Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch9 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch9 | Sandilyan | TamilNovel.in

158
0
Read Kadal Pura Part 3 Ch9 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch9 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch9 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 9 : தேவர் இருவர்.

Read Kadal Pura Part 3 Ch9 | Sandilyan | TamilNovel.in

காளத்தி நதியின் முகத்துவாரத்திலிருந்து காலை நேரத்தில் படகில் வந்து கடல் புறாவின் தளத்தில் குதித்த வனிடம் இளையபல்லவன் குரூரமான நடத்தையை எதிர் பார்த்தான், வஞ்சகத்தை எதிர்பார்த்தான், மிதமிஞ்சிய அதிகாரத்தை எதிர்பார்த்தான். இன்னும் பலப்பல விஷயங்களை எதிர்பார்த்தானென்றாலும் அவன் பெயர் கங்கதேவனாயிருக்க முடியும் என்ற ஒன்றை மட்டும் எதிர்பார்க்கவில்லயாகையால், வந்தவன் உச்சரித்த பெயரைக் கேட்டதும் ஒரு விநாடி பிரமித்தே போனான். காக்கை உட்காருவதற்கும் பனம்பழம் விழுவதற்கும் ஏற்படும் எதிர் பாராத ஒற்றுமை போல அமீர் பெயர் கேட்டதும் திடீரெனத் தனக்கு வாய்க்கு வந்த பெயரைச் சொல்லப்போக அதே பெயர் வந்தவனுக்கும் இருந்ததை எண்ணி அந்த விபரீத ஒற்றுமையின் சிந்தனையில் பிரமிப்பு அடைந்ததன்றி உள்ளத்தே சற்று நகைத்துக் கொண்டான் இளையபல்லவன்.

கங்கதேவன் என்ற பெயர் சாதாரணமாகக் கலிங்கத்தார் ஏற்று வந்த பெயராதலால் அமீர் கேட்டதும் அந்தப் பெயரே தனக்கு நினைவுக்கு வந்ததை எண்ணிப்பார்த்த இளைய பல்லவன் இனி எப்பொழுதாவது தனது பெயரை மாற்றிக் கொள்ள அவசியம் நேரிடும் பட்சத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் அபூர்வமான பெயரை வைத்துக்கொள்ள வேண்டு மென்று தன்னைத்தானே எச்சரித்துக் கொண்டான். இப்படி உள்ளத்தே பிரமிப்பும், நகைப்பும், எச்சரிக்கையும் ஏற்பட்ட போதிலும் அதைச் சிறிதும் வெளிக்குக் காட்டாத இளைய பல்லவன், கலிங்கத்தின் அந்தப் படைத்தலைவனுக்குத் தலையை நன்றாகத் தாழ்த்தி வணங்கி, “கலிங்கத்தின் கடற்படைத் தலைவர் வரவால் கடல் புறா பயன்பெற்றது” என்று முகமனும் கூறி அவனை வரவேற்றான்.

காளத்தித் துறைமுகத்திலிருந்து வந்த கங்கதேவன் பெரிய தலையுடனும், பருத்து வீங்கிய இமைகளுடனும், அவற்றில் புதைந்து கிடந்த ஆழமான கண்களுடனும், தடித்த மீசையுடனும் பார்ப்பதற்கு மிகப் பயங்கரமாய் இருந்தான். அவன் இடையே இருந்த நீண்ட வாளும் அது தடவி நின்ற தொடையும்கூடப் பயங்கரத் தோற்றத்தையே தந்தன. கங்க தேவன் இளையபல்லவனைவிட இரண்டடி உயரமாயும் பல அடிகள் பருமனாயும் இருந்ததால் பெரிய ராட்சதனைப் போல் நின்றான் அவன் கடல் புறாவின் தளத்தில்.

