Home Manipallavam Read Manipallavam Part 1 Ch1 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 1 Ch1 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

156
0
Read Manipallavam Part 1 Ch1 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli part 1,nithiliavalli part 2,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 1 Ch1 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 1 Ch1 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – தோரண வாயில்

அத்தியாயம் 1 : இந்திர விழா

Read Manipallavam Part 1 Ch1 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – எழுதியவன் கதை

இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது.

நமது இலக்கியங்களில் வரலாற்றுக் காலத்துப் பூம்புகார் நகரம் கம்பீரமான வருணனைகளால் போற்றிப் புகழப்பட்டிருப்பதைப் பலமுறை படித்திருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக் காட்டிலும் நகர்ப் பரப்பினாலும் பிற பெருமைகளாலும் பூம்புகார் நகரம் சிறப்புற்றிருந்ததாகச் சொல்லுகிறார்கள். இலக்கியங்களிலும் காவியங்களிலும் படித்துப் படித்து மனக்கண்ணால் கண்டிருந்த பூம்புகார் நகரம் என்னை ஏற்கெனவே மயக்கியிருந்ததென்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை எழுதியதனால் அந்த மயக்கம் இன்னும் வளர்ந்ததே ஒழியக் குறையவில்லை.

போர்க்களங்களில் வில்லும் வேலும் வாளும் கேடயமும் ஏந்திச் செய்கிற போரைப் போலவே வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரின் சந்திகளிலும் சதுக்கங்களிலும் பல்வேறு சமயவாதிகள் அறிவுப் போர் நடத்திக் கொண்டிருந்ததாக நூல்களில் படித்திருக்கிறோம். புகழும் பெருமையும் மிக்க அந்த அறிவுப் போரில் இந்தக் கதாநாயகனும் ஈடுபடுகிறான். வெற்றி பெறுகிறான்.

இந்தக் கதாநாயகனின் வாழ்க்கை ஓர் அழகிய தத்துவம். சுரமஞ்சரியிலிருந்து முகுந்தபட்டர் வரை எல்லாரும் கதாநாயகனாகிய இளங்குமரனுக்குத் தோற்றுப் போவதாக அவனிடமே சொல்கிறார்கள். அவனோ யாரையுமே வென்றதாக ஒப்புக் கொள்ள மாட்டேனென்கிறான். இறுதிவரை பிடிவாதமாக அன்பு செய்து அவனை வென்றவளாகிய சுரமஞ்சரியும் கூட தான் வெற்றி பெற்றதை மறந்து அவனுக்குத் தோற்றதாகவே அவனிடம் சொல்கிறாள். உடம்பினாலும் தோற்றத்தாலும் மட்டுமல்லாமல் குணங்களாலும் மிக அழகியவன் இந்தக் கதாநாயகன். குணங்களாலும் அழகுடையவர்கள் காதலிக்கத் தகுந்தவர்கள். இந்தக் கதையில் எல்லாக் கதாபத்திரங்களுமே இளங்குமரனுடைய குண அழகை ஏதோ ஒரு வகையில் ரசிக்கிறார்கள். வீரத்தையே ஒரு தவமாகச் செய்யும் நீலநாகர், பிடிவாதமாக அன்பு செய்து தளரும் முல்லை, தீமைகளின் எல்லையில் போய் நிற்கும் பெருநிதிச் செல்வர் நகைவேழம்பர், இளங்குமரனுடைய முழு வாழ்க்கையையுமே தன்னையறியாமல் தற்செயலாக வரைந்து முடித்து விடுகிற ஓவியன் மணிமார்பன், நல்லவற்றுக்குப் பாதுகாப்பு அளிப்பதே ஒரு தவம் என்று எண்ணும் அருட்செல்வர் எல்லாரும் இதில் உயிர்க்களையோடு நன்கு உரம்பெற்று நடமாடுகிறார்கள்.

ஆனாலும் இந்தக் கதையில் படிப்பவர்கள் எல்லாரையும் ஒருங்கே கவர்கிற கதாபாத்திரம் சுரமஞ்சரியாகத்தான் இருப்பாள். இளங்குமரனுக்காக ஏங்கி ஏங்கி உருகி அவள் எல்லாவற்றையும் இழந்து விட்டுக் கடைசியாக அவனைப் பற்றிய விருப்பத்தை மட்டும் இழக்க இயலாமல் அவன் பாதங்களில் வீழ்ந்து கண்ணீர் பெருக்கி – “இந்தப் பாதங்களைத் தொழுவதைத் தவிர எனக்கு வேறு செல்வங்கள் வேண்டியதில்லை” – என்று அவனோடு கீழிறங்கி நடக்கும் இடம் மெய்சிலிர்க்கச் செய்வது இந்தக் கதைக்கும் கதாநாயகனுக்கும் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரம் இத்தனை முழுமையாகக் கனிந்த நிலையில் கிடைத்ததற்காக வாசகர்களும், எழுதியவனும் நிச்சயமாகப் பெருமைப்பட முடியும். அவளுடைய பரிசுத்தமான மனச்சாட்சியை மதிப்பதற்கு மண்ணுலகத்து மதிப்பீடுகள் போதாதென்றாலும் முடிந்தவரை மதித்தாக வேண்டிய கடமை நமக்கு உண்டு. “பிறருக்காக நம்மை இழந்து விடுவதில் ஒரு சுகம் இருக்கிறது” என்று இளங்குமரன் தன் கல்வி, தவம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது சுரமஞ்சரிக்குத் தன்னைக் கொடுக்கிறான். இவ்வளவு நல்ல கதாபாத்திரமாக வாய்த்ததற்காக இந்தக் கதாசிரியனும் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்றி செலுத்தியாக வேண்டும். இந்த நாவலை அந்த அழகிய கதாபாத்திரத்திற்குச் சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறெந்த வகையிலும் அந்த நன்றியைச் செலுத்த முடியாது என்பதால் இந்த நாவலைச் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரமே அடைவதாகப் பாவித்துக் கொள்கிறேன். கல்கியில் படிக்கும்போது, பல்லாயிரக்கணக்கான வாசகர்களும் இதையே வரவேற்றார்கள். புத்தகமாகப் படிக்கும் பேறு பெற்றவர்களும் இப்படியே வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்; நம்புகிறேன்.

