Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch68 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch68 | Sandilyan | TamilNovel.in

102
0
Read Kadal Pura Part 3 Ch68 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch68 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch68 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 68 : தீக்கப்பல்கள்.

Read Kadal Pura Part 3 Ch68 | Sandilyan | TamilNovel.in

சித்திரைத் திங்களில் வளர்பிறையின் ஏழாம் இரவில் ஸ்ரி விஜய மாநகரத்துக்கு அத்தனை பெரிய, அத்தனை விசித்திர, அத்தனை முறைகேடான ஆபத்து திடீரென எழுந்துடுமென்று ஜெயவர்மனோ, அவனது படைத்தலைவர்களோ சிறிதும் எதிர்பார்க்கவில்லையாகையால், எழுந்த ஆபத்தை அவர்கள் சமாளிப்பது பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது.

விஜயசந்திரன் யோசனையையும் மீறி, சாம்ராஜ்யாதிபதியான ஜெயவர்மன் எந்த ஒரு மரக்கல அரணை மூசி நதியில் அமைத்தானோ அந்த அரணே ஸ்ரி விஜயத்தை நாசமாக்கும் கருவிகளில் ஒன்றாகுமென்றோ , அங்கு ஏற்பட்ட விசித்திரத் தாக்குதல் பாதி கடற்கொள்ளைக்காரர்கள் முறையிலும் பாதி அறப்போர் முறையிலும் நடக்குமென்றோ எதிர்பார்க்காததால், அந்தத் தாக்குதலின்போது தான் இட்ட திட்டம் தவிடுபொடியாவதைத் தன் கண்களாலேயே ஜெயவர்மன் கண்டான்.

அதுமட்டுமல்ல அவன் கண்டது, மக்கள் பிரியப்படி அரசாளாமல் கொடுங்கோல் செலுத்தும் மன்னர்கள் வீழ்ச்சியுறும்போது எத்தனை துரிதமாக வீழ்ச்சி அடைகிறார்கள் என்பதையும் கண்டான். ஆகவே சற்றும் எதிர் பாராத விதமாக மூசி நதியிலுள்ள தனது மரக்கலங்கள் தீப்பிடித்து எரிந்து வெடிக்கத் தொடங்கியபோது அது தனது மரக்கலங்களைப் பிடித்த சாதாரணத் தீயல்லவென்பதையும் தனது மக்கள் மனத்தில் நீண்ட காலமாகப் பிடித்துச் சுடர் விட்டுக் கொண்டிருந்த துன்பத் தீ என்பதையும் ஜெயவர்மன் சந்தேகமற உணர்ந்து கொண்டான். நதியிலிருந்த மரக்கலங்கள் தீப்பிடித்ததைத் தொடர்ந்து நகரத்துக்குள்ளே ஏற்பட்ட குழப்பமும் கூச்சலும் ஜெயவர்மன் உணர்ந்து கொண்டது உண்மையே என்பதற்கு அத்தாட்சிகளாயிருந்தன.

அந்த ஏழாம் பிறையைக் குறித்து ஜெயவர்மன் பிற்காலத்தில் பெரிதும் கலங்கியிருக்கிறான். அன்று அவன் தனது அரண்மனை உப்பரிகையிலிருந்து கண்ட காட்சி ஆயுள் பூராவும் அவன் கண்ணெதிரே நின்றது. அன்றிரவில் அவன் இளையபல்லவனை ஏதேதோ சொல்லிச் சபித்தான். ஆனால் அதற்குப் பின் பல இரவுகளில் அந்த ஏழாம் பிறை இரவை நினைத்து நினைத்து வியப்பும் எய்தியிருக்கிறான். அத்தகைய ஒரு படைத்தலைவன் மட்டும் எனக்கிருந்திருந்தால் சீனத்தைக் கூட நான் வெற்றி கொண்டு இருப்பேனே?’ என்று அவன் தனக்குள் பிற்காலத்தில் பலமுறை சொல்லிக் கொண்டான். இளையபல்லவனின் விசித்திரத் தாக்குதல் அப்படி வந்தது. மெள்ளத்தான் வந்தது. ஆனால் திடமாக வந்தது, திடீரென வெடித்தது.

