Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch70 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch70 | Sandilyan | TamilNovel.in

151
0
Read Kadal Pura Part 3 Ch70 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch70 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch70 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 70 :மகள் தந்த விளக்கம்.

Read Kadal Pura Part 3 Ch70 | Sandilyan | TamilNovel.in

மூசி நதிப் போரின் மத்தியிலே, பயங்கர ஒலிகளுக் கிடையே, நடு நெற்றியில் அம்பு தாக்கியதால் நினைவிழந்து தனது போர்க்களத் தளத்திலே விழுந்துவிட்ட ஜெயவர்மன் கண் விழித்தபோது புத்தம் புதுச் சூழ்நிலையிலிருந்தபடியால், திறந்த தன் கண்களையே நம்பமுடியாமல் திரும்பவும் மூடிக்கொண்டான்.
சீனத்து வாண வெடிகளின் பேரொலிகளோ, தீப்பிடித்த மரக்கலங்களின் பலகைகள் வெடித்த பயங்கரச் சப்தங்களோ, இளையபல்லவனுடைய கொள்ளைக்கார மாலுமிகள் எழுப்பிய கூச்சல்களோ,
கடல்புறாவின் தளத்தின் பெருவிற்களிலிருந்து சரமாரியாக எழுந்த அம்பு, வேல் கூட்டங்களின் விர்விர்ரென்ற சீறல்களோ, அதே சமயத்தில் நடுநிலை நடந்த போரின் விளைவாக நகரத்துக்குள் எழுந்துகொண்டிருந்த சலசலப்போ,
எந்த அரவமும் கேட்காமல் மிக அமைதியான நிலைமை தன்னைச் சூழ்ந்திருப்பதை அவன் கண்டான். தவிர தான் கிடந்தது தளத்தின் மரப் பலகையல்ல என்பதும் மிக மிருதுவான பஞ்சணையென்பதும்கூட அவனுக்குத் தெரிந்தது. ‘தளத்திலிருந்து இங்கு எப்படி வந்தோம்? இருப்பது என் அரண்மனைதானோ, அல்லது பெரிய மனிதர்களைக் காவல் வைக்கும் சிறைக்கூடத்தின் ஓர் அறையா? போரின் முடிவு என்னவாயிற்று?’ என்று கண்ணை மூடிய வண்ணமே ஜெயவர்மன் தன்னைக் கேட்டுக்கொண்டான்.

அந்தக் கேள்விகளின் விளைவாகச் சிந்தையைச் சிறிது கசக்கிப் பிழிந்து உண்மையைத் தெரிந்துகொள்ளவும் முயன்றான். தான் தளத்தில் விழுந்த பிறகு தனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகள், கனவுகள், பிரமைகள் ஆகிய பலவற்றை ஒன்று கூட்டிப்
பார்த்தான். நினைவிழந்த பிறகு தன் காதுகளில் நகரப் பகுதியிலிருந்து பெரும் கோஷம் கேட்டது போன்ற பிரமை இருந்தது அவனுக்கு. கனகமணிக் கதவுகளின் மணிகள் கணகணவென்று பலமுறை சப்தித்ததால் கதவுகள் திறந்து திறந்து மூடப்பட்டதாகத் தான் எண்ணியதும் நினைவுக்கு வந்தது. மற்றபடி எல்லாம் கலந்த, விவரிக்க முடியாத பெரும் கூச்சல் காதில் விழுந்ததாகத் தெரிந்தது. பிறகு ஏதும் நினைப்பில்லை. தன் கண்ணெதிரே, மனக் கண்ணெதிரே யாரோ சிலர் வந்து போய்க்கொண்டிருப்பதாக ஒரு பிரமை மட்டுமிருந்தது.