இதைத் தொடர்கதையாக வெளியிடுவதில் பலவிதத்திலும் அன்புடன் ஒத்துழைத்த கல்கி அதிபர். திரு. சதாசிவம் அவர்களுக்கும், காரியாலயப் பெருமக்களுக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். கடைசியாக ஒரு வார்த்தை. இந்த நாவல் பொழுது போக்கிற்கு மட்டுமன்று, சிந்தனைக்கும் சேர்த்துத்தான். இதில் அழகு எவ்வளவு உண்டோ அவ்வளவிற்கு ஆழமும் உண்டு. படிப்பவர்கள் அந்த நோக்குடன் இதைப் படிக்க வேண்டும்.

மணிபல்லவம் – முதல் பருவம்
தோரணவாயில்

பூரணமான இந்தக் கதை மாளிகையின் தோரணவாயிலில் ஆவல் பொங்க நிற்கும் வாசக அன்பர்களுக்குச் சில வார்த்தைகள்; சற்றே கண்களை மெல்ல மூடிக் கொள்ளுங்கள்! மணிமேகலையும், சிலப்பதிகாரமும் நிகழ்ந்த காலத்துப் பூம்புகார் நகரத்தையும், மதுரையையும், வஞ்சி மாநகரையும் ஒரு விநாடி உருவெளியில் உருவாக்கிக் காணுங்கள். பழைய பெருமிதத்தோடு சார்ந்த எண்ணங்களை நினைத்துக் கொண்டே காணுங்கள்.

அடடா! எவ்வளவு பெரிய நகரங்கள். எத்துணை அழகு! மாட மாளிகைகள் ஒரு புறம், கூட கோபுரங்கள் ஒருபுறம். சித்திரப் பொய்கைகள் ஒருபுறம், செந்தமிழ் மன்றங்கள் ஒருபுறம். பல பல சமயத்தார் கூடி வாதிடும் சமயப் பட்டிமன்றங்கள் ஒருபுறம். கோவில்கள், கோட்டங்கள், ஆற்றங்கரைகள், கடற்கரைகள், பெருந்தோட்டங்கள், பூம்பொழில்கள் – நினைப்பில் அளவிட்டு எண்ணிப் பார்க்க இயலாத பேரழகு அல்லவா அது! சங்குகள் ஒலி விம்ம, மகரயாழும் பேரியாழும் மங்கல இசை எழுப்ப, மத்தளம் முழங்க, குழலிசை இனிமையிற் குழைய, நகரமே திருமண வீடு போல், நகரமே நாளெல்லாம் திருவிழாக் கொண்டாடுவது போல் என்ன அழகு! என்ன அழகு! சொல்லி மாளாத பேரழகு! சொல்லி மீளாத பேரழகு!

நம் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடித்த பழமையை நினைக்கும் போது, எவ்வளவு பெருமிதமாக இருக்கிறது. இன்று அந்தப் பழம்பெரும் நகரங்களையும் அவற்றின் அரச கம்பீர வாழ்வையும் நினைக்கும்போது நீங்கள் உணர்வதென்ன? விழிகளில் கண்ணீரும், நெஞ்சில் கழிவிரக்க நினைவும் சுரக்க, உருவெளியில் அந்த மாபெரும் நகரங்களைக் கற்பனை செய்து காண முயலும் போது உங்கள் செவிகள் அவற்றில் ஒலித்த இன்னொலிகளைக் கேட்கவில்லையா? உங்கள் நாசியில் அகிற்புகை, சந்தனம், நறுமண மலர்கள் மணக்கவில்லையா? உங்கள் சிந்தனை அவற்றின் வளமான பெருவாழ்வை நினைக்கவில்லையா? அத்தகைய பெருநகரங்களின் செழிப்பு நிறைந்த வாழ்வினூடே நமது கதை நுழைந்து செல்கிறது என்பதற்காக நாம் பெருமிதம் கொள்ளலாம் அல்லவா?

தமிழகத்தில் சரித்திர நாவல்கள் என்றால் அரசர், அரசி, படைவீரர், படைத்தலைவர், அமைச்சர் என்று கதாபாத்திரங்களை வகுத்துக் கொண்டு எழுதுவதே இது வரை வழக்கம். இதனால் ஆண்ட வாழ்வின் ஒரு பகுதி ஒளி நிறுவிக் காட்டப்பட்டதே தவிர ஆளப்பட்ட வாழ்வு என்ற பெரும் பகுதி விவரிக்கப் பெறவில்லை. பேரரசர் பலர் போர்கள் செய்து வெற்றி வாகை சூடி வீர வாழ்வு வாழ்ந்தும், அரசவையில் அரியணையில் அமர்ந்தும், பீடுறக் காலங் கழித்த நாளில் அவர்கள் அங்ஙனம் காலங்கழிக்கக் காரணமான மக்களும் பல்லாயிரவர் வாழ்ந்திருக்கத்தானே வேண்டும்?