ஏழாம் பிறை உதயமான சமயத்தில் தனது உப்பரிகையில் நின்று மூசி நதியைக் கண்ட ஜெயவர்மன் மனத்தில் நிம்மதி பெரிதும் நிரம்பி நின்றது. நதியில் அவன் அமைத்த போர்க்கல அரண் மிகுந்த கம்பீரமாகக் காட்சியளித்தது. நதியின் இரு கரைகளிலும் சுமார் இருபது மரக்கலங்கள் போர்ச்சன்னத்துடன் நின்றன. அவை ஒவ்வொன்றிலும் சீனத்து வாண வெடி மருந்துகள் நிரம்பிக் கிடந்தன. வேல்களையும் அம்புகளையும் வீசக் கூடிய பெரும் பொறிகளும் அமைக்கப் பட்டிருந்தன.

பொறிகளை இயக்கவும், அவசியம் ஏற்பட்டால் நெருங்கிப் போராடவும் ஒவ்வொன்றிலும் ஐந்நூறு மாலுமிகள் சதா கண்ணுங் கருத்துமாகத் தயாராயிருந்தார்கள். இப்படி இரு கரைகளிலும் நின்ற போர்க்கப்பல் தொடரை நதிக்குக் குறுக்கே நின்று ஐந்து போர்க்கப்பல்கள் இணைத்து, நதிக்கு ஒரு குறுக்குப் பாலத்தையும் போட்டன. நதிக்குள் நுழையும் எந்த மரக்கலக் கூட்டமும் முதலில் குறுக்கே நின்ற ஐந்து போர்க்கலங்களை மோத வேண்டும், மோதி உள்ளே நுழைந்தாலும் இரு பக்கங்களிலுமுள்ள பத்துப் பத்துக் கப்பல்களின் தாக்குதலை ஒரே காலத்தில் சமாளிக்க வேண்டி யிருக்கும். ஒரே சமயத்தில் மூன்று போர்க்கலங்களுக்கு மேல் மூசி நதிக்குள் சேர்ந்து வரமுடியாது. அகலம் அத்தனைதான் அந்த நதிக்கு. இது மட்டுமல்ல, மூசிந்தி கடலில் கலக்க ஓடும் வேகமும் அதிகம்.

ஆகவே உட்புகும் மரக்கலங்கள் மெல்லவே வரமுடியும். அப்படி மெல்ல வரும் மரக்கலங்களை நதியை அடைத்துக் குறுக்கே நிற்கும் மரக்கலங்கள் மட்டும் நங்கூரமெடுத்துத் தாக்குவதானால் நதிவேகத்தில் வெகு துரிதமாக ஓடி, உள்புகும் மரக்கலங்களை மோதிவிட முடியும். எந்த வகையில் பார்த்தாலும் எதிரி யாரும் உட்புகமுடியாத பெரு அரண் அது. அதைப் பார்த்து ஜெயவர்மன் மகிழ்ச்சி அடைந்தான்.

அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் அந்த அரண் மட்டுமல்ல. அதை அடுத்து நகருக்குள்ளிருந்த இரண்டு வளைவுக் கோட்டை மதில்களும், அந்த மதில்களின் இரு வாயில்களுங் கூட அவன் உள்ள மகிழ்ச்சியை உச்சிக்குக் கொண்டுபோயின. முதல் அரணின் வாயிலாகக் ‘கனகமணிக்கதவு’கள் கோபுரம் போல் உயர்ந்து நின்றன. அழகிய மணிகள் பல அவற்றில் பொருத்தியிருந்ததன் காரணமாக அந்தக் கதவுகள் திறக்கப் படும்போது அந்தப் பெரும் கதவுகள் கணகணவென்று பேரொலி கிளப்பும். கதவுகள் மிக அகலமாயிருந்ததால், அவற்றில் பல்வேறு திட்டிக் கதவுகளும், திட்டிக் கதவுகளுக்குப் பின்பு பெரும் மரத் தட்டுகளும் இருந்தபடியால் பெருங்கதவுகளைத் திறக்காமலே அந்தத் திட்டிக் கதவுகளை மட்டும் திறந்து மரத் தட்டுகளில் நின்று வீரர்கள் படையெடுப்பவர் மீது வேலெறிய வசதியிருந்தது. ஆதி சைலேந்திரர்களால் நிர்மாணிக்கப்பட்ட அந்தக் கனகமணிக் கதவுகள் இராஜேந்திர சோழனால் அழிக்கப்பட்ட பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பே ஜெயவர்மனால் மீண்டும் பழுது பார்க்கப்பட்டுத் திருத்தியமைக்கப்பட்டன.