அவன் தலைமயிர்கள் கூடக் கன்னாபின்னாவென்று கலைந்து காளத்தி நதி முகத்துவாரத்தில் தெரிந்த கடற்கோரைகளைப் போல மிக முரடாகவே தொங்கிக் கொண்டிருந்ததால் தென் கலிங்க மன்னன் பீமனின் கீழ்த்திசைக் கடற்படைத் தலைவன் சாட்சாத் கொலைகாரன் போலவே காட்சியளித்தான். அவன் அணிந்திருந்த உடை விலை உயர்ந்ததாய் இருந்தாலும் சரியாக அணியப்படாததிலிருந்தும், அந்த உடை கலிங்கத்தின் கடற் படை உடையாக இல்லாமல் வேறு நாட்டு உடையாய் இருந்ததிலிருந்தும் அந்தக் கொலைகாரத் தலைவன், பெயருக்குத்தான் கலிங்கத்தின் கடற்படைத் தலைவனே யொழிய உண்மையில் சுயலாபத்துக்கு உழைக்கும் கொள்ளைக்காரர் குழாத்தையே சேர்ந்தவன் என்பதைப் புரிந்துகொண்ட இளையபல்லவன் அவனிடம் தான் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொண்டான்.

இளையபல்லவன் கங்கதேவனை எடைபோட்டுக் கொண்டிருந்த சமயத்தில் கங்கதேவனும் படைத்தலைவனை எடை போட முற்பட்டுத் தனது ஆழ்ந்த கண்களால் அவனை ஆராய்ந்தான். அந்த ஆராய்ச்சி ஒரே விநாடியில் முடிந்ததும் அவன் கண்கள் கடற் புறாவின் தளத்தை ஒருமுறை சந்தேகத் துடன் துழாவின. பிறகு மிதமிஞ்சிய சந்தேகத்துடன் இளைய பல்லவன் மீது நிலைத்தன. அவன் கன்னங்கள் ஒருமுறை உப்பி அழுந்தவே பெரிய உதடுகள் அசைந்தன. அசைந்த உதடுகளிலிருந்து எழுந்தன கடுங்குரலில் சொற்கள். “நீ யார்?” என்று குற்றவாளியை விசாரிக்கும் நீதிபதியைப்போல் கங்க தேவன் கேட்டாலும், அவன் குரலில் நீதிபதியின் தொனி யில்லை, கொலைகாரத் தொனியே இருந்தது.

இளையபல்லவன் பதில் தயக்கமின்றி வந்தது. “கலிங்கத்தின் கடற்படையின் உபதலைவர்களில் ஒருவன், ஆகவே தங்களுக்கும் அடிமை” என்றான் இளையபல்லவன் மீண்டும் ஒருமுறை தலைவணங்கி.

ஆழ்ந்த சந்தேகக் கண்கள் மறுபடியும் கூர்ந்து நோக்கின இளையபல்லவனை. கேள்வியும் இடிபோல் எழுந்தது. “உன் பெயர்?” என்று கேட்டான் கங்கதேவன்.

இளையபல்லவன் முகத்தில் அடிமைக்களை நன்றாகச் சுடர்விட்டது. “இப்பொழுது சொல்வதற்கில்லை” என்ற அவன் குரலில் போலி அடக்கமும் பயமும் ஒலித்தன.

“ஏன் சொல்வதற்கில்லை?” கங்கதேவன் குரல் கடுமையுடன் ஒலித்தது.
“துணிவில்லை. “

“ஏன் துணிவில்லை?”

“தலைவர் எதிரில் அதைச் சொல்வது தகாது. “

“நீ கூறுவது புரியவில்லை எனக்கு. “

“தலைவர் பெயரைத் தலைவர்தான் உச்சரிக்கலாம். அடிமைகள் உச்சரிக்கலாகாது. “

கங்கதேவனுடைய ராட்சத முகத்தில் திருப்தி பூரணமாக நிலவியது. சின்ன மனிதர்களுக்குப் பெரிய பதவிகளையும் தாங்க முடியாத குணங்களையும் பிறர் அளிக்கும் போது அந்தச் சின்ன மனிதர்கள் முகத்தில் ஏற்படும் அசட்டுப் பெருமை கங்கதேவன் முகத்திலும் படர்ந்தது. விகாரமான அவன் உதடுகள் அகல விரிந்து விகாரமான ஒரு புன்முறுவலையும் காட்டின. “உன் பெயரும் கங்கதேவனா?” என்று ஆச்சரியத்துடன் வினவினான் கங்கதேவன்.