சிந்தையைக் கசக்கியதில் தெரிந்தது அவ்வளவுதான். இவற்றிலிருந்து திட்டமாக எதுவும் தெரிந்துகொள்ள முடியாததால் சிறிது படுத்திருந்த இடத்தில் அசைந்தான். அசைந்த அவன் உடல் பஞ்சு போன்ற வெண்மையான எதன் பேரிலோ உராய்ந்தது. அடுத்த விநாடி சில தளிர் விரல்கள் அவன் கண்கள் மீது தவழ்ந்தன.
இன்னும் சில அவன் குழலை மிக மிருதுவாகத் தள்ளிவிட்டன. ஜெயவர்மன் தன் கையை உயர்த்திக் கண்கள்மீது தவழ்ந்த விரல்களைப் பிடித்துக் கொண்டான். அந்த விரல்கள் அளித்த ஆதரவை அவனால் விவரிக்க இயலவில்லை. ஆயுளில் எப்பொழுதோ கண்டிருக்கிறான் இதேமாதிரி விரல்களை.
“அவையேதான். அவையேதான்” என்று முணுமுணுத்த ஜெயவர்மன் மெள்ள அந்த விரல்களைத் தன் கையால் அகற்றி வருடிய வண்ணம் கண்களைத் திறந்தான். அவன் பக்கத்தில் அவனைக் கவலையுடன் பார்த்தவண்ணம் மஞ்சளழகி உட்கார்ந் திருந்தாள். கவலை பாய்ந்த அந்தத் தருணத்திலும் அந்தக் கண்களில் எத்தனை மென்மையிருந்தது என்பதைப் பார்த்த ஜெயவர்மன் இதழ்களில் வருத்தப் புன்முறுவல் ஒன்று படர்ந்தது.

ஜெயவர்மன் கண்களைத் திறந்ததும் மஞ்சளழகியின் வதனத்தில் ஆறுதலின் சாயை படர்ந்ததன்றி, அவள் ஆசுவாசப் பெருமூச்சொன்றும் விட்டாள். அவள் முகத்தில் ஏற்பட்ட ஆறுதலைக் கண்ட ஜெயவர்மன் உள்ளம்கூட நெகிழ்ந்தது. அவன் முகத்தில் அன்றுவரை யாருமே காணாத அன்பு கனிந்தது. எத்தனை செங்கோலைப் பிடித்தாலும் தனது மகளின் மலர் விரல்களைப் பிடிப்பதிலிருக்கும் ஆனந்தம் உலகத்தில் இல்லை என்பதை அவன் புரிந்துகொண்டான். எந்த மனிதனுக்கும், எப்பேர்ப்பட்ட கொடியவனுக்கும் வாழ்க்கையில் ஒருநாள் தெளிவு ஏற்படுகிறது. அந்தத் தெளிவை அடைந்த ஜெயவர்மன் தனது மகளை நோக்கி, “மகளே!” என்று மெல்ல அழைத்தான்.

பதிலுக்கு மஞ்சளழகி புன்முறுவல் செய்தாள். அந்தப் புன்முறுவலில் சந்துஷ்டி இல்லை. வருத்தம் நிரம்பி நின்றது. அவள் விழிகளில் இரண்டு நீர்த்துளிகள் திரண்டு நின்றன. அவை அவன் நெற்றியிலும் பொட்டுப் பொட்டாக உதிர்ந்தன. ஜெயவர்மன் அவள் துக்கத்தின் காரணத்தைப் புரிந்து கொண்டான். அதிலிருந்து தனது நிலையையும் புரிந்து கொண்டான். அப்படிப் புரிந்து கொண்டு புன்னகையே பூத்தான். மகளிடமிருந்து ஆசை மலைபோல் ஏற்பட்டுவிட்ட நஷ்டத்தைத் தூசிபோல் நினைக்க வைத்தது. அவள் கண்களை அவன் கை துடைத்தது. இன்னொரு கை அவள் விரல்களைப் பற்றியபடியே கிடக்க ஜெயவர்மன் மீண்டும் ஆசையுடன் அழைத்தான், “மகளே” என்று.
“அப்பா!” மஞ்சளழகியின் குரல் மெதுவாகவும் மிருது வாகவும் வந்தது. அந்த மிருதுவின் ஊடே உணர்ச்சி வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது.

அந்த ஒரு சொல் மிக இன்பமாக விழுந்தது ஜெயவர்மன் செவிகளில். எத்தனையோ விருதுகளைச் சொல்லித் தனது குறுநில மன்னர்கள் அழைத்தபோதுகூடக் கிடைக்காத இனபம் மகளின் அப்பா!’ என்ற ஒரு சொல்லில் இருப்பதைக் கண்ட ஜெயவர்மன், தான் ஏதோ புது சாம்ராஜ்யமொன்றைப் பிடித்துவிட்டதாகவே நினைத்தான். ஆகவே சற்று அலட்சியத்துடனேயே உரையாடலைத் தொடங்கி, “வருந்து வதற்கு என்ன இருக்கிறது மகளே?” என்றான் குரல் தழுதழுக்க.

