Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch63 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch63 | Sandilyan | TamilNovel.in

137
0
Read Kadal Pura Part 3 Ch63 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch63 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch63 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 63 : மின்னலும் இடியும்.

Read Kadal Pura Part 3 Ch63 | Sandilyan | TamilNovel.in

கதவு திறந்ததும் நிலைப்படியருகே நின்றிருந்த காஞ்சனாதேவியைப் பஞ்சணையிலிருந்தே கவனித்த இளைய பல்லவனுக்கு, அவள் கருவிழிகளில் விரவிக் கிடந்தது சினமா, வியப்பா, பிரமிப்பா என்பது அடியோடு புரியாததால், அவன் பெரும் சங்கடத்துடன் மஞ்சத்திலேயே மெல்ல அசைந்தான். உண்மையில் காஞ்சனாதேவியின் இதயத்தில் அந்த மூன்று உணர்ச்சிகளும் கலந்தே சுழன்றன. மலையூர் வீழ்ச்சியை இளையபல்லவனுக்குத் தானே அறிவிக்க வேண்டுமென்று ஆசையுடன் ஓடி வந்த அவளுக்குத் தனது ஆசையின் வீழ்ச்சிக் காட்சியொன்று அங்கு காத்திருக்குமென்பது எப்படித் தெரிந்திருக்க முடியும்? ஆகவே கதவு திறந்து எதிரே மஞ்சளழகி நின்றதும் அவள் ஒருகணம் பிரமித்தே போனாள். அடுத்த கணம் தனது கருவிழிகளைப் பெரும் சினத்துடன் மஞ்சளழகியின் மீது நிலைக்கவும் விட்டாள்.

மஞ்சளழகியின் நிலையும் கிட்டத்தட்ட காஞ்சனா தேவியின் நிலையிலேயே இருந்தது. மஞ்சளழகியும் காஞ்சனா தேவியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளவில்லையானாலும் இருவரும் சமீப காலத்தில் ஒருவரைப் பற்றி யொருவர் பலபேரிடம் விசாரித்தறிந்திருந்தமையால், ஒருவரையொருவர் இன்னாரென்று புரிந்துகொள்வது பிரமாதமாயில்லை. காஞ்சனாதேவி நின்ற தோரணையிலிருந்தும், அவள் கையில் உருவி நின்ற கத்தியிலிருந்தும், அவள் இளையபல்லவனிருந்த திசையையும் நோக்கித் தன்னையும் நோக்கியதிலிருந்தும், அவள் விழிகளில் எழுந்த கோபத்திலிருந்தும், அவள் கடாரத்தின் இளவரசி என்பதைப் புரிந்துகொண்ட மஞ்சளழகியும் அவள் மீது சினம் நிரம்பிய பார்வையை வீசினாள்.

மஞ்சளழகியின் அழகிய விழிகளும், அவள் மஞ்சள் நிறத் தேகமும் அவள் இன்னாரென்பதை விளக்கியதால் அவளைச் சுட்டுவிடுபவள்போல் பார்த்த காஞ்சனாதேவி, தனக்கும் அந்த அறைக்கும் இடையே நின்ற அவளை இடது கையால் விலக்கிக் கொண்டு உள்ளே நுழைய முயன்றாள். ஆனால் திறந்திருந்த ஒரே கதவின் இடை வெளியை மஞ்சளழகியின் கை தடுத்து நின்றது. “யார் நீ?” என்ற கேள்வியிலும் அதிகாரத் தொனி இருந்தது.

“அதை அவரைக் கேட்டுத் தெரிந்துகொள்,” என்று வேகத்துடன் பதில் கூறிய காஞ்சனாதேவி, “அதிருக்கட்டும் நீ யார்?” என்று வினவினாள்.

மஞ்சளழகியின் இதழ்களில் இகழ்ச்சி நகை விரிந்தது. “அதையும் அவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்,” என்று சொற்களில் மட்டுமின்றி, இளையபல்லவனிருந்த திசையை நோக்கிச் சற்றே திரும்பிய அவள் தலையின் அசைவிலுங்கூட இகழ்ச்சி பலமாகப் பிரதிபலித்தது.