“தலைவர் பெயரைத் தாங்கும் பாக்கியம் அடிமைக்கும் இருக்கிறது” என்று இளையபல்லவன் புன்முறுவல் கொண்டான்.

கங்கதேவன் சற்றுப் பெரிதாக நகைத்தான். “இதுவரை இந்தப் பிராந்தியத்தில் ஒரு கங்கதேவன்தானிருந்தான். இப்பொழுது நீ போட்டிக்கு வந்து விட்டாய். நல்லது, நல்லது” என்று நகைப்பின் ஊடே பேசவும் பேசினான்.
“தலைவருடன் போட்டியிட அடிமைக்கு எந்தத் தகுதியு மில்லை!” என்றான் இளையபல்லவன்.

இளையபல்லவன் தன்னைத் தாழ்த்திச் சொல்லிக் கொண்ட ஒவ்வொரு சமயத்திலும் எதிராளியின் முகம் மலருவதைக் கண்டு உள்ளூரத் திருப்தியே அடைந்தான் இளையபல்லவன். இப்படிச் சில்லறைப் பெருமையிருந்தாலும் வந்தவன் அதிக முட்டாளில்லை என்பதை அடுத்த சில விநாடிகளில் இளையபல்லவன் புரிந்து கொண்டான். இளைய பல்லவன் பெயரைக் கேட்டதும் ஓரளவு திருப்தியைக் காட்டிய கங்கதேவன் அத்துடன் பேச்சை நிறுத்திக்கொண்டு விடுவிடு என்று கடல் புறாவின் தளத்தில் நடக்க முற்பட்டான்.

அந்தத் தளத்தை ஒருமுறை சுற்றி வந்த பிறகு தள்ளிக் கடலில் ஊசலாடி நின்ற மற்ற இரு மரக்கலங்களையும் கவனித்தான். அப்படிச் சுற்றி வருகையிலும் மற்ற மரக்கலங்களைப் பார்வை யிடும் போதும், கடல் புறாவில் இருந்த மாலுமிகளைத் திரும்பத் திரும்ப ஊன்றிப் பார்த்த கங்கதேவன் கண்களில் சந்தேகம் பெரிதும் படர்ந்தது. ஆகவே கடல் புறாவைச் சுற்றி வந்து நடுப் பாய்மரத்தண்டின் அருகே நின்று கொண்ட கங்கதேவன் தன்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த இளைய பல்லவனை நோக்கி, “கங்க தேவ!” என்று அழைத்தான் திடீரென்று.

“தலைவரே!” என்று பணிவுடன் கேட்கும் பாவனையில் நின்று கொண்டான் இளையபல்லவன்.

“இந்த மரக்கலம் நன்றாக இருக்கிறது,” என்றான் கங்கதேவன்.
“உத்தரவு கொடுத்தால் ஒரு திருத்தம் சொல்கிறேன்,” என்று இளையபல்லவன் மன்றாடும் குரலில் கேட்டான்.

“திருத்தமா?” கங்கதேவனின் கரிய பெரிய புருவங்கள் வியப்பால் மேலெழுந்து ஆழத்திலிருந்த கண்களைப் பளிச்சிடச் செய்தன.

“ஆம். ஒரு திருத்தம். தலைவர் உத்தரவிட்டால். “

“என்ன திருத்தம், சொல்?”

“இந்த மரக்கலம் நன்றாக இருக்கிறது என்று சொன்னீர்கள். “

“ஆம். சொன்னேன். “

“இதைவிடச் சிறந்த மரக்கலம் கிழக்குக் கடலில் கிடையாது என்று சொல்லியிருக்க வேண்டும். “

“ஏன்?”

“இதன் எடை மற்ற மரக்கலங்களைப் போல் இருமடங்கு”

“அப்படியானால் வேகம் குறையும். “

“இல்லை , வேகம் நான்கு மடங்கு. “

“அப்படியா?”
“ஆம்! ஆனால் அது மட்டுமல்ல,” என்ற இளைய பல்லவன் ரகசியம் பேசுபவன் போல் குரலைத் தாழ்த்தினான். அக்கம் பக்கத்திலும் பார்த்தான்.

