Home Manipallavam Read Manipallavam Part 1 Ch11 |Manipallavam Na. Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 1 Ch11 |Manipallavam Na. Parthasarathy|TamilNovel.in

60
0
Read Manipallavam Part 1 Ch11 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli part 1,nithiliavalli part 2,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 1 Ch11 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli part 1,nithiliavalli part 2,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,

Read Manipallavam Part 1 Ch11 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – தோரண வாயில்

அத்தியாயம் 11 : அருட்செல்வர் எங்கே!

Read Manipallavam Part 1 Ch11 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

கதக்கண்ணன் என்ற பெயருக்குச் ‘சினம் கொண்டு விரைந்து நோக்கும் ஆண்மையழகு பொருந்திய கண்களையுடையவன்’ என்று பொருள். இந்தப் பொருட் பொருத்தத்தையெல்லாம் நினைத்துப் பார்த்துத்தான் வீரசோழிய வளநாடுடையார் தம் புதல்வனுக்கு அப்பெயரைச் சூட்டியிருந்தார் என்று சொல்ல முடியாதாயினும் பெயருக்குப் பொருத்தமாகவே அவன் கண்கள் வாய்த்திருந்தன. தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் துன்பம் நேரும்போது அதைக் களைவதற்கும். அதிலிருந்து காப்பதற்கும் சினந்து விரையும் கதக் கண்ணனின் நெஞ்சுரத்தை அவனுடைய முகத்திலும் மலர்ந்த கண்களிலும் காணலாம்.

இந்திர விழாவின் இரண்டாம் நாளான அன்று நாளங்கடிச் சந்தியில், ‘இளங்குமரன் எங்கே போனான் முல்லை?’ என்று தன்னை விசாரித்துக் கொண்டு நின்ற தமையனின் முகத்திலும் கண்களிலும் இதே அவசரத்தைத் தான் முல்லை கண்டாள். “அண்ணா! யாரோ பட்டினப்பாக்கத்தில் எட்டிப் பட்டம் பெற்ற பெருஞ்செல்வர் வீட்டுப் பெண்ணாம். பெயர் சுரமஞ்சரி என்று சொல்கிறார்கள். அவள் அவரைப் பல்லக்கில் ஏற்றித் தன் மாளிகைக்கு அழைத்துக் கொண்டு போகிறாள்” என்று தொடங்கி நாள்ங்காடியில் நடந்திருந்த குழப்பங்களையெல்லாம் அண்ணனுக்குச் சொன்னாள் முல்லை. அவள் கூறியவற்றைக் கேட்டதும் கதக்கண்ணனும் அவனோடு வந்திருந்தவர்களும் ஏதோ ஒரு குறிப்புப்பொருள் தோன்றும்படி தங்களுக்குள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் யாவருடைய விழிகளிலும் அவசரமும் பரபரப்பும் அதிகமாவதை முல்லை கவனித்துக் கொண்டாள்.

“என்ன அண்ணா? நீங்கள் அவசரமும் பதற்றமும் அடைவதைப் பார்த்தால் அவருக்கு ஏதோ பெருந்துன்பம் நேரப் போகிறதுபோல் தோன்றுகிறதே! நீங்கள் அவசரப்படுவதையும், அவரைப் பற்றி விசாரிப்பதையும் பார்த்தால் என்க்கு பயமாயிருக்கிறது, அண்ணா!”

“முல்லை! இவையெல்லாம் நீ தெரிந்துகொள்ள வேண்டாதவை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்துகொள். நாங்களெல்லாம் துணையிருக்கும்போது இளங்குமரனை ஒரு துன்பமும் அணுகிவிட முடியாது. இளங்குமரன் செல்வம் சேர்க்கவில்லை. ஞானமும் புகழும் சேர்க்கவில்லை. ஆனால் இந்தப் பெரிய நகரத்தில் எங்களைப் போல் எண்ணற்ற நண்பர்களைச் சேர்த்திருக்கிறான். அவனுக்கு உதவி செய்வதைப் பெருமையாக நினைக்கும் இளைஞர்கள் அவனைச் சுற்றிலும் இருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியாது.”

“தெரியும் அண்ணா! ஆனால் நண்பர்களைக் காட்டிலும் பகைவர்கள்தான் அவருக்கு அதிகமாயிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.”

