Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch65 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch65 | Sandilyan | TamilNovel.in

90
0
Read Kadal Pura Part 3 Ch65 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch65 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch65 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 65 : மூன்றே சொற்கள்.

Read Kadal Pura Part 3 Ch65 | Sandilyan | TamilNovel.in

மலையூர்க் கோட்டை பிடிபட்ட நாளிலிருந்தே மஞ்சளழகியை நினைந்து நினைந்து மனமுருகித் தவித்த இளையபல்லவனின் இதய நிலை, அன்றிலிருந்து மூன்றாவது நாளன்று அவ்வூரை விட்டு அகன்று கொண்டிருந்த சமயத்தில் கூடப் பெரும் சஞ்சலத்திலேயே இருந்ததென்றால் அதற்குப் பலமான காரணங்கள் பல இருக்கவே செய்தன. கடல் புறா கிழக்கு நோக்கி ஹரி நதியில் நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் மலையூரின் நதிக்கரையில் கூடி நின்ற ஏராளமான ஜனக்கூட்டம் தன்னை வழியனுப்பிக் கிளப்பிய பெரும் வாழ்த்துக் கூச்சலுக்கும், ராணுவத்தினர் வாள் தாழ்த்திச் செய்த பெரும் மரியாதைகளுக்கும் மூல காரணம் மஞ்சளழகியே என்பதைச் சந்தேகமற அவன் அறிந்திருந்தான்.

மலையூர்க் கோட்டை மீது அப்பொழுது பறந்து கொண்டிருந்த புலிக்கொடியின் கம்பீரக் காட்சியை மஞ்சளழகியின் உதவியில்லையேல் யாரும் கண்டிருக்க முடியாதென்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது. மஞ்சளழகியின் மகத்தான தியாகத்தின் பரிமாணத்தை அளவிடக்கூட முடியாதிருந்த தால் அவன் இதயம் உணர்ச்சி அலைகளில் தூக்கித் தூக்கி அப்படியும் இப்படியும் எறியப்பட்டுக் கொண்டிருந்தது. மலையூர், ஸ்ரி விஜயத்தின் முன்வாசல் என்பதையும் மலையூர் பிடிபட்டால் ஸ்ரி விஜயம் பிடிபட்டது போலத்தான் என்பதையும் உணர்ந்திருந்த இளையபல்லவன், ‘எத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை மஞ்சளழகி என் கையிலெடுத்து ஏதோ பெரும் கனியைக் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டாள்’ என்று நினைத்துப் பார்த்து அந்த நினைப்பால் அதிர்ச்சியும் அடைந்தான்.

ஸ்ரி விஜயத்தின் தலைநகரைத் தாக்கிப் பிடிக்கத் தான் நீண்ட நாளாகவே ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் ஸ்ரி விஜயத்துக்கு உதவக்கூடிய சக்திகளை மெள்ள மெள்ளத் துண்டித்து விட்டாலும், யாரும் அணுகுவதற்குரிய ஸ்ரி விஜயத் தின் மணிக்கதவையும் வித்தியாதரத் தோரணத்தையும் உடைத்து அந்த நகரத்தைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்லவென்பதையும், ஆனால் இப்பொழுது மலையூர் கைவசப்பட்டுவிட்டபடியால் ஸ்ரி விஜயத்தின் பாதுகாப்புக்கள் பெரும் பலவீனமடைந்து விட்டதையும், அப்படி எதிரியைப் பலவீனமடையச் செய்தது மஞ்சளழகியின் மகத்தான தியாகமே என்பதையும் அவன் எண்ணி எண்ணிக் கலங்கினான்.

‘அவள் ஏன் சாம்ராஜ்யத்தை உதறி விட்டாள்? தந்தை முதலில் அவளை உதறியது உண்மைதான். இருப்பினும், பின்னால் அவளை மகளாக உலகுக்கு அறிவித்து, இளவரசி யாகவும் ஏற்றுக்கொண்ட பிறகு ஏன் அவரை உதறி விட்டாள்? அத்தனை தியாகத்துக்கு நான் தகுதியா?’ என்று தன்னைத்தானே இரண்டு மூன்று முறை கேட்டுக் கொண்டான். அதை மட்டும் அவன் கேட்டுக்கொள்ள வில்லை. ‘காஞ்சனாவுடன் மஞ்சளழகியையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டோமே, இது சரியா?” என்ற கேள்வியும் அவன் மனத்துள் எழுந்தது. இதுபற்றி மலையூர்க் கோட்டை யில் அமீர் சுட்டிக் காட்டிய ஆபத்தையும் நினைத்துப் பார்த்தான் அவன்.

