Home Manipallavam Read Manipallavam Part 1 Ch23 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 1 Ch23 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

95
0
Read Manipallavam Part 1 Ch23 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli part 1,nithiliavalli part 2,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 1 Ch23|Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 1 Ch23 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – தோரண வாயில்

அத்தியாயம் 23 : நாளைக்குப் பொழுது விடியட்டும்!

Read Manipallavam Part 1 Ch23 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

அந்தப் பின்னிரவு நேரத்தில் பூம்புகாரின் துறைமுகம் ஆரவாரமும் ஆள் புழக்கமும் குறைந்து அமைதியாய்க் காட்சியளித்தது. துறைமுகத்தின் அழகுகள் அமைதியில் தோய்ந்து தோன்றும் காரணத்தினால் பகற்போதில் இருந்ததைக் காட்டிலும் புதிய கவர்ச்சி ஏதோ இப்பொழுது சேர்ந்திருப்பது போல் விநோதமாக விளங்கின. நீலவானத்தின் நெடிய பெருவீதியில் மங்கிய நிலவு உலாச் சென்று கொண்டிருந்தது. அந்தரத்தில் சுடர்விரிக்கும் செந்தழல் மண்டிலம் போல் கலங்கரை விளக்கத்துத் தீ எரிந்தது. அந்த ஒளியில், நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த பெரிய பெரிய கப்பல்கள் கடற்பரப்பெங்கும் தெரிந்தன. மிகப் பெரிய வெண்ணிறப் பறவை ஒற்றைச் சிறகை மட்டும் சாய்த்து விரித்தாற் போல் கப்பல்களின் பாய்மரங்கள் எடுப்பாக இலங்கின.

வேறு ஒலிகளற்ற அமைதியில் கடற்காற்று சுகமாக வீசும் சூழ்நிலையில் துறைமுகப் பகுதியெங்கும் பல்வேறு பொருள்களும், பொருள்களின் மணங்களும் கலந்து நிறைந்திருந்தன. பொதிய மலையிலிருந்து வந்து இறங்கியிருந்த சந்தனக்கட்டைகளும், சீன தேசத்திலிருந்து வந்திருந்த பச்சைக் கற்பூரமும் கடற்கரையைத் திருமணம் நிகழும் வீடு போல் மணக்கச் செய்து கொண்டிருந்தன. எங்கும் அமைதி தங்கி நிற்கும் நேரம். எங்கும் அழகு பொங்கி நிற்கும் தோற்றம். எங்கும் ஒளியடங்கின நேரத்துக்கு உரிமையான ஒலியடங்கின அடக்கம்.

அப்போது அந்தத் துறைமுகத்தின் ஒதுக்கமான பகுதி ஒன்றில் மணிபல்லவத்துக்குப் புறப்படும் சிறிய பாய்மரக் கப்பலின் அருகே அருட்செல்வ முனிவரும், வீரசோழிய வளநாடுடையாரும் நின்று கொண்டிருந்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் அந்தக் கப்பல் புறப்படுவதற்கிருந்தது. புத்தர் பெருமானின் பாத பீடிகைகளை தரிசனம் செய்வதற்குச் செல்லும் பௌத்த சமயத் துறவிகள் சிலரும் கப்பலுக்கு அண்மையில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

அன்று அந்தக் கப்பல் புறப்படும் நேரத்தில் அங்கே வழக்கமான கூட்டம் இல்லை. கப்பலில் பயணம் செய்வதற்கு இருந்தவர்களும் மிகக் குறைந்த தொகையினர்தாம். நகரத்தில் வாராது வந்த பேரழகுக் கொண்டாட்டமாக இந்திரவிழா நடந்து கொண்டிருக்கும் போது எவராவது வெளியூர்களுக்குப் போக ஆசைப்படுவார்களா? வெளியூர்களிலிருந்தெல்லாம் காவிரிப்பூம்பட்டினத்துக்கு மனிதர்களை வரவழைக்கும் சிறப்பு வாய்ந்த திருவிழா அல்லவா அது? அதனால் தான் துறவிகள் சிலரையும், இன்றியமையாத கப்பல் ஊழியர்களையும் தவிர பயணத்துக்காகக் கூடும் வேறு கூட்டம் அங்கே இல்லை.

கப்பல் புறப்படப் போகிறது என்பதற்கு அறிகுறியாக மேல் தளத்தில் கட்டப்பெற்றிருந்த மணியை ஒலிக்கச் செய்தான் மீகாமன். கண்களில் நீர் பனிக்க நின்ற வீரசோழிய வளநாடுடையாரை அன்போடு தழுவிக் கொண்டார் அருட்செல்வ முனிவர். உணர்வு மிகுந்து பேசுவதற்கு அதிகம் சொற்களின்றி இருந்தனர் இருவரும்.