அந்த மக்களிலும் வீரர்கள் இருந்திருப்பார்கள். பல்வேறு சமயச் சார்புள்ள விதவிதமான மக்கள் விதவிதமாக வாழ்ந்திருப்பார்கள். ஈடு சொல்ல முடியாத அழகர்கள் இருந்திருப்பார்கள். அரச குலத்து நங்கையரை அழகிற் புறங்காணும் பேரழகிகள் இருந்திருப்பார்கள். அவர்களிடையே நளினமான உறவுகள், காதல், களிப்பு எல்லாம் இருந்திருக்கும். வாழ்க்கைப் போராட்டங்கள் இருந்திருக்கும். ஆனால் பெரும்பான்மையானதும், சரித்திரத்தை உண்டாக்கியதும், சரித்திரத்தின் பொன்னேடுகளில் நாயகம் கொண்டாடும் பேரரசர்களை அப்படிப் பேரரசர்களாக ஆக்கியதுமான இந்த மக்கள் கூட்டத்தின் மேல் வரலாற்று நாவலாசிரியர்கள் எந்த அளவு ஒளியைப் படர விட்டார்கள்? எந்த அளவு கவனம் செலுத்த முயன்றார்கள்?

பழைய வாழ்வின் இந்த அழகிய பகுதி மறைந்தே இருக்கிறது. மணிபல்லவம் கதையின் முக்கிய நோக்கங்களில் இந்த அழகிய வாழ்க்கையைப் புனைந்து கூற முயல்வதும் ஒன்று. மணிபல்லவம் கதையின் நாயகன் ஓர் அற்புதமான இளைஞன். காவிரிப்பூம் பட்டினத்துப் பொது மக்களிடையே வாழ்ந்து வளர்ந்து அழகனாய், அறிஞனாய், வீரனாய், உயர்ந்து ஓங்குகிறவன். பருவத்துக்குப் பருவம் அவனுடைய விறுவிறுப்பான வாழ்வில் மாபெரும் மாறுதல்கள் நிகழ்கின்றன. அதனால் இந்தக் கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் பாகம் என்று பெயரிடாமல் கதாநாயகனின் வாழ்க்கை மாறுதல்களை மனத்திற்கொண்டு பருவம் என்று பெயரிடுகிறேன். கதாநாயகனின் வாழ்வில் நிகழும் பெரிய பெரிய மாறுதல்களுக்கு எல்லாம் மணிபல்லவத் தீவு காரணமாகிறது. அவனுடைய வாழ்வில் இறுதி வரை விளங்கிக் கொள்வதற்கு அரிதாயிருக்கும் மிகப்பெரிய மர்மம் ஒன்றும் மணிபல்லவத்தில்தான் விளங்குகிறது. அந்த மெய் அவன் கண்களைத் திறக்கிறது. தன்னைப் பற்றிய பரம இரகசியத்தை அன்று அங்கே அவன் விளங்கிக் கொள்கிறான்.

இன்னும் இந்தக் கதையில் எழில் நிறைந்த பெண்கள் வருகிறார்கள். ஆனால், அவர்கள் அரசகுல நங்கையரில்லை. காதலும், வீரமும், சோகமும், இன்பமும், சூழ்ச்சியும், சோதனையும் வருகின்றன. ஆனால், அவை அரண்மனைகளையும் அரச மாளிகைச் சுற்றுப்புறங்களையும் மட்டும் சார்ந்து வரவில்லை. போரும் போட்டியும் வருகின்றன. ஆனால் அவை மணிமுடி தரித்த மன்னர்களுக்கிடையே மண்ணாசை கருதி மட்டும் வரவில்லை. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெருங் காவியங்கள் பிறக்கக் காரணமாயிருந்தோர் இலக்கிய காலச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு அந்தப் பெருங்கதையில் கண்ட மிகப்பெரியதும் அளப்பரியதுமான பூம்புகார் நகரை உங்கள் கண்பார்வையிற் கொண்டு வந்து காட்ட முயல்கிறேன்.

அதோ!

சிறப்பு மிக்க சித்திரை மாதம். காவிரிப்பூம் பட்டினம் இந்திர விழா கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. எங்கும் இனிய ஒலிகள், எங்கும் அலங்காரப் பேரொளி. எங்கும் மணமலர், அகிற்புகை வாசனை. எங்கும் மக்கள் வெள்ளம். காவிரி கடலோடு கலக்கும் சங்க முகத்தில் விழாக் கூட்டம். எங்கு நோக்கினும் யானைகளிலும், குதிரைகளிலும், தேரிலும், சித்திர ஊர்திகளிலும் விரையும் மக்கள். கடல் முடிந்து கரை தொடங்குமிடத்தில் மற்றொரு கடல் தொடங்கி ஆரவாரம் செய்வது போல் அலை அலையாய் மக்கள் குழுமியிருக்கின்றனர். மஞ்சளும் சிவப்புமாய் வண்ண வண்ண நிறம் காட்டும் மாலை வானத்தில் கோல எழில் குலவும் வேளை, அடங்கிய பொழுது, அமைந்த நேரம். அந்த நேரத்தில் அந்த விழாக் கோலங்கொண்ட கடற்கரையில் ஒரு பரபரப்பான இடத்தில் பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய கதாநாயகனைச் சந்திக்கிறோம். கதை தொடங்குகிறது. கதை மாளிகைக்குள்ளே நுழையலாம், வாருங்கள்.

இந்திர விழா

பூம்புகார் நகரம் புது விழாக் கோலம் பூண்டு எழிலுடன் விளங்கிய சித்திரை மாதத்தில் சிறப்பு வாய்ந்த சித்திரை நாள். வானத்தின் கீழ் மூலையில் வெண்மதி முழு நிலா விரித்துக் கொண்டிருந்தது. ‘இந்திர விழா தொடங்குகிறது’ என்று வச்சிரக் கோட்டத்து முரசம் ஒலி பரப்பிய போதே அந்தப் பேரூர் விழாவுக்கான புதுமையழகுகளைப் புனைந்து கொள்ளத் தொடங்கிவிட்டது. விழாவுக்கான புத்துணர்வும் புது மகிழ்வும் பெற்று விட்டது.