கோட்டையிலிருந்தபோது கேட்டான் அமீர், “இருவரைப் பற்றி உத்தரவு வேண்டியிருக்கிறது” என்று.

“இந்தக் கோட்டையின் உபதலைவனை விடுதலை செய்து ஸ்ரி விஜயத்துக்கு அனுப்பிவிடு” என்றான் இளைய பல்லவன்.
“அவன் போய் ஜெயவர்மனிடம் இங்கு நடந்ததை யெல்லாம் சொல்வானே?” என்று வினவினான் அமீர்.

“சொல்லட்டும் என்பதற்காகத்தான் அவனை அனுப்பு கிறேன்” என்று கூறினான் இளையபல்லவன்.

“அதனால் மஞ்சளழகிக்குக் கஷ்டம் ஏற்படுமே? கோட்டையை எதிரி கையில் கொடுத்த மகளை ஜெயவர்மன் தண்டிக்காமலிருப்பானா?”

“மாட்டான். “

“ஆகையால்:”

“மஞ்சளழகியைக் கடல் புறாவுக்கு அனுப்பிவிடு. “

இதைக்கேட்ட அமீர், திகைத்துச் சில விநாடிகள் வாயடைத்து நின்றான். பிறகு கேட்டான் மீண்டும், “மஞ்சளழகியை- கடல் புறாவுக்கா!” என்று சிறிது தடுமாற்றத் துடன்.
“ஆம். ” திட்டமாக வந்தது இளையபல்லவன் பதில்.

“இதில் சங்கடங்களிருக்கின்றன” என்று சுட்டிக் காட்டினான் அமீர்.

என்ன சங்கடங்களை அமீர் குறிப்பிடுகிறானென்பதை இளையபல்லவன் உணர்ந்தேயிருந்தான். இருப்பினும் அவற்றை உணராதவன்போல், “என்ன சங்கடங்கள்?” என்று வினவினான்.

“ஏற்கெனவே ஒரு பெண்… ” என்று இழுத்தான் அமீர்.

“ஆம். காஞ்சனாதேவி இருக்கிறாள் கடல்புறாவில்” என்று

வாசகத்தைப் பூர்த்தி செய்தான் இளையபல்லவன். “இப்பொழுது மஞ்சளழகியையும் சேர்த்துவிட்டால். “

“பெண்கள் இருவர். “

“ஒரு பெண் இருந்தாலே போர்க்கப்பலில் கஷ்டங்கள் உண்டு. “

“இருவர் இருந்தால் பெரும் தொல்லை என்கிறாய்?” “தொல்லை எங்களுக்கல்ல” என்று உறுமினான் அமீர், எரிச்சலின் காரணமாக.

“எனக்குத்தான் தொல்லை அமீர். இருப்பினும் அத் தொல்லையால் அனுகூலங்கள் இருக்கின்றன. காஞ்சனா தேவியின் மீது கங்கதேவன் இச்சை கொண்டதால் நாம் மாநக்காவரத்தைப் பிடித்தோம். இப்பொழுது மஞ்சளழக இங்கிருந்ததால் மலையூரைப் பிடித்தோம். கோட்டைகளையும் துறைமுகங்களையும் பிடிக்கப் பெண்கள் உதவுகிறார்கள் அமீர். ஆகவே ஒருத்திக்கு இருவர் இருப்பது நமக்கு அனுகூலம் தான்” என்றான் இளையபல்லவன்.

கோட்டையிலிருந்து கிளம்பும் நாள் அன்று தனக்கும் அமீருக்கும் நிகழ்ந்த இந்தச் சம்பாஷணையைக் கடல்புறாவின் தளத்தில் நின்றிருந்த அந்த நேரத்தில் நினைத்த இளைய பல்லவன் இதழ்களில் புன்னகைகூட லேசாக அரும்பியது. ‘அன்று பதில் சாமர்த்தியமாகத்தான் சொல்லிவிட்டேன். ஆனால் அதனால் விளையும் தொல்லைகள் அனந்தம். இருப்பினும் அவற்றை நான் சமாளித்துத்தானே ஆ க வேண்டும்?’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் இளையபல்லவன்.