“நல்லவர்களோடு நட்பு செய்து பழகிக் கொள்வதில் எவ்வளவு துன்பமிருக்கிறது பார்த்தீர்களா? பேதையர்களோடு பழகுவதே ஒரு வகையில் நல்லது. பேதையர்களுடன் நமது நட்பு அறுந்து போனால் அந்தப் பிரிவினால் நமக்குத் துன்பமே இல்லை முனிவரே!”

“பேயோடாயினும் பழகிவிட்டால் பிரிவது வேதனைதான் வளநாடுடையாரே!”

“ஆனால் உங்களுக்கு இந்தப் பழமொழி பொருந்தாது முனிவரே! நானும் பேயில்லை! நீங்களும் பேயில்லை!”

“தவறு! நான் மனிதனாகவா இப்போது இந்தக் கப்பலில் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுப் போகிறேன்? இல்லவே இல்லை. உயிரோடு இருந்து கொண்டே செத்துப் போய்விட்டதாக உலகத்துக்குப் பொய் சொல்லிவிட்டு அந்தப் பொய்யைப் பாதுகாக்க உங்களையும் நியமித்துவிட்டுப் பேயாகப் பறந்து கொண்டு தான் ஓடுகிறேன். உயிர் இருந்தும் அதற்குரிய தோற்றமின்றி மறைந்து நடமாடுவதுதானே பேய்! அப்படியானால் நான் முதல் தரமான பேய்தான் வளநாடுடையாரே!”

மீண்டும் கப்பல் மணி ஒலித்தது. அமைதியில் பிறந்து அமைதியில் வளர்ந்து அமைதியோடு கலக்கும் அந்த மணி ஓசை அப்போது அங்கிருந்த சூழ்நிலையில் தனி ஒலியாய் விரிந்து பரவியது.

“இளங்குமரனை கவனித்துக் கொள்ளுங்கள். அன்பையும், அதைப் போற்றும் பண்புள்ளவர்களையும் நம்பி அவனை விட்டுப் பிரிந்து செல்கிறேன். அன்பும் அன்புள்ளவர்களும் கைவிட்டு விட்டாலும் அந்தப் பிள்ளையின் தன்னம்பிக்கை அவனைக் காப்பாற்றும். தன்னைப் பிறர் வெற்றி கொள்ளவிடாமல் தான் பிறரை வெற்றி கொள்ளும் மனம் அவனுக்கு இருக்கிறது. உலகத்தில் மிகப் பெரிய செல்வம் இப்படிப்பட்ட மனம் தான். இந்த மனம் உள்ளவர்கள் உடம்பினால் தோற்றுப் போனாலும் உள்ளத்தினால் வெற்றி பெறுவார்கள். உயரிய நூல்களைக் கற்று உலக ஞானமும் பெறும்போது இப்போது பெற்றிருக்கிற சில முரட்டுக் குணங்களும் தணிந்து பண்புகள் வளர்ந்து இளங்குமரனின் மனம் பக்குவமடைந்து விடும்…”

இவ்வாறு கூறிக்கொண்டே கப்பலின் மரப்படிகளில் ஏறினார் அருட்செல்வ முனிவர். வளநாடுடையார் முனிவரையே பார்த்துக் கொண்டு கீழே கரையில் நின்றார். உரிய நேரத்துக்கு ஏதோ நினைவு வந்தவர்போல், “அடுத்த ஆண்டு வைகாசி விசாகம் – புத்த பௌர்ணமி நாள் எப்போது வரப்போகிறதென்று காத்துக் கொண்டே இருப்பேன். மறந்து விடாதீர்கள்” என்று கப்பலில் ஏறிக் கொண்டிருக்கும் முனிவருக்குக் கேட்கும்படி இரைந்து கூறினார் அவர். ‘இந்த மனம் இன்றிலிருந்து தாங்க வேண்டிய நினைவுச் சுமையை எப்படித் தாங்கி ஆற்றப் போகிறது’ என்பது போல் பெருமூச்சு வந்தது அவருக்கு. அருட்செல்வ முனிவர் தம்முடைய தவச் சாலையிலிருந்து நெருப்புக்கு இரையாகாமல் காப்பாற்றிக் கொண்டு வந்த சுவடிகளையும் பிற பொருள்களையும் தவிர மனத்தில் இளங்குமரனைப் பற்றிய பேருண்மைகளையும் காப்பாற்றிச் சுமந்து கொண்டு தான் மணிபல்லவத்துக்குக் கப்பல் ஏறியிருக்கிறார் என்பதை வளநாடுடையார் அறிந்திருந்தார். ஆயினும் அந்தப் பேருண்மைகள் புரிவதற்கு அடுத்த புத்த பௌர்ணிமை வரையில் காத்திருக்க வேண்டுமே!