“ஒன்றுமில்லை … ” என்றாள் மஞ்சளழகி அவன் குழல் களைக் கோதிக்கொண்டே.

“போரின் முடிவு… ” என்று தனது கண்களை மெல்ல உயர்த்தி மஞ்சளழகியின் கண்களைச் சந்தித்தான் ஜெயவர்மன்.

மஞ்சளழகி அவன் கண்களைச் சந்திக்க மறுத்தாள். தலையை மேலும் கீழுமாக ஒருமுறை அசைத்து ஜெயவர்மன் நினைத்தது சரியென்பதை உணர்த்தினாள். ஜெயவர்மன் கண்கள் வியப்பால் மலர்ந்தன. உள்ளே உறங்கிக் கிடந்த வீரம் மீண்டும் தலை தூக்கியதால் வியப்புடன் சொன்னான் அவன், “மகளே! இது ஏதோ இந்திரஜாலம் போல் இல்லையா?” என்று.

ஜெயவர்மன் எதைக் குறிப்பிடுகிறான் என்பது மஞ்சளழகிக்குத் தெரிந்தேயிருந்தது. இருப்பினும், “எதைச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள். “போரின் முடிவை!” என்றான் ஜெயவர்மன்.

“அதில் இந்திரஜாலம் என்ன இருக்கிறது தந்தையே?” என்று அவள் வினவினாள். அவனுக்குத் திடீரென்று அதிர்ச்சியை உண்டாக்கக் கூடாது என்பதற்காகவே விஷயங்களை மெல்ல மெல்ல விவரிக்க முற்பட்டாள். ஆகவே ஜெயவர்மன், “இந்திரஜாலம் இல்லாமல் என்ன மகளே! ஸ்ரி விஜயத்தின் தலைநகரைப் பிடிப்பதென்றால், அதுவும் ஒருநாள் போரில் பிடிப்பதென்றால், அது மனித சக்திக்கு மீறிய காரியமென்று உனக்குப் புலப்படவில்லையா?” என்று வினவினான்.

“ஸ்ரி விஜயம் ஒருநாள் போரில் பிடிபடவில்லை அப்பா! இந்த நகரிலேயே மூன்று நாள் போர் நடந்தது. இருபுறத்திலும் சேதம் அதிகம். நமது வீரர்கள் மிகத் திறமையுடன் பாதுகாத்தார்கள் நகரத்தை” என்று கூறினாள் மஞ்சளழகி. அப்படி அவள் சொன்னபோது அவள் குரலில் சிறிது பெருமைகூட இருந்ததைக் கவனித்தான் ஜெயவர்மன். ‘என்ன மாறினாலும் ஜெயவர்மன் மகள் ஜெயவர்மன் மகள்தான்’ என்று உள்ளூரத் திருப்தியடைந்து சொல்லிக் கொண்டான் அவன். அதைத் தொடர்ந்து மேலும் விவரமறியக் கேட்டான், “மூன்று நாட்களா போர் நடந்தது?” என்று.

“ஆம்… ” என்றாள் மஞ்சளழகி.

“மஞ்சளழகி… ”

“ஏன் அப்பா ?”

“மூசிந்திப் போரை நான் கவனித்தேன்….”

“உம். “

“அந்த இளையபல்லவன்… ”

“உம். “

“போரில் அசுரனம்மா . “

“ஆம். “

“பெரிய தந்திரசாலி கூட. “

“ஆமாம். “

“எனது இருபத்தைந்து மரக்கலங்களைத்தான் துணிகர மாகத் தாக்கித் தோற்கடித்தான். ஆனால் நதிமுகத்துவாரத்தின் இருகரைகளிலும் நான் நிற்க வைத்திருந்தேனே சுமார் ஐம்பது மரக்கலங்களை, அவை என்னவாயின? அவற்றையும் தனது அறு மரக்கலங்களைக் கொண்டா அழித்துவிட்டான் இளைய பல்லவன்?” என்று வினவினான் ஜெயவர்மன்.

