Home Manipallavam Read Manipallavam Part 2 Ch16 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 2 Ch16 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

124
0
Read Manipallavam Part 2 Ch16 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 2,nithiliavalli part 2,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 2 Ch16|Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 2 Ch16 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம் – ஞானப் பசி

அத்தியாயம் 16 : தாயின் நினைவு

Read Manipallavam Part 2 Ch16 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

தரையில் நீர்த்துளி விழுவதற்கு முன் மண்ணுலகத்து வண்ணமும் சுவையும் கலவாத மேக மண்டலங்களிலேயே அவற்றைப் பருகும் சாதகப் புள்ளைப்போல் விசாகையின் ஞானம் உலகத்து அழுக்கையெல்லாம் காணாத பருவத்தில், முன் பிறவி கண்ட தொடர்பினால் அவளுக்கு வாய்த்த தென்பதை உணர்ந்தபோது இளங்குமரன் அவளைத் தவப்பிறவியாக மதித்துக் காணத் தொடங்கினான். அத்தகைய மதிப்பு அவள்மேல் ஏற்பட்டதனால்தான். இந்திர விகாரத்துத் துறவியிடம் தான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதைப் பற்றி அவள் குறிப்பிட்டபோது அவன் மனம் குன்றி நாணமடையும்படி நேர்ந்தது. சுரமஞ்சரியிடம் குன்றாமல் வளர்ந்திருந்த அவனுடைய அதே மனத்தின் இறுமாப்பு விசாகையிடம் குன்றித் தளர்ந்ததோடன்றிப் பக்தியாகவும் மாறியிருந்தது.

‘விசாகையின் கதை தனக்குத் தெரிய வேண்டியது அவசியம்’ என்று நாங்கூர் அடிகள் வற்புறுத்திக் கூறியிருந்த காரணத்தை இப்போதுதான் இளங்குமரன் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. மற்போர்களில் எதிர்த்து வந்தவர்களை முதுகுக்கு மண்காட்டி வென்றதற்காகவும், இளவட்டக் கற்களைத் தூக்கியதற்காகவும், குறிதவறாமல் அம்பு எய்ததற்காகவும், பெருமைப்பட்ட நாட்களை நினைவின் அடிமூலையிலிருந்து புரட்டிக் கொணர்ந்து இன்று எண்ணினால் அவை சிறுமை நிறைந்தவையாகத் தோன்றின. வேறு பெரிய செயல்களைச் செய்வதற்குக் கையாலாகாத காலத்தில் செய்த சிறுபிள்ளைச் செயல் களாக நினைத்துக் கொள்ள முடிந்ததே தவிர, இன்று அவனாலேயே அவற்றை மதிக்க முடியவில்லை.

ஞானப் பசியோடு திருநாங்கூருக்கு வந்த அன்றே அவன் மனத்தில் மதிப்பிழந்திருந்த அந்தப் பழம் பெருமைகள், விசாகை என்னும் புதுமையை அறிந்தபின் இன்னும் மதிப்பிழந்தன. நீண்ட சாலையில் பார்வைக்குள் பிடிபடாத தொலைவுக்குச் சென்றுவிட்ட உருவங்களைப் போல் அவை மனத்திலிருந்தே விலகலாயின.

இனி எதிர்வரும் காலத்தைப் பற்றி அவன் மனத்தில் எழுகின்ற கற்பனைகள் ஓங்கித் தொட முயன்று கொண்டிருந்த உயரம் வேறுவிதமாக இருந்தது.

உலகெங்கும் உள்ள பேரறிஞர்கள் ஒன்று கூடி வரிசையாய் – அந்த வரிசைக்கு முடிவே தெரியாமல் – நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்கள் அப்படி நிற்பதால் நின்றபடியே தானாக நிறுவிக் கொண்ட வீதி ஞான வீதியாகி இளங்குமரனின் கண்களுக்குத் தோன்றுகிறது. வீதியின் நடுவில் நின்று இரு புறமும் பார்க்கிறான் அவன். அவனுடைய வலது கையில் ஞானக்கொடி அசைந்தாடுகிறது. அந்த வீதியின் நெடுமை அவன் மனத்தில் மலைப்பை உண்டாக்குகிறது. வீதியின் இருபுறமும் ஒளிமயமாய் நிற்கும் ஞானி களுக்கு முன்னால் ஒவ்வொன்றாய் நாவல் மரக்கிளை ஊன்றப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஞானியின் கையிலும் அந்த ஞானத்தின் வெற்றிச் சின்னம்போல் ஒரு கொடியும் காட்சியளிக்கிறது. அவர்களோடெல்லாம் அறிவு வாதம் புரியவேண்டுமென்று இளங்குமரனுக்கு ஆசையாயிருக்கிறது.

வாதிட்டு வென்றபின் அத்தனை பேருடைய கொடிகளையும் வீழ்ச்சியுறச் செய்து நாவற் கிளைகளையும் பறித்து எறிந்துவிட்டு, நாவலோ நாவல் என முழங்கிக் கொண்டே தான் அந்த வீதியின் முடிவு தெரிகிறவரை நடந்து சென்றாக வேண்டுமென்று இளங்குமரனுக்கு ஆசையாயிருந்தது, அதே சமயத்தில் தனக்கு அவ்வளவு சக்தியிருக்கிறதா என்ற பயமும், தயக்கமும் தடையாயிருக்கின்றன. ஆனால் மனமோ, ‘துணிந்து முன்னால் நடந்து போ’ என்று தூண்டுகிறது.