காஞ்சனாதேவியின் கருவிழிகள் கோபத்தை அள்ளி வீசின. “அப்படியா விஷயம்!” என்ற சொற்கள் மிகக் கடுமையுடன் உதிர்ந்தன.

“ஆம். அப்படியேதான் விஷயம்” என்று மஞ்சளழகி மிக அலட்சியத்துடன் பதில் சொன்னாள்.

அதற்கு மேல் தாளமாட்டாத காஞ்சனாதேவி என்ன செய்வதென்றோ என்ன பேசுவதென்றோ அறியாமல் நின்ற இடத்தில் சற்றே துடித்தாள். அவள் துடிப்பையும் கால்களின் நடுக்கத்தையும் மஞ்சளழகி கவனித்தாள். அவள் உணர்ச்சி வேகத்தால் துடிப்பதையும், அதற்குக் காரணம் தானே என்பதையும் ஊகித்துக்கொண்ட மஞ்சளழகி, குறுக்கே தடுத்து நின்ற தனது கரத்தை எடுத்து, “உம். போ உள்ளே !” என்று கூறினாள்.

காஞ்சனாதேவியின் உள்ளம் பெரும் கொதிப்படைந் திருந்ததால் அவள் பதிலேதும் பேசாமல் அறைக்குள் சென்றாள். அவள் உள்ளே வந்ததும் அறைக் கதவை மீண்டும் சாத்திய மஞ்சளழகி, கதவின்மீது தனது முதுகை வைத்துச் சாய்ந்துகொண்டு காஞ்சனாதேவியையும் இளைய பல்லவனையும் மாறிமாறி நோக்கினாள். பஞ்சணையின் ஒரு மூலையில் சாளரத்துக்கருகே அப்பொழுதும் அமர்ந்திருந்தான் கடல் புறாவின் தலைவன். அதுவரை அவனுக்கிருந்த அசட்டை, நிதானம் எதுவும் அவனிடம் காணப்படவில்லை அந்தத் தருணத்தில். ஏதோ பயந்து ஒடுங்கும் திருடனைப் போலிருந்தது அவன் உட்கார்ந்திருந்த முறையுங் கூட.

அறைக்குள் நுழைந்ததும் காஞ்சனாதேவி சில விநாடிகள் இளையபல்லவனை உற்று நோக்கியதையும், பிறகு பஞ்சணையைக் கண்டதையும், அடுத்தபடி தன்மீது சுடு விழிகளைத் திருப்பியதையும் கண்ட மஞ்சளழகி அவள் சினம் தலைக்கேறிவிட்டதன் காரணத்தைப் புரிந்து கொண்டாள். இளையபல்லவனும் தானும் பஞ்சணையில் தவழ்ந்து சாளரத்தருகே சென்றதாலும் திரும்பத் தான் இறங்கிக் கதவைத் திறக்கச் சென்றதாலும், பஞ்சணையை மறைத்துக் கிடந்த சீலை பெரிதும் கலைந்து கசங்கிக் கிடந்ததைக் காஞ்சனாதேவி தவறாகப் பொருள் கொண்டிருக்கிறாளென்பதை உணர்ந்து கொண்டதால் பெரும் சங்கடத்துக்குள்ளான மஞ்சளழகி தனது கண்களை நிலத்தை நோக்கித் தாழ்த்தினாள். அத்தனை சங்கடத்திலும் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது அவளுக்கு. ‘காஞ்சனாதேவி நினைப்பது மட்டும் உண்மையாயிருந்திருக்குமானால்-‘ என்று உள்ளூர எண்ணியதால் அவள் உடலெல்லாம் வெட்கமும் மகிழ்ச்சியும் கலந்து ஊடுருவிச் சென்றன.

காஞ்சனாதேவியின் மனத்தில் மகிழ்ச்சி ஏதுமில்லாதது மட்டுமல்ல, துன்பமும் கோபமும் கலந்த உணர்ச்சி அலைகள் எழுந்து எழுந்து அவள் இதயத்தைத் தாக்கின. ‘இப்படியும் ஒரு வெட்கங்கெட்டவள் இருப்பாளா? என்னெதிரே சங்கோஜமின்றி நிற்கிறாளே இவள்!’ என்று மனத்துக்குள் நினைத்தாள். அந்த நினைப்பை நேரடியாகச் சொல்லாமல் குத்தலாகப் பேசவும் துவங்கிய காஞ்சனாதேவி, “இளையபல்லவர் சிறையிலிருப்பதாகத் தேவர் சொன்னார். கோட்டைத் தலைவர் அறையில் சிறையிலிருப்பதாகவும் சொன்னார்” என்று கூறி இளையபல்லவனைக் கூர்ந்து நோக்கினாள்.

