Home Manipallavam Read Manipallavam Part 1 Ch14 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 1 Ch14 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

88
0
Read Manipallavam Part 1 Ch14 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli part 1,nithiliavalli part 2,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 1 Ch14|Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 1 Ch14 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – தோரண வாயில்

அத்தியாயம் 14 : செல்வ முனிவர் தவச்சாலை

Read Manipallavam Part 1 Ch14 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

‘அருட்செல்வ முனிவரைக் காணவில்லை’ என்பதால் ஏற்பட்ட திகைப்பும் மலைப்பும் வீரசோழிய வளநாடுடையார் மனத்தில் கலக்கத்தை உண்டாக்கியிருந்தன. அந்தக் கலக்கத்தினால்தான் போகும் போது இளங்குமரனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போயிருந்த தன் மகள் முல்லை திரும்பி நாளங்காடியிலிருந்து எவர் துணையுமின்றித் தனியே வந்ததைக் கூட அவர் கவனித்துக் கோபம் கொள்ளவில்லை. இல்லாவிட்டால் அவளைத் தனியே அனுப்பிவிட்டு எங்கோ போனதற்காக இளங்குமரனைப் பற்றி வாய் ஓய்வடையும் வரை வசைபாடித் தீர்த்திருப்பார் அவர்.

நாளங்காடியிலிருந்து முல்லை திரும்பி வந்து வீட்டுப் படி ஏறிய போது அவருடைய சிந்தனையாற்றல் முழுவதும் ‘முனிவர் எதற்காக என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று இங்கிருந்து கிளம்பிப் போனார்? அதுவும் ஏதோ சிறைப்படுத்தப் பட்டிருந்தவன் தப்பி ஓடிப் போகிறது போல் பின்புறத்து வழியாகத் தப்பிப் போக வேண்டிய அவசியமென்ன?’ என்னும் வினாக்களுக்கு விடை காண்பதில் ஈடுபட்டிருந்தது.

அருட்செலவ முனிவர் தம் இல்லத்திலிருந்து வெளியேறிச் சென்றதற்குக் காரணத்தை அவரால் உறுதியாகத் தீர்மானம் செய்ய முடியவில்லையே தவிர ‘இன்ன காரணமாகத்தான் இருக்கலாம்’ என்று ஒருவாறு அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. இளங்குமரனுடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றி ஏதாவது தூண்டிக் கேட்க ஆரம்பித்தாலே அவர் பயப்படுகிறார். அதில் ஏதோ ஒரு பெரிய மர்மமும் இரகசியமும் இருக்கும் போல் தோன்றுகிறது. இன்றைக்கு நான் அவரிடம் இளங்குமரனைப் பற்றிய பேச்சைத் தொடங்கியிராவிட்டால் இப்படி நேர்ந்திருக்காது. அந்தக் கேள்வியைக் கேட்டதும் அவர் முகம் தான் எப்படி மாறிற்று! ‘சில நிகழ்ச்சிகளை இதயத்துக்குள்ளேயே இரண்டாம் முறையாக நினைத்துப் பார்ப்பதற்குக் கூட அச்சமாக இருக்கிறதே, வெளியே எப்படி வாய்விட்டுக் கூறமுடியும்?’ என்று பதில் கூறும் போது முனிவரின் குரலில் தான் எவ்வளவு பீதி, எவ்வளவு நடுக்கம்! என்று நிகழ்ந்தவற்றைக் கோவையாக மீண்டும் சிந்தித்துப் பார்த்தார் வளநாடுடையார். இளங்குமரனைப் பற்றி முனிவரிடம் விசாரிக்க நேர்ந்த போதெல்லாம் பல முறைகள் இது போன்ற அனுபவங்களையே அடைந்திருக்கிறார் அவர்.

“இப்படியே முனிவரைக் காணவில்லை என்று பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன செய்வது அப்பா? தேடுவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டாமா? இன்னும் சிறிது நேரத்தில் அண்ணனும் முனிவருடைய வளர்ப்புப் பிள்ளையாகிய அவரும் இங்கே வந்து விடுவார்களே? அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?” என்று முல்லை கேள்வி கேட்ட போது தான் வளநாடுடையாருக்கும் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தது.