அடடா! அதோ, காவிரி கடலோடு கலக்கும் காவிரி வாயிற் சங்கமத் துறையில் தான் எவ்வளவு பெருங்கூட்டம். கடலுக்கு அது கரை. ஆனால் அந்தக் கரைக்குக் கரையே இல்லாதது போல் மக்கள் திரண்டிருந்தனர். ஆடவரும், பெண்டிரும், இளைஞரும், முதியவரும், சிறுவரும், சிறுமியருமாக அழகாகவும் நன்றாகவும் அணிந்தும், புனைந்தும், உடுத்தும் வந்திருந்தனர். நோக்குமிடம் எங்கும் நிருத்த கீத வாத்தியங்களின் இனிமை திகழ்ந்தது. இந்திர விழாவுக்காக எத்தனை விதமான கடைகள் காவிரிப்பூம்பட்டினத்தில் உண்டோ, அவ்வளவும் கடற்கரைக்கு வந்திருந்தன. இன்ன இன்ன கடையில் விற்கப்படும் பொருள்கள் இவையிவை என்பதை அறிவிக்க ஏற்றிய பல நிறக் கொடிகள் வீசிப் பறந்து கொண்டிருந்தன. பூவும் சந்தனமும் கூவிக் கூவி விற்கும் மணம் நிறைந்த பகுதி, பொன்னும் மணியும் முத்தும் பவழமும் மின்னும் ஒளி மிகுந்த கடைகள், பிட்டு விற்கும் காழியர்களின் உணவுக்கடைகள், பட்டுந் துகிலும் பகர்ந்து விற்கும் கடைகள், வெற்றிலை விற்கும் பாசவர்களின் கடைகள், கற்பூரம் முதலிய ஐந்து வாசனைப் பொருள்களை விற்கும் வாசவர் கடைகள் – எல்லாம் நிறைந்து கொடுப்போர் குரலும், கொள்வோர் குரலுமாகப் பேராவாரம் மிகுந்து கடற்கரை கடைக்கரையாகவே மாறியிருந்தது. செல்வச் செழிப்பு மிக்க பட்டினப்பாக்கத்து மக்களும், மருவூர்ப்பாக்கத்து மக்களும் கழிக்கரைகளில் வசித்து வந்த யவனர்களும், எல்லோரும் கடற்கரையிலே கூடிவிட்டதனால் நகரமே வறுமையடைந்து விட்டாற் போல் வெறுமை பெற்றிருந்தது. நாளங்காடித் தெருவிலுள்ள பூத சதுக்கத்துக் காவற் பீடிகையில் மட்டும் பொங்கலிடுவோர் கூட்டம் ஓரளவு கூடியிருந்தது. அது தவிர, மற்றெல்லாக் கூட்டமும் கடற்கரையில்தான்!

அவ்வழகிய கடற்கரையின் ஒரு கோடியில் மற்போர் நடந்து கொண்டிருந்த இடத்தில் பரபரப்பு அதிகமாயிருந்தது. கூத்து, இசை, சமய வாதம் முதலியனவெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்த அரங்கங்களை விட மற்போர் அரங்கத்தில், ஆர்வம் காரணமாக ஆண்களும் பெண்களுமான இளவயதினர் மிகுந்து கூடியிருந்தனர். முழுமதியின் ஒளி பரவும் வெண்மணற் பரப்பில் பலவகைக் கோலங்களைப் பாங்குறப் புனைந்து நின்றிருந்த பட்டினப் பாக்கத்துச் செல்வ நங்கையர் கந்தருவருலகத்து அரம்பையர் போல் காட்சியளித்தனர். எட்டி, காவிதி போன்ற பெரும்பட்டங்கள் பெற்ற மிக்க செல்வக் குடும்பத்து இளநங்கையர் சிலர் பல்லக்குகளில் அமர்ந்தவாறே திரையை விலக்கி மற்போர் காட்சியைக் கண்டு கொண்டிருந்தனர். அவர்கள் செவ்விதழ்களில் இளநகை அரும்பிய போதெல்லாம், எதிர்ப்புறம் நின்றிருந்த பூம்புகார் இளைஞர் உள்ளங்களில் உவகை மலர்ந்தது. பொன்னிறத்துப் பூங்கரங்களில் வளைகள் ஒலித்த போதெல்லாம் அங்கே கூடியிருந்த இளைஞர் நினைவுகளிலும் அவ்வொலி எதிரொலித்தது. அவர்கள் மென்பாதங்களில் மாணிக்கப்பரல் பொதித்த சிலம்பு குலுங்கின போதெல்லாம் இளைஞர் தம் தோள்கள் பூரித்தன. அல்லிப் பூவின் வெள்ளை இதழில் கருநாவற்கனி உருண்டாற் போல் அவர்கள் விழிகள் சுழன்ற போதெல்லாம் இளைஞர் எண்ணங்களும் சுழன்றன. மற்போரும் களத்தில் நடந்து கொண்டு தான் இருந்தது.

