Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch7 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch7 | Sandilyan | TamilNovel.in

133
0
Read Kadal Pura Part 3 Ch7 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch7 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch7 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 7 :உளறலில் ஒரு விளக்கம்.

Read Kadal Pura Part 3 Ch7 | Sandilyan | TamilNovel.in

மரக்கலத்தின் முகப்பில் அமைக்கப்பட்டதால் வட மொழியில் அக்ரமந்திரம் எனப் பெயர் பெற்றதும் மற்ற வகை மரக்கலங்களின் அளவுகளைவிட அதிக வசதிகள் பெற்றதுமான கடல் புறாவின் முகப்பு அறையை நோக்கி இளையபல்லவன் உத்தரவுப்படி சென்ற காஞ்சனாதேவியின் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் அலைமோதிக் கொண் டிருந்தன. எண்ணங்கள் அலைமோதியதை அவள் பால் வண்ண முகம் திண்ணமாக எடுத்துக் காட்டியதன்றி, கால் களின் தளர்ந்த நடையும் உள்ளத்தின் ஊசலாட்டத்துக்குச் சாட்சி கூறியது.

அமீர் திடீரென வந்து இளையபல்லவனைத் தனியாக அழைத்து ஏதோ கூறியதும், அதைத் தொடர்ந்து இளையபல்லவன் தன்னை அக்ரமந்திரத்துக்குப் போக உத்தரவிட்டு நடுப் பாய்மரத் தண்டின் மீது மிக அவசரமாகத் தொத்தி ஏறிச் சென்றதையும் நினைத்துப் பார்த்ததன்றி அமீரின் முகத்தில் தெரிந்த கவலையையும் யோசித்துப் பார்த்ததால், தன்னால் ஊகிக்க முடியாதபடி புது ஆபத் தொன்று வந்திருக்க வேண்டுமென்று காஞ்சனாதேவி புரிந்து கொண்டாளாகையால் அந்த ஆபத்தின் தன்மை எதுவாயிருக்கும் என்பதைப் பற்றி யோசித்துக்கொண்டே அக்ர மந்திரத்துக்குள் நுழைந்தாள்.

மரக்கலத் தலைவன் மட்டுமே தங்குவதற்காக அந்த முகப்பு அறை நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும், கடல் புறா முதல் தரப் போர்க்கலமாகையால் நாலைந்துபேர் விசாலமாகப் படுப்பதற்குக்கூட அதில் வசதி இருந்தது. அந்த அறையின் கோடியில் இருந்த உள்ளறையின் அமைப்புக்கூட இரண்டொருவர் உட்கார்ந்து உணவருந்தக் கூடிய நிலையில் இருந்தது. முகப்பு அறையிலிருந்த வெண்கலக் கூண்டு விளக்கின் வெளிச்சம் அந்த அறையில் மட்டுமின்றி உள்ளறை யிலும் விழுந்ததால், உள்ளறையில் சில சமயங்களில் அமர்ந் திருக்கும் இளையபல்லவன், அங்கிருந்து கொண்டே வருகிற வர்களை ஊன்றிப் பார்க்கும்படியாக அதை அமைத்திருந்த தைக் கண்ட காஞ்சனாதேவி, ஏதோ காரணத்துடன்தான் அந்த அறை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறதென்பதைப புரிந்து கொண்டாள்.

அது எந்தக் காரணத்துக்காக நிர்மாணிக்கப் பட்டதோ அந்தக் காரணத்துக்கான அவசியமும் உபயோகமும் வெகு சீக்கிரம் ஏற்படப் போகிறதென்பதை மட்டும் அக்ரமந்திரத்தில் நுழைந்த அந்தச் சமயத்தில் அவள் அறிந்து கொள்ளவில்லையாகையால் உள்ளறையை ஒருமுறை நோக்கி விட்டுப் பலவர்மன் நினைவிழந்து படுத்துக் கொண்டிருந்த பஞ்சணையை அணுகினாள்.

பலவர்மன் அப்பொழுதும் நினைவிழந்து கிடந்தான். இடையிடையே நினைவு பெற்ற இரண்டொரு சமயங்கள் “வேண்டாம் கருணாகரா! வேண்டாம்! கடல் புறாவைத் திருப்பிவிடு” என்று கிலியால் உடலைத் தூக்கித் தூக்கிப் போட்டுக் கூவினான். அப்படித் தூக்கிப் போட்ட உடலைத் தன் இருகைகளாலும் பிடித்துக் கொண்டான் பக்கத்தே அமர்ந்திருந்த குணவர்மன். அவன் உடல் நிலையைக் கண்ட காஞ்சனாதேவியின் அஞ்சன விழிகளிலும் கருணை பெருக் கெடுத்து நீரைக் கொட்டின. “ஏனப்பா! கூலவாணிகர் சிகிச்சைக்குப் பிறகும் இவர் கண்விழிக்கவில்லையா?” என்று வினவினாள் காஞ்சனாதேவி துயரத்துடன்.