“இருக்கட்டுமே! பகைகள் யாவும் ஒரு மனிதனுடைய வலிமையைப் பெருக்குவதற்குத்தான் வருகின்றன. பகைகளை எதிரே காணும் போதுதான் மனிதனுடைய பலம் பெருகுகிறது, முல்லை!” என்று தங்கையோடு வாதிடத் தொடங்கியிருந்த கதக்கண்ணன் தன் அவசரத்தை நினைத்து அந்தப் பேச்சை அவ்வளவில் முடித்தான்.

“முல்லை! நாங்கள் இப்போது அவசரமாக இளங்குமரனைத் தேடிக் கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் உன்னை வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக எங்களில் யாரும் உன்னோடு துணை வருவதற்கில்லை. ஆனால் நீ வழி மயங்காமல் வீடு போய்ச் சேருவதற்காக உன்னை இந்த நாளங்காடியிலிருந்து அழைத்துப் போய்ப் புறவீதிக்குச் செல்லும் நேரான சாலையில் விட்டுவிடுகிறேன். அங்கிருந்து இந்திர விழாவுக்காக வந்து திரும்புகிறவர்கள் பலர் புறவீதிக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து நீ வீட்டுக்குப் போய்விடலாம்” என்று தமயன் கூறியதை முல்லை மறுக்காமல் ஒப்புக் கொண்டாள். தமையனுடைய அவசரத்துக்காக அவள் வீட்டுக்குப் போக இணங்கினாளே தவிர உள்ளூரத் தானும் அவர்களோடு செல்ல வேண்டும் என்றும், சென்று இளங்குமரனுக்கு என்னென்ன நேருகிறதென்று அறியவேண்டும் என்றும் ஆசையிருந்தது அவளுக்கு. வேறு வழியில்லாமற் போகவே அந்த ஆசைகளை மனத்துக்குள்ளேயே தேக்கிக் கொண்டாள் அவள்.

“நண்பர்களே! நீங்கள் சிறிது நேரம் இங்கே நின்று கொண்டிருந்தால் அதற்குள் இவளைப் புறவீதிக்குப் போகும் சாலையில் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு வந்துவிடுவேன். அப்புறம் நாம் இளங்குமரனைத் தேடிக்கொண்டு பட்டினப் பாக்கத்துக்குச் செல்லலாம்” என்று சொல்லி உடன் வந்தவர்களை அங்கே நிற்கச் செய்து விட்டு முல்லையை அழைத்துக் கொண்டு கதக்கண்ணன் புறப்பட்டான். எள் விழ இடமின்றிக் கூட்டாமாயிருந்த பூதசதுக்கத்தில் வழி உண்டாக்கிக்கொண்டு போவது கடினமாக இருந்தது.

போகும்போது இளங்குமரனைப் பற்றி மீண்டும் மீண்டும் சில கேள்விகளைத் தன் அண்ணனிடம் தூண்டிக் கேட்டாள் முல்லை. அந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் கதக்கண்ணன் விவரமாக மறுமொழி கூறவில்லை. சுருக்கமாக ஒரே ஒரு செய்தியை மட்டும் முல்லையிடம் கூறினான் அவன்.

“முல்லை! அதிகமாக உன்னிடம் ஒன்றும் சொல்வதற்கில்லை. பலவிதத்திலும் இளங்குமரனுக்குப் போதாத காலம் இது. சிறிது காலத்துக்கு வெளியே நடமாடாமல் அவன் எங்கேயாவது தலைமறைவாக இருந்தால் கூட நல்லதுதான். ஆனால் நம்மைப் போன்றவர்களின் வார்த்தையைக் கேட்டு அடங்கி நடக்கிறவனா அவன்?”

“நீங்கள் சொன்னால் அதன்படி கேட்பார் அண்ணா! இல்லா விட்டால் நம் தந்தையாரோ, அருட்செல்வ முனிவரோ எடுத்துக் கூறினால் மறுப்பின்றி அதன்படி செய்வார். சிறிது காலத்துக்கு அவரை நம் வீட்டிலேயே வேண்டுமானாலும் மறைந்து இருக்கச் செய்யலாம்!”