அதுவரை கடற்பகுதியைக் கவனிப்பதுபோல் பாசாங்கு செய்துகொண்டிருந்த இளையபல்லவன் மெல்லத் திரும்பி, “என்ன சொன்னார்,” என்று மென்று விழுங்கினான்.

“சிறையிலிருப்பதாகச் சொன்னார்… ” என்று இகழ்ச்சி யுடன் சொற்களை உதிரவிட்ட காஞ்சனாதேவி, “ஆனால்… ” என்று கூறி வார்த்தைகளைத் தேக்கினாள், கோபம் தொண்டையை அடைத்ததால்.

“ஆனால் என்ன?” என்று ஏதோ கேட்க வேண்டு மென்பதற்காகக் கேட்டான் இளையபல்லவன்.

“சிறிது தவறு செய்துவிட்டார். “

“என்ன தவறு?”

“நீங்கள் சிறையிருப்பது கோட்டைத் தலைவரின் அறை என்று சொன்னார், தலைவியின் அறை என்று சொல்ல வில்லை … ”

“உம்?”

“அது மட்டுமல்ல… ”

“ ஊம். “

“இந்தச் சிறையிலிருந்து நீங்கள் தப்ப இஷ்டப்பட மாட்டீர்கள் என்றும் சொல்லவில்லை. ” காஞ்சனாதேவியின் சொற்கள் மிகுந்த கடுமையுடனும் இகழ்ச்சியுடனும் ஒலித்தன. அவள் கண்கள் மீண்டும் கலைந்து கிடந்த பஞ்சணையை நோக்கின.

இளையபல்லவனுக்கு என்ன சொல்வதென்று விளங்க வில்லை. எதிரே நின்ற காஞ்சனாதேவியையும் கதவை அடைத்து நின்ற மஞ்சளழகியையும் மாறிமாறிப் பார்த்தான். பிறகு கோபத்தை மஞ்சளழகியின் மீது திருப்பி, “எதற்காக அந்தக் கதவை அடைத்துக்கொண்டு நிற்கிறாய்?” என்று சீறினான்.

அதுவரை சங்கடத்தால் நிலத்தை நோக்கியிருந்த தலையைத் திடீரென உயர்த்திய மஞ்சளழகி நன்றாக உடலையும் நிமிர்த்தி நின்றாள். அவள் கண்களிலும் சினம் ததும்பியது. கடுமையே சாதாரணமாகக் காணப்படாத மஞ்சளழகியின் குரலிலும் கடுமை ஒலித்தது. “உங்களிரு வருக்கும் தடையாய் இருந்தால் போய் விடுகிறேன்” என்று சுடுசொற்களை உதிர்த்த மஞ்சளழகி காஞ்சனாதேவியைச் சுடசுடப் பார்த்தாள்.

“ஆமாம். இனிமேல் இங்கிருக்க அவசியமில்லை உனக்கு” என்றாள் காஞ்சனாதேவி எரிச்சலுடன்.

“உனக்கு அவசியமிருக்கிறது. இரு,” என்று கூறிவிட்டுச் சரேலெனத் திரும்பிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே செல்ல முயன்ற மஞ்சளழகியை நோக்கி, “இரு மஞ்சளழகி இரு” என்று கூவிக்கொண்டு பஞ்சணையில் தவழ்ந்து வந்து அவசர அவசரமாக இறங்கினான் இளையபல்லவன்.

அவன் அவசரத்தைப் பார்த்த காஞ்சனாதேவி, “விழுந்து விடாதீர்கள். மெள்ளப் போங்கள், உங்கள் காதலி எங்கும் ஓடிவிடமாட்டாள்” என்றாள்.

வெளியே செல்ல முயன்ற மஞ்சளழகி சரேலென்று திரும்பினாள். அறையின் உட்பக்கம் நோக்கி, “என்ன சொன்னாய்?” என்று பெரிதும் கோபத்துடன் வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டே காஞ்சனாதேவியை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தாள்.