அவன் அப்படித் திருட்டுத்தனமாகப் பார்த்ததிலிருந்து அந்த மரக்கலத்தைப்பற்றி ஏதோ பெரிய மர்மம் இருப்பதை உணர்ந்துகொண்ட கங்கதேவன், “சொல், வேறென்ன?” என்றும் வினவினான்.

“இது பெரிய போர்க்கலம்,” என்று மெதுவாகச் சொன்னான் இளையபல்லவன்.

“அதிலென்ன ரகசியம்? அதுதான் பார்க்கும்போதே தெரிகிறதே,” என்றான் கங்கதேவன்.

“பார்க்கும்போது போர்க்கலம் சாதாரண மனிதனுக்கும் தெரியும். ஆனால் எப்பேர்ப்பட்ட போர்க்கலம் என்பதுதான் தெரியாது. “

“எப்பேர்ப்பட்ட போர்க்கலம்?”

“இது ஒரே சமயத்தில் நான்கு பெரும் போர்க்கலங்களை அழிக்கவல்லது. “

இதைக்கேட்ட கங்கதேவன் முகத்தில் வியப்புக்குறி நன்றாகப் படர்ந்தது. “என்ன! உண்மையாகவா?” என்ற கேள்வியிலும் வியப்பு மண்டிக் கிடந்தது.

“சத்தியமாக” என்றான் இளையபல்லவன் திடமான குரலில். அதைத் தொடர்ந்து, “இல்லாவிட்டால்… ” என்று ஏதோ ஆரம்பித்து, “சரி சரி, அதற்கு இப்பொழுது அவசர மில்லை,” என்று கூறினான்.

“சொல்! இல்லாவிட்டால் என்ன!” என்றும் அதட்டினான் கங்கதேவன்.

“அதை நீங்கள் இந்த மரக்கலத்தின் தலைவரிடம் நாளையோ மறுநாளோ தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்” என்று இளையபல்லவன் பேச்சை மாற்றுவதுபோல் பாசாங்கு செய்தான்.

“ஏன் இப்பொழுது மரக்கலத் தலைவர் பேச மாட்டாரோ?” என்று கேட்டான் கங்கதேவன். “பேசமாட்டார்,” என்று கூறினான் இளையபல்லவன். “நான் பேச வைக்கிறேன் அவனை,” என்று இடியென வார்த்தைகளை உதிர்த்தான் கங்கதேவன்.

“தங்களால் முடியாது,” என்று இளையபல்லவன் சர்வ சாதாரணமாகச் சொன்னான்.

“என்னால் முடியாதா? பார் இப்பொழுது,” என்று கூறி அக்ரமந்திரத்தை நோக்கி நடக்க முற்பட்டான் கங்கதேவன்.

“தலைவர் நிதானமிழக்கக் கூடாது” என்ற இளைய பல்லவனின் சொற்கள் கங்கதேவனைத் தேக்கி நிறுத்தின. அவன் முகத்தில் பயங்கரமான கோபம் அடுத்த விநாடி நிலவியது. “எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?” என்று இடிபோல் இரைந்து அந்தத் தளம் அதிரும்படியாகக் கூவினான்.

“அடிமை சொன்னதைத் தலைவர் புரிந்துகொள்ள வில்லை” என்றான் இளையபல்லவன்.

“புரிந்துகொள்ளும் சக்தி உனக்கிருக்கிறதாக்கும்? இருக்கட்டும். உன் தலைவன் மூளைக்கும் அந்தச் சக்தியைக் கொடுக்கிறேன். “

“அதுதான் முடியாது. “

“ஏன்?”

“தலைவர் இரண்டு நாட்களாக மயக்கத்திலிருக்கிறார். அவருக்கு எதையும் புரிய வைக்க இரண்டு நாளாகும் என்று சிகிச்சை செய்யும் வைத்தியர் சொல்லுகிறார். ஆகவே தற்சமயம் தங்கள் முறைகள் அவர் சம்பந்தப்பட்ட வரையில் பயன்படா. அவர் இந்த நிலையில் இல்லாவிட்டால் கடல் புறா கடல் மோகினியை நோக்கி வந்திருக்கவும் வந்திருக்காது. “
இளையபல்லவன் நிதானமாகவும் பணிவான வருத்தம் தோய்ந்த குரலிலும் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