கடற்பரப்பில் கப்பல் சிறிது தொலைவு நகர்கிற வரை கரையில் நின்றுவிட்டு வீடு திரும்பினார் வளநாடுடையார். வீட்டில் கதக்கண்ணன், இளங்குமரன் எல்லோருமே இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு சென்றிருந்தார் அவர். முனிவருடைய தவச்சாலை தீப்பற்றி முனிவரும் தீயுண்டு இறந்து போனாரென்று செய்தியை யாவரும் நம்பத்தக்க விதத்தில் எப்படி விவரிப்பதென்று கூட முன்னேற்பாடாகச் சிந்தித்து வைத்துக் கொண்டே வீட்டை அடைந்திருந்தார் அவர்.

‘உங்கள் கண்காணிப்பில் உங்களுடைய இல்லத்தில் இருக்கச் செய்துவிட்டுப் போன முனிவரை நீங்கள் எப்படித் தப்பிச் செல்ல விட்டீர்கள்? நீங்கள் கவனமாக இருந்தால் அவர் தவச்சாலைக்குத் தப்பிச் சென்று அங்கே தீக்கிரையாக நேர்ந்திருக்காதே!’ என்று இளங்குமரன் தன்னையும், முல்லையையும் கேட்பான் என்றும் அதற்கு என்ன பதில் சொல்லலாம் என்று கூட அவர் நினைத்து வைத்திருந்தார். ஆனால் அவற்றுக்கெல்லாம் அவசியமில்லாமல் போயிற்று. வீட்டில் முல்லையைத் தவிர வேறு யாருமே அப்போது இல்லை. அவர் வீட்டை அடைந்த போது விடிவதற்குச் சில நாழிகைகளே இருந்தன.

“என்னப்பா, முனிவர் அகப்படவில்லையா? நீங்கள் மட்டும் தனியாக வந்திருக்கிறீர்களே…?” என்று தூக்கக் கலக்கத்திலும் நினைவாகக் கேட்டாள் முல்லை. சக்கரவாளக் கோட்டத்தில் தம்மைத் துரத்தியவர்கள் கல் எறிந்தால் தமது உடலில் உண்டாகியிருந்த சிறு சிறு காயங்களை அந்த இருளில் தம் மகள் கண்டு விடாமல் மறைத்துக் கொள்வதற்கு முயன்றார் அவர்.

“உறக்கம் கெடாமல் நீ தூங்கம்மா. எல்லாம் பொழுது விடிந்ததும் சொல்கிறேன். இப்பொழுது என் மனமே சரியாயில்லை” என்று பெண்ணின் கேள்விக்குப் பிடி கொடுக்காமல் மறுமொழி கூறித் தப்பித்துக் கொண்டார் வளநாடுடையார்.

“முல்லை! இளங்குமரனும், உன் தமையனும் காலையிலிருந்து இதுவரை எங்கேதான் சுற்றுகிறார்களோ? விடிகிற நேரம் ஆகப் போகிறது. இந்திர விழா வந்தாலும் வந்தது, இவர்களுக்கு ஊர் சுற்ற நேரமும் காலமும் இல்லாமலே போய்விட்டது. பாவம்! நீ இவ்வளவு நேரம் தனியாக வீட்டில் இருந்திருக்கிறாயே!” – என்று மகளிடம் வருந்திக் கூறிவிட்டுப் படுக்கச் சென்றார் வளநாடுடையார். ‘தூங்குகிறோம்!’ என்று பேருக்குப் படுக்கையில் புரண்டாரே ஒழிய மனத்தைக் குடையும் நினைவுகளை மீறி உறக்கம் அவரை அணுக மறுத்தது. பொழுது புலர்ந்ததும் இளங்குமரன் முகத்தில் விழித்துச் சிறிதும் தடுமாறாமல் அந்தப் பொய்யை மெய்போல் உறுதியாக எப்படிக் கூறலாம் என்று சொற்களை மனத்தில் வரிசைப்படுத்தும் முயற்சியில் தான் மீண்டும் அவரால் ஈடுபட முடிந்தது. அதோடு அடுத்த புத்த பௌர்ணிமை வரையுள்ள கால வெளியின் நீண்ட தொலைவையும் அவர் தம் நினைவுகளால் அளக்க முற்பட்டார். முடிவும், விடையும் கிடைக்காது மேலும் மேலும் நீளும் அளவாக இருந்தது அது. மனம் அறியத் தவிக்கும் உண்மைகளுக்கும் தமக்கும் நடுவிலிருந்த காலவெளி பெரிதாகவும் மலைப்பாகவும் தோன்றியது அவருக்கு.