மஞ்சளழகி இக்கேள்விக்கு உடனே பதில் சொல்ல வில்லை. சிறிது நேரம் சிந்தித்தாள். கடைசியில் சற்றுப் பெருமையுடன் சொன்னாள், “அப்பா! ஸ்ரி விஜயம் போன்ற சாம்ராஜ்யத்தின் தலைநகரை உடைக்கக் கடல் புறாவும் ஆறு போர்க்கலங்களும் போதுமா? ஒருக்காலும் போதாது. உங்களை வெற்றி கொண்டவை மரக்கலங்களல்ல, ஒரு மனிதர் வெற்றி கொண்டார்” என்று.

அந்த மனிதர் யாரென்பதையும், அந்த மனிதருக்கும் தன் மகளுக்குமுள்ள உறவு என்னவென்பதையும் உணர்ந்திருந்த ஜெயவர்மன் புன்முறுவல் கொண்டான். இருப்பினும் கேட்டான், “அந்த மனிதர் யாரென்பது புரிகிறது மகளே. இருப்பினும் அவர் எப்படி இந்தத் தலைநகரைப் பிடித்தார்? விளங்கச் சொல் மகளே” என்று.
மஞ்சளழகியின் அழகிய வதனத்தில் சிந்தனை ரேகை ஓடியது. “அப்பா! ஸ்ரி விஜயம் இந்த மூன்று நாள் போரில் ஜெயிக்கப்படவில்லை. அதற்கான வேலை தொடங்கி வருஷம் ஒன்றாகிறது. இதன் வீழ்ச்சிக்கான ஒவ்வொரு படியும் திட்டமிட்டுக் கட்டப்பட்டது. அந்தத் திட்டத்துக்கு உதவியும் நிரம்ப இருந்தது. திட்டம் வகுத்தவர் கீழ்த்திசை நாடுகளிலேயே சிறந்த அறிவாளி. அவர் நாட்டு மக்கள் கலிங்கத்தில் அடைந்த கஷ்டம் அவரைக் கலிங்கத்துடன் பகைமை கொள்ளச் செய்தது. கலிங்கத்துடன் நாம் கொண்டிருந்த நட்புமீது பகைமை கொள்ளச் செய்தது. கலிங்கத்தின் கடற்படையின் பலத்தை உடைக்க அவர் திட்டமிட்டு ஓராண்டு காலத்திற்குமேல் ஆகிறது. கலிங்கத்தின் மரக்கலங்கள் பல அவரால் பிடிக்கப்பட்டன என்று உங்களுக்குத் தெரியும்… ” என்ற மஞ்சளழகி தந்தையின் மீது தனது கண்களை ஓட்டினாள்.
“ஆம், தெரியும்” என்றான் ஜெயவர்மன்.

“அந்த மரக்கலங்கள் எல்லாம் அழிக்கப்படவில்லை. “

“பின் என்னவாயின?”

“ஸ்ரி விஜயத்தின் கரையிலும் எதிர்க்கரையிலுமுள்ள தமிழர்களின் குடியிருப்புகளுக்குப் பரிசாகக் கொடுக்கப் பட்டன. “

ஜெயவர்மன் உள்ளத்தில் விஷயம் மெள்ள மெள்ளத் தெளிவுபடத் தொடங்கியதற்கான அறிகுறி முகத்தில் தெரிந்தது! “புரிகிறது மகளே, புரிகிறது! நான் எத்தனை குருடனாய் இருந்துவிட்டேன்?” என்று உணர்ச்சியுடன் கூறினான்.