“இரண்டொரு முறை கண்களைத் திறந்தார். கடல் மோகினியை நினைத்ததும் நினைவிழந்து விடுகிறார்” என்று குணவர்மன் விளக்கினான்.

“கடல் மோகினியைப் பார்த்து இவர் ஏன் நடுங்க வேண்டும்?” என்று மீண்டும் வினவினாள் காஞ்சனாதேவி.

அதற்குக் குணவர்மனிடமிருந்து பதிலேதும் வரவில்லை சில விநாடிகளுக்கு. பிறகு அவன் சொன்ன பதிலும் சாரமற்றிருந்தது. “எனக்கெப்படித் தெரியும் காஞ்சனா?” என்றான் குணவர்மன்.

இதற்குப் பிறகு தந்தை மகள் இருவருமே நீண்ட நேரம் மௌனம் சாதித்தார்கள். நேரம் போவதே தெரியாமல் பலவர்மன் நிலை குறித்துக் கவலையுடன் அவனைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்த அவ்விருவர் நெஞ்சுகளில் உலவிக்கொண்டிருந்த சந்தேகத்துக்கு ஒரு நாழிகை கழித்துப் பலவர்மனே பதில் சொன்னான். அவன் கண்கள் ஒருமுறை மலர்ந்து மிரண்டு விழித்தன. பிறகு உதடுகள் திறந்து உளறின. “கடல் மோகினியில் இருக்கும் நிலை… உம் உம்.. உனக்கு எங்கே தெரியப்போகிறது?.. அது இப்பொழுது கலிங்கத்தின் வசம்.

ஆம், ஆம். கலிங்கத்தின் வசம்தான் இருக்கிறது… அங்கிருக்கும் துறைமுகத் தலைவன் கலிங்கத்தான்… ஆனால் கலிங்கத்துக்கும் படியாதவன்… கலிங்கத்தின் பெயரால் கொலை- ஜனங்கள் கொலை- கொள்ளை. அழிவுஎல்லாம் நடத்துகிறான்… போகாதே அங்கே! அடே கருணாகரா! மடையனே!” இப்படிப் பலபடி உளறினான். அந்த உளறலைத் தந்தையும் மகளும் மட்டுமல்ல, அந்தச் சமயத்தில் உள்ளே அடியெடுத்து வைக்க முற்பட்டு வாயிற் படியிலேயே நின்றுவிட்ட இளையபல்லவனும் கேட்டான். பலவர்மன் சொற்களைக் கேட்டதால் தந்தையும் மகளும் பெரும் பீதியடைந்தார்களென்றாலும், இளையபல்லவன் முகத்தில் மட்டும் பீதி சிறிதும் இல்லை .

முகத்தில் தன் உள்ளத்தே இருந்த ஒன்று உறுதிப்பட்டதற்கான சாயையே இருந்தது. அதனால் விளக்கமுற்ற முகத்துடனும் சிறிது சுறுசுறுப்புடனும் அறைக்குள் நுழைந்த இளையபல்லவனைத் தொடர்ந்து கூலவாணிகன் சேந்தனும் நுழைந்தான்.

அவர்களிருவரும் வந்ததும் பலவர்மன் பஞ்சணை முகப்பி லிருந்து எழுந்த காஞ்சனாதேவி கவலை படர்ந்து கிடந்த தன் அஞ்சன விழிகளை இளையபல்லவனை நோக்கி உயர்த்தி விட்டுச் சொன்னாள், “இவர் உடல் நிலை கவலைக்கிடமாய் இருக்கிறது. அடிக்கடி இப்படித்தான் உளறுகிறார்” என்று.

“மிக நல்லது” என்றான் இளையபல்லவன் குரலில் ஓரளவு திருப்தியுடன்.

காஞ்சனாதேவியின் கருணை விழிகளில் வியப்பு அதிகமாய்ப் படர்ந்தது. யாரிடத்திலும் அன்பு காட்டும் பழக்கமுடைய சோழநாட்டுப் படைத்தலைவன் இதயம் அத்தனை இரும்பாகிவிட்டதை எண்ணிய அந்தக் கடாரத்துக் கட்டழகி கேட்கவும் செய்தாள், “எது நல்லது? இவர் உடலிருக்கும் நிலையா? உளறலா?” என்று.

