Home Manipallavam Read Manipallavam Part 1 Ch2 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 1 Ch2 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

69
0
Read Manipallavam Part 1 Ch2 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli part 1,nithiliavalli part 2,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book
Read Manipallavam Part 1 Ch2 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 1 Ch2 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – தோரண வாயில்

அத்தியாயம் 2 : சக்கரவாளக் கோட்டம்

Read Manipallavam Part 1 Ch2 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

இராப்போது நடு யாமத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. இந்திர விழாவின் ஆரவாரங்கள் பூம்புகாரின் புறநகர்ப் பகுதிகளில் அதிகமாக இல்லை. புறநகரில் சக்கரவாளக் கோட்டத்தை அடுத்திருந்த சம்பாபதி வனம் இருண்டு கிடந்தது. நிலா ஒளியின் ஆற்றல் அந்த வனத்தில் தன் ஆதிக்கத்தைப் படரவிட முடியாது. அடர்ந்து நெருங்கிய மரங்களும் செடி கொடிகளும் பின்னிப் பிணைந்து நெடுந்தொலைவுக்குப் பரந்து கிடந்தது சம்பாபதி வனம். அந்த வனத்தில் மற்றோர் புறம் காவிரிப்பூம்பட்டினத்து மயானமும், சக்கரவாளக் கோட்டமென்னும் அங்கங்களாகிய முனிவர்களின் தவச்சாலையும் கந்திற்பாவை கோட்டமும் உலகவறவியும் இன்னொரு பக்கத்தே இரவின் அமைதியிலே மூழ்கிக் கிடந்தன. மரக்கிளைகளின் அடர்த்திக்கு இடையே சிறு சிறு இடைவெளிகளின் வழியே கருப்புத் துணியிர் கிழிசல்கள் போல் மிகக் குறைந்த நிலவொலி சிதறிப் பரவிக்கொண்டிருந்தது. நரிகளின் விகாரமான ஊளை ஒலிகள், கோட்டாண்களும் ஆந்தையும் குரல் கொடுக்கும் பயங்கரம் எல்லாமாகச் சேர்ந்து அந்த நேரத்தில் அந்த வனப் பகுதி ஆட்கள் பழக அஞ்சுமிடமாகிக் கொண்டிருந்தன. வனத்தின் நடுவே சம்பாபதி கோயில் தீபத்தின் மங்கிய ஒளியினால் சுற்றுபுறம் எதையும் நன்றாகப் பார்த்து விட முடியாது. நரி ஊளைக்கும் ஆந்தை அலறலுக்கும் இணைந்து நடுநடுவே சக்கரவாளக் கோட்டத்து வன்னி மரங்களின் கீழ் கபாலிகர்களின் நள்ளிரவு வழிபாட்டு வெறிக் குரல்களும் விகாரமாக ஒலித்தன.

