Home Manipallavam Read Manipallavam Part 1 Ch13 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 1 Ch13 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

64
0
Read Manipallavam Part 1 Ch13 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli part 1,nithiliavalli part 2,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 1 Ch13|Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 1 Ch13 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – தோரண வாயில்

அத்தியாயம் 13 : இது என்ன அந்தரங்கம்?

Read Manipallavam Part 1 Ch13 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

கலியருள் அகலக் காவிரியணைந்த மாபெரும் நகர்க்குப் பொலிகதிர் பரப்பிப் பகல் செய்த கதிரவன் மெல்ல மெல்ல மேற்கே மறைந்து கொண்டிருந்தான். விரிநீல மணித்திரையில் விட்டெறிந்த ஒளி மலர்களென விண்மீன்கள் மின்னத் தொடங்கியிருந்தன. திசைமுகங்கள் பசந்து மயங்கி நிறம் பூசிக் கொள்ளலாயின. அகன்ற வான்வெளியில் சந்திரன் அணி நிலா விரித்தான். பொழுதும், பருவமும், காலம் கற்பிக்கும் இயற்கையெழில்களும் எல்லா இடத்திலும் அழகு தருவனவாக இருப்பினும் பூம்புகார் நகரைச் சார்ந்து வரும் போது பன்மடங்கு பேரழகு தருவனவாக இருந்தன. இயற்கை நிகழ்ச்சிகள் தாம் நிகழுமிடத்தைப் பொறுத்தே அழகு பெறுகின்றன. கதிரவன் உதயம் கடற்கரையிற் பேரழகு, தென்றல் சோலைகளின் நடுவே வீசும் போது பேரழகு, அருவி மலை முகடுகளில் இலங்கும் போது பேரழகு – என்று சார்ந்த இடம், சூழ்நிலை ஆகியவற்றால் அழகு பேரழகாவது போல் தன்னைச் சார்ந்து நிகழும் யாவற்றையும் பேரழகாக்கிக் காட்டும் பெரும் பேரழகை முதலீடாகக் கொண்டது பூம்புகார் நகரம்.

வளம் மலிந்த அந்நகரத்தில் காலையும் அழகு, மாலையும் அழகு, நண்பகலும் அழகு, இரவும் அழகுதான். நேரத்துக்கு நேரம் விதம் விதமாக அலங்கரித்துக் கொண்டு நிற்கும் வனப்பும் வசதிகளும் உள்ள அழகிபோல் ஒவ்வொரு பொழுதும் பருவமும் ஒவ்வொரு அழகு தோன்றித் துலங்கும் அரச கம்பீர வாழ்வுள்ள நகரமாயிருந்தது அது. நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் அழகைச் சுமந்து கொண்டு வந்த அந்தி மாலை நேரம் பட்டினப்பாக்கத்தில் அழகுக்கே அழகு செய்வது போலப் பரவியது. மாளிகையின் முன் புறங்களில் பசுமையழகுக்காகப் படர விட்டிருந்த முல்லையும் மல்லிகையும் அரும்பு நெகிழ்ந்து மணம் பரப்ப, அந்த மணம் அந்த நேரத்தில் வீசிக் கொண்டிருந்த மெல்லிளந் தென்றலிற் கலந்து பரவியது. அந்தி மாலைக்காக இல்லங்களில் முன் பக்கத்து மாடப் பிறைகளில் மங்கல விளக்கேற்றி வைக்கும் பெண்களின் வளையொலியும், சிரிப்பொலியும், கிண்கிணிச் சிலம்பொலியும் வீதியெல்லாம் நிறைந்து ஒலித்தன. முகமே ஒரு மங்கல விளக்காய் அதில் முத்து நகை சுடர் விரிக்க முறுவல் நிகழும் போது விழிகளில் நளினம் ஒளி பரப்பத் தீபம் ஏற்றி வைக்கும் பெண்களே தீபங்களைப் போல் வீதிகளில் தோன்றினர். வீதிகளிலிருந்து யாழிசையும், குழலிசையும், மத்தளம் – முரசங்களின் ஒலியும், பல்வேறு கோவில்களின் மணியோசையும், மறை முழக்கமும், பண்ணிசை ததும்பும் பாடல்களும் கலந்தெழுந்து ஒலிக்காவியம் படைத்தன.