முனிவரைப் பற்றி முல்லை தன் மனத்துக்கு மட்டும் தெரிந்த உண்மை ஒன்றைத் தந்தையிடம் சொல்ல விரும்பவில்லை. அது போலவே தனிமையில் முனிவரிடம் தாம் கேட்ட கேள்விகளைப் பற்றியும் முனிவர் அங்கிருந்து கிளம்பிச் செல்ல அந்தக் கேள்விகளும் ஓரளவு காரணமாயிருக்கலாம் என்பதைப் பற்றியும் தந்தை மகளிடம் சொல்லவில்லை. முதல் நாள் நள்ளிரவில் முனிவருக்கும் இளங்குமரனுக்கும் நிகழ்ந்த உருக்கமான உரையாடலையும், அந்த உரையாடலின் போது முனிவர் துயரம் தாங்காமல் அழுததையும் அறிந்திருந்த முல்லை தன் தந்தையாரிடம் அவற்றைக் கூறியிருப்பாளாயின் அவருக்கு அவற்றைக் கொண்டு முனிவர் மேல் இன்னும் சில சந்தேகங்கள் கொள்ள இடம் கிடைத்திருக்கும். அதே போல் முனிவரிடம் தாம் தனிமையில் பேசிய பேச்சுக்களை வளநாடுடையார் தம் மகளிடம் கூறியிருந்தால் அவளுக்கு முனிவர் ஏன் ஓடிப் போனார் என்ற சந்தேகம் தீர்ந்து போயிருக்கும். இரண்டு காரியங்களுமே அப்படி நிகழாததனால் சந்தேகங்களும் குழப்பங்களும் இன்னும் அதிகமாயின.

“நானும் துணைக்கு வருகிறேன் அப்பா! புறப்படுங்கள், முனிவரைத் தேடிப் பார்க்கலாம்,” என்று உடன் புறப்படத் தொடங்கிய முல்லையை வரவேண்டாமென மறுத்துவிட்டார் அவர்.

“நீ வேண்டாம் முல்லை! நானே மறுபடியும் போய் நன்றாகத் தேடிவிட்டு வருகிறேன். நம் வீட்டுப் பின்புறம் ஆரம்பமாகிற நெடுமரச் சோலை, சம்பாபதி வனம், சக்கரவாளக் கோட்டம் ஆகிய இடங்கள் வரை நெடுந்தொலைவு இடைவெளியின்றிப் பரந்து கிடக்கிறதே, இதில் எங்கேயென்று குறிப்பிட்டு அவரைத் தேடுவது?” என்று கூறிக்கொண்டே திண்ணையில் அடுக்கியிருந்த வேல்களில் ஒன்றை உருவினார் வளநாடுடையார். அந்த வேலை ஊன்றுந் துணையாகக் கொண்டு வீட்டின் பின் பக்கத்துத் தோட்ட வழியாக அவர் புறப்பட்ட போது பிற்பகல் நேரம் முதிரத் தொடங்கியிருந்தது.