இந்தச் சூழ்நிலையில் சம்பாபதி வனத்தின் ஒருபகுதியில் இளங்குமரன் அவசரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். தோளிலும் உடலின் பிற அங்கங்களிலும் மாலையில் கடற்கரையில் அந்த யவன மல்லனோடு போரிட்டு வென்ற களைப்பு இருந்ததாயினும் மிக முக்கியமான காரியத்தை எதிர்நோக்கிச் செல்கிறவன் போல் அந்த அகால நேரத்தில் அங்கு அவன் சென்று கொண்டிருந்தான். கடற்கறையிலும், நாளங்காடிப் பூத சதுக்கத்திலும் இந்திர விழாக் கோலாகலங்களைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது மருவூர்ப் பாக்கத்தில் நண்பர்களை ஒவ்வொருவராக அனுப்பிவிட்டு, வேண்டுமென்றே தனிமையை உண்டக்கிக் கொண்டு புறப்பட்டிருந்தான் அவன். இந்தச் சம்பாபதி வனமும், சக்கரவாளக் கோட்டமும், பயங்கரமான இரவுச் சூழலும் அவனுக்குப் புதியவை யானால்தானே அவன் பயப்பட வேண்டும்? உயிர்களின் அழிவுக்கு நிலமாக இருந்த இதே சக்கரவாளத்துக்கு அருகில் இருந்த வனத்தில் தான் அவன் வளர்ந்து செழித்துக் காளைப் பருவம் எய்தினான்! இதே சம்பாபதி கோவில் வாயிலிலுள்ள நாவல் மரங்களின் கிழ் விடலை வாலிபர்களோடும், முரட்டு இளைஞர்களோடும், அலைந்து திரிந்துதான் வலிமையை வளர்த்துக் கொண்டான். இங்கே ஒவ்வோரிடமும், ஒவ்வோர் புதரும், மேடு பள்ளமும் அவனுக்குக் கரதலப் பாடம் ஆயிற்றே! எத்தனை வம்புப் போர்கள், எத்தனை இளம்பிள்ளைச் சண்டைகள், எத்தனை அடிபிடிகள், அவனுடைய சிறுபருவத்தில் இந்த நாவல் மரங்களின் அடியில் நடைபெற்றிருக்கும்! அவனுடைய அஞ்சாமைக்கும் துணிவுக்கும் இந்தச் சுழ்நிலையில் வளர்ந்ததே ஒரு காரணமென்று நண்பர்கள் அடிக்கடிக் கூறுவதுண்டு. மனத்தில் அந்தப் பழைய நினைவுகள் எல்லாம் தோன்றிப் படர வேகமாக நடந்து கொண்டிருந்தான் இளங்குமரன்.

‘இன்றைக்கு இந்த நள்ளிரவில் நான் தெரிந்து கொள்ளப் போகிற உண்மை என் வாழ்வில் எவ்வளவு பெரிய மலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறது! என்னைப் பெற்ற அன்னையை நினைவு தெரிந்த பின் முதன் முதலாக இன்று காணப் போகிறேன். அவளுடைய அருள் திகழும் தாய்மைத் திருக்கோலத்தை இந்த இருண்ட வனத்துக்குள் சம்பாபதி கோவிலின் மங்கிய விளக்கொளியில் காணப்போகிறேனே என்பதுதான் எனக்கு வருத்தமாயிருக்கிறது! இன்னும் ஒளிமிக்க இடத்திலே அவளைக் காண வேண்டும். தாயே! என்னை வளர்த்து ஆளாக்கி வாழ விட்டிருக்குமந்தப் புனிதமான முனிவர் இன்று உன்னை எனக்குக் காண்பிப்பதாக வாக்களித்திருக்கிறார். ‘சித்திரை மாதம் சித்திரை முழுமதி நாளில் இந்திர விழாவன்று உன் அன்னையைக் காண்பிக்கிறேன்’ என்று மூன்றாண்டுகளாக ஏமாற்றி என் ஆவலை வளர்த்து விட்டார் முனிவர். இன்று என் உள்ளம் உன்னை எதிர்பார்த்து நெகிழ்ந்திருக்கிறது. அன்னையே! உன்னுடைய பாதங்களைத் தொட்டு வணங்கும் பேறு இந்தக் காளைப் பருவத்திலிருந்தாவது எனக்குக் கிடைக்கவிருக்கிறதே! இன்று என் வாழ்வில் ஒரு பொன்னாள்’ என்று பெருமை பொங்க நினைத்தவனாக விரைந்து கொண்டிருந்தான் இளங்குமரன். தாயும் தந்தையும் எவரென்று தெரியாமல் சக்கரவாளக் கோட்டத்துத் தவச் சாலையிலுள்ள முனிவரொருவரால் வளர்த்து ஆளாக்கப்பட்டவன் அவன். வயது வந்த பின் அவன் தன் பெற்றோர் பற்றி நினைவு வரும் போது எல்லாம் ஏதேதோ சொல்லி ஆவலை வளர்த்திருந்தார் அந்த முனிவர். சித்திரா பௌர்ணமியன்று காட்டுவதாகச் சொல்லி மூன்று முறை இந்திர விழாக்களில் அவனை ஏமாற்றி விட்டிருந்தார் அவர். எத்தனைக்கெத்தனை தைரியசாலியாகவும் அழகனாகவும் வளர்ந்திருந்தானோ, அத்தனைக்கத்தனை தன் பிறப்பைப் பற்றி அறிந்து கொள்ளத் தவிக்கும் தணியாத தாகம் அவனுள் வளர்ந்து கொண்டிருந்தது. அதில் மிகப் பெரிய மர்மங்களும் அதியற்புதச் செய்திகளும் இருக்க வேண்டும்போல் ஓர் அநுமானம் அவனுள் தானாகவே முறுகி வளரும்படி செய்திருந்தார் அந்த முனிவர்.