ஆனால், இவற்றையெல்லாம் அலட்சியம் செய்தவன் போல் ஒதுங்கி நின்று கொண்டிருந்த தீரன் ஒருவனும் அந்தக் கூட்டத்தில் இருந்தான். கூட்டத்தில் அவன் நின்ற இடம் தனியாய்த் தெரிந்தது. கைகளைக் கட்டியவாறு கம்பீரமாக நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்த அழகிய இளைஞன் பார்வையிலிருந்தும் நின்ற விதத்திலிருந்தும் தான் எதற்கும் அஞ்சாதவன், எதற்கும் கவலைப்படாதவன் என்று தன்னைப் பற்றி அனுமானம் செய்து கொள்ள வைத்தான். அவனுக்குப் பணிந்து வணக்கம் செய்யக் கூடியவர்கள் போல் தோற்றமளித்த நாலைந்து விடலைத்தனமான இளைஞர்களும் அவனைச் சூழ்ந்து நின்றனர். செந்தழல் போல் அழகிய சிவப்பு நிறமும், முகமும் எழில் வடிந்த நாசியும், அழுத்தமான உதடுகளும் அவனுடைய தோற்றத்தைத் தனிக் கவர்ச்சியுடையதாக்கிக் காட்டின. அமைந்து அடங்கிய அழகுக் கட்டு நிறைந்த உடல், அளவான உயரம், மிகவும் களையான முகம், இவற்றால் எல்லோரும் தன்னைக் காணச் செய்து கொண்டு, தான் எதையுமே காணாதது போல் மற்போரை மட்டும் கவனித்துக் கொண்டு நின்றான் அந்த இளைஞன். இணையற்ற அழகுக்குச் சரிசமமாக அவனுடைய விழிகளின் கூரிய பார்வையில் அஞ்சாமையின் சாயல் அழுத்தமாகத் தெரிந்தது. ‘இவன் நம் பக்கம் சற்றே விழி சாய்த்துப் பார்க்க மாட்டானா?’ என்று முறுவலுக்கும், வலையொலிக்கும் சொந்தக்காரர்கள் ஏங்க, எதற்குமே தான் ஏங்காதவன் போல் மற்போரில் கவனமாக நின்றிருந்தான் அந்த இளைஞன். ஏக்கங்களைப் பலருக்கு உண்டாக்கிக் கொண்டு நிற்கிறோம் என்பதையே உணராதவன் போல் சிறிதும் ஏங்காமல் நின்றான். ஆசைகளுக்கும் ஆசைப்படுகிற அழகாகத் தெரியவில்லை அது! ஆசைகளையே ஆசைப்பட வைக்கிற அழகாகத் தோன்றியது. அவ்வளவிற்கும் ஆடம்பரமான அலங்காரங்கள் எதுவும் அவனிடம் காட்சியளிக்கவில்லை. முத்தும், மணியும், பட்டும் புனைவுமாகச் செல்வத் திமிரைக் காட்டிக் கொண்டு நின்ற பட்டினப்பாக்கத்து இளைஞர்களின் தோற்றத்திலிருந்து வேறுபட்டு எளிமையாகத் தோன்றினான் அவன். அவனைச் சுற்றி சீடர்கள் போல் நின்ற இளைஞர்கள் இடையிடையே மற்போர் பற்றி உணர்ச்சி வசப்பட்டு அவனிடம் ஏதோ கூறிய போதெல்லாம் ‘சிறிது பொறுத்திருங்கள்’ என்று பதறாமல் மெல்லக் கூறினானே தவிர, அவன் உணர்ச்சி வசப்படவில்லை. ஆனால் மற்போரை நன்கு கூர்ந்து கவனித்து வந்தான். மற்போரை உற்சாகப்படுத்தி நடுநடுவே கூட்டத்தினர் ஆரவாரக் குரலொழுப்பிய போது அதிலும் அவன் கலந்து கொள்ளவில்லை. அலட்சியமான புன்னகை மட்டும் அவனது சிவந்த இதழ்களில் ஓடி மறைந்தது.

மிகவும் வலிமை வாய்ந்த யவன மல்லன் ஒருவன் களத்தில் வெற்றியோடு போர் புரிந்து கொண்டிருந்தான். போர் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து அவனே வென்று கொண்டிருந்தான். அதே களத்தில் மூன்று தமிழ் மல்லர்களையும் நாகர் இனத்தைச் சேர்ந்த இரண்டு மல்லர்களையும் தோற்கச் செய்து அந்த வெற்றியாணவத்தில் மேலும் அறைகூவி ஆட்களை அழைத்துக் கொண்டிருந்தான் யவன மல்லன். அவனுடைய முகத்திலும் தோள்களிலும் வெற்றி வெறி துடித்தது. செருக்கின் சாயல் தெளிவாய்த் தெரிந்தது. காரணம் அவனால் தோல்வியடைந்த மூன்று தமிழ் மல்லர்களும் சோழ நாட்டிலே சிறந்த மற்போர் வீரர்களெனப் பெயர் பெற்றவர்கள். வெற்றியில் பெருமிதம் தான் இருக்கிறது. ஆனால் வல்லவர்களை வெல்லுவதில் பெருமிதத்தைக் காட்டிலும் இன்னதென்று கூற இயலாததொரு பேருணர்வும் இருக்கிறது. அந்தப் பேருணர்வில் திளைத்த யவன மல்லன் அறைகூவல் என்ற பேரில் என்னென்னவோ பேசினான். சோழ நாட்டு ஆண்மையையே குறைத்துக் கூறுகிற அளவு அவனிடமிருந்து சொற்கள் வெளிப்பட்டன. அவனுடைய அறைகூவலில் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ் இனத்து ஆண்மை இகழப்படுவதை உணராமலோ அல்லது உணர்ந்தும் வேறு வழியின்றியோ கூடியிருந்த பட்டினப்பாக்கத்துச் செல்வர்களும் செல்வியர்களும் குலுங்கக் குலுங்க நகைத்துக் களிப்படைந்து கொண்டிருந்தனர்.

அப்படிக் களித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் கணீரென்று ஒலி முழக்கி நகைப்புக்களை அடக்கி மேலெழுந்தது அந்த கம்பீரமான ஆண்மைக் குரல்!