அந்த அற்புதமான நேரத்தில் சுரமஞ்சரியும் அவளுடைய சகோதரி வானவல்லியும், வேறு பணிப்பெண்களும், தங்கள் பெருமாளிகைகளின் ஏழாவது மாடத்துக்கு மேலே நிலா முற்றத்தில் அமர்ந்திருந்தார்கள். மிகவும் உயரமான அந்த நிலா முற்றத்திலிருந்து நான்கு காதச் சுற்றளவுக்குப் பரந்திருந்த பூம்புகார் நகரத்தின் எல்லாப் பகுதிகளும் நன்றாகத் தெரிந்தன. ஒளி வெள்ளம் பாய்ச்சினாற் போல் இந்திர விழாவுக்கான தீபாலங்காரங்கள் நகரத்தை சுடர் மயமாக்கியிருந்தன. நாளங்காடிக்கும் அப்பால் கிழக்கே மருவூர்ப்பாக்கம் முடிகிற இடத்தில் நீல நெடுங்கடல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. துறைமுகத்திலும், காவிரியின் சங்கம வாயிலிலும் பெரிய கப்பல்களில் வைத்திருந்த விளக்குகள் பல நிறத்தினவாய்ப் பல விதத்தினவாய் நீர்ப்பரப்பில் ஒளிக்கோலம் காட்டிக் கொண்டிருந்தன. மேற்கிலிருந்து கிழக்கு முகமாகப் பாய்ந்து கடலோடு கலக்கும் காவிரி வாயில் சங்கம முகத்தில் கலங்கரை விளக்கத்துத் தீ செந்நாக்குகளை விரித்து எரிந்து கொண்டிருந்தது. தன் மாளிகை நிலா முற்றத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினத்தின் அந்திமாலைக் காட்சி வனப்பை எத்துணையோ முறை கண்டு வியந்திருக்கிறாள் சுரமஞ்சரி. ஆனால் இன்று மாலையில் காணும் போது அந்தக் காட்சி வனப்பில் புதிதாக வியப்பையும் அழகையும் உணரும் ஏதோ ஓர் உற்சாக உணர்வு அவள் உள்ளத்துள்ளே குறுகுறுத்தது. ‘பிணியுற்றுக் கிடந்தவர்களுக்குப் பிறந்தநாள் வந்தது போல் அந்த உற்சாக உணர்வை முழுமையாக அநுபவிக்க முடியாத மனக்குறைவும் சிறிது இருந்தது அவளுக்கு. இளங்குமரனை நினைக்கும் போது அவள் மனம் களிப்படைந்து துள்ளியது. அவனுடைய திமிரையும், அவன் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தையும் நினைத்துப் பார்த்தால் அவள் மனம் வாடித் துவண்டது.

சுரமஞ்சரியின் சகோதரி வானவல்லிக்கு ‘வங்கியம்’ எனப்படும் புல்லாங்குழல் வாசிப்பதில் இணையற்ற திறமை உண்டு. அப்போதும் அவள் அதை வாசித்துக் கொண்டு தான் இருந்தாள். அந்த மாளிகையைச் சேர்ந்த மற்றோர் இசையணங்கு மகர யாழிலே இன்னிசை எழுப்பிக் கொண்டிருந்தாள். வேறொருத்தி மத்தளம் வாசித்தாள். நிலா முற்றத்தில் தன்னருகே பரவிப் பாய்ந்து கொண்டிருந்த இந்த இசை வெள்ளத்தில் மூழ்காமல் இளங்குமரனைப் பற்றிய நினைவு வெள்ளத்தில் மூழ்கியிருந்தாள் சுரமஞ்சரி. தந்தத்தில் இழைத்து முத்துப் பதித்த சித்திரக் கட்டிலில் இரத்தினக் கம்பள விரிப்பின் மேல் அமர்ந்து இசை அரங்கு நிகழ்த்திக் கொண்டிருந்தவர்கள், சுரமஞ்சரி தங்கள் இன்னிசையில் ஆழ்ந்து மூழ்கி அனுபவித்துக் கொண்டு தான் எதிரே அமர்ந்திருக்கிறாளென நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுரமஞ்சரியின் இதயத்தை யாழாக்கி அதன் மெல்லிய உணர்வு நரம்புகளில் இளங்குமரன் என்னும் எழில் நினைவு வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை. ‘வெள்ளி வெண்குடத்துப் பால் சொரிவது போல்’ தண்மதிக் கதிர் பரவும் நிலா முற்றத்தில், உடலை வருடிச் செல்லும் இதமான காற்றும் வீசும் நிலையில் சுரமஞ்சரி நினைக்கலானாள்:

‘இந்திரவிழாக் காலத்தில் இந்த மாளிகைக்கு வந்தவர்களை விருந்துண்ணச் செய்யாமல் அனுப்பும் வழக்கமில்லை. மாளிகைக்கு வந்து உணவை முடித்துக் கொண்டு போகலாம் என்று எவ்வளவு அன்போடும் ஆர்வத்தோடும் அவரை அழைத்தேன்! ‘நான் இந்த மாளிகைக்கு விருந்து உண்ண வரவில்லை’ என்று சிறிதும் தயங்காமல் முகத்தில் அறைந்தாற் போல் பதில் கூறி விட்டாரே! அதுதான் போகட்டும், தந்தையார் ஏன் அப்படி மரங்களின் மறைவில் ஒளிந்தாற் போல் நின்று அவரையும் எங்களையும் கவனித்தார்? திடீரென்று மறைவிலிருந்து வெளிப்பட்டு, ‘இந்தப் பிள்ளையை நான் இதற்கு முன்பு எங்கோ பார்த்தாற் போல் நினைவிருக்கிறதம்மா’ என்று கூறி எங்களையும் அவரையும் திகைப்படையச் செய்ததுமல்லாமல் அவரருகில் சென்று அநாகரிகமாக அவரை உற்று உற்றுப் பார்த்தாரே தந்தையார், அதன் நோக்கமென்ன? எவ்வளவோ உலகியலறிவும் நாகரிகமும் தெரிந்த தந்தையார் இன்று தோட்டத்தில் ஏன் அப்படி நடந்து கொண்டார்? தந்தையாரின் எதிர்பாராத வருகையும், பேச்சும், உற்றுப் பார்த்த பார்வையும் அவருக்கு அநாகரிகமாகத்தான் தோன்றியிருக்கும். இல்லாவிட்டால், ‘நடந்து போகாதீர்கள், பல்லக்கு வருகிறது, அதில் ஏறிக் கொண்டு போகலாம்’ என்று நான் கூவிய போது திரும்பியும் பார்க்காமல் அலட்சியமாக வீதியில் இறங்கி நடந்திருப்பாரா அவர்? நல்ல வேளை! நான் அப்போது காட்டிய குறிப்பைப் புரிந்து கொண்டு என் பக்கத்தில் நின்ற வசந்தமாலை அவரைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறாள். என்னுடைய தோழிகளிலேயே வசந்தமாலைக்குத்தான் குறிப்பறியும் திறன் அதிகம். பின் தொடர்ந்து போய் அவரைப் பற்றிய விவரங்களையும், அவர் வசிக்கும் இடத்தையும் நன்றாகத் தெரிந்து கொண்டுதான் திரும்பி வருவாள் அவள்! வசந்தமாலை விரைவில் திரும்பி வந்து அவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் கூறி விட மாட்டாளா என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. ‘ஒருவேளை தனக்குத் தெரியாமலே வசந்தமாலை இதற்குள் திரும்பி வந்திருப்பாளோ?’ என்று சுரமஞ்சரிக்கு ஐயம் ஏற்பட்டது. நிலா முற்றத்திலிருந்து கீழே இறங்கிப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்றால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும் வானவல்லியும், மற்றவர்களும் தான் இருந்தாற் போலிருந்தது நடுவில் எழுந்து போவதைத் தவறாகப் புரிந்து கொண்டு வருந்தலாகாதே என்று தயங்கினாள் சுரமஞ்சரி.

சிறிது நேரத்தில் நிலாமுற்றத்து இசையரங்கு தானாகவே முற்றுப் பெற்றது. வானவல்லியும் மற்றப் பெண்களும் வேறு பேச்சுக்களைப் பேசத் தொடங்கினார்கள். தான் நிலா முற்றத்திலிருந்து கீழே இறங்கிப் போய் ‘வசந்தமாலை வந்திருக்கிறாளா?’ என்று பார்த்து விட்டுத் திரும்புவதற்கு இதுதான் ஏற்ற நேரம் என்று தீர்மானம் செய்து கொண்டவளாய் எழுந்தாள் சுரமஞ்சரி.