“செய்யலாம் முல்லை! ஆனால் நம் இல்லத்தையும் விடப் பாதுகாப்பான இடம் அவன் தங்குவதற்கு வாய்க்குமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் நான். அவனைப் பற்றிய பல செய்திகள் எனக்கே மர்மமாகவும் கூடமாகவும் விளங்காமலிருக்கின்றன. முரட்டுக் குணத்தாலும் எடுத்தெறிந்து பேசும் இயல்பாலும் அவனுக்கு இந்த நகரில் சாதாரணமான பகைவர்கள் மட்டுமே உண்டு என்று நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதோ இவற்றையெல்லாம் விடப் பெரியதும் என்னால் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியாததுமான வேறொரு பகையும் அவனுக்கு இருக்கிறதெனத் தெரிகிறது முல்லை! எது எப்படி இருந்தாலும் இதைப்பற்றி நீ அதிகமாகத் தெரிந்து கொள்ளவோ, கவலை கொள்ளவோ அவசியமில்லை. ஆண்பிள்ளைகள் காரியமென்று விட்டுவிடு”

தமயன் இவ்வாறு கூறியதும், முதல்நாள் நள்ளிரவுக்கு மேல் அருட்செல்வ முனிவர், இளங்குமரன் இருவருக்கும் நிகழ்ந்த உரையாடலைத் தான் அரைகுறையாகக் கேட்க நேர்ந்ததையும், முனிவர் இளங்குமரனுக்கு முன் உணர்ச்சி வசப்பட்டு அழுத்தையும் அவனிடம் சொல்லிவிடலாமா என்று எண்ணினாள் முல்லை. சொல்லுவதற்கு அவள் நாவும்கூட முந்தியது. ஆனால் ஏனோ சொற்கள் எழவில்லை. கடைசி விநாடியில் ‘ஆண்பிள்ளைகள் காரியம் ஆண் பிள்ளைகளோடு போகட்டும்’ என்று அண்ணனே கூறியதை நினைத்தோ என்னவோ தன் நாவை அடக்கிக் கொண்டாள் முல்லை. ஆயினும் அவள் மனத்தில் காரணமும் தொடர்பும் தோன்றாத கலக்கமும் பயமும் உண்டாயின. தன் நெஞ்சுக்கு இனிய நினைவுகளைத் தந்து கொண்டிருக்கும் இளங்குமரன் என்னும் அழகைப் பயங்கரமான பகைகள் தெரிந்தும் தெரியாமலும் சூழ்ந்திருக்கின்றன என்பதை உணரும் போது சற்றுமுன் நாளங்காடியில் அவன் மேற்கோண்ட கோபம்கூட மறந்துவிட்டது அவளுக்கு. நீர் பாயும்போது சாய்ந்து போவதுபோல் அவள் உள்ளத்தில் எழுந்திருந்த சினம் அவனைப் பற்றிய அநுதாப நினைவுகள் பாயும்போது சாய்ந்து படிந்தது; தணிந்து தாழ்ந்தது.

பூதச் சதுக்கத்து இந்திர விழாவின் கூட்டமும் ஆரவாரமும் குறைந்த – நடந்து செல்ல வசதியான கிழக்குப் பக்கத்துச் சாலைக்கு வந்திருந்தார்கள் முல்லையும் கதக்கண்ணனும். விண்ணுக்கும் மண்ணுக்கும் உறவு கற்பிக்க எழுந்தவைபோல் இருபுறமும் அடர்ந்தெழுந்த நெடுமரச் சோலைக்கு நடுவே அகன்று நேராக நீண்டு செல்லும் சாலை தெரிந்தது. விழாக் கொண்டாட்டத்துக்காக நாளங்காடிக்கும், அப்பாலுள்ள அகநகர்ப் பகுதிகளுக்கும் வந்துவிட்டு புறநகர்ப் பகுதிகளுக்குத் திரும்பிச் செல்வோர் சிலரும் பலருமாகக் கூட்டமாயும், தனித் தனியாயும் அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்தார்கள்.