அதைக் கண்டு லவலேசமும் அஞ்சாத காஞ்சனாதேவி, “உன்னுடன் நான் பேசவில்லை” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“பின் யாருடன் பேசினாய்? உன் காதலருடன் பேசினாயா?” என்று சீறினாள் மஞ்சளழகி.

காஞ்சனாதேவியின் சினம் தலைக்கேறியது. “ஆம் இவர் என் காதலர்தான். அதைப்பற்றி வெட்கப்படவில்லை நான்” என்று இரைந்தாள் காஞ்சனாதேவி.

“பின் எதைப்பற்றி வெட்கப்படுவாயோ?” என்று வினவினாள் மஞ்சளழகி, மேலும் அவளை நெருங்கி.

“இதற்கு வெட்கப்படுகிறேன்” என்று கூறிய காஞ்சனா தேவி, கலைந்து கிடந்த பஞ்சணையைக் காட்டினாள். அவள் பார்வையிலும் குரலிலும் இகழ்ச்சி பெரிதும் பிரதி பலித்தது.

அந்த இகழ்ச்சிப் பார்வையையோ பேச்சையோ சிறிதும் லட்சியம் செய்யாத மஞ்சளழகி, “இந்தப் பஞ்சணை இந்த ஒருநாள்தான் கலைந்து இருக்கிறது… ” என்றாள். மஞ்சளழகி யின் குரலில் இகழ்ச்சி எல்லை கடந்து தொனித்தது.

“என்ன சொன்னாய்?” காஞ்சனாதேவியின் குரலில் சீற்றம் மிதமிஞ்சித் தொனித்தது.

“இந்த ஓர் இரவில்தான் இந்தப் பஞ்சணை கலைந்தது ஆனால் இங்கு மட்டுமா பஞ்சணையிருக்கிறது… ” என்று விஷமத்துடன் இழுத்தாள் மஞ்சளழகி.

“வேறு எங்கு இருக்கிறது?” காஞ்சனாதேவியின் குரலில் சங்கடம் இருந்தது.

“கடல் புறாவிலுந்தான் பஞ்சணை இருக்கும். அங்கும்… ”

“அங்கும் என்ன?”

“தலைவரும் இருந்திருக்கிறார். தலைவியும் இருந்திருக் கிறாள். ஒரு நாளல்ல. பல நாட்கள்….”

காஞ்சனாதேவி திக்பிரமை பிடித்து நின்றாள். மஞ்சளழகி எந்தக் கருத்தை உட்புகுத்திப் பேசுகிறாளென்பது நன்றாக விளங்கியது கடாரத்துக் கட்டழகிக்கு. அவள் கோபத்தால் ஒரு விநாடி நடுங்கினாள். அடுத்தபடி நன்றாக நிமிர்ந்து கொண்டு, “மஞ்சளழகி! ஆம். அதுதானே உன் காதலர் உனக்கு இட்ட செல்லப் பெயர்! நன்றாக யோசித்துப் பேசு. யாருடன் பேசுகிறாய் என்பதைப் புரிந்து கொண்டு பேசு,” என்று அதிகாரத் தோரணையில் கூறினாள்.

“யாருடன் பேசுகிறேன்?” இகழ்ச்சி அப்பொழுதும் தொனித்தது மஞ்சளழகியின் குரலில்.

“கடாரத்து இளவரசியிடம்!” பெரும் கௌரவத்துடனும் அதிகாரத்துடனும் கூறினாள் காஞ்சனாதேவி.

“நீ யாருடன் பேசுகிறாய் தெரியுமா?” என்று பதிலுக்குக் கேட்டாள் மஞ்சளழகி.

“யாருடன்?”

“அதையும் நீ புரிந்துகொண்டு பேசுவது நல்ல தல்லவா?”

மஞ்சளழகியின் குரல் புதுவிதமாக ஒலித்ததைக் கவனித்த காஞ்சனாதேவிக்கு அதற்குக் காரணம் புரியாததால் சற்றுக் ‘குழப்பத்துடன் கேட்டாள், “நல்லது, சொல்” என்று.