மஞ்சளழகியும் உணர்ச்சியுடன் சொன்னாள். “ஆம் தந்தையே! கலிங்கத்தின் போர்க்கலங்கள் நம் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தமிழர் குடியிருப்புகளுக்குச் சென்று அங்கு பழுதுபார்க்கப்பட்டன. அங்குள்ள தமிழர்களுக்குக் கடற் போர்ப் பயிற்சியும் ரகசியமாக அளிக்கப்பட்டது. தமிழர் களிடம் அகப்பட்ட கலிங்க மரக்கலங்கள் மேலுக்கு வணிகக் கப்பல்களாகவும் உள்ளே போர்ச் சன்னத்துடனும் இருந்தன. ஸ்ரி விஜய நகர் இத்தகைய குடியிருப்புகளால் மெள்ள மெள்ளச் சூழப்பட்டது தவிர, வணிகர் போர்வையில் அடிக்கடி இந்நகருக்குள் வந்த பல தமிழர்கள் சுமார் ஒரு மாத காலமாக இங்கேயே தங்கிவிட்டனர். இளையபல்லவர் ஏற்பாடுகளைச் சிறுகச் சிறுக மிகத் திட்டமாகச் செய்து வந்தார். அது மட்டுமல்ல… ”

“சொல் மகளே!”

“மலையூரை விட்ட பிறகு ஒன்றரை மாத காலம் நாங்கள் எங்கிருந்தோம் தெரியுமா?”

“தெரியாது, சொல். “

“மூசிந்தி முகத்துவாரத்துக்கு நேர் கிழக்கில் முக்கால் காதம் கடலைத் தாண்டினால்… ”

“பங்கஜத் தீவு இருக்கிறது. “

“அதில் இருந்தோம்” என்ற மஞ்சளழகி மேலும் சொல்லத் தொடங்கி, “இத்தனை அருகில் இளையபல்லவர் மரக்கலங்கள் இருந்தும் ஏன் தெரியவில்லையென்பது உங்களுக்கு வியப்பாயிருக்கும். இளையபல்லவர் மூசி நதிக்கு எதிரில் மரக்கலங்களை நிறுத்தவில்லை. பங்கஜத் தீவைச் சுற்றிச் சென்று மேற்குப் பகுதியிலிருந்த மறைவிடங்களில் நிறுத்தினார். பங்கஜத் தீவின் மேற்குப் பகுதியில் அடர்ந்த காடும், கண்ணுக்குத் தெரியாமல் மரக்கலங்கள் நிற்கக் கூடிய மலைக் குடைவுகளும் இருப்பது உங்களுக்குத்தான் தெரியுமே.

இளையபல்லவர் ஒவ்வொரு மலைக் குடைவிலும் ஒவ்வொரு மரக்கலத்தை நிறுத்தினார். அப்படியும் மீதியாகி இடமில்லாது இருந்த இரு மரக்கலங்களை வணிகக் கப்பல்களாக ஓட விட்டார். பங்கஜத் தீவில் மறைந்து சுமார் ஒன்றரை மாத காலமாக இந்தத் தலைநகரைத் தாக்க ஏற்பாடுகளைச் செய்தார். வணிகர் போர்வையில் ஒற்றர்களை அனுப்பி மூசி நதியில் அலைகள் உட்புகுந்து பாயும் இரவு நாழிகைகளில் தாமே பலமுறை படகுகளைச் செலுத்தி வந்து பார்த்தார்.

கடல் புறா இன்று கடலலையில் நதிக்குள் நுழைந்த சமயம், அதைத் தொடர்ந்து மற்ற மரக்கலங்கள் வந்த நேரம் எல்லாம் அவரால் நிர்ணயிக்கப்பட்டன. இவை மட்டுமல்ல தந்தையே! அநபாயரை இந்தச் சமயத்தில் ஸ்ரி விஜய மாநகரின் வடக்கெல்லையில் படையுடன் இறங்கச் செய்ததும், சோழ நாட்டுப் போர்க்கலங்களையும் இங்குள்ள குடியிருப்புத் தமிழர்களிடம் ஏற்கெனவே அளித்த போர்க்கலங்களையும் கொண்டு தாங்கள் மூசிந்தி முகத்துவாரக் கரைகளில் நிறுத்திய ஐம்பது மரக்கலங்களை அழித்ததும் எல்லாம் அவர் செய்கைதான். கடற்படையின் பெரும் பகுதி முகத்துவாரத்தில் தாக்கப் பட்டதாலும், நதியின் உட்புறமிருந்த போர் அரணைக் கடல் புறா தகர்த்து விட்டதாலும், அநபாயர் நகரத்தை வடக்கில் தாக்கியதாலும், உள்ளே இருந்த தமிழ் ஒற்றர்கள் விளைவித்த குழப்பத்தாலும் நமது… ” என்று விவரித்துக் கொண்டே போன மஞ்சளழகி பேச்சைச் சட்டென்று பாதியில் நிறுத்தினாள்.