அடுத்த அரணான வித்தியாதரத் தோரணம் கவர்ச்சி கரமான ஒரு பெரும் தடை. அரண் வாயிலுக்குக் குறுக்கே யிருந்த அந்தப் பெரும் தோரணத்தில் தொங்கிய வஜ்ரவைடூரிய கோமேதகக் கற்களிழைத்த பெரும் மாவிலைகள் சைலேந்திரர்கள் பெரும் செல்வத்துக்குச் சான்று கூறின. அந்தத் தோரணத்தைக் காக்க இருபுறத்திலும் இயங்கும்படி இரு தேர்களைப்போல் அமைக்கப்பட்டிருந்த இரு அம்புக் கூடங்கள் தோரணத்தினருகே வருபவர்களுக்கிருந்த ஆபத்தை நன்கு விளக்கின. தோரணத்தின் இரு முனைகளையும் அடுத்திருந்த பெரும் அரண் சுவரையொட்டி இயங்கிய இந்த இரு அம்பு ரதங்களும் எந்த விநாடியிலும் சுழன்று ஒன்று சேரக்கூடிய ஸ்திதியில் அமைந்திருந்தன.

இவையனைத்தையும் அந்த இரவில் வெண்மதி அளித்த நிலவில் கண்ட ஜெயவர்மன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அந்த இரவில் கடுமையான உத்தரவுகளின் காரணமாகச் சாதாரண மக்கள் வெளியில் அதிகமாக உலவாவிட்டாலும் வணிகர்கள் மட்டும் உலவிக்கொண்டிருந்ததையும், மூசி நதிக்கரையில் அப்பொழுதும் படகுகளிலிருந்து வணிகப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதையும் கண்ட ஜெயவர்மன் முகத்தில் சிறிது மகிழ்ச்சிச் சாயையும் தெரிந்தது.

அந்தச் சமயத்தில் நதியின் பிரவாகத்தை எதிர்த்துத் தனது போர்க்கல அரணை நோக்கி வந்து கொண்டிருந்த மூன்று பெரும் வணிகக் கப்பல்களில் ஸ்ரி விஜயத்தின் கொடிகள் பறப்பதைக் கண்டு மேலும் சந்துஷ்டியடைந்தான் ஜெயவர்மன்.. அந்த மூன்று மரக்கலங்களும் ஒன்றன்பின் ஒன்றாய் அரணுக்குள் நுழைய நதியின் குறுக்கே நின்ற போர்க்கலங்கள் வழிவிட்ட முறைகூட ஜெயவர்மனுக்குத் திருப்தியே அளித்தது.

அந்த மூன்று மரக்கலங்கள் நெருங்கியதும் குறுக்கே நின்ற ஸ்ரி விஜயத்தின் போர்க்கலங்களிலிருந்து சங்குகள் ஊதப் பட்டன. அந்தக் கட்டளையின் விளைவாக முன்னேறுவதை நிறுத்திக்கொண்ட அந்த மூன்று வணிகக் கப்பல்களில் முதலிலிருந்த கப்பலைத் தளத்திலிருந்தபடியே ஸ்ரி விஜயத்தின் உபதளபதி விசாரித்த பின்பே அந்த மூன்று மரக்கலங்களும் உள்ளே நுழைய அனுமதியளிக்கப்பட்டது. அப்படி நுழைந்த மூன்று வணிகக் கப்பல்களும் நதியின் வடகரைக்கு வந்து படகுகளில் வணிகப் பொருள்களை இறக்கத் தொடங்கின. அப்படி அவை இறக்கிக் கொண்டிருந்த சமயத்தில் வேறு மூன்று வணிகக் கப்பல்களும் நதியில் நுழைந்து வந்து கொண்டிருந்தன.