அன்று இரவு நடுயாமத்திற்கு மேல் சம்பாபதி கோவிலின் பின்புறமுள்ள நாவல் மரத்தின் கீழ் அவனைப் பெற்ற தாயையும் அவனையும் எவ்வாறேனும் சந்திக்க வைத்து விடுவதாக முனிவர் உறுதி கூறியிருந்தார். ‘ஆகா! அதோ நாவல் மரத்தடி வந்துவிட்டது. மரத்தடியில் யாரோ போர்த்திக்கொண்டு அடக்கமாக அமர்ந்திருக்கிறார் போலவும் தெரிகிறது. பக்கத்தில் சிறிது விலகினாற்போல் நிற்பது யார்? வேறு யாராயிருக்கும்? முனிவர்தான்! என் அருமை அன்னையை அழைத்து வந்து அமர வைத்துக் கொண்டு என்னை எதிர்பார்த்து ஆர்வத்தோடு நிற்கிறார் போலும்! நான் தான் வீணாக நேரமாக்கி விட்டேன். இன்னும் சிறிதுபோது முன்னாலேயே வந்திருக்கலாமே!’

இவ்வாறு உணர்வுமயமான எண்ணங்களோடு மரத்தடியை நெருங்கிய இளங்குமரன், “சுவாமி! அன் அன்னையை அழைத்து வந்து விட்டீர்களா? இன்று நான் பெற்ற பேறே பேறு” என்று அன்பு பொங்கக் கூறியவாறே முனிவரின் மறுமொழியையும் எதிர்பார்க்காமல் அமர்ந்திருந்த அன்னையுருவை வணங்கும் நோக்குடன் நெடுஞ் சாண் கிடையாக மண்ணில் வீழ்ந்தான். ‘அம்மா’ என்று குழைந்தது அவன் குரல்.

அம்மாவின் பதில் இல்லை! ஆசி மொழி கூறும் அன்னையின் பாசம் நிறைந்த குரலும் ஒலிக்கவில்லை! மெல்லச் சந்தேகம் எழுந்தது இளங்குமரனின் மனத்தில். ‘அன்னையைக் காணும் ஆர்வத்தில் இருளில் யாரென்று தெரியமலே வீழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிறோமோ!’ என மருண்டு விரைவாக எழுந்திருக்க நிமிர்ந்தான்.

இரண்டு வலிமை வாய்ந்த கைகள் அவனுடைய தோள் பட்டைகளை அமுக்கி மேலே எழ முடியாமல் செய்தன. வேறு இரு கைகள் கால் பக்கம் உதற முடியாமல் தன்னைக் கட்ட முயல்வதையும் அவன் உணர்ந்து கொண்டான்.

அன்னையைக் காணும் ஆர்வத்தில் ஏமாந்து தப்புக் கணக்குப் போட்டு விட்டோம் என்று தீர்மானமாக உணர்ந்து எச்சரிக்கை பெற்ற அவன் துள்ளி எழுந்து திமிர முயன்றான். நாவல் மரத்தில் ஆந்தை அலறியது. மரத்தைப் புகலடைந்திருந்த ஏதோ சில பறவைகள் இருளில் ஓசையெழுமாறு சிறகடித்துப் பறந்தன.

Previous articleRead Manipallavam Part 1 Ch1 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 1 Ch3 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here