“நமது மக்களே செய்த புரட்சியாலும் இம்மாநகர் வீழ்ந்தது. சொல் மகளே! உண்மையைப் பயப்படாமல் சொல். என்னை வீழ்த்தியது என் கொடுங்கோல் என்கிறாயா? சொல் அதை. ஆனால் இத்தனையும் என்னை வீழ்த்தவில்லை, தெரியுமா?” என்றான் ஜெயவர்மன் தனது வீழ்ச்சியைப் பற்றிக் கூட லட்சியம் செய்யாமல்.

“வேறு எது வீழ்த்தியது தந்தையே?” ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காகக் கேட்டாள் மஞ்சளழகி.

“உனக்குச் செய்த அநீதி மகளே! உன் தாய்க்கு நான் செய்த துரோகம். அவளிடம் நான் உயிரை வைத்திருந்தேன். நமது குல தர்மப்படிதான் அவளை மணந்தேன். இருப்பினும் பல விஷயங்களில் துணிவுள்ள எனக்கு ஒரு சீனத்துப் பெண்ணை ராணியாக அரியணையில் அமர்த்தத் துணிவில்லை. ஆகவே திருமணத்தை மறந்தேன். உன்னையும் துறந்தேன். அந்த அயோக்கியன் பலவர்மன் எத்தனை அதிர்ஷ்டசாலி! நீ விளையாடி வளர்ந்ததையெல்லாம் பார்த்தானே?” என்று உணர்ச்சி வேகத்தில் பேசிய ஜெயவர்மன் ஆயாசத்தில் சிறிது பேச்சை நிறுத்தி நெற்றியில் கையை வைத்தான்.

“அங்கு கையை வைக்காதீர்கள். இன்னும் புண் ஆறவில்லை ” என்றாள் மஞ்சளழகி.

அதைப் பற்றிக் கவலைப்படாத ஜெயவர்மன், “கவலைப் படாதே மகளே! இன்னும் ஜெயவர்மனை அவர்கள் வெற்றி கொள்ளவில்லை. இந்த மாநகர் வீழ்ச்சி சாவகத்தில் பெரும் கிளர்ச்சியை உண்டுபண்ணும். சைலேந்திரர்களின் ஆதி இடம் சாவகத் தீவு. அங்கு எனது பெரும் படை இருக்கிறது. ஸ்ரி விஜய மாநகர் வீழ்ச்சியைக் கண்டு அது வாளாவிருக்காது… ” என்று கூறிக்கொண்டே மேலும் ஏதோ பேசப்போன அவன் உதடுகளில் சொற்கள் உறைந்து போயின! கண்களில் பழைய கொடுமை ஏறியது. வாயிற்படியை நோக்கிய அவன் விழிகள் கோப ஜ்வாலையை வீசின.

இளையபல்லவன் அந்த அறையின் வாயிற்படியில் நின்று கொண்டிருந்தான். இளையபல்லவனை அவன் அன்றுவரை நேருக்கு நேர் பார்த்ததில்லை. என்றாலும், தான் அக்ஷயமுனை சென்றிருந்த போது தனது மகளும் மற்றோரும் தந்த விளக்கத்தை விவரமாக நினைவில் பதித்துக் கொண்டிருந்ததால், வாயிற்படியில் நின்றவன் யாரென்பதை விநாடி நேரத்தில் புரிந்துகொண்டான். அப்படி வந்தவன் யாரென்பதை ஊகித்துக் கொண்டதால் ஏற்பட்ட கோபம் விரைவில் வியப்புக்கு இடம் கொடுத்தது. “உள்ளே வர அனுமதி உண்டா ?” என்றான் இளையபல்லவன். அவன் கேள்வியில் வெற்றியின் வீறாப்பு இல்லை. பணிவு இருந்தது. அந்தப் பணிவுக்குக் காரணம் விளங்கவில்லை ஜெயவர்மனுக்கு. விளங்கியபோது ஜெயவர்மன் வியப்பின் எல்லையை அடைந்தான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch69 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch71 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here