இளையபல்லவன் சிறிதுகூடச் சிந்திக்காமலே, “இரண்டும் நல்லது” என்று பதில் சொன்னான்.
“ஒருவர் உடல்நிலைக் கேட்டைக் கண்டு மகிழ்ச்சி யடைவது பண்பாடா?” என்று வினவினாள் காஞ்சனாதேவி சீற்றத்துடன்.

“சந்தர்ப்பத்தைப் பொறுத்தது” என்று இளையபல்லவன் சுட்டிக்காட்டினான்.

“எந்தச் சந்தர்ப்பத்தைப் பொறுத்தது?” என்று வினவினாள் காஞ்சனாதேவி கோபத்தால் முகம் சிவக்க.

இளையபல்லவன் அவளை நோக்கிப் புன்னகை செய்தான். அவன் புன்முறுவலைக் கண்டபோதெல்லாம் இதயத்தைப் பறி கொடுக்கக்கூடிய காஞ்சனாதேவி அந்தச் சமயத்தில் பெரிதும் வெகுண்டாள். அவள் உள்ளத்தில் உள்ளதைப் புரிந்து கொண்ட இளையபல்லவன் தனது இதழ்ப் புன்முறுவலைப் பெரிதாக்கிக் கொண்டு சொன்னான், “அவரவர் இருக்கும் சந்தர்ப்பத்தைப் பொறுத்தது” என்று.

“விளங்கவில்லை எனக்கு” என்று சுடச்சுடச் சொன்னாள் காஞ்சனாதேவி.

“விளக்கிச் சொல்கிறேன் கேள் காஞ்சனா! குணவர்மரே! நீங்களும் கேளுங்கள். தமிழகத்தில் தென் கடல் மோகினியின் புஷ்ப ஒட்டியாணம் என்று புகழப்படுவதும் நறுமலர்ச் சோலைகளால் சூழப்பட்டதுமான மாநக்காவரம் தீவுகளின் கூட்டத்தின் பிரதானத் தீவை நாம் எட்டிக் கொண்டிருக் கிறோம். இந்தத் தீவைக் கண்டு அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவர் என்ன காரணத்தாலோ அஞ்சுகிறார். காரணம் எனக்கு விளங்கவில்லை. நாம் விடியற்காலையில் அடையப் போகும் நக்காவரத்தின் பிரதான துறைமுகம் முன்பு தமிழர் வசமிருந்தது. இப்பொழுது இல்லை… ” என்று கூறிய இளையபல்லவன் அவ்விருவரையும் உற்று நோக்கினான்.

அந்த நோக்கைச் சந்திக்க இயலாத காஞ்சனாதேவியின் கண்கள் கீழே தாழ்ந்தன. “அப்படியானால் கடல் மோகினி. ” என்று கூறிய குணவர்மன் மட்டும் இளையபல்லவனை ஏறெடுத்துப் பார்த்தான்.

“ஒன்று ஸ்ரி விஜயத்திடம் இருக்கவேண்டும். அல்லது அவர்கள் துணைவர்களான கலிங்கத்தாரிடமிருக்க வேண்டும் என நான் ஊகித்தேன். ஆனால் இப்பொழுது இவர் உளறிய திலிருந்து… ” இளையபல்லவன் பதிலை முடிக்கு முன்பே இடைமறித்த குணவர்மன், “கலிங்கத்திடமிருக்கிறதென்று தெரிகிறது” என்றான்.

ஆமென்பதற்கறிகுறியாகத் தலையை ஆட்டிய இளைய பல்லவன், “ஸ்ரி விஜயத்திடம் இருந்தாலும் கலிங்கத்திடமிருந் தாலும் பலவர்மர் பயப்படக் காரணமில்லை. பலவர்மர் ஸ்ரி விஜயத்தின் கோட்டைத் தளபதிகளுள் ஒருவர். மன்ன வருக்கு உறவினர். ஆகவே, கலிங்கத்துக்கும் துணைவர். அப்படி யிருக்க அவர் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும் பயப்படுகிறார். ஏன் என்று இத்தனை நேரம் விளங்க வில்லை. இப்பொழுது விளங்குகிறது.