முடிந்தவரை எல்லா இடங்களிலும் தேடி விட்டு இறுதியாகச் சக்கரவாளக் கோட்டத்திலுள்ள அருட்செல்வ முனிவரின் தவச் சாலைக்கும் போய்ப் பார்த்துவிடலாம் என்பது கிழவர் வீரசோழிய வளநாடுடையாரின் எண்ணமாக இருந்தது. இளமையிலும் நடுத்தர வயதிலும் காவல் வீரனாகவும், காவற்படைத் தலைவனாகவும் அந்தப் பெருவனத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வேலும் கையுமாகச் சுற்றிய நினைவு வந்தது அவருக்கு. அப்போது சுற்றியதற்கும், இப்போது சுற்றுவதற்கும் இடையில் தான் எத்துணை வேறுபாடுகள்! வீரமும், மிடுக்கும், வலிமையும் கொண்டு சுற்றிய அந்தக் காலம் எங்கே? தளர்ந்த உடலோடு வேலை ஊன்றிக் கொண்டு நடக்கும் இந்தக் காலம் எங்கே? முல்லையின் தாயார் காலமாகும் வரையில் அவருக்கு மனத்தளர்ச்சி இருந்ததில்லை. முல்லையின் குழந்தைப் பருவத்தில் ‘அவள்’ காலமான போது அவருக்கு மனமும் தளர்ந்தது. அந்தச் சமயத்தில் கட்டிளம் காளையாக வளர்ந்திருந்த புதல்வன் கதக்கண்ணனைக் காவற்படை வீரனாகச் சோழ சைன்யத்தில் சேர்த்துவிட்டுத் தாம் வீட்டோடு இருந்து கொண்டார் அவர். அந்த நாளிலிருந்தே அருட்செல்வ முனிவரை அவருக்கும், அவரை அருட்செல்வ முனிவருக்கும் நன்றாகத் தெரியும். அருட்செல்வ முனிவரின் வளர்ப்புப் பிள்ளையாகிய இளங்குமரனும் வளநாடுடையாரின் மூத்த மகனாகிய கதக்கண்ணனும் போர் முறைகளும் படைக்கலப் பயிற்சிகளும் பெறுகிற இளமையிலேயே சேர்ந்து கற்றவர்கள், சேர்ந்து பயின்றவர்கள். மருவூர்ப்பாக்கத்தில் ‘நீலநாகர் படைக் கலச்சாலை’ என்று ஒன்று இருந்தது. அந்தப் படைக்கலச் சாலையின் தலைவரான நீல நாக மறவர் பூம்புகாரிலேயே பெரிய வீரராகப் போற்றுதல் பெற்றவர். இளங்குமரனும் கதக்கண்ணனும் தங்களுடைய உடல் வலிமையை வளர்த்துக் கொள்வதற்குக் காரணமானவர் அந்த மறவர்தான். அந்த மறவரிடம் இளங்குமரனையும் கதக்கண்ணனையும் கொண்டு போய்ச் சேர்த்தது வள்நாடுடையார்தாம். அருட்செல்வ முனிவரைத் தேடிக் கொண்டு அலைந்த போது வளநாடுடையாருக்கு இந்தப் பழைய நினைவுகள் எல்லாம் உண்டாயின. கந்திற்பாவை கோட்டம், உலக அறவி, சம்பாபதி கோவில் போன்ற இடங்களில் எல்லாம் தேடி அலைந்து விட்டு அவற்றைச் சார்ந்திருந்த சக்கரவாளக் கோட்டத்தின் மதிலருகே வந்து நின்றார் வளநாடுடையார். மாலைப் போது நெருங்கிக் கொண்டிருந்தது. சக்கரவாளக் கோட்டத்துக்குள் நுழைவதற்கு நான்கு புறமும் வாயில்கள் உண்டு. செழுங்கொடிவாயில், நலங்கிளர்வாயில், வெள்ளிடைவாயில், பூதம் நின்ற வாயில் என்னும் நான்கு மாபெரும் வாயில்கள் சக்கரவாளக் கோட்டத்து நாற்புற மதில்களில் அமைந்திருந்தன. அவற்றுள் பூதம் நின்ற வாயில் வழியாக நுழைந்து போனால் அருட்செல்வ முனிவரின் தவச் சாலையை எளிதாக அடையலாம். பூதம் நின்ற வாயில் என்பது விநோதமான அமைப்பை உடையது. பெரிய பூதம் ஒன்று சிலை வடிவில் தன் இரண்டு கால்களையும் அகற்றி நிற்பது போல் அவ்வாயில் கட்டப்பட்டிருந்தது. வானளாவி நிற்கும் அந்த பூதச் சிலையின் இரு கால்களுக்கும் இடையேதான் கோட்டத்துக்குள் போவதற்கான சாலை அமைந்திருந்தது. தைரியமில்லாத மனங் கொண்டவர்கள் பூதம் நின்ற வாயிலில் நடந்து உள்ளே போகும் போது கூட அந்தச் சிலை அப்படியே கைகளை நீட்டித் தங்களை அமுக்கி விடுமோ என்று வீணாகப் பிரமை கொள்ள நேரிடும். அவ்வளவு பிரும்மாண்டமான அமைப்புடையது அந்த வாயில். அதைப் பார்த்துக் கொண்டு நின்றால் கால்களிடையே வழி கொடுத்துக் கொண்டே பூதம் நகர்ந்து வருவது போலவே தொலைவில் தோன்றும். வீரசோழிய வளநாடுடையார் பூதம் நின்ற வாயிலின் வழியே சக்கரவாளக் கோட்டத்துக்குள் நுழைந்தார். அந்த மாலை நேரத்தில் அருட்செல்வ முனிவரின் தவச்சாலையும் அதைச் சூழ்ந்திருந்த மலர் வனமும், ஆளரவமற்ற தனிமையில் மூழ்கித் தோற்றமளித்தன. ‘அருட்செல்வ முனிவரே’ என்று இரைந்து கூவியழைத்தவாறே தவச்சாலையில் ஒவ்வொரு பகுதியிலும் சுற்றிச் சுற்றி வந்தார் வளநாடுடையார். அவர் உரத்த குரலில் கூப்பிட்ட முனிவரின் பெயர்தான் அந்த வனத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் திரும்பத் திரும்ப எதிரொலித்ததே தவிர, வேறு பதில் இல்லை. தவச்சாலையின் ஒரு பகுதியில் சுவடிகளை விரித்து வைத்து அருகில் தீபமும் ஏற்றி வைக்கப்பட்டிருந்ததால் மாலைப்போது நெருங்குகிற அந்த வேளையில் யாரோ அங்கு வந்திருக்கிறார்களென்பதை வளநாடுடையாரால் புரிந்து கொள்ள முடிந்தது. ‘சுவடிகள் தாமாக விரிந்துக் கொண்டு கிடக்கப் போவதில்லை. தீபமும் தானாக ஏற்றிக் கொண்டு ஒளிதரப் போவதில்லை! யாரோ இப்போது இங்கே இருக்கிறார்கள்! ஆனால் என் முன்னால் வரத் தயங்குகிறார்கள்’ என்று சந்தேகங் கொண்டார் வளநாடுடையார். ‘சுவடிகளைப் படிக்க ஏற்ற முறையில் விரித்துத் தீபமும் ஏற்றி வைத்தவர், தாம் அங்கே வந்து நுழைவதைப் பார்த்து விட்டு வேண்டுமென்றே தமக்காகவே மறைந்திருக்கலாமோ?’ என்று தோன்றியது வளநாடுடையாருக்கு. மறைந்திருக்கும் ஆளை வெளியே வரச் செய்வதற்காக மெல்ல ஒரு தந்திரம் செய்தார் வளநாடுடையார்.