‘வானவல்லி! நீ இவர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிரு. நான் கீழே போய் வசந்தமாலை வந்திருக்கிறாளா என்று பார்த்து விட்டு வருகிறேன்’ எனக் கூறிவிட்டு அவள் புறப்பட்ட போது வானவல்லி அவளைத் தடுக்கவில்லை. நிலா முற்றத்திலிருந்து கீழ்ப் பகுதிக்குச் செல்லும் படிகளில் வேகமாக இறங்கினாள் சுரமஞ்சரி.

சம நிலத்திலிருந்து ஓங்கி நின்ற அந்த ஏழடுக்கு மாளிகை அரண்மனை போன்ற ஒரே கட்டடமாக உயர்ந்து தோன்றினாலும் ஏழு மாடங்களும் ஏழு தனி மாளிகைகள் போல் வசதிகள் நிறைந்தவை. நோக்குமிடமெல்லாம் சித்திரங்கள், நுகருமிடமெல்லாம் நறுமணங்கள், அமர விரும்புமிடமெல்லாம் பட்டு விரித்த மஞ்சங்கள், பஞ்சணைகள், பாங்கான இருக்கைகள், எல்லாம் எல்லா இடங்களிலும் பொருந்திய பெருமாளிகை அது. அந்தி நேரங் கழித்து இரவு தொடங்கி விட்டதால் வண்ண வண்ண விளக்குகள் வேறு மாளிகைகளை ஒளிமயமாக்கியிருந்தன. ஏழு நிலை மாடங்களில் கீழிருந்து மூன்றாவதாக அமைந்த மாடமும் அதைச் சார்ந்த அறைகளும் சுரமஞ்சரியின் புழக்கத்துக்கென அவள் தந்தையாரால் விடப்பட்டிருந்தன. ‘இளங்குமரனைப் பின் தொடர்ந்து சென்றிருந்த வசந்தமாலை திரும்பி வந்திருந்தால் இந்த மூன்றாவது மாடத்துக்குள் தான் எங்கேயாவது இருப்பாள்’ என்பது சுரமஞ்சரிக்குத் தெரியும். அன்று பிற்பகலில் ஓவியனிடம் வரைந்து வாங்கிய இளங்குமரனின் ஓவியத்தை இந்த மூன்றாவது மாடத்துக்குள் அமைந்திருந்த சித்திரச் சாலையில் தான் சுரமஞ்சரி வைத்திருந்தாள். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சிறந்த ஓவியர்களிடமிருந்தும், இந்திர விழாக் காலங்களில் பல தேசங்களிலிருந்து பூம்புகாருக்கு வந்து போகும் ஓவியர்களிடமிருந்தும் வகைவகையான அபூர்வ ஓவியங்களையெல்லாம் வாங்கித் தனது சித்திரச் சாலையில் சேர்த்து வைத்திருந்தாள் சுரமஞ்சரி. அவளுடைய சித்திரச்சாலையை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் போதும், ஓவியங்களில் அவளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு விடலாம்.

‘தோழி வசந்தமாலை இன்னும் வந்து சேர்ந்திருக்க வில்லையானால் நமது சித்திரச் சாலையில் போய் அவருடைய ஓவியத்தின் அழகை ஆர்வம் தீரக் கண்டு கொண்டே சிறிது நேரத்தைக் கழிக்கலாம்’ என்ற எண்ணத்தோடு மூன்றாவது மாடத்துக்குள் நுழைந்தாள் சுரமஞ்சரி. தனக்குச் சொந்தமான அந்த மூன்றாவது அடுக்கு மாளிகையை மிக அலங்காரமாக வைத்துக் கொண்டிருந்தாள் அவள். மாளிகையின் முன் கூடத்தில் யாரும் இல்லாததால் வசந்தமாலை இன்னும் வந்து சேரவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள். முன் கூடத்தை அடுத்து அவளுடைய இசைக் கருவிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கீதமண்டபமும் அதையடுத்து நாட்டியமாடும் காலத்தில் பயன்படுத்தும் நிருத்திய மண்டபமும் அணிமணிகள் உடைகள் புனைந்து கொள்ளும் தனியான அலங்கார மண்டபமும், இறுதியாகச் சித்திரச்சாலையும் அமைந்திருந்தன. இவ்வளவு இடங்களையும் கடந்து செல்ல வேண்டிய இறுதிப் பகுதியாக அமைந்திருந்த காரணத்தால் சுரமஞ்சரியோ, அவள் தோழியோ உடன் அழைத்துச் சென்றாலன்றி அவளுடைய சித்திரச் சாலைக்குள் பிறர் நுழைவது வழக்கமில்லை. ‘வசந்தமாலை திரும்பி வருகிறவரை சித்திரச் சாலையில் பொழுதைக் கழிக்கலாம்’ என்ற நினைப்புடன் தனிமை தந்த உல்லாசத்தில் ஒரு பாடலை மெல்ல இசைத்துக் கொண்டே கீதமண்டபத்தைக் கடந்து சித்திரச் சாலைக்குச் செல்வதற்காக மேலே நடந்தாள் சுரமஞ்சரி.