முல்லை தனக்குக் கதவைத் திறந்து விடுவதற்காக எழுந்திருந்து விட்டு இப்போது நன்றாக உறங்குவதாக நினைத்துக் கொண்டிருந்தார் அவர். முல்லை படுத்திருந்த இடத்திலிருந்து தெளிவான குரலில், “நாளைக்குக் காலையில் அவர் இங்கு வந்து விடுவாரா, அப்பா?” என்று கேள்வி புறப்பட்ட போதுதான் தனக்குக் கதவு திறந்துவிட்டதனால் கலைந்த தூக்கத்தை அவள் இன்னும் திரும்பப் பெறவில்லை என்று அவருக்குப் புரிந்தது. தான் தூங்கிப் போய்விட்டதாக அவள் நினைத்துக் கொள்ளட்டுமென்று முதலில் அவளுக்குப் பதில் பேசாமலிருந்து விட எண்ணினார் அவர். ஆனால் மகள் விடவில்லை. மீண்டும் அவரைக் கேட்டாள்.

“உங்களைத்தான் கேட்கிறேனப்பா! நாளைக் காலையில் அவர் இங்கு வந்துவிடுவாரா?”

கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பெண்ணை ஏமாற்றும் துணிவு இரண்டாம் முறையும் அவளிடமிருந்து கேள்வியெழுந்த போது தளர்ந்து விட்டது. மௌனத்தைக் கலைத்துவிட்டு வாய் திறந்தார் அவர்.

“எவரைச் சொல்கிறாய் முல்லை?”

”அவரைத்தான் அப்பா, அருட்செல்வ முனிவரின் வளர்ப்புப் புதல்வர். நாளைக் காலையில் இங்கு வருவாரா?”

“ஓகோ, இளங்குமரனைப் பற்றிக் கேட்கிறாயா? நாளைக்கு அவசியம் இங்கே வருவான் அம்மா. வராவிட்டாலும் நானே அவனைத் தேடிச் சென்று பார்க்க வேண்டிய காரியம் இருக்கிறது.”

“அப்படித் தேடிச் சென்று பார்த்தால் அவரை மறவாமல் இங்கே அழைத்து வர வேண்டும் அப்பா! இன்றைக்குத்தான் அண்ணனுக்கும் அவருக்கும் செய்து வைத்திருந்த விருந்துணவெல்லாம் வீணாகி விட்டது. நாளைக்காவது அவரை இங்கே விருந்துண்ணச் செய்ய வேண்டும்.”

பெண்ணின் ஆவலைக் கேட்டு வளநாடுடையார் தமக்குள் சிரித்துக் கொண்டார்.

மறுநாள் காலை இளங்குமரன் தங்கள் இல்லத்துக்கு வந்தால் துணிவோடு அவனை வாயிலிலே எதிர்கொண்டு சென்று ‘நீங்கள் இந்த வீட்டுக்கெல்லாம் வந்து விருந்து உண்ணுவீர்களா? பட்டினப் பாக்கத்துச் செல்வக் குடும்பத்து நங்கையர் எவரேனும் பல்லக்கில் ஏற்றிக் கொண்டு பகட்டாக அழைத்துப் போனால் போவீர்கள். இந்த முல்லைக்கு மனத்தைத் தவிர வேறு செல்வம் கிடையாது ஐயா! அவள் இந்தச் செல்வத்தைத்தான் உங்களுக்குத் தரமுடியும். பல்லக்கும் பரிவாரமும் வைத்துப் பாங்காக அழைத்து விருந்தளிக்க இந்த ஏழை மறவர் குடும்பத்துப் பெண்ணுக்கு இயலாது. உடன் வந்தவளை மறந்து ஊர் சுற்றப் போன பின்பும் உங்களை என்னால் மறக்க முடியவில்லையே?’ என்று குத்தலாகப் பேச வேண்டுமென்று நினைத்துக் கொண்டு, அப்படி அவரிடம் இடுப்பில் கையூன்றி எதிர் நின்று தான் பேசுவது போன்ற காட்சியையும் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள் முல்லை. அவ்விதமாகக் கற்பனை செய்வது வெப்பமும் தட்பமும் கலக்கும் அந்தப் பின்னிரவுப் போதில் மனத்துக்கும் உடம்புக்கும் சுகமான அநுபவமாக இருந்தது அவளுக்கு.

Previous articleRead Manipallavam Part 1 Ch22 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 1 Ch24 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here