“முல்லை! நீ இனிமேல் இங்கிருந்து தனியாகப் போகலாம். நேரே போனால் புறவீதிதான். நிறைய மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு பயமுமில்லை” என்று கூறித் தங்கையிடம் விடைபெற்றுக்கொண்டு வந்த வழியே திரும்பி விரைந்தான் கதக்கண்ணன். முல்லை தயங்கித் தயங்கி நின்று அண்ணனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே கீழ்ப்புறச் சாலையில் நடந்தாள். அண்ணன் இந்திர விழாக் கூட்டத்தில் கலந்து மறைந்த பின்பு திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போயிற்று. அவள்தான் மெல்ல நடந்தாள். அவளுடைய நெஞ்சத்திலோ பலவித நினைவுகள் ஓடின. ‘பட்டினப்பாக்கத்தில் அந்தப் பெண்ணரசி சுரமஞ்சரியின் மாளிகையில் இளங்குமரனுக்கு என்னென்ன அநுபவங்கள் ஏற்படும்? அந்த ஓவியன் எதற்காக அவரை வரைகிறான்? அந்தப் பெண்ணரசிக்காக வரைந்ததாகக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பேசிக்கொண்டார்களே! அப்படியானால் அவருடைய ஓவியம் அவளுக்கு எதற்கு?’ – இதற்குமேல் இந்த நினைவை வளர்க்க மறுத்தது அவள் உள்ளம். ஏக்கமும், அந்தப் பட்டினப்பாக்கத்துப் பெண் மேல் பொறாமையும் ஏற்பட்டது முல்லைக்கு. அத்தோடு ‘தன் தமையனும் மற்ற நண்பர்களும் எதற்காக இவ்வளவு அவசரமாய் இளங்குமரனைத் தேடிக்கொண்டு போகிறார்கள்?’ என்ற வினாவும் அவளுள்ளத்தே தோன்றிற்று. இப்படி நினைவுகளில் ஓட்டமும் கால்களில் நடையுமாகப் புறவீதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள் முல்லை. நுண்ணுணர்வு மயமான அகம் விரைவாக இயங்கும் போது புற உணர்வுகள் மந்தமாக இயங்குவதும் புற உணர்வு விரைவாக இயங்கும்போது அக உணர்வுகள் மெல்லச் செல்வதும் அப்போது அவள் நடையின் தயக்கத்திலிருந்தும், நினைவுகளின் வேகத்திலிருந்தும் தெரிந்து கொள்ளக்கூடிய மெய்யாயிருந்தது. நினைவுகளின் வேகம் குறைந்ததும் அவள் நடையில் வேகம் பிறந்தது.

தான் வீட்டை அடையும்போது தன் தந்தை வீட்டிற்குள்ளே அருட்செல்வ முனிவரின் கட்டிலருகே அமர்ந்து அவரோடு உரையாடிக் கொண்டிருப்பார் என்று முல்லை எதிர்பார்த்துக்கொண்டு சென்றாள். அவள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக வீட்டு வாயில் திண்ணையில் முரசமும் படைக்கலங்களும் வைக்கப்பட்டுருந்த மேடைக்கருகிலே கன்னத்தில் கையூன்றி வீற்றிருந்தார் வீரசோழிய வள நாடுடையார்.

“என்ன அப்பா இது? உள்ளே முனிவரோடு உட்கார்ந்து சுவையாக உரையாடிக் கொண்டிருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டு வருகிறேன் நான். நீங்கள் என்னவோ கப்பல் கவிழ்ந்து போனதுபோல் கன்னத்தில் கையூன்றிக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருக்கிறீர்களே? முனிவர் சோர்ந்து உறங்கிப் போய் விட்டாரா என்ன?” என்று கேட்டுக் கொண்டே வாயிற்படிகளில் ஏறி வந்தாள் முல்லை.

முல்லை அருகில் நெருங்கி வந்ததும், “உறங்கிப்போகவில்லை அம்மா! சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போய் விட்டார். நீயும் இளங்குமரனும் நாளங்காடிக்குப் புறப்பட்டுப்போன சில நாழிகைக்குப் பின் உன் தமையன் கதக்கண்ணனும், வேறு சிலரும் இளங்குமரனைத் தேடிக்கொண்டு இங்கு வந்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதற்காக வாயிற்பக்கம் எழுந்து வந்தேன். வந்தவன் அவர்களுக்கு பதில் சொல்லி அனுப்பிவிட்டுச் சிறிது நேரங்கழித்து உள்ளே போய்ப் பார்த்தால் முனிவரைப் படுக்கையில் காணவில்லை. பின்புறத்துக் கதவு திறந்து கிடந்தது. பின்புறம் தோட்டத்துக்குள் சிறிது தொலைவு அலைந்து தேடியும் பார்த்தாகி விட்டது. ஆளைக் காணவில்லை” என்று கன்னத்தில் ஊன்றியிருந்த கையை எடுத்துவிட்டு நிதானமாக அவளுக்குப் பதில் கூறினார் வளநாடுடையார்.

அதைக் கேட்டு முல்லை ஒன்றும் பேசத் தோன்றாமல் அதிர்ந்து போய் நின்றாள்.

Previous articleRead Manipallavam Part 1 Ch10 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 1 Ch12 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here