ஆனால் கடல் புறாவின் தளத்தில் நின்று அவன் நினைத்த தொல்லை அமீர் எண்ணிய தொல்லையல்ல. வேறு தொல்லையை, மாசற்ற வீரன் சமாளிக்க வேண்டிய தொல்லையை எண்ணி எண்ணிக் குழம்பினான் சோழர் படைத்தலைவன். அந்தத் தொல்லை காதலைப் பற்றியதல்ல, ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தைப் பற்றியது, அதன் உரிமையைப் பற்றியது, சோழப் பேரரசைப் பற்றியது. ஸ்ரி விஜய சாம்ராஜ்ய அரியணையில் உன்னை அடுத்த சித்ரா பௌணர்மியன்று சக்கரவர்த்தினியாக அமர்த்துகிறேன்’ என்று காஞ்சனாதேவியிடம் ஆணையிட்ட சமயத்தில் மஞ்சளழகியின் நிலைமை அவனுக்குப் புரியாதிருந்தது.

அவள் ஸ்ரி விஜய சாம்ராஜ்யாதிபதியால் மகளாக ஒப்புக்கொள்ளப் பட்டிருப்பாளென்றோ, அந்த அரியணைக்கு முறையுள்ள இளவரசியாகி விடுவாளென்றோ அவன் எதிர்பார்க்கவில்லை. மஞ்சளழகி அக்ஷயமுனையில் இருப்பாள்; தான் அமைத்துக் கொடுத்த பாதுகாப்பு அவளுக்குப் பெரும் அரணாயிருக்கும் என்று மட்டுமே நினைத்த அவனுக்கு, அவளுடைய புது நிலை பெரும் புதிரை விளைவித்தது.

காஞ்சனாதேவியும், மஞ்சளழகியும் இருவரும் ஸ்ரி விஜய அரியணைக்கு உரிமை கொண்டாடினால் யாருக்கு அதை அளிப்பது என்று எண்ணி ஏதும் புரியாமல் கலங்கினான் படைத்தலைவன். இருவர்பாலும் காதல் கொண்டிருந்த அவன் இதயம் இருபக்கங்களிலும் இழுபட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தது. காஞ்சனாதேவியை அவன் முதலில் கண்டான், தொலைதூரத்திலிருந்த பாலூர்ப் பெருந்துறையில். பிறகு ஓராண்டு கழித்து மஞ்சளழகியைக் கண்டான், அக்ஷய முனையில். முதலாண்டின் உணர்ச்சிகள் இரண்டாம் ஆண்டு கிளம்பிய உணர்ச்சிகளுடன் போட்டி போட்டன. கடைசியாகப் புகுந்த மூன்றாம் ஆண்டின் முடிவில் இருவரைப் பற்றிய காதலும் மோதி விட்டதால் எழுந்த உணர்ச்சிகளால் ஏற்பட்ட கலக்கமான நிலையில்தான் அன்று நின்றிருந்தான் இளையபல்லவன்.

ஸ்ரி விஜயத்தை வெற்றி கொள்ள முடியும் என்ற உறுதி அவன் உள்ளத்தே திடமாக இருந்தது. அதற்குச் சகல ஏற்பாடு களையும் சிறுகச் சிறுகச் செய்து முடித்திருந்தான் இளைய பல்லவன். ‘இன்னும் இரண்டே மாதங்கள், ஸ்ரி விஜயம் என் கைவசமாகிவிடும்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட இளையபல்லவன், ‘அதை யாருக்களிப்பது? காஞ்சனா தேவிக்கா, மஞ்சளழகிக்கா?’ என்ற ஒரு கேள்வியையும் கேட்டுக் கொண்டதால் பைத்தியம் பிடிக்கும் நிலையை அடைந்து கடல்புறாவின் தளத்தின் குறுக்கே வேகமாக நடந்து தனது அறைக்குச் சென்றான்.