இங்குள்ள துறைமுகத் தலைவன் கலிங்கத்தவனாயிருப்பினும் பெருங்கயவன். எந்த அக்கிரமத்துக்கும் அஞ்சாத பலவர்மனும் அஞ்சும் கயவன். உளறலால் இதைத் தெரிந்துகொண்டோம். இது நமக்குப் பெரும் உதவி. இவர் உடல்நிலையும் நமக்கு உதவும்” என்றான்.
இளையபல்லவன் விளக்கிச் சொன்ன காரணங்கள் மிகக் கோர்வையாய் இருந்தாலும், பலவர்மன் உடல்நிலையும் உளறலும் எப்படிக் காஞ்சனாவையும் மற்றவர்களையும் அந்தக் கலிங்கத்தாரிடமிருந்து காப்பாற்றும் என்பது மட்டும் குணவர்மனுக்குப் புரியவில்லை. ஆகவே கேட்டான், “இவை எப்படி நமக்கு உதவும்?” என்று.

“பலவர்மன் உடல்நிலைக் காரணத்தைக் காட்டி நாம் பல காரியங்கள் செய்யலாம். அது மட்டுமல்ல, இப்பொழுது எதிரி எப்பேர்ப்பட்டவனென்று தெரிந்துவிட்டதால் அவனுக்கேற்ப நமது திட்டத்தையும் வகுக்கலாம். எதிரி சிக்குவதற்குப் பலவர்மன் உடல்நிலை மிக அனுகூலம்” என்று கூறிய இளையபல்லவன் அதற்கு மேல் அவனுடன் எதுவும் பேசாமல் கூலவாணிகனை அழைத்து, “சேந்தா! பலவர்மன் உடல்நிலை எப்படியிருக்கிறது பார்,” என்று பணித்தான்.

பலவர்மன் கைநாடியைப் பிடித்து நீண்ட நேரம் பரிசோதித்த கூலவாணிகன், “காலையிலிருந்ததை விட மோசமாயிருக்கிறது படைத்தலைவரே!” என்றான்.

“உயிருக்கு ஏதாவது ” என்று சந்தேகத்துடன் கேட்டான் படைத்தலைவன்.

“உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. இரண்டு நாட்களில் குணமாகிவிடும். உளறல்கூட இந்த லேசான காய்ச்சலால் இல்லை. தலையில் பட்ட அடி மூளைக்குச் சிறிது அதிர்ச்சி யைத் தந்திருக்கிறது. அதுவும் இரண்டு நாட்களில் குணப்பட்டு விடும். “
“அந்த இரண்டு நாள்கள் வரை?” காஞ்சனாதேவியின் கவலைக்குரல் இடையே புகுந்தது.

“இப்படித்தான் சிறிது நேரம் சுயநினைவுடனும் சிறிது நேரம் சுயநினைவு இழந்தும் இருப்பார்” என்றான் சேந்தன்.

இதற்குப் பிறகு யாருமே சில விநாடிகள் பேசவில்லை . பஞ்சணை முகப்பில் உட்கார்ந்த இளையபல்லவன் தீவிர யோசனையில் ஆழ்ந்துவிட்டான். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து சேந்தனை நோக்கிய படைத்தலைவன், “சேந்தா! பலவர்மரை அந்த உள்ளறைக்குக் கொண்டு போய்விடு. காஞ்சனாதேவியும் அந்த அறையிலேயே இருந்து கொண்டு, சிறிய தந்தைக்குப் பணிவிடை செய்யட்டும். ஆனால்… ” என்று கூறிச் சற்றே நிறுத்தினான்.

சேந்தன் முகத்தில் பயம் படர்ந்தது. “ஆனால்” என்று பயத்துடன் கேட்டான் அவன்.

“பலவர்மருக்கு நாளை இரவு வரை நினைவு வரக் கூடாது” என்றான் திட்டமாக இளையபல்லவன்.

“அதனால்… ”

“என்ன நேரிட்டாலும் சரி. “

“உயிருக்கு ஆபத்து நேரிட்டால்?”

“நேரிடக் கூடாதுதான். ஆனால் இந்த மரக்கலத்திலும் நாம் கைப்பற்றியிருக்கும் மரக்கலங்களிலும் சேர்ந்து சுமார் இருநூறு பேர் இருக்கிறார்கள். அவர்கள் உயிர் காப்பாற்றப்பட வேண்டும்?”

“அதற்காக?”

“ஓர் உயிரைப் பலி கொடுப்பது தவறாகாது. இதைத் தமிழகத்தின் தர்ம சாத்திரங்கள் அனுமதிக்கின்றன. “

இதைக் கேட்டதும் காஞ்சனாதேவி சீறி எழுந்தாள். “மிக நன்றாக இருக்கிறது உங்கள் தர்மசாத்திரம். உடல் நலமில்லா திருப்பவரைக் கொல்லுவதுதான் விவேகமா? இதுதான் தமிழகத்தின் பண்பாடோ?” என்று இரைந்து கூவவும் செய்தாள்.