இதழ்களில் மெல்லிசை இழைந்து ஒலிக்க நடந்து சென்றவள் அலங்கார மண்டபம் முடிந்து சித்திரச் சாலைக்குள் இறங்கும் படி அருகிலேயே திகைத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாவிலிருந்து எழுந்த மெல்லிசை நின்றது. அவள் முகத்தில் வியப்பும் பயமும் நிறைந்தன. காரணம்? சித்திரச் சாலைக்குள்ளிருந்து மெதுவாகவும் மர்மமாகவும் பேசிக் கொள்ளுகிற ஆடவர் பேச்சுக் குரல் அவள் செவிகளை எட்டியது. ‘நான் பேணிப் பாதுகாத்து வரும் என்னுடைய சித்திரச்சாலையில் சொல்லி அனுமதி பெறாமல் என் தந்தையார் கூட நுழைய மாட்டாரே? இப்படி நான் இல்லாத வேளையில் துணிந்து இங்கே நுழைந்திருக்கும் இவர்கள் யாராயிருக்கலாம்?’ என்ற பயம் கலந்த சந்தேகத்துடன் ஓசைப்படாமல் சித்திரச் சாலைக்குள் இறங்கும் இரண்டாவது படியில் காலை வைத்து மெல்லத் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள் அவள்.

அப்படிப் பார்த்த பின் சுரமஞ்சரியின் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. ‘தன்னுடைய அனுமதியின்றி அவரும் நுழைய மாட்டாரே’ என்று சற்று முன் யாரைப் பற்றி அவள் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தாளோ, அவரே தான் அங்கே இளங்குமரனின் ஓவியத்துக்கு முன் நின்று கொண்டிருந்தார்! ஆம், அவளுடைய தந்தையார்தாம் நின்று கொண்டிருந்தார். பிற்பகலில் இளங்குமரன் சென்ற சிறிது நேரத்தில் நூறு பொற் கழஞ்சுகளைப் பெற்றுக் கொண்டு போயிருந்த ஓவியன் மணிமார்பனும் தன் தந்தைக்கு அருகில் இப்போது சித்திரச் சாலைக்குள் நிற்பதைக் கண்டாள் சுரமஞ்சரி. தம் கை ஊன்று கோலால் இளங்குமரனுடைய ஓவியத்தைச் சுட்டிக் காட்டி ‘ஏதோ செய்யுமாறு’ எதிரே பயந்து நடுங்கி நிற்கும் ஓவியனைத் தன் தந்தை மிரட்டுவதையும் படியில் நின்று கொண்டிருந்த சுரமஞ்சரி கண்டாள். ‘பொற் கழஞ்சுகளை வாங்கிக் கொண்டு ஓவியன் போய்விட்டதாக தான் நினைத்துக் கொண்டிருந்ததுதான் தவறு. தந்தையார் ஏதோ ஓர் அந்தரங்க நோக்கத்துக்காக ஓவியனைத் தடுத்துத் தங்க வைத்திருக்க வேண்டு’மென்று அவளுடைய உள்ளுணர்வு அவளுக்குக் கூறியது. ஆனால் அது என்ன அந்தரங்கம் என்பதை மட்டும் அப்போது அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. சித்திரச்சாலையில் மேலும் என்னென்ன நிகழ்கின்றன என்பதை மறைந்திருந்து கவனிக்கலானாள் சுரமஞ்சரி.

Previous articleRead Manipallavam Part 1 Ch12 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 1 Ch14 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here