“பிதற்றாதே! நிறுத்து!” – பாய்கின்ற புலிபோல் திரும்பி இந்த இரண்டு சொற்களுக்கும் உரியவன் யார் என்று காணக் கண்களைச் சுழற்றினான் யவன மல்லன். அவனுடைய விழிகள் மட்டுமா சுழன்றன? அல்ல. அங்கே கூடியிருந்த வேல்விழி நங்கையர்கள், நாகரிக நம்பியர்கள் அனைவர் பார்வையும் இந்தத் துணிவான சொற்களைப் பிறப்பித்தவனைத் தேடி விரைந்தன! ஆவலோடு பாய்ந்தன.

அவன் தான்! அந்த அழகிய இளைஞன் இயல்பாகச் சிவந்த தன் முகமே மேலும் சிவக்க நின்றான். அவனுடைய வனப்பு வாய்ந்த கூர் விழிகளில் துணிவின் ஒளி துள்ளியது. தோளோடு போர்த்திருந்த ஒரு பழைய பட்டுப் போர்வையை விலக்கிச் சற்றே கிழிந்த மேலங்கியையும் கழற்றிவிட்டுக் கட்டமைந்த செம்பொன் மேனி சுடர்விரிக்க அவன் முன் வந்தான்; அப்போது அவனுடைய தோள்களில் எத்தனை நூறு வேல்விழிகள் தைத்திருக்கும் என்று அளவிட்டு உரைப்பதற்கில்லை. அந்த ஒரு விநாடி வேல்விழி நங்கையர் அனைவரும் கண்கள் பெற்ற பயனைப் போற்றியிருப்பார்கள். பெண்களாகப் பிறந்ததற்காகவும் நிச்சயமாகப் பெருமை கொண்டிருப்பார்கள். யவன மல்லனை நோக்கி வீரநடை பயின்ற அவனை “இளங்குமரா நிதானம்! அவன் முரடன்!” என்று அவன் அருகில் நின்ற இளைஞர்களில் ஒருவன் எச்சரிக்கை செய்து கூவியதிலிருந்து அவன் பெயர் இளங்குமரன் என்பது அங்கிருந்தவர்களுக்குத் தெரிந்தது. அவன் முகத்துக்கும் தோளுக்கும் பரந்த மார்புக்கும் தன் நெஞ்சையும், நினைவுகளையும் தோற்கக் கொடுத்த பட்டினப்பாக்கத்துப் பெருஞ் செல்வ மகள் ஒருத்தி பல்லக்கிலிருந்தவாறே அந்தப் பெயரை இதழ்கள் பிரிய மெல்லச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். அவள் இதழ் எல்லையில் அப்போது இளநகை விளையாடியது. நெற்றியிலும், கருநீல நெடுங்கண்களிலும், மாம்பழக் கன்னங்களிலும் நாணம் விளையாடியது. நெஞ்சில் பரவசம் விளையாடிக் கொண்டிருந்தது.

“வசந்தமாலை! எவ்வளவு அழகான பெயர் இது. நீ கேட்டாயல்லவா!” – என்று பல்லக்கில் எதிரேயிருந்த தோழியை வினவினாள் அந்தச் செல்வ மகள். தோழி பொருள் நிறைந்த நகை புரிந்தாள். இதற்குள் களத்தில் அந்த இளைஞனும் யவன மல்லனும் கைகலந்து போர் தொடங்கியதால் எழுந்த ஆரவாரம் அவர்கள் கவனத்தைக் கவரவே, அவர்களும் களத்தில் கவனம் செலுத்தலாயினர். ‘இவ்வளவு திறமையாக மற்போர் செய்யத் தெரிந்தவனா இதுவரை ஒன்றுந் தெரியாதவனைப் போல் நின்று கொண்டிருந்தான்?’ என்று கூடியிருந்தவர்களை வியக்கச் செய்தது இளங்குமரன் என்று அழைக்கப்பட்ட அந்த இளைஞனின் வன்மை! மின்னல் பாய்வது போல் தன் பொன்நிறக் கரங்களை நீட்டிக் கொண்டு அவன் பாய்ந்து தாக்கிய போதெல்லாம் யவன மல்லனுக்கு விழி பிதுங்கியது. இளங்குமரனை உற்சாகமூட்டி அவனுடன் இருந்த இளைஞர்கள் கைகளை ஆட்டியவாறே ஆரவாரம் செய்து கூவினர்.

இந்தச் சமயத்தில் சித்திரப் பல்லக்கிலிருந்த பட்டினப் பாக்கத்து இளநங்கை தன் தோழி வசந்தமாலையை நோக்கி இனிய குரலில் யவன மல்லனைத் திணறச் செய்யும் அவன் புகழை வாய் ஓயாமல் கூறிக் கொண்டிருந்தாள்.

“நீங்கள் எதையுமே அதிகமாகப் புகழும் வழக்கமில்லையே. இன்றைக்கு ஏனோ இப்படி…?” என்று தொடங்கிய அவள் தோழி வசந்தமாலை, சொற்களில் சொல்ல ஆரம்பித்ததைச் சொற்களால் முடிக்காமல் தன் நளினச் சிரிப்பில் முடித்து நிறுத்தினாள்.

களத்தில் மற்போர் விறுவிறுப்பான நிலையை அடைந்திருந்தது. இருவரில் வெற்றி யாருக்கு என்று முடிவு தெரிய வேண்டிய சமயம் நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லோருடைய உள்ளமும் அந்த விநாடியை ஆவலோடு எதிர்கொள்ளத் தவித்துக் கொண்டிருந்தது. இன்னாரென்று தெரியாமல் இன்ன காரணம் என்று விளங்காமல் எல்லாருடைய மனத்திலும் அனுதாபத்தைப் பெற்றுக் கொண்டிருந்த அந்தத் தமிழ் இளைஞனே வெல்ல வேண்டுமென்று அனைவரும் எதிர்பார்த்தனர். அவன் தோற்றால் அத்தனை பேருடைய உள்ளமும் தோற்றுவிடும் போலிருந்தது. களத்தில் அவனுடைய கவர்ச்சி வளரும் விழிகளில் சோர்வு தெரிந்த போதெல்லாம் காண்போர் விழிகளில் பதறி அஞ்சும் நிலை தெரிந்தது. பொன் வார்த்து வடித்து அளவாய் அழகாய்த் திரண்டாற் போன்ற அவன் தோள்கள் துவண்ட போதெல்லாம் சித்திரப் பல்லக்கிலிருந்த எட்டி குமரன் வீட்டுப் பெருஞ்செல்விக்குத் தன் நெஞ்சமே துவண்டு போய்விட்டது.

