part 3 Ch61 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch63 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here