மெள்ள மெள்ள உள்ள நிலைமையைப் புரிந்துகொண்ட கங்கதேவன் பலவர்மன் உடல்நிலைக்கு என்ன கோளாறு என்பதை வினவவே பாதி உண்மையும் பாதி பொய்யும் கலந்த விவரங்களைச் சொல்ல முற்பட்டான் இளையபல்லவன். கங்கதேவனை நோக்கி, “தலைவரே!” என்று மிகப் பணிவுடன் விவரத்தைத் துவக்கிய இளையபல்லவன் “இந்த அரிய பெரும் மரக்கலம் ஸ்ரி விஜய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ஜெயவர்மரால் தென்கலிங்கநாட்டு மன்னர் பீமதேவருக்காக நிர்மாணிக்கப்பட்டது. சோழநாட்டுக் கடலாதிக்கத்தை உடைக்க பீமதேவர் அளித்த உதவிக்கு நன்றி தெரிவிக்க இந்த அரும்பெரும் மரக்கலம் தயாரிக்கப்பட்டது.

இது தென்கலிங்க மன்னரின் சொந்த உபயோகத்துக்காகப் பாலூர்ப் பெருந் துறைக்குச் செல்கிறது. இதன் சூட்சுமங்கள் பல, யந்திரவசதிகள் பல, இணையற்ற காணிக்கை இது பீமதேவருக்கு. இதைத் தயாரித்தவர்கள் இந்தக் கலையில் தலைமுறை தலைமுறையாகப் பயிற்சியுள்ளவர்கள். சிலர் ஸ்ரி விஜயத்திலுள்ள சீனர்கள். சிலர் கடலோடும் சூளூ இனத்தினர். சிலர் ஸ்ரி விஜயத்தில் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்கள். இதைத் தயாரிக்க ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இதை மன்னரிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஸ்ரி விஜய சாம்ராஜ்யாதிபதி என் தலைவரிடம் ஒப்படைத்தார். வரும் வழயில் கடல் புறா நீங்கள் பார்க்கும் அந்த இரு சோழர் மரக்கலங்களால் தாக்கப்பட்டன.

தலைவர் கடல் புறாவை நடத்தி மிகச் சாமர்த்திய மாகத்தான் போரிட்டார். வெற்றியும் அடைந்தார். ஆனால் போரின் இடையே அவர் தலையில் பாய்ந்து விட்டது ஒரு வேல். அதனால் காயமடைந்து மயக்கமுற்றுப் படுத்திருக் கிறார். இந்த நிலையில் அவரைக் கலிங்கம் கொண்டு செல்ல முடியாதென நினைத்தேன். ஆகவே நீங்களிருக்கும் இந்தக் கடல் மோகினிக்குக் கொண்டு வந்தேன்” என்று கூறினான்.

இளையபல்லவன் பேச்சை நிறுத்தியதும் கங்கதேவன் இதழ்களில் பயங்கரப் புன்முறுவலொன்று படர்ந்தது. “உன் கதை திருப்தியாயிருக்கிறது,” என்று நிதானமாக ஆனால் பயங்கரமாகச் சொன்னான் கடைசியில் கங்கதேவன்.

“கதையா?” இளையபல்லவன் மேலுக்கு வியப்புடனும் உள்ளே ஓரளவு அச்சத்துடனும் கேட்டான்.

“ஆம், கதைதான்,” என்ற கங்கதேவன் சொற்கள் நெருப்புப் பொறிகளென உதிர்ந்தன.

“எப்படிக் கதையாகும் அது?” என்று வினவினான் இளையபல்லவன்.

பதிலுக்குப் பேய்ச் சிரிப்புச் சிரித்தான் கங்கதேவன். “அட முட்டாள், நான் கடல் மோகினியைப் பிடித்துப் பதினைந்து நாட்கள் கூட ஆகவில்லை. இதற்குள் நான் இங்கிருப்பது உனக்கு எப்படித் தெரியும்? உன் சரக்கை என்னிடமே காட்டுகிறாயே, சடமே! உன் வாழ்க்கை இன்றுடன் முடிந்து விட்டது. கங்கதேவனிடம் விளையாடிவிட்டாய் நீ” என்று கோபநகை நகைத்து அந்த நகை ஒலியின் ஊடே சொற்களையும் கொட்டினான்.