“சரிதான் இங்கு எவரையும் காணவில்லை. நாம் வந்த வழியே திரும்பிப் போக வேண்டியதுதான். முனிவரை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” – என்று சற்று இரைந்த குரலில் தமக்குத் தாமே சொல்லிக் கொள்கிறாற் போல் சொல்லிக் கொண்டு திரும்பி நடந்தார் அவர். நடந்தார் என்பதை விட வேகமாகத் திரும்பிச் செல்வது போல் போக்குக் காட்டினார் என்பதே பொருந்தும்.

வளநாடுடையார் நினைத்தது நடந்தது. அவர் தவச்சாலையின் வாயில்வரை வேகமாக நடந்து போய்த் திடீரென்று நடையை நிறுத்தி மெல்லத் திரும்பவும் அந்தச் சுவடிக்கும் தீபத்துக்கும் அருகில் யாரோ வந்து உட்காரவும் சரியாக இருந்தது. திரும்பியும் திரும்பாமலும் அரைகுறையாக ஓரக்கண்ணால் பார்க்க முயன்ற அந்தப் பார்வையால் வந்து உட்கார்ந்த ஆளை அவரால் நன்றாகக் காண முடியவில்லை.

Previous articleRead Manipallavam Part 1 Ch13 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 1 Ch15 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here