இப்படி நிம்மதியாக வாணிபம் நடப்பதி லிருந்தே எதிரி நடமாட்டம் எதுவும் மூசி நதி முகத்துவாரப் பிராந்தியத்தில் இல்லையென்பதைத் தீர்மானித்துக் கொண்ட ஜெயவர்மன் மகிழ்ச்சி திடீரென உடைக்கப்பட்டது. வணிகப் பொருள்களை இறக்கிக் கொண்டிருந்த மரக்கலங்கள் மூன்றும் திடீரெனச் சுழன்று நதி நடுவேயிருந்த போர் அரணை நோக்கி நதி வேகத்தில் வேகமாக ஓடின. ஒருவேளை அவற்றின் நங்கூரங்கள் சரியாகப் பாய்ச்சப்படவில்லையோ என்று நினைத்தான் ஜெயவர்மன். அடுத்த விநாடி அந்த மூன்று மரக்கலங்களும் தீப்பிடித்துக்கொண்டு எரிய ஆரம்பித்தன. அவற்றிலிருந்த மாலுமிகள் சரேல் சரேலென நதியில் குதித்தார்கள்.

கிழக்கேயிருந்து வந்துகொண்டிருந்த காற்று அந்த மரக் கலங்களில் தீயை விசிறிவிட்டதால் தீ நாக்குகள் பெரிது பெரிதாக எழுந்தன. அப்படி எழுந்த தீ நாக்குகளுடன் நதியில் பின்னோடிய மரக்கலங்கள் நதியை அடைத்து நின்ற போர்க் கப்பல்களுடன் மோதவே அவற்றிலும் இரண்டு தீப்பிடித்துக் கொண்டன. இதன் விளைவாகத் திடீரென நதிப் பிராந்தியத்தில் பேரிரைச்சல் ஏற்பட்டது. இரு கரையிலும் நங்கூரம் பாய்ச்சி நின்ற இரண்டிரண்டு மரக்கலங்கள், நங்கூரங்களை எடுத்து உதவிக்கு நகர்ந்தன. உதவிக்கு நகர்ந்த மரக்கலங்களின் நிலைமையும் ஆபத்தாகிவிட்டது. நதியை அடைத்து நின்ற ஸ்ரி விஜயப் போர்க்கப்பல்களைத் தீப் பிடித்த மூன்று வணிகக் கப்பல்களும் மோதிவிட்டதாலும், அந்த மோதலால் விளைந்த தீ ஜ்வாலைகள் ஸ்ரி விஜயப் போர்க் கப்பல்களை மட்டுமின்றி அவற்றிலிருந்த வாண, வெடிமருந்துகளையும் பற்ற வைத்துவிட்டதாலும் பெரும் வாண வேடிக்கை மூசிந்திப் பிராந்தியத்தில் ஏற்பட்டது.

இத்தகைய கடுமையான நிலைமையையும் விஜயசந்திரன் சமாளித்தான். ஜெயவர்மன் உத்தரவுப்படி அவன் அரணை நதியில் அமைத்திருந்தாலும் எதிர்பாராது ஏற்பட்ட அந்தத் தீ விபத்திலிருந்து தனது மரக்கலங்களைக் காக்க அரணைச் சிறிது தளர்த்தி மரக்கலங்களைப் பிரியும்படி உத்தரவிட்டான். அப்படி அவன் போர்க்கலங்கள் பிரிந்திருந்தால் அந்தப் பெரும் கடற்படை தப்பியிருக்கும். ஆனால் விதியும் இயற்கையும்கூட அவனுக்கு எதிராக இயங்கின. அந்த மரக்கலங்கள் தப்புவதற்குள் நதியின் முகத்துவாரத்திலிருந்து வந்துகொண்டிருந்த மற்ற மூன்று வணிகக் கப்பல்களும் தங்களுக்குத் தாங்களே தீ வைத்துக் கொண்டதாலும் அவை கிழக்குக் காற்றினாலும், நாழிகைகள் ஏறியதன் விளைவாக நதிக்குள் பிரும்மாண்டமாகப் புகுந்த கடல் அலைகளின் வேகத்தாலும் வெகு வேகமாக நதியின் குறுக்கு அரணை மோதின.