“இவரைக் கொல்ல வேண்டுமென்று நான் நினைத் திருந்தால் இந்த நிலையில் கொல்ல வேண்டிய அவசிய மில்லை காஞ்சனாதேவி. அக்ஷயமுனையில் அதற்கு நிரம்ப சந்தர்ப்பங்கள் இருந்தன. இவர் முழு நினைவுடனிருக்கையில் இவரை வெட்டி வீழ்த்த எத்தனையோ வசதிகள் இருந்தன. உயிர்க் கொலையில் நம்பிக்கை இல்லாததால்தான் நான் இவரைக் கொல்லவில்லை. இப்பொழுது கொல்ல இஷ்டம் இல்லை. இவருக்கு நினைவு வராமல் இன்னும் ஒரு நாளிருப்பது அவசியம். அதைத்தான் சேந்தன் செய்வான்.
அந்தப் பணியில் நம் இஷ்டவிரோதமாகப் பலவர்மன் இறந்தால் நானல்ல பொறுப்பாளி. என் கடமை இந்தச் செயலுக்குத் தூண்டுகிறது. இந்த மரக்கலத்திலும் மற்ற இரு மரக்கலங்களிலும் உள்ள இருநூறு மாலுமிகளின் உயிரைப் பற்றிய எச்சரிக்கையும் இந்தப் பாதையையே எனக்குக் காட்டுகிறது” என்று விடுவிடு என்று கூறிய இளையபல்லவன் சேந்தனை நோக்கி, “இவர் நினைவிழந்திருப்பதற்கு வேண்டிய மருந்தை மட்டும் கொடு. இவர் இறப்பதில் எனக்கிஷ்ட மில்லை.

கூடியவரை எச்சரிக்கையுடனிரு இவர் படுக்கையை நான் சொன்னபடி உள்ளறையில் போடு. காஞ்சனாதேவி சிகிச்சை செய்யட்டும். இப்பொழுது நாம் பெரும் அபாயத்தை நோக்கிச் செல்கிறோம். அந்த அபாயத்திலிருந்து நாமனை வரும் தப்பப் பலவர்மன் முக்கிய மருந்து நினைப்பிருக்கட்டும். மேற்கொண்டு செய்யவேண்டியதைப் பின்னால் சொல்லு கிறேன்” என்று உத்தரவிட்டு அறையிலிருந்து வேகமாகத் தளத்துக்குச் சென்றான்.

தளத்திலிருந்த அமீரிடம் தான் மருந்தைத் தயார் செய்து விட்டதைக் குறிப்பிட்டு, “இனி மந்திரத்தைக் கேள் அமீர், என்று கூறிவிட்டு அவன் காதிற்கு அருகில் நின்று நீண்ட நேரம் ஏதேதோ கூறினான்.

அமீரின் விழிகள் பெரிதாக மலர்ந்தன. “ஒழித்து விட்டோம் எதிரிகளை” என்றான் அவன் குதூகலத்துடன்.

“ஆம். உளறலிலும் பலனிருக்கிறது” என்றான் படைத் தலைவனும் உற்சாகத்துடன்.

“அப்படியானால்?” அமீர் கேட்டான் மகிழ்ச்சியுடன்.

“ஏற்றிவிடு கலிங்கத்தின் கொடியை, கடல்புறா மீது” என்று உத்தரவிட்டான் இளையபல்லவன்.

அடுத்த சில நிமிஷங்களில் கடல் புறாவின் நடுப் பாய்மரத்தின் உச்சியில் கலிங்கத்தின் கொடி கம்பீரமாகப் பறந்தது. பொழுதும் மெள்ள மெள்ளப் புலர்ந்தது. எதிரில் புஷ்ப ஒட்டியாணத்தின் வரிசைகள், “வா, வா,” என்று கடல் புறாவைத் தலைகளை ஆட்டி அழைத்தன.

அந்த அழைப்பு ஆனந்தத்தைத் தந்தது மற்ற மாலுமி களுக்கு. இளையபல்லவனுக்கு மட்டும் அது பெரும் எச்சரிக்கையைத் தந்தது. அந்த எச்சரிக்கை தூரத்தே தெரிந்த ஒரு படகில் வெகு வேகமாக வந்து கொண்டிருந்தது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch6 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch8 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here