சென்றதும் அமீரை அவசரமாக வரும்படி சொல்லியனுப்பினான். சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளே நுழைந்த அமீர் இளையபல்லவன் முகத்தைக் கண்டதும் பெரும் பிரமிப்புக்குள்ளானான். எதற்கும் கலங்காத படைத்தலைவன் உள்ளம் பெரிதும் கலங்கியிருப்பதை அவன் முகம் தெள்ளென எடுத்துக் காட்டியது. அவன் சஞ்சலத்தின் காரணத்தை ஓரளவு ஊகித்துக் கொண்டாலும் பூரணமாக அதன் அடிப்படையை உணராத அமீர் சொன்னான், “அவசரமாகக் கூப்பிட்டு அனுப்பியதாகக் கூறினான் மாலுமி” என்று.

“ஆம் அமீர்” என்றான் இளையபல்லவன்.

இதைச் சொன்ன இளையபல்லவன் குரல் பெரிதும் வறண்டு கிடப்பதைக் கண்ட அமீர் தன் உணர்ச்சிகளை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், “என்ன செய்யவேண்டும் படைத்தலைவரே?” என்று சாதாரணமாகவே கேட்டான்.

“காஞ்சனாதேவியும் மஞ்சளழகியும் எங்கிருக்கிறார்கள்?” என்று வினவினான் இளையபல்லவன் அதே வறண்ட குரலில்.

“தளத்திலிருக்கிறார்கள்” என்றான் அமீர்.

“இருவரும் ஒரே இடத்திலா?” என்ற இளையபல்லவன் குரலில் வியப்பு லேசாக ஒலித்தது.

“அதெப்படி ஒரே இடத்திலிருப்பார்கள்?” என்ற அமீரின் குரலில் லேசாக விஷமம் இருந்தது.

“வேறு எப்படியிருக்கிறார்கள்?”

“காஞ்சனாதேவி கண்டியத்தேவருடன் கடல்புறாவின் முனைப்பகுதியில் நிற்கிறார்கள். மஞ்சளழகி சுக்கானைப் பிடித்துள்ள சேந்தனுக்கருகில் உட்கார்ந்திருக்கிறார்கள். இருவரும் இரு துருவங்கள் மாதிரி ஆளுக்கொரு கோடியிலிருக் கிறார்கள். “

“அப்படியா!” என்று ஏதோ கேட்பதற்காகக் கேட்ட இளையபல்லவன் ஒரு விநாடி ஏதோ யோசித்தான். பிறகு துவங்கினான், “அமீர்!” என்று.

“ஏன்?” என்று வினவினான் அமீர்.

“நீதான் காரியங்களைச் சாமர்த்தியமாகச் செய்ய முடியும்… ” என்று மீண்டும் துவக்க உரையிலேயே நின்றான் இளையபல்லவன்.

ஏதோ கஷ்டமான பணிக்கு இளையபல்லவன் அஸ்திவாரம் போடுகிறானென்பதை உணர்ந்துகொண்ட அமீர், “எனக்குப் பாராட்டுதல் எதற்கு? உத்தரவிடுங்கள் படைத்தலைவரே!” என்றான்.

“காஞ்சனாதேவியும் மஞ்சளழகியும்… ” என்று மென்று விழுங்கினான் படைத்தலைவன்.

ஆம், இருக்கிறார்கள். “

“எங்கு இருக்கிறார்கள்?”

“இங்குதான் கடல் புறாவில். இருக்குமிடங்களை இப்பொழுதுதானே சொன்னேன்!”

“அவர்கள் அங்கு இருக்கக்கூடாது. “

“சரி, இங்கு அனுப்பி விடட்டுமா?”
இளையபல்லவன் தன் விழிகளை உயர்த்தி அமீரை நன்றாகப் பார்த்தான். “ஏன்? நான் நிம்மதியாயிருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா?” என்றும் வினவினான்.

அமீர் உள்ளுக்குள் நகைத்துக் கொண்டாலும் அதை வெளிக்குக் காட்டவில்லை. “என்னை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்?” என்று அலுத்துக் கொள்வது போல் பாசாங்கு செய்தான் அமீர்.

“கடல் புறாவைவிட்டு அவர்களிருவரையும் அனுப்பிவிட வேண்டும்” என்று கூறிய இளையபல்லவன் குரலில் உறுதி பூரணமாகத் தொனித்தது.

இந்த உத்தரவைக் கேட்ட அமீருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “அவர்களை எங்கு அனுப்புவது?” என்று வினவினான்.