இறுதியாக எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த விநாடியும் வந்தது. வேரற்றுச் சாயும் அடிமரம் போல் யவன மல்லன் விழி பிதுங்கி மணற்பரப்பில் சாய்ந்தான். இளங்குமரன் வென்றான். வெற்றி மகிழ்ச்சியில் கூட்டம் அடங்காத ஆரவாரம் செய்தது! அவனுடைய நண்பர்களோ களத்துக்குள் ஓடிவந்து அவனை அப்படியே மேலே தூக்கிவிட்டனர். இந்திர விழாவுக்காக அங்கே வந்திருந்த மலர்க்கடையிலிருந்து முல்லை மாலை ஒன்றை வாங்கிக் கொணர்ந்து அவன் கழுத்தில் சூட்டினான் உடனிருந்த நண்பர்களில் ஒருவன். வெற்றிக் களிப்போடு அவன் அழகு திகழச் சிரித்துக் கொண்டு நின்ற போது, மலர்ந்த மார்பில் அலர்ந்து நெளிந்த முல்லை மாலையும் சேர்ந்து கொண்டு சிரிப்பது போல் தோன்றியது. அந்தச் சிரிப்பையும் வெற்றியையும் கூட்டத்திலிருந்த சில யவனர்கள் மட்டும் அவ்வளவாக விரும்பவில்லை போல் தோன்றியது. அங்கே கூடியிருந்த கூட்டம் சிறிது கலைந்து போவதற்கு வழி ஏற்பட்ட போது அவனும், அவனுடைய நண்பர்களும் மணற்பரப்பில் நடக்கத் தொடங்கினர். அப்போது வழியை மறிப்பது போல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது அந்தச் சித்திரப் பல்லக்கு. நுண்ணிய பூ வேலைப்பாடுகள் அமைந்த பல்லக்கின் ஓவியத் திரை விலகியது. வளைகள் குலுங்கும் செந்நிற முன்கை ஒன்று நீண்டது. அந்தக் கையின் மெல்லிய நீண்ட காந்தள் விரல்களில் பேரொளி நிறைந்ததும் விலை வரம்பற்றதும் நவமணிகளால் தொகுக்கப்பட்டதுமான மணிமாலை ஒன்று இலங்கியது. அந்த மாலை ஏந்திய செந்தாமரைப் பூங்கரம் இளங்குமரனுடைய முகத்திற்கு முன் நீண்ட போது அவன் ஒன்றும் புரியாது திகைத்தான். நிமிர்ந்து பார்த்த போது பல்லக்கினுள்ளிருந்து அந்த இளநங்கை முகத்திலும், கண்களிலும், இதழ்களிலும், எங்கும் சிரிப்பின் மலர்ச்சி தோன்ற எட்டிப் பார்த்தாள். பல்லக்கினுள்ளிருந்து பரவிய நறுமணங்களினாலும், திடீரென்று ஏற்பட்ட அந்தச் சந்திப்பினாலும் சற்றே தயங்கி நின்றான் இளங்குமரன். சொல்லைக் குழைத்து உணர்வு தோய்த்த மெல்லினிமைக் குரலில் அவள் கூறலானாள்:

“இந்தப் பரிசை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேணும்.”

“எதற்காகவோ…?”

“பெருவீரமும் வெற்றியும் உடையவர்களைப் பரிசளித்துப் போற்றும் பெருமையை அடையும் உரிமை இந்தப் பூம்புகார் நகரத்தில் ஒவ்வொருவருக்கும் உண்டு! எல்லோருக்கும் மகிழ்ச்சி தருகிற இந்திர விழாக்காலத்தில் இப்படிப் பரிசளிக்கும் வாய்ப்பு ஒன்று எனக்குக் கிடைத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.”

சற்றும் தயங்காமல் துணிவாக இவ்வாறு மறுமொழி கூறிய அந்த எழிலரசியின் வதனத்தைச் சில விநாடிகள் இமையாது நோக்கினான் இளங்குமரன். அவள் இன்னும் நன்றாக, இன்னும் அழகாக, இன்னும் நிறைவாக நகைத்துக் கொண்டே மணிமாலையை அவனுக்கு மிக அருகில் நீட்டினாள். அந்தத் துணிவும், செல்வச் செழிப்பும் அவன் மனத்துக்குப் புதுமையான அனுபவத்தை அளித்தன. பல்லக்கிலிருந்த அடையாளங்கள் அவள் எட்டிப் பட்டம் பெற்ற பெருங்குடியைச் சேர்ந்தவள் என்பதை அவன் உய்த்துணர இடமளித்தன.

பதில் ஒன்றும் கூறாமல் மெல்ல நகைத்தான் இளங்குமரன். அந்த நகைப்பில் எதையோ சாதாரணமாக மதித்து ஒதுக்குகிறாற் போன்ற அலட்சியத்தின் சாயல்தான் அதிகமிருந்தது. அவன் நண்பர்கள் அமைதியாக நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். இளங்குமரன் அதே குறும்பு நகையோடு கேட்டான்:

“அம்மணி! எனக்குச் ஒரு சிறு சந்தேகம்!”