மஞ்சளழகி மிகக் கம்பீரமாக நிமிர்ந்து நின்றாள். “எந்த சாம்ராஜ்யத்துக்குக் கடாரத்தின் சிற்றரசு உட்பட்டதோ, எந்த சாம்ராஜ்யத்தின் அதிபதிக்கு முன்னால் கடாரத்தின் மன்னர் தலைவணங்கி நிற்க வேண்டுமோ, அந்த ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தின் இளவரசியுடன் பேசுகிறாய் காஞ்சனா! உண்மையில் நீ பேச வேண்டியது இந்த நிலையிலல்ல. என் முன் தலைவணங்கி என் பாதம் பணிந்து நீ பேச வேண்டும்! இவரை உத்தேசித்து உன் சொற்களையும் உன் பதற்றத்தையும் பொறுத்தேன்” என்று பெரும் சக்கரவர்த்தினி பேசுவது போல் பேசிய மஞ்சளழகியின் சொற்களைக் கேட்டதும் விவரிக்க இயலாத பிரமிப்பை அடைந்தாள் காஞ்சனாதேவி. “என்ன நீயா? ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தின் இளவரசியா!” என்று வினவினாள் கடாரத்தின் இளவரசி தடுமாற்றமடைந்த குரலில்.

“சந்தேகமிருந்தால் இவரைக் கேட்கலாம்” என்றாள் மஞ்சளழகி.

காஞ்சனாதேவி இளையபல்லவனை நோக்கினாள். மஞ்சளழகி சொல்வது முற்றிலும் உண்மையென்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தான் இளையபல்லவன். அந்தத் தலையசைப்பு அவள் கோபத்தைக் கிளறவே செய்தது. “இவளை நீங்களும் சக்கரவர்த்தியின் மகளென ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று வினவினாள்.

அந்த இரு அழகிகளுக்குமிடையில் பழைய சம்பாஷணை மறைந்து புதுவித சம்பாஷணை உதயமானதும் சிறிது சுயநிலையை அடைந்த இளையபல்லவன், “நான் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் உண்மை அதுதான்” என்றான்.

“உண்மை அதுதானா?” வியப்பால் காஞ்சனாதேவியின் வாய் திறந்தது.

“ஆம்” என்றான் இளையபல்லவன்.

“இளவரசியாக ஒப்புக்கொண்டது யார்?”

“இவள் தந்தை. “

“யார்? எனது சிறிய தந்தையா?”

“ஆம். “

“இருக்க முடியாது, இருக்க முடியாது. ” இதைச் சொன்ன காஞ்சனாதேவியின் இதயத்தில் பொறாமைக் கனல் பலமாக வீசியது. மஞ்சளழகி சாம்ராஜ்யத்தின் இளவரசியாகி விட்டாளே என்பதனாலேற்பட்ட பொறாமையல்ல அது. இளையபல்லவன் மன சாம்ராஜ்யத்தைப் பிடித்துவிட்டாளே என்ற பொறாமையால் நிதானம் இழந்து முறை தவறியும் பேச ஆரம்பித்தாள். “இருக்க முடியாது” என்று மீண்டும் வலியுறுத்தினாள்.

“ஏனிருக்க முடியாது?” என்று குறுக்கே புகுந்தது மஞ்சளழகியின் கேள்வி.

“உன் தந்தை சாம்ராஜ்யாதிபதிதான். ஆனால் அவர் மணமாகாதவர்,” என்ற காஞ்சனாதேவியின் சொற்களில் பொறாமை மின்னல் பயங்கரமாகப் பளிச்சிட்டது.

“சொல், சொற்களை முடி. ” மஞ்சளழகியின் குரல் பயங்கரமாக ஒலித்தது.

“உன் தாய்” சொற்களை விழுங்க முயன்றாள் காஞ்சனா தேவி, ஆனால் பொறாமையை விழுங்க முடியவில்லை அவளால். பொறாமை மின்னல் அவள் முகத்திலும் குரலிலும் கூடப் பளிச்சிட்டது.

மின்னலைத் தொடர்ந்து வரும் இடி அடுத்த விநாடி எழுந்தது. அதன் பயங்கரம் அந்த அறையையே நடுங்க வைத்தது. சற்றும் எதிர்பாராத விளைவு கண் மூடிக் கண் திறப்பதற்குள் நிகழ்ந்துவிட்டது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch62 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch64 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here