அந்தப் பேய்ச் சிரிப்பைச் சிறிதும் லட்சியம் செய்யாத இளையபல்லவன், தலைவர் நிலைமையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை,” என்று சற்றுக் கடுமையாகச் சொன்னான்.
திடீரெனக் கடுமையாகிவிட்ட இளையபல்லவனின் குரலைக் கேட்டதால் சற்று நிதானப்பட்டுச் சிரிப்பை அடக்கிக்கொண்ட கங்கதேவன், “எதைப் புரிந்து கொள்ள வில்லை நான்?” என்று கேட்டான்.

“தாங்கள் இங்குக் கடல் புறாவின் தளத்தில் இருக்கிறீர்கள். “

ஆம், இருக்கிறேன். இருந்தாலென்ன?”

“இந்த மரக்கலத்தின் உபதலைவனை அவமதிப்பாகப் பேசி இருக்கிறீர்கள். “

“பேசினேன், இன்னும் பேசுவேன். “

“கொல்வதாகவும் பயமுறுத்தியிருக்கிறீர்கள். “

“பயமுறுத்தலல்ல, செய்து காட்டுவேன். “

“அதற்குமுன்… ”

“சொல், முட்டாள். “

“இந்த மரக்கலத்தைவிட்டுச் செல்லவிட மாட்டேன், அது மட்டுமல்ல… ”

“கொன்று விடுவாயோ?”

“தற்காப்புக்கு அதைச் செய்வதும் தவறாகாது. “
இளையபல்லவன் கடைசி வார்த்தைகள் தயக்கமின்றி, திடமாக இருந்ததைக் கவனித்த கங்கதேவன் சற்று நிதானப் படுத்திக் கொண்டு, “இப்பொழுது என்ன செய்ய உத்தேசிக் கிறாய்?” என்று வினவினான்.

அவன் உள்ளத்தில் திகில் மூண்டுவிட்டதைக் கவனித்தான் இளையபல்லவன். பார்ப்பதற்குப் பயங்கரமா யிருக்கும் கங்கதேவன் உண்மையில் ஓரளவு கோழை என்பதை உணர்ந்து கொண்டான். ஆகவே அதற்குமேல் சம்பாஷணையை நீட்ட இஷ்டப்படாமல் பணிவான குரலில் சொன்னான்: “தலைவர் தவறாக நினைக்கக் கூடாது. பதற்றத்தில் பேசிவிட்டேன். எங்கள் மரக்கலத் தலைவர் நிலையைப் பார்த்தால் நான் சொன்னதனைத்தும் உண்மை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். “

தலைவன் அறையைக் காட்டச் சொல்லி, கங்கதேவன் இளையபல்லவனைத் தொடர்ந்து சென்றான். அக்ரமந்திரத் துக்குள் நுழைந்ததும் அங்கு நினைவிழந்து கிடந்த பலவர்மனை நீண்ட நேரம் உற்று நோக்கினான் கங்கதேவன். பலவர்மனை நோக்க நோக்க கங்கதேவனின் ஆழ்ந்த விழிகள் அதிகமாக உள்ளே பதுங்கி விபரீதமாகக் காட்சியளித்தன.

“இவனை எனக்குத் தெரியும். நன்றாகத் தெரியும். இந்தத் துரோகியா இந்த மரக்கலத்தின் தலைவன்!” என்று உதடுகள் உறுமின. பிறகு மெல்ல கங்கதேவன் விழிகள் இளைய பல்லவனை நோக்கித் திரும்பின. இருவர் விழிகளும் சில விநாடிகள் சந்தித்தன. உண்மை கங்கதேவனும் போலி கங்கதேவனும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டதற்கான பொருள் அந்தக் கலந்த பார்வையில் தெரிந்தது. மீண்டும் ஓர் ஆபத்தைச் சமாளிக்க அவசியமேற்பட்டு விட்டதை இளையபல்லவன் புரிந்துகொண்டான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch8 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch10 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here