“அவர்களுக்குத்தான் தனி மரக்கலங்கள் இருக்கின்றனவே அமீர்! காஞ்சனாதேவியை ‘காஞ்சனாவுக்கும்’ மஞ்சளழகியை ‘மஞ்சளழகிக்கும்’ அனுப்பிவிடு. இது என் உத்தரவு” என்று திட்டமாகக்கூறிய இளையபல்லவன் தலையை மார்புக்காகத் தொங்கப்போட்டுக்கொண்டான். மேற்கொண்டு இளைய பல்லவன் பேச விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்ட அமீர் அக்ரமந்திரத்தை விட்டு வெளியேறினான். அவன் சென்றதும் ஓரளவு நிம்மதியுடன் மஞ்சத்தை விட்டு எழுந்தான் இளையபல்லவன்.

நிம்மதியுடன் பெருமூச்சு விட்டான். தலையிலிருந்து பெரும் சுமையொன்று இறங்கியது போலிருந்தது அவனுக்கு. இரண்டு பெண்களையும் தனித்தனி யாக அவர்கள் பெயரிடப்பட்ட மரக்கலங்களில் இருத்தி விட்டால் இருவரும் சந்திக்க வாய்ப்பிருக்காதென்றும், ஆகையால் என்ன செய்யவேண்டுமென்பதைத் தான் நிதானமாகத் தீர்மானிக்கலாமென்றும் முடிவு செய்து கொண்டான் இளையபல்லவன். அந்த முடிவின் காரணமாக அறைமூலைக்குச் சென்று அங்கிருந்த மரக்குவளையிலிருந்து சிறிது நீரெடுத்துக் குடிக்கவும் செய்தான். மறுபடியும் மஞ்சத்துக்கு வந்து பஞ்சணையில் மல்லாந்து படுத்தான். சிறிது கண்களை மூடலாமென்று நினைத்த சமயத்தில் மீண்டும் அமீர் உள்ளே நுழைந்தான்.

அமீரின் வருகைக்குக் காரணமறியாத இளையபல்லவன் பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்து, “என்ன அமீர்? ஏன் வந்துவிட்டாய்? நான் சொன்னபடி..” என்றவனை இடை மறித்த அமீர், “செய்ய முடியவில்லை ” என்றான்.

“ஏன் உத்தரவை நிறைவேற்றவில்லை நீ?” என்று சீறினான் இளையபல்லவன் வெளியே கோபத்துடனும் உள்ளே பயத்துடனும்.

“இல்லை. “

“ஏன்?”

“முடியவில்லை இருவரும் கடல்புறாவிலிருந்து நகர மறுக்கிறார்கள். “

“என் உத்தரவு என்று கூறினாயா?”

“கூறினேன். “

“என்ன சொன்னார்கள்?”

“வித்தியாசமாகச் சொன்னார்கள். “

“என்ன வித்தியாசம் அதில்?”

“காஞ்சனாதேவியிடம் விஷயத்தைக் கூறித் தங்கள் உத்தரவு அது என்றேன்” என்ற அமீரின் முகத்தில் விஷமக் குறி தோன்றியது.

“என்ன சொன்னாள் அவள்?” என்றான் இளையபல்லவன் குரலில் கோபத்தைக் காட்டி.

“உத்தரவை உடைப்பில் போடு என்றார்கள். “

“மஞ்சளழகி?”

“இந்தக் கடலில் போடு என்று பக்கத்திலிருந்த கடலைக் கையால் காட்டினார்கள். “

இளையபல்லவன் பஞ்சணையிலிருந்து எழுந்து, “அமீர்?” என்று உக்கிரமாகக் கூவினான். “படைத் தலைவரே!” அமீரின் பதிலில் பணிவிருந்தது.

“கேவலம் இரண்டு பெண்களிடம் உன் ஜம்பம் பலிக்க வில்லை, உம்… ” என்று கூவினான்.

“அதில் என் ஜம்பம் மட்டுமில்லை, தங்கள் உத்தரவும் கலந்திருக்கிறது” என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொண்டதன்றி, “இப்பொழுது… ” என்று ஏதோ துவங்கி வார்த்தைகளை விழுங்கினான்.

“என்ன செய்ய வேண்டுமென்கிறாய் என்னை?” என்று கேட்டான் இளையபல்லவன்.

“என்னால் முடியாத பணியைத் தலைவர்தான் செய்து முடிக்கவேண்டும்” என்றான் அமீர்.