“என்ன சந்தேகமோ?”

“இதை எனக்குக் கொடுத்து விடுவதனால் நீங்கள் பெருமைப்பட இடமிருக்கிறது. ஆனால் இதை உங்களிடமிருந்து வாங்கிக் கொள்வதனால் நான் பெருமைப்பட்டுக் கொள்ளச் சிறிதாவது இடமிருக்கிறதா என்பதுதான் என் சந்தேகம்” என்று நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி இளங்குமரன் கேட்ட போது அவள் மருண்டாள். அவளுடைய மலர் விழிகள் வியந்தது போலகன்றன.

“வாங்கிக் கொள்ளுங்கள், ஐயா! எங்கள் தலைவி நீங்கள் மற்போர் செய்தபோது காட்டிய ஆர்வத்தைக் கண்டு நானே வியப்படைந்து விட்டேன்” – எழிலரசிக்கு எதிரே தோழி போன்ற தோற்றத்தோடு வீற்றிருந்த மற்றொரு பெண் இளங்குமரனை நோக்கி இவ்வாறு பரிந்து கூறினாள். இதைக்கேட்டு இன்னும் பெரிதாக நகைத்தான் இளங்குமரன். அவள் முகம் அந்த நகைப்பொலியால் சுருங்கிச் சிறுத்தது போல் சாயல் மாறியது.

உடனே, “வசந்தமாலை! பத்து நூறாயிரம் பொன் பெறுமானமுள்ள மணிமாலையைப் பரிசு கொடுப்பதற்காக நாம் பெருமைப்படுவது பெரிதில்லையாம். இவர் பெருமைப்படுவதற்கு இதில் இடமிருக்கிறதா என்று சிந்திக்கிறாராம்” என்று அவள் தோழியிடம் கூறுவது போல் அவனுக்குக் கூறிய குறிப்புரையில் கடுமையும் இகழ்ச்சியும் கலந்திருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். அவன் வதனத்தில் நகைக் குறிப்பு வறண்டது. ஆண்மையின் கம்பீரம் நிலவியது.

“மன்னியுங்கள், அம்மணீ! உங்கள் மணிமாலையின் பெறுமானம் பத்து நூறாயிரம் பொன்னாயிருக்கலாம். அதற்கு மேலும் இருக்கலாம்! ஆனால் என்னுடைய வீரத்தின் பெறுமானமாக அதை நீங்கள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ‘கொள் எனக்கொடுத்தல் உயர்ந்தது; கொள்ளமாட்டேன் என்று மறுப்பது அதை விட உயர்ந்தது’ என்று பழைய நூல்களில் படித்திருப்பீர்கள். என்னைப் போல் ஆண்மையும் தன்மானமும் உள்ளவர்கள் பிறருடைய கைகளிலிருந்து அவசியமின்றி எதையும் பெற விரும்புவதில்லை. இந்தப் பெரிய நகரத்திலே இலஞ்சி மன்றத்திலும், உலக அறவியின் வாயிற்புரத்திலும் ( வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரில் இருந்த இடங்கள்) கூனும் குருடுமாக, நொண்டியும் நோயுடம்புமாக ஆற்றலும் வசதியுமில்லாத ஏழையர் எத்துணையோ பேர் பிச்சைப் பாத்திரங்களுடன் ஏங்கிக் கிடக்கிறார்கள். அப்படிக் கொடுப்பதானால் அவர்களுக்கு வாரிக் கொடுத்துப் பெருமையடையுங்கள். வணக்கம். மீண்டும் உங்களுக்கு என் நன்றி, போய் வருகிறேன்” என்று விரைவாக விலகி நடந்தான் இளங்குமரன். அவனைப் பின்பற்றி நடந்த நண்பர்களின் ஏளன நகையொலி அவள் செவியிற் பாய்ந்தது. இளங்குமரனின் கழுத்தில் வெற்றிமாலையாக அசைந்த முல்லை மாலையின் நறுமணம் அவன் விரைவாகத் திரும்பி நடந்த திசையிலிருந்து பல்லக்கினுள் காற்றோடு கலந்து வந்து பரந்தது. ஆனால் அந்த மணத்தினால் அவளுடைய கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஆற்ற முடியவில்லை. பல்லக்குத் தூக்கி நிற்பவர்க்கும் தோழிக்கும் முன்னிலையில் தன்னை எடுத்தெறிந்து பேசி விட்டுப் போன அவன் செல்லும் திசை நோக்கி அவள் கண்கள் சீற்றத்தைப் புலப்படுத்தின. அவள் தன் கைவிரல்களை மணிமாலையோடு சேர்த்துச் சொடுக்கினாள். அவளுடைய பவழ மெல் உதடுகள் ஒன்றையொன்று மெல்லக் கவ்வின.

வேகமாக நடந்த இளங்குமரன் சற்றே நின்று கேட்க முடிந்திருந்தால், அந்தப் பல்லக்கு அங்கிருந்து நகர்ந்த போது, “வசந்த மாலை! இவனை அழகன் என்று மட்டும் நினைத்தேன்; முரடனாகவும் திமிர் பிடித்தவனாகவும் அல்லவா இருக்கிறான்?” என்று சீறி ஒலித்த செல்வமகளின் கோபக் குரலைத் தானும் செவிமடுத்திருப்பான். ஆனால் அந்தச் சீற்றக் குரலில் சீற்றமே முழுமையாக இருந்ததா? இல்லை! கவனித்தால் சீற்றமும் சீற்றமற்ற இன்னும் ஏதோ ஓருணர்வும் கலந்து இருந்தது புலப்பட்டது.

Previous articleRead Nithilavalli Part 3 Ch18 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 1 Ch2 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here