எங்கும் ஒரே ஜ்வாலை! எங்கும் ஒரே கூச்சல்! கடற் படையின் அணிவகுப்பு சின்னாபின்னப்பட்டது. நதிக்குக் குறுக்கே நின்ற ஸ்ரி விஜயத்தின் போர்க்கலங்கள் நங்கூரமெடுத்து அகன்றும் தீப்பிடித்து எரிந்து வெடித்தன. அவற்றிலிருந்த வாண் மருந்துகள் பெரிதாகப் பற்றியதால் பெரு வெடிகள் நகரத்தின் வடபுறத்தின்மீது வந்து விழுந்தன. நதிக்கரையில் ஏகக் கூச்சல்! நதியின் இருபுறங்களிலுமிருந்த மற்ற ஸ்ரி விஜயப் போர்க்கப்பல்களும் நங்கூரமெடுத்தன. இவற்றின் தலைமைப் போர்க்கப்பலிலிருந்து போர்த் தாரைகள் பலமாகச் சப்தித்தன. போருக்கான ஆயத்தச் சத்தம், நதிக்கரை வணிகர் ஊருக்குள் விரையும் கூச்சல், மரக்கலங்கள் வெடிக்கும் கோர ஒலிகள், இப்படி நானாவித ஒலிகளுக்கிடையே ஸ்ரி விஜய மாநகரம் பயங்கரக் கோலத்தைப் பூண்டது.

ஸ்ரி விஜயத்தின் இரண்டு போர்க்கலங்கள் பிற நாட்டு வணிகக் கப்பல்கள் ஆறும் தீப்பிடித்ததால், வணிகக் கப்பல் களிலிருந்தவர்கள் திடீரென நீரில் குதித்துவிட்டாலும் ஸ்ரி விஜயப் போர்க்கப்பல்களிலிருந்து குதிக்க முடியாத சில மாலுமிகள் வெடி மருந்தால் மாண்டு அவர் சடலங்கள் நதியில் உருண்டோடின. வெடித்த கப்பல்களின் மரக் கட்டைகள் அந்தச் சடலங்களுடன் சேர்ந்து ஓடி, மனிதன் உயிர் பிரிந்துவிட்டால் அவன் போற்றும் உடல் கட்டைதான் என்பதை எடுத்துக் காட்டின.

இப்படித் தனது போர்க்கப்பல்கள் இரண்டு நாசமாகியும் விஜயசந்திரன் மிகச் சாமர்த்தியமாக மற்றப் போர்க்கப்பல்களைக் காப்பாற்றினான். நதியை அடைத்து நின்ற சேதமடையாத, மற்ற மூன்று போர்க்கலங்களைப் பின்னடையச் சங்கு ஊதினான். வந்தவை வெறும் வணிகக் கப்பல்கள் அல்ல என்பதையும், வெகு திட்டமாகச் செய்யப்பட்ட சதியின் தூதர்களே அவையென்பதையும் உணர்ந்த விஜயசந்திரன். போர்த் தாரைகளைச் சப்திக்க உத்தரவிட்டான். அந்தத் தாரைகளின் சத்தத்துடன் வேறொரு பேரொலியும் கிழக்கே நதி முகத்துவார மார்க்கத்தில் கேட்டது.

அந்த ஒலி விஜயசந்திரன் காதில் மட்டுமல்ல அரண்மனை உப்பரிகையில் நின்று நதிப் பகுதியில் நடந்த அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஜெயவர்மன் காதிலும் விழுந்தது. ஜெயவர்மன், நதி கடலை நோக்கிப் பாயும் பகுதியை நோக்கினான். நதி நீரை எதிர்த்துப் பாயும் கடலின் பேரலைகளில் ஊர்ந்து, விதித்தேவன் அனுப்பிய வாளிபோல், கடல்புறா வெகு வேகமாக நதிக்குள் நுழைந்து வந்து கொண்டிருந்ததை ஸ்ரி விஜய சாம்ராஜ்யாதிபதி கண்டான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch67 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch69 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here