அன்று அந்த மாலை வேளையில் திருநாங்கூர் பூம்பொழிலின் தனிமையான பகுதி ஒன்றில் அமர்ந்து இளங்குமரன் இப்படித் தன் எதிர்காலத்தைக் கற்பனை செய்து கொண்டிருந்தபோது தற்செயலாய் அந்தப் பக்கம் வந்த விசாகை அவனிருந்த நிலையைக் கண்டு அவனிடமே கேட்டாள்.

“எந்தக் கோட்டையைப் பிடிப்பதற்கு இவ்வளவு ஆழமான சிந்தனையோ?”

சிறிது நேரத்திற்குப் பின் இளங்குமரனிடமிருந்து இதற்குப் பதில் கிடைத்தது.

“ஞானக் கோட்டையைப் பிடிப்பதற்கு.”

“பெரிய ஆசையாக அல்லவா இருக்கிறது இது?”

“மன்னிக்க வேண்டும் அம்மையாரே! ஆசைகளை எல்லாம் மிக எளிதாக நீக்கிவிட்டு வந்திருக்கிற உங்களிடம் ஆசையைப் பற்றிச் சொல்வதற்காகக் கூசுகிறேன் நான்.”

“அப்படியில்லை, கூசாமல் சொல்லுங்கள். இப்போது நீங்கள் கூறியது புதுமையான ஆசையாகத் தோன்றுகிறதே!” என்றாள் விசாகை.

இளங்குமரன் தன்னுடைய கற்பனையில் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் இலட்சியத்தைத் தயங்கிய மொழிகளால் விசாகைக்குச் சொன்னான். அதைக் கேட்டு அவளுடைய முகம் அதில் ஏற்கெனவே அளவற்று நிறைந்திருக்கும் புனிதத் தன்மையே மேலும் பெருகினாற் போல் மலர்ந்தது. அவள் சிரித்தவாறே அவனை நோக்கி வினாவினாள்:

“உங்களுடைய இந்த ஆசையை யார் கேட்டால் மெய்யான பெருமகிழ்ச்சி ஏற்படுமென்பதை சொல்லட்டுமா?”

“ஏன்? அப்படியானால் உங்களுக்கு மகிழ்ச்சி தர வில்லையா என்னுடைய இந்த ஆசை” இளங்குமரன் அவளிடம் பதிலுக்குக் கேள்வி தொடுத்தான்.

“ஞானக் கோட்டையைப் பிடிக்கும் உங்களுடைய ஆசையைக் கேட்டு நானும், அடிகளும், எங்களைப் போன்ற பிறரும் அடைய முடியாத மகிச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சியை வேறொருவர்தான் அடைய முடியும்”

“யார் அவர்?”

“உங்களைப் பெற்று உலகுக்கு அளித்த தாய்.

‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.’

என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களுடைய இந்த ஆசையை அறிந்து உலகம் உங்களைச் சான்றாண்மை உள்ளவராக ஏற்றுப் புகழ்வதை உங்கள் தாய் கேட்க வேண்டும். உங்களைப் பெற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அதிகமான மகிழ்ச்சியை நீங்கள் புகழைப் பெறுகிற போது உங்கள் அன்னை ஒருத்தியால்தான் அடைய முடியும்..!”

இளங்குமரன் திருநாங்கூருக்கு வந்ததிலிருந்து எந்தக் கலக்கத்தை அடையாமல் மறந்திருந்தானோ, அந்தக் கலக்கத்தை விசாகை நினைவூட்டி விட்டாள். அவளுக்கு மறுமொழி கூறத் தோன்றாமல் கண்கலங்கினான் அவன். அவனுடைய கலக்கத்தை விசாகையும் கவனித்தாள்.

“ஏன் இப்படிக் கண் கலங்குகிறீர்கள்?”

“கண் கலங்காமல் வேறென்ன செய்வது? என்னைப் பெற்று மகிழ்ந்தவளைப் பார்த்தும் மகிழாத பாவி நான்.”

‘இளங்குமரன் தாயில்லாப் பிள்ளையாக வளர்ந்திருப் பானோ?’ என்று நினைத்தாள் விசாகை. அதை அவனிடம் அப்போது கேட்டால் அவனுடைய கலக்கம் அதிகமாகுமோ என்றெண்ணிக் கேட்காமல் அடக்கிக் கொண்டாள்.

“உங்கள் தாயைப் பற்றி உங்களுக்கு நினைவுண்டாக்கியது இப்படி ஒரு துயர விளைவைத் தரும் என்பது தெரிந்திருந்தால் செய்திருக்க மாட்டேன்” என்று மன்னிப்பைக் கோரும் குரலில் கூறினாள் விசாகை. அதற்கும் இளங்குமரனிடமிருந்து பதில் இல்லை.

“அம்மா உன்னைக் காணும் மகிழ்ச்சியை உனக்கு அளிக்காமல், காணவில்லையே என்ற துயரத்தையே மகிழ்ச்சித் தாகமாகப் பெருக்கிக் கொண்டிருக்கிறாயே!” என்று தாயை எண்ணி ஏங்கினான் இளங்குமரன்.

அந்த நிலையில் இளங்குமரனைத் தனிமையில் விட்டுச் செல்வதே நல்லதென்றெண்ணி விசாகை அகன்றாள்.

மனம் கலங்கி வீற்றிருந்த இளங்குமரன் விசாகை சென்றதை அறியாமல் அவள் அங்கிருப்பதாகவே எண்ணி ஏதோ சொல்லத் தலை நிமிர்ந்தபோது நேர் எதிர்ப்புறம் பூம்பொழிலின் வாயிலில் முல்லையும், கதக்கண்ணனும் நுழைந்ததைக் கண்டான். அவன் விழிகளில் வியப்பு மலர்ந்தது.

Previous articleRead Manipallavam Part 2 Ch15 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 2 Ch17 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here