அமீர் தன்னை நோக்கி நகைக்கிறானென்பதைப் புரிந்து கொண்ட இளையபல்லவன் அவனை ஒருமுறை முறைத்து நோக்கிவிட்டு அறைக்கதவைத் திறந்துகொண்டு வெகு வேகமாகத் தளத்துக்குச் சென்றான். அவனைத் தொடர்ந்து சென்ற அமீருக்கு மேலும் வியப்பு காத்திருந்தது தளத்தில். அமீர் எதிர்பார்த்தபடி இளையபல்லவன் காஞ்சனாதேவியையோ, மஞ்சளழகியையோ நோக்கிச் செல்லவில்லை. இருவரும் இல்லாத தனி இடமாகப் பார்த்துச் சென்று கடல் புறாவின் பக்கப் பலகையில் சாய்ந்துகொண்டு கண் முன்னால் ஓடிக்கொண்டிருந்த நதியையும், மேலே விரிந்து கிடந்த ஆகாயத்தையும் மாறிமாறிப் பார்த்தான். கடல் புறாவின் வேகத்தால் பக்கப் பலகையின் அடியைத் தடவிய நதி நீரின் சர்ரென்ற ஓசை அவன் காதுகளில் விழுந்தது. ஆகாயத்தின்மீது ஓட்டிய கண்களைப் பார்த்து விண்மீன்களும் பதிலுக்குக் கண்களைச் சிமிட்டின.

நேரம் போவது தெரியாமல் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான் இளையபல்லவன். இராப்போஜனம்கூட வேண்டியதில்லையென்று தன்னைத் தேடிவந்த மாலுமியிடம் அறிவித்து விட்டான். இரவு நன்றாக முற்றிய பின்பும் கடல் புறாவின் தளத்தில் பக்கப் பலகையைப் பிடித்துக்கொண்டு தளத்துக்கு முதுகைக் காட்டிய வண்ணம் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான் இளையபல்லவன். இடையிடையே எதிரேயிருந்த காரிருளையும் கவனித்தான். படுக்கும் நேரம் தாண்டியும் அறையை நாடாதிருந்த அவனைப் பின்புறம் ஒரு மலர்க்கை தொட்டது. தேள் கொட்டிவிட்டதுபோல் திரும்பிப் பார்த்தான் இளைய பல்லவன்.

அவன் எதிரே காஞ்சனாதேவி நின்று கொண்டிருந்தாள். சற்று தூரத்திலிருந்த பந்தத்தின் வெளிச்சத்தில் அவள் முகம் பிரமிக்கும்படியான அழகை அள்ளித் தெளித்ததன்றி அந்த வெளிச்சத்தில் பிரதிபலித்த அவள் காதணிக் கற்கள் வீசிய பலவித வண்ண ஒளிகள் அவள் கன்னங்களில் அற்புதமான சித்திரங்களையும் தீட்டியிருந்தன.. ஆனால் அந்த அழகில் எள்ளத்தனையும் ரசிக்கும் ஆற்றலை இழந்திருந்தான் இளைய பல்லவன் அந்த நேரத்தில். ஆகவே சற்று முரட்டுத்தனமாகவே கேட்டான், “ஏனிங்கு வந்தாய்?” என்று.

“ஒரு விஷயம் சொல்ல வந்தேன்” என்றாள் அவள் அவன் மூர்க்கத்தனத்தை லட்சியம் செய்யாமலே.

“சரி, சொல். ” இந்தச் சொற்களும் முரட்டுத்தனமாகவே உதிர்ந்தன.

அவள் மூன்று சொற்களைத்தான் சொன்னாள். ஆனால் அந்த மூன்றே சொற்கள் அவன் மூர்க்கத்தனத்தைப் பறக்கடித்து விட்டன. அவனுக்கு அதுவரையிலிருந்த சங்கடம் பன்மடங்கு அதிகமாக விரிந்தது. அந்த மூன்று சொற்கள் அவன் லட்சியம், பிரதிக்கினை, ஏற்பாடுகள் அனைத்திலுமே மண்ணைப் போட்டுவிடும் நிலையில் அமைந்திருந்தன. அவற்றால் ஏற்பட்ட திகைப்பால் அவன் பிரமை பிடித்து அவளை நோக்கியது நோக்கியபடியே நின்று விட்டான் பல விநாடிகள்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch64 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch66 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here